குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 29

This entry is part 13 of 27 in the series 29 செப்டம்பர் 2013

சினத்தை அடக்க முடிந்தாலும், ராதிகாவால் அழுகையை அடக்க முடியவில்லை. தனது மதிப்பில் மிகவும் தாழ்ந்திருந்த சிந்தியாவுக்கு முன்னால் மனம் உடைந்து அழ நேர்ந்த்து அவளது அழுகைக்குச் சுருதி கூட்டியது. சிந்தியா அவசரமாய் எழுந்து அவளருகே வந்து உட்கார்ந்துகொண்டாள். ஒரு தாய்க்குரிய ஆதரவுடன் ராதிகாவின் தோளை யணைத்துக்கொண்டாள். ராதிகா கூச்சத்துடன் அவள் கையை விலக்கினாள்.

“ராகேஷ்கிட்ட நான் சொன்னதையெலாம் பத்திக் கேக்கப்போறேதானே?”

கண்களைத் துடைத்துக்கொண்ட ராதிகா, “பின்னே? அதைப் பத்தி எதுவும் கேக்காம அவர் கிட்டேர்ந்து விலகிக்க முடியுமா? அது சரியும் இல்லியே?” என்றாள்.

“ஆமாமா.  ஆனா, நெகட்டிவ்வை அவன் கிட்ட குடுத்துடாதே. அவனோட கையெழுத்துல உள்ள துண்டுக் காகிதங்கள் எல்லாத்தையும் அவன் கிட்ட குடுக்காதே.  சிலதை நீயே வச்சுக்க. மத்ததை மட்டும் காட்டிக் கேளு. என்ன சொல்றான்னு பாரு. வாங்கின சுருக்கிலேயே எல்லாத்தையும் கிழிச்சுக் காத்துல பறக்க விட்டுடுவான்.  அதனால் எல்லாத்தையும் அவன் கையில குடுத்துடாதே. எதெது வேணுமோ அதுகளை மட்டும் எடுத்துக்கோ. மத்ததை நீயே வெச்சுக்கிட்டாலும் சரி, இல்லாட்டி ஏங்கிகட்ட குடுத்தாலும் சரி. அது உன் சவுகரியம்.”

ராதிகா நான்கு கடிதத் துணுக்குகளையும் ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டாள். மற்றவற்றைச் சிந்தியாவிடமே கொடுத்துவிட்டாள். பின்னர், அவள் எழுந்துகொண்டாள்: “அப்ப நான் வரட்டுமா? ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு!”

“ரொம்ப தேங்க்ஸ்ங்கிறதை சந்தோஷத்தோட நீ ஏங்கிட்ட சொல்லும்படியான நல்ல காரியமா இது அமையாதது நம்மளோட துரதிருஷ்டந்தான்.  என்னை மன்னிச்சுக்கம்மா. உன்னை அவன்கிட்டேர்ந்து காப்பாத்தணும்கிற நல்ல எண்ணத்தாலதாம்மா தலையிட்டேன்.”

சுடச்சுட அவளை ஏதேதோ கேட்கத் தோன்றினாலும் ராதிகாவுக்கு நாவெழவில்லை.  அவளது காதல் தோல்வியால் விளைந்திருந்த துயரம் மிக அதிகமாக இருந்ததால், வேறு எதிலும் தன் எண்ணத்தைத் திருப்ப அவளால் முடியவில்லை.

கிளம்ப முற்பட்ட ராதிகாவைத் தொட்டுத் தடுத்த சிந்தியா, “மொகம் கழுவிட்டுப் போம்மா. மொகம் வாடியிருக்கில்ல? அப்பால உங்க வீட்டில எல்லாரும் என்ன, ஏதுன்னு கேப்பாங்க. அதுக்குத்தான். உன்னோட இந்த விஷயம் இன்னும் வீட்டுக்குத் தெரியாதுதானே? இல்லே, சொல்லிட்டியா?” என்று கேட்டவாறு அவளைக் கழுவுதொட்டிக்கு இட்டுச் சென்றாள்.

“யாருக்கும் தெரியாது.  என் ஃப்ரண்ட் பத்மஜாவுக்கு மட்டும் தெரியும்.”

“வீட்டிலெ சொல்லாததே நல்லதாப் போச்சு. சொல்லியிருந்தா, அவங்களுக்கு வேற வீண் மனக் கஷ்டம் ஏற்பட்டிருந்திருக்கும்.”

“கொஞ்சம் இரு. ஒரு புது சோப் எடுத்துக்கிட்டு வர்றேன்.”

சிந்தியா விரைந்து போய் ஒரு புது மைசூர் சந்தன சோப்பை எடுத்து வந்து கொடுத்தாள். அவள் முகம் கழுவிக்கொண்டபின் ஒரு துண்டும் எடுத்து வந்தாள். முகத்தைத் துடைத்துக்கொண்டபின், ராதிகா பவுடரும் பூசிக்கொண்டாள். பின்னர், தன் கைப்பையிலிருந்து ஓர் ஒட்டுப்பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டாள். பிறகு, “வரட்டுமாங்க?” என்றாள்.

கண்கலங்கித் தலையசைத்த சிந்தியா, “வாம்மா!” என்ற பின் வாசல் வரை வந்து அவளை வழியனுப்பினாள்.  ராதிகா தன் பார்வையிலிருந்து மறைகிற வரையில் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அவள் உள்ளே சென்றாள்.

ராதிகா வீட்டை யடைந்த போது, தீனதயாளனும் தனலட்சுமியும் வாயகலப் புன்னகையுடன் அவளை எதிர்கொண்டனர். அவள் அம்மா எப்போதும் அப்படித்தான் சிரிப்பாள்.  அவள் அப்பாவின் சிரிப்புத்தான் கொஞ்ச நாள்களாய் இயல்பாக இல்லை. ஆனால் இன்றைய சிரிப்பு வித்தியாசமாக அதன் பழைய இயல்புடன் இருந்தது ஏதோ விஷயம் இருப்பதை அவளுக்கு உணர்த்தியது. ஆனால் ராதிகாவின் முகம் இறுக்கமாக இருந்ததை இருவருமே கவனித்தார்கள்.

“என்னம்மா, ராதிகா? சீக்கிரமே வந்துட்டே? இன்னைக்கு கேம்ஸ் இல்லியாக்கும்!”  என்று சிரிப்பை யடக்கிக்கொண்ட முகபாவத்தடன் தனலட்சுமி வினவியது அவளிடம் எந்த மாற்றத்தையும் விளைவிக்கவில்லை.

“ஏய்! என்ன தனலட்சுமி இது? அவ வந்த்தும் வராததுமாக் கிண்டல் பண்ணிக்கிட்டு! … வாம்மா, ராதிகா. கைகால் கழுவிட்டு, முதல்ல டிஃபன் சாப்பிட வா.  உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்குறோம்….”

“நான் தான் இப்பல்லாம் லேட்டா வந்துக்கிட்டு இருக்கேனே!  நீங்க ஆஃபீஸ்லேர்ந்து திரும்புறதும் எப்பவுமே லேட்தான். அப்படி இருக்குறப்ப, எனக்காகக் காத்துக்கிட்டிருக்குறதாச் சொல்றீங்களே, அது எப்படி?”  என்று அவள் தீனதயாளனைப் பார்த்து வினவினாள்.

“இன்னைக்கு வேலை கொஞ்சம் குறைச்சல். அதான், முடிச்சுட்டு, சீக்கிரம் திரும்பிட்டேன்.”

“எனக்கு இன்னைக்கு டிஃபன் வேண்டாம்.  ஒரு ஃப்ரண்ட் வீட்டில கொஞ்ச நேரம் முந்திதான் சாப்பிட்டேன்  …. ஃபர்ஸ்ட் க்ளாஸ் பரோட்டாவும் குருமாவும்.   நீங்க வந்திருந்தா உங்களுக்கும் கிடைச்சிருக்குப்பா….”

“அது யாரும்மா, நானும் வந்து உன்னோட டிஃபன் சாப்பிட்டு இருக்கக்கூடிய இடம்? உன் ஃப்ரண்ட் பத்மஜா வீடா?”

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், ராதிகா தன் அறைக்குள் விரைவாக நுழைந்து கதவைப் படீரென்று சாத்திக்கொண்டாள். பிறகு தன் கட்டிலில் படுத்துக்கொண்டாள்.  அவளுக்கு ஏற்பட்டிருந்த எரிச்சலிலும் ஏமாற்றத்திலும் யாரையாவது நாலு சாத்துச் சாத்திப் புரட்ட வேண்டும் போல் இருந்த்து.

கணவரின் கேள்வி மகளின் காதில் விழவில்லை போலும் என்றெண்ணிய தனலட்சுமி, “சரி. நீங்க வாங்க. நாம சாப்பிடலாம்,”  என்று கூறியவாறு தட்டுகளை மேசைமீது வைத்துப் பரிமாறத்தொடங்கினாள்.

தீனதயாளன் யோசனையுடன் வந்து உட்கார்ந்தார். தனலட்சுமி சிரிப்புடன் அவரைப் பார்த்தாள். “படிப்பு முடிஞ்சதும் அவ கல்யாணத்தை நடத்திட வேண்டியதுதானேங்க?”

“பின்னே? அதுசரி, பூரங்கம் ஃபோன் பண்ணிப் பேசினதை ராதிகா கிட்ட சொல்லலாமா வேண்டாமா?”

“சொல்லிடலாங்க. அதுல என்ன இருக்குது?”

“ராதிகா! ராதிகா!”

“என்னப்பா?”

“ஒரு நிமிஷம் வந்துட்டுப் போம்மா.”

“இதோ வர்றேம்ப்பா.” – படுக்கையில் குப்புறப் படுத்து அழுதுகொண்டிருந்த ராதிகாவால் இந்தப் பதிலை உடனே சொல்ல முடியவில்லை – குரலைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டிய திருந்ததால்.

“அவ கொரல் ஒரு மாதிரி ஞொண ஞொணன்னு, சளி பிடிச்சிருக்குற மாதிரி, இல்லே?”

“ஆமா. படுத்துக்கிட்டு இருக்காளோ என்னவோ. கதவைத் தட்டிக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்ணாதே. அவளா வர்றப்ப வரட்டும்.”

“சரிங்க.”

தனலட்சுமி வந்து எழுப்பினால் தூங்குவது போல் பாசாங்கு பண்ணவேண்டும் என்று ராதிகா முடிவுசெய்தாள்.  அவர்கள் தன்னை அழைத்தது எதற்காக இருந்தாலும், தான் அப்போது இருந்த மனநிலையில் தன்னால் இயல்பாகப் பேச முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.  அவள் நினைத்தபடியே, சிறிதே நேரத்தில் தனலட்சுமி வந்து அவளைத் தொட்டுப் பார்த்தாள்.  அவள் உறங்குவது போல் இருக்க, சில நொடிகள் போல் நின்று விட்டு அவள் போய்விட்டாள்.

“ஏங்க? ராதிகாவுக்கு உடம்பு லேசாச் சுடுற மாதிரி இருக்குங்க.  அவ தூங்கி முழிச்சதும், எதுக்கும் தெர்மாமீட்டர் வச்சுப் பாத்துடலாம்.”

“சரி.”

… ராதிகாவால் நம்பவே முடியவில்லை.  சிந்தியா எப்பேர்ப்பட்டவளாக இருந்தாலும், அவள் தெரிவித்த தகவல்கள் பொய்யானவை யல்ல!  தன்னை ராகேஷிடமிருந்து காப்பாற்றுவது மட்டுமே அவளது நோக்கமாக இருந்துள்ளது என்பது அவளுக்குப் புரிந்தது. அவன் எப்போதோ செய்த தப்பு என்றாலும், தப்பு தப்புத்தான்! அந்தத் தப்புக்கு அடிப்படை அவனது நேர்மையின்மை!  மற்றொரு பெண்ணின் விஷயத்தில் அநியாயம் செய்தவன் தன் விஷயத்தில் செய்யமாட்டான் என்று எப்படி நம்புவது?  மிகப் பெரிய ஏமாற்றப் படுகுழியில் தான் விழுந்து அமிழாமல் தன்னைக் காப்பாற்றியுள்ள சிந்தியாவுக்குத் தான் உரிய முறையில் நன்றி கூறவில்லை என்று அவளுக்குத் தோன்றியது.  அதே நேரத்தில் ஏதோ ஓர் உறுத்தலின் விளைவே அவள் தன்னை ராகேஷிடமிருந்து காப்பாற்றியது என்றும் அவளுக்குத் தோன்றியது.  அல்லது தன் விடுதியில் இருந்த ஒரு பெண்ணை நாசம் செய்து அவள் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாக இருந்த ராகேஷைப் பழி தீர்த்துக் கொள்ளும் செயலாகவும் அது இருக்கக்கூடும்!  காரணம் எதுவாக இருந்தாலும், சிந்தியா அவளைக் காப்பாற்றி யிருப்பது மறுக்க முடியாத உண்மை!   அந்த உண்மைக்காக அவளுக்கு நன்றி செலுத்தி அவளைப் பாராட்டும் நேரத்தில், அவளைச் சும்மா விட்டு விடுவதும் கூடாது. ‘நீ ரொம்ப யோக்கியமோ?’ என்பது போல் நறுக்கென்று ஒரு நாள் அவளிடம் பேசத்தான் வேண்டும்.  ஒருத்தி இன்று செய்கின்ற நற்செயல் அவளது நேற்றைய கெட்ட செயலை இல்லாததாக்கி விடாது!

‘ராகேஷ்! ராகேஷ்! நீங்களா இப்படிச் செய்தீர்கள்? நீங்களா! என்னால் நம்பவே முடியவில்லையே!  ஜீரணிக்கவும் முடியவில்லையே! அப்படியானால், மிருந்த சமுதாயப் பொறுப்புணர்வு உள்ளவர் போல் ஏழை, எளியவர்களின் துயர் பற்றி, வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி, வரதட்சிணைக் கொடுமை பற்றி, கைம்பெண்களின்  மறுமணம் பற்றி, ஆணாதிக்கக் கொடுமைகள் பற்றி – இன்னும் எத்தனையோ சமுதாயப் பிரச்சினைகள் பற்றி யெல்லாம் – நீங்கள் என்னோடு விவாதித்தவை யெல்லாம் பொய்யா!  இவை யாவும் என் மனத்தைக் கவர்வதன் பொருட்டு நீங்கள் போட்ட வேஷமா!  போலியான வார்த்தைகளா! அப்படியானால், எவ்வளவு பெரிய மோசக்காரர் நீங்கள்!  உங்களோடு எத்தனை தடவைகள் நான் உங்கள் பைக்கில் பயணம் செய்திருக்கிறேன்! திடீர் திடீரென்று ‘ப்ரேக்,’ போட்டு என்னை உங்கள் மேல் சாய வைப்பீர்கள்.  அது கண்ணியக் குறைவான செயல் என்பது புரிந்தாலும், காதல் சேட்டை என்கிற அளவுக்குப் புரிந்துகொண்டு உங்களைச் சகித்துக் கொண்டேனே!  அப்போதெல்லாம் இலேசாய் உங்கள் மீது மனத்தாங்கல் வந்ததே தவிர வெறுப்பு வந்ததில்லை. அந்த உரசல்களைப் பற்றி இப்போது நினைக்கையில் எவ்வளவு அருவருப்பாய் இருக்கிறது!  சே! பெண்கள் எவ்வளவு ஏமாளிகளாய் இருக்கிறார்கள்!  இந்த மோசக்கார ஆண்களை எப்படி நம்பி ஏமாந்து போகிறார்கள்!  இந்த அசட்டு அம்மா உட்பட!…. அப்பா!  நீங்களும் ஒரு மோசக்காரர்தான்!  ஒரு ராகேஷ்தான்.  ராகேஷின் வண்டவாளம் காதலிக்கும் போதே வெளிப்பட்டுவிட்டது.   உங்கள் வண்டவாளம் இன்னும் அம்மாவுக்குத் தெரியவில்லை! அவ்வளவுதான் வித்தியாசம்.  உங்களைப் பற்றி அம்மாவிடம் சொல்லிவிட என் மனம்தான் என்னமாய்த் துடிக்கிறது!  ஆனால் பொய்யான உலகத்தில் சந்தோஷமாய் வாழ்ந்துவரும் அம்மாவின் மகிழ்ச்சிக் குளத்தில் கல்லெறிய எனக்கு மனம் வரமாட்டேன் என்கிறதே!  இந்த மனச்சுமையை நான் மட்டுமே தனியாக எத்தனை நாள்களுக்குத்தான் சுமக்கப்போகிறேனோ! …’

கெடியாரம்  எட்டு முறை அடித்தது. அதற்கு மேலும் படுத்துக்கொண்டிருந்தால் கவலைப்படுவார்கள் என்பதால், ராதிகா எழுந்துகொண்டாள்.  முகம் கழுவிப் பொட்டிட்டுக்கொண்டு அவள் கூடத்துக்கு வந்ததும், “என்னம்மா! மேலுக்குச் சொகமில்லியா? உடம்பு லேசாச் சுட்டிச்சே?” என்று தனலட்சுமி அவளைக் கவலையுடன் விசாரித்தாள்.

“திடீர்னு சளி பிடிக்கிற மாதிரி இருந்திச்சும்மா.  ஆனா இப்ப இல்லே. தொட்டுப் பாருங்க.”

தொட்டுப் பார்த்துவிட்டு, தனலட்சுமி, “ஆமா. இப்ப இல்லே. விட்டிடிச்சு.  தூங்கிட்டியில்ல? அப்ப வேர்த்து விட்டிருக்கும். அதான் இப்ப காய்ச்சல் இல்லே,” என்றாள்.

பிறகு,  “என்னங்க! ராதிகா எழுந்து வந்திடிச்சு. என்னமோ கேக்கணும்னீங்களே?” என்று கணவரை அவள் அழைக்க, “இதோ வந்துட்டேன்,” என்றவாறு தீனதயாளன் அங்கு வந்து அமர்ந்துகொண்டார்.

“வாம்மா, ராதிகா. இப்படி வந்து உக்காரு.  உங்கூடக் கொஞ்சம் பேசணும்.”

“என்னப்பா பேசப் போறீங்க?”

“எல்லாம் உன் கல்யாண விஷயமாத்தான்.”

“கல்யாணம் பண்ணிக்கலாம்னு எனக்கு எப்ப தோணுதோ அப்ப நானே வந்து உங்க்கிட்ட சொல்லுவேன்னு சொன்னதா ஞாபகம்.”

“காதலை ஆறப் போடக்கூடாது, ராதிகா! ஒருவன் மேல் ஒரு பெண்ணுக்கு ஈடுபாடு வந்தால் உடனே கல்யாணத்தை முடித்துவிட வேண்டும்.  ஒத்திப்போடக்கூடாதம்மா!” என்று அவர் ஆங்கிலத்தில் சொன்னார்.

“என்னப்பா சொல்றீங்க?”

“எனக்கு எல்லாம் தெரியும்மா.  அன்னைக்கு உன்கிட்ட மூவாயிரத்துக்கு டிக்கெட் வாங்கினான் இல்லே, அந்தப் பையன் பேரு ராகேஷ்தானே?  தினமும் கேம்ஸ்னு சொல்லிக்கிட்டு நீ அவனோட ஓட்டல், பீச்னு போய்க்கிட்டு இருக்கிறது எனக்குத் தெரிய வந்திச்சும்மா.  எப்படித் தெரியும்னுதானே யோசிக்கிறே? உன்னோட பூரங்கம் பெரியப்பா கண்ணுல நாலஞ்சு தரம் நீங்க ரெண்டு பேரும் பட்டிருக்கீங்க. … ஆனா, என் கண்ணுல படவே இல்லே, பாரேன்!”

இவ்வாறு சொல்லிவிட்டு அவர் சிரித்த போது அவளுக்கு எரிச்சல் மண்டிக்கொண்டு வந்தது.  ‘நீங்கதான் ஆஃபீஸ்லேர்ந்து நேரா அந்தச் சிறுக்கி சிந்தியா வீட்டுக்குப் போயிடறீங்களே? உங்க கண்ணுல நான் எப்படிப் பட முடியும்? யாராவது இது மாதிரி பாத்துச் சொன்னாத்தான் தெரியவரும்’

“என்னம்மா, பேசாம இருக்கே? மவுனம் சம்மதம்னு எடுத்துக்கிடலாமா?”

“பேசாம இருந்தா சம்மதம்னுதான் அர்த்தம் . சும்மா அவளைப் போட்டுத் துணப்பாதீங்க!”

“இல்லேம்மா.  நான் அந்தாளைக் கல்யாணம் பண்ணிக்கிறதா இல்லே.  நீங்க பாட்டுக்கு அவங்க வீட்டுப் பெரியவங்களைப் பாத்துப் பேசப் போயிடாதீங்க.”

“என்னம்மா இது! அவன் மேல அந்த மாதிரியான எண்ணம் உனக்கு இல்லைன்றியா? வெறும்  ஃப்ரண்ட்ஷிப் மட்டுடுந்தான்றியா? அவனும் அப்படித்தான் நினைக்கிறானாம்மா?”

உண்மையைச் சொல்லிவிடும் முடிவுக்கு ராதிகா கணப்பொழுதுக்குள் வந்தாள். துணிச்சலுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள்.

இல்லேப்பா. அவனே வந்து உங்களைப் பார்க்கிறதாத்தான் நேத்துவரைக்கும் இருந்தான். நானும் சம்மதிச்சிருந்தேன்.  ஆனா இப்ப இல்லே. என் மனசு மாறிடிச்சு..”

தனலட்சுமியும் தீனதயாளனும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“என்னம்மா சொல்றே நீ? ஏம்மா உன் மனசு மாறிடிச்சு?”

“அப்பா!  ஏம்ப்பா இந்த உலகத்துல நிறைய ஆம்பளைங்க அப்பாவிப் பொண்ணுங்களை ஏமாத்துறவங்களாவே இருக்காங்க?  ஒண்ணு – லவ் பண்ற பொண்ணுங்களை ஏமாத்துறாங்க, இல்லாட்டி, தாலிகட்டின பொண்டாட்டியை ஏமாத்துறாங்க. கடவுள் உங்க இனத்தை ஏம்ப்பா பெரிய அளவில இப்படிப் படைச்சிருக்காரு?” –   ராதிகாவின் ஒவ்வொரு சொல்லும் அவர் முகத்தின் மேல் கொளுத்திப் போடப்பட்ட பட்டாசுகள் மாதிரி வெடித்துச் சிதறி அவரைத் தலைகுனியச் செய்தது.  நீதி தேவதையின் முன் தலை குனிந்து நிற்கும் குற்றவாளியின் நிலையில் அவர் இருந்தார்.

“என்னடி சொல்றே, ராதிகா?”

“அவனைப் பத்தின சில விஷயங்கள் இன்னைக்குத் தெரிய வந்திச்சு, அம்மா.  அப்புறமா, எல்லா விவரங்களையும் சாவகாசமாச் சொல்றேன். ஒண்ணும் ஒளிவு மறைவு இல்லே.  இப்ப என்னை எதுவும் கேக்காதீங்க.  நான் ரொம்பவே நொந்து போயிருக்கேன்….” என்ற ராதிகா திடீரென்று உடைந்து அழத் தொடங்கினாள்.  பதறிப் போன தனலட்சுமி உடனே எழுந்து அவ:ளை நெருங்கி அமர்ந்து அவள் தோளை ஆதரவுடனும், தானும் கண் கலங்கியவாறும் அணைத்துக் கொண்டாள்:       “அழாதேம்மா. விட்டுத் தள்ளு.  காலைச் சுத்தின பாம்பு கடிக்காம விட்டிச்சேன்னு சந்தோஷப்படு. கல்யாணம்னு ஒண்ணு ஆன பெறகு தெரிய வந்திச்சுன்னா என்ன செஞ்சிருக்க முடியும்? இப்ப அப்படி இல்லே, பாத்தியா?”

சில நொடிகள் தோள்கள் குலுங்க அழுத பின் ராதிகா கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து சென்றாள். அவர்களும் அவளிடம் அது பற்றி மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.

… மறு நாள் காலை தனலட்சுமி குளிக்கப் போயிருந்த போது, “அப்பா! நான் உங்களோட கொஞ்சம் பேசணும்!” என்றவாறு தம்மெதிரில் வந்து நின்ற ராதிகாவை வியப்பாக நோக்கிய தீனதயாளனுக்கு நெஞ்சு அடித்துக்கொள்ளத் தொடங்கியது.

“சிந்தியா தீனதயாளன்கிறது யாருப்பா? உங்களுக்கு அறிமுகமே இல்லாதவங்களா?…. என்னப்பா அப்படிப் பாக்குறீங்க? எனக்கு எல்லாம் தெரிஞ்சு போயிடிச்சுப்பா!  அன்னைக்கு காசினோ தியேட்டர்ல வெச்சு உங்க ரெண்டு பேரையும் நான் பாத்துட்டேன்.  உங்களை ஒரு நாள்   ஃபாலோபண்ணி நீங்க அந்த சிந்தியா வீட்டுக்குப் போனதையும் கண்டுபிடிச்சுட்டேன்! அதனால அநாவசியப் பொய்யெல்லாம் வேணாம்ப்பா!”

தீனதயாளன் குரலை உயர்த்திப் பதிலுக்குக் கத்த முயன்று தோற்றுப் போனார்.                                  – – தொடரும்
jothigirija@live.com

Series Navigationமருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்கம்பனும் கண்ணதாசனும்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *