டௌரி தராத கௌரி கல்யாணம் ……18

This entry is part 11 of 24 in the series 8 செப்டம்பர் 2013

சற்றே குழப்பத்தில் புருவத்தை உயர்த்தி யாராயிருக்கும்….இந்த கார்த்திக் .? என்று மனசுக்குள் கேள்வி கேட்டுக் கொண்ட பிரசாத், ம்ம்ம்….யெஸ் ..என்கிறான்.

கார்த்திக்கின் கைகளில் பிரசாத் கௌரியின் அப்பாவிற்கு எழுதிய கடிதத்தின் ஜெராக்ஸ் காப்பி இருந்தது. அதிலிருந்த கைபேசி எண்ணை வைத்து தான் தனது மனத்தின் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஃபோன் செய்திருக்கிறான்.

மதிப்பிற்குரிய கௌரியின் தந்தைக்கு,

நமஸ்காரம்.

அம்மாவும் நானும் பத்திரமாக டெல்லி வந்து சேர்த்தோம். உங்களை மீண்டும் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

தங்களின் ஆதங்கம் எனக்குப் புரிந்தது தான். எனக்காக என் அம்மாவை மன்னியுங்கள். அவர்கள் சென்ற முறை நாங்கள் பெண் பார்க்க வந்திருந்த போது
எனது விருப்பம் அறியாமல் அவர்களாகவே அப்படிக் கேட்டிருக்கக் கூடாது. அது இன்னும் தங்களின் மனதை விட்டு அகலவில்லை என்று புரிந்து கொண்டோம்.

அதனால் தான் நான் இந்த முறை…டௌரி எதுவும் கேட்கக் கூடாது என்று என் அம்மாவிடம் பேசி அழைத்து வந்தேன். அதற்கு காரணம் நான் உங்கள் மகள் கௌரியை மிகவும் நேசிக்கிறேன்.

யாரையும் பிடிக்காமல் போவதற்கு மட்டும் காரணங்கள் சொல்ல முடியும். ஆனால் ஒருத்தரை பிடித்துப் போவதற்குச் சொல்லக் காரணங்கள் இருக்காது.
அந்த விதத்தில் எனக்கு உங்கள் மகள் கௌரியைப் பார்த்ததும், அவளிடம் எதுவும் பேசாமலேயே அவளை மிகவும் பிடித்துப் போனது. எனது திருமணத்திற்காக நான் அம்மாவுடன் வந்து பார்த்த முதல் பெண் அவள். கௌரி என் வாழ்வின் துணையாக இருந்தால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று உணர்வேன். அந்த எண்ணத்தோடு தான் நான் மீண்டும் உங்களைச் சந்திக்க வந்தோம். ஆனால் உங்களுக்குத் தான் என் மனம் புரியவில்லை. நான் துரதிர்ஷ்டசாலி என்று புரிந்து கொண்டேன்.

எங்களின் தவறுக்கு நாங்கள் மன்னிப்பு மட்டும் கோர இயலும். மன்னியுங்கள். எங்களின் மனங்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.

எதுவுமே முடிவு இல்லை. அது போலவே எந்த முடிவிலிருந்தும் ஒரு ஆரம்பம் உருவாகலாம்.

உங்களிடமிருந்து என் வாழ்வின் ஆரம்பமாக பதில் கடிதத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

இப்போது என் வாழ்கையின் முடிவு உங்கள் கையில் தான் இருக்கிறது.

கெளரியிடம் என் அன்பைச் சொல்லவும்.

இப்படிக்கு
அன்புடன்
பிரசாத்.

சற்றும் சிந்திக்காமல், மிஸ்டர் பிரசாத். அங்கே கௌரி இருக்காங்களா…? நான் அவங்க ஃப்ரெண்ட் …பட் ரொம்ப நாளா கான்டாக்ட்டுல  இல்லை.

ஓ ….ஐ ஸீ …..என்ற பிரசாத்…ஒன்றுமே புரியாமல், ஸாரி …இங்க அப்படி யாருமில்லை…ராங் நம்பர்..என்று சொல்லி கைபேசியை துண்டித்து விட்டு “யாராயிருக்கும் இவன்…இவன் ஏன் என் கிட்ட கௌரி பத்தி கேட்கிறான் – இடியட்…” சம்திங் ஃபிஷ்ஷி ” இன்னும் என்ன சொல்லப் போறான்னு கேட்டிருக்கலாமோ என்ற ஆவல் எழுந்த போதிலும்….எனக்கெதுக்கு….வே

ண்டாத்த வேலை..?  இட்ஸ் கெட்டிங் லேட் நௌ …..என்று மணியைப் பார்த்தபடி துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு குளிக்கப் போகிறான். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல…திடீரென்று கௌரியை இந்தாள் எதுக்கு எனக்கு ஞாபகப் படுத்தினானோ….? மனம் எனும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.

கௌரியின் தொலைபேசி எண் மாறிவிட்டதால், எப்படியும் அவள் இந்நேரம் பிரசாத்தை கல்யாணம் செய்து கொண்டு டெல்லியில் தான் இருப்பாள் என்ற நம்பிக்கையில் செய்த இந்த முயற்சியும் வீணானதில் சற்றே ஏமாற்றமடைந்த கார்த்திக் கையிலிருந்த கடிதப் பிரதியை சுக்கு நூறாகக் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசுகிறான்.

இன்னிக்கு சாயந்தரமா  கௌரி வீட்டுக்கு லாவண்யாவோட போய் பார்த்துட்டு வரலாம்….அவள் எனக்கு தேவதையா வந்து வாழ்க்கையில் நல்லது செய்திருக்கா…அந்த நன்றியை நான் மறக்கவே கூடாது. என்னவெல்லாமோ நினைத்துக் கொண்டவன்….லாவண்யா..லாவண்யா...என்று அழைக்கிறான்.

என்ன…கார்த்தி…கூப்டேளா ?

ஆமாம்….இன்னைக்கு நீ டாக்டர்ட செக்கப் போகணும்னு சொன்னியே…..ஈவினிங் கிளம்பி ரெடியா இரு..நாம போகலாம். அப்படியே ஒரு சர்ப்ரைஸ் விசிட்டும் இருக்கு. சரியா..?

ம்ம்ம்….இப்ப சொல்ல மாட்டியாக்கும்…உனக்கு எல்லாமே சர்ப்ரைஸ் தான். ஆனால் நீ இதோ சர்ப்ரைஸ் ன்னு காண்பிக்கும் போது  அது புஸ்ஸுன்னு போயிடும். என்று கல கல வென்று சிரித்தாள். அனேகமா இதுவும் அப்படித்தான்……என்னோட யூகம்..! என்கிறாள்.

அடடா….நீ வாயை வெச்சுட்டியா..அப்ப வழக்கம் போல இதுவும் புஸ்ஸு  தான்…நான் உன் யூகத்துக்கு சரெண்டர்டி….என்று சிரிக்கிறான்.

லாவண்யா கையிலிருந்த துண்டை உதறி ‘சும்மாச் சொன்னேன்.. நீ வேற…..சாயந்தரம் பார்க்கலாம் ‘ என்றபடி அவன் மேல் விளையாட்டுக்கு துண்டால் அடித்து விட்டுச்  சிரிக்கிறாள்..

அய்யய்யோ….எலும்பு முறிஞ்சு போச்சே…என்று அவனும் விளையாட்டாக அலறுகிறான்.

அந்த வீட்டில் இனிமையான இல்லறத்தை இருவர் முகத்திலும் காண முடிந்தது.

அவன் மனதுக்குள், அடித்த புயல் அதனால் ஏற்பட்ட சேதம் இழந்த நிம்மதி எல்லாவற்றையும் கௌரி தான் மீட்டுத் தந்தாள்.. அன்று அம்மாவும், லாவண்யா , மாமி மூணு பேரும் கௌரி வீட்டுக்கு போயிட்டு வந்ததும்….லாவண்யா மனது மாறியதும், இவர்கள் வீட்டுப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து சௌஜன்யமாக ஆனதும்…இதக் கெல்லாம் காரணம்…கௌரி , நிச்சயம் தன்னைப் பற்றி நல்ல விதமாக ஏதாவது சொல்லியிருப்பாள். ஆனால் என்னால் அதற்கு ஒரு நன்றி கூடச் சொல்ல முடியவில்லையே. எத்தனை ட்ரை பண்றேன். அவளும் நன்னாயிருக்கணம்….அவளுக்கும் நல்ல குடும்பம் அமையணம். என்னோட இந்த வாழ்த்தை அவளுக்கு சொல்லியாகணம் .

மனம் முழுதும் நினைவுகள் அடைத்துக் கொள்ள கார்த்தியும் ஆபீஸுக்கு புறப்பட்டான். உண்மையான நினைவுகள் நிச்சயம் நடந்து விடும் என்று அவனது உள்மனசு சொல்லியது.

0  000  0  000  000   0   000   0   0000    000   0   000

இந்த ஹாஸ்பிடல எங்கேர்ந்து கண்டு பிடிச்சே….இவ்வளவு நன்னாயிருக்கே….வடபழனி..நம்மாத்துக்கு பக்கத்துல தான்..ரொம்ப தூரமில்லை..டாக்டர் தான் எப்படியிருப்பாளோ..? சித்ரா, கௌரியின் கைகளைப் பிடித்தபடியே அங்கிருந்த ரிசெப்ஷன் சேரில் அமர்ந்து கொண்டே சொல்கிறாள்.

இன்னைக்கு இன்டர்நெட்ல தான் பார்த்து கண்டு பிடிச்சேன். எனக்கு அந்த ஹாஸ்பிடல் பிடிக்கவே இல்லை. இங்க நான் டாக்டர்ட்ட போன்ல பேசினேன்.நல்ல மாதிரியா இருக்கா.க்ளினிக்கும் ரொம்ப சுத்தமா நன்னாயிருக்கு.

இப்போல்லாம் நல்ல ஹாஸ்பிடல் கிடைப்பது குதிரை கொம்பு…. ஆனா இவா உன்னோட கேஸுக்கு என்ன சொல்லப் போறாளோ தெரியலையே? சந்தேகத்தைக் கிளப்பினாள் சித்ரா.

அம்மா….நீ கொஞ்சம் சும்மா இரேன்…! ஆரம்பத்துலயே அஸ்து பாடாதே. நான் பேசியாச்சு….சொல்லிக் கொண்டிருக்கும் போதே  அவளது கண்கள் வாசலைப் பார்த்து திகிலடிச்சுப் போனதைக் கண்ட சித்ராவின் கண்கள் வாசலை நோக்கித் திரும்பியது.

.அங்கே….!

கர்பவதியாக லாவண்யா, முகம் முழுக்க சங்கோஜத்துடன் தயக்கத்துடனும் கார்த்தியின் அருகே பாதி மறைந்தபடி மெல்ல உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

கார்த்தியின் கண்கள் நேராக கௌரியைப் பார்த்து ஆச்சரியத்தில் திகைத்தது .

அவனது மனத்துக்குள் சர்ப்ரைஸ் புஸ்ஸுன்னு காற்று இறங்கிக் கொண்டிருந்தது.

லாவண்யாவின் கண்களும் கௌரியை அடையாளம் கண்டு சிரித்தது.

ஏதோ சொல்ல முற்பட்டு எழுந்த சித்ராவின் கைகளை அழுத்திப் பிடித்து உட்கார வைத்தாள் கௌரி.

அடுத்த கணம்..டக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு, சித்ராவுக்கு மட்டும் கேட்கும் விதமாக “அம்மா எழுந்திரு….போலாம்….” என்று அழுத்தி சொல்லியபடி, எழுந்தவள் அவர்களை புறக்கணித்து முதுகு காட்டியபடி அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டே மெல்ல நடந்து வெளியேறுகிறாள் கௌரி.

என்ன கார்த்தி…அவங்க நம்மளப் பார்த்துட்டும் பாக்காமப் போறாங்க…அவங்களுக்கும் கல்யாணம் ஆயிருச்சு போல…? உனக்குத் தெரியுமா? என்று கேட்கும் லாவண்யாவிடம்.

நம்மளப் பார்க்க விருப்பமில்லை போல. அவங்க அம்மா வேற கூட இருக்காங்களே….ம்ம்ம்.எனக்குத் தெரியாது எப்ப நடந்திருக்கும்னு.? பட் …ஷி இஸ் ப்ளெஸ்ட்…..! வா…இப்படி உட்காரலாம்…என்று அவர்கள் எழுந்த அதே நாற்காலியில் இவர்களும் உட்கார்ந்து கொண்டு அவர்கள் போவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கார்த்தி மனது பேசியது.

கார்த்தால, பிரசாத்துக்கு ஃபோன்  போட்டு கேட்டேனே….கௌரி பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு சென்னைக்குப்  போயிருக்கான்னு சொல்லியிருக்கலாமே. ஓ ….ஒரு வேளை , இங்கேர்ந்து அவள் வீட்டுக்குப் போய் அவளைத் தொல்லைப் படுத்தக் கூடாதுன்னு நினைத்தாரோ என்னவோ…? எனிவே….இதுக்கும் மேலே நான் யாரையும் பார்த்து தொல்லை பண்ணப் போவதுமில்லை. கௌரி நன்னாருக்கா அதுவே போதும்.

கார்த்தியிடமிருந்து ஒரு பெருமூச்சு வந்து போனது.

ஹாஸ்பிடலை  விட்டு வெளியேறியதும் சித்ரா ஆரம்பித்தாள் …..
அவா….வந்தா நமக்கென்ன…? நாம என்ன அவாளப் பார்க்கவா வந்தோம்..? பாரேன்…..அந்தப் பொண்ண ஜம்முன்னு கூட்டிண்டு வரான்…கடங்காரன் ….நான் அவனைப் பார்த்ததும் நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்கணும்னு ரத்தம் கொதிச்சது நேக்கு…நீதான் அடக்கி வெச்சே….என்று .அடுக்கிக் கொண்டே போக.

நிறுத்தும்மா……அவாளைப் இப்படிப் பார்க்க நேக்கு சந்தோஷமாத் தான் இருக்கு. மீண்டும் அவனை நேருக்கு நேராப் பார்த்து ஏதாவது பேசித் தொலைச்சு……அமைதியாப் போற அவா ஃலைப்ல குண்டைத் தூக்கிப் போடண்டாமேன்னு தான் நான் வெளில வந்தேன்.

நல்லவளா இருக்கலாம்டி கௌரி….மக்குப் பண்டாரமாத் தான் இருக்கக் கூடாது. இதோ…உன்ன மாதிரி..! இப்ப நீ தான் இன்னொரு ஹாஸ்பிடல் , இன்னொரு டாக்டர்னு அலையணம்….தெரிஞ்சுக்கோ. சித்ரா கோபத்துடன் சொல்கிறாள்.

போறது….இது எனக்கு சரிப்பட்டு வராது. எப்படியோ முன்னமே தெரிஞ்சது நல்லதுக்காச்சு.

மாணிக்கம்….வண்டிய எடு……!

இருவரும் வெளியில் ஒன்றுமே பேசிக் கொள்ளாமல் மௌனமாகவும், மனத்துக்குள் ஏதேதோ பேசிக் கொண்டும் வீடு வந்து சேர்ந்தார்கள்.

காரை பூட்டி உறையைப் போட்டு மூடிவிட்டு , சாவியை கொடுத்துவிட்டு வெளியேறினான் மாணிக்கம்.

‘கேட்’ பூட்டும் சத்தம் காதில் விழுந்ததும்,  ‘போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட’ ன்னு திரும்பி வந்தாச்சு….சித்ரா தான் அலுத்துக் கொண்டாள் . நான் கிளம்பும்போதே நினைச்சேன், இன்னைக்கு உன் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம்….எது செஞ்சாலும் சரிப் பட்டு வராதுன்னு !

அம்மா….நீ வருத்தப் படாதே. எனக்கு எல்லாம் நல்லது தான் நடக்கும்..நைட்டியை மாட்டிக் கொண்டே வருகிறாள் கௌரி.

ஆமாம்…இந்த நம்பிக்கைக்கு ஒண்ணும் குறைச்சலில்லை…அதான் நடந்திருக்கே ஒரு நல் …..ல……து….! என்று அழுத்தவும்,

அலுப்புடன் சோஃபாவில் சாய்ந்தவள், டிவியை ஆன் செய்யவும்….அதில் சுதா சந்திரன் நகைக் கடையை சுமந்து கொண்டு பெரிய பொட்டோடும் உருட்டும் விழியோடும் மருமகளை அதட்டிக் கொண்டிருந்தாள்…

ச்சே…..என்று கௌரி வேறெந்த சானலுக்கும் தாவாமல் டி வி யை அணைத்து விட்டு அம்மா ஏதாவது பாட்டுப் போடேன்….ரொம்ப டையர்டா இருக்கு….என்று கெஞ்சும் குரலில் கேட்கிறாள்.

காய்ச்சிய பசும்பாலை தம்ளரில் விட்டு ஆற்றிய படியே வந்த சித்ரா, காயத்ரி வீணை சிடி யைப் போட்டுவிட்டு…இதைக் கேளு…என்றவள்,
கௌரி, உனக்கு சீமந்தம் பண்ணனும்….! எதையும் குறைக்கக் கூடாது. ஊரைக் கூட்டி செய்யலைன்னாலும் உபாயமா பண்ணித் தானாகணம்.நீ என்ன சொல்றே…?

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.கல்யாணமே நடக்காத எனக்கு சீமந்தம் ஒரு கேடாக்கும்…நீ அதைப் பத்தில்லாம் யோசிக்காதே….என்றபடியே கண்களை சிறிது மூடிக் கொண்டு சாய்ந்தாள் கௌரி.

பாவயாமி…கோபாலபாலம் …..! அன்னமாச்சார்யா க்ரிதி, ஸ்ருதி பிசகாமல் அந்த ஹாலை ஆனந்த மயமாக்கியது. அந்தஸ்வர வீணா கானத்தில் தனை மறந்து உறங்கிப் போனாள் கௌரி.

அவளைப் பார்த்தபடியே இமையசையாமல் உட்கார்ந்திருந்தாள் சித்ரா.

(தொடரும்)

Series Navigationமறுநாளை நினைக்காமல்….தலைகீழ் மாற்றம்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *