ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)

This entry is part 7 of 24 in the series 8 செப்டம்பர் 2013

ஆர் ஷண்முக சுந்தரம் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு திறன் வாய்ந்த எழுத்தாளர். அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பு அதிகம் பெறாதவர். இலக்கிய சர்ச்சைகள், நகர வாழ்க்கையின் சந்தடி, இவற்றில் எதிலும்  சிக்கிக்கொள்ளாத தூரத்தில் அமைதியாக வாழ்ந்தவர். அவருக்கு பணம் தேவைப்பட்டபோதெல்லாம் தன்னுடைய நோட்புக்கில் ஒரு குறு நாவல் எழுதி முடித்துவிடுவார். அதற்கு அவருக்கு ஏதோ சில நூறு ரூபாய்கள் கிடைத்துவிடும். இப்படித்தான் நாகம்மாள், சட்டி சுட்டது (1965), அறுவடை (1960) போன்ற நாவல்கள் எழுதப்பட்டன. இவை அந்நாட்களில் குறிப்பிடத் தக்க எழுத்து என்று சொல்லவேண்டும். இன்று நாகம்மாள், அறுவடை போன்றவை க்ளாஸிக்ஸ் என்றே சொல்லவேண்டும். அவரது நாவல்கள் கோயம்புத்துர் மாவட்டத்து விவசாயிகளின் வாழ்க்கையைச் சுற்றி எழுந்தவை. கிரேக்க அவல நாடகங்களின் மைய இழையோட்டத்தை அவற்றில் காண்லாம். எதிலும் ஒரு மகிழ்ச்சி தரும் முடிவு இருப்பதில்லை. இன்னும் இரண்டு முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லவேண்டும். அவர்கள் இருவரும் ஒரு குறுகிய ஆரம்ப கால கட்டத்தில் இடதுசாரி கூடாரத்தைச் சேர்ந்தவர்களாக விருந்தனர். ஆனால் அதிக காலம் அந்த கூடாரத்தில் தங்கவில்லை. பின்னர் அந்தக் கட்டுக்களைத் தாமே தகர்த்து  வெளியே வந்துவிட்டனர்.  ஒருவர் நாம் சற்று முன்னர் பசுவய்யா என்ற பெயரில் கவிஞராக அறிமுகம் ஆன சுந்தர ராமசாமி (1931). சுந்தர ராமசாமி அதிகம் எழுதிக்குவிப்பவரில்லை. அவருக்கு தன் எழுத்தின் நடை பற்றியும் அதன் வெளிப்பாட்டுத் திறன் பற்றியும் மிகுந்த கவனமும் பிரக்ஞையும் உண்டு. இரண்டாமவர் த. ஜெயகாந்தன் (1931) இதற்கு நேர் எதிரானவர். ஏதோ அடைபட்டுக்கிடந்தது திடீரென வெடித்தெழுவது போல, அணை உடைந்த நீர்ப்பெருக்கு போல, மிகுந்த ஆரவாரத்துடன், நிறைய எழுதித் தள்ளிக் கொண்டிருப்பவர். நிகழ்கால தமிழ் இலக்கியத்தின் ஒரு அடங்காப் பிள்ளை. அவருக்கென ஒரு பெரிய, மிகப் பெரிய விஸ்வாஸம் கொண்ட ரசிகக் கூட்டமே உண்டு.

இவர்கள் எல்லாமே நிகழ் கால தமிழ் இலக்கியத்தின் ஐம்பது அறுபதுகளின் தேக்க காலத்தில் தெரியவந்தவர்கள். க.நா.சுப்பிரமணியமும் செல்லப்பாவும் உருவாக்கிய சிறுபான்மை இலக்கியச் சூழலின் தாக்கத்தில் எழுந்தவர்கள் இல்லை. ஆனால் க.நா.சு.வும் செல்லப்பாவும் உருவாக்கிய இலக்கிய சிறுபத்திரிகைக்கு ஓரளவு கடன்பட்டவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சரஸ்வதி என்னும் இலக்கியச் சிறுபத்திரிகை இவர்களுக்கு இடம் கொடுத்து வளர்த்தது என்று சொல்லலாம். ஜெயகாந்தன் ஒருவர் தான் வெகுஜன பத்திரிகைகளில் தன்னை ஸ்தாபித்துக்கொண்டார். ஆர் ஷண்முக சுந்தரத்திற்கும் சுந்தர ராமசாமிக்கும் அங்கீகாரமும் தொடர்ந்த எழுத்துக்கான வாய்ப்பும் அளித்தது க.நா.சு.வும் செல்லப்பாவும் சிருஷ்த்த சிறுபான்மை இலக்கியச் சூழல் தான்.

அறுபது எழுபதுகளில் இன்னம் ஒரு புதிய தலைமுறை இளம் எழுத்தாளர் தோன்றினர். இவர்களது வருகைக்கென வென்றே தயாராக இருந்தது என்று சொல்லவேண்டும், முன்னர் சொன்ன புதிதாக சிருஷ்டிக்கப்பட்ட சிறுபான்மை இலக்கியச் சூழல். இந்த புதிய தலைமுறை இளம் எழுத்தாளர்களின்  எழுத்தில் ஆரம்பத்திலேயே காணப்பட்ட ஒரு எழுத்துத் திறன், முப்பதுக்களில் தோன்றிய முன்னோடிகள் தம் கைவசப்பட பல வருஷங்கள் உழைத்துப் பழக வேண்டியிருந்தது இந்திரா பார்த்த சாரதி (1931), அசோகமித்திரன் (1931), சா. கந்தசாமி (1940), சுஜாதா (1936) ஆகிய எல்லோருமே சிறுகதைகள் எழுத்தாளர்களாகத் தான் தொடங்கி பின்னர் நாவல்களிலேயே அதிகம் தெரிய வந்தனர். இந்திரா பார்த்த சாரதி எழுத்தின் சுவாரஸ்யம் அதில் காணும் பரிகாசம். ந. முத்துசாமி சிறுகதை களுக்குள்ளேயே தன்னை வரம்பிட்டுக்கொண்டவர். அவர் எழுத்தில் ஒரு கிராமத்தானின் பூச்சற்ற நாட்டுப்புற வெகுளித்தனம் இருக்கும். அதுவே அவர் எழுத்தின் திறனும் குணமுமாகி, கடந்துவிட்ட ஒரு பழமையை நோக்கிய தாபமும் ஏக்கமும் நிறைந்த ஒரு பயணமாக வெளிப்படும் அவர் எழுத்து.

sujatha

சுஜாதாவின் எழுத்தில் அவர் வார்த்தைகளோடு விளையாடும் விளையாட்டுக்களே பெரும் வாசகப் பெருக்கத்தை அவருக்கு சம்பாதித்துத் தந்தது. அதிலே அவரும் சுகம் காண்பவர். ஆனால் அவர் இத்தோடு நின்று விடுபவர் இல்லை. அவர் எழுத்தில் காண்பது ஒரு விஷமத்தனமான விளையாட்டும், பாலியல் சீண்டலும் மாத்திரமல்ல. அதைத் தாண்டி, இன்றைய விஞ்ஞானமும்  தொழில் நுட்பமும் பரவிய இன்றைய சூழலில் மனித வாழ்க்கையின் முரண்களையும் போராட்டங்களையும் அவர் எழுத்துக்கள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. விஞ்ஞானத்தை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் முறையில் அதேசமயம் சுவாரஸ்யமாகவும் நகையுணர்வுடனும்  விளக்குவதில் பிரபலம் பெற்றவர் சுஜாதா. இதில் சுஜாதாவைத் தொடர்பவர் தொன்னூறுகளில் தெரிய வந்த இன்னொருவர், சிறுகதைகளும் நாவல்களும் எழுதும்  இரா முருகன்

இக்காலகட்டத்தில் தெரியவந்த இன்னொரு நாவல், சிறுகதை எழுத்தாளர், சா. கந்தசாமி. இவருடைய நாவல் விசாரணை கமிஷன்(1996) சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது. அது நிகழ்கால அரசியலையும் சமூகத்தையும் தைரியமாக விமர்சிக்கும் இவரது நாவலில் ஒரு அவநம்பிக்கைத் தொனியும் காணும்.

அசோகமித்திரன் கடந்த ஐம்பது வருடங்களான தொடர்ந்த முனைப்புடனான எழுத்தில்  கைத்திறனின் தேர்ச்சியைப் பெற்றிருப்பதைக் காணமுடியும். கைவரப்பெற்ற, வெற்றியும் தந்த இத்திறனை விட்டு அவர் நகர்வதில்லை அவரது உலகம் மத்திய தர நகர மக்கள் தம்  வாழ்க்கையில் அன்றாடம் சந்த்க்கும்  இன்னல்கள் தாம். அவர்கள் தம் சமூக அடையாளங்களை மீறிய இன்னல்கள் தாம் அவரது உலகம். அசோகமித்திரனிடம் என்ன எதிர்பார்ப்பது என்று வாசகர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு ஆச்சரியம் தருவதும் ஏது இராது. அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதும் ஏதும் இராது. அசோகமித்திரன் எழுத்துக்கள் யாரையும் ஏமாற்றுவதில்லை. ஆனால் அம்பை(1940) ஆச்சரியப் படுத்துவது மட்டுமில்லை. அதிர்ச்சியடையச் செய்பவரும் கூட. ஆசாரம், சம்பிரதாயம், பண்பாடு என்ற முகமூடிகளில்  தம் சுய பிம்பங்களைக் காத்துக்கொள்ள முயலும் அதிகாரங்களையும் ஆணாதிக்கங்களையும் அவர் விட்டு வைப்பதில்லை. சிறுகதைகள் மாத்திரமல்ல. தமிழ் பெண் எழுத்தாளர்களை, அவரது முன்னோடிகளும், சக காலத்தவருமான எழுத்தாளர்களைக் கண்ட பேட்டிகள் Face Behind the Mask என்ற புத்தகம் ஒன்றும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. தன்னைப் பெண்ணிய வாதி என்ற அடைமொழிக்குள் அடைத்துக் கொள்ளாத பெண்ணியவாதி அம்பை. 1923-ல் பிறந்த கி.ராஜநாராயணன் இங்கு பேசப்படும் எழுத்தாளர்கள் எல்லோரிலும் மூத்தவர் தமிழ் நாட்டின் தென்கோடியில் தெலுங்கு பேசும் விவசாயிகள் குடும்பத்தில் பிறந்தவர். அவர்கள் விஜயநகர் சாம்ராஜ்ய காலத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறியவர்கள். பள்ளிப்படிப்பு என்று சொல்ல அதிகம் ஏதும் இல்லாதவர் தான்  அவரது எழுத்துக்கள் இக்காரணங்களால் தனித்வம் மிக்கது. வாய்மொழி மரபும் எழுத்து மரபும் மட்டுமல்லாது, கிராமீயமும் நகரத்துவ நாகரீகமும் கூட அவ்வவற்றின் தனித்வம் தன் எல்லைக்கோடுகளை மங்கச் செய்து இவரது எழுத்துக்களில் ஒன்று கலந்திருக்கும்.

Prabanchan

பிரபஞ்சன் (1945), நாவலாசிரியர், சிறுகதைகளும் எழுதுபவர். முன்னர் ப்ரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்து இப்போது இந்தியாவுடன் இணைந்துள்ள பாண்டிச்சேரிக் காரர். 1709 – 1761 காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்த ரங்கம் பிள்ளை பாண்டிச்சேரி கவர்னராக இருந்த டூப்ளே முதலானவர்களுக்கு துபாஷி யாகவும் ஆலோசகராவும் இருந்தவர்.  தமிழில் எழுதப்பட்ட அவரது அன்றாட நாட்குறிப்புகள் மிக விரிவானவை. அவர் வாழ்ந்த காலகட்டம் ஆங்கிலேயர்களுக்கும், ப்ரெஞ்சுக் காரர்களுக்கும், மராட்டியர்களுக்கு இடையே தொடர்ந்த போர்களும், கோட்டைகளுக்குள்ளும் வெளியேயும் நடந்த சதிச்செயல்களும் நிறைந்தவை. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் 12 பெரிய பாகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன வெளியாகியுள்ளன. இந்நாட்குறிப்புகள் ஆனந்த ரங்கம் பிள்ளையின் தனிப்பட்ட வாழ்க்கையை மாத்திரம் சொல்பவை அல்ல. அவர் வாழ்ந்த காலத்து சமூக, சரித்திர நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளவை. பெரும்பாலும் இந்த நாட்குறிப்பு களையும், அந்தக் காலத்து மராட்டியர்களின், நவாபுகளின் வரலாறுகளையும் ஆதாரமாகக் கொண்டு, புதுச்சேரியின் வரலாற்றையே ஆனந்த ரங்கம்பிள்ளையை மையப்பாத்திரமாகக் கொண்டு பிரபஞ்சன் திட்டமிட்டுள்ள மூன்று பாக வரலாற்று நாவலில் இதுகாறும், மானுடம் வெல்லும் (1990) வானம் வசப்படும் (1993) என இரு பாகங்கள் எழுதியிருக்கிறார் பிரபஞ்சன். இப்பெரும் வரலாற்று நாவல் தனித்துவம் மிக்கதும் ஒரு மைல்கல் எனச் சொல்லப்படவேண்டியதுமான படைப்பு.

dileep_Kumar

அண்டை மாநிலங்களிலிருந்தும், தூரத்து மாநிலங்களி லிருந்தும் காலம் காலமாக குடிபெயர்ந்து தமிழகத்தில் வாழும் மக்களால் தமிழும் தமிழ் இலக்கியமும் வளம் பெற்றுள்ளது. இது ஒரு நீண்ட வரலாறு கொண்ட காட்சி, நிகழ்வு. தமிழ் இலக்கியத் தோற்றமான சங்க காலத்திலிருந்தே ( கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகள்) தொடங்குவது. இன்று தன் எண்பதுகளில் இருக்கும் எம்.வி.வெங்கட் ராம் (1920), ஏதோ ஒரு நூற்றாண்டில் சௌராஷ்டிரத்திலிருந்து குடிபெயரத் தொடங்கி கடைசியில் தமிழ் நாட்டில் குடிகொண்ட சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர். 1930-களின் மணிக்கொடி காலத்திய மூத்த எழுத்தாளர். அதே மணிக்கொடி காலத்திய கு.ப.ராஜகோபாலனின் தாய் மொழி தெலுங்கு. அவரோடு இரட்டையராகக் கருதப்பட்ட ந.பிச்சமூர்த்தியும் தெலுங்கு மொழி பேசுபவர். மணிக்கொடி எழுத்தாளர் என்று புகழ்பெற்ற இவர்கள் யாரும் ஒரு வார்த்தை தெலுங்கில் எழுதியவர்கள் இல்லை. சமகாலத்திய திலீப் குமார் (1951) தமிழ் நாட்டில் வெகுகாலமாக வாழ்ந்து வரும் குஜராத்திகள் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது கதைகள் பெரும்பாலும் தமிழ் நாட்டில் வாழும் மத்திய தர குஜராத்திகள், மராத்தியர் வாழ்க்கையைச் சித்தரிப்பவை. விமலாதித்திய மாமல்லன்(1960) ஒரு மகாராஷ்ட்ரியன். அவருடைய கதைகள் நம்மை தமிழ் நாட்டின் மகாராஷ்ட்ரர்களின் குடும்பத்துக்குள் இட்டுச் செல்கின்றன. விட்டல் ராவ் (1941) கன்னடியர். அவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் மூன்று மொழிகளும் பேசும் திரிவேணி சங்கமம் என்று சொல்லத்தக்க இடத்திலிருந்து வருபவர். அவரது கதைகள் தமிழ் நாட்டில் வாழும் கன்னடம் பேசும் குடும்பத்தினர் வாழ்க்கையைச் சித்தரிக்கின்றன. தம் வீடுகளில் கன்னடம் பேசினாலும் இவர்கள் தமிழ் வாழ்க்கையோடு ஐக்கியமானவர்கள் இருப்பினும் தமது கன்னட அடையாளங்களை, தெரிந்தோ, பிரக்ஞை அற்றோ சிறிய பெரிய அளவில் தம்மில் தக்க வைத்துக்கொண்டுள்ளவர்கள். இவையெல்லாம் இவர்கள் அனைவரது தமிழ் எழுத்துக்களிலும் சித்தரிக்கும் வாழ்க்கையிலும் பலதரப்பட்ட வண்ணங்களையும், மணங்களையும் கொண்டு சேர்க்கின்றன. அது தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் வளப்படுத்தியுள்ளது. சுப்ரபாரதி மணியனும் தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் தமிழ் நாட்டின், தமிழ் இன மக்களின் எல்லைகளில் வாழும் மக்களின் வாழ்க்கையையும் அப்பிரதேசங்களின் தனித்வ குணங்களையும் நுணுக்கமாகவும் விவரமாகவும்  கொண்டு சேர்த்துள்ளார். ஆ. மாதவன் பல தலைமுறைகளாக, திருவனந்த புரத்தில் வாழ்பவர். அவர் காலம் கடைத்தெருவில் உள்ள அவரது கடையில் கழிகிறது. அவரது கதைகளும் இயல்பாக, அக்கடையைச் சுற்றிய உலகையும் மக்களையும் பற்றித் தான் பேசுகின்றன. அவர்களது மலையாள மணத்தோடு. நீல பத்மனாபன் (1936) வெகு காலம் முன்பே கேரளத்துக்குக் குடிபெயர்ந்து வாழும் தமிழ் நாட்டு இரணியல் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவரும் தம்மைச் சுற்றியுள்ள தமிழர், மலையாளிகள் வாழ்க்கையைத் தான் தன் எழுத்தில் கொண்டு வர இயலும். நீல பத்மநாபன் நிறைய நாவல்கள் சிறுகதைகள் எழுதிக்குவித்துள்ளவர். அவற்றில் தலைமுறைகள் (1966) என்ற நாவல் ஒரு மைல்கல் என்ற சிறப்பும் முக்கியத்துவமும் பெற்றது.

இன்றைய தமிழ் எழுத்தில் பொதுவாகக் காணப்படும் ஒரு முக்கியமானதும் சிறப்பானதுமான விஷயம், ஒரு காலத்தில் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளான பி.ஆர். ராஜம் அய்யரும்(1872-1898) புதுமைப்பித்தனும் (1907-1948) தம் எழுத்துக்களில் அவர்களுக்குப் பரிச்சயமான கொச்சைப் பேச்சு மொழியை எவ்வித தயக்கமுமின்றி பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து, கொச்சை கொடுக்கும் ஜீவனை அறிந்து பின் வந்த தலைமுறையினர்  பேச்சு மொழியையே பயன்படுத்துவது வழக்கமாயிற்று. இது படிப்பவர்களுக்கு முதலில் சற்றி சிரமம் கொடுப்பதாகவும், பேச்சு மொழியைப் புரிந்து கொள்ளப் பழகவேண்டியும் இருந்தது. ஏனெனில் பேச்சு மொழி அவரவர் பிறந்து வளர்ந்து பழகிய வகுப்பு, மதம், வட்டாரம் சார்ந்து மாறுபடும் காரணத்தால், பரிச்சயமில்லாதாருக்கு அது உடன் புரிவதில்லை. ஆனால் பேசுவோருக்கு உயிர் கொடுப்பதும் இயல்பானதும் அது தான். புத்தகங்களில் எழுதப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட இலக்கணம் சுத்திகரித்த மொழி செயற்கையானது, தமிழ் நாட்டில் எங்கும் எந்தத் தமிழனும் பேசாத மொழி அது. தீவிர தமிழ்ப் பண்டிதர்கள் மாத்திரமே நிர்ப்பந்தித்து பொதுவில் பேசும் மொழி. உயிரற்றது. மௌனத்தில் புன்னகை வருவிக்கும் மொழி. தமிழ் நாட்டின் வட்டார பேச்சு உருவங்களோடு, எழுபது எண்பதுக்களுக்குப் பிறகு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களும் அவரவர் இடங்களில் வழங்கும் பேச்சுமொழியையும் நிகழ் காலத் தமிழ் எழுத்துக்குக் கொண்டுசேர்த்தனர். இதன் விளைவாக இன்றைய தமிழ் எழுத்தில் தான் எத்தனை ஃபணீஸ்வர்நாத் ரேணுக்கள்! எத்தனை மைலா ஆஞ்சல்கள்!!

வண்ணநிலவனும்(1948), வண்ணதாசனும்(1946) அவர்களுக்குப் பரிச்சயமான உயிரோட்டம் மிகுந்த திருநெல்வேலி பிள்ளைமார் பேச்சு மொழியில் தான் எழுதுகின்றனர். அவர்கள் மாத்திரமல்ல. இன்னம் அனேகர். அவரவர் பிறந்து வளர்ந்து பேசிய பேச்சு மொழியில். நாஞ்சில்நாடன்(1946) எழுதுவது, அவர் பிறந்து வளர்ந்து ஊரைப் பற்றி, அங்கு வாழும் மக்களைப்பற்றி, அதன் சுற்றுவட்டார ஜனங்களைப் பற்றித் தான் எழுதுகிறார். அவர்களது பேச்சு மொழி, அவர்களது குறுகிய வட்டத்துக்கு அப்பால் வழங்காத, அவர்களுக்கே உரிய ஒன்றாக இருக்கலாம். அவர்கள் வேறு எங்கு இப்போது வளர்ந்தாலும் சரி. எட்டுத் திக்கும் மதயானை(1998) என்னும் அவரது சமீபத்திய நாவல், தன்னுடைய கிராமத்தை விட்டு ஒடி, தலைமறைவு உலகில் சேர்ந்து விடுகிறான். அந்த உலகு அவனை இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு இட்டுச் செல்கிறது. அரசியல் வாதிகளுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும், தலைமறைவில் வாழும் குற்றவாளிக் கும்பல்களுக்கும் இடையில் நிலவும் வெளித்தெரியாத உறவுகளையும், இவற்றினுள்ளும்  ஊடுருவியுள்ள சாதிப் பிணைப்புகளையும் பற்றியது தான் இந்நாவல்.

தற்காலத் தமிழ் இலக்கியதைப் பற்றிப் பேசும்போது, எண்பதுகளும் தொன்னூறுகளும் மிகுந்த பரவசமும் உற்சாகமும் தந்த வருடங்கள். வெகுஜனப் பத்திரிகைகளின் அசுரத்தனமான செல்வாக்கு இன்னமும் வாசகர்களை ஆட்டிவைக்கின்றன தான். ஆனால அவற்றில் வெளிவந்து மக்களைக் கவர்ந்தனவெல்லாம், ஐம்பதுக்களிலிருந்து தொடர்ந்து பல பத்துவருடங்களுக்கு பெரிய இலக்கியமாகக் கருதப்பட்ட நிலை இப்போது இல்லை. அரசியல் வாதிகளும், சினிமாக்காரர்களும் இன்னமும் பெருவாரியான மக்களை மயக்கும் கவர்ச்சி பெற்றவர்கள் தான். ஆனால் இலக்கிய ரசனைகொண்ட ஒரு சிறுபான்மை உருவாகியுள்ளதாகச் சொன்னேனே, அவர்கள் இந்த மயக்கத்திற்கு பலியானவர்கள் இல்லை. கட்சியின் கொள்கைகளுக்கும் விதிமுறைகளுக்கும் ஏற்ப தங்கள் எழுத்துக்களைத் தயாரித்து சந்தையில் கடை பரப்பிக்கொண்டிருந்த இடது சாரி எழுத்தாளர்களும் விமர்சகர்களும் கிளப்பிக்கொண்டிருந்த கூச்சலும் ஆரவாரமும் அனேகமாக் இப்போது ஓய்ந்துவிட்டன. காரணம் அவர்களுக்கு வழிகாட்டலும் உயிர்ப்பும் தந்து வந்த கோட்டைகள் சரிந்துவிட்டன இவையெல்லாம் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் தான். ஆனால் ஒவ்வொரு பருவமும்  அது கொண்டு வந்து சேர்க்கும் நோய் பரப்பும் பூச்சிகளூம் தொத்து நோய்களும் கொண்டது தானே. பருவத்திற்கு பருவம் அவை மாறினாலும்.

கடந்த முன் பத்துக்களில், தமிழ்ப் புலமை, மரபின் தளைகளை எல்லாம் அறுத்துக்கொண்டு சுதந்திரமாக சிந்திக்கச் செயல்படத் துணிந்த சிருஷ்டி இலக்கிய உலகை தன் ஆதிக்கத்தில் அடக்கி வைத்திருந்தது. அங்கீகரிக்க மறுத்தது. ஆனால்  எழுபதுக்குப் பின் கிளர்ந்த மாற்றங்களால், தன் பழைய வழிமுறைகள் செல்வாக்கு இழந்தது கண்டு, இடது சாரிகள் ஊர்வலத்தில் தன்னையும் சேர்த்துக்கொண்டது தமிழ்ப் புலவர் உலகம்.இந்தத் தாவலும், பயணமும் அவர்களுக்கு சுலபமாகவே இருந்தது. இடதுசாரிகளும் அவர்களை தம் ஊர்வலத்தில் சேர்த்துக் கொண்டனர். காரணம் இடது சாரிகள் கொடுக்கப்பட்ட கொள்கைகளையே கோஷமிட்டு எழுதிப் பழகியவர்கள். அவர்கள் முன் பட்டையிட்ட பாதை ஒன்று தரப்பட்டது போலவே, தமிழ்ப் பண்டிதர்களுக்கும் இலக்கண வரம்புகளும் தயாரித்துத் தரப்பட்ட ஃபார்முலாக்களும் சூத்திரங்களும் ஏதும் புதிய பாதைகளை அவர்களுக்குத் தரவில்லை. பழக்கப்பட்ட சுவடு காட்டும் பாதை. யாப்பு விதிகளும் இலக்கண வரம்புகளும் இங்கும் கூட உதவாது போகவே, இவர்கள் பயணம் தொடர புதிய வாகனங்கள் கிடைத்தன. ஸ்ட்ரக்சுர்லிஸம், பின்னர் போஸ்ட்-ஸ்ட்ரக்சுரலிஸ்ம்,, பின்னர் போஸ்- மாடர்னிஸம் என்றெல்லாம் தொன்னூறுகளில் கோஷங்கள் தமிழ் வெளியை நிறைத்தன. ஒவ்வொன்றின் கூடாரத்திலும் இவர்களது வாசம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தான் நீடித்தது. இந்தத் தமிழ் பண்டிதர்கள் எல்லாம் பெரும்பாலும் கல்லூரிகளில் மொழியியல் படித்தவர்கள். ஆக, மொழியியல் இவர்களது தாவலை சுலபமாக்கியது. மொழியியல் இவர்களுக்கு ஒரு பயிற்சி மையம். அங்கு கற்ற படித்து மனனம் செய்த சொற்கூட்டங்கள், விதிமுறைகள், மற்றவர்களைப் பயப்படுத்தத் தான் பயன்பட்டன. ஆனால் மொழி எவ்வாறு கலையாகிறது. வார்த்தைகள் பெறும் புத்துயிர், புது அர்த்தங்கள், வெற்று வார்த்தைக் கூட்டங்கள் எவ்வாறு வார்த்தைகள் முன்னர் கொண்டிராத புது உலகையும் அர்த்தங்களையும் சிருஷ்டித்துவிடுகின்றன என்ற மாயம் பற்றி அவர்கள் அறிந்தவர்கள் இல்லை. அவர்களுக்குப் புரிந்ததில்லை. மொழியும், பார்த்து அனுபவித்த வாழ்க்கை விவரங்களும் மாய உலகை சிருஷ்டிக்கும் திறனும் அவர்களை மீறிய உலகம். வெற்றுப் புலமையும் மனனம் செய்த விதிகள் வாய்ப்பாடுகள் இவற்றைக் கேட்டு பிரமிப்போர் இன்னும் இருந்தாலும் அவர்களும், அந்தக் காலமும் மறைந்து கொண்டிருக்கிறது தான்.

இன்னமும் ஒரு வேடிக்கை. இந்தத் தமிழ் புலமைகளும் கோஷதாரிகளும் இப்போது புதிதாக கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கும் தலித் கூடாரத்துக்குள் நுழைந்து விட்டனர். அங்கு அவர்களுக்கு தலித் சித்தாந்தம் ஒன்றை தாமே உருவாக்கி போதிக்கத் தொடங்கியுள்ளனர். எவ்வாறு தாம் உருவாக்கியுள்ள தலித் சித்தாந்தத்தை அடியொற்றி தலித் இலக்கியம் படைக்கப்படவேண்டும், அதன் விதி முறைகள் என்னவென்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.

thoppil111

அடுத்து சிருஷ்டி பரமான நிகழ்வுகளைப் பற்றிப் பேசலாம். எல்லா சிருஷ்டிகரமான ஈடுபாடுகளைப் போலவே, சில மிக சுவாரஸ்யமானவை. இன்னும் சில மிகவும் ஆச்சரியம் தருபவை. உதாரணத்துக்குச் சொல்லப் போனால், தோப்பில் முகம்மது மீரான்(1944). அவரது  நாவல்கள் பழமைப் பிடிப்பும்  இறுக்கமான வாழ்வும் கொண்ட முஸ்லீம் சமூகத்தை விமர்சனம் செய்பவை. இம்மாதிரியான கண்டனத்துக்குள்ளாகும் முஸ்லீம் சமூகம் என்னவோ கடந்த நூற்றாண்டைச் சேர்ந்தது. அவரது கதைக்களனும், மக்களும்  அவர் பிறந்து வளர்ந்த கடற்கடையோரம் அரபிக்கடலைப் பார்த்த தேங்காய்ப் பட்டினம் என்னும் கிராமத்தை மையம் கொண்டது. அம்மக்கள் பெரும்பான்மையினர் மதக் கட்டுப்பாடுகளில் வாழும் முஸ்லீம்கள். இவர்களது கட்டுப்பாடுகளையும் நம்பிக்கைகளையும் தனது கிண்டலுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாக்குவதில் மீரானுக்கு தயக்கம் ஏதும் இருப்பதில்லை. தனது முதல் நாவல் கடலோரத்து கிராமத்தின் கதை(1988) தொடங்கி பின் வந்த துறைமுகம்(1991), கூனன் தோப்பு(1993), சாய்வு நாற்காலிகள்(1995) ஆகிய நாவல்களில், தன் முந்திய முஸ்லீம் சமுதாயத்தின் குருட்டு நம்பிக்கைகள், மதக்கட்டுப்பாடுகளின் முரட்டுக் கரங்கள், முஸ்லீம் மதகுருக்கள் இம்மக்களின் மீது கொண்டுள்ள கழுத்தை நெறுக்கும் ஆதிக்கம், ஏழைமக்களையும் பெண்களையும் மதகுருக்களும் பணம் படைத்தோரும் தம் கட்டுக்குள் வைத்து சற்றும் இரக்கமின்றி இழைக்கும் கொடுமைகள், இவையெல்லாம் மதத்தின் புனிதத்தைக் காப்பாற்ற்த் தான் என்று கோஷிக்கும் வேஷதாரித்தனம் எல்லாம் மீரானின் எழுத்தில் பதிவாகியுள்ளன. வேடிக்கை என்னவென்றால், மீரானின் எழுத்துக்கள் எல்லாமே எதிர்பாரா வியாபார வெற்றிகள். அத்தோடு இலக்கிய அங்கீகாரமும் அவை பெற்றுள்ளன. இப்போது அவர் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் சுழல்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தின் பேசாப் பொருளை யெல்லாம் பேசியவராயிற்றே.

————-

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -40 என்னைப் பற்றிய பாடல் – 33மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Comments

  1. Avatar
    சத்தியப்பிரியன் says:

    அன்புள்ள பிதாமகர் வெ.சா அவர்களுக்கு,
    வணக்கம்.
    மிக அருமையான பங்களிப்பு.சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத விமர்சனம்.விடுபட்ட எழுத்தாளர் என்றால் ஆதவன் மற்றும் சூடாமணி . என்ன காரணம் என்று தெரியவில்லை. இருவருமே வெகுஜனப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதியவர்கள் என்றாலும் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாத நல்லஎழுத்தாளர்கள்.ஆதவனின் காகிதப் பூக்கள் ஓரினச் சேர்க்கையை தமிழில் சொன்ன முதல் நாவல் அல்லவா? அந்த நாவலை அப்படி ஒரு வட்டத்திற்குள் அடைத்து அதை கொச்சைப் படுத்தக் கூடாதுதான்.இருப்பினும் இந்த நகர் மாந்தர்களின் போலி வாழ்க்கையை உரித்துக் காட்டிய அற்புத படைப்புக்களான என் பெயர் ராமசேஷன் மற்றும் காகிதப் பூக்கள் இரண்டையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
    சிந்தனை என்று வரும்பொழுது நகர் சார்ந்த சிந்தனை கிராமம் சார்ந்த சிந்தனை என்று இரு பெரும் பிரிவுகள் உள்ளன.நகர் சார்ந்த சிந்தனைகளுக்கு வாய்ப்புகள் அதிகம்.தன் ஒத்த சிந்தனையாளர்களைத் தேடிப் பிடித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது நகர் சார்ந்த சிந்தனையாளர்களுக்கு எளியா விஷயம்.ஆனால் கிராமங்கள் பெரும்பாலும் செயல் தொடர்புடையவையாகவே உள்ளன.விவசாயம் அவர்களது முதல் முன்னுரிமையாக இருக்கும்பொழுது அவர்களைக் குறித்து ஒரு சிந்தனை வடிவில் சிந்திக்க நேரம் இல்லாமல் போய்விடுகிறது.எனவே கிராமங்கள் குறித்த நாவல்கள் தமிழில் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.கிராமங்களில் பெரிதும் நம்மை உறுத்தும் ஒரு விஷயம் சாதி பாகுபாடாகும்.தலித் இலக்கியம் தோன்றியதன் காரணமே இந்த சாதி பாகுபாடுதான். தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால் வர்க்க பேதத்தை விட சமுதாய ஏற்ற தாழ்வுகளுக்குத்தான் முன்னுரிமை அளிக்கின்றனர். இதை நாம் இன்னமும் சரியான இலக்கியமாக கொண்டு வரவில்லை.இடது சாரிகள் இதனை கையில் எடுத்துக் கொண்டதற்குக் காரணம் சாதிப் பாகுபாட்டினைத் தாண்டிய சமத்துவத்தை அவர்களால் தமிழ் நாட்டில் கொண்டு வர முடியாமல் போனதுதான். இடதுசாரிகள் இலக்கியம் பிரச்சார வாடை அடிப்பது உண்மை என்றாலும் அவற்றை இலக்கியம் இல்லை என்று ஒதுக்கி விட முடியாது.ஏன் என்றால் எல்லா இலக்கியத்திற்கும் ஒரு அடிப்படை அறம் வேண்டும் அல்லவா?மற்ற இலக்கியங்களில் அறம் வெளியில் தெரியாமல் உள்ளது எனில் இடது சாரி இலக்கியங்களில் அது வெளிப்படையாக தெரிகிறது.அவ்வளவுதான்.
    அன்புடன் என்றும்,
    சத்தியப் பிரியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *