திருவரங்கக் கலம்பகத்தில் மறம்

This entry is part 10 of 33 in the series 6 அக்டோபர் 2013

    தக்க வயது வந்த இளம்பருவ ஆண்மகனுக்கு ஏற்ற ஒரு பெண்ணைத்  தேர்ந்தெடுத்து மணம் முடித்தல் தொன்று தொட்டு வரும் மரபான வழக்கமாகும். பெண் இருக்கும் இடம் அறிந்தவுடன் அவளைத் தங்கள் மகனுக்காக அப்பெண்ணின் பெற்றோரிடம் கேட்டுத் தூது அனுப்பும் நடைமுறையும் உண்டு. பெண்ணைப் பெற்றவர்கள் பெண் தரச் சம்மதித்து மணம் நடைபெறும். மாறாகப் பெண் கொடுக்க மறுத்தலையும் இலக்கியங்களில் பார்க்க முடிகிறது.

    சில நேரங்களில் பெண் தர மறுப்பதோடு வரும் தூதனை இழித்துரைத்தலையும் காண்கிறோம் . இச் செயலைக் கலம்பக நூலின் 18 உறுப்புகளில் ஒன்றான மறம் என்று ‘வெண்பாப் பட்டியல்’ எனும் நூல் குறிப்பிடுகிறது. தமது மகளை மணம் புரியக் கேட்டு அரசரால் அனுப்பட்ட தூதனை நோக்கி மறவர்கள் பெண் தர மறுத்து அவ்வரசரை இகழ்ந்து பேசினதாகச் செய்யுள் பாடுவது ‘மறம்’ எனும் உறுப்புக்கு இலக்கணமாகும்.

    பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றியுள்ள ‘திருவரங்கக் கலம்பகம்’ நூலில் ‘மறம்’ எனும் தலப்பில் அமைந்த இரு பாடல்களைக் காண முடிகிறது.

                     கொற்றவன்தன்  திருமுகத்தைக் கொணர்ந்த தூதா

                                             குறைஉடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்?

                                 அற்றவர்சேர் திருஅரங்கப் பெருமாள் தோழன்

                                   அவதரித்த திருக்குலம் என்றுஅறியாய் போலும்

                      மற்றதுதான் திருமுகமாய் ஆனால், அந்த

                                    வாய்செவிகண் மூக்குஎங்கே? மன்னர் மன்னன்

                       பெற்றஇளவரசு ஆனால், ஆலின் கொம்பைப்

                                     பிறந்த குலத்தினுக்கு ஏற்பப் பேசுவாயே

    செய்தி எழுதி அனுப்புகிற ஓலையைத் திருமுகம் என்று கூறுவார்கள். திருமுகம் என்பது அழகிய முகம் என்றும் பொருள்படும். எனவேதான் முகத்தை இங்கே கொணர்ந்திருக்கிறாயே? அங்கிருக்கும் முகமில்லாத குறை உடலுக்கோ எங்கள் மறவர் குலப் பென்ணை மணம் கேட்க வந்தாய் என்று ஓலை கொண்டுவந்த தூதனிடம் கேட்கிறார்கள். மேலும் “எம்குலம் எப்படிப் பட்ட்து தெரியுமா? முற்றும் துறந்தவர் எல்லாம் அடைக்கலம் சேர்கின்ற திருவரங்கப் பெருமாளின் தோழனாகிய குகப் பெருமாள் அவதரித்த குலமே எம் குலம் என்பதை நீ அறியமாட்டாய்” என்று குலப்பெருமையும் பேசுகிறார்கள்.

    ”சரி, நீ கொண்டுவந்துள்ளது திருமுகம் என்று வைத்துக் கொண்டால் அந்த முகத்தின் உறுப்புகளாகிய வாய், கண், மூக்கு ஆகியவற்றைக்  காணோமே? அவை எங்கே?” என்றும் இழித்து முகத்தை இருபொருளாக்கிஉரைக்கிறார்கள்.

    ’உங்கள்  ஆண்மகனை அரசர்க்கெல்லாம் அரசராகிய சக்கரவர்த்தி பெற்ற இளவரசு என்று கூறுகிறீர்; அவன்தான் அரசாயிற்றே? [அரச மரமாயிற்றே?] அது பிறந்த மரக் குலத்திற்கேற்பப் பொருத்தமாக ஆலமரத்தின் கொம்பை மணம் பேசுவாயாக” என்று நயம் பொங்க மறுத்துரைக்கிறார்கள்.

    ”எம் குலப்பெண் திருவரங்கத்தில் கோயில் கொண்டு விளங்கும் பெருமாளுக்கே உரியவள். அத் தகையவளைப் பிற மானிடவர்க்கு ஆட்படுத்த முயல்வாரை நோக்கிக் கடிந்து கூறுவதாக உள்ளது” என்பது இப்பாடலின் சிறப்பாகும்.

    இதே போன்று தூதனிடம் மறுத்துரைக்கும் மற்றொரு பாடலையும் காணலாம்.

                 “பேசவந்த தூத,செல் அரித்த ஓலை செல்லுமோ?

                                    பெருவரங்கள் அருளரங்கர் பின்னை கேள்வர் தாரிலே

                    பாசம்வைத்த மறவர் பெண்ணை நேசம் வைத்து முன்னமே

                                     பட்டமன்னர் பட்டதுஎங்கள் பதிபுகுந்து பாரடா

                வாசலுக்கு இடும்படல் கவித்துவந்த கவிகைமா

                                       மகுடகோடி தினைஅளக்க வைத்த காலும் நாழியும்

         வீசுசாமரம் குடில்தொடுத்த கற்றை,சுற்றிலும்

               வேலிஇட்டது,அவர்களிட்ட வில்லும் வாளும் வேலுமே”

இப்பாடலில் “எஙகள் வேடர் குலப்பெண் பெரிய வரங்களை அளிக்கும் திருவரங்கப் பெருமாளும், நப்பின்னை பிராட்டியின் கணவருமாகிய நம் பெருமானிடம் அன்பு வைத்தாள் “ என்று வெளிப்படையாகாகவே கூறப்படுகிறது.

    பெண் கேட்டு வந்த தூதரிடம் ‘உனக்கு முன்னரே பலர் அதுவும் பல பட்டங்கள் ஏற்ற அரசர்கள் எம்குலப் பெண்ணை மணம் புரியக் கேட்டு வந்தனர். அந்த அரசர்கள் எல்லாம் பட்ட பாடுகளை எங்கள் ஊரினுள் வந்து பாரடா” என்று கூறுகின்றனர்.

    ”அந்த அரசர்கள் எங்களிடம் அவமானமுற்றுத் தோற்றார். நாங்கள் அவர்கள் கொண்டு வந்தவற்றைக் கவர்ந்து கொண்டோம்” என்பதையும்  மறைமுகமாக உணர்த்துகின்றனர். அவர்களுக்குப் பெருமையானவற்றை நாங்கள் எந்த செயலுக்குப் பயன்படுத்துகின்றோம் என்றும் இழிவாகக் கூறுகின்றனர்.

    ”அந்த அரசர்கள் பிடித்துவந்த குடைகளே எம் வீட்டு வாசலை மூடும் படல்களாகும். நாங்கள் தினை அரிசியை அளப்பதற்குப் பயன்படுத்தும் மரக்கால்களும் படிகளும் அந்த அரசர்கள் அணிந்திருந்த மகுடங்களாகும். எங்கள் ஊரின் குடிசைகளுக்கு மேல் கூரையாக இட்டிருப்பது அவ்வரசர்க்கு வீசிவந்த சாமரங்களாகும். எஙகள் இல்லங்களில் நாற்புறங்களிலும் வேலியாக அமைக்கப்பட்டிருப்பது அந்த அரசர்கள் தோல்வியடைந்து போட்டுவிட்டுப் போன வில்லும், வாளும், வேலுமே ஆகும்” என்று கூறுவது உன்னை ஏவிய அரசனுக்கும் இக்கதியே நேரும் என்பதை உணர்ர்த்துவதற்கே ஆகும் என்று உணரலாம்.

    இவ்வாறு இறைநெறியை உணர்த்துவதோடு இலக்கிய நயங்களையும் காட்டும் திருவரங்கக் கலம்பகம் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் எழுதி உள்ள அஷ்டப் பிரபந்தங்களில் [ எட்டு நூல்களில்] ஒன்றாக அணி சேர்க்கிறது எனத் துணிந்து கூறலாம்.

Series Navigationதிண்ணையின் இலக்கியத் தடம் -3தாகூரின் கீதப் பாமாலை – 84 புயல் அடித்த இரவில் .. !
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *