தலைகீழ் மாற்றம்

This entry is part 12 of 24 in the series 8 செப்டம்பர் 2013

1

அனுபமா. ஓ நிலை படிக்கிறாள். தொட்டால் சிணுங்கி வகை. அதையும் விட சற்று அதிகம். தொட்டாச்சிணுங்கி சிணுங்கும். சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். ஆனால் அனுபமா? அடிக்கடி சிணுங்குவாள். ஆனால் இயல்பு நிலைக்குத் திரும்ப சில நாட்கள் ஆகும்.  அப்பா பன்னீர்ச்செல்வத்திற்கும் அம்மா ஜெயந்திக்கும் அனுபமாவோடு எப்போதும் ஏதாவது குளிர் யுத்தம். இப்போதும் கூட அப்பாவோடும் அம்மாவோடும் அனுபமா சரியாகப் கேசுவதில்லை. தன்னோடு அனுபமா ரொம்பக் கோபத்தில் இருக்கிறாள் என்பதை பன்னீர்ச்செல்வம் உணர்ந்து கொண்டார்.  எப்போதும் பள்ளிக்குப் போகும் முன் ஜெயந்தி 5 வெள்ளி கொடுப்பார். அன்று 5 வெள்ளியாக இல்லை. அப்பாவிடம் வாங்கிக் கொண்டு போ என்றார் ஜெயந்தி. அப்பாவிடம் கேட்கவேண்டியதில்லை. அவர் எங்கு காசு வைப்பார் என்பதும் அனுபமாவிற்குத் தெரியும். எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். சொல்ல வேண்டும் என்று கூட பன்னீர் எதிர்பார்த்ததில்லை. அப்போது பன்னீர்ச்செல்வமும் அறையில்தான் இருந்தார். அனுபமா அறைக்குள்ளேயே வரவில்லை. காசில்லாமல் அன்று மதியம் எதுவும் சாப்பிடாமல் மாலை வீடு வந்துதான் சாப்பிட்டாள். என்ன கோபம் என்று பன்னீர்ச்செல்வத்தால் அனுமானிக்க முடியவில்லை.

ஓர் இரவு. ஜெயந்தி எதேச்சையாக 1 மணிக்கு எழுந்தபோது அனுபமாவின் அறையில் விளக்கு எரிந்தது. லேசாக நீக்கிப் பார்த்தார் ஜெயந்தி. தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறாள். கணினியிலும் ஏதோ படம் ஒளிர்ந்தது. ஜெயந்தி பார்த்ததை அனுபமாவும் கவனித்துவிட்டாள்.

அடுத்தநாள் காலை. வழக்கம்போல் அனுபமா எழுந்தாள். குளியலறை செல்லும்வரை பொறுத்திருந்தார் ஜெயந்தி. குளியலறை சென்றதும் அனுபமாவின் தொலைபேசியை குடைந்தார். பேசியவர்கள் பட்டியலில் தோழி சுகுணாவும் வசந்தியும் இருந்தார்கள். வித்தியாசமான எண்கள் எதுவுமே இல்லை. ஏன் பேசியபின் நீக்கியிருக்கக் கூடாது? ஜெயந்தி வெளியேறினார். அனுபமா வந்தாள். தொலைபேசியைக் குடைந்ததும் அனுபமாவிற்குத் தெரியும்.

அனுபமா பள்ளிக்குச் சென்றுவிட்டாள். காலை 9 மணி. அதுதான் ஜெயந்தியும் பன்னீர்ச்செல்வமும் பிரச்சினைகளைப் பேசிக் கொள்ளும் நேரம். ஜெயந்திதான் ஆரம்பித்தார்.

‘இனிமேல் நாம் சும்மா இருக்கக் கூடாதுங்க. 1 மணிக்குப் பேசுகிறாள். கணினி ஓடுகிறது. முகம் கொடுத்து பேச மறுக்கிறாள். எப்போதும் சுகுணா வசந்தியைவிட அதிக மதிப்பெண்கள் வாங்குவாள். சென்ற தேர்வில் சமமான மதிப்பெண். இப்போது அவர்களைவிடவும் இறங்கிவிட்டாள். தொடக்கக் கல்லூரிக் கனவே பெரும் சவாலாகும்போல் இருக்கிறது. நீங்கள் பேசாவிட்டால் பிறகு வருத்தப்படவேண்டி வரும்.’

 

2

‘நான் பேச முடியாது ஜெயந்தி. அதற்கான சூழ்நிலையே இல்லை. காசு எடுக்கக் கூட நம் அறைக்குள் நுழையாத அளவிற்கு அவள் கோபத்தில் இருக்கிறாள். முதலில் என்ன கோபம் என்று தெரிய வேண்டும். சுமுகமான பிறகு ஒவ்வொன்றாய்க் கேட்கலாம். இரவு உணவுக்குப் பின் பேசிக் கொள்வோம்.’

முடிவுக்கு வந்தார்கள். அன்று இரவு உணவு முடிந்தது ஜெயந்திதான் இப்போதும் ஆரம்பித்தார்.

‘அனுபமா. எங்களுக்கு ரொம்பக் கவலையாக இருக்கிறது. உனக்கு ஏதும் பிரச்சினையா? சொன்னால்தானே தெரியும். நீ சுகணாவைவிடவும் வசந்தியை விடவும் மதிப்பெண் குறைவாக வாங்கி இருப்பது எங்களை ரொம்பவும் பாதிக்கிறது அனுபமா.’

‘ஏன் ஒப்பிட்டு ஒப்பிட்டுப் பேசுகிறீர்கள்? நானும்…..’

ஏதோ சொல்ல வந்தவள் சட்டென்று நிறுத்திக் கொண்டாள்.

‘சொல். சொல்ல வந்ததைச் சொல். ‘

‘ஒன்றுமில்லை’  விழுங்கினாள் அனுபமா. பன்னீர்ச்செல்வம் குறுக்கிட்டார்.

‘எப்போதும் உன்னைப் பற்றியேதான் சிந்திக்கிறோம் அனுபமா. உண்மையிலேயே உன்னை எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சொன்னால்தானே தெரியும். ஏதாவது துணைப்பாட வகுப்புக்கு ஏற்பாடு செய்யவா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? உனக்குள்ள அனுபவத்தை விட எங்களுக்கு அதிக அனுபவம் உண்டு. நீ வாழ்ந்ததை நாங்கள் என்றோ வாழ்ந்து விட்டோம். எங்களால் நிச்சயமாக தீர்க்க முடியும் சொல் அனுபமா.’

‘பிரச்சினை யென்று ஒன்றுமில்லை. என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறீர்கள். நீங்கள் நீங்கள் …….’

ஏதோ சொல்ல வந்தவள் வார்த்தைகளை விழுங்கினாள். ஒன்றுமில்லை நான் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். தூங்குகிறேன் என்று சொல்லி தன் அறைக்குப் போகத் தயாரானாள்.

‘சரி. தூங்கு. காலையில் பேசிக்கொள்வோம்.’ என்றார் பன்னீர்.

பன்னீர் சொன்னார்

‘இனிமேல் அனுபமாவிடம் பேசி நாம் எதையும் அறிந்து கொள்ள முடியாது ஜெயந்தி. அடுத்த வாரம் என் அக்கா சுஜாதா வருகிறார் அல்லவா. அவர் தன் மகள் கங்காவையும் அழைத்து வருவது இன்னொரு நல்ல செய்தி. உனக்குத் தெரியும் கங்காவும் அனுபமாவும் மிக நெருக்கமாகப் பழகுபவர்கள். கங்காவுக்கு அனுபவம் அதிகம். கங்காவிடம் விபரத்தைச் சொல்வோம். கேட்கச் சொல்வோம். இப்போதைக்கு இதுதான் வழி. அதுவரை நாம்

 

3

எதுவுமே பேசவேண்டாம். கங்காவிடம் அனுபமா தன் மனதைத் திறப்பாள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.’

சுஜாதாவும் கங்காவும் வந்துவிட்டார்கள். அனுபமா பள்ளிக்குச் சென்றுவிட்டாள். கங்காவிடம் பன்னீர்செல்வம் சொன்னார்.

‘கங்கா. உன்னிடம் ஜெயந்தி அனுபமாவைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அதே கருத்துத்தான் எனக்கும். இன்று இரவு நாங்கள் ஒரு திருமணத்திற்குச் செல்கிறோம். தாமதமாகத்தான் வருவோம். நீ அனுபமாவை அழைத்துக் கொண்டு வெளியே எங்காவது உட்கார்ந்து இதுபற்றிப் பேசி அவள் எந்தச் சுமையை சுமந்து கொண்டிருக்கிறாளென்று  அறிந்து சொல். அதை நிச்சயமாக இறக்குவது எங்கள் பொறுப்பு. இது மிகவும் நுட்பமானது. அனுபமா உன்னை சந்தேகித்துவிடக் கூடாது. பாதிக் கிணறு தாண்டும் ஆபத்து கங்கா.’

அன்று மாலை. கிழக்குக் கடற்கரை சென்றார்கள் அனுபமாவும் கங்காவும். அனுபமா சொன்னாள்

‘வாழ்க்கையிலேயே மிகவும் சுகமானது இந்தக் கடலை ரசிப்பதுதான் கங்கா.

‘ஆம் அனுபமா. எத்தனை நேரம் பார்த்தாலும் போதும் என்று நினைக்க வைக்காதது கடல்தான். நான் சிங்கை வர ஆசைப்படுவதற்கு இந்தக் கடற்கரையும் ஒரு காரணம்.’

பொதுவான பேச்சுக்கள் தொடர்ந்தன. பிரச்சினையைத் தொடவேண்டிய அந்த நொடி நெருங்கிவிட்டது. கங்கா தொடர்ந்தாள்.

‘நான் வந்தது முதல் பார்க்கிறேன். நீ எப்போதும் போல் இல்லை அனுபமா. நீ யாரிடம் எதைப் பேசினாலும் அது செய்திதான். என்னிடம் சொன்னால் அது தீர்வு அனுபமா.’

அனுபமா மனம் திறக்கிளான்.

‘ஒற்றைப் பிள்ளையாகப் பிறப்பது கொடுமை கங்கா. நொடி தவறாமல் என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் மிகக் குறுகிய உலகத்தில் என் அப்பாவும் அம்மாவும். சீக்கிரம் தூங்கினாலும் காரணம் சொல்லவேண்டும். தாமதமாகத் தூங்கினாலும் காரணம் சொல்ல வேண்டும். அவர்கள் தான் எனக்கு வேலி. அந்த வேலி என் மேலேயே படர்ந்து என் குரல்வளையே நெறிக்கிறது கங்கா. மதிப்பெண் குறைந்துவிட்டதால் சுகுணாவையும் வசந்தியையும் ஒப்பிட்டுப் பேசுகிறார் என் அம்மா. அவர்கள் அம்மாக்களோடு என் அம்மாவையும் நான் ஒப்பிடவா. எவ்வளவு நேரம் ஆகும் அதைச் செய்ய. அவர்கள் அறைக் கதவைத் திறந்து பார்ப்பதில்லை. தொலைபேசியைக் குடைவதில்லை. என் அம்மா? அறையைத் திறந்து பார்க்கிறார். குற்ற உணர்வு இல்லாவிட்டால் தைரியமாகத் திறந்து பார்க்கலாமே. ஏன் திருட்டுப் பூனை போல் இப்படி. அப்படி யென்றால் சந்தேகம் தானே. உடைத்துச் சொல்கிறேன் கங்கா. என் மீது சந்தேக மென்றால் என்ன மாதிரியான சந்தேகமாக இருக்கமுடியும்? பதிலை உன்னிடமே விட்டுவிடுகிறேன். என்னிடம் சொல்லாமல் ஒரு நாள் அப்பா பள்ளிக்கு வந்து என் வகுப்பு ஆசிரியரிடம் பல மணி நேரம் பேசி இருக்கிறார். என்னென்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. என் வகுப்பாசிரியர் ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார். ‘நீ நல்ல பெண்தான் அனுபமா. உன் அப்பா உன்

4

நடவடிக்கைகளைச் சந்தேகிக்கிறார். இதை வளரவிடாதே.’ என்று. நீ சொல் கங்கா.  இதற்குப் பெயர் அன்பா? என்னைக் கொல்லும் நஞ்சாக இந்த அன்பு மாறிக் கொண்டிருக்கிறது கங்கா.

உடைந்து நொறுங்கினாள் அனுபமா. அள்ளி அணைத்துக் கொண்டாள் கங்கா.

மொத்தச் சேதியையும் ஒன்றுவிடாமல் பன்னீர்ச்செல்வத்திடமும் ஜெயந்தியிடமும் இறக்கி வைத்தாள் கங்கா. மிகத் தெளிவாகப் புரிந்தது பன்னீர்ச்செல்வத்திற்கு. அனுபமாவின் அந்தரங்கச் சுமைகளில் ஆழமான அர்த்தங்கள் இருப்பதும் புரிந்தது.

பன்னீர்ச்செல்வத்தின் பள்ளி நன்பன் ரமணா. மனோதத்துவத்தில் முதுகலையை முடித்துவிட்டு இப்போது தன்முனைப்புப் பயிலரங்குகள் நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் சிங்கப்பூருக்கு வருவது பன்னீர்ச்செல்வத்திற்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. தொடர்பு கொண்டார். இந்த மாதம் 21ம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் இருக்கிறாராம். ராயல் ஹோட்டலில்தான் தங்குகிறாராம்.  மதியம் 3 மணிக்கு மேல்தான் நிகழ்ச்சிகளாம். காலையில் எந்த நேரமும் வாருங்கள். பேசிக் கொள்வோம் என்றார். அந்த 21ம் தேதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.பன்னீர்ச்செல்வம்.

ராயல் ஹோட்டல். தனி அறை. ரமணா. பன்னீர்ச்செல்வம். ஜெயந்தி. மூன்று மணி நேரம் பேசினார்கள். ரமணாவின் அங்க அசைவுகளும் வார்த்தைகளின் கூர்மையும்  அப்பப்பா!!! இந்த ரமணாவுக்குள் இப்படி ஓர் உலகமா? அதிசயித்துப் போனார் பன்னீர்ச்செல்வம்.

சில நாட்கள் நகர்ந்தன. காரியங்களில் இறங்கினார் பன்னீர். அனுபமாவின் படுக்கை. அது 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கியது. ஒட்டு மொத்தமாக அகற்றப்பட்டது.. புதிதாக ஒரு படுக்கை வந்திறங்கியது. புதிய திரைச் சீலைகள் கண் சிமிட்டிச் சிரித்தது. பழைய கணினி காராங்கூனிக்குச் சென்றது. எல்லாவற்றையும் மானிட்டருக்குள்ளேயே அடக்கிக் கொண்ட அகன்ற திரைக் கணினி புது  வரவு. சுவர் அலமாரிகள் கழற்றி எறியப்பட்டு, புதிய அலமாரிகள் வடிவமைக்கப்பட்டு அது என்னைத் திற திற என்று அனுபமாவிடம் கெஞ்சியது. வார இறுதிகளில் வெளியே சாப்பிடச் சென்றார்கள். கடற்கரை சென்றார்கள். அனுபமா அனுமதிக்கும் வரை இருந்தார்கள். கடலை விட அழகான படைப்பு எதுவுமே இல்லை என்றார்கள். படிப்பைத் தொடவே இல்லை. அனுபமாவின் பள்ளி வாழ்க்கையைப் பற்றி மதிப்பெண்கள் பற்றி மூச்சுவிடவில்லை.

இத்தனை மாற்றங்களும் நடப்பதற்குக் காரணம் ரமணா. அப்படி அவர் என்னதான் சொன்னார். இதோ அவர் சொன்னதின் சுருக்கம்.

‘நீ மகளுக்காகத்தான் சேர்க்கிறாய். சரி. அதை மகளுக்காகச் செலவு செய். நீ எதற்காகச் சேர்க்கிறாய் என்பதை உன் மகளுக்குக் காட்டு. உனக்காகத்தான் எல்லாம் என்று அவள் உணரும்படி அவளைச் சுற்றியே உன் காசுகளை செலவழி. அவளுக்குத் தேவை மனமாற்றம்  அந்த மனமாற்றத்தை புளித்துப் போன உன் அறுவுரைகளும் பயங்களும் சாதிக்கமுடியாது. உன் மொத்தச் சேமிப்பை இழந்தாலும் கலங்காதே. இதைச் செய். மனமாற்றம் வரும் மன மாற்றங்களால் மட்டுமே நீ விரும்பும் தலைகீழ் மாற்றங்கள் சாத்தியம்’

5

5 புள்ளிகளுடன் ஓ நிலைத் தேர்வில் வெற்றிபெற்ற அனுபமா இப்போது நேஷனல் தொடக்கக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள்.

 

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம் ……18‘யுகம் யுகமாய் யுவன்’
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *