பாதை

This entry is part 21 of 32 in the series 15 டிசம்பர் 2013

பாவண்ணன்

எட்டே முக்காலுக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி, ஒன்பதுமணிக்கு வில்லியனூரில் பஸ் பிடித்து, ஒன்பது இருபதுக்கு புதுச்சேரியில் வேறொரு பஸ் மாறி, ஒன்பதே முக்காலுக்கு சுற்றுக்கேணியில் இறங்கி, பெட்டிக்கடை ரங்கசாமிக்குச் சொந்தமான தோப்பில் நட்பின் அடிப்படையில் நிறுத்திவைத்திருக்கும் மிதிவண்டியில் வேகவேகமாக பத்து நிமிடம் மிதித்துச் சென்றால்தான் கடவுள் வாழ்த்து தொடங்குவதற்குள் பள்ளிக்கூடத்துக்குள் நுழையமுடியும். இந்த இணைப்புச்சங்கிலியில் ஏதாவது ஒரு கண்ணி அறுந்துபோனாலும் தலைமையாசிரியரின் வாழ்த்துப்பாட்டுக்கு தலைகுனிந்து நிற்கவேண்டும். அந்த அவமானம் நாள்முழுக்க நெஞ்சை அறுத்துக்கொண்டே இருக்கும். அதில் முன் அனுபவங்கள் ஏராளமாக உண்டு. அவையனைத்தும் எச்சரிக்கைமணிபோல காலைவேளையில் ஒவ்வொரு கணமும் புற ஊக்கியாக ஒலித்து என்னை வீட்டைவிட்டுத் தள்ளிவிடும்.

”சரி கல்பனா, நான் வரட்டுமா?” என்று நான் விடைபெற்றபடி செருப்பை அணிந்துகொள்ள, “சாயங்காலம் வரும்போது மறக்காம டீப்பொடி வாங்கியாரணும். வெறும் கைய வீசிகினு வந்துட்டு தைதைன்னு ஆடனா என்னால ஒன்னும் செய்யமுடியாது…..” என்று சொல்லிக்கொண்டே அவள் விடைகொடுக்க, வாசலைவிட்டு இறங்கும் வேளையில் ”பள்ளிக்கூடம் கெளம்பிட்டியா ராசா, ஒங்கிட்ட ஒரு விஷயம் கேக்கலாம்னு வந்தன்” என்று சொல்லிக்கொண்டே வந்து நின்றாள் பக்கத்துவீட்டு ஆயா.  கையில் ஊன்றுகோல் இருந்தது. நரைத்த தலைமுடியை பந்தாகச் சுருட்டி கொண்டை கட்டியிருந்தாள். காதுகளில் பாம்படங்கள் அசைந்தன. நெற்றியில் காமேஸ்வரர் கோவில் விபூதி. தோல் சுருங்கிய முகத்தில் எரியும் இரண்டுசுடர்போல அவள் கண்கள். எதையோ கண்டு மிரண்டுபோனதைப்போல அவை படபடத்தபடி இருந்தன. ”நல்லா நின்னு கேட்டுட்டு போங்க ராசா, இங்க ராமாயணம் கேளுங்க, பள்ளிக்கூடத்துல மகாபாரதம் கேளுங்க…” அடங்கிய குரலில் எழுந்த கல்பனாவின் கிண்டல் ஆயா காதிலும் விழுந்திருக்கும் என்று தோன்றியது. த்ச் என்றபடி ஒருகணம் திரும்பி அவளை முறைத்து அடக்கிவிட்டு, ஆயாவிடம் சத்தமான குரலில் “என்ன விஷயம், சீக்கிரமா சொல்லுங்க ஆயா. பள்ளிக்கூடத்துக்கு நேரமாய்ட்டுது…” என்று சொன்னேன்.

“நேத்து ராத்திரியே வந்து கேக்கணும்னு நெனச்சன் ராசா. நெதானம் புரியாம எங்கனா இருட்டுல உழுந்துட்டா என்ன பண்ணறதுனு நெனச்சி வெளியயே வரலை. உயிர கையில புடிச்சிகினு ஊட்டுக்குள்ளயே மொடங்கிங் கெடந்துட்டேன்…..” அவள் பார்வை என்னைப் பார்த்தாலும் அது என்னைப் பார்க்கவில்லை என்பதுபோல இருந்தது.

“என்ன விஷயம் ஆயா, சொல்லுங்க. ஏதாச்சிம் மருந்து கிருந்து வேணுமா?”

“அதெல்லாம் இல்ல ராசா, ஒரு விஷயத்துக்கு அர்த்தம் புரியலை. நீதான் அத புரியவைக்கணும்” சொல்லிக்கொண்டே புடவைத்தலைப்பால் மூக்கிலிருந்து ஒழுகிய நீரைத் துடைத்துக்கொண்டாள். நான் ஆயாவின் முகத்தையே பார்த்தேன்.

“டி.வி.பொட்டியில எப்ப பாத்தாலும் அஞ்சாறு பசங்க வந்து சத்தமா பாட்டு பாடிகினே ஆடுதுங்க. ஆத்துக்குள்ள தொபுக்குதொபுக்குனு குதிக்குதுங்க. ஒன்னுக்குக்கூட இடுப்புல துணி இல்ல. ஒரே சிரிப்பு, கும்மாளம். ஆயா ஆயானு என் மேல தண்ணி வாரி அடிக்குதுங்க. அதுக்கு என்ன அர்த்தம்?” கைத்தடியை சுவரோரமாகச் சாய்த்துவிட்டு, ஆயா திண்ணையில் உட்கார்ந்துகொண்டாள். அக்கணத்தில் ஒன்பதுமணி பஸ்ஸைப் பிடிப்பது சாத்தியமே இல்லை என்பது புரிந்துவிட்டது.

“எந்தப் படத்துல பாத்திங்க ஆயா?” ஆயாவிடமிருந்து வேறு ஏதேனும் விவரம் கிடைக்குமா என்கிற எண்ணத்தில் கேட்டேன்.

“டி.வி.யே போடலைப்பா. சும்மா இருக்கற டிவியிலதான இதெல்லாம் தெரியுது…….” குழப்பமும் அச்சமும் கலந்த அவள் பார்வையைப் பார்க்க வருத்தமாக இருந்தது. ஒரு முறை திரும்பி கல்பனாவைப் பார்த்தேன். ஆயாவின் பேச்சைக் கேட்ட திகைப்பு அவள் முகத்திலும் அப்பிக் கிடந்தது.

“கொஞ்ச நேரம் தெரியுதா? ரொம்ப நேரம் தெரியுதா ஆயா?” ஏதாவது கேட்கவேண்டும் என்பதால் மெதுவாகக் கேட்டேன்.

“கொஞ்ச நேரம் தெரியும். என்னடா எழவு இதுனு அதும் பக்கம் பாக்கலைன்னா ஒன்னுமே தெரியாது. அப்பறம் திரும்பிப் பார்த்தா மறுபடியும் தெரியும்……” அவள் குரலில் அச்சம் வெளிப்படையாகவே தெரிந்தது.

“யாரு அவுங்கன்னு பாத்தா புரியுதா ஆயா? தெரிஞ்ச பசங்களா இல்ல புது பசங்களா?” அவளைப் பேசவைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகக் கேட்டேன்.

ஆயா ஒருகணம் யோசித்தாள். பிறகு, “இப்பத்திய பசங்க கெடையாது. எந்த காலத்துலயோ பாத்த பசங்க. சின்ன புள்ளையா இருக்கும்போது கோட்டகுப்பத்துல எங்க தாத்தா ஊட்டுக்குப் போவன். அப்ப பொம்மியா பாளயத்து ஓடைக்கு தெனமும் குளிக்கறதுக்கு என்ன எங்க தாத்தா தூக்கினும் போவாரு. அந்த பசங்களயெல்லாம் அப்பதான் பாத்திருக்கேன்…” என்றாள்.

ஆயா ஏற்றுக்கொள்ளும்படி எந்தப் பதிலைச் சொல்லலாம் என்று மனம் தவித்தது. பள்ளிக்கூடத்து வேதனையை ஒருகணம் தள்ளிவைத்துவிட்டு யோசித்தேன். “ஒங்கள அறியாமலேயே ஒங்க மனசு பழய காலத்துல நடந்ததயெல்லாம் அசபோடுது ஆயா. அதான் அப்ப நடந்ததுலாம் இப்ப நடக்கறாப்புல தெரியுது…..” என்று ஒருவழியாக நிறுத்தி நிறுத்திச் சொன்னேன்.

என் வார்த்தைகள் ஆயாவைச் சென்று அடையவே இல்லை. “அங்க பாரு, அங்க பாரு, அந்தப் பசங்க ஆடுதுங்க பாரு…” என்று கூடத்தில் அணைத்துவைக்கப்பட்டிருந்த எங்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியைச் சுட்டிக் காட்டிச் சொல்லிக்கொண்டே இருந்தாள். நான் நிமிர்ந்து கல்பனாவைப் பார்த்தேன். பிறகு தொலைக்காட்சிப்பெட்டியைப் பார்த்தேன். குழப்பத்தோடு மறுபடியும் ஆயாவின் பக்கம் என் பார்வை திரும்பியது. “என்னா அட்டகாசம் பண்றான் பாரு. தண்ணிய வாரிவாரி மூஞ்சியிலயே அடிக்கறான் பாரு” என்று நடுங்கினாள் ஆயா. “எவ்ளோ எகத்தாளமா சிரிக்கறானுவோ பாருப்பா.  கைய கைய நீட்டி சிரிக்கறானுவோ. அவனுங்க கைய அடுப்புல முரிச்சி வைக்க…” என்றபோது அவள் குரல் உயர்ந்தது. பீதியில் அவள் முகத்தில் வேர்வைத்துளிகள் முத்துமுத்தாய் பூத்து நின்றன.

தளர்ந்து துவண்ட அவள் தோளை மெதுவாகத் தொட்டு அழுத்தினேன் நான். ”என்னப்பா, எல்லாமே என் கண்ணுக்கு தெளிவா தெரியுதே, ஒன் கண்ணுக்கு  எதுவுமே தெரியலையா?” என்று அப்பாவியாகக் கேட்டாள் ஆயா. “இல்ல ஆயா” என்று மெதுவாகப் பதில் சொன்னபடி அவளைத் திண்ணையில் அமரவைத்தேன். ஆயா உடனே அங்கே நின்றிருந்த கல்பனாவிடம் “ஏம்மா, ஒனக்கு தெரியுதாம்மா?” என்று ஏக்கத்தோடு கேட்டாள். பிரச்சினையின் தீவிரத்தை முதன்முதலாக உணர்ந்துகொண்ட கல்பனாவின் முகத்தில் அதுவரை படிந்திருந்த புன்சிரிப்பு ஒரே கணத்தில் மறைந்துபோனது. நெருங்கி வந்து, “என்ன ஆயா, எதயாவது பாத்து பயந்துட்டிங்களா? ஏன் இப்படி திடீர்னு ஒங்களுக்கு தெரியுது? சாயங்காலமா கோயிலுக்கு போய்வரலாமா? கோகிலாம்பா சந்நிதில ஒரு பூச பண்ணிட்டு வந்தா எல்லாம் சரியாய்டும்னு சொல்விங்களே” என்று ஆயாவின் கையைப் பிடித்து தன் கைக்குள் வைத்து அழுத்தினாள். சில கணங்களுக்குப் பிறகு மெதுவாக “தனியா இருக்க பயமா இருக்குதா ஆயா?” என்று கேட்டாள்.

ஆயாவின் தலை அசைந்தது. ஆனால் அவள் முகம் கல்பனாவின் பக்கம் திரும்பவில்லை. தொலைக்காட்சிப்பெட்டியின் பக்கமாகவே அவள் பார்வை நிலைகுத்தியிருந்தது. ”எனக்கு தெரியுது, ஒங்களுக்கு தெரியலைன்னு சொன்னா என்ன அர்த்தம்? அப்படி ஒரு மர்மம்கூட  இதுல இருக்குமா?“ என்று தனக்குத்தானே சொல்வதுபோல சொல்லிக்கொண்டாள் ஆயா. அவளை எப்படி அமைதிப்படுத்துவது என்று புரியாத தவிப்பில் அவளையே வைத்தகண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். பள்ளிக்கூடத்துக்கு அரைநாள் விடுப்பு சொல்லிவிடலாம் என்று தானாகவே மனம் ஒரு முடிவைத் தேடிக்கொண்டது.

அவளிடம் சொல்ல பொருத்தமான ஒரு வாக்கியத்தை மனசுக்குள் கட்டமைப்பதற்குள் அவளாகவே பேச ஆரம்பித்துவிட்டாள். ”ஒருநாளா ரெண்டுநாளா, அறுவது எழுவது வருஷமா தனியாதான் இருக்கறன் நானு. பதிமூணு வயசுல இந்த ஊருக்கு வாழ வந்தன். அஞ்சு வருஷம்தான் புருஷன்கூட வாழ்ந்திருப்பேன். அந்த கூறுகெட்ட மனுசன் அதோட போய் சேந்துட்டான். ஒரு தீவாளி நாளு. சங்கராபரணி ஆத்துல வெள்ளம் கரபொரண்டு ஓடுது. மெதந்தும்போன வாழத்தார புடிக்கறேன்னு தண்ணியில குதிச்சவன் கரைக்கு வரவே இல்ல. ரெண்டுநாளு கழிச்சி பத்துகண்ணு மதகு பக்கமா அவன் பொணம்தான் கெடச்சிது. ரெண்டு புள்ளைங்கள வச்சிகினு ஒத்தயில லோள்பட்டு லொங்கழிஞ்சேன். களயெடுக்கறது, நாத்து நடறது, அறுப்புவேலன்னு செய்யாத வேல இல்ல. ஒரு நிமிசம்கூட ஓய்வில்லாம புள்ளைங்களுக்காக ஒழச்சேன்.  மீச மொளச்ச கையோட அடுத்தடுத்து ரெண்டு பேரும் சைகோனுக்கு கப்பல்ல போய் சேந்துட்டானுங்க. அப்பறம் அவனுங்களா வேல தேடிகிட்டானுங்க, கல்யாணமும் பண்ணிகிட்டானுங்க, ஆரம்பத்துல ரெண்டுமூணு தடவ அஞ்சாறு வருஷத்துக்கு ஒருவாட்டினு வந்தானுங்க, துணிமணினு கொண்டாந்து கொட்டனானுங்க. ரெண்டுமூணு வாரம் தடால்புடால்னு செலவுபண்ணிட்டு போயிட்டானுங்க. அதோட சரி, அப்பறம் வரலை. ரொம்ப வருஷமா பணம் மட்டும் வந்துட்டே இருந்திச்சி. திடீர்னு அதுவும் நின்னு போச்சி. ஏம்பலத்து கவுண்டர் பையன்கூட  அங்கதான் இருந்தான். ஆத்துக்கு அந்தப்பக்கமா ரைஸ்மில் பங்களானு அவன்தான் வளச்சிவளச்சி கட்டிவச்சிருக்கான். எல்லாம் அந்த காலத்துல அங்க சம்பாதிச்ச பணம்தான். ஒருதரம் அவன்தான் என்ன தேடிவந்து பாத்துட்டு அண்ணனுங்க ரெண்டுபேரும் ஒரு சண்டையில செத்துட்டாங்க பெரிம்மானு சொல்லிட்டு போனான். அது நடந்து அம்பது வருஷம் இருக்கும்…….” ஆயா சட்டென்று நிறுத்தி தரையையே சில கணங்கள் பார்த்திருந்த பிறகு பெருமூச்சு விட்டாள். அந்தக் கோலத்தில் அவளைப் பார்க்கப்பார்க்கப் பாவமாக இருந்தது. ”நான் எதுக்கும் பயப்படலை, அந்த கோகிலாம்பாள நெனச்சிகிட்டே காலத்த தள்ளிட்டேன். பயப்படவேண்டிய காலத்துலயே பயப்படாதவ நானு. இப்பதானா இந்த வயசுல பயப்பட போறேன்?”

தொலைக்காட்சிப்பெட்டியைவிட்டு அவள் கொஞ்சம்கூட பார்வையை விலக்கவில்லை. முதலில் அவளை அப்படி செய்வதைத் தடுக்கவேண்டும் என்பதற்காக வெளியே அழைத்தேன். கல்பனா அவளை எழுப்பி, கைத்தடியை கையில் கொடுத்து வெளியே அழைத்துவந்தாள்.

அவளை அமைதிப்படுத்துவதுதான் முக்கியம் என்று அப்போது தோன்றியது. ”உங்க தைரியத்துல பத்துல ஒரு பங்குகூட இல்லாத ஆளுங்க ஆயா நாங்க. உங்களுக்கு வந்த நெலம எங்களுக்கு வந்திச்சினா நாங்க செத்த எடத்துல இந்நேரம் மரம்மரமா வளர்ந்து நிக்கும்…”  என்று அந்த நேரத்துக்கு வாய்க்குவந்ததைச் சொன்னேன். ஆயா அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை.

“பெரியபெரிய புஸ்தகங்களயெல்லாம் படிக்கற ஆளு நீ. ஒன்னக் கேட்டா சரியா சொல்லுவன்னுதான் ஓடியாந்தேன். இதுக்குலாம் என்னப்பா அர்த்தம்?” ஆயா பழைய கேள்வியிலேயே மீண்டும் வந்து நின்றாள். அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

“இதுக்குலாம் ஒரு அர்த்தமும் கெடயாது ஆயா. ராவும் பகலும் தனியாவே இருக்கிறிங்க இல்லயா? ஒங்கள அறியாமயே ஒங்க சின்ன வயசு ஞாபகம் மனசுக்குள்ள மெதந்துமெதந்து வருது. ரெண்டுமூண்டு நாளு நல்லா தூங்கி எழுந்திங்கன்னா சரியாய்டும் ஆயா…..” அவள் நம்பிக்கையைச் சம்பாதிக்கும் தொனியுடன் சொன்னேன்.

“தூக்கம் வந்தாதானே ராசா தூங்க? ராத்திரிமுழுக்க சுருண்டுங்கெடக்கறனே தவிர பொட்டுகூட தூக்கம் கெடையாதுப்பா.  எங்க பாத்தாலும் டிவி பொட்டியா தெரியுது……” ஆற்றாமையோடு அவள் கைகளை விரித்தாள்.

“இம்மா இம்மா பசங்கதான், என்ன பாத்தா அவ்ளோ எளக்காரம்போல. கீகீனு பல்லகாட்டி சிரிச்சிகினே இருக்குதுவோ. எக்கி எக்கி ஆடுதுவோ. ஒரே தாவா தாவிவந்து மேல உழுந்து புடுங்குறாப்புல குதிக்கற குதிய பாரு. ஐயோ, இதுக்குலாம் இன்னா அர்த்தம்னு ஒரு எழவும் புரியமாட்டுதே…….” ஒரு குழந்தைபோல சொன்னதையே சொல்லிச்சொல்லி மறுபடியும் புலம்பத் தொடங்கினாள். அவள் கவனத்தைத் திசைதிருப்ப ஒருமணிநேரத்துக்கும் மேலாக நானும் கல்பனாவும் மாறிமாறிப் பேசினோம். எங்கள் முயற்சிகளைப் பார்த்து விவரம் தெரிந்துகொண்ட பூக்கடைக்காரர் பெண்டாட்டியும் ஆட்டோக்காரர் அம்மாவும் ஆயாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து ஆதரவாகப் பேசித் தேற்றினார்கள். அவர்கள் எல்லோருமே ஆயாவை இருபதுமுப்பது வருஷங்களுக்கும் மேலாகத் தெரிந்துவைத்திருப்பவர்கள்.

எல்லோரும் சேர்ந்து பேசி, தற்காலிகமாக ஆயா வீட்டில் இருக்கிற தொலைக்காட்சிப் பெட்டியை அப்புறப்படுத்தி, எங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்து வைத்துக்கொள்வது என்று முடிவெடுத்தோம். ஆயாவின் வீட்டுக்குள் சென்று, இணைப்புகளையெல்லாம் அகற்றி தொலக்காட்சிப் பெட்டியைமட்டும் தூக்கிவந்து என் அறையில் கட்டிலுக்குக் கீழே வைத்து போர்வையால் மூடிவைத்துவிட்டு பள்ளிக்குச் சென்றுவிட்டேன்.

மாலை வரும்போது, ஆயாவைக் காணவில்லை. கல்பனாவிடம் கேட்டேன். “ஆத்துப்பக்கமா போய்வரேன்னு போச்சி.  தோ வர நேரம்தான்….” என்று பதில் சொன்னபடி என் பையை வாங்கி அவள் திறந்தபோதுதான் டீ பொடியை வாங்கிவர மறந்துபோனது உறைத்தது.  நாக்கைக் கடித்துக்கொண்டேன். “வெற்றிகரமான நாலாவது நாள், உங்க மறதிக்கு” என்றபடி கல்பனா வீட்டுக்குள் சென்றாள். “அப்பறமா ஆயா ஏதாச்சிம் பொலம்பிச்சா?” என்றபடி நானும் பின்னால் சென்றேன். “மதியானம் கீரக்கொழம்பு வச்சி சூடா கொஞ்சம் சோறுபோட்டு குடுத்தேன். சாப்ட்ட கையோட நல்லா தூங்கிடுச்சி. இதுவரைக்கும் ஒன்னும் இல்ல…..” என்றாள்.  இரவுச் சாப்பாட்டை ஒரு தட்டில் எடுத்துச் சென்று நான்தான் கொடுத்துவிட்டு வந்தேன். அவள் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே குதிரைவால் அரிசிச்சோறு, தினையரிசிச்சோறு என்று அந்தக் காலத்துக் கதைகளை ஒருமணிநேரத்துக்கும் மேலாகப் பேசிப் பொழுதைப் போக்கிவிட்டுத் திரும்பினேன். காலை நேரத்துக் கதையை மறந்துவிட்டதைப்போலவே அவள் பேசிக்கொண்டிருந்தைக் கண்டு எனக்கும் திருப்தியாக இருந்தது.

எல்லாமே ஒரு ராத்திரிதான். அடுத்தநாள் காலையில் நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு செய்தித்தாளும் பாலும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிய நேரத்தில்  திண்ணையில் உட்கார்ந்திருந்த ஆயாவைப் பார்த்த கணத்தில் எல்லாமே நொறுங்கிவிட்டது. கல்பனா ஆயாவின் அருகில் உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் ”என்னன்னு கேளுங்க வாங்க. ஆயிரம் வேல இருக்குது எனக்கு. இன்னும் பசங்க வேற எழுந்திருக்கவே இல்ல….” என்றபடி என் கையிலிருந்த பாலை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள். “என்ன ஆயா?” என்றபடி அவள் அருகில் உட்கார்ந்தேன் நான்.

“இம்மா இம்மாம் பெரிசா தேளுங்க, நண்டுங்க, பூரானுங்க, பாம்புங்க கட்டிலுக்குக் கீழ கூட்டம்கூட்டமா மேயுதுங்கப்பா. கட்டில்ல படுத்திருக்கவே அருவருப்பா இருக்குது. கீழ கால் வைக்கவே முடியலை.  ஒன்னொன்னும் அவுத்துவுட்டாப்புல மேயுதுங்க…..”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “எங்க? ஊட்டுக்குள்ளயா?” என்று அவசரமாகக் கேட்டேன். “ஆமாம்பா” என்று தலையாட்டினாள் ஆயா. “அடிக்கலையா?” என்றேன். “எவ்ளோனு அடிக்கறது சொல்லு, கூட்டம்கூட்டமா எதுர்கொண்டு வந்துகினே இருக்குதுதுங்களே…..” என்று கைகளை விரித்துக் காட்டினாள். அவள் கண்களில் பீதி நிறைந்திருந்தது. எனக்கு நம்புவதா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. “வாங்க  பாத்துட்டு வரலாம்” என்று அழைத்தேன். மெதுவாக நடந்து பக்கத்தில் இருந்த அவள் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தோம். கூடம் வெறுமையாக இருந்தது. கலைந்துபோன போர்வைகளுடன் கட்டில் ஓரமாகக் கிடந்தது. பார்வையை அங்குமிங்கும் படரவிட்டபடி இருக்கும்போதே, “அங்க பாரு, அங்க பாரு, கூட்டம்கூட்டமா மொய்க்குதுவோ பாரு. ஒவ்வொரு பாம்பும் எப்படி வளஞ்சி நின்னு படம் எடுக்குதுனு பாரு” என்று கட்டிலைக் காட்டினாள். அதற்குள் விஷயத்தைக் கேள்விப்பட்டு அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்துவிட்டார்கள். என்னிடம் சொன்னதையே ஆயா அவர்களிடம் மீண்டும் சொல்லிப் புலம்பினாள். ”என் கண்ணுக்கு தெரியறது எதுவுமே ஒங்க கண்ணுக்கு தெரியலைன்னு சொல்றிங்களே, எங்க போயி முட்டிக்கிறதுனு புரியலையே….” என்ற ஆயாவின் புலம்பல் தடுக்கமுடியாததாக இருந்தது.

ஆயாவை ஒவ்வொருநாளும் வலுக்கட்டாயமாகத்தான் சாப்பிடவைக்க வேண்டியிருந்தது. அதைவிட அதிகமாக கட்டாயப்படுத்தித்தான் அவர் புலம்பலை நிறுத்தமுடிந்தது.  கண்ணில் தென்படுகிறவர்கள் எல்லோரையும் நிறுத்திநிறுத்தி, “இங்க பாம்பும் தேளுமா குவிஞ்சிங்கெடக்குதே, உங்களுக்கு தெரியலையா?” என்று கேட்கத் தொடங்கினாள். அவர்கள் உதட்டைப் பிதுக்கினால், “என்னப்பா, என் கண்ணுக்கு தெரியுது, உன் கண்ணுக்கு தெரியலையா?” என்று வேதனையாகச் சொல்லி  அழுதாள். ஆரம்பத்தில் வயது காரணமாக ஆயாவைப் பொருட்படுத்தி நின்று விசாரித்தவர்கள் எல்லோரும் மெல்லமெல்ல அவளுடன் நிகழ்த்தும் உரையாடலை ஒரு கிண்டலாக நினைத்து நெருங்கிவரத் தொடங்கினார்கள். அல்லது பொருட்படுத்தாமல் விலகிச் சென்றார்கள்.

ஆயாவின் நடவடிக்கைகளைச் சரியாகக் கணிக்கவே முடியவில்லை. பல நேரங்களில் இயல்பாகவே பேசிக்கொண்டிருப்பவர் சில நேரங்களில் நம்பமுடியாதபடி பேசத் தொடங்கிவிடுவதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எந்த நேரத்தில் என்ன சொல்வார் என்பதே குழப்பமாக இருந்தது.  என் மனபாரத்தை இறக்கிவைக்க இதையெல்லாம் நெருக்கமான ஒரு நண்பரிடம் சொன்னேன். அவர் தமக்கு நன்றாக அறிமுகமான மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். நண்பரிடம் சொன்னதையெல்லாம் அவரிடம் மீண்டும் சொல்ல நேர்ந்தது. “என்ன வயசிருக்கும்?” என்று கேட்டார் டாக்டர். “அவுங்க சொல்ற கணக்குப்படி பாத்தா எண்பத்தஞ்சி தொண்ணூறு இருக்கும் சார்” என்றேன். “சொந்தமா?” என்று கேட்டார் மீண்டும். “அப்பிடிலாம் ஒன்னுமில்ல சார், பக்கத்து வீடு. பல வருஷத்து பழக்கம். அவுங்களுக்குனு யாரும் இல்ல. தனியாவே இருக்காங்க” என்றேன். டாக்டர் தலையசைத்தபடி “பெரிய ட்ரீட்மெண்ட்லாம் வேணாம் சார். ராத்திரி தூக்கம் நல்லா தூங்கனாவே தானா சரியாய்டும். மாத்திரை எழுதிக் குடுக்கறேன். ராத்திரி ஒருவேள மட்டும் சாப்பாட்டுக்கு பிறகு ஒரு மாத்திர குடுங்க. போதும்……”  என்று சீட்டு எழுதிக் கொடுத்தார். மாத்திரை வாங்கிச் சென்று கல்பனாவிடம் கொடுத்து விவரங்களைச் சொன்னேன்.

மாத்திரை கைமேல் பலன் கொடுத்தது. இரவில் தூக்கமே இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தவள் எட்டுமணிநேரம், பத்துமணிநேரம் என்று நன்றாகத் தூங்க ஆரம்பித்தாள். “தூங்கட்டும், தூங்கட்டும். இவ்வளோ காலமா அமைதியில்லாம தவிச்சிகினே கெடந்த மனசு கொஞ்சமாச்சிம் நிம்மதியா இருக்கட்டும் விடு” என்றேன். நீண்ட உறக்கத்திலிருந்து எழுந்திருப்பதால் எழுந்ததுமே அவளுக்குப் பசிக்கத் தொடங்கியது. நேரத்துக்குச் சரியாக சிற்றுண்டியோ உணவோ கொடுத்து கவனித்துக்கொண்டாள் கல்பனா. பத்துப்பதினைந்து   நாட்கள்வரைக்கும் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. மறுநாள் எல்லாமே பழைய நிலைமைக்குத் திரும்பிவிட்டதில் நாங்கள் மனமிடிந்து சோர்ந்துபோனோம்.

“நல்ல தூக்கத்துல திடீர்னு எழுந்து உக்காந்துட்டேன். கூட்டம்கூட்டமா பொறாங்க வந்து சுத்தி நின்னுகினு குர்குருனு சத்தம் போடுது. பால் நெறத்துல ஒவ்வொன்னும் வெள்ளவெளேர்னு நவுந்துநவுந்து போவுதுமா. இதுக்குலாம் என்ன அர்த்தம்னு புரியலையே”

ஆயாவின் குரலில் தெரிந்த நடுக்கத்தைப் பார்த்து எங்களால் பரிதாபப்படமட்டுமே முடிந்தது. ஆள்துணை இல்லாத குறைதான் அவளுடைய அச்சத்துக்குக் காரணம் என்று அடிக்கடி கல்பனா சொன்னதில் உண்மை இருக்கலாம் என்று தோன்றியது. பகல்பொழுது எப்படியோ ஓடிவிடுகிறது. இரவின் நீண்ட தனிமைக்குப் பிறகுதான் அவளுடைய புலம்பலின் தீவிரம் அதிகரிப்பதாகத் தோன்றியது. ப்ளஸ்டூ படிக்கிற பையன் ஒருவனை ஆயாவுக்குத் துணையாகப் படுக்க அனுப்புவதாக எதிர்வீட்டுக்கார அத்தை சொன்னாள். அப்படி ஒரு மூன்றுநாள் நல்லபடியாகப் போயிற்று.  அடுத்தநாள் அந்தப் பையன் தன்னால் ஆயாவோடு தங்கவே முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டான். “ஐய, எந்த நேரம் பாத்தாலும், அங்க பாரு பூரான் போவுது, இங்க பாரு பாம்பு போவுது, எனக்கு தெரியுதே ஒனக்கு தெரியலையானு ஒரே புடுங்கல் அங்கிள். தைரியமா இருக்கணும்னு நானே நெனச்சாகூட எதயாச்சிம் சொல்லி அந்த ஆயா பயமூட்டிகினே இருக்குது, என்னால முடியவே முடியாது” என்று பின்வாங்கிவிட்டான். அதைத் தொடர்ந்து ஒரு செக்யூரிடி நிறுவனத்தை அணுகி விவரங்களைச் சொல்லி யாராவது வாரச் சம்பளத்துக்கு கிடைப்பார்களா என்று விசாரித்து ஒருவரை வரவழைத்தேன். அவரும் மூன்று நாட்களுக்கும் மேல் தாக்குப் பிடிக்காமல் போய்விட்டார். “ஏம்பா அந்த நாய் கொரைக்குதே கேக்கலியா? அந்த நரி ஊளையிடுதே கேக்கலியா? போய் ஓட்டிட்டு வானு ராத்திரிபூரா தொணதொணனு அரிச்சிகினே இருக்குது சார். இல்லாத நாய நான் எப்பிடி சார் ஓட்டமுடியும்?” என்று பேசின சம்பளத்தை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.

எதுவும் செய்ய இயலாத குற்ற உணர்ச்சி என்னை உறுத்தியபடி இருந்தது. முடிந்த அளவு உதவிகளைச் செய்தாலும் ஆயாவைத் தேற்றி மீட்டெடுக்கும் மருந்தை எங்களால் தரமுடியவில்லை.

தன் புதியபுதிய கண்டுபிடிப்போடு ஒவ்வொரு நாளும் ஆயா எங்களிடம் முதலில் வந்தாள். பிறகு அதையே திரும்பத்திரும்பச் சொன்னபடி தெருவில் இருக்கிற எல்லோருடைய வீடுகளுக்கும் சென்று திரும்பினாள். அப்புறம் தெருவோடு செல்லும் வழிப்போக்கர்களைக்கூட உரிமையாக நிறுத்தி விவரிக்கத் தொடங்கினாள். சில நாட்களில் “எங்க பார்த்தாலும் பாம்புங்க சுருண்டுசுருண்டு கெடக்குதுமா, எனக்கு தெரியுதே ஒனக்கு தெரியலையா?” என்று யாராவது ஒருவரிடம் எங்காவது ஓரிடத்தில் நின்று கேட்டுக்கொண்டிருப்பது இயல்பான நிகழ்ச்சியாக மாறிவிட்டது. பூக்காரத்தெரு, போலீஸ் ஸ்டேஷன் தெரு, கல்யாணமண்டபத் தெரு, வெற்றிலைத் தோட்டத்தெரு தாண்டி ஆற்றங்கரைவரைக்கும்கூட அவள் நடந்துபோய் நடந்துவந்தாள். எல்லோரிடமும் அதே விவரணை. அதே கேள்வி. அதே குழப்பம்.

”ஆத்தங்கரை பக்கம் ஒரு பாறைமேல உக்காந்துகினு இந்த ஆயா தனியா பொலம்பிகிட்டே கெடந்தது, உங்க தெருதானா அது?” ஞாயிறு விடுமுறையில் பொழுதுபோக்குக்காக தூண்டில் எடுத்துக்கொண்டு ஆற்றுப்பக்கம் சென்று வந்த சீட்டுக்கம்பெனி ஊழியர் ஒருவர் ஒருநாள் கேட்டுவிட்டுச் சென்றார்.

“ஒரு சாவுக்காக சுடுகாட்டுக்கு போயி திரும்பும்போதுதான் ஆயாவ பாத்தென். அதும்பாட்டுக்கு தடிய ஊனிகினே ஆத்துப் பக்கமா போவுது. உரும நேரத்துல ஒன்னு கெடக்க ஒன்னு நடந்தா யாரு பொறுப்பு? கொஞ்சம் சொல்லி வை தம்பி…” சைக்கிள்கடை ராவுத்தர் கடைத்தெருவில் என்னை நிறுத்திச் சொல்லிவிட்டுச் சென்றார்.

எங்கள் ஆலோசனைகள் எதுவும் ஆயாவின் மனத்தைத் தொடவே இல்லை. ”சர்ருபுர்ருனு லாரிங்களும் பஸ்ங்களும் போய்வர வழிங்க அது. எதாச்சிம் ஒன்னு கடக்க ஒன்னு நடந்தா என்னங்க செய்யறது? எப்பிடியாவது எடுத்துச் சொல்லி நிறுத்தணுங்க” என்று கல்பனாவுக்கும் கவலை இருந்தது.  ஆனால் சொல்வதையெல்லாம் ஆயா அமைதியாகக் கேட்டுக்கொண்டாளே தவிர, தன் கேள்விகளோடு தடியை ஊன்றியபடி சென்று திரும்புவதைமட்டும் ஒருநாளும் நிறுத்தவில்லை. தன் புதிர்களைச் சொல்லவும் சந்தேகங்களை முன்வைக்கவும் மனிதர்களின் தேவைகூட அவளுக்குக் கொஞ்சம்கொஞ்சமாக இல்லாமல் போய்விட்டது. வழியில் தென்படுகிற செடி, கொடி, மரம், கல், கட்டைகளோடு அவள் மிக இயல்பாக உரையாடத் தொடங்கிவிட்டாள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. “கடவுளே, அவள் நல்லபடியா திரும்பிவரணும்” என்று அவளுக்காகப் பிரார்த்தனை செய்துகொள்வது மட்டுமே எங்களால் முடிந்தது.

வழக்கம்போல, பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்த ஒருநாள் காலையில் தடியை ஊன்றியபடி ஆயா வந்தாள். “என்ன ஆயா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டேன் நான். “கொஞ்சம் வீட்டுக்கு வரியா?” என்று அழைத்தாள். அப்படிச் சொல்வது கொஞ்சம் புதுசாக இருந்தது. “என்ன ஆயா? என்ன விஷயம்?” என்று மறுபடியும் கேட்டேன். “கல்பனா ஆப்பம் சுட்டிருக்குது பாருங்க, போய் சாப்புடுங்க” என்று சொன்னேன். அது அவள் காதில் விழுந்தமாதிரியே தெரியவில்லை. “சித்த வந்துட்டு போயேன்” என்று என்னை அழைப்பதிலேயே குறியாய் இருந்தாள். வேறு வழி தெரியாமல் “என்ன விஷயம் சொல்லு ஆயா?” என்றபடி அவளோடு அவள் வீட்டுக்குச் சென்றேன். “எவ்ளோ காக்காய்ங்கனு நீயே வந்து பாரு. உள்ள கால்வைக்கக்கூட எடமில்ல. காகானு ஒரே சத்தம். காதே கிழிஞ்சிடும்பலக்குது. இப்படி வந்து மொய்க்குதுங்களே, இதுக்குலாம் ஒரு அர்த்தம்கூடவா கெடயாது?” என்று கொஞ்சம்கொஞ்சமாகச் சொல்லிமுடித்தாள். அப்போதே என் கால்கள் தயங்கி நின்றுவிட்டன. அவள் மனஅமைதிக்காகத்தான் தொடர்ந்து செல்லவேண்டி இருந்தது.

“பாரு பாரு, நீயே நல்லா பாரு, ஒன்னும் தெரியலைனு மட்டும் சொல்லிடாத” என்றபடி ஆயா வீட்டின் கதவுகளை தாராளமாக திறந்து காட்டினாள். “எவ்வளவு காக்காய்ங்க பாரு? சத்தத்துல என்னால நிக்கவே முடியலை” என்றபடி உண்மையாகவே சதைப்பற்றில்லாத எலும்புக் கைகளை உயர்த்தி காதுகளை மூடிக்கொண்டாள். பீதியில் மூடிக்கொண்ட அவள் கண்கள் தோல்குழிகளைப்போல இருந்தன. கசங்கிய துணியைப்போல அவள் முகம்முழுக்க சுருக்கங்கள். காதுத்துளைகளில் பவழப்பாம்படங்கள் எடை தாங்காமல் ஆடிக்கொண்டிருந்தன.

“வா ஆயா, போவலாம்” அமைதியாக அவள் கைகளைப்பற்றி அழைத்தேன். ஏமாற்றத்தோடு அவள் என் முகத்தை ஏறிட்டாள். “இதுக்குலாம் ஏதோ ஒரு அர்த்தம் இருக்குதுதான? ஒனக்கு தெரியும்தான? ஏன் சொல்லமாட்டற, சொல்லு” என்று கேட்டபோது என் கண்கள் கலங்கின. கட்டுப்படுத்தியபடி “அப்படிலாம் ஒரு அர்த்தமும் கெடையாது ஆயா. ஏதாச்சிம் இருந்தாதான ஆயா அர்த்தம் இருக்கும், எல்லாமே நீங்களா நெனச்சிகிற கற்பனதான் ஆயா? அங்க காக்காவும் இல்ல, குருவியும் இல்ல” என்று நிதானமாக சொன்னேன். “எல்லாமே என் கண்ணுக்கு தெரியுது, ஒன் கண்ணுக்கு ஏன் தெரியமாட்டுது” என்று மறுபடியும் பழைய புள்ளிக்கு வந்து நின்றாள். மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவளை அழைத்துச் சென்று கல்பனாவிடம் விட்டுவிட்டு ”ஆயாவுக்கு ஆப்பம் குடும்மா” என்று சொல்லிவிட்டு பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பிவிட்டேன்.

பள்ளிக்குப் போய்ச் சேர்கிறவரைக்கும் ஒழுங்காக நேரத்துக்குள் சென்றுவிடவேண்டுமே என்கிற கவலை. சேர்ந்தபிறகு, அன்றைய பொழுது நல்லபடியாகப் போகவேண்டுமே என்கிற கவலை. திரும்பும்போது, எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நேரத்துக்கு பஸ்கள் கிடைத்து வீடு திரும்பவேண்டுமே என்கிற கவலை. வீடு திரும்பிய பிறகும் என்னென்னமோ இனம்புரியாத கவலைகளால் அடர்ந்துகிடந்தது மனம்.

“எங்கம்மா ஆயாவ காணம்?” வாசலையொட்டிய முருங்கை மரத்துப்பக்கம் உட்கார்ந்திருக்கும் ஆயாவைக் காணாததால் கல்பனாவிடம் கேட்டேன்.

“நீங்க ஒங்க டூட்டிக்கு போவறாப்புல அது அதும் டூட்டிக்கு போயிருக்குது.”

கல்பனா கொடுத்த சூடான தேநீர் ஆறுதலாக இருந்தது.  காலையில் செய்தித்தாளில் படிக்காமல் விட்ட பகுதிகளை மெதுவாகப் படித்துமுடித்தேன். பிள்ளைகள் எழுதவேண்டிய வீட்டுப் பாடங்களுக்கு உதவி செய்தேன். சின்னவளுக்கு அவள் பள்ளியில் ஒரு ப்ராஜெக்ட் வேலை கொடுத்திருந்தார்கள். அதற்காக அவளுக்கு ஒரு தெர்மோகோல் அட்டை தேவைப்பட்டது. கடைக்குச் சென்று வாங்கிவந்து செய்துகொடுத்தேன். மணி ஏழரையைத் தொட்டது. ஆயா இன்னும் வீடு திரும்பவில்லை என்பது எனக்குள் உறுத்தியபடி இருந்தது. கல்பனாவிடம் சொல்லிவிட்டு, ஆயாவின் வீட்டுக்குச் சென்று ஒருமுறை பார்த்துவிட்டுத் திரும்பினேன். கதவு சாத்தப்பட்டிருந்தது. வழக்கமாக ஆயா திரும்பும் நேரம் கடந்துபோய்விட்டது. என் பதற்றம் கல்பனாவையும் தொற்றிக்கொண்டது. “கட பக்கமா போய் பாத்துட்டு வரீங்களா?” என்று கேட்டாள். “அதான் நானும் நெனைக்கறேன். அந்த டார்ச்ச எடு” என்று கேட்டு வாங்கிக்கொண்டு வேறு உடைக்கு மாறியபிறகு தெருவில் இறங்கினேன்.

பூக்கடைக்காரர் வீடு, ஆட்டோக்காரர் வீடு என தெருவில் தெரிந்தவர்கள் வீடுகளுக்கெல்லாம் ஒருமுறை சென்று விசாரித்தேன். எல்லோரும் “சாயங்காலமா பாத்தேன்” “மதியானமா பாத்தேன்” “போலீஸ் ஸ்டேஷன் பாலத்துப்பக்கமா பாத்தேன்” என்றுதான் சொன்னார்களே தவிர இருக்கும் இடத்தைப்பற்றிய விவரங்களை யாராலும் சொல்ல இயலவில்லை.  எனக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது. தெருவில் நடக்கிற வயதானவர்கள் ஒவ்வொருவரும் ஆயாவைப்போலவே தெரிந்தார்கள். கடவுளே என்ன குழப்பம் இது என்று தலையைப் பிடித்துக்கொண்டு எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் வாகனங்கள் பறக்கிற சாலையையே பார்த்துக்கொண்டிருந்தேன். இவ்வளவு அடர்த்தியாக இருள் இறங்கியபிறகும் ஆற்றங்கரையோரம் ஆயா உட்கார்ந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்பினேன். அதனால் நடமாட்டம் உள்ள பகுதிகளிலேயே முதலில் தேடித்தேடி அலைந்தேன். கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் டார்ச் விளக்கின் உதவியால் ஆற்றுக்குச் செல்லும் பாதையில் நடந்தேன். காற்று உய்யென்று வீசியது. தென்னை ஓலைகளின் அசைவு பார்க்க பீதியூட்டுவதாக இருந்தது. மெழுகுவர்த்திகளின் நிறத்தில் ஊமத்தம்பூக்கள் காற்றில் ஆடின. புதர்களின் இலைமணம் மூக்கை அடைத்தது.

அரைநிலவொளியில் ஆறு காற்றில் கிழிந்து நெளியும் வெள்ளைப்புடவைபோல கோடுகோடாக ஓடிக்கொண்டிருந்தது. அருகில் நெருங்கி நின்றபோதுதான் அதன் சத்தம் மெதுவாகக் கேட்டது. எம்பிஎம்பி அடங்கும் சிற்றலைகள் வெள்ளித்தகடுகளாக மின்னின. அவ்வப்போது பாலத்தின்மீது விரைந்து செல்லும் பேருந்துகளின் வெளிச்சக்கோடு ஒரு வெள்ளைக்கடப்பாறையாக தண்ணீரில் வேகமாகக் குத்துண்டு சாய்ந்தது.  ”ஆயா” என்று மீண்டும்மீண்டும் அழைத்தேன். பாறைகளிடையே தடுமாறி விழுந்துகிடக்கலாமோ என நினைத்து டார்ச் விளக்கின் வெளிச்சத்தை எங்கெங்கும் பாய்ச்சித் தேடினேன். ஒரு பதில் கூட இல்லை. ஒரு உருவம் கூட தட்டுப்படவில்லை. எனக்குப் பைத்தியம்பிடித்துவிடும்போல இருந்தது. ”ஆயா” என்று கூவியபடி கரைக்கு மறுபடியும் வந்தேன்.

“என்ன வாத்யாரே, இந்த நேரத்துல?” என்றபடி சட்டென்று இரண்டு உருவங்கள் பாறை மறைவிலிருந்து எழுந்தபோது முதலில் பீதியில் பின்வாங்கினேன். வெளிச்சத்தில் ஆள்நிதானம் புரிந்ததும்தான் மனம் தைரியமடைந்தது. கல்யாணமண்டபத்துக்குப் பக்கமாக வசிப்பவர்கள். நான் சுருக்கமாக விவரத்தைச் சொன்னேன்.

“இருட்டன நேரத்துலேருந்து இங்கதான் இருக்கம் நாங்க. சுடுகாட்டுப் பக்கமா பாக்கெட் வாங்கிட்டு வந்து உக்காந்ததுதான், தோ இப்பதான் ஏந்திருக்கம். யாருமே இந்த பக்கமா வரலையே…..”

“ஆளு இல்ல, ஆயா…”

“எனக்கு தெரியுதே, ஒனக்கு தெரியலையானு கேட்டுகிட்டே நடக்குமே அந்த ஆயாதான சார்? எங்களுக்கு நல்லா தெரியும் சார், எங்க கண்ணுல அது படவே இல்ல சார்……”

மனம் பொங்க ஒருமுறை ஆற்றின் பரப்பைப் பார்த்தேன். “நீங்க இங்க தேடற நேரத்துல அது ஊட்டுப் பக்கமா போனாலும் போயிருக்கும், போய் பாருங்க” இருவரில் ஒருவன் அருகில் வந்து சொன்னான். அவன் வார்த்தைகளோடு கலந்து வெளிப்பட்ட மணம் குமட்டியது. ஆற்றையும் அவனையும் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே கரையைநோக்கி நடந்தேன். வழிமுழுக்க மீண்டும் விசாரித்தபடியே போனேன். ஒரு விவரமும் கிடைக்கவில்லை.

என் தோற்றமே கல்பனாவுக்கும் அவள் அமைதியே எனக்கும் பதிலை உணர்த்திவிட்டதால் ஒருவரைஒருவர் பார்த்து பெருமூச்சுவிடமட்டுமே முடிந்தது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து விசாரித்துவிட்டுப் போனார்கள். “வந்துருவாங்க சார். கவலப்படாதிங்க” ”தள்ளாத ஆயா, எவ்வளவு தூரம் போயிடுவாங்க சார். வந்துருவாங்க” என்று ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வழிகளில் ஆறுதல் சொன்னார்கள்.

யாருக்கும் இரவு உணவு இறங்கவில்லை. பிள்ளைகள் சாப்பிடவேண்டுமே என்பதால்தான் கூடவே உட்கார்ந்து எழுந்தோம். இரவில் உறக்கமே வரவில்லை. ஆயாவின் விதவிதமான கேள்விகள் மாறிமாறி காட்சிகளாக ஓடிக்கொண்டே இருந்தன. இரண்டுமூன்று தரம் இடையிடையே எழுந்து எழுந்து ஆயாவின் வீட்டுப்பக்கம் சென்று பார்த்தேன். “ஏம்பா எனக்குத் தெரியுதே, ஒனக்கு ஏன் தெரியலை?” என்று ஆயா கதவைத் திறந்துகொண்டு வந்து அவள் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. மீண்டும்மீண்டும் இருள்பகுதியில் டார்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சித் தேடிவிட்டு  ஏமாற்றத்தோடு திரும்பினேன்.

காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சிக்குச் செல்ல மனமில்லை. ஆற்றுக்குப் போகும் பாதையில் நடந்துபோனேன். இரவில் கண்பார்வையால் தொடமுடியாத இடங்களெல்லாம் காலைவெளிச்சத்தில் தெரிந்தன. ஒரு இடம் பாக்கியில்லாமல் பார்த்துவிட்டேன். ஆடாதோடைப்புதர். அஞ்சுமல்லிப்புதர். கள்ளிக்காடு. தும்பைக்காடு. தூதுவளைச்செடிகள். எந்த இடத்திலும் ஆயா தென்படவில்லை. ஆயா என்று மனம் அரற்றியபடியே இருந்தது. கரையோரமாக வெகுதூரம் நடந்துசென்று பார்த்துவிட்டுத் திரும்பினேன். ஆயா சென்ற பாதை எது என்பது கடைசிவரை தெரியவே இல்லை.

அன்று இரவு, அதற்கு மறுநாள் இரவு என பல இரவுகள் ஆயாவுக்காகக் காத்திருந்தோம். பல சமயங்களில் “எங்க போனாலும் இங்கதான் வந்தாவனும், யாருமே எதிர்பார்க்காத ஒரு சமயத்துல திடீர்னு வந்து நிக்க போறாங்க பாரு…..” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டோம். அதுமட்டும்தான் எங்களால் முடிந்தது.

paavannan@hotmail.com

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -53 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் வடிப்பு ..!புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – ​ 37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத் திகழ்ந்த ஏ​ழை
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *