குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27

This entry is part 10 of 22 in the series 15 செப்டம்பர் 2013

“வாம்மா, ராதிகா.  வா.”

ராதிகாவை எதிர்பார்த்து, வாசற்கதவைத் திறந்து வைத்துக்கொன்டு சிந்தியா அவளுக்காக்க் காத்திருந்தாள். அவள் தன் காலணிகளை உதறிய பின், அன்பு தோன்றச் சிரித்து, அவள் கைபற்றி வீட்டினுள் சிந்தியா அவளை இட்டுச் சென்றாள். அவளது அந்தத் தொடுகை ராதிகாவைச் சிலிர்க்க வைத்தது.

“நீ எங்க வராம இருநதுடுவியோன்னு எனக்குக் கொஞ்சம் அவநம்பிக்கையாத்தான்  இருந்திச்சு. நல்ல வேளை. வந்துட்டே.  என்ன சாப்பிட்றே?… முதல்ல உக்காரு.”

ராதிகா உட்கார்ந்தாள்: “எனக்கு எதுவும் வேணாங்க. எங்க காலேஜ் காண்டீன்ல காப்பி குடிச்சுட்டுத்தான் கெளம்பினேன்.”

“அந்தக் காப்பி எப்பவோ ஆவியாப் போயிருக்கும். பரோட்டாவும் குருமாவும் பண்ணியிருக்கேன்.  முதல்ல சாப்பிடலாம்.  அதுக்கு அப்பால பேசலாம். சரியா?”

அவள் பேசப் போவது இன்னதென்பதைக் கேட்கும் ஆவல் ராதிகாவுக்கு இருந்தாலும், தன் அப்பாவின் சின்னவீட்டுக்காரி எனும் கசப்பான நினைப்பிலிருந்து  அவளால் விடுபட முடியவில்லை.  இதனால் முகத்தில் புன்னகை காட்ட முடியவில்லை.  பேசாமல் இருந்தாள்.

சிந்தியா உள்ளே போய் இரண்டு தட்டுகளில் பரோட்டாக்களும் இரண்டு கண்ணாடிக் கிண்ணங்களில் குருமாவும் ஓர் அகலத் தட்டில் எடுத்து வந்து சாப்பாட்டு மேசை மீது வைத்தாள்.

“வாம்மா.  வாஷ் பேசின்ல கை கழுவணும்னா கழுவிக்க.”

கை கழுவி வந்த அவளிடம் ஒரு துவாலையைக் கொடுத்துத் துடைத்துக்கொள்ளச் செய்த பின் கைபற்றி அவளைச் சாப்பாட்டு மேசைக்கு இட்டுச் சென்றாள்.

“உக்காரு.  … சாப்பிடும்மா….”

இருவரும் சாப்பிடத் தொடங்கினார்கள். சாப்பிட்டுக்கொண்டே ராதிகா வீட்டை ஒரு நோட்டம் விட்டாள்.  வீடு மிகவும் துப்புரவாக இருந்தது. ஒரு தூசு-தும்பு இல்லை.  இரண்டு சுவர்களில் முறையே ஏசுநாதர் சிலுவையில் தொங்கும் படமும், கன்னி மேரி குழந்தை ஏசுவுடன் இருக்கும் படமும் மாட்டப்பட்டிருந்தன.  சுவர்கள் யாவும் வெளிர் நீல வண்ண டிஸ்டெம்பரில் அடக்கமாக ஒளிர்ந்தன. அவர்கள் உட்கார்ந்திருந்த அறையை ஒட்டி இன்னோர் அறை இருந்தது.  அதன் கதவு சாத்தப்பட்டிருந்த்து.  அது அவளது படுக்கையறையாக இருக்கும் என்று எண்ணிய ராதிகா, ‘அப்பாவும் இவளும் அதில்தான்…’ என்று தொடங்கிய ஊகத்தைத் தொடரக் கசந்து தன்னையும் மீறி முகம் கறுத்தாள்.

“ஏம்மா என்னவோ போல இருக்கே?”

“இந்த ஒரு பரோட்டாவே போதுங்க. இனிமே வைக்காதீங்க. பெரிய பரோட்டா.  வயிறு ஃபுல்லாயிடிச்சு.”

“சரிம்மா…. பரோட்டா நல்லா இல்லே போல!”

“சேச்சே! பரோட்டா நல்லாத்தான் இருக்கு. எனக்குத்தான் வயித்துல இடமில்லே.”

அவள் ராகேஷைப் பற்றிச் சொல்லப் போவதை யெல்லாம் கேட்ட பிறகு, தன் அப்பாவின் பக்கமும் தப்பு இருந்த போதிலும், மணமான ஒருவரை மயக்கி அபகரித்துக்கொண்டு  அவள் தன் அம்மாவுக்குச செய்துள்ள துரோகத்தை நாக்கைப் பிடுங்க்கிகொள்ளுகிற மாதிரி கேட்கவேண்டும் என்று தனக்குள் திட்டமிட்டவாறு அவள் சாப்பிட்டு முடித்தாள்.

கை கழுவிக்கொண்டு காப்பி குடித்த பின், “வாம்மா, ராதிகா. உக்காரு,” என்றவாறு ஒரு நாற்காலியில் பொதிந்துகொண்ட சிந்தியா அவளையும் எதிரில் இருந்த நாற்காலியில் உட்காரப்பணித்தாள்.

சில விநாடிகள் கனத்த மவுனத்தில் கழிந்த பின், “ராகேஷை உனக்கு எத்தனை நாளாப் பழக்கம்? கொஞ்ச நாளாவா, இல்லாட்டி ரொம்ப நாளாவேயா?” என்று சிந்தியா உரையாடலைத் தொடங்கினாள்.

ராதிகா தன் விழிகளை நகர்த்தி முகத்தில் செம்மையுடன்,  “இப்பத்தான் – சமீபத்துலதான் அறிமுகமானாரு.  நீங்க டிக்கெட் விக்கச் சொல்லிக் குடுத்தீங்கல்லே? அதுக்குப் பெறகுதான் பழக்கம். …அவரு மூவாயிரத்துக்கு வாங்கிக்கிட்டாரு.”

“ஓ!….கவுண்ட்டர் ஃபாய்ல்ல நானும் கவனிச்சேன்.. ஆனா அது தொடரும்னு நான் நினைக்கல்லே.. . . ஐ லவ் யூ சொல்லியாச்சா?”

ராதிகா தலை கவிழ்ந்து பதில் கூறாதிருந்தாள்.

“உன்னோட அந்தரங்கத்தைத் துழாவறேனேன்னு எம்மேல கோவப்படாதேம்மா.  இது வரைக்கும் சொல்லாட்டியும், இனிமேற்பட்டு ஒரு நாள் கண்டிப்பாச் சொல்லத்தான் போறான்.  அவனை நீ கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறது உனக்கு நல்லது!”

‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’ எனும் கேள்வி குதித்த பார்வையால் ராதிகா அவளை நேருக்கு நேராக ஏறிட்டாள்.

“அவன் நல்லவன் இல்லேம்மா.”

“எதை வெச்சு அப்படிச் சொல்றீங்க?” – அவள் அடக்க முயன்ற ஆத்திரம் துல்லியமாய் அவள் குரலில் ஒலித்தது. ‘என்னுடைய ராகேஷையா நல்லவன் இல்லை என்கிறாய்? உன் வண்டவாளம் அவனுக்குத் தெரிந்துள்ளதால், அவன் என்னுடன் பழகுவது உனக்குப் பயத்தை அளித்துள்ளது.  உன்னைப்பற்றிய நிஜம் பின்னர் என் அப்பாவுக்குத் –  உன் வைப்புக் கணவருக்கு – என் மூலம் தெரிந்துபோய்விடுமோ என்று அஞ்சுகிறாய்!  அதுதான் விஷயம். ராகேஷாவது, கெட்டவனாவது!  பச்சைப் பொய்!’

“நான் இப்படிச் சொல்றது உனக்குப் பிடிக்காதுதாம்மா. ஆனா அது நிஜம்.  என் கண் முன்னால ஒரு நல்ல பொண்ணு ஏமாத்தப்பட்றதை என்னால தாங்க முடியல்லே. அதான் கூப்பிட்டுட்டேன் .”

‘என் அம்மாவை நீ ஏமாத்தல்லையா!’

“சரி, சொல்லுங்க.”

“கொஞ்ச நாள் முந்தி நான் ஷெனாய்நகர்ல இருந்தேம்மா.  பக்கத்து பங்களாவில ராகேஷ், அவனோட அம்மா, அப்பா,  அக்கா எல்லாரும் இருந்தாங்க. அப்பதான் எங்களுக்குள்ள பழக்கம் ஏற்பட்டிச்சு.  அப்ப என்னோட அநாதை விடுதியிலே இருந்த ரம்யாங்கிற பொண்ணு அடிக்கடி எங்க வீட்டுக்கு வரும்.  விடுதி சம்பந்தப்பட்ட வேலைகள்லே எனக்கு உதவி  செஞ்சுட்டுப் போகும்.  அப்ப அவங்களுக்குள்ள – அதாவது ராகெஷுக்கும் அந்த ரம்யாவுக்கும் -பழக்கம் ஏற்பட்டுப் போச்சு. அந்தப் பொண்ணு – பாவம் – அவனை நம்பி ஏமாந்திடிச்சு.  லாட்ஜுக்குக் கூட்டிட்டுப் போய்க் கொட்டம் அடிச்சிருக்கான். அது கர்ப்பமாயிடிச்சு……”

ராதிகாவின் உதடுகள் துடித்தன.  கன்னத்துச் சதைகள் அதிர்ந்தன: “இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்?”

“கோவப்படாதேம்மா.  காதல் எப்பவுமே கண்மூடித்தனமானதுதான்.  அதுலயும், பொம்பளைங்களுக்கு அந்த விஷயத்துல சுத்தமான குருட்டுத்தனம்தான்.  அதனாலதான் நிறையப் பொண்ணுங்க சுலபமா ஏமாந்துடறாங்க. அன்புன்ற உணர்ச்சி அவங்க்கிட்ட அதிகமா யிருக்குறதாலதான், ஆம்பளைங்க கிட்டவும் அன்பு இருக்கும்னு நம்பி ஏமாந்து போயிடறாங்க, ராதிகா.  …”

“சரி, சொல்லுங்க.”

“அது மாதிரி நீ ஏமாந்துடக் கூடாதேன்ற கவலையாலதாம்மா உன்னை அவசரமா வரவழைச்சேன்.”

“சில மோசமான பொம்பளைங்களும் இருக்காங்களே, மேடம்!  உங்களுக்கே நல்லாத் தெரியும். அவங்களும்தானே அதே தப்பைப் பண்றாங்க?”

சிந்தியா சற்றே திகைத்த பின் தொடர்ந்தாள்:  “அதுக்கெல்லாம் என்ன ஆதாரம்னு கேட்டியில்ல? அதுக்கு முதல்ல பதில் சொல்லிடறேன். ஆதாரம் இருக்கும்மா. ஆனா அதைக் காட்டுறதுக்கு முந்தி முழு விஷயத்தையும் சொல்லிடறேன்…  என்ன சொல்லிட்டிருந்தேன்? ஆங்!… அந்த ரம்யா கர்ப்பமானதும் இவன் பின்வாங்க ஆரம்பிச்சான்.  இது மாதிரி சந்தர்ப்பங்கள்லே ஆம்பளைங்கல்லாம் பொதுவாச் சொல்ற மாதிரி இவனும் கலைச்சிடச் சொன்னான்.  தான் கட்டாயம் அவளைக் கல்யாணம் கட்டுறதா சத்தியம் பண்ணினதாவும், அதை நம்பி அவனோட ஆசைக்கு இடம் குடுத்ததாவும் அது எங்கிட்ட சொல்லிச்சு.  அவ தன்னை நம்பணும்கிறதுக்காக அவளோட அவன் ஒரு ஃபோட்டோவும் எடுத்துக்கிட்டான். அதனோட காப்பி ஏங்கிட்ட இருக்கு.  அவன் ரம்யாவைக் கைகழுவினதுக்குப் பெறகு அந்த ஸ்டூடியோவுக்குப் போய் அதோட நெகட்டிவ்வை வாங்கிட்டு வந்தோம். … சரி. விஷயத்துக்கு வர்றேன். அந்தப் பொண்ணு ஏங்கிட்ட எல்லாத்தையும் சொல்லி அழுதிச்சு.  நான் ராகேஷைத் தனியா சந்திச்சு அது பத்திக் கேட்டப்ப, அந்தப் பொண்ணு எவன்கிட்டயோ ஏமாந்துட்டுத் தன் மேல பழி சுமத்துறதாச் சொன்னான்.  அவளோட தான் பழகிட்டு இருந்தது உண்மைதான்கிறதை என்னவோ ஒத்துக்கிட்டான்.  காதலிச்சதும் உண்மைதான்னு சொன்னான்.  ஆனா அவளைத் தான் தொட்டதே கிடையாதுன்னான்.  இருந்தாலும், நான் விட்றதா இல்லே. எங்க உறவுக்காரர் ஒருத்தரு – அருள்தாஸ்னு பேரு – போலீஸ் ஆஃபீசரா இருந்தாரு.  அவரோட உதவியை நாடினேன்.  அவங்க ரெண்டு பேரும் சேந்து எடுத்துக்கிட்ட ஃபோட்டோவை அவங்க ரெண்டு பேரும் அடிக்கடி போய் வந்த லாட்ஜுக்கு அவரு எடுத்துட்டுப் போய் லாட்ஜ் முதலாளியை மிரட்டி விசாரிச்சாரு.  அவங்க அந்த லாட்ஜுக்கு அடிக்கடி வந்து தங்கினது உண்டுன்றதை அவரு ஒத்துக்கிட்டாரு. அதை நான் அவன் கிட்ட சொல்லி ஒரு மிரட்டு மிரட்டினேன்.  ரம்யாவை ஏத்துக்கிறதா வாக்குக் கொடுத்தான்.  மறுபடியும் அவளோட பழகத் தொடங்கினான்.  வெளியே கூப்பிட்டுக்கிட்டுப் போக ஆரம்பிச்சான்.  இதுக்கு இடையில, இவனோட அப்பா, அம்மா, அக்கா எல்லாரும் இவனை மட்டும் இங்கே விட்டுட்டு டில்லிக்குப் போய்ட்டாங்க. அதனால, கைக்கு மெய்யா அவன் வீட்டுப் பெரியவங்க கிட்ட விஷயத்தைச் சொல்ல முடியல்லே. பத்துப் பதினஞ்சு நாள்ல திரும்பிடுவாங்கன்னும், அவங்க வந்த பெறகு சொல்லிக்கலாம்னும் சொல்லி டாட்ஜ் பண்ணிட்டான்.  … ஆனா பாரு, அவன் இன்னும் ஒரு தப்புப் பண்ணியிருந்தான்.    அதனாலதான் மாட்டிக்கிட்டான்.  அதாவது, ரம்யா என் வீட்டில இருந்தப்பல்லாம், அடிக்கடி அவளுக்குத் துண்டுச்சீட்டு எழுதி யுனுப்பிட்டு இருந்திருக்கான்.  ‘ இன்னைக்கு இங்க போலாம், அங்க போலாம்’ அப்படின்னு.  அந்தத் துண்டுச் சீட்டுகளையெல்லாம் ஏதோ பொக்கிஷத்தைப் பாதுகாக்கிறமாதிரி அந்தப் பொண்ணு பத்திரமா வெச்சிருந்திச்சு….”

“துண்டுச் சீட்டு எழுதி யனுப்ப வேண்டிய அவசியமென்ன?  நேர்லயே பாத்துப் பேசியிருந்திருக்கலாமே!”

“இல்லே. ரம்யா தினமும் என் வீட்டுக்குக் காலை பத்து மணிக்கு வந்திட்டு மூணுமணிக்கெல்லாம் திரும்பிப் போகும். அப்பல்லாம் நானும் அதுங்கூடவே இருப்பேனில்ல?  அவங்க உறவை நான் ஊகிக்கிற மாதிரி அவங்க என் முன்னால நடந்துக்கல்லே.  அவங்க வீட்டுல அவனோட ரூம் ஜன்னலும், எங்க வீட்டில என் ரூம் ஜன்னலும் எதிரெதிரா யிருக்கும்.  அது வழியா ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்க முடியுமே தவிர, சத்த்மாப் பேசினாத்தான் காதுல விழும். அதனால, பாத்ரூமுக்கோ, சமையக்கட்டுக்கோ நான் எந்திரிச்சுப் போகையில –  அவன் அதைக் கவனிச்சுக்ககிட்டே இருப்பான் போல –லெட்டருக்குள்ள ஒரு சின்னக் கல்லை வெச்சுப் பொட்டலமாக் கட்டி –– அதை என் ரூமுக்குள்ளே ஜன்னல் வழியா வீசுவான். பறந்துறக் கூடாதில்ல? அதுக்காக. இந்தப் பொண்ணும் அதைப் படிச்சுட்டு ஒரு நாள் இந்த ஓட்டல், இன்னொரு நாள்  அந்தத் தியேட்டர்னு போய் நிக்கும். ரம்யாவும் உன்னை மாதிரியே அழகா யிருப்பா.  கொஞ்சம் பழகினதும் சில தடவைகள் லாட்ஜுக்குக் கூட்டிட்டுப் போய் மோசம் பண்ணிட்டான். அதனால அதுக்கு அப்படி ஆயிடிச்சு.  அது சரி, உனக்கு ராகேஷோட கையெழுத்துத் தெரியுமா?’

“தெரியும்.  நாங்க லெட்டர் எதுவும் எழுதிக்கிட்டதில்லே.  ஆனா, ஒரு நாள் எனக்குக் காலேஜ் நோட்ஸ் காப்பி பண்ணிக் குடுத்தாரு.  அதனால தெரியும்.  நீங்க சொல்ற இந்த விஷயம் எப்ப நடந்துச்சுன்றீங்க?”

“ஆறு வருஷத்துக்கு முந்தி. அப்ப அவன் காலேஜை முடிச்சுட்டு வீட்டில இருந்த சமயம்….”

“அந்த ஃபோட்டோவையும் துண்டுக் கடிதங்களையும் வெச்சிருக்கீங்களா?”

“வெச்சிருக்கேம்மா. ஒரு முன் ஜாக்கிரதை உணர்வுனால வெச்சிருக்கணும்னு தோணிச்சு.  அதான்.  நீ கிளம்புறதுக்கு முந்தி அந்த ஃபோட்டோ, அதனோட நெகட்டிவ், அவனோட துண்டுக் கடிதங்கள் எல்லாத்தையும் உங்கிட்ட காட்றேம்மா…. அது சரி, அப்புறம் அந்தப் பொண்ணு ரம்யா என்ன ஆனான்னு நீ ஏங்கிட்ட கேக்கவே இல்லியேம்மா!”

“சொல்லுங்க. என்ன ஆனா?”

“தன்னோட அம்மா, அப்பா, அக்கா இவங்கல்லாம் டில்லியிலேர்ந்து புறப்பட்டு வர்றதுக்கு இன்னும் ரெண்டே நாள் இருந்தப்ப, ராகேஷ் ரம்யாவைக் கூப்பிட்டு மிரட்டி யிருக்கான்.  தன்னோட வாழ்க்கையிலேர்ந்து அவ விலகிடணும்னும், இல்லாட்டி கூலியாளுங்களை வெச்சுத் தன்னால அவளை வெட்டிக்கூடப் போட்டுட முடியும்னும் அவன் எச்சரிக்கவே, அவ பயந்து போயிட்டா.  இதுக்குள்ளே அவளுக்கு வயிறு தெரிய ஆரம்பிச்சிடிச்சு.  ரம்யா ஏதோ விஷத்தைச் சாப்பிட்டு உயிரை விட்டிடிச்சு.  ஆஸ்பத்திரியில இருந்தப்ப, ராகேஷ் தன்னை பயமுறுத்தினது, தன்னோட வாழ்க்கையிலேர்ந்து விலகிக்கல்லேன்னா, ஆள் வெச்சு அவளை அடிச்சுக் கொன்னுடுவேன்னு சொன்னது, இதையெல்லாம் ஏங்கிட்ட சொல்லக்கூடாதுன்னு அவளை மிரட்டினது எல்லாத்தையும் சொல்லிட்டு உசிரை விட்டிச்சு அந்தப் பொண்ணு.  ‘எப்படியும் சாவுதானே வரப் போகுது எனக்கு? அதனால, இப்பவே சாகறேன்’ அப்படின்னிச்சு….” – சிந்தியாவின் விழிகள் ஈரித்திருந்தன.

ஓர் அப்பாவிப் பெண்ணின் தற்கொலைக்கு ராகேஷ் காரணமாக இருந்துள்ளான் என்பதை ராதிகாவால் நம்பவே முடியவில்லை. இத்தனை விஷயங்களைச் சொன்னதோடு, அவற்றுக்கான ஆதாரங்களையும் காட்டுவதாகச் சொன்ன சிந்தியாவை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவை யாவும் உண்மையெனில், இனித் தனக்கும் ராகேஷுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்னும் உடனடியான முடிவுக்கு அவள் வந்தாள்.  எனினும் அவள் மனம் தவித்தது.  அவளது கட்டுப்பாட்டைக் கடந்து கண்களிலிருந்து கண்ணீர் கசியலாயிற்று.

“வருத்தப்படாதேம்மா, ராதிகா. நானும் ஒரு பொண்ணுங்கிற முறையில உன்னோட உணர்ச்சிகளை என்னால புரிஞ்சுக்க முடியுது. … .. ஆனா அவன் அந்தப் போண்ணோட சாவை எவ்வளவு ஈசியா எடுத்துக்கிட்டான், தெரியுமா? எல்லா டிக்கெட்டுகளையும் உங்கிட்டேர்ந்து அவன் மொத்தமா வாங்கிக்கிட்டது கூட உன் மனசைக் கவரணும்கிற சாகச முயற்சியோன்னுதான் தோணுது.  பாத்தான். நீ கண்கொள்ளா அழகியா இருக்கியா, உன்னை வளைச்சுப் போட்றதுக்கு அது சுலபமான வழின்னு தெரிஞ்சுக்கிட்டான். கூசாம பணத்தைத் தூக்கிக் குடுத்துட்டான்.  அவனோட பேரையும் அட்ரெஸ்ஸையும் கவுண்டர்ஃபாயில்ல பாத்த்துமே எனக்குக் கொஞ்சம் கவலையாத்தான் இருந்திச்சு.  உன்னைக் கவர்றதுக்கான தந்திரமோ அதுன்னு.  நான் நினைச்சது சரிதான்கிறதை உங்க ரெண்டு பேரையும் அந்த ஓட்டல்ல வெச்சுப் பாத்த்துமே நான் தெரிஞ்சுக்கிட்டேன். உன்னை அவன்கிட்டேருந்து பிரிச்சுக் காப்பாத்தணும்கிற எண்ணம் அப்பவே எனக்கு வந்திடிச்சு.  அதான் உங்க காலேஜுக்கு ஃபோன் பண்ணிக் கூப்பிட்டேன், ராதிகா!”

இலேசாக மல்கியிருந்த கண்ணீர் பெருகி இப்போது அவள் விழிகளினின்று வழியலாயிற்று.  அழகான தோற்றமும், கம்பீரமும் தாராள மனமும் கொண்ட ஓர் ஆண் இவ்வளவு குரூரமாக இருக்கக் கூடும் என்பதையும் பார்த்த மாத்திரத்தில் தன்னைக் கிறங்க அடித்த அவன் இவ்வளவுதான் என்பதையும் அவளால் செரிக்கவே முடியவில்லை.
“அழாதேம்மா, ராதிகா.  என்ன செய்யிறது? நம்பி ஏமாந்து போறது நம்ம குணமாவும்,     நம்பின பொண்ணை ஏமாத்துறது அவங்க குணமாவும் இருக்கிற வரையில நம்ம வாழ்க்கையில நாம கண்ணீரைத் தவிர வேற எதையும் காணப் போறதில்லே!  .. வா. அந்த ஆதாரங்களையும் காட்டிடறேன்….”

ராதிகா கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள்.  சிந்தியா, மூடியிருந்த அறையின் கதவை முழுவதுமாய்த் திறந்து, கண்ணசைத்து அவளை அழைத்தாள்.  ராதிகா வாசற்படியருகே சென்று நின்றாள். உள்ளே ஒரு பெரிய மரக்கட்டில் இருந்தது.  கனத்த ஃபோம் மெத்தை விரித்தபடி இருந்தது.  ரோஜா மலர்கள் வரையப்பெற்ற, அழுக்கே இல்லாத வெள்ளை விரிப்பு அதன் மீது சுருக்கமின்றிப் போடப்பட்டு நாற்புறங்களிலும் ஒழுங்குடன் மடித்து விடப்பட்டிருந்தது.  சுவர்கள் இளம் பச்சை டிஸ்டெம்பரில் கண்களைக் குளிர்வித்தன. ஒரு நாள்காட்டியும், சூரியோதய சோவியமும் எதிரெதிர்ச் சுவர்களை அழகுபடுத்திக் கொண்டிருந்தன.  கட்டிலிலிருந்து சற்றே தொலைவில் ஒரு சிறு மேசை, இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.  ஓரத்தில் சாம்பல் வண்ணத்தில் ஒரு கோத்ரெஜ் அலமாரி நின்றிருந்தது. கண்ணாடி பதிக்கப்பெற்றது.

ராதிகா உள்ளே செல்லத் தயங்கினாள்.     அந்தப் பெரிய கட்டிலையும் மெத்தையையும் பார்க்கப் பார்க்க, அவளுள் அருவருப்பும் ஆத்திரமும் பெருகின.  முகத்தில் அவற்றைக் காட்டாதிருக்க அவள் பெரு முயற்சி செய்ய வேண்டியதாயிற்று.

“இருக்கட்டும்ங்க!” என்று முனகிவிட்டுக் கதவருகிலேயே நின்றாள். கோத்ரெஞ் அலமாரியைத் திறந்து, அதன் பின் அதன் பெட்டகத்தையும் திறந்த சிந்தியா அதனின்று ஓர் உறையை வெளியே எடுத்தாள்.

“வாம்மா. கூடத்துக்கே போயிடலாம்.  நீதான் ரூமுக்குள்ளயே வர மாட்டேன்றியே!” என்றவாறு வெளியே வந்த அவளைப் பின் தொடர்ந்து ராதிகாவும் சென்றாள்.  ராதிகாவின் பார்வை சுழன்றுகொண்டே ஆராய்ந்தாலும் அவ் வீட்டில் ஆண் எவரும் அவளுடன் வசித்துக்கொண்டிருப்பதற்கான அடையாளம் எதுவும் அவளுக்குப் புலப்படவில்லை.
“இந்த வீட்டில நீங்க மட்டுமா இருக்கீங்க?”

“ஆமாம்மா.  அக்கம்பக்கத்து மனுசங்கள்லாம் ரொம்ப நல்லவங்க. அதனால எனக்கு எந்த பயமும் இல்லே.”
“உங்க வீட்டுக்காரர்?”

“அவரைப் பத்தி எதுவும் கேக்காதேம்மா…”

இருவரும் அருகருகே சோபாவில் உட்கார்ந்த பின்னர் சிந்தியா உறையிலிருந்து புகைப்படம், அதன் நெகட்டிவ், ராகேஷின் சில துண்டுக்கடிதங்கள் ஆகியவற்றை உருவி எடுத்து ராதிகாவிடம் கொடுத்தாள். சற்றே நடுங்கிய கையால் அவற்றை வாங்கிப் பார்த்த ராதிகாவுக்குள் எரிமலை வெடித்த்து.  ‘புகைப்படம் ஏதேனும் தந்திரத்தால் தயாரிக்கப்பட்டிருக்கலாம்… ஆனால் இந்தத் துண்டுக் கடிதங்களில் உள்ளது அவனது கையெழுத்தேதான்.. சந்தேகமே இல்லை…’

“இன்னைக்குக் காலையில ராகேஷ் இங்க வந்திருந்தான்மா.  ஆனா ஜன்னல் வழியா எட்டிப் பாத்துட்டு நான் கதவைத் திறக்கமாட்டேன்னுட்டேன்.  அதனால ஜன்னலுக்கு வெளியில நின்னுக்கிட்டே என்னோட பேசிட்டுப் போனான்.  ‘ராதிகா கிட்ட எதுனாச்சும் சொல்லி அவ மனசைக் கலைச்சே, நடக்கிறதே வேற’ அப்படின்னு மெரட்டிட்டுப் போனான்.  அதுக்கும் முன்னாடி, நீ ஒரு ப்ராஸ்டிட்யூட்னு ராதிகா கிட்ட சொல்லியிருக்கேன்.  அவ என் பேச்சைத்தான் நம்புவா; உன் பேச்சை இல்லேடி அப்படின்னு “டீ” போட்டுப் பேசினான். ‘நீயும் பேசு, நானும் பேசுறேன், அவ எதை எடுத்துக்கிறாளோ அதை எடுத்துக்கட்டும்’ அப்படின்னு சொல்லிட்டு நான் ஜன்னலை மூடிட்டேன். அப்புறம் அவன் போய்ட்டான்…”

ராதிகா எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அவற்றை உறையில் போட்டு மூடி, அங்கிருந்த மேசை மீது வைத்தாள்.

திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தது போல், தொலைபேசியின் பொத்தான்களை அழுத்திய சிந்தியா, “நான் இப்ப ஹாஸ்டலுக்குப் போறேன்.  அதனால இன்னிக்கு வர வேண்டாம்,” என்று சொல்லிவிட்டுத் இணைப்பைத் துண்டித்தாள்.

ராதிகாவுக்கும் தொலைபேசிக்குமிடயே நின்று அவள் அதை இயக்கியதால்,  இன்ன இலக்கம் என்பதை அவளால் பார்க்க முடியவில்லை.  ஆனால் அவள் தொடர்பு கொண்டது தன் அப்பாவுடன்தான் என்பது அவளது உறுதியான ஊகமாக இருந்தது. இதனால் தன்னுள் பொங்கிய சினத்தைக் கட்டுப்படுத்த அவள் பெரு முயற்சி செய்ய வேண்டியதாயிற்று.

தொடரும்
jothigirija@live.com

Series Navigationஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சமீபத்திய சனிக்கோளின் பூதப்புயல் ஆழ்தள நீரைக் கலக்கி வெளியேற்றி உள்ளதைக் காட்டியுள்ளது.
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *