நைஸ்

This entry is part 3 of 24 in the series 8 செப்டம்பர் 2013

எஸ். சிவகுமார்

 

தங்கராசு அழுதுகொண்டே இருந்தான். அன்னம்மா அதட்டிப் பார்த்தாள்; அடித்துப் பார்த்தாள்; எதுவும் பயனில்லை. அன்னம்மாவின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. நிறைமாதக் கர்ப்பிணி. பிரசவமாக இன்னும் இரண்டு வாரமாகும் என்று மருத்துவர் சொல்லியிருந்தாலும், இப்பவே அதை இறக்கி வைத்துவிட வேண்டும் என்று அவள் துடித்தாள்.

 

அன்னம்மா ஆறு வீடுகளில் வீடு கூட்டி மெழுகி, பாத்திரம் தேய்த்துக் கொடுத்து வேலை செய்து வருகிறாள். மகன் தங்கராசுவுக்கு இப்போது வயது மூன்று. அடுத்த வாரிசு உருவானபோதுதான் அவளுக்கும் அவள் கணவனுக்கும் பிரச்சினை வந்தது.

 

அவன் ஒரு குடிகாரன். தினமும் குடித்துவிட்டு வந்து அவளை அடிப்பான். கெட்ட வார்த்தைகளால் திட்டுவான். அவனுடைய அம்மா எதையும் தடுக்காமல் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பாள். அன்னம்மா அவன் அடிப்பதைக் கூடப் பொறுத்துக் கொள்வாள்; வார்த்தைகள் அவளைக் கூசச் செய்யும். தூங்கும்போதுகூடக் காதில் ஒலிக்கும்.

 

சந்தேகப்பட்டு மருத்துவரிடம் உடம்பைக் காண்பித்தபோது, அவள் கருவடைந்திருப்பது உறுதியானது. அன்று இரவு கணவன் வந்து அவனின் போதை தெளிந்தபிறகு இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என இருந்தாள். ஆனால் அவன் வீட்டுக்குள் நுழைந்ததுமே அவனுடைய அம்மா இந்தச் செய்தியை அவன் காதில் போட்டுடைத்து விட்டாள்.

 

“நமக்கெதுக்கிடி இன்னொண்ணு? சர்ர்ர்ரக்கு சாப்பிடவே கையில காசு மிஞ்ச மாட்டேங்குது; இந்தச் சோ……னிப் பரதேசிக்கு வேற சோறு போடோணும். இதுல மறுபடி பெத்துக்கிட்டு என்ன்ன்ன்ன்னடி செய்யப் போறே? ஒண்ணோட போதும்; பேசா……மக் கலைச்சிடு, கலைச்சிடு, கலைச்சிடு ” என்று அவள் முடியைப் பிடித்துச் சுழற்றி அவளைக் கீழே தள்ளி, தங்கராசுவையும் காலால் எட்டி உதைத்தான். நான்கு வருடங்களாகப் பொறுமையாக இருந்தவள், அன்று பொறுமையிழந்தாள்.

 

தங்கராசுவை வாரி எடுத்துக்கொண்டாள்; தன் கழுத்திலிருந்த தாலியைப் பிடுங்கி கணவன் முகத்தில் எறிந்தாள். “என் புள்ளைங்கள நானே காப்பாத்திக்கிறேன்; மொத்தக் காசுக்கும் வாங்கிக் குடிச்சிட்டு வயிறெரிஞ்சு செத்துப்போ” எனச் சாபமிட்டு வீட்டைவிட்டு வெளியேறினாள்.

 

அன்றிரவு அவள் வேலை செய்யும் ஒரு வீட்டின் வராந்தாவில் தங்கராசுவோடு தங்கினாள். அடுத்தநாள் அவள் கணவனும், மாமியாரும் வந்து எவ்வளவு கூப்பிட்டும் அவர்களுடன் சேர்ந்திருக்க மறுத்துவிட்டாள். சிலநாட்களுக்குள்ளாகவே, யாரோ விட்டுப்போன ஒரு குடிசை அவள் தங்குவதற்குக் கிடைத்தது.

அன்னம்மாவுக்கு அவள் வேலை செய்யும் வீட்டிலிருப்பவர் யார் பெயரும் தெரியாது. சிலுவைக்காரங்க வீடு, சாயிபாபா பூசாரி ஐயா வீடு, ஆச்சி வீடு, கொலுசுக்காரங்க வீடு, மேனேசரய்யா வீடு, ஆடிட்டரு வீடு என இன,மத,தொழில் முறைகளை வைத்துதான் அடையாளம் சொல்வாள். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து இருவரும் குளித்தபிறகு, வேலை செய்யும் வீடுகளுக்குத் தங்கராசுவையும் கூட்டிக் கொண்டு போய்விடுவாள்.

 

முதல் வீட்டிலேயே இருவருக்கும் குடிக்கக் காப்பி கிடைத்துவிடும். பூசாரி மற்றும் கொலுசுக்காரர் வீட்டு வேலைகள் முடிந்ததும் சாயிபாபா கோயிலுக்குப் போவாள். அங்கே சாமி கும்பிட்டுவிட்டு வரும்போது பிரசாதமாக பழமோ, பிஸ்கட்டோ ஏதாவது ஓன்று சாப்பிடக் கிடைக்கும். தங்கராசு இரண்டு கைகளையும் விரித்துச் சேர்த்து “நெறையாக் குடுங்க சாமி” என்பான். பூசாரியும் அவன் நிலையறிந்து வஞ்சனையில்லாமல் கொடுப்பார்.

 

தங்கராசு மிகவும் மெல்லிய தேகம் உடையவன். வயதுக்குரிய சுறுசுறுப்பு அவனிடம் கிடையாது. கிடைத்ததைச் சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்த இடத்திலேயே ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பான். ஆனால் இன்று காலையில்  கோயிலுக்குப் போய்விட்டு வந்தபிறகு அன்னம்மாவையே சுற்றிச் சுற்றி வந்தான். அவனுக்குக் கோயிலில் இன்று கிடைத்த பிஸ்கட்டுதான் அதற்குக் காரணம்..

 

இரண்டு வாழைப் பழங்களும், ஒரே ஒரு பிஸ்கட்டும் இன்று அவனுக்குக் கிடைத்த பிரசாதம். வழக்கமாக வட்டமாக மொழுமொழுவென்று இருக்கும் பிஸ்கட்டு, இன்று நீள்சதுர வடிவத்தில் வித்தியாசமாகவும், அதிகச் சுவையாகவும் இருந்தது. பிஸ்கட்டின் மேலே சர்க்கரை தூவியிருந்தது; உள்ளே தேங்காய்த் துருவல் கலந்தது போல வாசனையாய் இருந்தது. இன்னொரு பிஸ்கட்டு திங்கவேண்டும் போல இருந்தாலும், இந்நேரம் கோயிலைச் சாத்தியிருப்பார்கள்; எதுவும் கிடைக்காது என்பது தெரிந்து பேசாமலிருந்தான்.

 

நான்காவது வீட்டு வேலை முடியும் வரை பொறுமையாய் இருந்தவன், ஆச்சி வீட்டினுள் நுழையும்போது, அம்மாவின் புடைவையை இழுத்து, “அம்மா, பிஸ்கட்டு வேணும்” என்று ஆரம்பித்தான். “அதான் தின்னியேடா?” என்றவளிடம், “ரொம்ப நல்லா இருந்திச்சி; இன்னிக்கி சோறு வேணாம்; பாக்கிட்டு நெறையா அதே பிஸ்கட்டுதான் வேணும்” என்றான். “இன்னும் ரெண்டு வூடு வேலை செய்யணும்; ஒன் தங்கச்சிப் பாப்பா வேற வவுத்துக்குள்ள ஒதைச்சிட்டுருக்கா; கஸ்டமாயிருக்கு. பிஸ்கட்டு நாளைக்கு வாங்கித் தாரேன்டா” என்றதும் அழ ஆரம்பித்தான்.

 

அன்னம்மாவின் பொறுமையும் எல்லை கடக்க ஆரம்பித்தது. “ஒங்கப்பன் மாதிரியே எல்லாத்துக்கும் பிடிவாதம்! ஒன்னையும் ஒங்கப்பன்கிட்டயே வுட்டுட்டு வந்திருக்கணும். என்னோட கூட்டியாந்தேன் பாரு, எல்லாம் என் கருமாதி” என்று அவனை அடித்துத் தன் தலையிலும் அடித்துக் கொண்டாள்.

 

தனக்குத் தங்கை பிறக்கப் போகிறாள் என்பதைப் பற்றித் தங்கராசுவுக்கு எந்தவிதமான எதிர்பார்ப்போ, ஆர்வமோ, சந்தோஷமோ இல்லை. பிஸ்கட்டிலேயே குறியாக இருந்தான். என்ன செய்தும், என்ன சொல்லியும் அவன் அழுகை ஓய்வதாகத் தெரியவில்லை. “சரி, எல்லா வூட்டு வேலையும் முடிச்சிட்டுக் கடைக்குப் போயி வாங்கியாறேன்; அளுவாதே” என்று சமாதானம் சொன்னாள். தங்கராசுவும் அவளுடைய வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு அமைதியானான்.

 

கடைசியாக சிலுவைக்காரங்க வீட்டில் வேலை முடிக்கும்போது மதியம் ஒரு மணி ஆகிவிட்டது. மற்ற நாட்களில் பன்னிரெண்டு மணிக்கு முடியும் வேலை, இன்று தங்கராசு செய்த கலாட்டாவினால் தாமதமானது. இந்த வீட்டில் இருப்பது நான்கு பேர். டேவிட்டுக்கு  இன்சூரன்ஸ் கம்பனியில் வேலை. அவர் மனைவி ஸ்டெல்லா பள்ளி ஆசிரியை. மகள் மெர்லின் எட்டாம் வகுப்புப் படிக்கிறாள். இந்த நேரத்தில் டேவிட்டின் அம்மா மட்டும்தான் வீட்டில் இருப்பாள்.

 

வேலை முடிந்ததும், “அம்மா, பிஸ்கட்டு” என்று லேசான அழுங்குரலில் நச்சரிக்கலானான் தங்கராசு.

 

“அந்த பிஸ்கட்டு பேரு என்னடா? அப்பதானே கடையில போயி கேட்டு வாங்க முடியும்?” என்றாள் அன்னம்மா.

 

அவளுடைய கேள்வியில் இருந்த நியாயம் சிறிது நேரம் அவன் வாயை மூடியது. அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, “இங்க பாரு ராசு, ஒனக்கும் பிஸ்கட்டுப் பேரு தெரியாது, எனக்கும் தெரியாது. சின்னப்பாப்பா (மெர்லினை அன்னம்மா அழைக்கும் பெயர்) இஸ்கூலிருந்து வந்ததும் அதுங்கிட்ட கேட்டிட்டு வாங்கித் தாரேன்” என்று உறுதிமொழி கொடுத்துவிட்டு, “அம்மாவுக்கு டயிர்டா இருக்குதுடா. ரெண்டு பேரும் இப்ப சோறு தின்னலாம். நான் கொஞ்சம் நேரம் தலைய சாய்க்கறேன். அப்பத்தான் சாயங்காலம் கடைக்குப் போக முடியும். அதுங்காட்டியும் நீ எதாச்சும் வெளையாடு” என்று அவனுக்கு முதலில் சோறு ஊட்டினாள்.

 

சாப்பிட்டு முடித்ததும், ராத்திரிக்கு பிஸ்கட்டு மட்டும்தான் சாப்பிடவேண்டும் என்று மனதில் உறுதி செய்துகொண்டே, வீட்டு வாசலில் பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடப் போனான்.  அன்னம்மாவும் சாப்பிட்டுவிட்டு தூங்கிப் போனாள்.

 

வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தாள் அன்னம்மா. மணி நான்கு ஆகியிருந்தது. தலை லேசாகச் சுற்றியது. சுதாரித்துக் கொண்டு மெல்ல எழுந்தாள். பள்ளி முடிந்து வீடு திரும்பிய மெர்லின் கதவைத் திறந்து உள்ளே நுழையும்போதே, “அக்கா வந்தாச்சு” என்று பின்னாலேயே ஓடிவந்தான் தங்கராசு. அன்னம்மாவின் புடைவைக்குப் பின்னால் ஒளிந்து நின்று, “அக்காவைக் கேளு” என்று மெல்லிய குரலில் அம்மாவிடம் சொன்னான். “இருடா, அது மொதல்ல உள்ள போகட்டும்” என்றதைக் கவனித்துவிட்ட மெர்லின், “என்ன அன்னம்மா ரகசியம்?” என்றாள்.

“ஒண்ணுமில்ல சின்னப்பாப்பா, நீ டீ குடிக்கும்போது எனக்கும் கொஞ்சம் குடுக்கறியா? எனக்குப் பசிக்குதோ இல்லையோ, உள்ள இருக்கறது கொடையுது” என்று மழுப்பினாள்.

 

“இரு வரேன்” என்று உள்ளே சென்ற மெர்லின், உடை மாற்றிக்கொண்டு தேநீர் கலந்து, தனக்கும், பாட்டிக்கும் இரண்டு கோப்பையில் ஊற்றிவிட்டு, மீதம் இருந்த தேநீரை எடுத்துவந்து அன்னம்மா வைத்திருந்த குவளையில் அப்படியே ஊற்றிவிட்டு, “போதுமா?” என்றாள்.

 

இரண்டு பேர் குடிக்கும் அளவு இருந்தது அது. “சாஸ்திம்மா” என்று சொன்னாலும், தங்கராசுவுக்குக் கொஞ்சமாக மீதம் வைத்து எல்லாவற்றையும் வேகமாகக் குடித்தாள். தலைசுற்றல் கொஞ்சம் குறைந்து நிதானமானாள்.

 

அம்மா கொடுத்த தேநீரைக் குடிக்காமல் கையிலேயே வைத்துக்கொண்டு, “இப்பவே, ஒடனே அக்காவைக் கேளு” என்று கெஞ்சும் குரலில் சொன்னான் தங்கராசு.

 

“என்ன ராசு மறுபடி ரகசியம்?” என்று வெளியே வந்த மெர்லினிடம், “காலையிலிருந்து ஙைஙைன்னு என் உசிர வாங்கறான், சின்னப்பாப்பா. புதிசா ஏதோ பிஸ்கட்டை தின்னிட்டு அது பாக்கிட்டோட வேணுங்கிறான்” என்றவள் தங்கராசு பக்கம் திரும்பி, “நீயே சொல்லேண்டா!” என்றாள்.

 

“அக்கா, அது வட்டமா இல்லாம இப்டி… இப்டி…. நீட்டமா உள்ளே தேங்காயிப் போட்டு மேல எல்லாம் சக்கரை தூவியிருந்திச்சி” என வலதுகை சுட்டுவிரலால் தன் இடது கையில் கட்டம் போட்டு சுவாரசியமாக விவரித்தான் தங்கராசு.

 

“ஓ அதுவா? நைஸ் பிஸ்கட்டு! இங்க பொட்டிக்கடையில அது கெடைக்காது, அன்னம்மா. நாங்க மளிகை சாமான் வாங்கற கடை தெரியுமில்லே? அதான் மெய்ன் ரோட்டில இருக்குதே, அங்க கெடைக்கும். பிஸ்கட் பாக்கெட் மேலே தென்னை மரம் படம் போட்டு, மஞ்சக்கலர் பச்சைக்கலர்ல இருக்கும். பதினஞ்சு ரூபா. நான் வேண்ணா போய் வாங்கித் தரட்டுமா?” என்றாள் மெர்லின்.

 

“ஐயோ! நீ போவேணாம் பாப்பா; அய்யா திட்டுவாரு. ஒரு சீட்டில எளுதிக்குடு. நானே போய் வாங்கியாறேன்” என்றவள், தன் இடுப்பிலிருந்து சின்ன மணிபர்ஸை எடுத்துத் திறந்து பார்த்தாள். அதில், சரியாகப் பதினைந்து ரூபாயும், பர்ஸ் காலியாக இருக்கக் கூடாது என்பதற்காக போட்டுவைத்திருந்த செல்லாத சில பழைய காசுகளும் இருந்தன. மெர்லின் எழுதிக்கொடுத்த காகிதத்தையும் அதனுள் வைத்துமூடி இடுப்பில் செருகிக்கொண்டாள்.

 

பிஸ்கட்டின் பெயரை “நைஸ் நைஸ்“ என்று மனதில் மந்திரம் போல உச்சாடனம் செய்யத் தொடங்கிய தங்கராசு, “பிஸ்கட்டு வாங்க நானும் வருவேன்” என்று அடம்பிடித்தான். “உன்னைக் கூட்டிக்கிட்டு அம்புட்டுத் தூரம் போகமுடியாது; விளயாடிகிட்டிரு; இதோ வந்திடுவேன்” என்று கிளம்பினாள் அன்னம்மா. தங்கராசு மறுபடி விளையாடப் போனான்.

ஒரு மணி நேரம் கடந்தும் அன்னம்மா வீடு திரும்பவில்லை. தங்கராசு விளையாட்டை முடித்துக்கொண்டு அம்மாவுக்காகவும், அவள் வாங்கிவரப்போகும் பிஸ்கட்டுக்காகவும் காத்திருந்தான். அலுவல் முடிந்து வீடு திரும்பிய டேவிட், “என்னடா வீட்டுக்குப் போகாம இங்க உக்காந்திருக்க? ஒங்க அம்மா எங்க?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்து இருசக்கர வாகனத்தைப் போர்ட்டிகோவில் நிறுத்தினார்.

 

“அம்மா பிஸ்கட்டு வாங்கப் போனாங்க; இன்னும் வரக்காணோம்” என்று பயத்துடன் பதில் சொன்னான் தங்கராசு. உள்ளேயிருந்து வந்த மெர்லின், “ஆமாம் டாடி, அன்னம்மா பிஸ்கட் வாங்க அஞ்சு மணிக்கு லக்ஷ்மி ஸ்டோர்ஸுக்குப் போனாங்க; இன்னும் வரலை” என்று அவன் கூற்றை உறுதிப்படுத்தினாள். பின்னாலேயே வந்த டேவிட்டின் அம்மா, “டேவிட்டு, எதுக்கும் நீ கொஞ்சம் போய் பார்த்திட்டு வந்திடேன்; புள்ளத்தாச்சிப் பொண்ணு. என்ன ஆச்சுன்னு தெரியலையே ஏசுவே!” என்று மகனை முடுக்கிவிட்டாள்.

 

‘இந்த அம்மாவுக்கு வேலையில்ல! உள்ள வந்து டீ குடிச்சிட்டுப் போன்னு கூட சொல்லாம ஆபீசிலேருந்து வந்தவுடனே ஒரு வேலைக்காரிக்காக வெளியே தொரத்தறாங்க’ என்று முணுமுணுத்துக்கொண்டே வண்டியை எடுத்துக் கிளம்பினவர், “டே! நீயும் வா; உங்கம்மாகிட்ட விட்டுர்றேன்” என்றுத் தங்கராசுவை பின்னால் ஏற்றிக்கொண்டு வேகமாகச் சென்றார். ஐந்து நிமிடத்தில் கடையில் இருந்தார்.

 

கடைக்காரரிடம் விவரம் கூறி விசாரித்ததில், அன்னம்மா பிஸ்கட்டு வாங்கிக்கொண்டு கடைக்கு வெளியே வந்தபோது இருசக்கர வாகனம் ஓன்று மோதியது என்றார். மேலும், அடிபட்டுக் கீழே விழுந்ததும் அவளை ஒரு ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததையும் சொன்னார்.

 

டேவிட்டின் சலிப்பு இப்போது விடைபெற்று, அன்னம்மா மீதும், தங்கராசு மீதும் பரிதாப உணர்ச்சி ஏற்பட்டது. ‘ஜீசஸ்! அவள் நல்லபடியாக இருக்கவேண்டும் ஆண்டவரே!’’ என்று மனதினுள் வேண்டி, “வாடா அம்மாவைப் பார்க்கப் போகலாம்” என்று தங்கராசுவைக் கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

 

மருத்துவமனையில் டேவிட்டுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்கள் இருந்ததால், அன்னம்மா எங்கிருக்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்க நேரமாகவில்லை. “அடிபட்டு அஞ்சரை மணிக்கு ஆட்டோல வந்த பொம்பளதானே? உங்களுக்குத் தெரிஞ்சவங்களா ஸார்? அதுக்கு டெலிவரி ஆயிடுச்சி ஸார்! பொம்பளப்புள்ள! ஆயுதக்கேசு ஆயிடிச்சு ஸார்; தனியா படுக்க வச்சிருக்காங்க. நேரா போயி லெஃப்ட்டில திரும்புனீங்கினா ஏழாவது வார்டு; அதுக்குப் பக்கத்தில சின்னதா ஒரு ரூமிருக்கும். அதுதான் ஸார். போய்ப் பாருங்க ஸார்” என்று மிகவும் மரியாதையோடு எல்லா விஷயங்களையும் கேட்காமலே கொட்டித் தீர்த்தார் அந்தப் பணியாளர்.

இடத்தைக் கண்டுபிடித்துத் தங்கராசுவிடம், “நீ உள்ள போயி உங்கம்மாவையும் பாப்பாவையும் பாரு. நான் இதோ வந்திடறேன்” என்று அவனை உள்ளே அனுப்பிவிட்டுப் பழங்கள் வாங்கிவரச் சென்றார் டேவிட்.

 

அம்மாவைப் பார்த்ததும் தங்கராசுவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அம்மாவின் பக்கத்தில் கிடந்த குழந்தையையும் பார்த்ததும் ஓடி வந்தான்.

 

அவனைக் கைகாட்டி  நிறுத்திய அன்னம்மா, “ராசு, இந்தாடா பிஸ்கட்டு! கையக் கழுவிக்கிட்டு வந்து அப்புறம் பாப்பாவத் தொடுவியாம்!” என்று முன்னெச்சரித்தாள்.

 

“சரிம்மா” என்று வேகமாக கைகழுவி வந்தவன் அம்மாவின் புடவையிலே கையின் ஈரம் போகத் துடைத்தான். பிஸ்கட்டைப் பற்றிய நினைப்பே இல்லாதவன் போல நேரே  குழந்தையிடம் சென்று அதன் கன்னத்தை மெதுவாகத் தொட்டுப்பார்த்தான்.

 

“பாப்பா அளகா வளவளன்னு இருக்கும்மா!” என்றான்.

 

“ஆமாம் ஒன் மாதிரியே!” என்று சொல்லிக்கொண்டே அவனிடம் பிஸ்கட் பாக்கட்டை நீட்டினாள் அன்னம்மா.

 

தங்கராசு பிஸ்கட் பாக்கட்டை வாங்காமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அன்னம்மா அவனிடம், “தங்கச்சிப் பாப்பாவுக்கு என்ன பேரு வைக்கலாம்னு சொல்லு தங்கராசு! “ என்று கேட்டாள்.

 

“நைஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்ற தங்கராசுவின் உரத்த குரல் கேட்டு ஏழாவது வார்டில் இருந்தவர்கள் வெளியே வந்து எட்டிப் பார்த்தார்கள்.


 

 

Series Navigationஜாக்கி சான் 6. சாகச நாயகன் பிறந்த கதைஎழுந்து நின்ற பிணம்
author

எஸ். சிவகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *