மதிப்பெண்ணின் மறுப்பக்கம்

This entry is part 17 of 27 in the series 29 செப்டம்பர் 2013

 

(18.12.2011 தினமணிகதிரில் அச்சானது)
ஷன்மதி, பாடாலூர்
டிரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ஙங்ங்ங்ங்ங்………………………….
ஏண்டி.. பப்பி.. எழுந்திரு மணியாச்சு பாரு…. நாலரைக்கு அலாரம் அடிச்சாச்சு. எழுந்திருடீ.. – லைட்டை போட்டவாறு மகளை எழுப்பினாள் ராதிகா.
அம்மா.. ஃபைவ் மினிட்ஸ்மா.. ப்ளீஸ் .. என்றவாறு புரண்டு படுத்தாள் பப்பி என்று செல்லமாக அழைக்கப்படும் மோனிகா.
பப்பி… எழுந்திரிம்மா.. இப்படியே அஞ்சு அஞ்சு நிமிஷமாக ஓடி போயிடும்.. என்றவாறு எழுந்து வந்து மகளின் தலையை கோதி விட்டார் ராஜன், அவளின் அப்பா.
அனிச்சையாக கணக்கு புத்தகத்தை எடுத்தாள். பக்கத்திலேயே தயாராக இருந்தது நேற்று இரவு எழுதி விட்டு அங்கேயே வைத்திருந்த நோட்டும், பேனாவும். கண்களை துடைத்தவாறு, படுக்கையில் கால்களை நீட்டி, சுவற்றில் சாய்ந்தவாறு அமர்ந்து, கணககு போட ஆரம்பித்தாள் மோனிகா.
மகள் படிப்பதை பார்த்து திருப்தியாக எழுந்து பாத்ரூம் நோக்கி நகர்ந்தார் ராஜன்.
இது இன்று நேற்று நடப்பதல்ல. மோனிகா பதினோறாம் வகுப்பு படிக்கும்போதே, வீடும் பதினோறாம் வகுப்பு படிக்க ஆரம்பித்திருந்தது. இப்போது, வீடு பனிரெண்டாம் வகுப்பில் இருந்தது.
முகம் கழுவி விட்டு, அடுப்படிக்கு வந்தாள் ராதிகா. நேற்றே வாங்கி ஃபிரிட்ஜில் வைத்திருந்த பால் பாக்கெட்டை பிரித்து ஊற்றி அடுப்பில் ஏற்றினாள். சூடான டீயை மகளுக்கும், தனக்கும் எடுத்துக் கொண்டு, மீதமுள்ள டீயை கணவருக்கு ஃபிளாஸ்கில் ஊற்றி வைத்தாள். ராஜன் அதற்குள் வாக்கிங் கிளம்பி விட்டிருந்தார்.
மோனிகா பத்தாம் வகுப்பை தாண்டியதுமே வீடு சகஜ நிலையை தொலைத்தது. நாலரைக்கு எழும் வீடு, இரவு அடங்க என்னவோ பதினோறு மணியாகி விடும்.
சமையலை முடித்திருந்தாள் ராதிகா.  அன்றைக்கு அவள் அம்மாவும், அப்பாவும் வருவதாக ஃபோன் வந்திருந்தது. முன்பு அடிக்கடி வந்து கொண்டிருந்த அவர்களும் எப்போதாவதுதான் வருகிறார்கள்.  ராதிகாவின் அப்பா மாசிலாமணி ரிடையர்ட் மாநில அரசு அதிகாரி. வரும் பென்ஷன் இருவருக்கும் மிக தாராளம். சொந்த வீடு. ஓரே மகன். மகனும் நல்ல வேலையில் செட்டிலாகி விட்டான். கல்யாணமும் முடிந்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை நீபா. எல்லோரும் கூட்டு குடும்பமாக இருக்க, உள்ளுரிலேயே திருமணம் செய்து கொடுத்திருக்கும் மகள் வீட்டுக்கு மாதம் இருமுறையாவது வந்து இரண்டு நாள் தங்கி விட்டு செல்வார்கள். அதுவும் மாசிலாமணி, ராதிகாவின் காரசாரமான சமையலுக்கு அடிமை.
ராதிகாவின் அம்மா, வசுந்தரா டி.வி. சீரியல்களுக்கு அடிமை.  காலையில் கணவரையும், மகளையும் அனுப்பி விட்டு அம்மாவோடு உட்கார்ந்து டி.வி. பார்த்துக்கொண்டே, சீரியல் கதைகளை அலசுவார்கள்;. மதியம் மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, பின் குட்டி தூக்கம் போட்டு விட்டு நிமிர்ந்தால், பாட்டி… என குதித்தபடி ஓடி வருவாள் மோனிகா.
பப்பி… இந்த வளையல் பிடிக்குதான்னு பாரேன்.. உங்க மாமா iஉறதராபாத் டிரைனிங் போய்ட்டு வந்தான்.  அங்கதான் உனக்கும் நீபாக்குட்டிக்கும் இந்த முத்து வளையல் வாங்கிட்டு வந்தான் – வசுந்தரா
மொதல்ல சைஸ் சரியா இருக்கான்னு பாருடா… தாத்தா மாசிலாமணி.
சரியா இருக்கு தாத்தா.. இன்னைக்கு நாம ரெண்டு பேரும் பீஸா கார்னர் போலாம் தாத்தா.. ப்ளீஸ்…. ப்ளீஸ்…என்றவாறு மடியில் உட்கார்ந்து செல்லம் கொஞ்சுவாள் மோனிகா.
அலுவலகம் விட்டு வரும் ராஜன் சுடசுட வாங்கி வரும் சமோசாவையும சாப்பிட்டு விட்டு, தாத்தாவுடன் பீஸா சாப்பிட போவாள் மோனிகா.
வருடாவருடம் மே மாதம் கோடை விடுமுறையையும் விட்டு வைப்பதில்லை இந்த கும்மாள பார்ட்டிகள்.
கும்பகோணம் கோவில் முதல் குலு மணாலி கோடை வாசஸ்தலம் வரை அப்பப்போ டிரிப் தான்.
மோனிகா பத்தாவது வந்தவுடன் முதல் கட் டி.வி.க்கு தான். டி.வியும் கையுமாக இருந்தவள் முதலில் ரொம்பதான் கஷ்டப்பட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழலுக்கு வீடு பழகி விட்டது.
அப்படிதான் ஒருநாள் மோனிகா பள்ளியிலிருந்து ஃபோன். பதினோறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் மோனிகா. என்னவோ, ஏதோவென்று கணவன் அலுவலகத்திற்கு தகவல் சொல்ல பதறியடித்து வந்தார் ராஜன். தயாராக இருந்த ராதிகாவும் உடன் செல்ல, பள்ளிக்கு வந்தார்கள்.
பெரிய பொட்டு, பெரிய உருவம், பெரிய மேசை, பெரிய ரூம் என்று எல்லாமே பெரிதாக இருந்த பிரின்ஸ்பால் ரூம். லெவன்த் அட்மிஷனுக்காக வந்தது.
நாங்க மோனிகாவோட பேரண்ட்ஸ்.. ராஜன்
தெரியும் .. உட்காருங்க – என்றார் மெல்லிய  ஆனால் தீர்க்கமான குரலில்.
“நம்ம ஸ்கூல்ல லெவன்த் ஸ்டூடன்ஸ்க்கு இந்த வருஷமே டுவெல்த் போஷன்ஸ் எடுக்கபோறோம். எங்க பிளான் என்னன்னா  ஜுன் டூ டிசம்பர் லெவன்த் ஸிலபஸை முடிச்சுட்டு, ஜேன்வரிலேர்ந்து டுவெல்த் ஸிலபஸ் ஸ்டார்ட் பண்ணிடுவோம். அப்றம் ஃபுல்லா டெஸ்ட், டெஸ்ட்-ன்னு வைச்சு நல்ல மார்க் வாங்க வைச்சுடுவோம்” – என்று மெல்லிய குரலில் அழுத்தமாக சொல்லி விட்டு இருவரையும் ஏறிட்டு பார்த்தார்.
“ஓ.கே.மேடம்” – ராஜன்.
“பேரண்ட்ஸ் ஸைட்லேர்ந்து எங்களுக்கு இப்ப சப்போர்ட் தேவைப்படுது. உங்க பொண்ண பொறுத்தவரைக்கும் மேதமெடிக்கிஸ் அண்ட் பயாலஜில கொஞ்சம் இம்ரூவ்மெண்ட் தேவைப்படுது”.
….. ……..  ……
“சரி மோனிகா காலைல எத்தனை மணிக்கு எழுந்துக்குவா” என்றார் பிரின்ஸி நினைவு வந்தாற்போல்.
“அஞ்சரை மணிக்கு கரெக்டா எழுந்திருச்சிடுவா மேடம்” என்றாள் ராதிகா அவசரமாக.
“ஊகூம்.. பத்தவே பத்தாது. காலைல நாலு மணிக்கு எழுப்பி விட்டு படிக்க சொல்லுங்க. எத்தனை மணிக்கு என்னென்ன படிக்கணும்னு நாங்களே சார்ட் பிரிபேர் பண்ணி கொடுத்துடுவோம். மோனிகாவை பொறுத்தவரைக்கும் அவளுக்கு நாங்களே மேக்ஸ் அண்ட் பயாலஜிக்கு ஸ்பெஷல் கோச் அரேஞ்ச் பண்ணியிருக்கோம்”
“சரிங்க மேடம்” – ராஜன்.
பஸ்ஸரை அழுத்த வேகமாக வந்தார் ப்யூன்.
“தங்கவேலு.. கீதா மிஸ்ஸை வரச்சொல்லுங்க” – பிரின்ஸ்பால்
கீதா வந்தார். மோனிகாவின் மார்க் ஷீட்டை காண்பித்தார். எண்பது சதவீத மதிப்பெண்கள் போதவே போதாது என விவாதிக்கப்பட்டது. மோனிகாவை குற்றவாளியாக்கி, மார்க் எடுக்கும் இயந்திரத்திற்குள் தள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முடிவானது அன்று தான். வீடு பன்னிரண்டாம் வகுப்பிற்குள் நுழைந்ததும் அன்று தான்.
ஞாபக சக்திக்கு வல்லாரை கீரை, என்ஸைம்ஸ் தூண்டலுக்கு சாத்துக்குடி ஜுஸ், ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை, பீஸா, பர்கர்க்கு தடா, சூப் வடிவில் நான்வெஜ் அயிட்டங்கள், ஆங்காங்கே அலாரம் டைம்பீஸ்கள், பனியில் வெளியே போனால் மப்ளர்,  குறைக்கப்பட்ட ஃபிரெண்ட்ஷிப்கள், ஒடுக்கப்பட்ட உறவுகள், டி.வி. இ;ல்லாத வீடு, மோனிகா பள்ளிக்கு செல்லும் நேரங்களில் மட்டும் கேட்கப்படும் எங்கோ மூலையில் இருந்து எடுக்கப்பட்ட எஃப்.எம் ரேடியோ வொக்காபிளரி இம்ரூவ்மென்ட்க்கென ஆங்கில தினசரி, மற்ற தமிழ் பத்திரிக்கைகளுக்கு 144 தடையுத்தரவு, திடீரென பீறிட்டு கிளம்பிய பக்தி என ஒரு வித்தியாசமான ஒழுங்கிற்கு வந்தது வீடு.
மகளை உட்கார வைத்து இருவரும் மாறி மாறி கொடுத்த அட்வைஸில் வெலவெலத்துதான் போனாள் மோனிகா.
ஒரே பெண்ணானதால் மோனிகா ரொம்பவே செல்லம்.  காலை உணவிலிருந்து, இரவு உணவு வரை அவளுக்கு பிடித்தமானதாகவே செய்து கொடுப்பாள் ரேவதி.
மோனிகா வீட்டில் இருக்கும் நேரங்களில் அவளுக்கு பிடித்தமான டி.வி. சேனலே ஓடும். புத்தகமோ, பொருட்களோ, உடைகளோ என அவளுடையதெல்லாம் ஆங்காங்கே இறைந்து கிடக்கும். தினந்தோறும் காலை வேளை என்பது போர்களமாக இருக்கும். அப்படியே அவிழ்த்து போடப்பட்ட யூனிஃபார்மிலிருந்து, ஸோபாவில் கலைத்துப் போடப்பட்ட புத்தகங்கள், டி.வி பார்த்துக் கொண்டே கொரித்து போட்ட தீனி பேப்பர்கள், பால் குடித்த டம்ளர்கள் என மோனிகாவின் வேலைகளே காலை வேளையை நிறைத்து விடும்.
இப்போது வேலைக்கார பெண் கூட சீக்கிரம் வீட்டை பெருக்கி விட முடிகிறது. சாமான்கள் கலைந்திருந்தால் தானே எடுத்து வைப்பதற்கு.
எப்படியோ, அப்போஇப்போவென நாளும் நெருங்கி விட்டது. அடுத்த வாரம் பப்ளிக் எக்ஸாம்.
“நாளைலேர்ந்து எனக்கு ஸ்டெடி உறாலிடேஸ்மா” என்றாள் அலுப்புடன் மோனிகா. ஏற்கனவே இதே பாடத்தை படித்து, ஆறுமுறை ரிவிஷன் டெஸ்ட்டும் எழுதியாகி விட்டது.
அன்று அலுவுலகம் முடிந்து வந்த ராஜன் “இந்த வாரத்திலேர்ந்து நான் பதினைஞ்சு நாள் லீடு போடறேன் ராதி”- என்றார்.
அடுத்த நாள் வீடு காலையில் நாலரைக்கு மணிக்கே விழித்துக் கொண்டது. ராதிகா சூடான பாலுடன் மகளிடம் வர, ராஜன் மகளருகே அமர்ந்திருந்தார்;.
“ஏங்க இன்னைக்கு வாக்கிங் போகல?” – ராதிகா
“பதினைந்து நாள் வாக்கிங் கட். எனக்கு இப்பவே காஃபி கொடுத்துடு” – என்றான்.
“நீ போப்பா. நான் படிக்கிறேன்” – என்றாள் சுள்ளென்று மோனிகா.
“இல்லம்மா.. நான் போகலே. இங்க பக்கத்திலேயே உட்காந்திருக்கேன். எதிர் வீட்டு பொண்ணு திவ்யாவ பாரு.. காலைலேயே எழுந்திருச்சு, மொட்டை மாடி லைட்ட போட்டுட்ட நடந்து கிட்டே படிக்குது. நீ பெட்லயே உட்காந்து தனியாவே படிக்கிற.. தூக்கம் வந்துடாதா?.. நான் பக்கத்தில இருந்தா உனக்கும் துணையா இருக்கும். தூக்கமும் வராது.” என்றார் அப்பா.
“எப்பப்பாரு உங்களுக்கு கம்பேரிஸனும், கண்காணிப்பும்தான். எனக்கு இதெல்லாம் பிடிக்கவேயில்ல. என்னை டென்ஷன் பண்ணாதீங்க” – கத்தினாள் மோனிகா.
“இல்லடா பப்பி… இந்த வருஷம் நல்லா படிசசு மார்க் எடுக்கறதுங்கறது, உன் எதிர்காலத்தை நீயே ஃபிக்ஸ் பண்ணிக்கிற மாதிரிடா”… என்றாள் அம்மா கையாலாத சமாதானத்துடன்.
“அதுக்காக எப்பவுமே படிச்சுட்டே இருக்கறதுன்னா எப்படிம்மா? என்னால முடியல என்ன விட்டுருங்க” என்றாள் கண்ணீரோடு பப்பி;
“நம்ம சொந்த பந்தம், நம்ம தெருவில இருக்கிற பிள்ளைங்க இவங்களையெல்லாம் பாரும்மா… எல்லாம் நல்லா படிச்சுட்டு, நல்லா காலேஜ்ல ஸீட் வாங்கிட்டாங்க.  நீயும் முன்னேற வேண்டாமாம்மா…” – அப்பா.
“உன்னை விட்டா எங்களுக்கும் யார் இருக்கா?” – ராதிகா.
“அய்யோ அப்பா” என்று காதை பொத்தியவள் “நல்லா படிச்சா, நல்ல காலேஜ்ல சீட் கிடைக்கும். நல்ல காலேஜ்ல சீட் கிடைச்சா, கேம்பஸ்ல நல்ல கம்பெனில வேலைக்கு செலக்ட் பண்ணுவாங்க.. அப்புறம் நல்ல ஸேலரி கிடைக்கும். இதைதானே ரிபீடட்டா சொல்ல போறீங்க”
“அந்த பணத்தைதான் நீங்க எனக்காக சேர்த்து வைக்கிறீங்களேப்பா.. நல்லா பையனா பாத்து மேரேஜ் செய்துகுடுங்க… பணமும் குடுங்க…. அதை தாண்டி என்ன வேணும்?..  ஏன் இரண்டு பேரும் என்னை கொடுமைப்படுத்துறீங்க.?” என்று கண்ணீரும் ஆற்றாமையுமாக இறைந்தாள் மோனிகா.
ஏதோ சொல்ல வந்த ராஜனை, ராதிகா கண்களால் ஜாடை காண்பித்து அடக்க, இருவரும் மகளை தனியே விட்டு அறைக்கு வெளியே வந்தனர்.
பரீட்சை தினம். காலை நேரம். முந்தின நாள் இரவு அம்மா, அப்பாவின் கேட்ட அட்வைஸ, தாத்தா, பாட்டி, உறவினர் என அனைவரும் ஃபோன் போட்டு சொன்ன வாழ்த்தும், அட்வைஸ{ம், பாடங்கள் நினைவிலிருக்க வேண்டிய கட்டாயம,  ஓரளவு வளர்ந்து விட்டதனால் அதிக மதிப்பெண் பெற்றேயாக வேண்டும் என்ற சுய அறிவு, எதிலும் ஆசுவாசிக்க முடியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்டாற் போல், சுய பச்சாதாபம் மேலோங்க பப்பி அன்று அதிகமாக பேசவில்லை.
காலையில் பாட புத்தகத்தில் முக்கியமான பகுதிகளை லேசாக புரட்டி கொண்டிருந்தாள் மோனிகா.
“பப்பி இந்தாம்மா… ஹார்லிக்ஸ் குடி” – நுரைபொங்கும் டம்ளரை நீட்டினாள் ராதிகா.
“நான் இன்னும் பிரஷ் பண்ணலம்மா.. பிரஷ் பண்ணிட்டு குடிக்கிறேன்” என்றவாறு டம்ளரை வாங்கி கீழே வைத்தாள் மோனிகா
“பப்பிம்மா.. பிரஷ் பண்ணிட்டு அப்டியே கொஞ்சம் பூஜை ரூமு;க்கு வாம்மா…” அதிகாலையிலேயே எழுந்து, குளித்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த ராஜன், தலையை மட்டும் வெளியே நீட்டி மகளை அழைத்தார்.
“இதோ வந்திட்டேன்ப்பா…” – மோனிகா சாமியறைக்கு சென்றாள்.
“குல தெய்வம் கோலவிழியம்மா.. எம்பொண்ணுக்கு எல்லா கேள்வியும் தெரிஞ்சதா வரணும். அவ டென்ஷன் இல்லாம நல்லா எழுதி ஃபுல் மார்க் வாங்க வையும்மா… உன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு பத்தாயிரம் மொய் எழுதுறேம்மா” என்று சத்தமாக கோரிக்கை வைத்து மகளுக்கு ஆசிர்வாதம் செய்வது போல் செய்து விபூதி இட்டார்.
ஹால்டிக்கெட், பேனா, பென்சில் என மகளின் பவுச்சை சரிபார்த்துக் கொண்டிருந்தாள் ரேவதி.
“ஹால் டிக்கெட்ல இங்க் பட்டுடாம ஒரு பாலித்தீன் கவர்ல வெச்சிடவாங்க” என்றாள் கணவனைப்பார்த்து.
“எல்லா பேனாவிலேயும் இங்க் போட்டு சுத்தமா தொடச்சுதான் வச்சிருக்கேன் என்று இழுத்தவர், சரி சரி ஹால்டிக்கெட்ட மட்டும் எடுத்து கவர்ல போட்டுடு” என்றார்.
குளித்து முடித்து விட்டு வந்தாள் மோனிகா. டைனிங்டேபிளில் சூடான இட்லியும், சாம்பாரும் காத்திருந்தன்
“பப்பி… வந்து இட்லி சாப்பிடும்மா..”
“வரேம்மா”
“நீங்களும் சாப்பிட உட்காருங்க..” – என்றாள் கணவனைப் பார்த்து.
ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டு விட்டு எழுந்த மகளை பதறி தடுத்தார் ராஜன்.
“ப்ளீஸ்ப்பா.. என்னால முடியல…எழுந்த மகளின் கைகளில் நடுக்கத்தை உணர்ந்தார் ராஜன்.
“பயப்படாதம்மா… நிதானமா தெளிவா எழுது”
“எனக்கு தலை வலிக்குதுப்பா..” கண்களில் நீர் கட்டியிருந்தது.
“பப்பிம்மா.. எதையும் நினைச்சு டென்ஷன் ஆகாதம்மா” – ஆதரமாக மகளை அணைத்தவாறு பேசினாள் ராதிகா.
“கொஞ்சம் இரும்மா.  வயித்த கலக்குது.  நான் டாய்லெட் போய்ட்டு வரேன்”
கைகளை துடைத்தவாறு ஹாலுக்கு வந்த மகளிடம் கையில் தயாராய் வைத்திருந்த ‘ஜெலுசிலை’ ஸ்பூனில் ஊற்றி நீட்டினார் ராஜன்.
தாத்தாவிடமிருந்து ஃபோன்.
“பப்பிக்குட்டி… தாத்தா பேசறேன்;டா.. நல்லா எழுதும்மா.. கரெக்டா டைம்க்குள்ள எழுதி முடிச்சிடும்மா… சாமி கும்புட்டுக்கோ… நம்ம குடும்பத்துக்கு நீதான் மொத வாரிசு.. நீ படிச்சு நல்லா இருக்கணும்… நம்ம குடும்பத்த எல்லாரும் ஓஹோன்னு சொல்லணும்..”
“சரி தாத்தா.. நான் கிளம்பணும்… மணியாச்சு” என்றவாறு ஃபோனை வைத்தாள்.
கதவை பூட்டி விட்டு மூவரும் காரில் ஏறி பள்ளிக்குச் சென்றனர். பள்ளி வாசல் வரை சென்று மகளை வழியனுப்பி வைத்து விட்டு, இருவரும் வீடு திரும்பினர்.
தேர்வின் ஓவ்வொரு நாள் காலையும் ஏதோ ஒரு இனம்புரியாத கலவரத்துடனும், தேர்வு முடிந்து வீடு வந்தவுடன், எழுதிய தேர்வுக் குறித்த மதிப்பெண் ஆய்வுமாக கழிந்தது.
இறுதி தேர்வு நாள்.
புழகிப்போன இறுக்கத்துடன் குடும்பம் காலை பொழுதை நகர்த்த, தேர்வு முடித்து மதியம் வந்தாள் மோனிகா.
பள்ளி வாசலில் காத்திருந்தனர் ராஜனும், ரேவதியும்.
துள்ளி வந்த மகளை வழக்கமான விசாரிப்புகளோடு எதிர்கொண்டனர்.
கார் மெல்ல வேகமெடுத்து, Nஉறாட்டலை நோக்கி சென்றது. மூவரும் அனுபவித்து சாப்பிட்டனர்.
வீடு வந்து சேர்ந்தவுடன் கட்டிலை நோக்கி நகர்ந்தாள் மோனிகா.  அப்படியே யூனிஃபார்முடன் குப்புற படுத்தவள், தூங்கி எழும்போது மணி ஆறு. நான்கு மணி நேர நிம்மதியான தூக்கம்.
எழுந்து வந்தவளின் கையில் சமோசா தட்டை திணத்தாள் ராதிகா. கையில் தட்டை வாங்கியவாறு காலையில்தான் கேபிள் கனெக்ஷன் கொடுக்கப்பட்ட டி.வி.யை ஆன் செய்து, கார்ட்டூன் சேனலுக்கு திருப்பினாள் மோனிகா. ர்pலாக்ஸ்டாக ஸோஃபாவில் சாய்ந்தவாறு சம்சாவை கொறித்துக் கொண்டிருந்த மகளிடம் வந்து அமர்ந்தாள் ராதிகா.
அம்மாவின் தோளில் சாய்ந்தவள் திடீரென பெருங்குரலெடுத்து அழ, முதலில் புரியாது பதறிய ராதிகா, பிறகு தானும் அழலானாள்.
ழூழூழூ

Series Navigationநீங்காத நினைவுகள் – 17மயிரிழையில்…
author

ஷன்மதி

Similar Posts

Comments

  1. Avatar
    N Sivakumar, New Delhi says:

    அருமை! அருமை!! அருமை!!! ஆனால் பப்பிதான் பாவம், இன்றைய மாணவர்களின் நிலையை மிக யதார்த்தாமாக படம் பிடித்து காட்டி விட்டார் ஷன்மதி.. நான் படிக்கிறப்போலாம் என்னை எழுப்பி விட கூட ஆள் இல்ல.. !!! இந்த மன அழுத்தமும் இல்ல, மாணவர்களை செக்கு மாடு போல் ஆக்கி விட்டது நம் சமூகம்.. இந்த நிலை என்று மாறுமோ, நான் ஒன்றும் வயதில் மிகப்பெரியவன் இல்லை இருந்தும் அந்த நாளும் வந்திடாதோ என்றுதான் பாட தோன்றுகின்றது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *