முக்கோணக் கிளிகள் [5]

This entry is part 15 of 22 in the series 15 செப்டம்பர் 2013


 

triple-parrots

சி. ஜெயபாரதன், கனடா

 

[முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில் சந்திக்க நேரிடும் மூவர் தமது புதிய உறவைத் தம்தம் கோணங்களில் திருப்பப் பார்க்கிறார்கள். பிற கோணங்களைப் புறக்கணித்து நேர் கோணப் பாதையில் மலை ஏறும் போது, முள்ளும் கல்லும் குத்தும்! எதிர்த்துப் பனிப்புயல் அடிக்கும்! முடிவில் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் போது தாக்கும் இமாலயத் தடைகளைத் தாங்க முடியுமா? ஒரு சிக்கல் அவிழ்ந்தால் அதன் வயிற்றிலிருந்து மூன்று சிக்கல்கள் பிறக்கின்றன.]

(முன்வாரத் தொடர்ச்சி)

வண்ண மயில் நீ எனக்கு! வான மழை நான் உனக்கு!

சிவநாதனின் தங்கை திருமணம் சிறப்பாக, சிக்கனமாக மதுரையில் நடந்தேறியது. புனிதா குல்கர்னியும், சித்ரா குல்கர்னியும் திருமண விழாவுக்கு வந்தது சிவாவுக்கு மன மகிழ்ச்சியையும், திருப்தி யையும் தந்தது. கல்யாணக் கூட்டத்தில், பால் போன்ற மராட்டிய பளிங்குச் சிலைகள் இரண்டும் அத்தனை பேர் கண்களையும் கவனத்தையும் கவர்ந்தன! சித்ராவையும், புனிதாவையும் சிவா தனது தாய், தந்தையார் மற்றும் திருமணத் தம்பதிகள் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். குறிப்பாகப் பெற்றோர், தங்கைக்கு மட்டும் அவர்கள் யாரென்று விளக்கமாகக் கூறினான். பெருந்தன்மையாக புனிதா தங்கையின் கல்யாணத்துக்குப் பண உதவி செய்ததை அவர்களது காதில் மெல்லக் கூறினான். மூவரும் அன்பு மிகுந்து புனிதாவுக்கு நன்றி கூறினார்கள்.

சித்ரா வான மேகங்களில் மிதந்தாள். சிவாவின் தங்கையோடு மிகவும் ஒட்டிப் பழகினாள். அவளது கல்யாணத்துக்கு ஒரு தடை நீங்கி வழி திறந்ததாக ஆனந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டாள். சித்ராவை விட பெரு மகிழ்ச்சியில் இருந்தவள் புனிதா. திருமணம் ஆன பிறகும் அவள் தனிமையில் வாடிய நாட்களே அதிகம். கணவனுடன் அவள் ஆனந்தமாய்க் களித்த நாட்கள் மிகக் கொஞ்சம். இருபத்தியோர் வயதிலே கல்யாணமாகி கணவருடன் ஒன்பது வருசங்கள் வாழ்ந்தாலும் பாதிக் காலம் பாதுகாப்பு ராணுவ அதிகாரியாய்க் காஷ்மீருக்கு பயணம் போய்விடுவார்.  தனிமையில் தவிக்கும் அவள் சிவாவோடு எதிர்காலத்தில் வாழப் போவதாய்க் காணும் காட்சி மெய்யாக நிகழுமா அல்லது கனவாய்ப் பழங் கதையாய்ப் போகுமா என்பது இன்னும் நிச்சயமில்லை!

நினைப்ப தெல்லாம் நடப்ப தில்லை! நடப்ப தெல்லாம் நினைப்ப தில்லை!

அன்று மாலை நிர்மலாக் கல்லூரில் வருடாந்திர விழாவில் பங்கு கொள்ள புனிதா சென்று விட்டாள். ஆங்கில நாடகம் ஒன்றை இயக்கி அரங்கேற்ற வேண்டிய பொறுப்பு அவள் மீது விழுந்தது. சித்ராவும், சிவாவும் நாடகத்தைக் காண 9 மணிக்கு வருவதாய்ப் புனிதாவிடம் சொல்லியிருந்தார்கள். அவளது நாடகமே கடைசி நிகழ்ச்சியாக இருந்தது. சித்ரா மாடிக்குச் சென்று சிவாவைப் பார்க்கச் சென்றாள். சோபாவில் அமர்ந்த சிவாவிடம் அவள் ஒட்டி அமர்ந்து அவனது தலை மயிரைக் கோதி விட்டாள். சற்று தள்ளி அமர்ந்த சிவாவை மறுபடியும் நெருங்கி உட்கார்ந்தாள். சோபாவின் முனைக்குப் போகவே சிவா எழுந்து நின்றான்! உடனே சித்ரா அவன் கையைப் பற்றி இழுத்து சோபாவில் உட்கார வைத்து உரசிக் கொண்டு அமர்ந்தாள். அவன் முகத்தை அவளது மலர்க் கரங்களால் தடவினாள்!

“இந்த முகத்தை இப்படித் தடவ வேண்டுமென, நான் எத்தனை நாள் காத்திருக்கேன்” சித்ராவின் மொட்டு விழிகள் சிவாவின் மூடும் விழிகளை விழுங்கிவிட விரிந்து மலர்ந்தன! சிவாவுக்கு தர்ம சங்கட மானது.

“நாம் உன் அம்மாவின் நாடகத்தைப் பார்க்க நிர்மலாக் கல்லூரிக்குப் போகணும்”

“நம்ம நிஜ நாடகம் இங்கு நடக்கும் போது, அம்மாவின் நாடகத்தை அங்கு போய்ப் பார்க்கணுமா? இப்படி நமக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்குமா? ஏன் பயந்து நடுங்குறீங்க? உங்க தங்கையின் கல்யாணம் முடிஞ்சி நமக்குக் காலம் வந்தாச்சி. கதவும் திறந்தாச்சி! இனிமேல் நம்ம கல்யாணத்தைப் பத்தி நாம் பேச வேண்டும்! நானே அம்மாவிடம் சொல்றதா இருக்கேன். எங்க அம்மாவிடம் என்னைக் கேட்க உங்களுக்கு தைரியம் உண்டா?”

“சித்ரா! உனக்கும் எனக்கும் கல்யாணம் என்று கனவு காணாதே! அது நடக்காத கல்யாணம். குமரிப் பெண் நீ. பாதி ஆயுளைக் கடந்தவன் நான். உன்னை விட இரு மடங்கு வயது எனக்கு”.

“போதும் உபதேசம். ஒருவரை நேசித்து அவரையே மணக்க நான் விரும்புறேன். எனக்கு உங்க வயதைப் பற்றிக் கவலை இல்லை”

“மோகம் உன் கண்களைக் குருடாக்குது! என் வயதைப் பற்றி இப்போது நீ கவலைப்பட மாட்டாய். எண்பது வயதுக் கிழவனாய்க் கூன் விழுந்து குருடனாய் நான் நொண்டும் போது, நீ நாற்பது வயது வாலிப மங்கையாய் தம்பத்ய உறவை நாடுவாய்! அப்போ என் எலும்பு கூட்டைப் பார்த்து வேதனைப் படுவாய். வீட்டில் கிடைக்காத இன்பத்தைத் தேடி நீ…. வெளியே கூடப் போவாய்”

“சீ என்ன ஆபாசப் பேச்சு இது? நம்மிருவருக்கும் ஜோடிப் பொருத்தம் இருக்கு”.

“ஆனால் நமக்கு இனப் பொருத்தம் இல்லை! மனப் பொருத்தம், வயதுப்  பொருத்தம் இல்லவே இல்லை!”

“பூனேயில் பிறந்தாலும் தமிழ் நாட்டிலே பதினைந்து வருசமா இருக்கோம். எனக்கு மராட்டியன், தமிழன் என்றெல்லாம் இன வேறுபாடு கிடையாது. மராட்டியன் தமிழனை விட உயர்ந்தவனும் இல்லே! தமிழன் மராட்டியனை விட எந்த விதத்தில் தாழ்ந்தவனும் இல்லே! இரண்டு பேரும் சமமாய் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவரே”.

“உன்னை எனக்குப் பிடிக்கவில்லை!” என்றான், சிவா.

“பொய் சொல்றீங்க! எனக்கு என்ன குறைச்சல்? அழகில்லையா? அறிவில்லையா? அந்தஸ்தில்லையா?”

“நீ அழகிதான்! அறிவாளிதான்! நல்ல குடும்பத்தில் பிறந்தவள்தான்! ஆனால் இதயத்தில் கள்ளும், முள்ளும் உள்ளன! நெஞ்சி இருக்கு! ஆனால் உள்ளம் இல்லை! மூளை இருக்கு! ஆனால் முதிர்ச்சி யில்லை! மணக்கப் போகும் பெண்ணை, நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன்”

“யார் அந்த அதிர்ஷ்டக்காரி? அன்று கல்லூரியில் சிரித்துச் சிரித்துப் பேசினாளே, அந்த பைனல் இயர் பியூட்டி மஞ்சுளாவா?”

“இல்லை. உனக்குத் தெரிந்த ஒரு மாது”

“யார் அந்த மாது? என் கிளாஸ்மேட் மேனகாவா?”

“இல்லை.  அது உன் அம்மா என்று சொன்னால் உனக்கு மயக்கம் வருமா?”

“சீ என் அம்மாவா? அம்மாவையா விவாகம் செய்யப் போறீங்க? ஏற்கனவே திருமணமாகிய ஒருத்தியா உங்க எதிர்கால மணப்பெண்? பதினெட்டு வயசுக் குமரிப் பெண்ணை மகளாகக் கொண்ட ஒரு மாமியா உங்க மணப்பெண்? கணவனை இழந்த ஓர் அபாக்கிய வதியா உங்க வருங்கால மனைவி?”

“ஆம் அந்தப் புனிதவதிதான் என் வருங்கால மனைவி”

“என் தந்தையின் இடத்தை நீங்க நிரப்ப முடியாது. கணவனாய்க் கருதிய ஒருவரை என் உள்ளம் ஒருபோதும் தந்தையாக ஏற்றுக் கொள்ளாது. தெரியுமா ? ஏற்கனவே இது போல் அம்மா முயன்று, இரண்டு தரம் நிச்சயமாகிக் கடைசியில் திருமணம் நின்று போயிருக்கு. அவைபோல் இந்தக் கல்யாணமும் நடக்காது”

“எனக்கும்தான் நிச்சயமாகி கல்யாணம் நின்னு போயிருக்கு”

“நான் இந்த கல்யாணத்தை நடக்க விட மாட்டேன். வாலிபக் குமரி நான் காத்திருக்கும் போது, வயதான விதவையை நீங்க நாடுவது முட்டாள்தனம்”

“பெற்ற தாயை விதவை என்று கேலி செய்கிறாயே”

“பெற்ற தாயானாலும் விதவை, விதவைதான்!  என் அப்பா இறந்து போனதை எப்படி மறைக்க முடியும்? நான் விதவை என்று சொல்லா விட்டாலும், உங்க அப்பா சொல்வார்! உங்க அம்மா சொல்வாள்! உங்க தங்கை சொல்வாள்!  உங்க ஊரார், உற்றார் எல்லாரும் சொல்வார்!  அப்படிப் பழிப்பதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா?”

“தாங்கிக் கொள்ள முடியும். நான் உன் தாயை மணக்க வாக்குக் கொடுத்து விட்டேன்”

“தாயை மணந்து, மகளைப் பிரிக்க முடிவு செய்து விட்டீங்க! உண்ட வீட்டுக்கு இரண்டகமா?”

“நான் அப்படி வஞ்சகம் செய்ய நினைக்க வில்லை!”

“தம்பதிகளாய் என் தாயும், என்னைக் கவர்ந்தவனும் அடுத்த அறையில் ஒன்றாய் இருப்பதை எப்படி என்னால் தாங்கிக் கொள்ள முடியும்?”

“தாங்கிக் கொள்ள முடியாதுதான். தனியாக இருக்கும் உன் தாய் மறுபடியும் குடும்ப மாதாய் வாழப் போவதில் உனக்கு அக்கறை இல்லையா?”

“அக்கறை இருக்கு. ஆனால் நீங்க அம்மாவுக்குச் சொந்தம் இல்லே! எனக்குத்தான் சொந்தம்! முதலில் உங்களைக் கண்டு பிடித்தவளே நான்தான்!  தாயிடம் சண்டை போட்டு நீங்க இருக்க இடம் பிடித்தவளே நான்தான்.   என் தாய், என்னிடமிருந்து உங்களைக் களவாடி விட்டாள்!”

“இல்லை! பார்த்த முதல் நாளே நான்தான் புனிதாவை நாடியவன்! போகப் போக புனிதாவுக்கும் என்னைப் பிடித்து விட்டது!”

“ஒரு பெரிய கைம்மாறை எதிர்பார்த்துத்தான், உங்க தங்கை திருமணத்துக்கு என் தாய், முன்வந்து பண முடிப்பைக் கொடுத்தது கூட உங்களுக்குத் தெரியவில்லையா?”

“பண முடிப்பைத் தருவதற்கு முன்பே, எனக்கு புனிதா மேல் விருப்பம் இருந்தது. பண முடிப்பைத் தராமல் போயிருந்தாலும், புனிதாவை மணக்க நான் தயாராக இருந்தேன்”

“பாருங்க, நான் உங்கள் கலியாணம் நடக்காமல் முன்னின்று தடுப்பேன்,”  என்று தடாலென்று  அருகிலிருந்த கண்ணாடி ஜக்கை தூக்கி உடைத்தாள் சித்ரா !

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டு, சித்ரா வாயடங்கிப் போனாள். புனிதா விரைவாக மாடிக்கு ஏறி வந்தாள்.

“நீங்க இரண்டு பேரும் போடுற சத்தம் வீதியிலே கேட்குது. என்ன ஆச்சு? ஏன் சண்டை போடுறீங்க?”

“அம்மா! இவர் இந்த வீட்டுலே இனிமேல் இருந்தால் நான் கண்ணியமா வாழ முடியாது. வாடகை ஒப்பந்தத்தை முறிச்சி, இவரை வெளியே அனுப்புங்க. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் வஞ்சக மனிதர் இவர். இவர் இன்னும் இங்கே இருந்தா, நாம் நிம்மதியா வாழ முடியாது”

“சித்ரா! ஏன் அப்படிச் சொல்றே? என்னாச்சு?”

“அம்மா! இவர் ஒழுக்கம் கெட்ட மனிதர். இவரை நம்ம வீட்டறையில் வச்சதே தப்பு. முன்பே எனக்கு இவரைப் பத்தி தெரியாம போச்சு!”.

“என்ன நடந்ததென்னு சொல்லு, சித்ரா” புனிதாவின் உடம்பு நடுங்கியது!  சிவாவின் கண்களில் தீப் பறந்தது !

“என்னை மாடிக்கு அழைத்து வந்து தொடக்கூடாத இடத்தில் தொட்டு வசப்படுத்த முனைந்தார்.”

சிவாவின் நெஞ்சில் சம்மட்டி அடி விழுந்தது!

புனிதா பேரதிர்ச்சி அடைந்தாள்! சிவாவின் தலை சுற்றியது! புனிதா தடதட வென்று படிகளில் இறங்கிக் கீழே தன் அறைக்கு ஓடினாள். படுக்கைக் கீழே ஓடிக் கொண்டிருந்த டேப் ரெக்காடரை நிறுத்தி, ரிவைண்டு செய்து, மாடியில் நடந்த உரையாடல்களை எல்லாம் துடிப்போடு கேட்டாள். அவளுக்கு உண்மை பளிச்சென்று தெரிந்தது.

தாயும் மகளும் மராட்டிய மொழியில் நள்ளிரவு வரைச் சண்டை போட்ட சத்தம் மட்டும் சிவாவுக்குக் கேட்டது. பிறகு சட்டென எல்லாம் அடங்கி விட்டது. அன்று இரவு மூவரும் தூங்கவே இல்லை.

காயிலே புளிப்ப தென்ன! கனியானால் இனிப்ப தென்ன!

மறுநாள் காலையில் சாப்பிட வந்த சிவா புனிதாவை அடுப்பறையில் சந்தித்தான். அவன் புனிதாவின் கண்களை நேராகக் காண முடிய வில்லை.

“மிஸ் புனிதா! நான் இனியும் இந்த வீட்டு மாடியில் குடியிருப்பது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. என்னால் உங்கள் இருவருக்கும் தீராப் பகைமை உண்டாகி விட்டது!  இந்த வீட்டில் எப்போது என்ன நடக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. தாயும் மகளும் என் பொருட்டு சண்டை யிடுவதை என்னால் தாங்க முடியாது! வேறொரு இடத்துக்கு போவதாக நான் முடிவு செய்து விட்டேன்”

 

[தொடரும்]

Series Navigationமனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…ஞாநீ
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

6 Comments

 1. Avatar
  Mahakavi says:

  வண்ண மயில் நீ எனக்கு! வான மழை நான் உனக்கு!–ஜெயபாரதன்

  வான மழை நீ எனக்கு!வண்ண மயில் நான் உனக்கு!–பாரதி

  Did Bharathi copy Jeyabharathan? Please, just because you interchanged two nouns it does not become your original.

  காயிலே புளிப்ப தென்ன! கனியானால் இனிப்ப தென்ன!–ஜெயபாரதன்

  காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே – நீ
  கனியிலே -னிப்பதென்னே?கண்ண பெருமானே!—-பாரதி

  Here you left out kaNNa perumAnE and changed kaniyilE to kaniyAnAl. Does it make it your original composition? I have never seen more flagrant plagiarism like this.

  Perhaps in modern writing if you change one word from sangam poetry or some famous poetry it becomes a new species–right?

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
   காவியமோ ஓவியமோ கன்னி இளமானே
   என்று கண்ணதாசனும், பாரதியின் தடத்தில் நடக்கிறாரே.

   எழுத்தாளன் எழுத்துரிமை இது.

   சி. ஜெயபாரதன்

   1. Avatar
    Mahakavi says:

    வளரட்டும் உமது காப்பி (?) (copy செய்யும்) உரிமை

    கண்ணதாசன் கடன் வாங்கி அதை மேம்படுத்தினார். மற்றவர் கடன் வாங்கினாலும் அதை மறுக்கிறார். இது தான் இலக்கிய மேம்பாடா?

    1. Avatar
     சி. ஜெயபாரதன் says:

     நண்பரே,

     கதையில் கொம்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்துத் தொங்கிறீர் உமது / எமது நேரத்தை வீணாக்கி.

     காயிலே புளிப்ப தென்ன கனியானால் இனிப்ப தென்ன என்று ஏ.எம். ராஜா பாடும் சினிமாப் பாடலே உள்ளது, பாரதியார் பெயர் குறிப்பிடப் படாமலே !

     நான் புனை கதை எழுதி இலக்கியம் படைக்கிறேனா ?

     சி. ஜெயபாரதன்

 2. Avatar
  Dr.G.Johnson says:

  நண்பர் திரு சி. ஜெயபாரதனின் முக்கோணக் கிளிகள் ஒரு கூட்டுக்குள் வாழ முடியாமல் தனித் தனியே பிரிந்து பறந்து விடுமோ என்ற நிலை உண்டாகியுள்ளது. கதையோட்டமும் ,நடையும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   அன்பு நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,

   ஐந்தாண்டுக்கு முன்பு இப்படி ஒரு கதை எழுதினேனா என்று நானே என்னைக் கேட்டுக்கொள்கிறேன், மீண்டும் படித்து.

   பாராட்டுக்கு நன்றி நண்பரே.

   சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *