ஜோதிர்லதா கிரிஜா
2
தொலைபேசி மறுபடியும் சிணுங்கியது. இந்தத் தடவை சோமசேகரன் உடனே எழுந்தார். அவரை முந்துகிறாப் போல் நிர்மலாவும் மிக அவசரமாக எழுந்தாள்.
“நீ உக்காரும்மா. நான் போய்ப் பாக்கறேன்.,” என்றவாறு அவர் தொலைபேசியை அணுகி, ஒலிவாங்கியில், “ஹலோ!” என்றார்.
“மிஸ்டர் ரமேஷ் இருக்காரா?”
“அவரு ஸ்டேட்ஸ¤க்குப் போயிருக்காரே? திரும்ப ஆறு மாசம் ஆகும்.”
“என் பேரு நவனீதகிருஷ்ணன். சரி. அப்ப அவரு வந்த பெறகு பேசறேன்.”
மேசைக்குத்திரும்பிய சோமசேகரன், “கூப்பிட்டவர் பேரு நவனீதிருஷ்ணன். நவனீதகிருஷ்ணன் வேணும்னு அவரு கேக்கல்லே,” என்றார்.
மாமாவின் விழிகள் இப்போது அவ்வளவு கூர்மையாக இல்லை என்பதைக் கண்டு நிர்மலா கொஞ்சம் நிம்மதியானாள். எனினும் அது தற்காலிக நிம்மதிதான் என்பது அவளது வயிற்றைக் கலக்கியது. எந்த நேரத்திலும் அவன் கூப்பிட்டு வம்பு செய்யத்தான் போகிறான். இந்நினைப்பால், அவளுக்குக் கண்கள் இருண்டன.
“சாரதா! சாரதா! நிர்மலாவைப் பிடிச்சுக்க. சாயறா, பாரு,” என்று பதறியபடி சோமசேகரன் எழுந்து நின்றார். சாரதா சட்டென்று அவளைப் பிடித்து அவளது தலையை நாற்காலியின் முதுகு விளிம்பில் நிறுத்தினாள். ஆனால், அவளுக்குக் கண்கள் இருண்டது கண நேரத்துக்குத்தான். உடனேயே, சமாளித்து, இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டாள்.
“மயக்கமாஇருந்திச்சாம்மா? ஏங்க? டாக்டரை வேணா வரச் சொல்லலாமா?”
“அய்யோ! அதெல்லாம், வேணாம், அத்தை. என்னமோ லேசாத் தலை சுத்துற மாதிரி இருந்திச்சு. ஒரே ஒரு செகண்ட்தான். இப்ப சரியாயிடிச்சு,!”
சாரதாவின் முகத்தில் சட்டென்று ஒரு வெளிச்சம் பரவியது. மெதுவாக, நிர்மலாவின் காதருகே வாய் வைத்து, “நீ எப்ப குளிச்சே?” என்றாள்.
அவள் கேட்டது காதில் விழுந்துவிட, “இதென்ன கேள்வின்னு கேக்குறே? காலையில ஆறு மணிக்குக் குளிச்சா. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” என்றார் சோமசேகரன்.
“அடச்சீ! சும்மாக் கிடங்க..நிர்மலா! நான் அப்புறமா உங்கிட்ட பேசறேன்.”
“ஏம்மா, நிர்மலா! அப்ப டாக்டரைக் கூப்பிட வேணாம்னா சொல்றே?”
“வேணாம், மாமா. இப்ப ஒண்ணுமே இல்லே. சரியாயிடிச்சு.”
மூவரும் அதன் பின் சாப்பிட்டு முடித்தார்கள். சாப்பாட்டு மேசையைத் துப்புரவு செய்ய முனைந்த நிர்மலாவைத் தடுத்துவிட்டு, சாரதா தானே அதைச் செய்ய முற்பட்டாள்.
“நீ போய் உன் ரூம்ல படுத்துக்க, நிர்மலா.. .. ஒரு நிமிஷம். . . இங்க வா. நீ எப்ப குளிச்சேன்னு கேட்டேனே?”
“அது இல்லேத்தை,” என்று வெட்கிய நிர்மலா தன்னறைக்குப் போய்க் கதவைத் தாழிட்டுக்கொண்டு படுத்தாள்.
சோமசேகரன் எழுந்தார். “நிர்மலா!” என்றவாறு மருமகளின் அறைக் கதவை விரலால் இலேசாய்த் தட்டினார். நிர்மலாவிடமிருந்து உடனே பதில் இல்லை. ஆனால் அவள் புரண்டது வளையல்களின் ஓசையிலிருந்து புலப்பட, அவர் கதவருகே நின்றார்.
“என்ன, மாமா?” – எழுந்து வந்து கதவைத் திறந்து பேசாமல் உள்ளே இருந்தபடியே அவள் கேட்டது அவர் புருவங்களை உயர்த்தியது. குரல் சற்றே கம்மி ஒலித்ததால், அவருக்குத் திகைப்பாய் இருந்தது.
“கதவைத் தாப்பாப் போட்டுக்காதேம்மா. வெறுமென சாத்திக்க.”
“சரி, மாமா!” என்ற அவள் உட்புறத் தாழ்ப்பாளை நீக்கிவிட்டு – ஆனால் கதவைத் திறந்து ஒரு மரியாதைக்காகக் கூடத் தம்மைப் பார்க்காமலே – திரும்பிப் போய்க் கட்டிலில் படுத்துக்கொண்ட ஓசை கேட்க, அவர் மேலும் திகைத்தார். பிறகு தமது நாற்காலிக்குத் திரும்பி நாளிதழைத் தாம் நிறுத்திய இடத்திலிருந்து படிக்கலானார். ஆனால், அவர் மனம் அதில் ஈடுபடவில்லை. ‘திடீர்னு மூட் அவ்ட் ஆன மாதிரி தெரியுதே மருமகப்பொண்ணு!’
“சாரதா! வேலையை முடிச்சுட்டு இங்கே கொஞ்சம் வா. பேசணும்.”
“சரிங்க.”
ஐந்தே நிமிடங்களில், ஈரக்கையைப் புடைவையில் துடைத்தவாறு வந்த சாரதா அவருக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு, “என்னங்க?” என்றாள் வியப்பாக.
நாளிதழை மடித்து வைத்துவிட்டு நிமிர்ந்த சோமசேகரன், “நிர்மலாவுக்கு மேலுக்குச் சொகமில்லேன்னுதான் தோணுது. ரூமுக்குள்ளேருந்து எனக்குப் பதில் சொன்னப்போ, குரல் ஒரு மாதிரி கம்மி இருந்திச்சு. அழறாளா என்னன்னு தெரியல்லே. நீ போய் நாசூக்கா விசாரி,” என்றார்.
“சரி.”
சாரதா கதவை மெதுவாகத் தள்ளினாள். கதவுக்கு வெளியே தப்படி ஓசை கேட்டதுமே, நிர்மலா சுவர்ப்பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டுவிட்டாள். அவசரமாய்க் கண்களைத் துடைத்துக்கொண்டு, தூங்கிவிட்டாற்போல் பாசாங்கு செய்யத் தீர்மானித்து அசையாமல் இருந்தாள். சன்னமாகவும் சீராகவும் முச்சுவிட்டாள்.
ஓசைப் படுத்தாமல் கதவைத் திறந்த பின் உள்ளே வந்த சாரதா, “நிர்மலா! நிர்மலா!” என்று மெல்ல அழைத்தாள்.
தான் செய்திருந்த முடிவின்படி நிர்மலா துளியும் அசையாமல் சீராக மூச்சுவிட்டபடி இருந்தாள். “தூங்கிட்டா போலிருக்கு!” என்று முனகியபடி சாரதா வெளியே போனாள். சோமசேகரன் சொன்னபடி கதவைத் திறந்து வைத்தாள். பின் அவரெதிரே வந்து உட்கார்ந்தாள்: “அதுக்குள்ள தூங்கிட்டாங்க. அசதின்னு தோணுது. இந்த ரெண்டு மாசத்திலே அவ பகல் நேரத்துல படுத்ததே இல்லே. ஏதாவது புக் தான் படிச்சிட்டிருப்பா. “
“அப்ப டாக்டர் கிட்ட காட்டலாமா?”
“தூங்கி எந்திரிக்கட்டும் முதல்ல. அப்புறமா அதைப் பத்தி யோசிக்கலாம். . . அவ கர்ப்பாமா யிருக்குறாளோன்னு சந்தேகமா யிருக்கு.”
“அதுக்குள்ளேயேவா!”
“ஏன்? அதுக்குள்ள ஆகக்கூடாதுன்னு ஏதாச்சும் சட்டமா? கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் ஆயிடிச்சே? முதல் குளியல் தள்ளிப் போனதுமே சிலருக்கு உடம்பைப் படுத்தத் தொடங்கிறுமே? அதான் எப்ப குளிச்சேன்னு கேட்டேன். காலையில ஆறு மணிக்குன்னு ஏட¡கூடமா நீங்க பதில் சொன்னீங்க!”
“சரி. எதுவா யிருந்தாலும் டாக்டர் வந்து பாத்துடட்டுமே?”
“ஆமாமா. பாத்துடட்டும். . .”
அறைக் கதவு திறந்திருந்ததால், மாமனாரும் மாமியாரும் பேசியது நிர்மலாவின் செவிகளில் விழுந்தது. தான் மயக்கமுற்று விழப் பார்த்தது எதனால் என்பது தெரிய வந்தால் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்த போது அவளது இதயம் தாளம் தப்பித் தாறுமாறாய்த் துடிக்கத் தொடங்கியது. நவனீதகிரு¢ஷ்ணனைப் பற்றி நினைக்க நினைக்க, அவளுள் சகிக்கமுடியாத ஆத்திரம் பெருகியது. ‘கடன்காரப்பாவி! நான் இருக்கிற இடம் அவனுக்கு எப்படித் தெரிந்தது? இனி அவனுடைய தொல்லைகள் தொடரும். பணம் பறிக்க ஏதேனும் திட்டம் போடுகிறானோ?. . . ‘ – நிர்மலா நடுங்கினள்.
.. .. .. சகுந்தலாவுக்குத் தூக்கம் வரவில்லை. உடல் மட்டுமல்லாது உள்ளமும் பலவீனமாக இருந்ததால், மிகவும் சோர்வக உணர்ந்தள். விரக்தியின் விளிம்பில் இருந்த அவளுக்குத் தான் வாழப் போவது இன்னும் கொஞ்ச நாள் தான் என்று தோன்றியது. இம்மாதிரி நேரத்தில் மனிதருள் பொதுவாக எழும் கடந்த கால நினைவுகள் அவளுள்ளும் எழுந்தன.
பள்ளி நாள்களில் அவள்தான் வகுப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தாள். பத்திரிகைகளை இரவல் வாங்கி நிறையவே கதைகள் படித்ததால் மிகச் சிறிய வயதிலேயே காதல் பற்றிய கருத்துகள் அவள் உள்ளத்தில் கருக்கொண்டன. காதலிக்காத ஒருவனை மணப்பது என்பது ஏலக்காய் போடாத பாயசத்தைப் பருகுவது போன்றது எனும் எண்ணம் பதினைந்துக்கும் குறைவான வயதிலேயே அவளுக்குத் தோன்றிவிட்டது. அவள் ஊரில் அவள் அப்பா பெரிய மிராசுதார். அவர் அதிகம் படிக்காவிட்டாலும் பெண்கள் படிக்க வேண்டும் என்கிற எண்ணங் கொண்டவர். ‘அப்பா!அந்த உங்கள் உயர்ந்த எண்ணம் கடைசியில் உங்களுக்கே யல்லவா தலைக் குனிவை ஏற்படுத்திவிட்டது! இளமையின் உந்துதலில் நான் கருணாகரனோடு ஓடிப் போனது உங்களுக்கு எத்தகைய அவமானத்தை ஏற்படுத்தி யிருந்திருக்கும்! நீங்கள் கடைசி வரையில் என்னை மன்னித்திருக்கவே மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.. .. ..’ – இப்படி நினைத்த போதெல்லாம் அவளுள் குற்ற உணர்ச்சி பரவியது.
பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போதுதான் தன் வகுப்பு மாணவனான கருணாகரனுடன் அவளுக்குப் பழக்கம் ஏற்பட்டது. சில பாடங்களில் அவளும், சிலவற்றில் அவனும் முதலாவதாக வந்து ஆசிரியர்களின் கவனத்துக்கு ஆட்பட்டார்கள். எனினும், மொத்த மதிப்பெண்கள் என்று வரும்போது அவளே முதல் இடத்தைப் பெற்றாள். ‘என்னப்பா, கருணா! பொட்டப் புள்ள முதல் ரேங்க் வாங்குது? அதை முந்த விடலாமா நீ?’ என்று ஓர் ஆசிரியர் அவள் முன்னிலையிலேயே அவனை வினவிய போது, ‘பொட்டப்புள்ளன் னெல்லாம் சொல்லாதீங்க, சார். அது மட்டமான வார்த்தை, சார்’ என்று அவன் பதில் சொன்ன கணத்தில்தான் அவன் அவள் உள்ளத்தில் இடம் பிடித்தான். ஆசிரியருக்கு முகம் இருண்டு போயிற்று. இப்படி நடந்த அன்று மாலை பள்ளி விட்டு வெளியே வந்த போது தற்செயலாக எதிரெதிரே சந்திக்க நேர்ந்த இருவரும் புன்னகைப் பரிமாற்றம் செய்துகொண்டார்கள். அதுதான் அவர்களது முதன் முதலான இதயப் பரிமாற்றம் என்று சொல்லவேண்டும்.
சகுந்தலாவுக்கு அப்போது பதினாறு வயதுதான். அவனுக்குப் பதினெட்டு வயது. தாமதமாய்ப் பள்ளியில் சேர்க்கப்பட்டதால், அவனுக்கு அத்தனை வயதாகியது. அரைத் தேர்வு விடுப்பின் போது ஒருநாள் தற்செயலாகப் பலசரக்குக் கடை வாசலில் சந்தித்துக்கொண்ட போதுதான் அவன் தன் காதலை அவளிடம் நாசூக்காயத் தெரிவித்தான். ‘ சகுந்தலா! உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். . .’ என்று அவன் சன்னக் குரலில் சொன்ன கணத்திலேயே அவளுக்குப் புரிந்துவிட்டது அவன் என்ன சொல்லப் போகிறான் என்பது! ‘சொல்லு, கருணா’ என்ற அவளது அனுமதிக்கு, ‘இங்கே முடியாது, சகுந்தலா. இன்னைக்கு சாயங்காலம் கோவில்ல சந்திக்கலாமா?’ என்றான் அவன். அவளும் சம்மதித்துச் சென்றாள். பிரகாரத்தைச் சுற்றிய படியே அவன், ‘உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, சகுந்தலா. உனக்கு எப்படின்னு தெரியல்லே,’ என்றான். அவள் வெட்கிச் சிரித்து விட்டு, “எனக்கும்தான். ஆனா, நான் படிப்பை முடிச்ச பெறகுதான் கலியாணப் பேச்சை எங்க வீட்டில எடுப்பாரு எங்கப்பா. எங்க அத்தை மகனுக்குத்தான் தரணும்னு பேச்சு. ஆனா எனக்கு அவனைக் கட்டோட பிடிக்காது. அவனைப் பிடிக்காதுன்னு எத்தினியோ வாட்டி அப்பா கிட்டவே சொல்லியாச்சு. ஆனா கேக்குறதா இல்லே. அதனால ரொம்பவே சிக்கல் இருக்கும்’ என்று அவள் சொன்னாள்.
‘உங்க அத்தை மகனை உனக்கு ஏன் பிடிக்கல்லே? எப்பவுமே அப்படியா, இல்லாட்டி சமீப காலமாவா?’ என்று அவன் கேட்டான். ‘எப்பவுமேதான். ஏன்னா, அவனுக்குப் படிப்பு வரல்லே. ஆறாங் கிளசுக்கு மேல தாண்டல்லே. கிராமத்துல பலசரக்குக் கடை சின்னதா வெச்சிருக்கான். பார்க்கவும் நல்லாவே இருக்க மாட்டான். ராட்சசன் மாதிரி இருப்பான். அதான். அவனைப் பிடிக்கல்லேன்றதை நான் ரொம்ப நாளாவே சொல்லிட்டிருக்குறேன்.. எனக்கு அம்மா கிடையாதுன்னு தெரியுமில்லே?’ என்றாள் அவள். ‘தெரியும். . .’ என்ற கருணாகரன் சில நொடிகளுக்கு மவுனமாக இருந்துவிட்டுச் சொன்னான்: ‘அப்படின்னா, இதுக்கு ஒரு வழிதான் இருக்கு. . .’ அவளுக்குப் புரிந்தாலும், ‘என்ன?’ என்று கேட்டாள். அதை அவன் தன் வாயாலேயே சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.
‘அதை எப்படிச் சொல்றதுன்னு தெரியல்லே. நீ என்ன நினைப்பியோன்னு பயமா இருக்கு,’ என்றான் அவன். ‘பரவால்லே. சும்மா சொல்லுங்க,’ என்று அவள் ஊக்கியதும் அவன் கேட்டான்: ‘இப்ப கலியாணம் வேணாம்னு பிடிவாதம் பிடிச்சு உன்னால அதை ஒத்திப் போட முடியாதில்லே?’ ‘முடியவே முடியாது, கருணா. கட்டாய்ப் படுத்திக் கலியாணத்தை நடத்தி வெச்சுடுவாரு எங்கப்பா,’ என்றாள் அவள். ‘ அப்ப, ஓடிப் போய்க் கலியாணம் பண்ணிக்கிறது ஒண்ணுதான் வழி. அது தப்புன்னு எனக்குத் தெரியும். ஆனா வேறெ என்ன செய்யிறது?’ என்றான் அவன். அவன் அதைத்தான் சொல்லுவான் என்பது அவள் எதிர்பார்த்த ஒன்றாயினும், அதைக் கேட்டதும் அவளுக்குத் திக்கென்றது. உடம்பு நடுங்கியது. அப்படி ஒரு முடிவு அவளுக்குச் சம்மதமாக இல்லை. ஓடிப் போய்ச் சீரழிந்த பெண்களே அதிகம் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஓடிப்போனால் வாழ்க்கை சரியாக அமையுமா அமையாதா என்பது ஒரு பெண் யாருடன் போகிறாள் என்பதைப் பொறுத்ததாக இருக்கும் என்று அவள் முதிர்ந்த மனத்தோடு நினைத்தாள். காதலன் மிக நல்லவனாக இருந்தாலல்லாது அது சாத்தியமானதன்று என்பதை அவள் அறிந்திருந்ததாள். அவள் ஆழமாக அவனை நோக்கினாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்த அவன் விழிகளில் அன்பும், ஒழுக்கமும் அளவற்றுத் தெரிந்தன. அவற்றில் ஆசையோ பொறுக்கித்தனமோ இல்லை என்பது அவளது உள்ளுணர்வுக்குப் புரிந்தது.
‘கருணா! முதல்ல நீங்க படிச்சு முடிக்கணும் உங்களுக்கு ஒரு வேலையும் கிடைக்கணும் இல்லியா? அதுக்கு அப்பாலதான் நாம ஓடிப் போகலாம். அது வரையில் எங்கப்பா என்னை விட்டு வெச்சிருப்பாரான்றது சந்தேகம் தான். எங்க அத்தையம்மா போன வருஷமே கலியாணம் பண்ணிடச் சொல்லி கிளம்பி வந்துட்டாங்க. அப்பாதான் படிப்பு முடியட்டும்னுட்டாரு. இல்லாட்டி போன வருஷமே எனக்கு அந்த ராட்சசனோட கலியாணம் நடந்து முடிஞ்சிருக்கும். பாக்கலாம். முடிஞ்ச வரைக்கும் தாக்குப் பிடிக்கறேன். அதுக்குள்ள உனக்கு எப்படி வேலை கிடைக்கும், கருணா?’ – அதற்கு அவன், சென்னையில் தன் நண்பன் ஒருவன் இருப்பதாகவும், படித்து முடித்ததும் பியூன் வேலைக்குத் தன்னால் நிச்சயம் ஏற்பாடு செய்ய முடியும் என்று சொல்லியுள்ளதாகவும் அவளிடம் தெரிவித்தான். ‘அப்ப, பாக்கலாம். அப்படி இல்லாட்டியும், நீங்க சொல்ற வழிக்கு நான் சம்மதிக்கிறேன். அப்புறம் கடவுள் விட்ட வழி,’ என்றாள் அவள் பெரிய மனுஷி போல. பின்னர், ‘நாம அடிக்கடி இங்கே சந்திக்கக் கூடாது. உங்களுக்கு ஏதாச்சும் எங்கிட்ட சொல்லணும்னா, என் பேரையோ உங்க பேரையோ குறிப்பிடா¡ம ஒரு லெட்டர் எழுதி அதோ அந்த அரசமரத்தடிப் பிள்ளையார் சிலைக்குப் பின்னாடி ஒரு செங்கல்லுக்கு அடியில மடிச்சு வைங்க. நானும் என் பதிலை அப்படியே உங்களுக்கு அனுப்பறேன். . . ‘ அவனும் சம்மதித்தான். ‘அப்பால இன்னொண்ணு, கருணா! நாம அடிக்கடி இப்படிப் பிரகாரத்தைச் சுத்திக்கிட்டே பேசக் கூடாது. யாராச்சும் கவனிக்கத்தான் செய்வாங்க. அதனால வேண்டாம்.’
‘கரெக்ட், சகுந்தலா. வெள்ளிக்கிழமைகள்ளே மட்டும் பேசலாம். அக்கம் பக்கம் பாத்துட்டுத்தான். அதோ நீ சொன்ன அந்தப் பிள்ளையார் மேல சத்தியமா நான் உன்னைக் கடைசி வரையில காப்பாத்துவேன்’ என்ற கருணாகரன் தன் வாக்கைக் காப்பாற்றத்தான் செய்தான். அவளுடைய விதிதான் அவளைக் காப்பாற்றவில்லை.
கழுகுக்கு மூக்கில் வேர்த்தது போல், அவள் தேர்வு எழுதிய மறு வாரமே அவள் அத்தை பாக்கியம் கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்துவிட்டாள். வந்த அன்றே திருமணப் பேச்சையும் ஆரம்பித்தாள்: ‘என்னப்பா, லோகு! எம் மருமவ படிப்பை முடிச்சுட்டா. வர்ற முகூர்த்தத்திலேயே கலியாணத்தை நடத்திறலாமில்ல?’
‘அதுக்கென்னக்கா? ஆனா, அதுக்கு முன்னாடி முத்துவும் ப்ரைவேட்டா பத்தாப்புப் பரீட்சை எழுதித் தேறினா நல்லாருக்கும். என்ன? கொஞ்சம் தாமதமாகும். அதனால என்ன? என் மக உன் மகனுக்குத்தான். கெணத்துத் தண்ணிய வெள்ளமா கொண்டுட்டுப் போயிறும்?’ என்ற லோகநாதன் சிரித்தார்.
சகுந்தலா தன் அச்சத்தை உதறிவிட்டு, ‘அத்தே! இத பாருங்க. எனக்கு அத்தானைப் பிடிக்கலைன்றதை எத்தினியோ வாட்டி அப்பா கிட்ட சொல்லிட்டேன். இப்ப உங்க கிட்டவும் சொல்றேன். என்னால அத்தானைக் கட்ட முடியாது! நீங்க உங்க மகனுக்கு வேற எடம் பாருங்க!’ என்று திட்டவட்டமாக அறிவித்தாள்!
(தொடரும்)
- சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2013
- மரண தண்டனை எனும் நரபலி
- BISHAN-TOA PAYOH DEEPAVALI FIESTA 2013 Date: 24 November 2013, Sunday – Singapore
- க லு பெ (தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி , தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்)
- நான் யாரு?
- மருத்துவக் கட்டுரை – கல்லீரல் கரணை நோய் Cirrhosis Liver
- அட்டை
- புகழ் பெற்ற ஏழைகள் 32.உலகின் சிறந்த சிறுகதையாசிரியராகத் திகழ்ந்த ஏழை……..
- வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 1
- திருவருட்பா முற்றோதல் நிகழ்வின் அறிக்கை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 48 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) பெண்ணின் வடிவழகு ..!
- பனம்பழம்
- அதிரடி தீபாவளி!
- சீதாயணம் படக்கதை -6 [சென்ற வாரத் தொடர்ச்சி]
- தாகூரின் கீதப் பாமாலை – 88 நான் பாடும் கானம் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
- 90களின் பின் அந்தி –
- நெய்தல் நிலத்து குறுந்தொழில்கள்
- ஜாக்கி சான் 15. நரகமாகிப் போன மாயலோகம்
- தமிழ் ஸ்டூடியோ இரண்டு நிகழ்வுகள்
- நுகம்
- திண்ணையின் இலக்கியத் தடம் -8 நவம்பர் – டிசம்பர் -2000
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-8 துவாரகா வாசம்.
- மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
- தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை
- என்னுலகம்
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 24
- விளம்பரக் கவிதை
- படித்துறை
- மருமகளின் மர்மம் – அத்தியாயம் 2
- நீங்காத நினைவுகள் – 22
- பேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013
- அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
- ஆசியாவிலே முதன்முதல் செந்நிறக் கோள் நோக்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி
- Shraddha – 3 short plays from Era.Murukan