எழுந்து நின்ற பிணம்

This entry is part 4 of 24 in the series 8 செப்டம்பர் 2013

 

                                                   டாக்டர் ஜி. ஜான்சன்

இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவ மாணவிகளுக்கு

உடற்கூற்றியல் ( ANATOMY ) பாடம் ஆரம்பமாகும். இதை இரண்டு வருடங்கள் கற்றாக வேண்டும்.

GRAY’S ANATOMY என்ற பெயர் கொண்ட கணமான நூலை மாணவர்கள் நெஞ்சோடு அனைத்து வகுப்புக்குத் தூக்கிச் செல்வார். அது சாதாரணமே.

ஆனால் அவர்களின் அறைகளில் ஒரு கருப்புப் பெட்டியும் இருக்கும். அதை BLACK BOX என்றே அழைப்பதுண்டு . அதனுள் ஒரு மனிதனின் எலும்புக்கூட்டின் அத்தனை எலும்புகளும் வைக்கப்பட்டிருக்கும் .

அந்த எலும்புகளைத் தொட்டுத் தடவி அவற்றைப் பற்றிய அனைத்தையும் நூலின் உதவியுடன் தெரிந்தாக வேண்டும். சிலர் மண்டை ஓட்டை தங்கள் படுக்கையில் வைத்துக்கொண்டு அதைக் கட்டிப் பிடித்துக்கொண்டும் உறங்குவதுண்டு.

இதோடு விட்டால் பரவாயில்லை. இன்னும் உள்ளது!

அது பிணங்களை அறுத்து பார்க்கும் அறுவைக்கூடம் ( Dissection Hall ) அங்கு ஒரு பெரிய கிணற்றில் ஃபார்மலின் திரவத்தில் நிறைய பிணங்கள் ஊறிக்கொண்டிருக்கும் . அவற்றை வெளியில் எடுத்து நீண்ட அறுவை மேசையில் வரிசை வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும். அவற்றை நார் நாராக அறுத்து நூலின் உதவியுடன் உடற்கூற்றியல் படிக்கவேண்டும் .

முதல் நாள் அந்‌தக் கூடத்தினுள் நுழைய மாணவர்களும் மாணவிகளும் அச்சம் கொள்வதுண்டு. உள்ளே நுழைந்ததும் ஃபார்மலின் மணம் காட்டமாக மூக்கைத் துளைக்கும். கண்களில் நீர் வழியும்.

இதுதான் நான் சொல்லப் போகும் இந்த திகில் கதையின் பின்னணி !

அந்த வகுப்பில் ஒரு வாரத்தில் மாணவ மாணவிகள் அறுவைக் கூடம் செல்ல பழகிவிட்டனர்.

அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது!

மாணவர்களுக்குள் ஒரு போட்டி . ஒவ்வொருவரும் ஐம்பது ரூபாய் தரவேண்டும். மொத்தம் 40 பேர்களின் மொத்த வசூல் 2000 ரூபாய். இது பரிசுத் தொகை.

போட்டி இதுதான். அறுவை அறையில் இரவு பத்து மணியிலிருந்து காலை ஆறு மணிவரை தனியாக இருக்க வேண்டும். காலையில் ப்ரிசுத் தொகை வழங்க்ப்படும்.

இந்தப் போட்டியை ஏற்பாடு செய்த மாணவர்களே அதில் கலந்து கொள்ளத் தயங்கி பின்வாங்கினர். என்னதான் தினமும் பகலில் அங்கு உடற்கூற்றியல் பயின்றாலும் அத்தனைப் பிணங்களின் நடுவிலா? அதிலும் இரவில் தனிமையிலா?

ஆனால் ரவிச்சந்திரன் அந்த விபரீத போட்டியை ஏற்றுக்கொண்டான்! ஒரே இரவில் இரண்டாயிரம்! ஹாஸ்டல் செலவுக்கு உதவும் ! அதோடு துணிச்சல் மிக்கவன் என்ற பெயரையும் தட்டிச் செல்லலாம்!

போட்டிக்கான நேரம் வந்தது. இரவு பத்து. வழக்கத்துக்கு மாறாக அன்று நல்ல இருட்டு. மாணவ மாணவிகள் அறுவைக் கூடத்துக்கு வெளியில் கூடினர்.

மெழுகுவர்த்திகளும், குடிக்க நீரும், சில திண்பண்டங்களும் தரப்பட்டன.

ரவிச்சந்திரன் கையில் ஒரு நாவலுடன் உள்ளே செல்ல தயாரானான் . அனைவரும் அவனை வாழ்த்தி அனுப்பினர் . புன்முறுவலுடன அனைவரையும் பார்த்து கையசைத்துவிட்டு அவன் உள்ளே சென்றான்.

கதவு பூட்டப்பட்டது! நள்ளிரவு வரை வெளியில் இருந்தவர்கள் அதன்பின்பு விடுதிக்கு திரும்பினார். போட்டி ஏற்பாட்டாளர்கள் நால்வர் மட்டும் அங்கேயே விழித்திருந்தனர்.

அறைக்குள் கும்மிருட்டு! நிசப்தம்! மெழுவர்த்தியைக் கொளுத்தி மேசை மீது வைத்துவிட்டு அருகில் அமர்ந்து அந்த ஒளியில் நாவலைப் புரட்டினான். கவனத்தை வேறு எதிலும் செலுத்தாமல் முழுவதுமாக கதையில் மூழ்கினான்.

அந்த மங்கிய வெளிச்சத்தில் வரிசை வரிசையாக பிணங்கள் ஆடாமல் அசையாமல் கிடந்தன. அவை என்றோ இறந்துபோன அனாதைப் பிணங்கள். அவற்றில் சில வியாதியில் இறந்தவை. தற்கொலையால் இறந்தவை சில . விபத்தில் சில இறந்தவை . மரண தண்டனையில் தூக்கிலிடப்பட்டவை சில. இளம் வயதுடையவை சில . வயது முதிர்ந்தவை சில .

ஆண்களும் பெண்களுமாக அனைத்தும் நிர்வாண கோலத்தில் விரைத்து மரக்கட்டைகள் போன்று கிடந்தன!

மனித வாழ்க்கைதான் எத்தனை வினோதம் ! உடலில் உயிர் உள்ளவரைதான் அதன் ஆட்டம் . உயிர் போன பின்பு வெறும் பிண்டம் ! உயிரற்ற பிணத்தைக் கண்டால் ஏன் இத்தனை பயம் !

இறந்தவர் மண்ணில் புதைக்கப்படும்வரை அல்லது எரிக்கப்படும்வரை ஆவியாக உலவுவதாக சிலர் நம்புகின்றனர். வீட்டில் உடலை வைத்திருக்கும் வரை சுவற்றில் தொங்கும் புகைப்படங்களைக்கூட துணி போட்டு மறைத்து வைக்கின்றனர். இறந்தவர் ஆவியாக வராமல் இருக்க சடங்குகள் சாக்கியங்களும் செய்கின்றனர். ஆவிகளுக்கு படையல் இடுகின்றனர்.

இங்கே இத்தனை பிணங்களின் ஆவி இன்னும் இரவில் சுற்றிக்கொண்டுதான் இருக்குமா? உடலை இவர்கள் அறுத்து சின்னாபின்னமாக்கும்போது பார்த்துக்கொண்டுதான் இருக்குமா? இவர்களைப் பழி வாங்கும் நோக்கத்துடன் ஏதும் செய்து விடுமா?

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. நாவலின் பக்கங்களும் ஒன்றன்பின் ஒன்றாக புரட்டப்பட்டன . மெழுகுவர்த்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக கொளுத்தப்பட்டன

மயான அமைதி! அவனின் மூச்சு விடும் சத்தம் மட்டும் நன்றாகக் கேட்டது!

ரவிச்சந்திரன் கைகடிகாரத்தைப் பார்த்தான். 5.30 காட்டியது. இன்னும் 30 நிமிடங்கள் . வெற்றிகரமாக வெளியேறி விடலாம்! கையில் பரிசுத் தொகை இரண்டாயிரம் ரூபாய் ! பெருமூச்சு விட்டான். சுற்று முற்றும் பார்க்காமல் கவனத்தை நாவலில் திருப்பினான்.

சில வினாடிகள்தான் ஆனது. ஏதோ ஒரு சத்தம் கேட்டது போன்ற உணர்வு! செவிகளைக் கூர்மையாக்கி திரும்பிப் பார்க்காமல் உற்று கேட்டான்!

ஆம்! சந்தேகமில்லை ! ஏதோ ஒரு மெல்லிய சத்தம்தான் அது ! இவ்வளவு நேரமும் இல்லமால் இப்போது எப்படி ? இன்னும் அரை மணி நேரம்தானே உள்ளது? இது என்ன புது குழப்பம்? அவனால் எதையும் எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை! தூக்கக் கலக்கம் வேறு!

நாவலில் இனி கவனம் செலுத்த முடியவில்லை. திரும்பிப் பார்ப்பதா வேண்டாமா? அவனால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

ஆனால் சத்தம் மீண்டும் கேட்டது! அவன் நெஞ்சு முதல் முதலாக படபடத்தது! லேசாக உடல் நடுங்கியது! நெற்றியில் வியர்வைத் துளிகள் பொட்டு பொட்டாக வெளியேறின!

கொஞ்ச நேரத்தில் அவன் நிதானமானான். சத்தம்தானே. அது எலியாகக் கூட இருக்கலாமே? எதற்கும் திரும்பிதான் பார்த்து விடுவோமே என்று தைரியம் கொண்டான்!

சத்தம் வந்த திக்கை நோக்கி மெல்ல திரும்பினான்! அவன் இரத்தம் உறைந்து போனது ! இதயத் துடிப்பும் நின்று போனது!

அங்கு ஒரு பிணம் எழுந்து உட்கார்ந்திருந்தது !

அவனால் அதை நம்ப முடியவில்லை ! ஆனால் அது உட்கார்ந்துள்ளதே! எப்படி நம்பாமல் இருக்க முடியும்?

போட்டி முடிய இன்னும் 15 நிமிடங்கள்தானே! இந்த நேரத்தில் இப்படியா?

ஒருவேளை இது வெறும் பிரமையா? எதற்கும் இன்னொரு முறை பார்த்து விடுவோமே ? தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மீண்டும் திரும்பினான்!

அந்த பிணம் எழுந்து நின்றது! ஐயோ ! கையை நீட்டி அவனை அழைக்கிறதே!

அவனின் உரத்த அலறல் அந்த அறையில் எதிரொலித்து மற்ற பிணங்களையும் எழுப்பிவிடும் போலிருந்தது!

அவ்வளவுதான்!

மயங்கி நினைவிழந்து போனான்!

அந்த பேய் ஓடிவந்து அவனைப் பெயர் சொல்லி அழைத்தது!

( முடிந்தது )

 

Series Navigationநைஸ்உடலின் எதிர்ப்புச் சக்தி
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

5 Comments

 1. Avatar
  ஷாலி says:

  // மனித வாழ்க்கைதான் எத்தனை வினோதம் ! உடலில் உயிர் உள்ளவரைதான் அதன் ஆட்டம் . உயிர் போன பின்பு வெறும் பிண்டம் ! உயிரற்ற பிணத்தைக் கண்டால் ஏன் இத்தனை பயம் ! //
  உண்மைதான்! கொடூரமான மனிதர்களைக்கண்டும் பயப்படாதவர்கள்.கூட ஜடமான சவத்தைக்கண்டு பயந்து ஓடுவதை பார்க்க முடிகிறது.கேடியைப்பார்த்து பயப்படாதன்கூட பாடியைப்பார்த்து பயப்படுகிறான். நம் தைரியசாலி மாணவர் ரவிச்சந்திரன் படுத்துக்கிடக்கும் பிணங்களை கண்டு பயப்படவில்லை. ஆனால் பரிதாபம் ஏற்ப்பாடு செய்யப்பட்ட, உயிருள்ள மனிதன் எழுந்ததைக்கண்டு பயந்துவிட்டார்.சந்தர்ப்ப சூழ்நிலையில் மனிதனின் ஆறாவது பகுத்தறிவு சட்டென செயலிழந்து விடுகிறது.செத்த பிணம் எப்படி எழுந்து நிற்க முடியும்? நடக்கவே முடியாது.இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது என்பதை நினைக்க மறந்து விடுகிறோம்.இப்படியான சூழலை உருவாக்கியே ஆன்மீக பாபாக்கள் பக்தர்களை ஏமாற்றுகிறார்கள்.இந்த சூழ்ச்சிக்கு பலியாகும் க்ருஷ்ண குமார கிரிஜாக்களுக்கு இது அற்புதமாக தெரியும். பக்கா ஆன்மீகவாதியே ஏமாந்ததை பராசக்தியில் பார்க்கலாம். ஆளரவமற்ற கோயில். பூசாரி மட்டும் தனியே இருக்கிறார். ஒரு அசரீரி குரல் கேட்கிறது.பூசாரி மிரண்டுபோய், “ யார்? அம்பாளா பேசியது.” என்று கேட்கிறார். உடனே, “ அம்பாள் என்றைக்கடா பேசினாள் அறிவு கெட்டவனே!” என்று கூறியபடி சிவாஜி குணசேகரன் சிலைக்குப் பின்னிருந்து வெளி வருவார். டாக்டர்.ஜான்சன் அவ்ர்களின் மயிர்கூச்செரியும் திகில் கட்டுரைக்கு நன்றி!

  1. Avatar
   புனைப்பெயரில் says:

   பேய்களையும் சாத்தான்களையும் காட்டி மக்களை பாவிகள் என்பது என்ன விதப் பகுத்தறிவோ? வாடிகனின் அழித்தொழிப்பு, கன்னிகாஸ்திரிகளின் கற்பம் எனப்து பற்றியெல்லாம் பேசலாமே. எக்ஸ்ஸார்ஸிஸ்டும், ஓமனும் எந்த மதம் சார்ந்த இலக்கியங்கள். பேய் ஓட்டுவது அமெரிக்காவிலும் உண்டு அய்யா…

 2. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள ஷாலி அவர்களே, திகில் கதையைப் படித்து உடன் ஒரு நல்ல பின்னூட்டம் தந்தற்கு நன்றி நண்பரே. நீங்கள் கூறியுள்ளது உண்மையே. பேய் பிசாசு என்று இன்னும் பெரும்பாலோர் நம்பத்தான் செய்கின்றனர். இந்த பயத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் கூட்டமும் இருக்கவே செய்கிறது. பகுத்தறிவைப் பயன்படுத்தி நாம் இதுபோன்ற மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும். கலைஞரின் பராசக்தி வசனத்தை அருமையாக மேற்கோள் காட்டியூள்ளீர்கள்! நானும் கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை இரசிப்பவன்..நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  1. Avatar
   புனைப்பெயரில் says:

   கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை இரசிப்பர் அப்படியே, புட்டப்பூர்த்தி பாபா காலில் திருமதி கலைஞர் சாஷ்டாங்கமாக வீழ்ந்ததையும் கொண்டாடுவார் என்று நினைக்கிறேன். மேலும் ,கலைஞரின் மருமகள் கோவில் கோவிலாய் – இந்துக் கோவில் தான் – பெரிய பொட்டுடன் பூஜை நடத்துவதையும் ரசிப்பார் என்று நினைக்கிறேன். ஆச்சாரியாரின் வழிகாட்டுதலில் ஞாயிறு போற்றுதும் என்று சொல்லி யோகா, தியானத்தை கலைஞர் தினமும் செய்வது கண்டு சந்தோஷப்படுவார் என நினைக்கிறேன். சரி பகுத்தறிவு கலைஞருக்கு இந்து மதம் அள்ளித் தந்த அளவிற்கு பிற மதங்கள் என்ன தந்திருக்கின்றன என ஷாலி, ஜான் இருவரும் சொல்லலாமே…? பராசக்தியில் ஒரு வேடதாரி பூஜாரி பற்றி சாடல். வேடதாரி பாதிரிகள், மாணவர்களை தவறாக உபயோகிப்பதையோ, கன்னிகாஸ்திரிகளை காமுறுவதையோ கண்டிப்பது போல. சாத்வீகத்தின் எல்லையில் நாங்கள் இருந்ததால் தான் கொள்ளைகள் நடந்தன… ஏன் திரு. ஜான்சன் லண்டனிலோ, அமெரிக்காவிலோ வெள்ளையர் பகுதியில் பிறர் வீடு வாங்கிட முடியுமா? என்று சொல்லலாமே…

 3. Avatar
  புனைப்பெயரில் says:

  மேலே சொன்ன சமபவத்திற்கும் மூடநம்பிக்கை , மதங்களுக்கும் என்ன சம்பந்தம். இதே சம்ப்வம் மாதிரி எல்லா மெடிக்கல் கல்லூரியிலும் நடந்திருக்கிறது. அதிலும் இதே மாதிரி ஒருவன் போய் படுத்துக் கொள்வான். இதே தான் கவுண்டமணி ஒரு படத்தில் காமடியாய் வைத்திருப்பார். சுவையான் மன தைரியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூட மத துவேஷ விஷமத்தையும் தனி மனித தாக்குதலி ஷாலி செய்வது, அதை முதிய்வர்.ஜான்சன் ரசிப்பதும் அவர்களின் ரசனை அளவைச் சொல்கிறது. அய்யா அந்த குணசேகரன் தீவிர இந்துமதப் பக்தராய் இந்தப் படத்திற்கு பின் மாறினார். இந்தபடத்தில் கேள்வி கேட்ட புரட்சி வசனகர்த்தா, பின் எல்லோரும் கேள்வி கேட்டும் நிலையில் இருக்கிறார். ( கதை திரு. கருணாநிதியுடையது அல்ல) போலிகளை கண்டு கதாபத்திரம் மட்டும் அல்ல தமிழ்நாடே ஏமாந்தது 50வருடம் கழித்துத் தான் தெரிந்தது. கலைஞருக்கு கோபம் மதம் மீதல்ல… சாதி ரீதியானது. ஆனால், அவரின் ஆடிட்டர் , வக்கீல், யாரும் தாழ்த்தப்பட்டவரோ இல்ல பிற மதத்தினரோ அல்ல.. பெரும்பாலும் அவா தான். ஏனென்றால் மதம் மாறிவர்கள் மத நம்பிக்கை தொடர்பால் அல்ல சாதி ரீதியான காரணங்களால் எனப்து அறியாதவரா கலைஞர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *