டௌரி தராத கௌரி கல்யாணம்….! -25

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் 

 

jeyashreeshankarகால்கள் படிகளில் ஏறினாலும் என் மனது  பின்னோக்கி சென்று கொண்டே இருந்தது. பூட்டியிருந்த அறையைத் திறந்து உள்ளே சென்று அந்த ஒற்றைக் கட்டிலில் மல்லாந்து படுத்துக் கண்ணை மூடிக் கொண்டேன். இதயம் வேதனையில் வலித்து கண்ணீர் வழிந்து காது மடலைத் தொட்டதும் சிலீரென்றது. . அந்த சோகத்திலும் ஒரு சுகமான வலியாக ‘மேங்கோ’வின் நினைவுகள் எனக்கே எனக்காக, நினைக்கவே இதமாக இருந்தது.

இப்ப மங்கா….ராஜேஷைக் கல்யாணம் பண்ணீன்டு குழந்தைகளோட இருப்பா…இருக்கணம்.  நான் ஆசைப்பட்டவள்,  அவள் ஆசைப்பட்டவனோட சௌக்கியமா இருந்தா அதுவே போதும். ஆனால், எத்தனை வருஷமானால்  தான் என்ன,  எனது முதல் காதல், ஆழ்மனத்துள் இன்னும் உயிரோட இருக்கே. அதுவே ஆச்சரியம் தான்.

ஆறு வருடங்கள் முன்பு….பனாரஸ் ஹிந்து யூனிவர்சிட்டில படிப்பை முடிச்சுட்டு அலஹாபாத்தில் வேலைக்கு சேர்ந்த புதுசு. என் பெயரை அறிமுகப் படுத்திக் கொள்ளும் போது பக்கத்து சீட்டில் பஞ்சாபி உடையில் தமிழ்முகம்…! பார்த்ததும், . உங்க பேர் என்ன…? என்று தமிழில் கேட்டு அசத்தத் தோன்றவில்லை. அவளது வட்டமுகம். மஞ்சள் நிறம்…மாம்பழத்தை நினைவு படுத்தும் கன்னங்கள்…கருவண்டுகள் படபடத்துக் கொண்டிருப்பது போல கண்கள். மனது அவளது பெயர் என்னவென்று  தெரியாமலேயே ‘மேங்கோ’ என்று சொல்லிக் கொண்டது.

அதற்குள் அவளது டேபிளின் அருகில் உரிமையோடு ஒரு கரம் ஃபைலை தொப்பென்று அடித்து வைத்துவிட்டு ஹிந்தியில் பட பட வென்று எதையோ பேசவும்…..அவளும் அதற்கு ஹிந்தியில் அழகாக பதில் சொல்லியபடி வெட்கப்பட்டுக் குனிந்து கொண்டாள்.

அதிராத அவளது குரல் என்னை என்னவோ செய்தது. வேலை செய்ய விடாமல் என்னை அலைக்கழித்தது அவளது இருப்பு…மனதை அலைபாய வைத்தது. அடிக்கடி இருக்கிறாளா…தன்னைப் பார்க்கிறாளா என்று ஓரப்பார்வை வீசியபடி காத்துக் கிடந்தது. என்றாலும் அவளை நேருக்கு நேராக ஒரு வார்த்தை பேசக்  கூட  தைரியம் இல்லாமல் எதுவோ என்னைத் தடுத்தது. தொண்டைக்குள் பந்தாக உருளும் தயக்கம். . நாட்கள் செல்லச் செல்ல,…மனது  முழுதும் அவளது எண்ணங்கள் மட்டுமே ஆக்ரமித்த நிலையில், அவளையே பின்தொடரத் தொடங்கினேன்.

 

அவள் யாரிடமும் அதிகம் பேச மாட்டாள். எதிரே அமர்ந்திருந்தாலும் , வேலையில் ஏதாவது சந்தேகம் என்று ஏதாவது இருந்தால் கூட அங்கிருத்தே  என்னிடம் கேட்க  மாட்டாள்…எழுந்து வந்து தான் கேட்டு விட்டுப்  போவாள். ஒரு நாள் கூட என்னைப் பற்றி எதையும் தனிப்பட்ட முறையில் கேட்டதேயில்லை. தன்னைப் பற்றியும் எதுவும் அனாவசியமாக சொன்னதில்லை. எல்லோரிடமும் இடைவெளி விட்டுப் பழகும் அவளை அனைவருமே மங்கா…..மங்கா என்று அன்போடு அழைத்துப் பேசுவார்கள்.

 

மார்கெட்டிங் மேனஜர் ராஜேஷ் மட்டும் தான் எல்லாரிடம் பழகுவது போலவே அவளிடமும் நடந்து கொள்ளும்போது எனக்கு கோபமும் எரிச்சலும் கூடவே வரும். இவன் மட்டும் என்ன ஸ்பெஷல்…? என்ற கோபம் வரும்.. வீட்டில் கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கும் போது அவன் முகத்துக்கும் எனக்கும் என்ன வேற்றுமை…என்று கூட யோசித்து ஆராயந்திருக்கிறேன். ம்ம்ம்….ராஜேஷ்…குஜாராத்தி…சப்பாத்தி…! இருக்காதா பின்னே..?

 

நானும் அம்மாகிட்ட சொல்ல ஆரம்பித்தேன்…எனக்கும் இனிமேல் எனக்கும் சாதம் வேண்டாம்….சப்பாத்தி பண்ணேன்….இந்த தயிர் சாதமும் மாவடுவும் அலுத்துப் போச்சுன்னு. அம்மாவுக்கே ஆச்சரியம்…எப்பவும் வரட்டு சப்பாத்தி வேண்டாம்னு சொல்ற பிள்ளையா இவன்…? இவனுக்கு என்னாச்சு? என்று என்னை ஒருமாதிரி பார்த்துட்டுப் போவாள்.

மேங்கோ….என் காதல் சாம்ராஜ்யத்தின் பட்டத்து ராணியாக கனவிலும், நனவிலும் வளைய வந்து கொண்டிருந்தாள்.  அம்மாவிடம் எப்படியாவது இதைப் பற்றி சொல்லிவிட வேண்டும். அதற்குமுன் இவளிடம்…..இன்னைக்காவது மனம் திறந்து என் எண்ணத்தை சொல்லி விடலாம். ஆசையில் ஆயிரம் கனவுகள் சுமந்து அவள் வரவுக்குக் காத்திருந்தேன். அவள் ஏனோ ஆபீசுக்கு வரவில்லை. அவள் இல்லாத வெற்றிடம் எனக்கும் சூனியம் பிடித்தது போன்ற உணர்வு. காதலின் சக்தியைப் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அந்த நாள் அமைந்தது தான் உண்மை.

 

யாரிடம் கேட்கலாம்….என் மனம் துடித்து அடங்கியது. ‘மங்கா’ ஊருக்குப் போயிருக்கிறாள் என்று ‘அவன்’ யாரிடமோ சொன்னது காதில் கேட்டதும்….ஊருக்கா…..? எங்கே….? எப்போ மீண்டும் வருவாள்…எனக்குள் பல கேள்விகள். விடை தெரியாத கேள்விகள்….மனத்தைக் குடைந்தெடுத்தது. அவள் வந்ததும் எப்படியாவது சொல்லி விட வேண்டும்…நீ இல்லாத வாழ்க்கை சூனியமானது….அதை நீ இல்லாத போது அனுபவித்தேன்…என் அன்பை ஏற்றுக்கொள்…நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்….உன்னோடு தான் என் வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும்…..நம் வாழ்வின் முடிவு வரை நாம் சேர்ந்து வாழ வேண்டும்..  மனம் நினைத்ததையெல்லாம் எழுதி வைத்தேன். அவளுக்காகக் காத்திருந்தேன்.

 

ஒரு வாரம் கழித்து அவள் வந்தாள். எனக்குள் ஒரு சுடரொளி மீண்டது போல உணர்ந்தேன். என்னைச் சுற்றியிருந்த இருண்ட உலகம் திடீரென்று அவள் வரவால் பிரகாசமானது போல இருந்தது.அவளைப் பார்த்து லேசாக ஒரு புன்னகை வீசி அவள் முகத்தைப் பார்த்தேன். பதிலுக்கு அவளும் லேசாக முறுவலித்தாள். எப்படியோ  மூன்று மணி நேரம் காற்றில் மிதந்தது போலக் கடந்தது.

 

பாதி சீட் டீ குடிக்கக் காலியாகி இருந்தது. யாருமே இல்லாத இந்த நேரம்….எனக்கு சாதகமாக்கிக் கொள்ளலாமா….?  ஓ இதாக்கும் சரியான டைம்…..மெல்ல அவளிடம் சென்று….நீ…..நீ…..நீங்க…..ஒரு வாரமா லீவு போல….இ..இ…இ…இருக்கு….திக்கிப் பேசி அறியாத வாய் திக்கித் திக்கிப் பேசியது எனக்கே வியப்பு. அவளின் பேரழகு என்னை திக்கவும், தவிக்கவும் வைத்தது புரிந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். பிரசாத்து….நீயா இப்படி…..! என்று ஆச்சரியமானேன்.

 

என் காதல் ஜெயிக்க வேண்டும் என்று மனத்துள்  மந்திரம் போல் சொல்லிக் கொண்டேன்.  மெல்ல என் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து எழுதி தயாராக வைத்திருந்ததை எடுத்து அவளிடம் நீட்டிவிட்டு….அவளது பார்வையை நேருக்கு நேர் சந்திக்க இயலாமல் அசட்டுத் தனமாக டேபிளின் மீது வைத்து விட்டு நெளிந்தேன்……வழிந்தேன்……எனக்கே என்னவோ போலிருந்தது. தப்பு பண்றடா பிரசாத்து….! உள் மனது  எச்சரித்துப் பெருச்சாளியாகப் பிறாண்டியது..

 

வேண்டா வெறுப்பாக அந்தக் கடிதத்தை அவள் தொட்டபோது…..எனக்குள் அபாய மணி அடித்தது…நிஜம். முதன் முதலாய், நீ செய்த காரியம் தப்பு என்று பயம் இதயத்தைத் தட்டியது. இருந்தும் அவளது பதிலுக்காக மனது காதலோடு காத்திருந்தது.

 

டிக்…டிக்…டிக்….டிக்….சின்ன முள் வேகமாக நகர்ந்தது..

 

லப் டப்…லப்…டப்….லப் டப்….இதயம் அவள் நினைவை விட்டு நகர மறுத்தது.

 

மாலை வரை எனது ‘கல்யாண மாலை’ பதில் சொல்லவேயில்லை. வீட்டுக்குப் போக பஸ்ஸுக்காக காத்திருந்தேன். உள்ளம்  இன்னும் அவளுக்காக காத்திருந்தது.

 

அவளும் தேவதை போல வந்தாள் .

 

என் நெஞ்சு அவள் தரும் வார்த்தை வரம் கேட்கத் துடித்து பட பட பட வென்று வானம்முட்ட  பறந்து சென்றது.

 

நேருக்கு நேராக….வந்தவள், என்னைப் பார்த்து முறைத்தபடியே ,.“ஐ டோன்ட் ஈவன் லைக் யூ …ஐ மீன் இட்…..ஐ’ம் இன் லவ் வித் ராஜேஷ், டோன்ட் ஃபாலோ மீ…குட் பை. கோபத்தோடு முகத்தை ஒரு வெட்டு வெட்டித் திரும்பினாள்.

 

எனக்குள்  டப டப டப வென்று நான் எங்கோ மலை மேலிருந்து கீழே உருட்டி விடப்பட்டவன் போன்ற உணர்வுடன், “மேங்கோ…’ என்று திரும்பியவனின் முகத்தில் எதிர்பாராமல் ஓங்கி விழுந்தது வேகமாக குத்து. தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று சுத்த….கண்ணுக்குள் ராஜேஷ் கசங்கிக் கசங்கித் கரைந்து காணாமல் போனான். அவர்கள் சென்ற பைக்கின் சப்தம் காதுக்குள் நுழைந்து தலைக்குள் ஓடிச் சென்றது போலிருந்தது.

 

அவள் வரம் தர அங்கு வரவில்லை….என் காலை வாரிக் குப்பைத்தொட்டியில் போடத் தயாராக வந்திருந்தாள் என்பதை உணர்ந்ததும் நான் நடைப்பிணமானேன்.
கடைசியாக அவள் பார்த்த அந்தப் பார்வையும், அவள் சொன்ன சொல்லும் எனக்குள் உறைந்து போனது.  பட்ட அவமானத்தில் அதன் பின்பு நானும் வேலைக்காக அந்த அலுவலக வாசலைக் கூட மிதிக்கவில்லை.

 

காயங்களைக் காலம் ஆற்றியது.  ஆனால்….அந்த ரணம்,,,,,,இன்னுமா..?

 

 

“ஹமே…தும்ஸே ப்யார் கித்துனா….
ஏ ஹம் நஹி ஜானுதே….
மகர் ஜி நஹி சக்குத்தே
தும்ஹாரே பினா….
சுனா கம் ஜுதாயீ கா ,
உட்டாத்தே ஹை லோக்
ஜானே ஜிந்தகி…..”

 

கைபேசி தொடர்ந்து சிணுங்கியது. பிரசாத் திடுக்கிட்டு விழித்தான்.  இத்தனை நேரம் ஆக்ரமித்த நினைவுச் சங்கிலி வெடித்துச் சிதறி நிகழ்காலத்துக்கு அவனை இழுத்துப் போட்டது.

 

கைபேசியை எட்டி எடுத்து படுத்தபடியே காதில் வைத்து….ஹலோ…என்றான் .கம்மிய குரலில்,

 

ஹலோ..என்ன ..பிரசாத்…..இன்னுமா தூக்கம்..?.மணி அஞ்சாகப் போறது? மறந்து போச்சா…..வாங்கோ….கங்கா ஆரத்தி வேற பார்க்கணம் கௌரி தான் படபடத்தாள்.

 

ப்ளீஸ் வெய்ட். இதோ…வந்துட்டேன்….ஜஸ்ட் டூ மினிட்ஸ்…..அவசர அவசரமாக பிரசாத் கிளம்பத் தயாரானான்.

 

 

அம்மா…நீயும் வரியா….கங்கா ஆரத்தி கூட பார்த்துடலாம்…..கௌரி சித்ராவைப் பார்த்துக் கேட்கிறாள்.

 

கௌரி,  நாளைக்கு நாம முதல்ல அலகாபாத் தான் போகணுமாம்…அடுத்த நாள் தான் கயா …அப்ப இன்னும் ரெண்டு நாள் இருக்கே நான் இன்னொரு நாள் பார்த்துக்கறேன்.. இப்ப என்னை காவேரி மாமியாத்துல கொண்டு விட்டுட்டு நீங்க ரெண்டு பேருமா போயிட்டு வாங்கோ.நான் அவாத்தில் பேசிண்டு இருக்கேன்..மாமி வரச்சொன்னா.

 

ம்ம்ம்…அதுவும் சரிதான். அப்ப வா, உன்னையும் குழந்தையையும்  அவாத்தில் விட்டுட்டுப் போறோம். அப்பறமா வந்து அழைச்சுக்கறேன். கெளதம் மட்டும் உன்னோட இருக்கட்டும்..நான் கௌசிக்கை எடுத்துண்டு போறேன். சரியா….எதுவானாலும் எனக்கு போன் பண்ணு.

 

அடுத்த அரைமணி நேரத்தில், கங்கைநதி  கண் நிறைய….விஸ்தாரமாக விரித்து பரந்து சூரியன் மறையும் அந்தி நேரத்தில் வெள்ளி அலைகளாக மின்னிக் கொண்டிருந்தது. வித விதமான வர்ணங்களில் கரையோரம் முழுதும் மனிதர்கள்….முங்கி முங்கி எழுந்து கொண்டிருந்தனர். நீள நீளமாக படகுகள் அங்கங்கே மிதந்து வந்து கொண்டிருந்தது.  பார்க்கும் நிர்மலமான காட்சிகள்..அத்தனையையும் .கௌரியின் மனது  அப்படியே வண்ணப் படங்களாக பதிவு செய்து கொண்டிருந்தது.

 

என்ன கௌரி….ரொம்ப மௌனமா இருக்கே…? அப் கோர்ஸ் இந்த இடம் அப்படித் தான்….இதைப் பார்த்துண்டே நின்னுடலாம்…ஒண்ணுமே பேசத் தோணாது இல்லையா..?

 

ம்ம்ம்….ஆனால், நீ சொல்ல நினைத்ததைச் சொல்லேன். நாமும் ஒரு போட் வாடகைக்கு எடுத்துப்போம்….ஆரத்தி பார்க்க போட்டில் தான் போகணும்னு சொல்றான் பாரு.

 

சரி….போலாம்…கெளசிக்கை  என்கிட்டே தா….என்கிட்டே இவன் நன்னாப் பழகிட்டான்.  பாரேன்…கூப்டதும் வரான் பார்…நீட்டிய பிரசாத்தின் கைகளுக்குள் குழந்தை கெளசிக்  தாவுகிறான் ,

 

இவர்களை ஏற்றிக் கொண்டு படகு மெல்ல நகர்கிறது.

 

நீ இதுக்கு முன்னாடி இங்க வந்திருக்கியா பிரசாத்? கௌரி தான் பேச்சை ஆரம்பிக்கிறாள்.

 

ம்ம்ம்ம்…இங்க காலேஜ்ல தான் படிச்சேன்…பட் ஏனோ…ஒரு தடவை கூட பக்கத்தில் இருந்தும் வரத் தோணலை..அப்பல்லாம் எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே இல்லை…அம்மைக்கு இதுல ரொம்ப வெசனம்.

 

ஓ …… அப்பறம்….பிரசாத்தின்  முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த கௌரியை ஏமாற்றாத பிரசாத்…ஆரம்பிக்கிறான்.

 

ஒண்ணுமில்ல கௌரி….மை பர்ஸ்ட் லவ்….வித் மேங்கோ…….அதைப் பத்தி தான் நினைச்சுண்டு இருந்தேன். தூங்கலை. என்று பார்வையை தூரத்தில் துரத்துகிறான்.

 

வாவ்…..நம்பவே முடியலைப்பா ….யார்ப்பா அந்த லக்கி கேர்ல்..?…ஆமா பிரசாத்…நீ பொய் கூட சொல்வியா? கௌரி பளிச்ரென்று கேட்கவும்…

 

எப்டி கண்டுபிடிச்சே….?

 

இல்ல….என் அப்பாவுக்கு நீ ஒரு லெட்டர் எழுதினே பாரு….அதுல, நான் பார்த்த முதல் பெண் உங்க கௌரி தான்னு ஒரு வரி இருக்கும். அதான்….கேட்டேன்.

 

யெஸ் …..என் அம்மாவுக்குத் தெரிஞ்சு கல்யாணத்துக்காக பெண் பார்க்கன்னு கிளம்பினது உன்னைத் தான் கௌரி. ‘மேங்கோ’ பத்தி அம்மாவுக்குத் தெரியவே செய்யாது.

 

சீக்ரெட்டா மனசுக்குள்ள ஆரம்பிச்சு மனசுக்குள்ளயே அழிஞ்சுடுத்து……டோடல்லா எப்பவும். நான் தான் அன்லக்கி….என்றவன் மெல்ல மெல்ல மொத்த நிகழ்வையும் சொல்லி முடிக்கிறான்.

 

இதெல்லாம் மறந்து போயிட்டேன்னு இத்தனை வருஷங்கள்.என்னையே ஏமாத்திண்டு இருந்திருக்கேன் ,. ஆனா….காவேரி மாமி இல்லடா மடையான்னு..நினைக்க வெச்சுட்டா…பிரசாத் சொல்லி முடிக்கவும்.

 

ஆரத்தி அதற்குள்  தொடங்கிடுத்து பாரேன். இருட்டுல தான் கங்கை எவ்ளோ அழகு…பூரா பூரா லைடிங்க்ஸ்..!

 

பிரசாத்தின் அத்தனை சோகங்களும் இப்போது கௌரியின் மனத்துக்குள் இறங்கியிருப்பதை அவள் முகம் சொன்னது.

 

சாரி….கௌரி…நீ அப்செட் ஆயிட்டியா..?

 

ம்ம்ம்ம்…..அதுக்கு என்ன பண்ண முடியும் இப்போ..? ஆனது ஆயாச்சு..! ஆனா நான் சொல்ல வந்தது ஒரு விஷயம். எனக்காக நீ ஒரு விஷயம் பண்ணுவியா,

 

உனக்காக? தோளை உயர்த்தி கேட்கிறான்.

 

யெஸ் ….இரு ஆரத்தி முடியட்டும்…கேட்கறேன்…நீயும் வேண்டிக்கோ….கெளசிக் …..லைட்ஸ் பாரு…லைட்ஸ்…லைட்ஸ்…அதோ…அதோ…! பிரசாத்….அவனை என்கிட்டே தாயேன்…நான் காட்டித் தரேன்.

 

குழந்தை கை மாறுகிறான்.

 

பயங்கர ஆரவாரத்துடன் வித விதமான  ஜோதியுடன்  ஏழெட்டு பேர்கள் கங்கைக்கு ஆரத்தி காண்பித்து கற்பூரம் ஏற்றிக் காட்டும் அழகே அழகு….காணக் கண்கோடி வேண்டும்…அதன் பிம்பம் ஆற்றில் விழ , அங்கங்கே பக்தர்கள் நீரில் மிதக்க விடும் சின்னச் சின்ன பூத் தட்டுக்களோடு தீபங்கள் கங்கையோடு மிதந்து தவழ்ந்து செல்லும் அழகை ரசித்த வண்ணம் சிறிது நேரம் தன்னை மறந்தே போனாள் கௌரி.  நல்ல தரிசனம்…அப்போ நாம கிளம்பலாம். படகுக்காரன் நினைவு படுத்துகிறான்.

 

படகு திரும்புகிறது. எங்கும் மெல்லிய குளிர் தென்றல் காற்று இதமாக இவர்களோடு சேர்ந்து நடந்து கொண்டிருந்தது. முக்கால் நிலவு இவர்களையே கண்கொட்டாமல் பார்ப்பது போலிருந்தது கௌரிக்கு.

 

இதுவும் கடந்து போகும்ன்னு, எல்லாத்தையும்  மறந்துடு பிரசாத். இங்க வெச்சு கேட்கறேன்….எனக்குத் தோணித்து, உன்னால இந்த ரெண்டு குழந்தைகளோட சேர்த்து என்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேள் இல்லையா?

 

………………..நீண்ட மௌனம்…………பிறகு…….ஒரு ….ம்…..!

 

நீங்க நினைத்தால் அந்தக் காவேரி மாமியோட பெண் மங்களத்தை ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது…? ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை தந்த புண்ணியம் உங்களுக்கு. இது என்னோட சஜெஷன் மட்டும் தான்.  திங்க் பண்ணிப் பாருங்கோ.  ஒருவேளை, எனக்குத் தோணினது உங்களுக்கும் தோணியிருக்கலாம்.

 

சடாரென்று நிமிர்ந்து பார்த்த பிரசாத்……தப்பு கௌரி…தப்பு . உன்கிட்ட சொன்னது,  எங்கம்மாவும் நானும் உன் வீட்டுக்கு வந்தது….ஆல் தட் ஆடெட்.

 

ம்ம்ம்..சரி…ஐம் நாட் கோயிங் டு கம்பெல் யூ . ஆஃப்டரால் திஸ் இஸ் யுவர் லைஃப் . ஐ ஹாவ் மை ஓன் லிமிட்டேஷனஸ்…என்று முனகிக் கொண்டாள்.

 

அதன் பின் இருவரும் ஒன்றுமே பேசாமல் , அவரவர் மனதுக்குள்  பேசிக்கொண்டே வந்தனர்.

 

 

0    0    0     0     0     0     0    0

 

 

அம்மா…..கார்த்தால மூணு மணிக்கெல்லாம் இங்கேர்ந்து அலகாபாத் கிளம்பணும் . கார் சொல்லியாச்சு. சீக்கிரமாத் தூங்கு. ஆரத்தி பார்க்க ரொம்ப பிரமாதமா இருந்தது. நீயும் வந்திருக்கலாம். கெளசிக்  முழிச்சு முழிச்சுப் பார்த்தான் தெரியுமா?

 

நல்ல வேளையா நான் வரலை. நானும் வந்திருந்தால், காவேரி மாமிட்ட மனசு விட்டுப் பேசிருக்க முடியாதுல்லியா? அவாத்துக் கதை நம்மாத்துக் கதையை விடக் கொடுமைடி.

 

உனக்குக் கொஞ்சம் இடம் கிடைச்சால் போதுமே, அந்த மாமிட்ட என்னைப் பத்தி கதை கதையா சொல்லியாச்சா?

 

நான் ஒண்ணும் சொல்லலை…..மாமியாத்துக் கதையைக் கேட்டுண்டு வந்தேன். நான் உன்னைப் பத்தி.மூச்சே விடலை.  நான் சொல்வேனா?

 

அந்த மாமி தான் பிரசாத்தைப் பத்தி…தூண்டித் துருவி விசாரிச்சா. அதுக்கே நான் ஒண்ணுமே வாயைத் திறந்து பதில் சொல்லலை. அவளோட ஃப்ரெண்ட், அம்மா அப்பா கிடையாதுன்னு மட்டும் சொல்லி வெச்சேன். சரி தானே…?

 

எப்டிமா…..? நீ இவ்ளோ புத்திசாலியா மாறினே..? நீ தான் சரியான ஓட்டைப் பானையாச்சே…..கொஞ்சம் வாயைப் பிடுங்கினாலும் கொட கொடன்னு கொட்டிடுவியே…நான் பயந்துண்டே தான் இருந்தேன் தெரியுமா?

 

அடி போடி….நீயொண்ணு , அவாத்துக் கதையைக் கேளேன். அந்தப் பொண்ணு இருக்காளே..

 

யாரு….அந்த மங்களமா ? சும்மாச் சொல்லக் கூடாது…..நல்ல அழகு. ஆனா என்ன, சமையல்கட்டு வாழ்க்கை.

 

அவள் டிகிரி வரைக்கும் படிச்சவளாம் ….கல்யாணம் பண்ணிக்கொடுக்க நிறைய வரன் பார்த்திருக்கா…வந்த வரனெல்லாம் ,.அவா கேட்ட .வரதட்சிணை கொடுக்க முடியாமல் தட்டி தட்டிப் போயிருக்கு பாவம். கடைசியாத் தன்னோட சொந்தத் தம்பிக்கே பண்ணிக் கொடுத்துடலாம்னு மாமி யோசிச்சாளாம். அந்தப் பொண்ணு பண்ணிக்க மாட்டேன்னு அடம் பிடிச்சு, வேலைக்கு போகப் போறேன்னு சொல்லி எங்கெல்லாமோ எழுதிப் போட்டு கடைசியா எங்கியோ போய் வேலைக்கு சேர்ந்துடுத்தாம்.

 

இவ்ளோ அழகான பொண்ணைச் சும்மாக் கல்யாணம் பண்ணிக்காம , டௌரி கேட்ருக்கா  பாரேன்மா …!

 

நம்மாத்துலயும் அதே கதை தானேடி…..கௌரி. இதே…பிரசாத் வந்தாரே…அவனோட அம்மா மட்டும் அன்னிக்கு ஒரு லட்சம் டௌரியா  கையில தருவேளான்னு கேட்காம இருந்திருந்தா…, உன்னோட லைஃப் இப்படியா போயிருந்திருக்கும்?

 

அதான்….நானும் அப்பாவுமா முடிவு பண்ணினோமே…..யாருக்கும் தட்சணை வைக்க மாட்டோம்னு.

 

உங்கப்பாவால கொடுக்க முடியும்….இருந்தும் டௌரி தரமாட்டேன்னு அடம் பிடிச்சார். நீயும் ஒத்து ஊதினே. இவாத்தில் கொடுக்க முடியாத்த நிலைமை…..பாவம். இப்பப் பாரேன்….இந்த டௌரியால வாழ்க்கை எப்படி திசை மாறிப் போயிருக்குன்னு….சொல்லும் போது சித்ராவின் குரல் கம்மித் தழுதழுத்தது.

 

அம்மா…..அழறியா  ? கௌரி மெல்ல கேட்கிறாள்.

 

அழக்கூட முடியலை…கண் முன்னாடி நான் கனவு கண்டு வளர்த்தவள் வாழ்க்கை ஒண்ணுமே இல்லாமே இப்படிச் சீர் குலைந்து போறதைப் பார்த்துண்டு, கௌரி…நானே பிரசாத் கிட்டக் கேட்கப் போறேன்….கௌரியைக் கல்யாணம் பண்ணிக்கறேளா? ன்னு. இது தான் சரியான சமயம். நீங்க ரெண்டு பேரும் தான் ரொம்ப சரியான ஜோடி.

 

விருட்டென்று எழுந்து உட்கார்ந்த கௌரி……இப்படி எதையும் கேட்டு வெச்சு சொதப்பாதே….! உனக்குத் தெரியுமா? நான் இன்னைக்கு அவர்கிட்ட என்ன கேட்டேன்னு..?

 

என்னவாக்கும் கேட்டாய்? சித்ராவும் எழுந்து உட்கார்ந்து கொண்டு தனது புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

 

எனக்கு காவேரி மாமியோட பெண் மங்களம் பத்தி ஒண்ணும் தெரியாது.அன்னிக்கு நீ சொன்னியே, அவங்க ‘விடோ’..ன்னு, அதை நினைச்சா வருத்தமா இருந்தது…ஸோ ..பிரசாத் நீங்க மங்களத்தைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?ன்னு கேட்டேன்.

 

கௌரி….நீ தப்பு பண்றே….! நம்பாத்துக் குழந்தைகள் மேலே அவர் பாசமா இருக்கார். இன்னொரு பொண்ணா ..இருந்திருந்தால், எப்படியாவது வளைச்சுப் போட்டு இந்நேரம் பிரசாத்தை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திண்டு இருந்திருப்பா. நீ பிழைக்கத் தெரியாதவளாயிருக்கே. அட்லீஸ்ட்….இந்தக் குழந்தைகளுக்காவது…அதுகளுக்கு ஸ்கூல்ல சேர்க்கும்போது ஓரு இனிஷியல் வேண்டாமோ? அந்தப் பிரச்சனையை சமாளிக்கவாவது….அதை விடு…நாளைக்கு இந்த சமூகம் அந்தக் குழந்தைகளைப் பார்த்து கேள்வி கேட்டால்….? பிஞ்சு மனசு என்ன துடி துடிக்கும்னு நினைச்சுப் பார்த்தியோ..?  நீ சரின்னு சொல்லுடி…நான் பேசி முடிவு பண்றேன். அப்பவாவது அவரோட அம்மா இருந்தா, டௌரி வேணும்னு கேட்டுண்டு…..!இப்போ தான் யாருமேயில்லையே அவருக்கு.

 

அம்மா…..என்னமோ பேச வந்துட்டு எங்கியோ நீ டாப்பிக்கை  கொண்டு போறே.  என் மனசுக்குத் தெரிஞ்சு கௌசிக்கும் , கௌதமும் கார்த்திக்கோட குழந்தைகள். நான் ஏன் இன்னொருத்தரோட பேரை என்னோட குழந்தைகளுக்கு இனிஷியலா  வைக்கணும்? உனக்கே சொல்ல நன்னாயிருக்கா? மத்தவாளுக்காக மனசாட்சியைக் கொன்னுட முடியுமா?

 

இவாளை இந்த சமூகம் என்ன கேள்விகளைக் கேட்டுட முடியும்? பிஞ்சு நெஞ்சுல விஷத்தை ஏத்தறதுக்கு முன்னால நான் விஷயத்தை விதைச்சுட மாட்டேனா? இந்த சமூகத்தை வாதத்தால் எதிர்த்து நிற்கலாம். நீ தான் உன் பிடிவாதத்தை நிறுத்திக்கணம். ஒண்ணு சொல்றேன், என் குழந்தைகளுக்கு என்னோட பேரைத் தான் நான் இனிஷியலா வைக்கப் போறேன். யார் என்ன எதிர் கேள்வி கேட்டாலும்….ஏன் இந்த சமுதாயமே நேர்ல வந்து எதிர்த்தாலும்….எதிர்க்கட்டும். தலைக்கு மேலே வெள்ளம் போயாச்சு….நான் கோர்ட்டுக்கு கூடப் போய் கேஸ் போட்டு போராடி ஜெயிப்பேன். அம்மா…..ஒன்றை இழந்து இன்னொன்றைப் பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் தீர்வாக அமையும் என்னோட  போராட்டம்.

 

இதுக்காகவெல்லாம் அவனோட காலடியில் விழுந்து என்னை ஏத்துக்கோ கார்த்திக் ன்னு அழறது, இல்லான்னா   இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறது..இது போல அசட்டு பிசட்டுன்னு முடிவெடுக்க மாட்டேன்.

 

கல்யாணம் என்னோட வாழ்க்கையில் தனிப்பட்ட விஷயம். நான் வாழும் வரைக்கும் என் மனசாட்சிக்கு மட்டும் கட்டுப்பட்டு வாழற உரிமையும், அதுவும்  நான்  தனியா வாழணுமா …இல்லைத் துணையோட வாழணமாங்கறதும்  என்னோட தனிப்பட்ட உரிமை  சார்ந்த விஷயம். இதுல தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. நான் இப்போ சந்தோஷமா இருக்கேன்…என்னை அப்படியே இருக்க விடேன்.  நீ யார் கதையும் எனக்கு சொல்ல வேண்டாம்…எனக்குத் தூக்கம் வருது….என்று டபக்கென்று படுத்துக் கொள்கிறாள் கௌரி.

 

இத்தனை நேரம் கௌரி பேசியதைக் குறுக்கே எதுவுமே பேசாமல்  கேட்டுக் கொண்டிருந்த சித்ரா…..’சிவ… சிவ’ என்று சொல்லித் தானும் படுத்துக் கொள்கிறாள்.

 

கௌரி…..!

 

ம்ம்ம்…..!

 

தூங்கிட்டியா…?

 

தூக்கம் என்ன அவ்வளவு லேசா……? கனமான மனத்தை தூக்கத்துக்கு தூக்கத் தெரியாதோ என்னவோ..?

 

நானும் யோசனை பண்ணிப் பார்த்தேன்…நீ சொன்னாப்பல, இந்த பிரசாத்துகிட்ட அந்த காவேரி மாமியோட பொண்ணு மங்களத்தை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நானும் கேட்கறேன். வந்ததுக்கு அந்த ஒரு நல்ல காரியமாவது நடக்கட்டும். காவேரி மாமி ரொம்பச் சொல்லி வருத்தப் பட்டாள்.கடைசில அழுதுட்டா தெரியுமா?

 

அந்தப் பொன்ணு மங்களம், தான் வேலை பார்க்குற ஆபீசுல யாரையோ காதலிச்சு அவனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிண்டு பிடிவாதமா இருந்தாளாம்.

 

லவ்வா,,..டௌரி தொல்லை விட்டதுன்னு, இவா பண்ணித் தந்திருக்கலாமே…?

 

அது சரி..ஆனால், இந்தப் பொண்ணு நம்பிப் போனவன் ஒரு சுத்த அயோக்கியனாம்…..இவளை ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிகறேன்னு சொல்லி ஏமாத்தி அழைச்சுண்டு போய் ஒரு ஹிந்திக்கார  கும்பல் கிட்ட தள்ளி விட்டுட்டு கம்பி நீட்டிட்டான். கொஞ்சம் பணம்  கிடைச்சால் போதும்…காதலாவது இன்னொண்ணாவது.

 

அச்சச்சோ……இதென்னம்மா விஷயம் இப்படிப் போறது.? பாவம்மா மங்களம். அப்பறம் என்னாச்சு?

 

 

(தொடரும்)

 

Series Navigation
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *