குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 30

This entry is part 26 of 33 in the series 6 அக்டோபர் 2013

ராதிகா தன் விழிகளை அகற்றிக்கொள்ளாது தீனதயாளனை முறைத்துப் பார்த்தபடி இருந்தாள்.  “அம்மா கிட்ட என்ன குறையை அப்பா கண்டீங்க – இன்னொரு பொம்பளையைத் தேடி ஓடுற அளவுக்கு? ஒரு பொண்ணு தன்னைப் பெத்த தகப்பன் கிட்ட இது மாதிரி ஒரு கேள்வியைக் கேக்குறது ரொம்ப நெருடலான விஷயந்தான்.  ஆனா, கேக்காம இருக்க முடியல்லேப்பா.  ஏம்ப்பா? அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்தா அவங்க மனசு என்ன பாடு படும்னு ஒரு நிமிஷமாச்சும் நினைச்சுப் பாத்திருப்பீங்களாப்பா?”

தீனதயாளனின் தலை குனிந்தே இருந்தது.

“இல்லேப்பா.  என் கேள்வியே தப்பு! அம்மாவுக்கு இது தெரிஞ்சா அவங்க மனசு என்ன பாடு படும்கிறது உங்களுக்கு நல்லாவே தெரியும்!  அதனாலதான் – அம்மாவுக்கு அந்த அவஸ்தை கூடாதுன்னுதான் – இது நாள் வரைக்கும் அதை அவங்ககிட்டேர்ந்து சாமர்த்தியமா மறைச்சு வந்திருக்கீங்க. நீங்க தப்பான வழியிலெ போகல்லேன்னு நியாயப்படுத்துறதுக்கு நீங்க பத்துக் காரணம் சொல்லுவீங்க.  ஆனா, அதே பத்துக் காரணங்களுக்காகக் கல்யாணம் ஆன ஒரு பொண்ணு இன்னொருத்தனோட தொடர்பு வெச்சிண்டா அது நியாயம்னு ஏத்துக்குவீங்களாப்பா? மாட்டீங்க! ஏன்னா, அதுதான் உங்க நியாயம். உங்க சட்டம். சிந்தியா மேல உங்களுக்கு வந்திருக்குற ஈடுபாட்டுக்குப் பேரு ‘லவ்’னு சொன்னீங்கன்னா, அதை என்னால ஏத்துக்க முடியாது!  ‘லவ்’ங்கிற வார்த்தைக்குச் சுருக்கமான அர்த்தம் என்னப்பா? ‘அன்பு’ தானே!  அந்த அன்பு உடம்புகளோட உறவில முடியறதுதான் சம்பந்தப்பட்டவங்களுக்கு சந்தோஷம் குடுக்கக் கூடியதுன்னா, அதுக்குப் பேரு லவ் இல்லேப்பா. அது என்னன்னு உங்களுக்கே தெரியும்!  … இதே சிந்தியா நம்ம வீட்டிலெ வேலை செய்யிற பாஞ்சாலி மாதிரி, கறுப்பா, குண்டா, வாய்க்கு வெளியே துருத்திக்கிட்டு இருக்கிற பல்லும் பவிசுமா இருந்தா உங்களுக்கு அவங்க மேல்  ‘லவ்’ங்கிறது வந்திருக்குமாப்பா!   இது மாதிரி யெல்லாம் பேசி உங்களைத் தலைகுனிய வைக்கணும்கிறது என்னோட நோக்கமில்லே.  ஆனா அம்மா எவ்வளவு நல்லவங்கன்றதையும், அவங்க உங்களை எந்த அளவுக்கு நம்புறாங்கன்றதையும் நினைக்கிறப்பல்லாம் எனக்கு நெஞ்சு கொதிக்குதுப்பா….”
தீனதயாளன் வாயே திறக்கவில்லை. தலையை நிமிர்த்தவும் இல்லை.

“வாயைத் தொறந்து ஏதாச்சும் பேசுங்கப்பா!  நீங்க செஞ்சுக்கிட்டிருக்குற காரியம் சரியாப்பா?”
“ததத… தப்புதாம்மா.  தயவு செஞ்சு அம்மா கிட்ட சொல்லிடாதேம்மா.”
“இது வரையில சொன்னதில்லே.  இனி நானா என்னைக்கும் சொல்லவே மாட்டேன்.  ஏன்னா, அவங்களோட பொய்யான சந்தோஷக் கோட்டையை இடிச்சுத் தரை மட்டமாக்க நான் கனவில கூட நினைக்க மாட்டேன்.  அவங்களைப் பொறுத்த வரையில, நீங்க நல்லவரு, கடமையுணர்ச்சி யுள்ளவரு,  நேர்மையானவரு. எல்லாத்துக்கும் மேல அன்பான புருஷன்.  அந்த அவங்க நம்பிக்கையை நான் ஏம்ப்பா சிதைக்கணும்?  …  ஆம்பளைங்கள்ள சிலர் செய்யிற இந்த அக்கிரமத்தை என்னால ஜீரணிக்கவே முடியல்லேப்பா. அம்மா மாதிரி ஒரு பொண்டாட்டியை ஒதுக்கிட்டு இப்படிச் சின்ன வீடு வெச்சுக்கிறாங்களே!”

ராதிகா பேசுவதை நிறுத்தினாள். அதன் பின் அங்கே சில நொடிகளுக்கு  இறுக்கமான அமைதி நிலவியது. குளியலறைக் கதவு திறக்கப்பட்ட ஓசை கேட்க, ராதிகா அப்பால் நகர்ந்தாள்..

… மகள் கேட்ட குத்தலான கேள்விகளால தீனதயாளன் நிலைகுலைந்து போயிருந்தார். தலையைத் துவட்டியவாறு குளியலறயிலிருந்து வெளிப்பட்ட தனலட்சுமி வெறித்த பார்வையுடன் உட்கார்ந்துகொண்டிருந்த தீனதயாளனைக் கண்டு வருந்தி அவருக்கு முன் வந்து நின்றாள். மகளின் காதல் முறிவுதான் அவரைப் படுத்திக்கொண்டிருந்ததாய் எண்ணிய அவள், “விடுங்க. நடந்தது நல்லதுக்குத்தானே? கல்யாணம்னு ஒண்ணு ஆகிப்போன பிற்பாடு இப்படி ஆனா எம்புட்டுப் பெரிய ஏமாத்தமா இருக்கும்! அதுக்காக நீங்க ஏன் இப்படி இடிஞ்சு போய் உக்காந்திருக்கீங்க?  ‘இது மாதிரியான தோல்விகள்ளாம் வாழ்க்கையில சகஜம். காலம் எந்தப் புண்ணையும் ஆத்திரும்’னு அவளுக்கு எடுத்துச் சொல்லுவீங்களா, அதை விட்டுட்டு நீங்களே கன்னத்துல கை வெச்சுக்கிட்டு மோட்டுவளையைப் பாத்துக்கிட்டு இருக்கீங்களே!“ என்று அவரைத் தேற்ற முற்பட்டாள்.

………    மறு நாள் மாலை வழக்கம் போல் ராகேஷ் ராதிகாவுக்காக பைக்கில் வந்தான்.

“உங்களோட நான் பேச வேண்டியது இருக்கு. பைக்ல வர மாட்டேன். அதோ, அந்தப் பார்க்குக்குப் போயிடலாம்.”

அவன் அவளை உற்றுப் பார்த்தான்: “அப்படின்னா? நான் சொல்லச் சொல்லக் கேக்காம அந்த சிந்தியாவைப் போய்ப் பாத்தியா?”

“உங்க மேல உள்ள நம்பிக்கையால முதல்ல போகாமதான் இருந்தேன்  ஆனா அவங்க ரொம்பவும் கட்டாயப்படுத்தினாங்க.  ரெண்டு பக்கத்தையும் கேக்கணுமில்ல? அதுதானே நியாயம்? அதான் போனேன்.  போனது நல்லதாச்சு.  உங்க லீலைகளைப் பத்தி யெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்.  ஒரு ஃபோட்டோ குடுத்தாங்க.  நீங்க அந்த ரம்யாவுக்கு எழுதியனுப்பின துண்டுச் சீட்டுகள் சிலதும் குடுத்தாங்க.  எனக்கு உண்மை தெரிஞ்சிடிச்சு.  உங்க உறவுக்கு ஒரு பெரிய கும்பிடுப்பா!  ஆளை விடுங்க. போங்க. இனி என் முகத்துல முழிக்காதீங்க!  …”  – உணர்ச்சி வயப்பட்டிருந்ததால் அவள் குரல் சற்று உயரலாயிற்று.

அவளது குரலில் தெறித்த திண்மையும், சொற்கள் அழுத்தந்திருத்தமாய் வெளிப்பட்ட தினுசும் அவனை வாயிழக்கச் செய்தன.  தனது எந்த விளக்கமும் அவளிடம் இனி எடுபடாது என்பது திட்டவட்டமாய்ப் புரிய, ராகேஷ் இருண்டு போன முகத்துடன் தலையைக் குனிந்துகொண்டு தன் பைக்கைக் கிளப்பினான்.

… முந்திய நாள் சிந்தியாவிடம் தான் கேட்காமல் விட்ட கேள்விகளை யெல்லாம் அவளிடம் கேட்டுவிட ராதிகா பெரிதும் அவாவினாள். ‘என் அப்பாவிடம் தப்பு இருக்கிறது.  ஆனால் அதற்காக அவளிடம் தப்பே இல்லை என்று சொல்லிவிட முடியாதுதானே!  அமைதியாய்ச் சென்று கொண்டிருக்கும் குடும்பங்களைக் கலைக்கிற பெண்கள் என்ன பெண்கள்! என்னை அவள் ராகேஷிடமிருந்து காப்பாற்றினாள் என்பதற்காக அவள் செய்துள்ள பெருங்குற்றத்தை மன்னித்துவிட முடியாது!  அது என் அப்பா – அம்மா சம்பந்தப்பட்ட விஷயம்.  என் அப்பா காதல் ஊதல் என்று அவளிடம் பிதற்றி அவளை மயக்க முற்பட்டிருப்பினும். ‘ நீங்கள் மணமானவர். உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்ய நினைக்கும் துரோகத்துக்கு என்னால் ஒத்துழைப்புத் தர இயலாது’ என்று அவள் கண்டிப்பாய்க் கூறி விலகியிருந்திருக்க வேண்டும்.  அதுதான் ஒரு பெண்ணின் கம்பீரத்துக்கு அடையாளம்! அதைச் செய்ய அவள் தவறியது குற்றமே!’

அன்று மாலையே ராதிகா சிந்தியாவுடன் தொலைபேசினாள். “ராதிகா பேசறேன், மேடம். உங்களோட எனக்குக் கொஞ்சம் பேசணும்.  இன்னைக்கு – அதாவது இப்பவே நான் கெளம்பி உங்க வீட்டுக்கு வரலாமா?”

“இப்பவேயா?”

“ஆமாம், மேடம். … ஏன்? வேற யாராச்சும் சீஃப் கெஸ்ட் வர்றதா இருக்காங்களா! … நேத்தே நான் உங்களோட இருந்ததால அவரை வரவேணாம்னு சொல்லிட்டீங்க. இல்லியா!”
“ ……………….”

தன் குரலில் தான் வேண்டுமென்றே ததும்பவிட்ட நக்கலை அவள் புரிந்துகொண்டுவிட்டதால்தான் அந்த அவஸ்தயான மவுனம் என்பதால் ராதிகா தனக்குள் அவளை அவமதித்துச் சிரித்தாள்.

“… நீ..நீ…நீ என்ன சொல்றே, ராதிகா?”
“நீங்க அனுமதிச்சா எல்லாத்தையும் நான் நேர்ல வந்து சொல்றேன், மேடம்! இன்னைக்கு முடியாதுன்னா எனக்கு இன்னொரு நாளுக்கு அப்பாயிண்ட்மெண்ட் குடுங்க..”

“நீ இப்பவே வரலாம்மா. கண்டிப்பா உடனே வா.”

“தேங்க்ஸ்… அந்த சீஃப் கெஸ்டுக்கு இன்னைக்கு வர வேணாம்னு சொல்லிடுங்க.   ராகேஷ் வழக்கம் போல வந்தான்.  நான் நீங்க சொன்ன அறிவுரைப்படி அவனை உடனே தொரத்தியடிச்சுட்டேன், மேடம்.  அதுக்காக நான் என்னென்னிக்கும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்….இன்னும் முக்கால் மணி நேரத்துல நான் உங்க வீட்டில இருப்பேன், மேடம்.”
“சரிம்மா… வா.”

“நான் இப்ப ஒரு பப்ளிக் பூத் டெலிஃபோன்லேர்ந்து பேசிட்டிருக்கேன். நான் நேர்ல வந்து பேசுறது உங்களுக்குச் சங்கடத்தை உண்டாக்கும்னா, நாம ஃபோன்லயே கூடப் பேசி முடிக்கலாம், மேடம்.”

“ஃபோன்லயே பேசக்கூடிய சின்ன விஷயம்னா அப்படியே செய்யலாம். ஆனா, முக்கியமான விஷயமா யிருந்தா ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாத்துப் பேசுறதுதான் சரியாயிருக்கும். உன் விருப்பம் எப்படியோ அப்படியே செய், ராதிகா! எதுவானாலும் எனக்கு ஆட்சேபணை கிடையாது.”

“அப்படின்னா, நான் இப்பவே கெளம்பி வர்றேன், மேடம்.  முகம் பாத்துப் பேசறதுதான் சரி.  ஆனா, உங்களுக்கு என் முகத்தைப் பாத்துப் பேசுறது ரொம்ப சங்கடமா இருக்கும்னு நினைக்கறேன்.  அதனால நான் கேக்க நினைக்கிற கேள்வியை ஃபோன்லயே கேட்டுடலாமோன்னும் தோணுது. நேர்ல வந்து பேசுறதுல எனக்கொண்ணும் எந்தச் சங்கடமும் கிடையாது.”

“நான் தான் சொல்லிட்டேனேம்மா, ராதிகா. எதுவும் உன்னிஷ்டம்தான். எப்படி சவுகரியமோ அப்படிச் செய்…”

“மேடம்!  உஙக பேரோட ஒட்டிக்கிட்டிருக்கிற அந்த தீனதயாளன்கிறவரு யாரு, மேடம்?”

“ ….. ராதிகா! நீ எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேதான் பேசறேன்னு நல்லாவே புரியுது.  பதில் தெரியாம கேள்வி கேக்குறவங்களுக்குத்தான் நான் பதில் சொல்லணும். பதிலைத் தெரிஞ்சுக்கிட்டே கேக்குறவங்களுக்கு  நான் என்னத்தைச் சொல்ல!”

“மேடம்! எங்கம்மா உங்களுக்கு என்ன கெடுதல் பண்ணினாங்க? எதுக்கு நீங்க அவங்களை எங்கப்பா கிட்டேர்ந்து பிரிச்சீங்க?  எங்கப்பா தப்பே பண்ணலைன்னு நான் சொல்லல்லே.  அவரு மேலதான் அதிகத் தப்பு. ஆனா, ஒரு பொண்ணா யிருந்துக்கிட்டு இன்னொரு அப்பாவிப் பொண்ணுக்கு வஞ்சகம் பண்ணி யிருக்கீங்களே! அது நியாயமா?  உங்க ஜீசஸ் உங்களை மன்னிப்பாரா? அந்த அயோக்கியன் ராகேஷை விடவும் நீங்க எந்த விதத்துல ஒசத்தி?”

அவள் கேட்டு முடித்த கணத்திலேயே மறுமுனையில் சிந்தியா மனமுடைந்து இரைந்த குரலில் அழத் தொடங்கினாள். அவளது திடீர் அழுகையால் ராதிகா திகைத்து அதிர்ந்தாள். ஆனால் ஒரே நிமிடத்துள் சிந்தியா சமாளித்துக் குரலையும் ஓரளவுக்குச் சரிப்படுத்திக்கொண்டு, “சாரி, ராதிகா. உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.  நாளைக்கு மவுண்ட் ரோட்ல இருக்கிற பாங்க் ஆப் இண்டியாவுக்கு உன்னால வர முடியுமா? காலையில ஒரு மணி நேரம் காலேஜுக்கு லேட்டாப் போக முடியுமா உன்னால? ஒம்பது மணிக்கெல்லாம் வந்துட்டியானா நானும் அங்க இருப்பேன். அங்க உன்னைச் சந்திச்சு சில விஷயங்களை உனக்குக் காட்ட முடியும்.  சாந்தி தியேட்டருக்கு எதிர்ல இருக்கிற பாங்க். வர முடியுமா?” – சிந்தியாவின் குரல் ஓரளவுக்கே சரியாகி இருந்தது. அதன் கம்மிப்போயிருந்த நிலை ராதிகாவின் அதிர்ச்சியை அதிகப்படுத்தியது.

“அங்க எதுக்கு வரச் சொல்றீங்க, மேடம்?”

“காரணமாத்தான், ராதிகா. அங்க வந்தியானா, அதுக்கு அப்புறம் எல்லாமே உனக்கு விவரமா விளங்கும்.”

“சரி, மேடம். கண்டிப்பா வந்துடறேன்.  ரிசப்ஷன்ல உங்களுக்காக வெய்ட் பண்றேன்.”

“உனக்கு முன்னால நான் அங்க இருப்பேன், ராதிகா.”

“சரிங்க.”  – தொலை பேசி இணைப்பைத் துண்டித்த ராதிகாவுக்கு வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது.  ‘பேங்க் ஆஃப் இண்டியாவுக்கு எதுக்கு வரச் சொல்றாங்க? புரியலியே!’

. . . . .     அவர்களுக்குள் இந்தப் பேச்சு நடந்த நான்காம் இரவில் தயாவும் சாந்தியும் நள்ளிரவுக்குப் பிறகு பங்களாவின் கதவை ஓசைப் படாமல் திறந்துகொண்டு வெளியேறி விரைந்து நடந்தார்கள்.

அந்த நேரத்தில் விரைவுத் தொடர் ஏதும் இல்லாததால்,  இருந்த வண்டியில் ஏறிக் கொண்டார்கள். சாந்தி சாமர்த்தியமாய்ச்  சேர்த்து வைத்திருந்த பணமும், தயாவிடம் இருந்த பணமும் சமயத்துக்கு உதவின.    இரண்டு வண்டிகள் மாறிப் பயணித்த பின், இருவரும் சென்னை எழும்பூரில் இறங்கினார்கள்.

..  ..  .. ஒரு புதிய பெண்ணுடன் பையைத் தூக்கிக்கொண்டு வந்து நின்ற தயாவைப் பார்த்ததும் சாம்பவி கையில் இருந்த விளக்குமாற்றை நழுவவிட்டுவிட்டு ஓடி வந்து அவளைக் கட்டிக்கொண்டாள். பின், ஓவென்று அழத் தொடங்கினாள்.

இளைத்தும் கறுத்தும் முகத்து மலர்ச்சி குன்றியும் துயரமே உருவாக மாறிவிட்டிருந்த தயாவைப் பார்த்து ரேவதி அழுது மாய்ந்தாள்.

தயா தன் ஓரகத்தி சாந்தியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.  பின்னர் அவள் கூறிய  அவளுடைய புகுந்த வீட்டுச் சங்கதிகளை யெல்லாம் கேட்டுவிட்டு, எல்லாரும் மேலும் அதிர்ந்து போனார்கள்.

“இப்படியும் இருப்பாங்களா மனுசங்க!” என்று ரேவதி மாய்ந்து போனாள்.

“நாங்க ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிக்கப் போறதா லெட்டர்ல எழுதி யிருக்குறதை அந்த ரெண்டு ராட்சசாளும் நம்பல்லேன்னா, பிரச்சனைதான். நேரே இங்க வந்தாலும் வருவா. அதனால, நாங்க ரெண்டு பேரும் இப்ப இந்த வீட்டுல இருக்கக்கூடாது. என்ன செய்யலாம்?”

“நீங்க ரெண்டு பேரும் இப்போதைக்கு ரமா வீட்டுக்குப் போய் இருங்க. அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்,” என்று சாம்பவி யோசனை சொன்னாள்.

குளித்துச் சாப்பிட்டுவிட்டு, அதன்படியே, தயா சாந்தியுடன் ரமாவின் வீட்டுக்குப் போய்க் கதவு தட்டிய போது சரியாக மணி ஒன்பது.  அலுவலகத்துக்குக் கிளம்பத் தயாராக இருந்த ரமா ஒரு நம்ப முடியாமையுடன் விரைந்து வந்து தயாவை அணைத்துக்கொண்டாள். இருவரும் ஒரு நிமிடம் போல் கண்ணீர் உகுத்தபடி நின்றார்கள்.

“உக்காரு, தயா.”

தயா உட்கார்ந்தாள்.  “நீயும் உக்காரு, சாந்தி. இவ என்னோட ஓர்ப்படி. . என் கதியேதான் இவளுக்கும்.  சாயந்தரம் வேணாப் பேசலாமா? நீ ·பீசுக்குக் கெளம்பிட்டிருக்கே போலிருக்கே, ரமா?”

“லேட்டாப் போனாப் போச்சு. இல்லேன்னா லீவ் கூடப் போட்டுடலாம்.”

ரமாவின் அம்மா அடுக்களையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே சென்ற ரமா, தன் அம்மாவிடம் சுருக்கமாய் விஷயத்தைச் சொல்லி, தயாவை எதுவும் கேட்கக் கூடாது என்று சொல்லிவைத்தபின் அவர்களிடம் வந்தாள்.

“சங்கர் எப்படி  இருக்கார், ரமா?”

“முன்னேறிட்டிருக்கார். கிட்டத்தட்ட சரியாயிடுத்து. ஒரே வாரத்துல சரியாயிடும். அவரோட முதல் தங்கை பவானிக்குக் கல்யாணம் குதிரும் போல இருக்குது..”

“அட! யாரு மாப்பிள்ளை?”

“இதே சென்னைதான்.. ஒரு அரசு அலுவலகத்துல பியூனா யிருக்கானாம். என்னதான் சிக்கனமாப் பண்ணினாலும் –  அது ஏழைங்க வீட்டுக் கலியாணமாவே இருந்தாலும் – இருபத்தஞ்சு யிரமாவது இல்லாம ஒரு கலியாணம் பண்ணிட முடியுமா? நம்ம அலுவலகத்துல எல்லாரும் அம்பது, நூறு, இருநூறுன்னு அவங்கவங்க சக்திக்குத் தகுந்தபடி கலியாணச் செலவுக்குப் பணம் தந்திண்டிருக்காங்க. பட்டியல் எங்கிட்டதான் இருக்கு. பதினஞ்சாயிரத்துக்கு மேல சேந்தாச்சு. சங்கருக்குக் கொஞ்சம் கடன் கிடைக்கும். நம்ம எம்.டி. ரெண்டாயிரம் தர்றேன்னிருக்கார். .. அப்புறம், எம்.டி. ன்னதும் நெனப்பு வருது. ஒரு மாசம் வரைக்கும் உனக்காக உன்னோட வேலையைக் காலியா வைக்கிறதாச் சொல்லி யிருக்கார். அதை லீவா வெச்சுக்கவும் தயாரா யிருக்கார். அதனால நீ உடனே எம்.டி. யைப் பார்த்து உன் பழைய வேலையில சேர்ந்துடலாம்.”

“இன்னிக்கு வேணாண்டி, ரமா. ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு ஜாய்ன் பண்ணிக்கலாம். என் மூஞ்சியைப் பாத்து எல்லாரும் பயப்படப் போறா!. ..  .. அப்புறம் இன்னொண்ணு. நாங்க சாப்பிட்டாச்சு. எங்களுக்காக உங்க அம்மா இப்ப எதுவும் பண்ண வேண்டாம். ராத்திரி வேணாப் பாத்துக்கலாம். ஒரு ஹாஸ்டல் கிடைக்கிற வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் உனக்குத் தொந்தரவாயிருப்போம்.”

“அறைஞ்சேன்னா!”

தயா சிரித்தாள்.

“நீங்க ரெண்டு பேரும் இப்போதைக்கு எந்தக் கூச்சமும் படாம இங்கேயே தங்கிக்கலாம். அப்ப நான் ·பீசுக்குப் போகட்டுமா?..  .. அப்புறம் சங்கரைப் பார்க்கணும், இல்லியா?”

“நாளைக்கு சாயங்காலம் பாத்துக்கலாம். எனக்கு ரெஸ்ட் தேவை.”

“சரி. நன்னாப் படுத்துண்டு ரெஸ்ட் எடுத்துக்கோ. என்னோட ரூம்ல இருங்கோ ரெண்டு பேரும். கொஞ்சமாவது உன்னோட முகம் தெளியட்டும். இந்த மூஞ்சியோட போனா, சங்கர் அழுதுடுவார்,” என்று கூறிவிட்டு ரமா புறப்பட்டாள்.

..  ..  .. மறு நாள் மாலை ரமா வீடு திரும்பிய பிறகு, மூவரும் சங்கரனின் வீட்டுக்குப் போனார்கள். சங்கரனுக்கு வியப்பான வியப்பு. நடந்தவற்றை யெல்லாம் அறிந்து கண் கலங்கினான்.

“சங்கர்! தயா நாளைக்கு அதே வேலையில சேரலாம்னுட்டாரு நம்ம எம்.டி. அது மட்டும் இல்லே. இவா ரெண்டு பேரும் தங்குறதுக்கும் ஏற்பாடு பண்ணி இருக்காரு. சிந்தியா தீனதயாளன்னு ஒரு அம்மா இருக்காங்கல்ல?”

“சமூக சேவகி?”

“மா. அவங்க பெண்களுக்குன்னு ஒரு விடுதி நடத்தறாங்களாமே? அங்க இவா ரெண்டு பேரும் இருந்துக்கிறதுக்கு அவங்களோட பேசி ஏற்பாடு பண்ணிட்டாரு.”

“கடவுள் எல்லா வாசல்களையும் அடைச்சுட்றதில்லே. ஒரு கதவு மூடினா, இன்னொரு கதவு திறக்கும்னு சொல்றது சரிதான்.”

”அப்புறம்..  .. சங்கர்! நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா?”

“சொல்லுங்க, ரமா. நீங்க சொன்னா, அது சரியாத்தான் இருக்கும்.”
“உங்க பெரிய தங்கைக்குக் கல்யாணம் னதும் நீங்க தயாவைக் கல்யாணம் பண்ணிக்குங்க.”
அந்த  நேரத்தில் அங்கே பக்கத்தில் பெரியவர்கள் யாரும் இல்லாததால் (கோவிலுக்குப் போயிருந்தார்கள்) ரமாவால் அந்தப் பேச்சை எடுக்க முடிந்தது. அவள் சொன்னதைக் கேட்டதும் சங்கரனின் முகத்தில் ஓர் ஒளி பரவியது.

“நான் ரெடிதான். தயாதான் தயவு பண்ணணும்.. ஒருக்கா, தான் ஏற்கெனவே ஒருத்தனோட வாழ்ந்தவ, அது, இதுன்னு சொல்லிண்டு அவ அதுக்கு மறுக்கக் கூடும். அதனால, அவ அப்படி அசட்டுத்தனமாச் சொன்னா நீங்கதான் அவ மனசை மாத்தணும். ..”

“அவளைச் சம்மதிக்க வைக்கிறதுக்கு நானாச்சு, சங்கர்! உங்க ரெண்டாவது தங்கைக்கும் னதுக்கு அப்புறந்தான் நீங்க பண்ணிக்கலாம்னு உங்க அப்பா-அம்மா ரம்பிச்சா ஒத்துக்காதங்கோ.. ஒரு குடும்பம்னு இருந்தா, அதிலே ஒண்ணு மாத்தி இன்னொண்ணுன்னு  ஏதாவது பிரச்னை இருந்துண்டேதான் இருக்கும். அதுக்காக நீங்க ரெண்டு பேரும் கஷ்டப்படணும்னுட்டு ஒண்ணும் இல்லே.”

தயா ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்தவாறு உட்கார்ந்திருந்தாள்.

“சாம்பவிக்கும் கொஞ்ச நாள்லே பண்ணிடலாம். அவளைப் பத்திக் கவலைப்படாதே, தயா,” என்றான் சங்கரன்.

“இத்தனை நாள் பிரிஞ்சு இருக்கணும். அதுக்கு அப்புறந்தான் டிவோர்ஸ் வாங்க முடியும்னு ஏதோ சட்டம் இருக்காப்ல இருக்கு. அதை யெல்லாம் விசாரிச்சுட்டு முறைப்படி பண்ணலாம். என்ன சொல்றே, தயா? ஒண்ணுமே பேச மாட்டேன்றியே?” என்று அவன் வினவியதும், தயா முகத்தைப் பொத்திக்கொண்டு அழலானாள்.

“இப்ப எதுக்கு அழறே? அதான் எங்கிட்ட திரும்பி வந்துட்டியோல்லியோ?  நீங்க ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிண்டதா நினைச்சு அவா உங்களைத் தேடாம இருந்தா ரொம்ப நன்னாருக்கும். னா, அவா தேடாத நிலையிலேயும் அவா கண்ணுல உங்கள்லே ஒருத்தர் பட்டுட்டாலும் போச்சு. ஏதாவது அக்கப்போர் பண்ணுவானுக. அதனால, சட்ட ரீதியா நமக்கு ஒரு பாதுகாப்புத் தேவை. அதுக்குத்தான் சொல்றேன். இதுக்கு இடையில நாம விவாகரத்துக்கும் நடவடிக்கை எடுக்கலாம்.”

தயா கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“வியாபார விஷயமா அண்ணனும் தம்பியும் வருஷத்துக்கு ஒரு வாட்டி இங்க வர்றதுண்டாம். அவா கண்ணுல படாம இருக்கணும்.”

“கடவுளை வேண்டிக்கலாம். . இந்த விஷயத்துலயாவது  உதவுவாருனு நம்பலாம்!” என்ற சங்கரன் சிரித்தான்.

– தொடரும்
jothigirija@live.com

Series Navigationஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-4 – ஸ்ரீ ராதைசீதாயணம் தொடர்ப் படக்கதை -1
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *