நீங்காத நினைவுகள் -23

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா

nskrishnan“சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே” – இந்தப் பாடலை நம்மில் பலர் கேட்டிருப்போம். அவ்வாறு வாழ்ந்தவர் திரைப்பட நகைச்சுவை நடிகர் அமரர் திரு என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள். அதுமட்டுமின்றி, பிறரை நிறையவே சிரிக்க வைத்ததோடு சிந்திக்க வைத்தும் வாழ்ந்த மேதை அவர். ஏட்டுக் கல்விக்கும் மேதைத்தனத்துக்கும் தொடர்பு இருந்துதான் தீர வேண்டும் என்பதாய்ப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் விதிக்கு அவர் விலக்கானவர் – பெருந்தலைவர் திரு காமராஜ் அவர்களைப் போல. (என்.எஸ். கிருஷ்ணனின் பிறந்த தேதியும் நவம்பரில்தான் வருகிறது – 29.11.1908)
அவ்வாறு அவர் சிந்திக்க வைத்தவற்றுள் சிலவற்றைத் தற்போது சொல்லாமல் பிறிதொரு நேரத்தில் சொல்ல எண்ணம். அவை சர்ச்சையைக் கிளப்பும் என்பதால் அன்று. பொருத்தமான தலைப்பில் வேறொரு கட்டுரையை எழுதும்போது அவை பற்றிச் சொல்லலாமே, அவ்வாறு சொல்லுவது சரியாக இருக்குமே என்பதால்தான். மற்றப்படி சர்ச்சைகளைப் பற்றிக் கவலை இல்லை. அது சர்ச்சை செய்கிறவர்களின் கவலை! நிற்க.
பல்லாண்டுகளுக்கு முன் கிருஷ்ணபக்தி என்று ஒரு திரைப்படம் வந்தது. அதில் அமரர் பி.யு. சின்னப்பா அவர்களும், அமரர் டி.ஆர். ராஜகுமாரி அவர்களும் நடித்திருந்தார்கள். என்.எஸ். சிருஷ்ணன் நகைச்சுவைப் பகுதியின் நாயகர். அதில் ஒரு காட்சி. மேடையில் நிற்பது கூடச் சரியாய்த் தெரியாத அளவுக்கு -ஆ அதாவது அவையினர் எம்பி எம்பிப் பார்க்கிற அளவுக்கு – மிகச் சிறிய வயதுப் பெண் ஒருத்தி நாட்டியம் ஆடிக்கொண்டிருப்பாள்.. ஆறு-ஏழு வயதுக்குள்தான் என்று ஞாபகம். அவள் ஆடி முடித்ததும் அவளை ஆட்டுவித்த நட்டுவனாரைப் போட்டுத் தள்ளுவார் என்.எஸ். கிருஷ்ணன். நட்டுவனாருக்கும் சரி, அருகில் இருந்தவர்களுக்கும் சரி ஒன்றும் புரியாது. காரணம் கேட்பவரிடம், என்.எஸ். கே சொல்லுவார்: “ஏன்யா? ஏழு வயசு கூட நிரம்பாத ஒரு சின்னப் பொண்ணுக்கு, ‘கனவில் கண்டேனே, கண்ணன் மேல் காதல் கொண்டேனே!’ அப்படின்னு ஒரு பாட்டுக்கு ஆடச் சொல்லிக் குடுக்கிறாரே இந்த் ஆளு, நாளைக்கு அது வளந்த பிள்ளையாகுறப்போ உருப்படுமாய்யா?” என்று கேட்டு மேலும் அவரை மொத்துவார். (அவர் கேட்ட கேள்வியின் சொற்கள் மாறுபட்டிருக்கலாம். ஆனால் கேள்வி உள்ளடக்கிய கருத்து இதுதான்.)
இந்தக் கேள்வி தம் குழந்தைகளைப் பரத நாட்டியம் கற்றுத்தரும் பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்குத் தோன்றியதுண்டா? பரத நாட்டியப் பாடல்களுள் பெரும்பாலானவை ஏன் சிங்கார ரசத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டு வந்துள்ளன? அதிலும், கற்றுக்கொள்ளும் பெண்ணின் வயது பற்றிய பிரக்ஞையே இன்றி அதற்கு எதை வேண்டுமானாலும் கற்றுக்கொடுப்பதா? இந்தப் பாடல்களையெல்லாம் எழுதியுள்ளவர்கள் ஆண்கள்தானே? அல்லது அவர்களில் பெண்களும் உள்ளார்களா? (நிறைய விஷய ஞானம் உள்ள சகோதரி ஷாலி தெரிவிப்பாரா?)
ஒரு முறை பரதநாட்டியப் பள்ளி நடத்திக் கொண்டிருந்த என் தோழி ஒருவர் என்னிடம் தெலுங்கில் எழுதப்பட்டிருந்த ஒரு பாடலைக் கொடுத்து, “இது குச்சிப்புடி நடனக் கலைஞர் ஒருவர் நடத்தும் பள்ளியில் ஆடப்பட்டு வரும் நடனத்துக்குரிய பாடல். அவர் அமைத்திருந்த ஆடல் மிக நன்றாக இருந்தது. நான் பார்த்தேன். ஆனால் இதன் அர்த்தம் தெரிந்தால் இதை என் வழியில் பரத நாட்டியமாக்கி என் மாணவிகளுக்குச் சொல்லித் தர விரும்புகிறேன். இதைத் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ மொழி பெயர்க்கக் கூடிய யாரையேனும் உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவினார்.
என் அலுவலகத்தில் ஒரு தெலுங்கு அலுவலர் இருந்தார். அவர் பேச்சுத்தமிழ் அறிந்தவர். ஆனால் எழுதத் தெரியாது. எனவே, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இயலுமா என்று அவரிடம் கேட்டேன். என்னை உட்காரப்பணித்த பின் அவர் அதை மனத்துள் படித்தார். பிறகு முகம் சிவந்து என்னை ஏறிட்டார்.
பின்னர், ‘இது எதற்கு உங்களுக்கு?” என்று கேட்டார். நான் விஷயத்தைச் சொன்னேன்.
“இது ரொம்ப ஆபாசமாக உள்ளதே அம்மா! வேண்டாமே?”
“சரி, சார். நான் என் தோழியிடம் கேட்டுச் சொல்லுகிறேன்.” என்று அந்தத் தாளைத் திரும்பப் பெற்றுக்கொண்டேன்.
ஆனால், என் தோழி, “பரவாயில்லை. எனக்கு அது அவசியம் வேண்டும். ஆபாசமான அதை நான் எங்கள் பள்ளியில் சொல்லிக்கொடுக்க மாட்டேன். எனினும் அதை நான் தெரிந்துகொண்டாக வேண்டும்…” என்றார்.
அதன் பின் அந்த அலுவலர் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்தார். ஓர் உறையில் அதைப் போட்டு ஒட்டிக்கொடுத்துவிட்டு, “பத்திரம், அம்மா. எனக்கு டைப் அடிக்கத் தெரியாதாகையால் என் கையெழுத்தில் அது இருக்கிறது. யார் கையிலாவது கிடைத்தால் எனக்கு அசிங்கம். ஜாக்கிரதையாக எடுத்துக்கொண்டு போய் முதலில் உங்கள் ஹேண்ட் பேகில் வைத்து ஜிப்பால் மூடி வையுங்கள்….”என்றார் கண்ணியம் மிகுந்த அந்த அலுவலர்.
நான் அவரது எச்சரிக்கையைத் தோழியிடம் தெரிவித்துவிட்டு அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அப்போது வகுப்பு நடத்திக்கொண்டிருந்ததால் உடனே படிக்கவில்லை. அவரும் அதைப் பத்திரப்படுத்திக் கொண்டார். ஆனால், அவர் அந்தப் பாடலுக்கான அபிநயத்தைத் தம் மாணவிகளுக்குக் கற்றுக்கொடுத்தாரா, இன்றேல் அதைப் புறக்கணித்தாரா என்பதை நான் விசாரித்து அறியவில்லை. ஓர் ஆணை முகம் சிவக்க வைக்கிற அளவுக்கான் வக்கிரப்பாடல்களை யெல்லம் எழுதுகிறார்களே என்று அருவருப்பாகவும் வியப்பாகவும் இருந்தது.
கடவுளின் அவதாரம் என்று நம்பப்படும் கண்ணனை ஏனிப்படி ஒரு காமுகனாகவே பல கவிஞர்களும் சித்திரித்து வந்துள்ளனர்? கண்ணன் உண்மையிலேயே அப்படித்தான் இருந்ததாய்ப் புராண நூல்கள் சொல்லுகின்றனவா, இன்றேல் அவை யாவும் சில காமுகர்கள் செய்த இடைச் செருகல்களா? இல்லாவிட்டால், மிகைப்படுத்தப்பட்ட விஷயமா? (இதையும் ஷாலிதான் சொல்லவேண்டும். அவர் நிறையப் படிப்பறிவு கொண்டவர் என்பது தெரிவதால் இக்கேள்வி. சிலர் கண்ணன் அப்படியெல்லாம் காமுகனாக இருந்ததில்லை, அவனை வைத்துச் சிலர் அடித்த கூத்து என்றும் சொல்லக் கேட்டதுண்டு. எனினும் ஆதாரத்துடன் தெரிந்து கொள்ள அவா. அதனால்தான் ஷாலினி அவ்ர்களின் உதவியைக் கோருகிறேன்.)
கோபியர் ஓடையில் நீராடும் போது அவர்கள் கரையில் போட்டு வைத்திருந்த ஆடைகளை யெல்லாம் கண்ணன் எடுத்து ஒளித்துவைத்து அவர்களைத் தொல்லைப் படுத்தியது அவர்களுக்குப் புத்தி புகட்டத்தான் என்றும் சொல்லப்படுகிறது. ஆடைகளை யெல்லாம் அவிழ்த்துப் போட்டுவிட்டுப் பெண்கள் ஆற்றில் குளிப்பது அவர்களுக்கு ஆபத்தைத் தேடித்தரும் என்பதால், அவாகள் இனி அப்படிச் செய்யக்கூடாது என்பதற்காகவே கண்ணன் அப்படிச் செய்ததாய்க் கூறுவோர் உண்டு. ஆனால், கன்ணனை ஒரு காமுகனாய்ச் சித்திரிக்கும் பாடல்களே மிக அதிகம். கண்ணனைச் சாக்கிட்டுச் சில ஆண்கவிஞர்கள் தங்கள் விரசத்தை எழுத்தில் வடித்தார்களோ? கண்ணன் மீது காமுறுவதைப் பக்தி என்று சிலர் கூறுகிறார்களே! இது அபத்தமன்றோ! தங்கள் காமத்துக்கு ஒரு வடிகாலாய்க் கண்ணனை இவர்கள் பயன் படுத்திக்கொண்டார்களே தவிர, இதில் ப்கதி எங்கிருந்து வந்தது என்பது எமது சிற்றறிவுக்குப் புரியமாட்டேன் என்கிறதே! மிக உயர்ந்த ஆன்மா என்று நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் ஒன்றுடன் நமது ஆன்மா ஒன்றுவதற்குக் காமம் தேவையா? நம்மை நாமே உருவிலியாய்க் கற்பித்துக்கொண்டு இன்னோர் உருவிலியில் ஐக்கியமாவதற்கு அதற்கொப்பான பக்குவப்பட்ட மனநிலைதான் தேவையே தவிர, அங்கே காமத்துக்கு என்ன வேலை?
ஒருமுறை ஒரு பிரபல வார இதழின் ஆசிரியர் தமது கேள்வி-பதில் பகுதியில் ஒரு பெரிய அரசியல் தலைவரின் காமரசம் ததும்பும் எழுத்தைக் கண்டித்து ஏதோ சொல்லியிருந்தார். மாபெரும் எழுத்தாளரான் அந்தத் தலைவர், ‘என்னைக் கண்டிக்கும் அந்தப் பத்திரிகை யாசிரியருக்குக் கண்ணனின் மீது கன்னா பின்னா என்று பக்தியின் பெயரால் கவிதை எழுதிய ஒரு பக்தையைக் கண்டிக்கும் துணிசசல் உண்டா?’ எனும் ரீதியில் பதில் கேள்வி எழுப்பியிருந்தார். அவ்வளவுதான்! அந்த ஆசிரியர் அதற்குப் பதில் சொல்ல வழியின்றிக் கப்சிப் ஆனார்!
பக்தியின் பெயரால் இது போன்று படைக்கப்பட்டுள்ளவற்றை நம்மால் இப்போது ஒன்றும் செய்ய முடியாதுதான். ஆனால். காமத்தின் மூலம் கடவுள் மீது பக்தி செலுத்தலாம்’ என்பது அபத்தக் கருத்து என்னும் சிந்தனையையேனும் மாந்தரிடம் தூண்டலாமல்லவா!
அட, கண்ணனை விடுங்கள். இவர்கள் இது போன்ற கதைகள் இல்லாத முருகனைக்கூட விட்டு வைக்கவில்லையே! வேடுவனாய்க் கானகம் வரும் முருகன் வள்ளியைப் பார்த்துப் பாடுவதாய் எழுதப்பட்டுள்ள தமிழ்ப் பாட்டில்தான் என்ன விரசம்! அதை இங்கே எடுத்தெழுத என் விரல்கள் கூசுகின்றன. இந்தப் பாடலாசிரியர்கள் தங்கள் விரசங்களையும் விகாரங்களையும் வெளிப்படுத்தக் கடவுளர்கள் என்று கொண்டாடப் படுபவர்களையெல்லாம் என் தான் இப்படி வம்புக்கு இழுக்கிறார்களோ!
இந்தத் தலைப்புடன் தொடர்புடைய மேலும் பல விஷயங்கள் இருக்கின்றன. கட்டுரை நீளும் என்பதால் இத்துடன் நிறுத்த வேண்டியதிருக்கிறது. எனினும் இப்போது எழுதாமல் பின்னர் ஒரு கட்டுரையில் சொல்ல ஒத்திப்போடும் விஷயங்கள் சார்ந்த சர்ச்சை
களையும் வாசகர்கள் எழுப்பக் கூடும்தான் என்பதும் தெரியும். இருந்தாலும் அவை பற்றிப் பின்னரே எழுத எண்ணம்.
*********

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

18 Comments

  1. Avatar
    ஷாலி says:

    // இந்தப் பாடல்களையெல்லாம் எழுதியுள்ளவர்கள் ஆண்கள்தானே? அல்லது அவர்களில் பெண்களும் உள்ளார்களா? //

    அந்தக்காலத்தில் இது போன்ற பாடல்களை இலைமறைகாயாக எழுதி இருந்தார்கள்.குறிப்பாக, எட்டாம் நூற்றாண்டு ஆண்டாளின் பாசுரங்களைச் சொல்லலாம். ஆனால் இன்று நம் சமகாலத்து புதுமை பெண் கவிஞர்கள் ஆடைக்குள் அடைக்கலம் இருந்த பெண் மொழிகளுக்கு விடுதலை கொடுத்துவிட்டார்கள்.புரட்சி கவிஞ்ஞி பாடு பொருளைப் பார்ப்போம். பெண் கவி சல்மாவின் அறிதலும் விரிதலும்.

    “ உன்னினிடமிருந்து
    கலங்கலானதே எனினும்
    சிறிதளவு அன்பைப்பெற
    எல்லா அறிதல்களுடனும்
    விரிகிறதென் யோனி. “

    க்ரிஷாங்கனி –மாலதி மைத்ரி தொகுத்த 20 ம் நூற்றாண்டு பெண் கவிகளின் “பறத்தல் அதன் சுதந்திரம்”
    —————————————–

    பால் நினைந்தூட்டும் சாலப்பரிந்து பாடும்,கவி குட்டி ரேவதியின்-“முலை’ தலைப்பு கவிதை.

    ஆழிங்கனப் பிழிதலில் அன்பையும்
    சிசு கண்ட அதிர்வில்
    குருதியின் பாலையும் சாறேடுக்கின்றன.
    ———————————————

    பெண்கவி மாலதி மைத்ரியின் “அலையாத்தி காட்டுக்குள்ளே ஒளிர்ந்திருக்கும் சுடரொளி” கவிதையைப் பார்ப்போம்.
    ————————————————————————————-

    கொழுத்த களிநண்டுகள்
    அலையும் அலையாத்திக்காட்டில்
    செம்பவள சில்லென
    ஒளிர்ந்துகொண்டிருக்கிறதென் யோனி

    காமத்தின் பேரலையை
    ஆத்திக்கொண்டிருக்கும் விழுதுகளின்
    மேலே கூடமைக்கின்றன
    தூரதேசப் பறவைகள்
    நட்சத்திரங்கள் புதைந்துபோன
    சதுப்பு நிலத்தின்
    கூதிர்கால இரவொன்றில்
    இளம் குஞ்சுகளுக்கு ஒளியேற்ற
    கொத்திக்கொண்டு பறக்கிறது
    கருங்கால் நாரை
    அதன் அலகில்
    சிறுசுடரென எரிகிறதென் யோனி
    கரும்திரையென நிற்கும் வானில்
    சிலாக்கோல்கள் போன்ற
    சுரபுன்னைகாய்கள் நீரைக் கிழித்து
    சேற்றில் விழும் சத்தம்
    மிகமிகச் சன்னமாகக் கேட்கிறது
    அப்போது.
    ———————————————————-

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    கூடிவிட்டு கூடுபாயதல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அஃது உண்மைதான் போலும்.

    ஈ.வெ.ரா பெரியார் ஒரு பெண் எழுத்தாளராகி திண்ணையில் உட்கார்ந்துவிட்டாரே?

    TM

  3. Avatar
    ஷாலி says:

    ஆர்.நீலாவின் கோபத்தில் ஆபாசம் ஆவேசமாகிறதைப் பார்க்கலாம்.

    மரப்பாச்சி பொம்மைக்கும்
    மாராப்பு போட்டுவைத்த
    பண்பட்ட தேசமிது,
    இன்று அரைகுறைதான் அழகாம்!

    இடையைக் கூர்ந்து
    தொடையைக் ஆய்ந்து
    கசாப்புக் கடைக்கட்டும்
    ஐஎம்எப் கலாச்சாரம்!

    எல்லா நாயும்
    காலைத் தூக்க
    எம் தேசமென்ன
    தெருவோர நடுக்கல்லா?

    நம் காலப் பெண் மொழிகளுக்கு ஆதர்ஷ ஆசான் யார்?
    சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளாக இருக்குமோ? ஒரே ஒரு பதப் பாசுரம் பார்ப்போமா?

    “குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
    வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
    மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
    எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
    தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.”

    – இது ஆண்டாள் திருப்பாவையில் நாச்சியார் திருமொழி. ‘பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா?’ என்று கேட்கிறார் ஆண்டாள்.

    1. Avatar
      Mahakavi says:

      “குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
      மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
      கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
      வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
      மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
      எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
      எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
      தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.”
      – இது ஆண்டாள் திருப்பாவையில் நாச்சியார் திருமொழி.

      இது திருப்பாவை 19 வது பாசுரம். நாச்சியார் திருமொழி அல்ல. ஆண்டாள் எழுதியது 30 திருப்பாவை பாசுரங்கள் 143 நாச்சியார் திருமொழி பாசுரங்கள்.

  4. Avatar
    ஷாலி says:

    //கண்ணன் மீது காமுறுவதைப் பக்தி என்று சிலர் கூறுகிறார்களே! இது அபத்தமன்றோ! தங்கள் காமத்துக்கு ஒரு வடிகாலாய்க் கண்ணனை இவர்கள் பயன் படுத்திக்கொண்டார்களே தவிர, இதில் ப்கதி எங்கிருந்து வந்தது என்பது எமது சிற்றறிவுக்குப் புரியமாட்டேன் என்கிறதே! மிக உயர்ந்த ஆன்மா என்று நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் ஒன்றுடன் நமது ஆன்மா ஒன்றுவதற்குக் காமம் தேவையா? நம்மை நாமே உருவிலியாய்க் கற்பித்துக்கொண்டு இன்னோர் உருவிலியில் ஐக்கியமாவதற்கு அதற்கொப்பான பக்குவப்பட்ட மனநிலைதான் தேவையே தவிர, அங்கே காமத்துக்கு என்ன வேலை?//

    சகோதரி.ஜோதிர்லதாகிரிஜா அவர்களே! எங்கேயோ போய்டீங்க! இனி யாரும் ஒன்னும் செய்ய முடியாது.சிற்பி சிலை செய்து முடித்து இறுதியில் கண்ணை திறப்பதுபோல் உங்கள் பகுத்தறிவு என்னும் ஞானக் கண் திறந்து விட்டது.இனி யாவும் ஜெயமே!

    உயர்ந்த ஆன்மா என்று நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் அந்த தெய்வங்களின் பிறப்பு செய்தியே காமத்திலிருந்து தானே பிறந்தது.திருப்பாற்கடலை கடைந்து அமுதத்தை எடுத்து தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி அவதாரமெடுத்த விஷ்ணு கொடுத்தபிறகு அதே கோலத்தோடு சிவனை சந்திக்கிறார்.பிறகென்ன மோகினி விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் ஐயப்பன் பிறக்கிறார். இப்படி பல கதை சொல்லலாம்.மன்மதன் என்னும் காமனை எரித்த காமேஸ்வரன் சிவனின் நிலையே இப்படி என்றால் சாதாரண மனுஷன் என்ன செய்வான்?
    ஆகவேதான் ஆணும் பெண்ணும் கண்ணன் பேரைச் சொல்லி கவிதையில் கலவிக்கொள் கிறார்கள்.

    பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
    புணர்வதோ ராசையினால் என்
    கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
    தாவியை ஆகுலஞ் செய்யும்
    ஆங்குயிலே! உனக்கென்ன மறைத்துறைவு?
    ————————————————————————————–
    நம்ம கண்ணதாசன் போட்டுத் தாக்குறதை பாருங்க!

    கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்
    இரு கன்னம் குழி விழ நகை செய்தான்!
    என்னை நிலாவினில் துயர் செய்தான்!
    அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்.!

    சேர்ந்தே மகிழ்ந்தே போராடி!
    தலை சீவி முடித்தே நீராடி!
    கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி!
    பட்ட காயத்தைப் சொன்னது கண்ணாடி!

    மலர்கள் நனைந்தன பனியாலே
    என் மனமும் குளிர்ந்தது நிலவாலே
    பொழுதும் புலர்ந்தது கதிராலே
    சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே!

  5. Avatar
    ஷாலி says:

    //பக்தியின் பெயரால் இது போன்று படைக்கப்பட்டுள்ளவற்றை நம்மால் இப்போது ஒன்றும் செய்ய முடியாதுதான். ஆனால். காமத்தின் மூலம் கடவுள் மீது பக்தி செலுத்தலாம்’ என்பது அபத்தக் கருத்து என்னும் சிந்தனையையேனும் மாந்தரிடம் தூண்டலாமல்லவா! //

    “காமத்தின் மூலம் கடவுள் மீது பக்தி செலுத்தலாம் என்பது அபத்தக் கருத்து.” மிக உயர்ந்த ஆன்மா என்று நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் ஒன்றுடன் நமது ஆன்மா ஒன்றுவதற்குக் காமம் தேவையா? என்பது உங்கள் கருத்து. வேதம் என்ன சொல்லுது என்று பார்ப்போம்.

    காதல் மிகுந்த மனைவி அவளது கணவனைத் தொடுவது போல இறைவனது இதயத்தை என் பாடல் தொடட்டும்” (ரிக்: 10.91.13) “மணமகன் மணமகளிடம் சுகம் பெறுவது போல எனது பாடலால் இறைவன் சுகம் அடையட்டும்.” (ரிக் 3.62.8) ரிக் வேத கவிதைகள் மனைவி கணவனது மேனியை தீண்டுவது போல (அங்கு பயன்படுத்தப்படும் பதத்துக்கு முத்தம் எனும் மற்றொரு பொருளும் உண்டு.) இறைவனை தீண்டுகின்றன, அவனது மேனியை சுகமாக அழுத்தி விடுகின்றன. (ரிக். 3.41.5) வேத மந்திர த்ருஷ்டாக்கள் மனதாலும் இதயத்தாலும் இறைவனுக்காக ஏங்குகின்றனர். வேத மந்திரங்களே இறைவனின் காதலிகளாக அவனைச் சேருகின்றன. வேத இலக்கியம் தரும் ஒரு முக்கியமான சித்திரம் இது: காதலிகளின் தீண்டுதலாக வேத கவிதைகள், பிரார்த்தனைகள் சித்தரிக்கப்படுகின்றன. (ரிக் 1.62.11;1.82.5-6; 1.186.7; 3.52.3; 4.32.16; 1.9.4; 3.39.1)
    இந்த காம பக்தியின் வழியிலேயே ஆண்டாலும் சென்றதாக சொல்லப்படுகிறது.சரி பாட்டை கேட்போம்.

    கண்ணன் என்னை கண்டு கொண்டான்
    கை இரண்டில் அள்ளிக் கொண்டான்
    பொன்னழகு மேனி என்றான்
    பூச்சரங்கள் சூடித்தந்தான்

    கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்
    கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
    கண் மயங்கி ஏங்கி நின்றேன்
    கன்னி சிலையாகி நின்றேன்.

  6. Avatar
    ஷாலி says:

    // அட! கண்ணனை விடுங்கள்.இவர்கள் இது போன்ற கதைகள் இல்லாத முருகனைக்கூட விட்டு வைக்கவில்லையே!//

    முருகன் என்றால் அழகன் என்னும் அழகிய தமிழ்ச்சொல் சங்க இலக்கிய பரிபாடலில் உள்ளது.சரி!இத்துடன் முருகன் பெயர் முடியவில்லையே! கந்தன் எனும் ஸ்கந்தன்,சரவணன்,ஆறுமுகம்,கார்த்திகேயன்,சுப்பிரமணியன்.இந்தப்பெயருக்கெல்லாம் பொருள் என்ன?

    புராணக்கதைகள் சொல்லும் பொருள். பார்வதியை மோகத்தோடு நெருங்கினார் பரமசிவனார்.உமையாள் அதற்க்கு மறுத்து ஒதுங்கினாள்.பரமசிவனின் ரேதஸ்(இந்திரியத் துளி௦) ஆகாயத்திலிருந்து சிதறி கங்கையில் விழுந்து நாணல் காட்டின் கரையில் ஒதுங்கி குழந்தையாகிறது.அந்த குழந்தையின் பெயர் (சமஸ்கிரதத்தில்) சரம் என்றால் நாணல் வனம் என்றால் காடு. சரவணன். ஆனின் உயிர்த்துளிகள் பெண்ணின் பாகத்தில் சேராமல் வழி தவறி விழுந்தால் அதன் பெயர்தான் ஸ்கந்தன். துளிகள் சிதறி ஆறு இடங்களில் விழுந்து குழந்தை ஆனதால் ஆறுமுகம்.அதை ஆறு கார்த்திகை நட்சத்திர பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகேயன். சரம்வனம் என்ற சரவணனின் நதி மூலம் நன்கு தெரிந்த காரணத்தால் நம்ம கவிஞர்கள் “வள்ளியே! எப்படி புடுச்சே அரோகரா! அத என்கிட்டச்சொன்னா தட்சணை தருவேன் அரோகரா!” என்று பாடுகிறார்கள்.

    நம்ம கண்ணனையும் முருகனையும் இணைத்துப் பாடும் பாடலைக் கேட்போம்.

    கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்!
    இரு கன்னம் குழி விழ நகை செய்தான்!
    என்னை நிலாவினில் துயர் செய்தான்!
    அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்

    இறைவன் முருகன் திருவீட்டில்,
    என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,
    உயிரெனும் காதல் நெய்யூற்றி,
    உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!
    (மலர்கள் நனைந்தன)

    அன்புடன் தங்கள்
    ஷாலி-என்னும் சகோதரன்.

  7. Avatar
    ஷாலி says:

    //கடவுளின் அவதாரம் என்று நம்பப்படும் கண்ணனை ஏனிப்படி ஒரு காமுகனாகவே பல கவிஞர்களும் சித்திரித்து வந்துள்ளனர்? கண்ணன் உண்மையிலேயே அப்படித்தான் இருந்ததாய்ப் புராண நூல்கள் சொல்லுகின்றனவா, இன்றேல் அவை யாவும் சில காமுகர்கள் செய்த இடைச் செருகல்களா? //
    கண்ணன் பற்றிய மூல நூல்களான பாகவத்திலும், மகாபாரதத்திலும்,ராதையை பார்க்க முடியவில்லை. வியாசர் எழுதிய பிரமாண்ட புராணம், வைவர்த்த புராணத்தில் உள்ள ராதா கிருஷ்ணா லீலைகளை தழுவியே ஜெயதேவர் அஷ்டபதி எனும் கீதகோவிந்தம் எழுதப்பட்டதென்பர்.
    கண்ணனின் காதலியாக சொல்லப்படும் ராதை உண்மையில் அவனுக்கு அத்தை முறையானவள் மற்றுமல்ல, மாற்றான் மனைவி என்பதும் கவனிக்கத்தக்கது.
    பகவான் கோபாலனுடைய லீலைகளை விரிவாய் “உபதேசிக்கும்” பகுதி பாகவதத்தில் பத்தாவது “°கந்தம்” (பகுதி). பாகவதத்தை யாக்கனத்தோடு அச்சிட்டு வெளியிட்டவர் கடலங்குடி நடேசசாஸ்திரிகள்.

    இதில் கிருஷ்ணன் பர ஸ்திரீகளான (பிறர் மனைவியர்) கோபிகைகளோடு அத்யாயம் 29 ல் “ஜலக்கிரீடை” செய்ததையும், அத்யாயம் 30 ல் “வனக்கிரீடை” செய்ததையும், அத்யாயம் 31 ல் “ஸ்தலக் கிரீடை” செய்ததையும் மிக மிக …….. மொழியில் சொல்லப்பட்டுள்ளது. (ஜலக்கிரீடை – நீரில் விளையாடுவது, வனக்கிரீடை – காட்டில் விளையாடுவது, ஸ்தலக் கிரீடை – நிலத்தில் விளையாடுவது) அத்தியாயங்கள் 32, 3359 ஆகியவற்றிலும் “சிருங்கார கதை” தொடர்கிறது.
    “கோபஸ்திரீகள் (கோபிகாஸ்திரீகள்) காமத்தை அதிகப்படுத்தும் கிருஷ்ணனின் கீதத்தைக் கேட்டு அவனிருக்கும் இடம் நாடி ஓடிவருகின்றனர். – பால் கறந்து கொண்டிருந்த சிலர் ஆசை கொண்டர்களாய் பால் கறப்பதை நிறுத்தி விட்டு ஓடிவந்தனர். – அன்னம் பரிமாரிக் கொண்டிருந்தவர் அதை விடுத்தும், – குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தவர் அதை விடுத்தும், – கணவர்களுக்குப் பணிவிடை செய்பவர் அதை விடுத்தும், – உடம்புக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தவர் அதை விடுத்தும், கணவர்கள் தடுத்தும், பிதா தடுத்தும், மாதா தடுத்தும் உடன்பிறந்தான் தடுத்தும் கட்டுக்கடங்காது, மோகத்தோடு கிருஷ்ணனை நோக்கி ஓடுகின்றனர்.

    ஓடிவந்த ஒய்யாரிகளோடு கோபாலன் கண்டபடி, கண்ட இடங்களில் ஆடினான், பாடினான், இறுதியில் கூடினான்.யமுனை நதியிலும், அதையொட்டிய சோலைகளிலும், நதிக்கரை திட்டுகளிலும், மனம் “திகட்டும்” அளவுக்குக் கோபியரோடு கொஞ்சினான் கோகுல கிருஷ்ணன். //கடவுளின் அவதாரம் என்று நம்பப்படும் கண்ணனை ஏன் காமுகனாகவே…….//
    சகோ.ஜோதிர்லதாகிரிஜா அவர்களே! நீங்கள் கேட்ட கேள்வியை இதற்க்குமுன்னால் வேறொருவர் கேட்டே விட்டார்.
    போர்க்களத்தில் மரண தருவாயில் இருந்த அபிமன்யுவின் மகன் பரீட்சித்து, அரசன் சுகர் (வியாசரின் மகன்) என்ற முனிவன் சொன்ன இந்த பாகவதைத் கேட்டு, ஒரு கேள்வி கேட்டான்.
    சுகமுனிவரை நோக்கி “தர்மம் காத்து அதர்மத்தை அழிக்க வந்த கோபாலன் என்ன எண்ணங்கொண்டு வெறுக்கத்தக்க காரியத்தைச் செய்தார். எல்லோருக்கும் வழிகாட்ட வேண்டிய பகவான் கோவிந்தர் “பரதாராபிமர்சனம்” (பர+தார+அபிமர்சனம் = பிறர் மனைவியைக் கூடுதல்) செய்வது தவறான காரியமல்லவா?” என்று “பச்சையாகக்” கேட்டான் பாராளும் பரீட்சித்.
    அவருடைய “தத்துவ விளக்க”ப் பதில் இதோ! “மன்னா, எல்லாவற்றையும் அக்னி எரித்துவிடும். அக்னியைப் போன்ற ஒளி உடையவர்களும் அப்படியே. அவர்களை எந்த பாபமும் பற்றுவதில்லை. அவர் செய்தாரே என்பதைக் காட்டி தான் செய்ய எவரும் மனதாலும் நினைக்கக்கூடாது. அப்படிச் செய்பவன் அழிந்து போவான். சிவபெருமான் விஷத்தைச் சாப்பிட்டாரே என்று தானும் சாப்பிடுபவன் அழிந்து போவான்.” என்று விளக்குகிறார் மகரிஷி சுகர்.
    – நன்றி: கடலங்குடியின் ஸ்ரீமத் பாகவதம்- கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், உரைநடையில்ஸ்ரீமத் பாகவதம் – ஸ்ரீ ஆனந்த நாச்சி யாரம்மா – ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்.

  8. Avatar
    ஷாலி says:

    காமம்-கடவுள் இதில் முதலில் வந்தது யார்? இதோ வேதம் சொல்கிறது, “ காமம் தான் உலகில் முதலில் பிறந்தது.காமம் தான் மனசுக்கு முதல் வித்து,அந்த மனசை வைத்து ரிஷிகள் தவத்தின் மூலம் இருக்கலுக்கும் இல்லாமல் இருத்தலுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தினர்.” ரிக் வேதம்.10 வது மண்டலத்தில் 129 வது சூக்தம் 4 வது மந்திரம்.

    “ உலகத்தில் முதலில் தோன்றிய காமம் சக்தி வாய்ந்தது கடவுளோ,முன்னோர்களோ,மனிதர்களோ,அதற்க்கு நிகர் கிடையாது. ஓ…காமமே! நீ..எல்லையற்ற பேரழகு கொண்டவன் நீ! எல்லா உயிர்களிலிலும் நீ நிறைந்திருக்கிறாய்! சூரியன் சந்திரன்,காற்று அக்கினி ஆகிய எல்லா தேவர்களையும் விட நீ மேலானவன்…எப்போதும் நீ மேலானவன்.”
    –அதர்வண வேதம் 9 வது காண்டம் 2 வது சூக்தம் 19-21 வது மந்திரம்.

    வேதம் சொல்வது உண்மைதான்.காமத்தின் முன்னே எல்லா கடவுள்களும் கவிழ்ந்து விட்டதாகவே புராணம் சொல்கிறது.

    இந்திரன்,சந்திரன்,அக்கினி,மனிதர்கள் அனைவரையும் காமம் வென்று விட்டது.மன்மத லீலையை வென்றார் உண்டோ? ஒருவரும் இல்லை.

    “கண்ணனுக்கே ஆமது காமம்” என்கிறார் ஸ்ரீ இராமானுஜர்.

    சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
    காமமும் என்று இவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
    ஆமது காமம் அறம் பொருள் வீடிதற்கு என்றுரைத்தான்
    வாமனன் சீலன் இராமனுசன் இந்த மண்மிசையே!

    போற்றலும் …..தூற்றலும்….போகட்டும் கண்ணனுக்கே!

    ஒரு இனிமையான கண்ணன் பாட்டை கிருஷ்ணன் பாடுகிறார். ஆம்! நம்ம பால முரளி கிருஷ்ணா பாடல்தான்.
    —————————————–

    கண்கள் சொல்கின்ற கவிதை
    இளம் வயதில் எத்தனை கோடி?
    என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
    புதுமை மலரும் இனிமை!
    அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!

    நெஞ்சில் உள்ளாடும் ராகம்
    இது தானா கண்மணி ராதா?
    உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
    அழகே இளமை ரதமே!
    அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!

    சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
    ராதையை, பூங் கோதையை,
    அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
    ———————————————————————————

  9. Avatar
    ஷாலி says:

    முற்றும் துறந்த முனிவர்கள் எப்படி காமத்தில் வீழ்ந்தார்கள்?

    “அண்ட பராசர முனிவரேல்லாம் அடங்கினார் பெண்ணுக் குள்ளே”-என்று சொல்வதை கேட்டிருப்போம்.

    முன்பு கங்கைக் கரையில் பராசரர் முனிவர் கடுந்தவம் செய்துகொண்டிருந்தார்.அச்சமயம் ஓர் அழகிய இளம்பெண் அங்கு வந்தாள்.அவளைப் பார்த்ததும் முனிவருக்கு மோஹம் உண்டாகி,”பெண்ணே! நீ யார்?” கேட்டபொழுது அவள் “என் பெயர் மச்சகந்தி, என் தந்தை மீனவர், கங்கையில் மீன் பிடிக்க அவருக்கு உதவி செய்ய வந்தேன்.”என்று கூறுகிறாள்.

    “பெண்ணே! இந்த நேரத்தில் என்னுடன் கூடினால் எனக்கு ஒரு சிறந்த மகன் கிடைப்பான்.இது ஒருவருக்கும்தெரியாது.”என்கிறார்.அவளும் சம்மதித்து கூடுகிறார்கள்.உடனடியாக அவளுக்கு அப்போதே ஒரு குழந்தை பிறக்கிறது.( இது எப்படி என்று கேட்காதீர்கள்.-“ரிஷி கர்ப்பம் ராத்தங்காது.” என்று சொல்லுவதின் பொருள் இதுதான்.)இந்தக்குழந்தை தான் பின்பு பிரம்மசூத்திரம்,மகாபாரதம் எழுதிய வேதவியாசர். இந்த வேத வியாசருக்கும் ஒரு குழந்தை பிறந்தது.எப்படி? வியாசரின் “ரேதஸ்” உயிர்த் துளி இயற்கையாக வெளியேறி மண்ணில் சிதறியது.இதை ஒரு கிளி (சுகஹா -சமஸ்கிதம்) கொத்தித் தின்று கர்ப்பமாகி ஒரு குழந்தையைப் பெற்றது.கிளித் தலை மனித உடல்.இக்குழந்தை மிகப்பெரிய முனிவராகி சுகஹா-சுகர் என்று பெயர் பெற்றார்.இந்த சுகர் முனிவரே கண்ணனின் ராசலீலையைக் குறித்து பரீட்சித் மன்னனுக்கு பாகவதம் உபதேசித்தது.

  10. Avatar
    ஷாலி says:

    கண்ணன் காமுகனா- என்று கண்ணனையும் காமத்தையும் தொடர்பு படுத்தி பார்த்து வருகிறோம்.ஆனால் கண்ணனுக்கும் காமனுக்கும் நெருங்கிய உறவு உள்ளது என்ற உண்மை அநேகருக்கு தெரியாது.

    கைலாய கிரியில் ஆழ்ந்த தவத்தில் இருந்த சிவன் மீது பார்வதியை மணக்க வேண்டி, மன்மத பாணம் என்னும் மலர் அம்பு விடுகிறான் காமன்.கோபம கொண்ட சிவன் காமனை எரித்து தகனப்பலி ஆக்கி விடுகிறார். தன் கணவரை மீண்டும் உயிர்ப்பித்து தரும்படி மன்றாடுகிறாள் காமனின் மனைவி ரதிதேவி.

    “காமத்திற்கு எவ்வாறு உருவமில்லையோ அவ்வாறே காமனுக்கும் உருவமில்லாது உயிப்பிக்கிறேன். பின்னர் திருமால் கண்ணனாக அவதரிக்கும்போது காமதேவன் கண்ணனின் மகனாக அவதரிப்பார்.அப்போது தேகம் திரும்பிவிடும்.” என்கிறான் சிவன்.

    இதன்படியே திருமால் கண்ணனாக அவதரித்தபோது காமதேவன் கண்ணன்-ருக்மினியின் மகன் பிரதுயும்னனாக அவதரித்தான்.

    ஆக,கண்ணனின் மகன் காமன். (காமக்)கண்ணனின் லீலைகள் இருப்பதன் காரணம் இதுதானோ!
    —————————————-

    கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
    திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ
    மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
    விருப்பமுற்று கேட்கிறேன் சொல் ஆழி வெண் சங்கே!

    சேய்த் தீர்த்தமாய் நின்ற-செங்கண்மால் தன்னுடைய
    வாய்த் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே!

    கண்ணனின் வாய் மு(கூர்)த்தத்தை வேண்டி ஆண்டாள் மங்கை ஆழிச் சங்கை தூக்குகிறாள்”.இச்” சுவை மட்டும் போதும் சொர்க்கம் வேண்டாம் என்கிறாள்.

    “இச்”-சுவை தவிர யான் போய்
    இந்திர லோகம் ஆளும்
    அச் சுவை பெறினும் வேண்டேன்
    அரங்க மா நகர் உள்ளானே!
    ———————–

    இப்ப,கண்ணனின் துள்ளிசை காதல் பாட்டை கேட்போம்.கண்ணன் பாட்டிற்கு ஆடுவது ராதே தானே! ஆம்! ராதி(கா).பாட்டை எழுதியவர் காமத்திற்க்கே ராசன்.
    நா.காமராசன். அப்புறமென்ன…. கலக்குறார்.

    ‘இச்” ‘இச்” சத்தம் மத்துச் சத்தம் போலவே இருக்குதாம்.
    —————————–

    வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான்
    கானத்தில் சின்னப்பொண்ணும் ஆடுவாள்
    ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே
    ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே
    மாலை நிலா…..ஆ…ஆ

    மாலை நிலா பூத்ததம்மா….மெளன மொழி சொல்லுதம்மா
    ஒரு அத்திப்பூவில் சிந்தும் தேனில்
    வண்டு பேசும் தென்றல் வீசும்
    கண்ணன் பாட கண்கள் மூட கன்னங்கள் சிவந்ததோ!

    கண்ணன் வந்து பாடுகிறான் காலமெல்லாம்
    கண்ணில் என்ன கோபம் என்றான்…காதல் சொன்னான்.
    காற்றில் குழலோசை பேசும் பூ மேடை…மேலே

    கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
    பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே
    மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
    தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே

    காதலென்னும்…….ஓ..ஓ
    காதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக்குயில் கொஞ்சுதம்மா
    இவள் வண்ணம் கோடி….சின்னந் தேடி
    மின்னும் தோளில் கன்னங் கூட சந்தம் பாடி சொந்தம் தேடி
    சொர்க்கங்கள் மலர்ந்ததோ.__கண்ணன் வந்து பாடுகிறான்….

  11. Avatar
    IIM Ganapathi Raman says:

    //கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
    திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ
    மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
    விருப்பமுற்று கேட்கிறேன் சொல் ஆழி வெண் சங்கே!
    சேய்த் தீர்த்தமாய் நின்ற-செங்கண்மால் தன்னுடைய
    வாய்த் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே!
    கண்ணனின் வாய் மு(கூர்)த்தத்தை வேண்டி ஆண்டாள் மங்கை ஆழிச் சங்கை தூக்குகிறாள்”.இச்” சுவை மட்டும் போதும் சொர்க்கம் வேண்டாம் என்கிறாள்.
    “இச்”-சுவை தவிர யான் போய்
    இந்திர லோகம் ஆளும்
    அச் சுவை பெறினும் வேண்டேன்
    அரங்க மா நகர் உள்ளானே!//

    கடைசி நால்வரிகளை எழுதிய ஆசிரியர் விப்ர நாராயணன் @ தொண்டரிப்பொடி ஆழ்வார்.

    முழுப்பாசுரமும் இங்கே:

    பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச்செங்கண்
    அச்சுதா அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
    இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகரிலுளானே!

    ஆழ்வார்கள் பெருமாளின் அச்சாதவாரத்திருமேனிகளில் மையல்கொண்டு வாழ்ந்தார்கள் என்பதும் அத்திருமேனிகளை இப்பூவலகில் திவ்ய தேஷங்களில் மங்களாசாசனம் (கண்டு, பாமாலைகளால் தொழுதேத்தி) செய்தார்கள் என்பதும் அதில் ஒரு சில ஆழ்வார்கள் ஒரேயொரு திவ்யதேசத் திருமேனியிலே இருந்து மங்களாச்சாசனம் செய்தார்கள். என்பதும் தமிழ் வைணவம். அப்படிச்செய்தவர்கள் திருப்பாணாற்றாழ்வாரும் தொண்டரிப்பொடியாழ்வாரும் (திருவரங்கத்தில்).

    ‘இச்சுவை’ என்பது திருவரங்கப்பெருமாளின் திருமே தரிசனத்தை ஒரு பகதன் என்ற பார்வையில் குறிக்கிறது. காமத்துக்கு இங்கிடமில்லை. Here is symbolic meaning also. i.e. in this world, by living your life in the correct way, you can realise your God, or in Milton’s words, ‘justify the ways of God to Man’ or in my own words, ‘you can make atheists theists!’ Live and be a model. Don’t preach only.

    TM

  12. Avatar
    IIM Ganapathi Raman says:

    பக்தியில் காமம் பற்றி கிருஸ்ணகுமார் விளக்கினால் நன்று

  13. Avatar
    ஷாலி says:

    நண்பர் ஐஐஎம் அவர்களே! பச்சை மாமணி…”.இச் சுவைக்கும் காமத்திற்கும் சம்பந்தமில்லை.இரண்டும் தனிப்பாடல்கள். என்பது எனக்கு தெரியும்.தெரிந்துதான் ஒரு சுவைக்காக இரண்டு கமாக்களுக்கிடையில் “இச்”ஐ போட்டு ஆண்டாள் விருப்பமுற்று கேட்கும் வாய்தீர்த்தத்துடன் இணைத்து விட்டேன்.

    ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்,
    கார்மேனி, செங்கண், கதிர் மதியம் போல் முகத்தான்!
    நாராயணனே நமக்கே பறை தருவான்!!
    பாரோர் புகழப் படிந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!

    நாராயணனே நமக்கே பறை தருவான்!!!

    நாராயணன் தான் சொர்க்கம் மோட்சம்(பறை) தருபவன் அவனுடன் அடைக்கலமானபின் இந்திரலோகம் என்னத்திற்கு.

    * மா “ஏகம்” சரணம் வ்ரஜ! = என் ஒருவனையே சரணம் எனப் பற்று!
    * அஹம் த்வா சர்வ பாபேப்யோ = உன்னைக் காலம் காலமாகத் தொடரும் பாபங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்!
    * மோக்ஷ இஸ்யாமி = அருளொடு பெருநிலம் அளிக்கிறேன்! மோட்சம் உனக்கே!
    * மா சுச: = கவலைப் படாதே!

  14. Avatar
    Mahakavi says:

    I agree with the author that the jAvaLis in Bharathanatyam are explicit descriptions of sexual expressions and feelings. In the olden days when the devadasis practiced the art it might have been kosher but not now. Last year there was a Bharathanatyam arangetram of a 14-yr old girl in Cary, North Carolina. I attended it and wrote a review on it. In that review I took exception to the inclusion of a jAvaLi where the maiden chastises her lover (human) about his having gone to a prostitute the night before and that he does not have to come to her again. It goes in the cloak of sringaaram. Is this type of dance item needed to be performed by a 14-yr old girl? The dance guru told me that it is not improper any more because 14-yr old girls know quite a bit about sex. So that is the prevailing attitude even among dance teachers

    As for the sexual content of jAvaLis, I agree that it is mostly the work of older men who were deprived of sex and thus gave vent to their (pent-up) unquenched sexual desires in the form poetic/musical writings.

  15. Avatar
    ஸ்ரீவிஜி says:

    அற்புதமான கட்டுரையும் அதையொட்டி வந்த பின்னூட்டங்களும் அருமை அருமை. காமரசம் சொட்டுகிறது என்பதைவிட இலக்கியத்தேன் பருகினேன்.
    எனக்கு ஆறு வயது இருக்கின்றபோது, நிலவண்ணக்கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன், கண்ணா என் கையைத்தொடாதே.. என்கிற பாடலுக்கு அன்று பாலர் பள்ளி மாணவர்களாக இருந்த நாங்கள் அபிநயம் பிடித்தோம். இரண்டு பெண்குழந்தைகள், ஒருவள் கண்ணனாகவும் குழல் வைத்துக்கொண்டு உடல் முழுக்க நீல வர்ணம் பூசிக்கொண்டும், மற்றொருவள் பாட்டுக்கு நடனமாடிக்கொண்டும்.. கையைத்தொடாதே என்கிற போது வெட்கமாக இருப்பதைப்போலவும், கண்ணன் சில்மிஷம் செய்வதுபோலவும், பெண் ஓடி ஓடி ஒளிவதுபோலவும் அமைந்திருக்கும் அந்த நடனக்காட்சி. அப்போது சத்தியமாக அது ஒரு தெய்வீக அனுபவத்தையும் பயபக்தியையுமே உண்டு பண்ணியதே தவிர, காமம் ஆண் பெண் உறவு போன்ற எதுவும் மனதிற்குள் புகவில்லை. இப்போது இந்தக்கட்டுரையையும் அதையொட்டி வந்த ஷாலி அவர்களின் பின்னூட்டத்தையும் வாசித்து முடிக்கின்ற போது, சில பாடல்கள் மனதில் அரியணையிட்டு மனதைவிட்டு அகலாமல் முனுமுனுத்துப் பார்க்கின்றபோது.. யப்ப்ப்பா இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா, என்று வியந்துபோனேன். ஆபாசம் கவிதைகளில் இல்லாதது போலவும் அதைச் சிலர் கோடிக்காட்டி விளக்குகிறபோது சிருங்கார ரசம் சொட்டுகிறது போலவும் அமையப்பற்ற பாட்களைக் கொடுப்பதில் நமது கவிஞர்கள் அன்றும் சரி இன்றும் சரி, கில்லாடிகள்தாம். ரசித்தேன். தொடரவும் உங்களின் பின்னூட்டங்களை. வாழ்த்துகள். என்னைத் தொலைப்பேசியில் அழைத்து, கண்டிப்பாக இக்கட்டுரையை நீங்கள் வாசித்தே ஆகவேண்டுமென்று லிங்க் அனுப்பிய டாக்டர் ஜான்சன் அவர்களுக்கும் நன்றி.

  16. Avatar
    Dr.G.Johnson says:

    பாரத நாட்டியத்துக்கு பாடல்கள் எழுதும் பாடலாசிரியர்கள் தங்களுக்கு உண்டான காமம் தொடர்பான விசாரங்களையும், விகாரங்களையும் விக்கிரகங்களாக வீற்றிருக்கும் கடவுள்களை ஏன் வீணில் நாடுகின்றனர் என்ற சிந்தனையைக் கொண்ட ஜோதிர்லதாவின் அருமையான கேள்வியயும், அதற்கு சகலகலாவல்லவரான ஷாலி அவர்களின் அசரவைக்கும் விளக்கங்களும் படித்து பல பயனுள்ள கருத்துகளைத் தெரிந்துகொண்டதோடு , இதில் இவ்வளவு உள்ளதா என்று வியந்தும் போனேன்..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *