(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
27. நோபல் பரிசை வாங்க மறுத்த ஏழை……
வாங்க…வாங்க….என்ன முகத்துல ஒருகளையோட வர்ரீங்க..என்னங்க முகத்துல புன்னகை தவழுது….என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா……? என்னது ஒண்ணுமில்லையா…..ஒண்ணுமில்லை அப்படீங்கறதுக்காகவா முகத்துல இப்படியொரு புன்னகை….பரவாயில்லை….பரவாயி
ஆமா……….. நான் போனவாரம் ஒங்ககிட்டே கேட்ட கேள்விக்கு நீங்க பதிலே சொல்லாம இருக்கீங்க…..பதில் தெரிஞ்சா சொல்லுங்க….அடடா…ரொம்பச் சரியான பதிலுங்க… தன்னைத் தேடிவந்த நோபல் பரிசை வேணாம்னு மறுத்த அறிவுலக மேதை ஜார்ஜ் பெர்னாட்ஷா தாங்க… எல்லாரும் நமக்கு ஏதாவது பரிசு கிடைக்காதா அப்படீன்னு அலையிற காலத்துல எனக்கு எந்தப் பரிசும் வேணாம்னு மறுக்கறதுக்கு எவ்வளவு பெரிய மனசு வேணும். அப்படிப்பட்ட மனசு அறிஞர் பெர்னாட் ஷாகிட்ட இருந்தது.
ஜார்ஜ் பெர்னாட்ஷா அவர்கள் 1856-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் நாள் அயர்லாந்தின் டப்லின் (Dublin) நகரில் பிறந்தார். அவருடைய குடும்பத்தில் பெர்னாட் ஷா மூன்றாவது பிள்ளை. அவருக்கு இரண்டு சகோதரிகள். அவரது தந்தை பெயர் ஜார்ஜ் கார் ஷா (George Carr Shaw). அவர் அரசு அலுவலகத்தில் வேலை பார்த்தார். ஆனாலும் தனக்குக் கிடைத்த பணத்தை அவர் குடித்தே அழித்தார். அதனால் அவர் குடியால் தள்ளாட, அவரது குடும்பமும் வறுமையில் தள்ளாடியது; குடும்பம் வறுமைவாய்ப்பட்டது.
வீட்டு வாடகையைக் கொடுக்கக்கூட பெர்னாட்ஷா குடும்பத்தாரிடம் பணமில்லை. அதனால் அவரது குடும்பம் கடற்கரையோரம் இருந்த ஓர் ஓட்டைப்படகில்கூட வசிக்க நேர்ந்தது. குடும்பத்தின் வறுமைக்குத் தந்தையின் தனது தந்தையின் குடிப்பழக்கம்தான் காரணம் என்பதை இளம் வயதிலேயே பெர்னாட் ஷா உணர்ந்தார். அதனால் பெர்னாட் ஷா எந்தச்சூழலிலும், நிலையிலும் மதுவைத் தொடுவதில்லை என்று உறுதி பூண்டார். அவரது தந்தை 1885-ஆம் ஆண்டு இறந்து போனபோது அவரது இறுதிச் சடங்கில்கூட பெர்னாட் ஷாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை. அப்ப எந்த அளவுக்கு அவர்கள் வறுமையினாலயும் குடியாலயும் பாதிக்கப்பட்டிருந்தாங்கன்னு பாருங்க. குடி குடும்பத்தை நடுத்தெருவுல நிப்பாட்டும் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு தெளிவுறுத்துதுல்ல.
கல்வியும் வாசிப்புப் பழக்கமும்
பெர்னாட் ஷா அவர்கள் குடும்ப வறுமையின் காரணமாக அவரது பத்தாவது வயதில்தான் முதன் முதலில் பள்ளிக்கூடத்தில் அடியெடுத்து வைத்தார். அவரால சுமார் நான்கு ஆண்டுகள்தான் பள்ளியில படிக்க முடிந்தது. அவருக்குப் புத்தகங்களைப் படிக்கிறதுன்னா கொள்ளை ஆசை. அதிலும் நல்ல புத்தகங்கைச் சொந்தமா வாங்கிப் படிக்கிறதுன்னா அவருக்கும் ரொம்ப விருப்பம்.
பெர்னாட் ஷா பத்து வயதுக்குள் பைபிள் முதல் ஷேக்ஸ்பியரின் நாடகம் வரை நிறைய புத்தகங்களை வாசித்து முடித்திருந்தார். ஷாவிற்கு விளையாட்டிலெல்லாம் ஆர்வம் இல்லை. அவருக்கு அதிக கூச்ச சுபாவம் இருந்ததனால அவரு யாரோடயும் சேர்ந்து விளையாடியதே இல்லை. இதையெல்லாம் பாத்தவங்க அவரு உலகப்புகழ் பெறுவார்னு எதிர்பார்த்திருக்கவே முடியாது.
எழுத்துப்பணி
பதினைந்தாவது வயதில் ஆபிஸ் பையனாக ஓரலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார். எல்லாம் வறுமையின் கொடுமையை விரட்டவே அவர் அலுவலகப் பணிக்குப் போனார். பெர்னாட்ஷா அவர்கள் தமது இருபதாவது வயதில் இங்கிலாந்துக்கு வந்தார். அவர் அங்கு வந்தவுடன் நிறைய எழுதத் தொடங்கினார். அதிகமாக எழுதி அதனை மிகுந்த ஆர்வத்துடன் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவார். ஆனால் அனுப்பபட்ட வேகத்திலேயே அவை பெர்னாட்ஷாவிற்குத் திரும்பி வந்துவிடும்.
ஆனாலும் பெர்னாட்ஷா மீண்டும் மீண்டும் எழுதிப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிக் கொண்டே இருப்பார். அவரைப் போன்று எந்த சராசரி எழுத்தாளனும் அவ்வாறு எழுதி அனுப்பி இருக்க மாட்டார். சோர்ந்துதான் போயிருப்பார். பெர்னாட்ஷாவினுடைய எழுதியவற்றைப் பதிப்பிக்க எந்தப் பத்திரிக்கையோ, பதிப்பாளரோ முன்வரவில்லை. ஆனால் பெர்னாட்ஷாவிற்கு தன்னுடைய எழுத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. பெர்னாட் ஷா தொடர்ந்து நிறைய எழுதினார். எழுதுவதோடு மட்டுமல்லாது அவற்றைத் தொடர்ந்து பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார். “முயற்சி திருவினையாக்கும்” என்பர். பெர்னாட்ஷாவின் முயற்சி வீண் போகவில்லை. பெர்னாட்ஷாவின் எழுத்துக்களைப் பத்திரிக்கைகள் வெளியிட்டன. இங்க கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய கவிதைதான் நினைவுக்கு வருது.
“விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை…..
வாழாத வாழ்க்கை என்று எதுவுமில்லை…”
இந்தக் கவிதை பெர்னாட் ஷாவின் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமாக இருக்குதுங்க. அவரது முயற்சி அவரது வாழ்க்கையில ஒளியைப் பாய்ச்சியது. பெர்னாட் ஷா தன்னுடைய எழுத்தையே துணையாகக் கொண்டு வாழ்க்கைப் பாதையில பயணித்தார்.
இசைவிமர்சகர், நாடக ஆசிரியர்
பெர்னாட்ஷா இளமையில் தன் தாயிடமிருந்து இசைக் கற்றுக்கொண்டதனால் பிற்காலத்தில் இசை விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார். பெர்னாட்ஷா கலைஞர்களின் இசை குறித்து விமர்சனம் எழுதப்போகிறார் என்றால் இசைக் கலைஞர்களுக்கு நடுக்கம் எடுக்கும். அந்தஅளவிற்கு பெர்னாட்ஷாவின் இசை விமர்சனங்கள் இருந்தன.
பின்னர் பெர்னாட்ஷா பத்திரிக்கைகளுக்கு நாடக விமர்சனங்களை எழுதத் தொடங்கினார். அப்போதுதான் பெர்னாட்ஷாவிற்கு விமர்சனம் எழுதும் நாமே ஏன் நாடகங்கள் எழுதக்கூடாது? என்ற எண்ணம் மனதில் உதயமானது. இசை விமர்சகர், நாடக விமர்சகர் என்றிருந்த பெர்னாட்ஷா நாடக ஆசிரியரானார். 1892 -ஆம் ஆண்டு தனது 36–வது வயதில் முதல் நாடகமான “விதவைகளின் இல்லங்கள்” என்ற நாடகத்தை பெர்னாட்ஷா எழுதினார்.
அதனைத் தொடர்ந்து, “Candida, The Devil’s Disciple, Arms and the Man, Saint Joan, Pygmalion, The Apple Cart, The Doctor’s Dilemma” போன்ற பல நாடகங்களை பெர்னாட் ஷா எழுதினார். இந்நாடகங்கள் அவருக்கு பெரும் புகழ் சேர்த்தன. பெர்னாட்ஷாவின் பல படைப்புகள் நாடக மேடைகளில் அரங்கேறின. நாடகங்களில் பெர்னாட் ஷா கூறிய கருத்துகளைக் கேட்ட இங்கிலாந்தின் இலக்கிய சமூகம் அவரை “இங்கிலாந்தின் பிளேட்டோ” என்று அழைத்தது. மிகச் சிறந்த சமுதாய முன்னேற்றக் கருத்துக்களை பெர்னாட் ஷா தன் நாடகததின் வாயிலாக மக்களுக்கு வழங்கினார்.
தோல்வியுற்ற வாழ்க்கைத் துவளாத உள்ளம்
அறிவுலக மேதையாகத் திகழ்ந்த பெர்னாட் ஷாவின் இல்லற வாழ்க்கை சொல்லும்டியாக இல்லை. பெர்னாட்ஷா தனது 42-வது வயதில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது திருமண வாழ்வு தோல்வியடைந்தது. மேலும் குழந்தைகளும் அவருக்கு இல்லை. ஷாவின் வாழ்க்கையில் ஒருபுறம் இன்பம்; மறுபுறம் ஆற்றொனாத் துயரம். இதுதான் உலக இயல்பு. இல்வாழ்க்கை இப்டியெல்லாம் அமைந்தாலும்கூட பெர்னாட்ஷா துவண்டு போய்விடவில்லை.
“நீ வெளிச்சத்தில் நடந்தால்
உலகமே உன்னைப் பின்தொடரும்……
ஆனால் நீ……
இருட்டில் நடந்தால்
உன் நிழல் கூட
உன்னைப் பின்தொடராது…..”
என்பதற்கேற்ப பெர்னாட் ஷா தோல்வியுற்ற மண வாழ்க்கையை நினைத்துக் கொண்டே வாழ்க்கையைத் தொலைத்துவிடாது, அதனை அப்படியே விட்டுவிட்டு வாழ்க்கைப் பாதையில் முன்னேறினார்.
எழுத்தால் உயர்ந்த மேதை
பெர்னாட் ஷா அவர்கள் நிறைய எழுதினார். அவரது எழுத்துக்களை முதலில் நிராகரித்த பத்திரிக்கைகள் வாழ்க்கையில் அவர் சாதித்த பின்னர் அவருடைய படைப்புகளுக்கு ஒரு சொல்லுக்கு இவ்வுளவு என்று கணக்கிட்டு சன்மானத் தொகை வழங்கின. இது வரலாற்று உண்மைங்க. அதுமட்டுமல்ல பெர்னாட் ஷா என்ன பேசினாலும், செய்தாலும் அது பத்திரிகைகளில் செய்திகளாக வெளியானது. பெர்னாட் ஷா அவர்கள் ஐந்து நாவல்களையும் இரு சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டார். இவையெல்லாம் அவ்வளவு சொல்லும்படியாக அமையவில்லை. இவரது நாடகங்களே இவருக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்தன.
பெர்னாட்ஷா பல்வேறுவிதமான விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவை ஒவ்வொன்றும் உயர்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்துபவனவாக அமைந்துள்ளன. அவருடைய சிந்தனை ஆற்றலைக் கண்டு உலகமே வியந்து அவரைப் போற்றியது.
கேலியும், நையாண்டியும் செய்யும் துணிச்சல்
பெர்னாட்ஷா தன் எழுத்தில் கேலி, நையாண்டி, நகைச்சுவை ஆகியவற்றை சரமாரியாக கலந்து கொடுத்தார். எழுத்தில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் அவர் நகைச்சுவையையும், நையாண்டியையும் சரளமாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது சிறப்பிற்குரியது. அதற்கு எடுத்துக்காட்டாக பெர்னாட்ஷாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளைக் கூறலாம்.
ஒருமுறை அவரது நண்பரும், சக எழுத்தாளருமான ஹெச்.டி வெல்ஸ் என்பவர் ஒல்லியான தோற்றமுடைய பெர்னாட் ஷாவைப் பார்த்து, “நம் நாட்டிற்கு வருபவர்கள் உம்மைப் பார்த்தால் இங்கிலாந்தில் பஞ்சம் வந்திருப்பதாக எண்ணுவார்கள்” என்று கிண்டலடித்தார். அதனைக் கேட்ட ஒருமுறை அவரது நண்பரும், சக எழுத்தாளருமான ஹெச்.டி வெல்ஸ் அதற்கு பெர்னாட்ஷா, “அந்தப் பஞ்சத்திற்கு யார் காரணம் என்பதும் உம்மைப் பார்த்தால் அவர்களுக்குப் புரியும்” என்று கூறினார். காரணம் ஹெச்.டி.வெல்ஸ் பெர்னாட் ஷாவை விட உடல் பருமனானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பெர்னாட் ஷாவை சந்தித்த ஓர் அழகான நடிகை ஒருவர் பெர்னாட் ஷாவைப் பார்த்து, “நீங்களோ பெரிய அறிவாளி, நானோ சிறந்த அழகி. அவ்வாறு இருக்கையில் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் என் அழகும், உங்கள் அறிவும் கொண்ட குழந்தை நமக்கு பிறக்குமல்லவா?” என்று கேட்டார். அதற்குப் பெர்னாட் ஷா அவர்கள் புன்னகைத்துக் கொண்டே, “அந்தக் குழந்தை உங்களுடைய அறிவையும் என்னுடைய அழகையும் கொண்டு பிறந்து விட்டால் என்ன செய்வது?” என்று பதிலளித்தார். அதனைக் கேட்ட அந்த நடிகை வாயடைத்துப் போய்விட்டார்.
பெர்னாட் ஷாவுக்கு மிகப்பெரிய சபைகளில்கூட தைரியமாக கேலியும், நையாண்டியும் செய்யும் துணிச்சல் இருந்தது. ஒருமுறை பெர்னாட் ஷா அமெரிக்கா சென்றிருந்தபோது மக்களவைக் கூட்டத்தில் பேச அவருக்கு அழைப்பு வந்தது. மக்களவையில் பேசத் தொடங்கிய பெர்னாட் ஷா, மக்களவை உறுப்பினர்களைப் பார்த்து, “இங்கிருப்பவர்களில் பாதி பேர் முட்டாள்கள்” என்று கூறினார். மக்களவை உறுப்பினர்கள் கோபமுற்றுப் பெர்னாட் ஷாவைப் பார்த்து அவர் கூறிய கருத்தை திரும்பப் பெறுமாறு கூச்சலிட்டனர். மற்றவர்களாக இருந்திருந்தால் அதனைக் கண்டு நிலைகுலைந்து போயிருப்பர். ஆனால் பெர்னாட் ஷா பதற்றமடையாமல் அமைதியாக அவையினரைப் பார்த்து, “சரி இங்கே இருப்பவர்களில் பாதி பேர் புத்திசாலிகள்” என்றார். அதனைக் கேட்ட அவையினர் கூச்சலிடுவதைத் கைவிட்டு அமைதியாக இருந்தனர்.
அவரது பேச்சுத்திறமையைப் பார்த்து அந்த அவை வியந்தது. அவர் எழுத்துத் திறனைப் பார்த்து உலகமே வியந்தது. ஒரு சமயம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.
அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.
பெர்னார்ட் ஷா அவரை வரவேற்று, “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்“ என்றார்.
அதற்கு நண்பர், “உருளைக்கிழங்கா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை“ என்றார்.
பெர்னார்ட் ஷா சிரித்தபடி ஓர் உருளைக்கிழங்கை எடுத்தார். அப்போது அது தவறி கீழே விழுந்து உருண்டு ஓடியது.
அப்பொழுது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர் கழுதை அந்த உருளைக்கிழங்கை அருகில் சென்று முகர்ந்து பார்த்தது. பிறகு சாப்பிடாமல் சென்றுவிட்டது.
அதைக்கண்ட பெர்னார்ட் ஷாவின் நண்பர் கட கட… வென்று சிரித்துவிட்டார்.
பிறகு அவர், “பார்த்தீர்களா பெர்னார்ட் ஷா… கழுதை கூட உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை!“ என்றார்.
அவரை ஓரக்கண்ணால் பார்த்த பெர்னார்ட் ஷா, “உண்மைதான். கழுதைகள் எல்லாம் உருளைக்கிழங்கு சாப்பிடாது தான்“. என்று நகைச்சுவையாகப் பதிலளித்தார். அதைக் கேட்டதும் நண்பரின் முகம் சுருங்கிவிட்டது.
ஒருமுறை பெர்னாட்ஷாவைப் பார்க்க நவநாகரிகப் பெண் ஒருத்தி, வந்திருந்தாள். அப்போது அவள் பெர்னாட் ஷாவிடம், “மிஸ்டர் ஷா என்னைப் பார்த்தால் எனக்கு எத்தனை வயதிருக்கும் என்று உங்களுக்குத் தோன்றுகிறது?” என்று கேட்டார்.
ஷா ஒரு முறை அந்த பெண்ணை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு அவர் புன்னகைப் பூத்தவாறு, அந்தப் பெண்ணிடம், “அம்மா, உங்களின் பல்லைப் பார்த்தால், பதினெட்டு வயது இருக்குமென்று தெரிகிறது. உங்களின் தலைமுடியைப் பார்த்தால், பத்தொன்பது வயது இருக்கலாமோ என்று தெரிகிறது. நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால், பதினான்கு வயது பெண் என்று நினைக்கத் தோன்றுகிறது,” என்றார்.
அதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த அந்தப் பெண் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மீண்டும் பெர்னாட் ஷாவிடம், “என் வயது என்ன வென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?’ எனக் கேட்டாள்.
அதற்குப் பெர்னாட் ஷா, சிறிதும் தாமதிக்காமல், “சரி, சரி, 18,19,14 இம்மூன்று எண்களையும் கூட்டிப்பாருங்கள் அம்மா, 51 வரும். அதுதான் உங்கள் வயது” என்று குறும்பாகச் சொன்னார். கேள்வி கேட்ட பெண்ணிற்கு ஏன் கேட்டோம் என்றாயிற்று.
குடியும் தாடியும்
பெர்னாட்ஷா, ஒழுக்கமாக வாழ்ந்தவர். மது அருந்தாமல் இருந்ததோடு மதுவை வெறுத்தவர். தன் நண்பர்கள் மது அருந்துகின்றபோது அவர்களிடம் அப்பழக்கத்தை விடுமாறு கூறுவார். அவரைப் பார்த்து அவரது நண்பர்களுள் ஒருவர், “பெர்னாட்ஷா அவர்களே நீங்கள் ஏன் மது அருந்துவதில்லை?” என்று கேட்டார் அதற்குப் பெர்னாட் ஷா, “என் குடும்பத்திலிருந்த முன்னோர், என் பங்கையும் சேர்த்துத் தாங்களே குடித்துவிட்டார்கள். எனவே எனக்கு பங்கு இல்லாமல் போய்விட்டது…” என்று நகைச்சுவையுடன் பதிலளித்தார். மேலைநாடுகளில் குடிப்பது தவறல்ல. அங்குள்ளவர்கள் பெரும்பாலும் மது அருந்தும் பழக்கமுள்ளவர். ஆனால் எந்தச் சூழலிலும் பெர்னாட் ஷா அவர்கள் மதுவை நாடியதில்லை. மனக் கட்டுப்பாட்டுடன் ஒழுக்க சீலராக வாழ்ந்தார்.
இறக்கும் வரையில் ஜார்ஜ் பெர்னாட்ஷா தாடி வைத்திருந்தார். ஒரு முறை செய்தியாளர் ஒருவர் பெர்னாட்ஷாவை அணுகி “எதற்காக நீங்கள் தாடி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? தாடி வைத்துக்கொள்வதால் லாபம் உண்டு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்குப் பெர்னாட் ஷா, “சந்தேகமில்லாமல் லாபம்தான்” என்றார். “எப்படி” என்று கேட்டார் செய்தியாளர்.
அதற்கு பெர்னாட்ஷா “நான் சவரம் செய்து கொள்வதற்காகச் செலவிட்டிருக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் ஒரு நாடகமாவது எழுதி இருப்பேன் இல்லையா?” என்றார். அதைக் கேட்ட செய்தியாளர் வியந்து போனார்.
பட்டம் பரிசு விருதுகளை வெறுத்த அதிசயமனிதர்
ஷேக்ஸ்பியருக்கு அடுத்து ஆங்கில இலக்கிய உலகம் சந்தித்திருக்கும் மிகச் சிறந்த நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாதான். அவருடைய நாடகங்கள் சமூக, அரசியல், சமயப் பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசின. சமூக அவலங்களை ஒட்டுமொத்தமாகத் தோலுரித்துக் காட்டின. திட்டமிடப்பட்ட வகுப்புவாதமற்ற சமூகத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட அவர் புரட்சிகரமான கருத்துகளை எவருக்கும் அஞ்சாமல் எழுதினார். அதனாலேயே அவரிடம் தலைதூக்கிய தற்பெருமையையும், ஆணவத்தையும் இலக்கிய உலகம் பெரிதுபடுத்தவில்லை.
நோபல் குழு 1925-ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பெர்னாட் ஷாவிற்கு வழங்கப்படுவதாக அறிவித்தது. இது உலகில் மிகச் சிறந்த பரிசாகும். தமக்கு வந்த பரிசை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதற்குப் பதில் பெர்னாட் ஷா வேண்டாம் என்று மறுத்துவிட்டார். மறுத்ததோடு மட்டுமல்லாது, நோபல் பரிசுக்குழுவைப் பார்த்து, “இந்த வருடம் நான் ஒன்றும் எழுதவில்லையே? எனக்கு ஏன் இந்த பரிசு?” என்று கேள்வி கேட்டார். அதற்கு நோபல் குழு, “நீங்கள் ஏற்கனவே எழுதியதற்காக இந்த பரிசு தங்களுக்கு வழங்கப்படுகின்றது” என்று கூறியது. அதற்கு பெர்னாட்ஷா, “ஒருவன் நடுக்கடலில் தத்தளித்துச் சிரமப்பட்டுக் கரை சேர்ந்த பிறகு அவனுக்கு காற்றடித்த ரப்பர் ட்யூபைக் கொடுப்பது போல் இந்தப் பரிசு இருக்கிறது” என்று கிண்டலாக பேசினார். பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள மறுத்ததோடு மட்டுமல்லாமல், பரிசுத் தொகை பெர்னாட் ஷாவின் வீடு தேடி வந்தபோது அதனை அப்படியே இலக்கியப் பணிகளுக்காகத் திரும்பக் கொடுத்து விட்டார். எந்தப் பரிசுக்காகவும் எந்த விருதுக்காகவும் பெர்னாட்ஷா அவர்கள் ஏங்க நிற்கவில்லை. எதிலும் பற்றற்ற நிலையிலேயே பெர்னாட்ஷா வாழ்ந்தார். அதனால்தான் அவரால் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் தனது கருத்துக்களை அஞ்சாது எடுத்துரைக்க முடிந்தது.
பெர்னாட் ஷா நோபல் பரிசை மட்டும் வெறுக்கவில்லை. கெளரவ பட்டம், பதக்கம், பாராட்டு விழா, புகழுரை போன்றவற்றையும் அறவே வெறுத்தார். அவருக்கு ‘Order of the Merit’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது, “அந்த விருதை எனக்கு நானே கொடுத்துக் கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் இப்போது அது எனக்கு தேவையில்லை” என்று கூறினார் பெர்னாட் ஷா. என்றும் எதற்கும் தலைதாழ்த்தாத தன்மானம் மிக்க அறிவுலக மேதையாக பெர்னாட் ஷா வாழ்ந்தார்.
அறிவுலக மேதையின் மறைவு
பெர்னாட் ஷா வாழ்வில் தனது கடைசி நிமிடம் வரை படிப்பதையும், எழுதுவதையும் கைவிடவில்லை. நாள்தோறும் குறைந்தது ஐந்து பக்கங்களாவது எழுதும் பழக்கம் பெர்னாட்ஷாவிடம் இருந்தது. பெர்னாட் ஷா நல்ல நகைச்சுவை உணர்வுடையவராகத் திகழ்ந்தார். அவர் எப்போதும் சைவ உணவையே விரும்பி உண்டார். பெர்னாட் ஷாவிடம் புகைப்பிடிக்கும் பழக்கமோ, மதுப்பழக்கமோ அறவே இல்லை. அதனால் தான் அவர் நீண்டகாலம் நோயின்றி உடல்நலத்துடன் வாழ்ந்தார். ஆங்கில இலக்கிய உலகின் பெருமதிப்பைப் பெற்றிருந்த அறிவுலக மேதை பெர்னாட் ஷா அவர்கள் 1950-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் நாள் முதுமையின் காரணமாகத் தமது 94-ஆவது வயதில் மறைந்தார். அறிவுலக மேதை மறைந்தாலும் அவர் புகழ் மறையவில்லை. அறிவில் ஆதவனாகத் திகழ்ந்த பெர்னாட்ஷா அவர்கள் என்றென்றும் ஆங்கில இலக்கிய உலகில் விடிவெள்ளியாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்.
பாத்துக்கிட்டீங்களா…வாழ்க்கை
“நாக்கைப் போன்று மென்மையாய் இருங்கள். நீண்ட நாள் வாழ்வீர்கள்” என்று கூறியவர் யாரு தெரியுங்களா…?அவர் ஒரு தத்துவ ஞானிங்க…இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர்..பெரிய வரலாற்று ஆசிரியர்…சீன நாட்டை நினைத்தால் நினைவுக்கு வரக்கூடிய தத்துவஞானி…அவருடைய கருத்துக்களைச் சீனர்கள் தெய்வ வாக்காகக் கருதுகிறார்கள்…தத்துவமேதையா
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 54வது நினைவு நாள் நிகழ்
- எண்பதுகளில் தமிழ் இலக்கியம் (2)
- ஜாக்கி சான் – 10. சுட்டிப் பையன்
- தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்
- தமிழ் விக்கியூடகங்கள்
- தமிழ் விக்கிப்பீடியாவுக்கு 10 வயது
- தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு
- நீங்காத நினைவுகள் – 18
- திண்ணையின் இலக்கியத் தடம் -3
- திருவரங்கக் கலம்பகத்தில் மறம்
- தாகூரின் கீதப் பாமாலை – 84 புயல் அடித்த இரவில் .. !
- புகழ் பெற்ற ஏழைகள் -27
- தண்ணீரின் தாகம் !
- ஊழல் ‘ஆட்டம்’- ஒரு பொருளாதாரக் கண்ணோட்டம்
- மணல்வெளி
- காய்நெல் அறுத்த வெண்புலம்
- பொய் சொல்லும் இதயம்
- மயிலிறகு…!
- இதயம் துடிக்கும்
- கவிதைகள்
- வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 21
- நிறையற்ற ஒளித்திரள்களை [Photons] இணைத்து மூலக்கூறு விளைந்து முதன் முதல் புது நிலைப் பிண்டம் கண்டுபிடிப்பு
- கவிதைகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-4 – ஸ்ரீ ராதை
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 30
- சீதாயணம் தொடர்ப் படக்கதை -1
- மரணவெளியில் உலாவரும் கதைகள்
- ~ சீதாயணம் ~ (முழு நாடகம்)
- இதய வலி
- இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும்.
- Grieving and Healing Through Theatre Canadian-Tamil artistes present 16th Festival of Theatre and Dance
- தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம் – 2