அத்தம்மா

This entry is part 11 of 31 in the series 13 அக்டோபர் 2013

யூசுப் ராவுத்தர் ரஜித்

(புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமனாதபுரம் மாவட்டங்களில் இன்றும் வழக்கிலுள்ள சொல் அத்தம்மா. அத்தா என்றால் அப்பா. அத்தாவின் அம்மா அத்தம்மா.)

சுப்ஹு தொழுத கையோடு சேர்ந்திருக்கும் அழுக்குத் துணிகளை அள்ளிக் கொண்டு அரசமரக் குளத்திற்குச் செல்வார் அத்தம்மா. கூடவே நானும் செல்வேன். அதிகாலை எழும் பழக்கம் எனக்கு அத்தம்மா கற்றுக் கொடுத்ததுதான். இரவு கொஞ்சம் வெளிச்சத்தைப் பிசைந்துகொண்ட அதிகாலை. அந்தக் குளத்தை ஒவ்வொரு பொழுதும் முதலில் பார்ப்பது சூரியனும் அத்தம்மாவும்தான். ஒரு செம்ப்ராங்கல்லுக்கு அருகில் தண்ணீரில் அமர்ந்து கொண்டு துணிகளை நனைத்து அதன் மேல் முன்னும் பின்னுமாய் சௌக்காரத்தை இழுப்பார். அவருக்கு இரண்டு கையிலும் ஆறு விரல்கள். சௌக்காரத்தை இழுக்கும்போது அந்த ஆறாம் விரல் தனி ஆவர்த்தனம் வாசிக்கும். துணி துவைத்து முடித்துத் திரும்புவோம். இடுப்பில் துணிக் கூடை. நான் அத்தம்மாவின் விரலைப் பிடித்து நடப்பேன். அந்த ஆறாம் விரல் மல்லிகைப் பூவின் ஸ்பரிஸம். லேசாக கையை குலுக்கினால் மணிக்குள் நாக்கு அசைவது போல் அசையும். எங்கள் குடும்பம் பெரியது . அத்தம்மாவின் இலாகா அவரே தேர்ந்தெடுத்துக் கொண்டது. துணி துவைப்பது, நெல் அவித்து காயவைத்து, அரைத்து,  அரிசியாக்குவது, மாடுகளுக்குத் தீனி வைப்பது இதெல்லாம் அத்தம்மாவின் வேலை.

அத்தம்மாவின் சொத்துவிபரத்தைப் பார்ப்போம். அய்யா வைத்திருந்த ஒரு பழைய தேக்கு அலமாரி. அலமாரியின் மேல் தட்டில் நாலைந்து வெள்ளைச் சேலைகள், கைலி, மேற்துண்டு, வெற்றிலை இடிக்கும் குட்டி உரல் உலக்கை, ஒரு தலையணை, ஒரு  கோரைப்பாயோடு குர்ஆன். கீழ்த்தட்டில் அத்தம்மா சேர்க்கும் காகிதங்கள். மளிகைச் சாமான்கள் மடித்துவரும் காகிதங்கள், படித்துப் படித்து நைந்துபோன  தினத்தந்தி, பத்துக்காசு தபால் அட்டைகள் உள்ளூர் தபால்கள் என்று எந்தக் காகிதம் கிடந்தாலும் சேர்த்துவிடுவார். எதற்காக? பிறகு சொல்கிறேன்.

வாரத்துக்கு அவர் செலவு ஒரு கவுளி வெற்றிலை, 20 காசு ஸ்வஸ்திக் புகையில் 4, ஒரு ரூபாய் களிப்பாக்கு, சுண்ணாம்பு. அவ்வளவுதான். எல்லாரும் சாப்பிட்ட பிறகுதான் அவர் சாப்பிடுவார். எது அதிகமாக மிஞ்சி யிருக்கிறதோ அதுதான் அவருக்குப் பிடித்த உணவு.

அவருக்கென்று 3 மா நிலம் இருக்கிறது. அதைக் கருப்பனிடம் குத்தகைக்கு விட்டிருந்தார். ஆண்டுக்கு 20 மூட்டை நெல் வரும். அது அத்தம்மாவின் சொந்த உபயோகம்.

1960 களில் முஸ்லிம் சமுதாயத்தில் பக்கீர்மார்கள் என்று ஒரு சமூகம் இருந்தது. இப்பொழுதும் சில கிராமங்களில் இருக்கிறது. இவர்கள் மிகவும் பின்தங்கிய ஏழைகள். வீடுகளில் நிகழும் மையத்து நிக்காஹ் போன்ற நிகழ்வுகளையும் ஃபாத்திஹா மவ்லூது போன்ற வைபவங்களையும்  இந்தப் பக்கீர்மார்கள்தான் நடத்துவார்கள். நிக்காஹ் தேவைகளுக்கு சமையல் கூட இவர்கள்தாம். பள்ளிவாசல் வேலைகளையும் இவர்கள்தான் பார்ப்பார்கள். இவர்களுக்கு சம்பளம் என்பது இஸ்லாமியக் குடிகள் தரும் நெல்தான். காலை 10 மணிவாக்கில் ஓர் ஓலைக் கூடையுடன் நெல் வாங்க வருவார்கள். வாசலில் நின்றபடி ‘ஸல்லி யல்லா ரசூல் முஹையதீன்’ என்று குரல் கொடுப்பார்கள். அந்தக் குரலைக் கேட்ட மாத்திரத்தில் கொட்டான் நெல்லுடன்

2

அத்தம்மா விரைவார். வேற்றுக் கிராமங்களிலிருந்து வரும் பக்கீர்மார்கள் சில சமயம் பள்ளிவாசலிம் தங்குவார்கள். அவர்களுக்கு இரவுச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்வது மோதினார் வேலை. அப்படி யாராவது வந்துவிட்டால் மோதினார்  முதலில் தேடுவது அத்தம்மாவைத்தான். அவர்களுக்குச் சாப்பாடு கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிட்டு ‘துஆ’ ஓதிச் சென்றபின்தான் அத்தம்மா சாப்பிடுவார். அவரின் 20 மூட்டை நெல்லையும் பக்கீர்மார்களுக்குக் கொடுக்க மட்டுமே பயன்படுத்துவார். சரி. அந்தக் காகிதப் பிரச்சினைக்கு வருவோம். சேர்த்த காகிதங்களையெல்லாம் பிய்த்துப் போட்டு ஒரு குண்டானில் ஊற வைப்பார். பிறகு ஆட்டுக் கல்லில் அரைத்துக் களியாக்கி காகிதக் கூடைகள் செய்வார். நன்றாகக் காய்ந்த பின் வெள்ளையடித்து கலர் தாள்களை அதில் ஒட்டி அழகுபடுத்துவார். கொஞ்சம் களியை முறங்களுக்கும் மூங்கில் கூடைகளுக்கும் தடவுவார். இதுவரை 40 கூடைகளுக்கு மேல் செய்துவிட்டார். யார் உதவியையும் அவர் எதிர்பார்த்ததே இல்லை. ஒரு நாள் கேட்டேன்.

‘இந்தக் கூடையெல்லாம் எதற்கத்தம்மா? நீங்களும் எடுப்பதில்லை. யாரையும் எடுக்கவிடுவது மில்லை.’

கையில் வைத்திருக்கும் வெற்றிலை மடிப்பை என் வாயில் திணித்து ‘நல்லா மெல்லு’ என்று சொல்லிச் சிரிப்பார். அந்தப் பேச்சு அப்படியே மாறிவிடும். பிறகு நானும் கேட்பதில்லை சில ஆண்டுகளுக்குப் பிறகு அவராகச் சொன்னார்.

‘ஒருவருக்கு ஒரு பொருளை நாம் வாங்கித் தருவதைவிட நாமே செய்து கொடுப்பதில் பரக்கத் அதிகம். எல்லாருக்கும் மவுத்து ஹயாத்து இருக்கு. எனக்கு ஏதாவது ஒன்னுன்னா இந்தக் கூடைகளை குருணி நெல்லோடு பக்கீர்மார்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். இது அவர்களுக்குப் பெரிய பரக்கத்தைத் தரும்’

அத்தம்மாவுக்கு இப்போது எழுபது வயதிருக்கும். அன்றுதான் அவர் காய்ச்சல் என்று படுத்துப் பார்த்தேன். அந்தக் காய்ச்சலிலும் மெதுவாக எழுந்து சென்று இஞ்சிக் கசாயம் வைத்துக் கொண்டு வந்து படுத்துவிட்டார்.

‘காய்ச்சலில் ஏன் அத்தம்மா அடுப்படிக்கு போனீர்கள். அம்மாவிடம் சொன்னால் வைத்துத் தரமாட்டார்களா?’

‘கால் தூங்கிப் போச்சுத்தா. கொஞ்சம் நடக்கலாம்னுதான்  போனேன்.’

யாரைப் பற்றியும் ஒரு குறையையும் அத்தம்மா வாழ்நாளில் பதிவு செய்ததே இல்லை. நெற்றியைத் தொட்டுப் பார்த்தேன். சுட்டது. அத்தாவிடம் சொன்னேன். அத்தா மேரி நர்ஸுக்கு தகவலை சொல்லி யனுப்பி வரச் சொன்னார். மேரி வந்து சில காய்ச்சல் மாத்திரைகளைத் தந்தார். அந்த இரவு அத்தம்மாவோடு நானும் படுத்துக் கொண்டேன். துப்பட்டியால் அத்தம்மாவைப் போர்த்திவிட்டேன். தலைமாட்டில் குர்ஆன் இருந்தது. படுத்தபடியே தாள்களைப் புரட்டி ஓதிக்கொண்டார். தொழுது கொண்டார். அந்தக் கோரைப் பாயை நினைவு வரும்போதெல்லாம் தடவிக் கொண்டார். அது அய்யா படுத்த பாயாம். வழக்கமாக அதிகாலை குளத்துக்குப் போவார். அதிகாலை எழுந்திருக்கவில்லை. நான் எழுப்பினேன்.

 

3

‘இன்னிக்கு வேணாம். நாளைக்குப் போவோம்.’ என்றார்.

அன்று எனக்குப் பள்ளிக்கூடம் இல்லை. மணி 10. ‘ஸல்லி யல்லா ரசூல் முஹையதீன்’ என்ற குரல் கேட்டது. அத்தம்மா என்னிடன் நெல் கொடுக்கச் சொன்னார். திண்ணையில் நெல்லை ஏற்கனவே தயாராக வைத்திருந்தார். கொட்டானில் நெல் எடுத்துக் கொடுத்தேன். என்னைப் பார்த்ததும் அவர் அத்தம்மாவை விசாரித்தார். அவர்  பெயர் சம்சண்ணன்.  ‘அத்தம்மாவுக்குக் காய்ச்சல்’ என்று சொன்னேன். அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி உள்ளே வந்தார். நின்றபடியே துஆ ஓதி என் கைகளில் ஊதி என் கையை அத்தம்மாவின் முகத்தில் தடவச் சொன்னார். சம்சண்ணன் பக்கீர்மார்களுக்கு தலைவர் மாதிரி. ஓதி முடித்ததும் சென்றுவிட்டார்.

அன்று மதியம் சாப்பிடுவதற்காக எழுப்பினேன். அசையாமல் படுத்தே இருந்தார். அத்தம்மா என்று லேசாக கையை அசைத்தேன். கொஞ்சி ஆடும் அந்த ஆறாம் விரல் மரக்கட்டை போல் இருந்தது. ‘அத்தா’ என்று கத்தினேன். அத்தா வந்தார். நாடியைப் பார்த்தார். அது அடங்கி சில மணி நேரங்கள் ஆகியிருந்தது. ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அத்தா அழுதார். அத்தா கண்ணிலும் கண்ணீர் உண்டென்று அன்றுதான் தெரிந்தது. சில நிமிடங்களில் ஊரே கூடிவிட்டது. பக்கீர்மார்கள் எல்லாரும் வந்தார்கள் மையத்துக்கான வேலைகளை அழுதுகொண்டே செய்தார்கள். அன்று மதியம் வந்தவர்களுக்கெல்லாம் சாப்பாடு தயார் செய்தார்கள். அசர் முடிந்து மஹரிபுக்குள் மையத்து எடுக்க ஏற்பாடு நடந்தது. பக்கீர்மார்களிடம் அத்தா சொன்னார். ‘காரியங்கள் முடிந்ததும் எல்லாரும் வீட்டுக்கு வந்துவிடுங்கள். அப்படியே யாரும் போய்விடாதீர்கள்’

எந்த மவுத்திற்கும் அவ்வளவு பெரிய கூட்டம் கூடியதே இல்லையாம். எல்லாரும் சொன்னார்கள். எத்தனை மக்களை அத்தம்மா சம்பாதித்திருக்கிறார் என்று  எனக்குப் புரிந்தது. அத்தா சொன்னபடி எல்லாரும் வந்தார்கள். அத்தம்மா சேர்த்துவைத்த காகிதக் கூடைகள் எடுக்கப்பட்டன. எல்லாக் கூடைகளிலும் கொள்கின்ற அளவு நெல் போடப்பட்டது வந்த பக்கீர்மார்களுக் கெல்லாம் கூடையோடு நெல்லை அத்தா கொடுத்து முடித்தார். அல்ஹம்துவில்லாஹ். அத்தம்மாவின் ஆசை முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இன்று நான் சிங்கப்பூரில் இருப்பதும் சிறப்பாக வாழ்வதும் என் அத்தம்மாவின் உழைப்புக்கும் தொழுகைக்கும் அல்லாஹ் தந்த வெகுமதி என்றுதான் உணர்கிறேன்.

இப்போது அந்தப் பக்கீர்மார்கள் இல்லை. அவர்கள் பிள்ளைகளெல்லாம் வெளிநாடுகள் சென்று மாடி வீடுகள் கட்டி வசதியாக வாழ்கிறார்கள்.சமீபத்தில் ஊருக்குப் போனேன். பள்ளிவாசலுக்குத் தொழுகச் சென்றேன். ஒரு பெரியவரை காரில் கொண்டுவந்து இறக்கிவிட்டார் அவர் மகன். அந்தப் பெரியவர் அட சம்சண்ணன். அவரிடம் போய் ‘சம்சண்ணே நல்லா இருக்கீங்களா?’ என்றேன். ‘அட பெரிய வீட்டம்மா பேரனா’ நடுங்க நடுங்க கைகளால் என்னை அணைத்துக் கொண்டார்.

‘தம்பீ தொழுதுவிட்டு என்னைப் பார்க்காமல் போய்விடாதீர்கள்.’

‘சரிங்கண்ணே’

அவர் ஒரு சேரில் அமர்ந்து தொழுதார். தொழுதபின் அவரிடம் போனேன். என் தோள்களில் கை போட்டு நடந்து வந்தார். அவர் மகன் காரை வைத்துக் கொண்டு தயாராக நின்றார்.

‘வாங்க தம்பீ. நம்ம வீட்டுக்குப் போவோம். உங்களை அழைத்துப் போகத்தான் தொழுதபின் வரச் சொன்னேன்.’

அவரோடு நானும் காரில் ஏறினேன். வீடு வந்தது. அல்ஹம்துவில்லாஹ். அழகான வீடு. இருவரும் உள்ளே நுழைந்தோம். அந்தக் கூடத்தில் ஓர் அழகான சோபா. அமர்ந்துகொண்டு கண்ணைச் சுழற்றினேன். அந்தக் கண்ணாடி அலமாரியில் அத்தம்மா செய்த காகிதக் கூடை இருந்தது. அவர் மகனிடம் அதை எடுத்துவரச் சொன்னார்.

‘இந்தக் காகிதக் கூடைதான் எங்களை இந்த உயரத்துக்கு உயர்த்தி யிருக்கிறது தம்பீ. சீதேவி சீதேவி. இப்படி ஒரு பிறவி அதிசயம் தம்பீ.’

சொல்லிக் கொண்டே அந்தக் கூடைக்குள் இருந்த சின்ன கொட்டானைத்  திறந்தார். அதில் அவருக்கு அத்தம்மா தந்த நெல் கொஞ்சம் இருந்தது.

அவரிடம் கேட்டேன்.

‘அண்ணே. இந்த நெல்லை எனக்குத் தரமுடியுமா?’

‘சீதேவியின் பேரனா இப்படிக் கேட்பது. எடுத்துக் கொள்ளுங்கள் தம்பீ.

அவர் மகன் காரில் கொண்டு  வந்து இறக்கிவிட்டார். நான் சிங்கை திரும்பும்போது அந்த நெல்லை மறக்காமல் எடுத்துக் கொண்டேன்.

Series Navigationஅண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்”டௌரி தராத கௌரி கல்யாணம் …22
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

2 Comments

  1. Avatar
    ப.அழகுநிலா says:

    ஐயா! அருமையான கதை! என் அம்மாச்சியின் நினைவுகளை மனதின் ஆழத்திலிருந்து வெளியே கொண்டுவந்து போட்ட கதை. தனது வேலைகளை முடிந்தவரை தானே செய்து கொள்வது, ஆடம்பரமற்ற மிக குறைவான தேவைகளோடு வாழ்வை இன்பமாக கழித்தது, இயன்றவரை மற்றவர்களுக்கு உதவி செய்ய விழைவது என்று வாழ்ந்த ஒரு தலைமுறை மக்கள்! அப்படி ஒரு மகத்தான வாழ்க்கையை வாழ்ந்த அவர்கள் கொடுக்கும் ஒரு பிடி நெல் எவ்வளவு விலைமதிப்பற்றது என்று சொன்ன கதை.

  2. Avatar
    karunya says:

    Fantastic story. You have brought to light a beautiful history of the 1960s culture; the life of a wonderful lady whose story would otherwise have gone unrecorded and unrealised by the future generation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *