அப்போது என் வயது ஆறு. எங்கள் கிராமத்துப் பள்ளியில் பயின்று வந்தேன். அது ஆரோக்கியநாதர் ஆலயம். அதில்தான் பள்ளியும் நடந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஆலய ஆராதனை நடைபெறும்.
தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் ஆரம்ப காலத்தில் தரங்கம்பாடியிலிருந்து இங்கு வந்த ஜெர்மன் நாட்டு இறைப்பணியாளர்களால் ( Missionaries ) கட்டப்பட்டது இந்த ஆலயமும் பள்ளியும்.
அது கிறிஸ்துவப் பள்ளியாக இருந்தாலும் பெரும்பாலான பிள்ளைகள் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இந்து பிள்ளைகளே அதிகம் இருந்தனர்.
ஒரு நாள் அம்மா கையில் ஒரு கவருடன் அங்கு வந்தார். அந்தக் கவரின் ஓரங்களில் நீளமும் சிவப்பு நிறத்தில் கட்டங்கள் போடப்பட்டிருந்தன. அதை அப்போது ” ஏர் மெயில் கவர் ” என்பார்கள். வெளிநாடுகளிலிருந்து வரும் தபால் அப்படிதான் இருக்கும் என்பார்கள்.அதன் இடது பக்க மூலையில் ஒரு விமானத்தின் படம் கூட காணலாம்.
அந்த கடிதத்தை ” தூங்க மூஞ்சி வாத்தியாரிடம் ” தந்தார். அவர்தான் என் வகுப்பு ஆசிரியர். கிறிஸ்துவர்தான். அவர் பெயர் எனக்குத் தெரியாது. அவரை நாங்கள் எல்லாரும் அப்படிதான் கூப்பிடுவது வழக்கம். அவர் பாடங்களை சீக்கிரமாக முடித்துவிட்டு வகுப்பிலேயே படுத்து தூங்குவார். கொஞ்ச நேரத்தில் உரக்க குறட்டை இடுவார். அது கர்நாடக சங்கீதம் போன்று ஒலிக்கும். அப்போது நாங்கள் ஏதாவது பாடம் மௌனமாகப் படித்துக்கொண்டோ அல்லது எழுதிக்கொண்டோ இருப்போம்.
யாராவது சந்தேகமானப் பேர்வழி பள்ளி அருகே வருவது தெரிந்தால் அவரை எழுப்பிவிடுவோம். பள்ளி இன்ஸ்பெக்டர்கள் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு மாறுவேடத்தில் வரும் பழக்கமுடையவர்கள்!
. அப்போதெல்லாம் ஆசிரியர் என்றால் ஊரில் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.
பள்ளி சிறார்களான நாங்கள் பள்ளி முடிந்ததும் ஆசிரியரின் வீட்டு வேலைகளும் செய்வோம். வீடு கூட்டுவது, வாசல் பெருக்குவது, கோழிக்கூண்டு சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, சட்டி, பானை, தட்டு , டம்ளர் ஆகிய பாத்திரங்களை ஆற்று நீரில் கழுவுவது போன்ற ” எடுபிடி ” வேலைகளும் செய்துவந்தோம். அவரின் வீடு ஆலய – பள்ளியின் பக்கத்திலேயே இருந்தது.
ஊரில் பெரும்பாலோர்க்கு படிக்க எழுத தெரியாது. தபால் கொண்டு வருபவரிடமே கடிதத்தைப் படிக்கச் சொல்வார்கள். பதில்கூட அவர்களே எழுதித் தருவதுண்டு.
அம்மாவுக்கும் படிக்கத் தெரியாது. அவருக்கு கடிதம் படிப்பதும் பதில் எழுதுவதும் தூங்க மூஞ்சி வாத்தியார்தான்.
கடிதம் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தது. அப்பாதான் எழுதியிருந்தார்.
அம்மாவையும் என்னையும் சிங்கப்பூருக்கு அழைத்துக்கொள்ளப்போவதாக அதில் எழுதியிருந்தார். உடன் பாஸ்போர்ட் எடுக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார். விரைவில் கப்பல் டிக்கட் அனுப்புவதாகவும் குறிப்பிட்டிடுந்தார். அவர் அதை உரக்கப் படித்ததால் மாணவர்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் தென்பட்டது.
அப்பா சிங்கப்பூர் சென்று ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. நான் பிறந்தபோதுகூட அவர் ஊரில் இல்லை. என்னைப் பார்க்கக் கூட வரவில்லை. அவர் எப்படி இருப்பார் என்பது கூட எனக்குத் தெரியாது.
முன்பெல்லாம் சிங்கப்பூர் மலாயா சென்றவர்கள் இப்படிதான் குடும்பத்தை இங்கே விட்டுவிட்டு பல வருடங்கள் தனித்து வாழ்ந்துள்ளனர்.
மனைவி கருவுற்றிருப்பதுகூட அப்போது பெரிதாகத் தெரியாமல் சிங்கப்பூர் சென்றுள்ளனர். அப்பாவின் நிலையும் அப்படிதான். தாத்தாவுடன் சண்டையாம். கோபத்துடன் வெளியேறியவர் கடலூர் சென்று கப்பல் ஏறிவிட்டாராம். அப்போதெல்லாம் கடப்பிதழ் தேவையில்லையாம்.
துறைமுகத்திலேயே பணம் கட்டிவிட்டு கப்பலில் எறிக்கொள்ளலாமாம். அப்படிச் சென்றவர் திரும்பி வரவேயில்லை. அங்கு தமிழ் ஆசிரியராகப் பணி புரிகிறாராம்.
அண்ணன் சென்னையில் அத்தை வீட்டில் தங்கி படித்து வந்ததால் மாதந்தோறும் தவறாமல் அங்கு பணம் அனுப்பி விடுவாராம். அண்ணனுக்கு வயது பதின்மூன்று. அவரை அங்கேயே விட்டுவிட்டு நாங்கள் இருவரும் சிங்கப்பூர் செல்கிறோம்.
அன்று மாலை பள்ளி முடிந்து வீடு சென்றதும், அந்த செய்தி ஊர் முழுதும் தெரிந்துவிட்டது. பார்ப்போர் அனைவரும் அது பற்றியே கேட்டனர்.
தாத்தா முகத்தில் மகிழ்ச்சி இல்லை. அவர்தான் என்னை சிறு குழந்தைமுதல் செல்லமாக வளர்த்தவர். நான் பிரிந்து செல்வதில் அவருக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆனால் அவரால் என்ன செய்ய முடியும்?
மாமாதான் எங்களை சிதம்பரம் இட்டுச் சென்று புகைப்படம் பிடித்து கடப்பிதழுக்கு மனு செய்தார். அது கிடைக்க சில வாரங்கள் ஆனது. அதன்பின் அம்மை குத்திக்கொண்டோம். அப்போது இது வழக்கில் இருந்தது.
அப்பா கப்பல் டிக்கட் அனுப்பிவிட்டார். ரஜூல்லா கப்பல். சென்னை துறைமுகத்திலிருந்து புறப்படும். ஏழு நாட்கள் கடல் பிரயாணம்.
கப்பலில் செல்லப்போவது மகிழ்ச்சியைத் தந்தாலும், ஒரு வகையில் பயமாகவும் இருந்தது. நான் கடலையோ கப்பலையோ பார்த்ததில்லை.
நாங்கள் இரயில் மூலம் தாம்பரம் சென்று அத்தை வீட்டில் மூன்று நாட்கள் தங்கிவிட்டு அண்ணனிடமும் சொல்லிவிட்டு கப்பல் ஏற முடிவு செய்தோம்.
அதிரசம், முறுக்கு , கெட்டி உருண்டை, சீடை போன்ற பலகாரங்களை அம்மா செய்து டின்களில் அடைத்து வைத்தார்.
தாத்தா ஒரு ஆடு வெட்டி, கறியில் மஞ்சள் பூசி காயவைத்து ஆட்டு வத்தல் செய்து தனி டின்னில் அடைத்து தந்தார்.
கப்பலில் நிறைய சாமான்கள் கொண்டுபோகலாம் என்பதால் அரிசி, அவல், உளுந்து, பயிர் கூட பைகளில் போட்டு முடித்து டின்களில் அடைத்தார்கள்.
அன்று கிராமத்தில் தங்கும் கடைசி இரவு. விடியறகாலையில் இரயிலடி செல்லவேண்டும். அதிகாலையிலேயே மாட்டு வண்டி கட்டி சிதம்பரம் செல்ல வேண்டும்.
அன்று ஊராரிடம் பயணம் சொல்ல அம்மாவுடன் நான் சென்றேன். ஒவ்வொரு வீடாகச் சென்றபோது என்னைக் கட்டி அணைத்து முத்தமிட்டு கையில் காசு தந்து வழியனுப்பினர். நான் அவர்கள் தந்த காசை உடனே என்னுடைய சிலுவார் பையில் போட்டுக்கொண்டேன். அதுபோன்று சுமார் ஐம்பது வீடுகள் சென்றபின்பு வீடு திரும்பினோம்.
முதல் வேலையாக காசுகளை வெளியே எடுக்க சிலுவார் பைக்குள் கையை விட்டேன். அதில் ஒரு காசுகூட இல்லை! அதில் பெரிய ஓட்டைதான் இருந்தது!
( முடிந்தது )
- நெல்லுக்குப் பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்!
- தெற்காலை போற ஒழுங்கை
- In the mood for love (ஹாங்காங், இயக்குநர் – வொங் கர் வாய்)
- 2013 ஆண்டு முடிவுக்குள் பரிதியிலே துருவ மாற்றம் நிகழ்ந்து விடலாம் .. !
- ஒரு பேய் நிழல்.
- மெய்த்திரு, பொய்த்திரு
- அருளிச்செயல்களில்வாலியும்சுக்ரீவனும்
- திண்ணையின் இலக்கியத் தடம் -9
- புகழ் பெற்ற ஏழைகள் 33.உலகின் ஒப்பற்ற ஓவியக் கலைஞனாகத் திகழ்ந்த ஏழை…
- மொழி வெறி
- இலக்கியச்சோலை நிகழ்ச்சி எண்: 143 நாள் :24-11-2013 இடம்: ஆர்.கே.வி.தட்டச்சகம் கூத்தப்பாக்கம்,கடலூர்.
- தாகூரின் கீதப் பாமாலை – 89 கண்ணீர்ப் பூமாலை .. !
- ஓட்டை
- அடைக்கலம்
- துண்டுத்துணி
- NJTamilEvents – Kuchipudi Dance Drama
- கம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வரங்கம் – 15 & 16 மார்ச், 2014
- சீதாயணம் படக்கதை -7 சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் தொடர்ச்சி]
- இரு ஓவியர்களின் உரையாடல்கள்
- தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! -25
- அம்மா என்றொரு ஆயிரம் கவிதை
- மருமகளின் மர்மம் 3
- ஜாக்கி சான் 16. தத்துப் பிள்ளையாய்
- அத்தியாயம்-9 பகுதி-4 இந்திரபிரஸ்தம் திரௌபதியின் சுயம்வரம்
- நீங்காத நினைவுகள் -23
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 49 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) முழுமை பெற்ற மாதர் .. !
- வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 2