புதிய கோடாங்கிச் சிற்றிதழ்களில் சமூக மாற்றுச் சிந்தனைகள்

author
3
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 24 in the series 24 நவம்பர் 2013

dr-br-ambedkar

ரெ. நல்லமுத்து

முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதி-நேரம்)

தமிழாய்வுத் துறை

தூயவளனார் தன்னாட்சிக்கல்லூரி,திருச்சிராப்பள்ளி – 620 002.

 

முன்னுரை

சமூகத்தை வேரொடு மாற்றமடையச் செய்வதனால் முழுமையான விடுதலையை மக்கள் அடைய முடியும் என அம்பேத்கர் கருதியுள்ளார். வாழுமிடம், வாழ்க்கைமுறை உள்ளிட்ட அனைத்தும் அதிகாரம் மற்றும் உரிமைகளுடன் அமைய வேண்டும்.  பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வியல் கேள்விக் குறியாகவே தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இத்தகைய நிலைக்கான காரணம், இக்காரணம் தொடர்ந்து வளர்ந்து வந்ததற்கான சமூகச்சூழல், ஏற்பட்ட பாதிப்புகள், அடுத்தத் தலைமுறைகள் எதிர்கொண்ட பின்விளைவுகள் ஆராய்ந்த அம்பேத்கர், அடிமையாக இருப்பவன்தானே போராடித் தன் அடிமைவிலங்கை ஒழித்துத் தன்னை விடுவித்துக் கொள்ளாமல், தன்னை அடிமைப்படுத்தியவனே முன்வந்து தன்னை விடுவித்து வாழ வைத்துவிடுவான் என்பது பகல்கனவு என உணர்த்தி வந்தார் என்பதனால் அடிமைப்பட்ட மக்கள் தங்களது நிலையை உணர்ந்து, தங்களைத் தாங்களே விடுவித்துக் கொண்டு, பழமையான சமூக நிலைப்பாட்டியிலிருந்து வேரொடு மாற்றம் காணவேண்டும் என அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார். சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை அம்பேத்கரின் சிந்தனைகளிலிருந்து எவ்வாறு கட்டியமைப்பது என்று இக் கட்டுரை ஆராய முற்படுகின்றது.

அம்பேத்கரும் சமூக மாற்றமும்

சமூக மாற்றத்தை வலியுறுத்தும் ஒரே குறிக்கோளை முன்வைக்கக் கூடியதாக இன்றைய சமூக அமைப்பையே மாற்றினாலொழிய இந்நாட்டில் முன்னேற்றம் காண்பதென்பது வெறும் கானல்நீரே ஆகும் என்ற சிந்தனையை அம்பேத்கர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பே என்னுடைய இலட்சியம், அத்தகைய சமூக அமைப்பு ஏன் ஏற்படக்கூடாது? சகோதரத்துவம் ஏன் உண்டாகலாகாது என்ற சிந்தனையையும் வழங்கியுள்ளார். இதனால் முற்றிலும் மாறுபட்ட இலட்சியம் சமூகம் உண்டாக வேண்டும். இத்தகைய பழமையிலிருந்து அடியோடு மாறுபட்ட சமூகமே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விற்குத் தீர்வாக அமையும் என்ற முற்போக்கு உணர்வை அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்டும் விடுதலை மறுக்கப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டுள்ள சமூகம் வேரொடு மாறினால் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன கண்டிப்பாக மலரும் என்பதை உணர முடிகிறது.

 

கிரிப்ஸ் திட்டத்திற்கு எதிர்ப்பு

இந்தியாவில் நிலவும் சிக்கல்கள் குறித்து ஆராய அனுப்பப்பட்ட கிரிப்ஸ் குழுவின் செயல்பாட்டை பிரிட்டிஷ் அரசு கிரிப்பை இந்தியாவிற்குத் தூதராக அனுப்பியது, அதன்படி இந்தியாவிற்கு வந்த கிரிப்ஸ், காங்கிரஸ், முஸ்லிம்லீக், இந்து மகாசபை ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடினார்.

உலகப்போர் முடிவுற்றதும் இந்தியாவிலுள்ள பல சமஸ்தானங்களுடன் கலந்துப்பேசி, அரசியல் நிர்ணயச் சபையை அமைப்பது என்று கிரிப்ஸ் திட்டம் தெரிவித்தது. இந்த அறிக்கையில் தாழ்த்தப்பட்டோர் குறித்து எந்தவிதமான கருத்தும் இடம் பெறாததால் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு எந்த ஒரு பலனையும் அளிக்காது, அவர்கள் என்றென்றைக்கும் தாழ்த்தப்பட்டவர்களாகவே நடத்தப்படுவர் எனக்கூறி அம்பேத்கர் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பு அரசியல் சார்ந்த நிலையில் ஒடுக்கப்பட்ட மக்கள் பங்கெடுக்கும் வாய்ப்பு ஆங்கில அரசால் வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கத்தினாலும் அரசின் செயல்பாடுகளில் தலித் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்பதனையும் காட்டும் விதமாக அமைந்துள்ளது.

இந்திய நிர்வாகச் சபை

நிர்வாகச் சபையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படாததை எதிர்த்து அம்பேத்கர் இங்கிலாந்திற்குத் தந்தி அனுப்பினார். இந்தியச் சிக்கலைத் தீர்க்க உடனடியாக வழிகாணப் போவதாக சர்ஸ்மடாஃபோர்டு கிரிப்ஸ் அறிவித்தார் என்பதனையும் அறிய முடிகிறது.

அம்பேத்கரைப் பொறுத்தவரை இந்திய விடுதலையும் அவசியம், அதே நேரத்தில் உள்நாட்டில் தாழ்த்தப்பட்ட இனத்தவரின் முன்னேற்றமும் அவசியம் எனக்கருதினார் என்பதனை எழுத்தாளர் பார்வதி குமாரன் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தலித் மக்கள் விடுதலையையும், இந்திய விடுதலையையும் இருகண்களாக அம்பேத்கர் கருதினார் என்பதனை அறியமுடிகின்றது. மேலும் 1930 நவம்பர் 12ம் நாள் முதல் வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் 53 பேர் கலந்து கொண்டனர். இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை. அம்மாநாட்டில் அம்பேத்கர் இந்திய நாட்டிற்குச் சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அதேபோலத் தாழ்த்தப்பட்ட இனத்தவரின் உரிமைகளும் முக்கியம் என்று எடுத்துக் கூறியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகம் அடியோடு மாறவேண்டும் என்பதற்காகவே பல சாதனைகளை அவர் செய்துள்ளார். அவர் செய்த சமுதாயப்புரட்சி எழுதிய நூல்கள், நிறுவிய கல்லூரிகள், அமைந்த அரசியல் சட்டம், அரசியல், பொருளாதாரம் மற்றும் சீர்திருத்தம் பற்றிய ஆராய்ச்சிகள் அவருக்கு இன்று நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன.

அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கையே எதிர்பார்ப்புடன் கூடியதாகவே தொடர்ந்துள்ளது. அந்த எதிர்பார்ப்பு ஒடுக்கப்பட்ட தலித் சமூக விடுதலையே என்பதனைப் புதிய கோடாங்கியின் படைப்புகளின் வழி அறிய முடிகின்றது. அடிமை வாழ்க்கையும் தீண்டாமையும் அடியோடு மாறவேண்டுமென்ற அம்பேத்கரின் கனவு எதிர்கால இந்தியாவின் கட்டமைப்பு ஏற்ற தாழ்வற்றதாக அமைய வேண்டும் என்பதனைக் குறிக்கோளாகக் கொண்டதாகும்.

தீண்டாமை சாதியை ஆதாரமாகக் கொண்டது. சாதி வருணதர்மத்தை அடிப்படை கோட்பாடாய்க் கொண்டுள்ள மதத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது. சாதி, வறுமை, தீண்டாமை என மூன்று பகுதிகள் சமூக இழிவைத் தருவதற்குத் துணைபோவதனை அறிய முடிகிறது. இத்தகைய சமூகப்போக்கை முற்றிலுமாக மாற்றிட வறுமை, சாதி, தீண்டாமை என்பன முழுவதுமாக மறைய வேண்டும் என அம்பேத்கர் கருதியதனை உணரமுடிகிறது.

ஒடுக்கப்பட்டோர் மேம்பாட்டு பேரவை

ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் விடுதலையையும் அவர்களது நிலைகளை அடியோடு மாற்றிட வேண்டும் என்றுப்போராடிய அம்பேத்கர் பற்றி முன் எப்போதையும் விட அம்பேத்கர் என்றப்பெயர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்று மிகுந்த உத்வேகம் அளிக்கின்ற உந்து சக்தியாக மாறி இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல விதங்களில் அம்பேத்கர் நூற்றாண்டு விழா அரசாங்கங்களினால் கொண்டாடப்பட்டது. என ஆதவன் எழுதியுள்ளார். மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை அடியோடு மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் சிந்தித்தவராக அம்பேத்கர் விளங்குகின்றார். வேரொடு மாற்றுவதனால் மரபுகளை உடைத்தெறிந்து விட்டு, புதிய பொருளாதார ஆதாரங்களுடன், மக்களோடு மக்களாகப் பண்போடு, கலாச்சாரம் உள்ளிட்ட வாழ்க்கை முறைகளையும், தேர்த்திருவிழா உள்ளிட்ட வழிபாட்டு நிகழ்வுகளிலும் வாழ்வியலோடு இணைந்து வாழும் நிலை உண்டாகும்.

முழு உரிமைப் பாதுகாப்புச் சட்டம்

ஒரு சமுதாயத்தின் தொடக்கமும், முடிவும் அதன் குடியுரிமையைச் சார்ந்து அமைகிறது. தலித் மக்களின் குடியுரிமையை நிலைநாட்டிவிட்டால் சமூக விடுதலை உறுதியாகிவிடும் என்ற கருத்தின் வெளிப்பாட்டைப் புதிய கோடாங்கி தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தை மேலும் தீவிரமாக்குதலின் அவசியத்தை உணர்ந்ததினால் அது திருத்தப்பட்டுக் குடியுரிமை பாதுகாப்புச்சட்டம் 1955 என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் தீண்டாமையைப் பின்பற்றுவது பிடியாணையின்றிக் கைது செய்வதற்குரிய சட்டமாக மாற்றப்பட்டது. என்பதை ஆர்.வி.பிள்ளை குறிப்பிட்டுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான உரிமைகள் மறுக்கப்படும் பொழுது அவர்களின் விடுதலையும், சமூக மாற்றமும் கேள்விக்குறியாகிறது. இத்தகைய போக்கு மாறினால் அரசியல் அதிகாரம், மனித உரிமை, சமூகப்பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் போக்குகளிலும் வேரொடு நிகழும் என்பதனைப் புதிய கோடாங்கி குறிப்பிட்டுள்ளது.

நமது அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது விதியின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு அது தடைசெய்யப்பட்டு விட்டது. அரசமைப்பின் இந்தப்பிரிவை நடைமுறைப்படுத்து -வதற்காகத் தீண்டாமை (குற்றம்) சட்டம் 1955 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுத் தீண்டாமை எந்த வடிவத்தில் பின்பற்றப்பட்டாலும் தண்டனைக் கொடுக்க வழி செய்யப்பட்டது என்பதனையும் அறியமுடிகின்றது.

அட்டூழியங்கள் தடுப்புச் சட்டம்

சமூகம் அடிப்படை நிலையிலிருந்து மாற்றப்பட வேண்டும் என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். அவரது சிந்தனைகளில் சமூக மாற்றத்தின் இன்றியமையாமையைச் சுட்டிக் காட்டியுள்ளார். அதில் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான சாதிகளும், மூடத்தனங்களும் இருந்து கொண்டிருக்கும் நாள் வரைக்கும் நாம் ஏனைய நாடுகளின் முன்பாகத் தலைநிமிர்ந்து வாழ இயலாது. பதிலாக வெட்கித் தலைகுனிந்துதான் வாழ வேண்டும். என்றார் இதனால் உலக அரங்கில் தலைநிமிர வேண்டுமானால் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்பன இன்றியமையாதனவாக ஆகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் முழுவிடுதலையே இந்திய விடுதலை என உணர்த்தியுள்ளார். இந்தியச் சமூக அமைப்பைத் திருத்தியமைக்க வேண்டுமானால், அரசியல் சீர்திருத்தத்திற்கு முன் சமூகச் சீர்திருத்தம் ஏற்பட வேண்டுமென்னும் எனது கொள்கையை ஒருவராலும் மறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இவை சமூகமாற்றம் குறித்த இவரது சிந்தனைகளைக் காட்டுகின்றன.

சமூகத்தின் வளர்ச்சி ஒடுக்கப்பட்டோரின் விழிப்புணர்வில் அடங்கியுள்ளது. அறியாமையின் காரணமாகவே பல விடுதலைகளை அடையமுடியாதச் சூழல் நிலவுகின்றது. இத்தகைய அறியாமையைப் போக்கி, விழிப்புணர்ச்சியை உண்டாக்கிவிட்டால் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கான சமூக விடுதலை எளிதாகிவிடும். சமூக விழிப்புணர்வு என்பது சட்டம், அரசியல், அதிகாரம் தனக்குரிய உரிமைகள், உடமைகளைப் பெறுவதற்கும், பயன்படுத்துவதற்குரிய வழிமுறைகள் போன்றனவாகும். இத்தகுப்பணி நிறைவேறினால் ஒடுக்கப்பட்ட சமூகம் வேரொடு மாறும் என்பதைப் புதியகோடாங்கி உணர்த்தியுள்ளது.

முடிவுரை

ஒடுக்கப்பட்ட மக்களில் வாழ்வில் தன்னிறைவு ஏற்படவும், முழுமையான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் உண்டாகவும் சமூக நிலையை வேரொடு மாற்ற வேண்டியது இன்றியமையாததாகவும். இக்காலச் சூழுலுக்கு மிகவும் தேவையான ஒன்றாகிறது.  ஒடுக்கப்பட்ட சமூகம் அடியோடு மாறி, முழுஉரிமையுடன் வாழ்வதற்குச் சட்டம், அரசியல் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு போக்குகளிலும் நடைமுறை சூழலுக்கு ஏற்ப மாற்றம் ஏற்பட வேண்டுமென்பதைப் புதிய கோடாங்கி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது என்பது இவ் ஆய்வின் வழி பெறப்பட்டுள்ளது.

Series Navigationமருமகளின் மர்மம் – 4
author

Similar Posts

3 Comments

 1. Avatar
  Dr.G.Johnson says:

  சாதி, வறுமை, தீண்டாமை எனும் மூன்று அடிப்படைக் காரணங்களால் தலித் மக்கள் பிறந்த மண்ணிலேயே ஒடுக்கப்பட்ட மக்களாக முகலாயர் ஆட்சியிலும், ஆங்கிலேயர் ஆட்சியிலேயும், சுதந்திர இந்தியர் ஆட்சியிலும் வாழ்ந்துவருவது வெட்கக்கேடானது.

  தேச பிதா என்று காந்தியைக் கொண்டாடினாலும், அவர் வாழ்ந்த நாட்டில் ஒரு சாரார் மற்றவருக்கு சமமாக வாழ முடியாத அவலம் கேவலமானது.

  அரசாங்கமோ சட்டமோ மாற்றம் கொண்டுவரும் என்று இன்னும் நம்பி ஏமாறுவது வடிகட்டிய முட்டாள்தனம்.

  இதற்கு ஒரே வழி தலித் மக்கள் இந்தியா ரீதியில் ஒன்றுபட்டு ஒரே தலைவனின் கீழ் செயல்படுவது. கல்வியைப் புகட்ட அரும்பாடு படுவது. பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகைகள் செய்வது. ஒரே அரசியல் கட்சியாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அதிக இடங்களைப் பிடிப்பது. அதன்மூலம் தலித் மக்களின் வாழக்கைத் தரத்தை உயர்த்துவது. தலித் மக்கள் இவ்வாறு ஒன்றுபடுவார்களா? சிந்தனையைத் தூண்டிய இந்த நல்ல கட்டுரையைப் படைத்துள்ள முனைவர் ரெ. நல்லமுத்து அவர்களுக்கு நன்றி….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 2. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  ////அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கையே எதிர்பார்ப்புடன் கூடியதாகவே தொடர்ந்துள்ளது. அந்த எதிர்பார்ப்பு ஒடுக்கப்பட்ட தலித் சமூக விடுதலையே என்பதனைப் புதிய கோடாங்கியின் படைப்புகளின் வழி அறிய முடிகின்றது. அடிமை வாழ்க்கையும் தீண்டாமையும் அடியோடு மாறவேண்டுமென்ற அம்பேத்கரின் கனவு எதிர்கால இந்தியாவின் கட்டமைப்பு ஏற்ற தாழ்வற்றதாக அமைய வேண்டும் என்பதனைக் குறிக்கோளாகக் கொண்டதாகும்.

  தீண்டாமை சாதியை ஆதாரமாகக் கொண்டது. சாதி வருணதர்மத்தை அடிப்படை கோட்பாடாய்க் கொண்டுள்ள மதத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது. சாதி, வறுமை, தீண்டாமை என மூன்று பகுதிகள் சமூக இழிவைத் தருவதற்குத் துணைபோவதனை அறிய முடிகிறது. இத்தகைய சமூகப் போக்கை முற்றிலுமாக மாற்றிட வறுமை, சாதி, தீண்டாமை என்பன முழுவதுமாக மறைய வேண்டும் என அம்பேத்கர் கருதியதனை உணரமுடிகிறது.////

  தலித் தீண்டாமை ஒழிப்பு ஜாதீய இந்து வர்ணாச்சிர அடிப்படியில் இருப்பதால்,பிரிட்டீஷ் அதிகாரி கிரிப்ஸ் இந்திய தேச விடுதலை, இந்து மதத் தீண்டாமை ஒழிப்பு இரண்டையும் ஒரே கல்லில் அடித்து விழ வைத்திருக்க முடியாது.
  சி. ஜெயபாரதன்

 3. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  இந்துமத வர்ணாச்சிர முறை இல்லாத கிராமங்களிலும் பிராமணர் அல்லாத மேங்குடிச் ஜாதியினர் ஏன் இன்னும் தலித் மக்களை ஒடுக்கி, ஒதுக்கி [They are Equal but Separate] சமத்துவம் உண்டு ஆனால் அவர் தனிப்பட்டவர் என்று புறக்கணித்துக் கொடுமைப் படுத்தி வருகிறார் ???

  சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *