லீலாதிலகத்தில் வேற்றுமைக் கோட்பாடுகள்

author
0 minutes, 1 second Read
This entry is part 13 of 31 in the series 20 அக்டோபர் 2013

அ.சத்பதி
முனைவர் பட்ட ஆய்வாளர்
இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி
தமிழ்ப் பல்கலைக்கழகம்

மலையாள மொழிக்கு உருவாக்கப்பட்ட முதல் இலக்கண நூல் லீலாதிலகம் ஆகும். இந்நூல் மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. லீலாதிலகம் மலையாள மொழியில் தனிமொழியின் பண்புகளைச் சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய மலையாள மொழியின் முதல் இலக்கண நூலாகிய லீலாதிலகம் வேற்றுமையைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில் மலையாள வேற்றுமை உருபுகளின் வருகை, அவற்றின் பொருள்பாகுபாடுகள், அமைப்பு முறைகள் ஆகியவற்றைக் கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

லீலாதிலகம் அறிமுகம்
லீலாதிலகத்தைப் படைத்தவர் யாரென அறியமுடியவில்லை. கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற மணிப்பிரவாள இலக்கணம் லீலாதிலகம் குறித்து 1916-இல் வெளியான ராஜராஜவர்மாவின் கேரள பாணினீயத்தில் குறிப்புள்ளது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் வைசிகதந்திரம், உண்ணுநீலி சந்தேசம், உண்ணிச்சிரிதேவி சரிதம், அனந்தபுரவர்ணனம் ஆகிய இலக்கிய நூல்கள் மணிப்பிரவாள இலக்கியங்களாகத் தோற்றம் பெற்றன. இவற்றின் அடிப்படையில் இவ்விலக்கண நூல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லீலாதிலக ஆசிரியர் வேனாட்டு மார்த்தாண்டவர்மா, திருப்பாப்பூர் இரவிவர்மா விக்கிரமபாண்டியன் முதலிய அரசர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுவதால் இவர் அக்காலத்தைச் சார்ந்தவராகக் கருதலாம். இவர் தமிழ், கன்னடம், சமஸ்கிருதம், பிராகிருதம் போன்ற இலக்கண இலக்கிய அறிவு பெற்றவர் என்பதை லீலாதிலகம் வழி அறியமுடிகிறது.

இவ்விலக்கண நூல் 1910 ஆம் ஆண்டில்தான் முதன்முதலில் மங்கோளதயம் என்னும் இதழில் அப்பன் தம்பிரான் என்பவரால் முதல் பகுதி மட்டும் தொடராக வெளிவந்துள்ளது. 1917 ஆம் ஆண்டில் ஆத்தூர் பிஷராபியர்ல் நூல் முழுவதும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சாகியுள்ளது. 1957-இல் இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை மலையாள மொழியில் விரிவான ஆராய்ச்சிக் குறிப்புகளோடு பதிப்பித்துள்ளார். இவரது நூலை அடிப்படையாகக் கொண்டு 1971-இல் இளைய பெருமாள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இந்நூலில் உட்பிரிவு சிற்பம் எனப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 151 சூத்திரங்களை கொண்டு எட்டு சிற்பங்களாக (இயல்கள்) படைக்கப்பட்டுள்ளது. 209 எடுத்துக்காட்டு செய்யுள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூலில் ஐவகை இலக்கணப் பாகுபாடாகிய எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. அவற்றில் அணி இலக்கணத்திற்கு சற்று கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார் லீலாதிலக ஆசிரியர்.

வேற்றுமை
ஒரு பொருளை இயல்பான நிலையினின்றும் வேற்றுமைச் செய்வது வேற்றுமை எனப்படும்.
~~செய்யப்படுபொருள் முதலாயினவாகப் பெயர்ப்பொருளை
வேறுபடுத்துணர்த்துவதாயின் வேற்றுமை ஆயின||; (தொல்.சொல்.62)
என்று சேனாவரையரின் விளக்கம் கருதத்தக்கது.
வேற்றுமைப் பற்றி ஆராய்கின்ற லீலாதிலக ஆசிரியர் பிற திராவிட மொழி இலக்கணத்தைப் போலவே எட்டு வேற்றுமைகளைச் சுட்டியுள்ளார். திராவிட மொழிகளில் வேற்றுமை என்பது பெயர்ச்சொல்லின் ஒரு பகுதியாகவே அமைந்திருப்பதை அறியலாம்.

வேற்றுமை உருபுகள்
லீலாதிலகம் வேற்றுமைகளாக,
~~பேர், எ, ஒடு, க்கு, நின்னு, ன்னு, இல், விளி இத்தியஷ்டகம்||
எனச்சுட்டுகிறது. தொல்காப்பியமும் எட்டு வகை வேற்றுமை உருபுகளைச் சுட்டுகிறது. அவை, ~~பெயர் ஐ ஒடு கு
இன் அது கண் விளி என்னும் ஈற்ற|| (தொல்.சொல்.548)
பேர், விளி என்பது முறையே வேற்றுமை உருபுகளாகச் செயல்படுகின்றன. இதில் தொல்காப்பியமும் லீலாதிலகமும் ஒன்றுபட்டுள்ளன. உருபுகளில் வேறுபடுகின்றன.

முதல் வேற்றுமை
லீலாதிலக உரைவழி பேர் என்றும், விளி என்றும் சொல்லப்பட்டவை முறையே முதல் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை ஆகியவற்றின் பொருள், ஏனையவெல்லாம் வேற்றுமை உருபுகள் எனச்சுட்டியுள்ளன. (லீலா.உரை.ப.65)
தமிழில் வேற்றுமை பெயர் தோன்றும் நிலையாய் நின்று உருபும் விளியும் ஏலாது வரும் நிலையது என்பர் தொல்காப்பியர்.
அவற்றுள்
எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே (தொல்.சொல்.65)

இரண்டாம்; வேற்றுமை
மலையாளத்தில் இரண்டாம் வேற்றுமை உருபு ~எ| ஆகும்.
(எ.கா.) அவனெ, அவரெ, மரத்தே ~எ| உருபு.

மூன்றாம் வேற்றுமை
லீலாதிலகம் மூன்றாம் வேற்றுமை உருபாக ~ஒடு| சுட்டுகிறது. ஆல், கொண்டு, என்பவையும் மூன்றாம் வேற்றுமை உருபுகளாகும் என்பது உரையால் அறியமுடிகிறது.
(எ.கா.) அவனோடு வந்து, நம்பியொடு, மன்னனால்

நான்காம் வேற்றுமை
~க்கு| என்பது நான்காம் வேற்றுமை உருபாகும். அன்னு, இன்னு என்ற உருபுகளும் உள்ளதாக லீலாதிலக உரைவழி அறியமுடிகின்றது.
(எ.கா.) நினக்கு, அதின்னு, அவிடெயன்னு

ஐந்தாம்; வேற்றுமை
~நின்னு| என்பது ஐந்தாம் வேற்றுமை உருபு ஆகும். ~காட்டில்| என்பதும் ஐந்தாம் வேற்றுமை உருவாக செயல்படுகிறது.
(எ.கா.) மரத்திநின்னு

ஆறாம்; வேற்றுமை
~ன்னு| என்பது ஆறாம் வேற்றுமை உருபாக லீலாதிலகம் சுட்டுகிறது. கு;கு, இடெ, எடெ, றெ ஆகியவையும் ஆறாம் வேற்றுமை உருபுகளாகப் பயன்படுத்தப்படும் என்று உரை விளக்கம் தருகின்றது.
(எ.கா.) அவள்க்கு, அவன்றெ

ஏழாம் வேற்றுமை
~இல்| என்பது ஏழாம் வேற்றுமை உருபு ஆகும். இலெ, மேல், கல், ப+க்கல் போன்ற உருபுகளும் வரும் என உரை விளக்கமளிக்கிறது.
(எ.கா.) அவனிலெ, மரத்தின்றமேல்

எட்டாம் வேற்றுமை
இதனை ~விளி| வேற்றுமை என்பர் இது பெயரே நீண்டு ஒலித்தல் இவ்வேற்றுமையாகும். மலையாளத்தில் இதனை ஆ, ஈ, ஊ, ஏ என்று ஒரு குறில் நெடிலாக மாற்றி விளித்தல் பொருட்டு ஏற்படும் மாற்றமே இவ்வுருபாகும் என்பர்.
(எ.கா.) மாதவா, கேசவா

முடிப்பு
லீலாதிலகம் என்ற முதல் மலையாள இலக்கண நூல் தமிழ் மரபை ஒட்டி பாட்டு வடமொழி மரபை ஒட்டிய மணிப்பிரவாளம் வகைமையில் அமைந்துள்ளது தமிழைப் போலவே மலையாளத்திலும் எட்டு வேற்றுமைகள் இடம்பெருகின்றன. மூன்றாம் வேற்றுமை உருபு ~ஒடு| தமிழ் மலையாளம் இரண்டிலும் பொதுவானதாக அமைந்துள்ளது. தமிழில் உள்ள நான்காம் வேற்றுமை உருபு மலையாளத்தில் ~க்கு| என மாற்றம் பெற்றுள்ளது.

ஆறாம் வேற்றுமை மலையாளத்தில் உடைமைப்பொருளில் மட்டுமே வருகின்றது. கி.பி.14 ஆம் நூற்றாண்டில் மலையாள மொழியைத் தனி மொழியாக உருவாக்க எழுந்த நூல் லீலாதிலகம் எனலாம்.

உதவி நூல்கள்

1. மா.இளையபெருமாள் (1971), லீலாதிலகம் (மொ.பெ.) தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
2. சேனாவரையர் உரை, தொல்காப்பியம் சொல்லதிகாரம், (2004), கழக வெளியீடு, சென்னை -18
3. கால்டுவெல் (2011), திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், சாரதா பதிப்பகம், சென்னை.
4. இராம.கோபிநாதன் (மொ.பெ.) (1984), மலையாள இலக்கிய வரலாறு, சாகித்திய அக்காதெமி
5. வே.ச.அருள்ராஜ் (2000), மலையாள இலக்கண வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

 

 

Series Navigationபிரயாணம்பாவடி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *