டௌரி தராத கௌரி கல்யாணம் – 21

This entry is part 22 of 33 in the series 6 அக்டோபர் 2013
 
 
 
அதுக்குள்ள கௌரிக்கு குழந்தைகளாயாச்சா…? அவளே இன்னம் குழந்தை…..மாதிரி…! இந்த ரெண்டு வருஷத்துல.அடையாளமே தெரியாமக்  கொஞ்சம் வெய்ட் போட்ருக்கா….அவ்வளவு தான் .! விஷ்ணு அங்கிள் எழுதினாப்பல அந்த கார்த்தியைத்  தான் கல்யாணம் கழிச்சுண்டு இருக்கணம். போட்டும்…! ஆனால் விஷ்ணு அங்கிள் எங்கியாக்கும் காணம். என்னாச்சு அவருக்கு?  எது எப்படியோ…..குழந்தைகள் ரெண்டு பேரும் ‘சான்சேயில்லை …..ச்சோ ச்வீட்…’ அவர்களைப் பற்றிய எண்ணமே பிரதானமாய்  பிரசாத்தை விமானத்தில் அவனது இருக்கை வரை கொண்டு நிறுத்தியது.

இவரை உற்றுப் பார்த்தால் அந்தப் பிரசாத்தைப் பார்கறா மாதிரியே இருக்கே. ஆனால்..இவரோட வெள்ளை ஜிப்பாவும் கூலிங் கிளாசும், கழுத்தில் கண்ணைப் பறிக்கும் அந்த ஸ்படிக மணி மாலையும் ஏதோ ஒரு ஹிந்திப் பட ஹீரோ மாதிரின்னா இருக்கார்…..நான் பாட்டுக்கு  ‘ஆர் யூ மிஸ்டர்.பிரசாத்…” ன்னு கேட்டு வைக்கப் போக, அவர் ‘நோ’ என்று சொல்லிட்டால், வீணா நானே என் முகத்தில் கரியைப் பூசிக்கணமா …அவர் யாராயிருந்தால் எனக்கென்ன வந்தது..? கௌசிக்கை இறுக்க அணைத்துக் கொண்டு தனது சீட் எண்ணைத் தேடிக் கொண்டே போகும்போது,  பின்னாலிருந்து சித்ராவின் குரல்….

கௌரி…..இங்க வா…நம்ம சீட்டையும் தாண்டிண்டு…..எங்கே போயிண்டே இருக்கே…….! நேக்கு ஜன்னலோரமா வேடிக்கை பார்க்கணம் …அதான் நான் இவர்ட்ட ரெக்வெஸ்ட் கேட்டு ஸீட்டை மாத்தீண்டு இங்க உட்கார்ந்துட்டேன்….நீயும் என் பக்கத்துல உட்கார். அவர் உனக்கு அப்பறத்து ஸீட்ல உட்காரட்டும்…..குழந்தை பத்திரம்…இடிச்சுக்கப் போறான்…ஜாக்கிரதை..
என்று பரபரத்த சித்ரா….’இங்க பாரேன்…..எத்தனை ஃப்ளைட்டுகள்  பெரிசு பெரிசா வரிசையா நிக்கறதுன்னு….டெல்லி ஏர்போர்ட் ரொம்பவே பெரிசு போல’ இல்லையா…?

ம்ம்…ம்ம்.. என்றபடி இடுப்பு பெல்டால் தன்னை இறுக்கிக் கொண்டு, குழந்தையை அட்ஜஸ்ட் செய்து கொள்கிறாள். அசந்து தூங்கும் கௌசிக்கை தலை கோதியவள், அம்மா நீயும் பெல்ட்டைப்  போட்டுக்கோ என்கிறாள்.

அடுத்த வரிசையில் இருவர் தங்களது கைகளில் டிக்கெட்டுக்களை வைத்துக் கொண்டு, அங்கு சீட்டில் அமர்ந்திருந்தவரிடம் ‘ஏ சீட் ஹமாரா ஹைன்….தேகியே…டிக்கெட் யஹான் ஹைன்…ஆப் உடியே…என்று அவர்களை எழுந்திருக்கச் சொல்லி வம்புக்கு நிற்க, உட்கார்ந்திருந்தவரும் ‘ இதி…நா ஸீட்டு …..இதிகோ சூடண்டி நா டிக்கெட்டு…எக்கடோ பொறப்பாடு ஜரிகிந்தி.. அக்கட அடுகண்டி” என்றவர் அத்தோடு நிற்காமல் ஏர்ஹோஸ்ட்டஸ்..என்று கையை உயர்த்தி ‘பஸ்ஸரை’ அழுத்திவிட்டு இன்னும் விரைப்புடன் நிமிர்ந்து உட்கார்ந்து கொள்கிறார். ‘நான் எழுந்திருக்க முடியாது…நீ என்ன வேணா செய்துகொள்’ என்ற பிடிவாதம் தெரிந்தது.

அங்கிருந்த சிலரின் கண்கள் அவர்களைத் தொடருகிறது.’என்ன நடக்கப் போறது….அழகிகள் இதை எப்படி சமாளிக்கப் போகிறாள்’..? இந்த இருவரையும் இறக்கி விட்டுடுவாங்களோ…?

விமானம் கிளம்ப இன்னும் சில நிமிடங்களே இருக்கும் தருணத்தில், இவர்களது டிக்கெட்டை சரி பார்த்தவள், தவறுதலுக்கு வருந்தியபடி, ப்ளீஸ் ஃபாலோ மீ…என்று சிணுங்கியபடி…முன்புறத்திலிரு

க்கும் ‘பிஸினெஸ் கிளாஸில் அவர்களை புன்னகையோடு அமரச் செய்துவிட்டு நகர்ந்தாள். இருவர் முகத்திலும் பரம திருப்தி.

இதையும் பார்த்துக் கொண்டேயிருந்த சித்ரா ‘அவா பண்ணின தப்புக்கு இவாளுக்கு அடிச்சது யோகம்…இது நமக்கு நடந்திருக்கப் படாதோ….அங்க பாரு ஸீட்டெல்லாம் எப்படி விஸ்தாரமா இருக்கு..” என்று புலம்பினாள்.

அம்மா….கொஞ்சம் அமைதியாத்தான் இரேன்….ரொம்ப ஓவர் சீன் போடாதே…நீ சொல்லுவியே….யாரோ மிட்டாய் கடையைப் பார்த்தானாம்னு…..அதுமாதிரி நம்மளப் பார்த்து யாராவது நினைச்சுக்கப் போறா..!

நீ சித்த உன்னோட திருவாயை மூடிண்டு இரேன்…நான் பாட்டுக்கு என் பேரன் கெளதமோட பேசிண்டு வந்துக்கறேன்,..

இதையெல்லாம் தான் உட்கார்ந்திருந்த இடத்திலேர்ந்து ஒட்டுக் கேட்ட பிரசாத், சிரிப்பை அடக்க முடியாமல் வாயைப் பொத்திக் கொண்டு….நன்னாச் சொன்னேள் …போங்கோ.! என்றதும்…..

அவனது குரலை அடையாளம் கண்டு கொண்ட கௌரி ,அவனைத் திரும்பி ஆழமாகப் பார்த்தவள்……’அப்ப நீங்க பிரசாத் தானா…?

புன்முறுவலுடன், இப்பவும் நானே தான் பிரசாத்…..என்றவன் அங்கிள் எங்கே காணம் ….?

ஓ ……அதிசயத்தைப் பாரேன்….நான் அப்பவே நெனைச்சேன்……பார்த்தால் அசப்புல அப்படியே அந்த பிரசாத்தை உரிச்சி வெச்சிருக்காரேன்னு….. சம்சயம் சரியாச்சு….பார்த்தேளா…? இதாக்கும் கௌரி..அடையாளம் தெரியறதா? உங்களோட அம்மா சௌக்கியமா? எங்கியாக்கும் இருக்கேள் இப்போ…?  மூச்சே விடாமல் கேள்வியை அனுப்புகிறாள் சித்ரா.

ஏ…..கௌரியைக் கண்டு பிடிக்கறது கொஞ்சம் கஷ்டம் தான்…..உங்களைத் தான் நான் டக்குனு கண்டு பிடிச்சுட்டேனே……..ம்ம்ம்.ம்….அம்மாவுக்கு ஸ்ரார்த்தக் காரியம் பண்ணத் தான் கயா போயிண்ட்ருக்கேன். ரெண்டு கொல்லமாச்சு….அம்மா போய்.
நான் இப்போ அக்மார்க் அனாதையாக்கும். டௌரி கேட்க ஆளேயில்லை…..என்று மென்மையாகச் சிரித்த பிரசாத்தைப் பார்த்து கௌரி பொய்யாக முறைக்கிறாள்.

ச்சோ ச்சோ…..இவர் தவறிப் போயும் ரெண்டு கொல்லமாச்சாக்கும் . எண்டே குருவாயூரப்பா…!

தூரத்தில் ஏர் ஹோஸ்டஸ் சைகையில் பேசிக் கொண்டிருந்ததைக் கண்கள் கவனித்தாலும் மனம் முழுக்க பிரசாத் தான், சித்ராவுக்கு. ‘ரெண்டு பேரும் இப்படி வாழ்க்கையில் ஜோடியாக விடாமல் விதி இப்படி கார்த்திக் ரூபத்தில் வந்து தடுத்ததே..’

அதற்குள் ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த விமானம் டேக் ஆஃப்  எடுத்து பெருத்த சப்தத்துடன் சிறகை விரித்து எழுந்தது.

பொருட்காட்சியில் ஜெயண்ட் வீலில் மேலே ஏறுவது போல வயிற்றைப் பிடித்தபடி சிரித்துக் கொண்டாள் சித்ரா. ‘கௌரி…பஞ்சு இருக்கோ…காதை அடைக்கிறது…..சொல்லிக் கொண்டே காதுக்குள் ஒரு பந்து பஞ்சைத் திணித்துக் கொண்டாள்.

பிரசாத் கௌரியுடன் ஏதேதோ பேசிக் கொண்டே வருவது . தெரிந்தும் ஒன்றுமே காதில் விழாததால் தவித்தாள்.

கண்ணெதிரில் பெரிய திரையில் ஜி.பி.ஆர்.எஸ்ஸில் விமானம் வேகமாக ஊர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது.

பஞ்சுப் பொதியாக மேகக் கூட்டங்கள் தன்னை எங்கோ தேவ லோகத்துக்கு அழைத்துப் போவது போல உணர்ந்த சித்ராவுக்கு
உள்ளமெல்லாம் ஒரே  பரவசம்.

சிறிது நேர அழுத்தமான அமைதியில் நா வரள, இரண்டு தண்ணீர் பாட்டிலை காலி செய்தவள்….’வந்தாச்சோ…வந்தாச்சோ….’
என்று கௌரியிடம் பொறுமையிழந்து கேட்டுக் கொண்டே வந்தாள். அடிக்கடி பிரசாத்தைப் பார்த்து புன்னகை வேறு,

மேகக் கூட்டத்தை விட்டு மெல்ல மெல்ல கீழிறங்கி பூமியின் தடயங்களைப் பார்க்கப் பார்க்க இத்தனை பெரிய பூமியில் ‘நான் எங்கே..?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டவள், கீழே இருக்கும் போது எத்தனை கவலைகள்…..மேலே….பறக்கும்போது….கீழே பத்திரமாக இறங்க வேண்டுமே என்ற ஒரே ஒரு கவலை மட்டும் ….தான் என்று தனக்குள் ..என்னவெல்லாமோ எண்ணிக் கொண்டேபத்திரமாகத்  தரையிறங்கினாள் சித்ரா.

மீண்டும் ஒலிபெருக்கியில் அனௌன்ஸ்மென்ட்….!

மீண்டும் நிசப்தத்தைக் கிழிக்கும் இரைச்சல் சப்தம்….!

விமானம் தரையைத் தொட்டதற்கான அதிர்வு அறிகுறி..!

அத்தனை பேர்களின் ஒட்டுமொத்த நிம்மதிப் பெருமூச்சு.

இவையனைத்தையும் தாண்டி அடுத்த அரை மணி நேரத்தில், பெல்ட்டுகளில் வலம் வந்த தங்களது பெட்டிகளை இழுத்துக் கொண்டு தள்ளு வண்டியோடு நடந்தாள் கௌரி.  ‘கங்காருக் குட்டி ‘ போல கௌசிக். முழித்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான்.

கௌதமை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு  திண்டாடியபடி நடந்த சித்ரா…’ஏய்…கௌரி…சித்த மெதுவாத் தான் போயேன்….பிரசாத்தும் வந்துடட்டும்…..எல்லாரும் சேர்ந்து ஒரே கால்டாக்சியில் போகலாம் என்று கத்துகிறாள்.

ஐயோ….அம்மா…நீ பாட்டுக்கு வாயேன்…நாம ஹனுமான்காட் போறோம்….அவர் எங்கே போறார்னே  தெரியாது. நீ பேசாமே வா..!

அதற்குள் பிரசாத் ஓட்டமும் நடையுமாய் தன் பெட்டியை இழுத்துக் கொண்டு வந்தவன் மாமி…குழந்தையைக் கொடுங்கோ நான் தூக்கிகறேன்..என்று கை நீட்டவும்.

அதற்காகவே காத்திருந்தவள் போல சடார் என்று குழந்தையை அவனிடம் தரும்போது கௌரி முறைத்தபடி முகத்தைத் திருப்பியதைப் பார்க்கத் தவறவில்லை சித்ரா.

கடைசியில் சித்ரா சொன்னது போலவே மூன்று பேருமே ஒரு டாக்சியில் ஏறிக்கொண்டார்கள்.

வெளியில் வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. ஏசி காருக்குள்ளே கூட அனலாகப் தகித்தது. இரண்டு பக்கமும் வெட்டவெளிப் பாறைகளும் வெறும் மணற்பரப்பும் நீண்டு கொண்டே போன பாதையில் மருந்துக்குக் கூட பசுமையில்லை. அங்கங்கே டர்பன் தலைகள் சவாலாக நடந்து கொண்டிருந்தார்கள்.

ஏர்போர்ட்டிலிருந்து ஹனுமான்காட் போக எவ்வளாவாக்கும் …?

ஆயிரத்தி ஐநூறு ரூபாயாம்….பிரசாத் சொல்லும்போதே..!

அட….அநியாயமா இருக்கே….கொள்ளையடிக்கிறான்....என்றவள், பார்த்தியா…. பிரசாத் நம்ம கூட வந்தது நல்லதாப் போச்சு..ரெண்டு விதத்துல.

என்னதது…ரெண்டு விதம்…? புருவம் மட்டும் உயரப் பார்த்தாள் கௌரி.

கால்டாக்சியில் ஷாரிங்….நமக்கு வெறும் எழுநூத்தி அம்பது தான் ஆகும். இப்ப நமக்கு சேஃப்டியும் கூட….அல்லவா?

தலையில் அடித்துக் கொண்டாள் கௌரி.  பிரசாத் மனசுக்குள் சிரித்துக் கொண்டான்..இந்த அம்மாக்களே இப்படித் தான்.

ஊர் நெருங்கியதும் தெருக்கள் கூட நெருக்கியது. சர்க்கஸ் வித்தை செய்வது போல வளைந்து நெளிந்து சந்துக்களை கடந்து இதுக்கும் மேலே கார் போகாது…அதோ அங்கே சந்து போகுது பாரூ…அதே தான்மா ஹனுமான்காட்….எறங்கீக்கோ….என்றான் டிரைவர்.

காரை விட்டு இறங்கியதும் புரிந்தது அந்த சந்தின் முக்கால்வாசி பாகத்தைக் கார் அடைத்துக் கொண்டு நின்றிருப்பது புரிந்தது.

கஷ்டப்பட்டு இறங்கியதும், ஆள் உயரத்துக்கு பெரிய கொம்புகளோட பசுமாடு எதிரே வந்ததும் கதி கலங்கியது சித்ராவுக்கு.

அச்சச்சோ….மாட்டைப் பாரேன்….நான் எப்படி அந்தண்ட வருவேன்….முட்டுமோ…..அடிவயிறு பிசைந்தது அவளுக்கு. சாதாரணமாக பசுமாட்டைக் கண்டால் ‘காமதேனுவே நமோ நமஹ ‘ என்று தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்பவள், இங்கு பசுவைப் பார்த்து பதபதைத்து நிற்பதைக் காண அவளுக்கே உள்ளுக்குள் ஆச்சரியம்.

நின்ற பசுமாடு வாலைத் தூக்கி தெருவை மெழுகி கோலம் போட்டுவிட்டு நகர்ந்தது.

முகச் சுளிப்போடு கௌரி மொபைலில் தாம் வந்து சேர்ந்த விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

நாலு பக்கமும் சந்துகள், சந்துக்குள் ரிக்க்ஷா மட்டுமே செல்லமுடியும். மற்றபடி தடி தடியாக மாடுகள் சுதந்திரமாக வந்து போகும். அதன் தடங்களை விடத் தடயங்கள் அதிகம்.

கீழே பார்த்து நடக்காட்டா அவ்ளோதான்…காசிலயே கபால மோட்சம்….என்று சொல்லிச் சிரித்தாள் சித்ரா.

அதற்குள் பிரசாத் வேகமாக வந்தவன், பெட்டியைக் கொடுங்கோ..அதோ அங்க தான் மடம். இங்க இந்த வாத்தியார் தான் பொதுவா எல்லாருக்கும் பண்ணி வைக்கிறவராம். நான் பார்த்து பேசிட்டேன்…நீங்க வாங்கோ..கௌரியின் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு பிரசாத் நடக்க, கௌரி பின் தொடருகிறாள்.

பெரிய பெரிய கோவேறுக் கழுதைகள் தங்கள் முதுகில் கட்டப்பட்ட சாக்குப் பைகளின் இரு பக்கமும் செங்கல் கற்களைச் சுமந்தபடி தள்ளாடித் தடுமாறி வந்து அந்த மடத்தின் அருகே நின்றது. அங்கிருந்த ஒரு சிறுவன் அத்தனை செங்கலையும் நிமிடத்தில் காலிசெய்து கழுதையை குச்சியால் அடித்து மீண்டும் விரட்டினான்.
இதைக் கண்ட கௌரி, ச்சே…என்னம்மாயிது…காசி..! எங்க பாரு ஒரேக் குப்பையும் கூளமும், சாணியும், எச்சிலும்..இவ்ளோ கலீஜா இருக்கு…இங்கே புனிதமா? சைல்ட் லேபர்…வேற..!  போறாததுக்கு வாயில்லா ஜீவனை எப்படிக் கொடுமை படுத்தறா? பார்த்தியா? இங்கல்லாம் ப்ளூக்ராஸ் அமைப்பு என்ன பண்றது? ஊருக்குப் போனதும் சம்மந்தப் பட்டவாளுக்கு எழுதிப் போடணம்.
சும்மா வந்தமா, நம்ம காரியத்தை முடிச்சோமா..போயிண்டே இருந்தோமான்னு இருக்கணம்…காலா காலமும் இதைத் தான் இப்படித் தான் பண்ணீண்டு இருக்கா மனுஷா.காசிக்கு வந்துட்டு காசியைப் பத்தி ஏதும் பேசப்படாது. சித்ரா மூச்சிறைக்கச் சொல்லுகிறாள்.
‘ஆ அப் லௌட்டு சலேன்….
நைனு பிசாயே..
பாஹேன் பசாரே
தூஷ் கோ புகாரே
தேஷ் தேரா…”
ஆஆஆஆ ஆஆ
ஆஜாரே……யய் யய் யய் ….
ஆ…ஜா…ரே..”
அருகிலிருந்த தயிர்க் கடையில் பாடல் அலறியது.
பெரிய சில்வர் பானையில் தயிரைக் கடைந்து மண் சட்டியில் லஸ்ஸியாக ஊற்றிக் கொண்டிருந்தவன்..மாஜி…ஆயியே...லஸ்ஸி பீலோ….என்று அழைத்தான்.
‘நாட் நௌ’ ….என்று சித்ரா பதில் சொல்லிக் கொண்டே காஞ்சி காமகோடி மடத்துக்குள் நுழைகிறாள்.
கௌரி…இந்தாங்கோ ரூம் சாவி…உங்களுக்கு கீழயே ரூம் கிடைச்சாச்சு…நான் ஒரு மாசம் முன்னாடியே புக் பண்ணீட்டேன்.
தாங்க்ஸ்….என்றவள், எங்களுக்கு செகண்ட் ஃப்ளோர்…என்றபடி அவளது சாவியை பிரசாத்திடம் கொடுக்கவும், வாங்கிக் கொண்டு சிட்டாக மறைந்து போனான்.
தங்கமான பிள்ளைடி பிரசாத்.நமக்கு ரெண்டாவது மாடியா…? நல்லவேளை…எந்த பகவான் புண்ணியமோ…? உங்கப்பா தான் தெய்வமா வந்து இவனை இந்த நேரத்தில் நமக்காக அனுப்பி வெச்சிருக்கார்.
அம்மா….நீ வேற  எதுக்கோ அடி போடறே……ஒண்ணும் பலிக்காது. குழந்தைகளுக்குப் பசிக்கும். சீக்கிரமாப் பாலை வாங்கி ரெடி பண்ணணம். ரெண்டும் இப்ப எழுந்து காசியைக் கூட்டும்.
இதோ…பக்கத்துலயே பால் கடை…வெளியே ஓடுகிறாள் சித்ரா.
கௌரி…கௌரி….உங்களுக்கு எந்த உதவி வேணும்னாலும் தயங்காமல் எனக்கு ஃபோன் செய்யுங்கோ. என்றவன், இதோ…நான் ஃ ப்ளைட்டில் சொன்னேனே….உங்கப்பா கடைசியா எனக்கு எழுதின லெட்டர் எங்கிட்ட இருக்குன்னு..அது என்று நீட்டியதும்.
அட…என்று வாங்கிக் கொண்டவள், வொய் ஹியர் ? என்று ஆச்சரியத்துடன் புருவம் உயர்த்தினாள் .
ம்ம்ம்….அலஹாபாத்துல கரைச்சுடலாம்னு தான்…கொண்டு வந்தேன். ஆனா இனி உங்ககிட்டயே இருக்கட்டும். இது என்னோட விசிடிங் கார்ட். ஒ கே ஸீ யூ…டேக் கேர்..என்று மறைந்தான்.
அவன் சென்றதும், அவசரமாக கடிதத்தைப் பிரித்ததும்,
அப்பாவின் மணியான கையெழுத்து…! அப்படியே அப்பாவை நேரில் பார்ப்பது போல…ஒரு நிமிடம் நெஞ்சோடு வைத்து அழுத்திக் கொண்டாள் . அப்பா….நடக்கறதெல்லாம் நிஜமா..? நம்பவே முடியலையே.
கடிதத்தில் முதலில் எழுதியிருந்த தேதியைப் பார்த்து உறைந்து போனவளாய் தொப்பென்று தரையில் அப்படியே உட்கார்ந்தாள்.
அப்போ…..அப்பா கடைசியா எழுதிய கடிதம் இது தான். இவருக்குத் தான். அன்னைக்கு இதை எழுதி போச்ட்பாக்சில் போட்டதுக்கு அப்பறமாத் தான் ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கு.
அந்த நாள் கண்முன்னே வந்து போனது.
கடிதத்தை முழுமையாகப் படித்தாள். கண்களில் நீர் துளித்தது.
கௌசிக்கும் , கௌதமும் சிணுங்கியபடி நெளிய ஆரம்பித்தார்கள்.
கௌரியால் முடியாததை அவர்கள் செய்தார்கள். அந்த அறை முழுதும் அலறல் சத்தம்.
(தொடரும் )
Series Navigationவானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்நிறையற்ற ஒளித்திரள்களை [Photons] இணைத்து மூலக்கூறு விளைந்து முதன் முதல் புது நிலைப் பிண்டம் கண்டுபிடிப்பு
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *