புகழ் பெற்ற ஏழைகள்
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத் திகழ்ந்த ஏழை…………
“வெள்ளிப் பனிமலையின் மீதுலாவும் – அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல்விடுவோம்!
பள்ளித் தளமனைத்தும் கோவில் செய்குவோம்
நம் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!”
அடடா வாங்க… வாங்க…அற்புதமா பாரதியார் பாட்ட பாடிகிட்டே வர்ரீங்க..ரொம்ப அருமையான பாட்டுங்க…ஆமா போன வாரம் பாரதி பிறந்த நாள்..அதனால அவரோட பாட்டப் பாடுறீங்களா…என்னது இல்லையா…?அப்பறம்..ஓகோ…ஓ…கோ..சபாஷ்.
பாரதியாரால வீரசிவாஜின்னு பாராட்டப்பட்ட ஒரு தியாகச் செம்மல்… பாரதத் தாயின் அடிமை விலங்கொடிக்க அயராது பாடுபட்ட வீரத் துறவி… சுப்பிரமணிய சிவாங்கறத சரியாக் கண்டுபிடிச்சிட்டீங்களே… பாராட்டுக்கள்… என்னது போன வாராமே கண்டு பிடிச்சிட்டீங்களா…எப்படி..? என்ன..? நானே சொல்லிட்டேனா…? அட நான் ஒங்கள சிவனேன்னு இருக்கறீங்கன்னு சொன்னத வச்சு கண்டுபிடிச்சிட்டிங்களா… நீங்க ரொம்ப கெட்டிக்காரருங்க… சரி நான் அவரப் பத்தி சொல்லறதவிடவும் ஒங்க மூலமா கேக்கறது எனக்கு ரொம்ப சந்தோஷங்க….என்னது… நான்தான் சொல்லணுமா.. சரி சரி….போகாதீங்க நானே சொல்றேன்… தெரியலன்னா ஒங்க கிட்ட கேட்டுக்கறேன்….என்ன சரியா….?
வறுமையில் வாடிய இளமை
பூட்டுக்குப் பெயர் போன திண்டுக்கல் மாவட்டத்தில கொடைக்கானல் மலையடிவாரத்துல இருக்கற வத்தலக் குண்டுங்கற ஊருல ராஜம் ஐயர்-நாகம்மாள் தம்பதியினருக்கு மகனாக 1884-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் நாள் சிவா என்ற சுப்பிரமணியம் சிவம் பிறந்தார்.
சிவாவின் தந்தை ராஜம் ஐயர் நிலையான மனமில்லாதவர். அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுவிடுவார். திடீரென்று வீட்டிற்கு வருவார். எங்கே போவார்…எப்ப வருவார் அப்படின்னு யாருக்குமே தெரியாது… அப்படி அவரு போறபோதெல்லாம் நாகம்மாள் தனது குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு தனது தாய்வீட்டிற்குச் சென்றுவிடுவார். தாய்வீடு வருவதும், பின்னர் தன் புகுந்தவீடு வருவதும் நாகம்மாளுக்கு வாடிக்கையாகப் போனது.. தனது கணவரின் செய்கையால் வீட்டில் வறுமை வாட்டியது… இளமையில் குழந்தைகள் அனைவரும் வறுமைத் தீயில் வறுபட்டனர்…
வறுமைத் தீயில் கருகிய அவர்களுக்கு தாத்தாவீடுதான் அடைக்கலம் அளித்தது…நாகம்மாளின் தந்தை அனந்தய்யர் மட்டும் இல்லையென்றால் இன்று சிவா என்று நாம் அழைக்கின்ற தீயாகச்சுடர் இளமையில் கருகி அழிந்திருக்கும்… அவர் அய்யம்பாளையத்தில் மணியம் வேலை பார்த்து வந்தார். சிவாவின் தாத்தாவாகிய அனந்தய்யர்தான் தனது மகளின் குடும்பத்தையும் பராமரித்து வந்தார்…தாத்தாவின் பாதுகாப்பில் வளர்ந்த சிவா மிகுந்த நினைவாற்றலோடு விளங்கினார். இதனை சிவாவின் தாத்தா மிக நுட்பமாகத் தெரிந்து கொண்டார்..
சிவா எதையும் உன்னிப்பாகக் கேட்கும் திறன் உடையவராக விளங்கினார். சிவாவிற்குநான்கு வயதாக இருக்கும்போது அவரது தாத்தாவின் வீட்டிற்குப் புராணம் படிக்கச் சிலர் வந்து இரவில் புராணங்களைப் படித்துவிட்டுச் சென்றனர்.
ஒரு நாள் இரவு தொட்டிலில் படுத்துக் கொண்டிருந்த சிவா ழுராணக்கதையைக் கொண்டிருந்தவாறே தூங்கி விட்டார். மறுநாள் பொழுது விடிந்தது சிவா விழித்தெழுந்து தனது தாத்தாவிடம் ஒருத்தர் எதையோ படித்துச் சொன்னாரே அது என்ன கதையா தாத்தா? என்று கேட்டார். அதற்கு சிவாவின் தாத்தா, ஆமா சிவா!…என்றார் அதற்கு சிவா, அப்படியென்றால் அந்தக் கதையை எனக்குச் சொல்லுங்களேன் என்று கேட்டார். அவரது தாத்தா கதையைச் சொல்லச் சொல்ல சிவாவிற்குச் சிவபெருமான் மீது பக்தி அதிகரித்துக் கொண்டே வந்தது. தனது தாத்தா தனக்கு வாங்கித் தந்த சிவபெருமானின் பொம்மையை பக்தியுடன் வணங்கி வந்தார். உடல் முழுவதும் திருநீறு அணிந்து சிவப் பழமாகக் காட்சியளித்தார். இங்ஙனம் ஏழுவயது வரை சிவா சிவவழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தார்…
திண்ணைப் பள்ளிப் படிப்பும் தந்தையின் வரவும்
சிவாவின் தாத்தா தனது பேரன் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். தனது பேரனை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்றெண்ணிய அனந்தையர் சிவாவை ஒரு திண்ணைப் பள்ளியில் சேர்த்தார். அங்கு சிவா நன்கு படித்தார். அப்போது சிவாவிற்கு ஒன்பது வயது… சிவா நன்கு படித்துக் கொண்டிருந்த போது சிவாவின் தந்தையார் திடீரென்று தேடி வந்தார். அவர் தன் மகன் படிப்பதற்கு ஏற்ற பள்ளி அய்யம்பாளையத்தில் இல்லாததால் அவனது படிப்பிற்காக மதுரையில் குடியேறப் போவதாகக் கூறி அவர்களை அழைத்துச் சென்றார்.
பிரிய மனமில்லாது தனது பேரனை அனந்தய்யர் பிரிந்தார். மதுரை வந்த சிவாவின் தந்தை குடும்பத்துடன் கட்டுச் செட்டி மண்டபம் அருகில் குடியேறினார். அங்கிருந்த தொடக்கப்பள்ளியில் சிவா சிறிது காலம் கல்வி கற்ற பின்னர் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார்….இந்தப் பள்ளியிலதான் நம்ம பாரதி பணியாற்றினார்…என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு படித்தபோது சிவாவின் குடும்பத்தை வறுமை வாட்டியது…
குடும்ப வறுமை தாளாததால் சிவாவின் தந்தை தன்னிடம் இருந்த அனைத்தையும் விற்றார். வறுமையை அவரால் விரட்ட முடியவில்லை. மதுரையிலிருந்தால் பட்டினி கிடந்து இறக்க நேரிடும் என்று கவலை கொண்ட சிவாவின் தந்தை ராஜம் ஐயர் தமது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு திருவனந்தபுரம் சென்றார்.
படிப்பும் பசிபோக்க தர்மசத்திரத்தில் தங்கலும்
பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். சிவாவின் குடும்பத்தை வறுமையும் பசியும் விரட்டியது.. பசிக் கொடுமை தாளாத சிவாவின் தந்தை திருவனந்தபுரம் வந்து அங்கு மன்னர் நடத்தி வந்த ஊட்டுப்புறையில் குடும்பத்துடன் தங்கினார். அந்த ஊட்டுப்புறை ஒரு வேளைக்குச் சுமார் நாலாயிரம் பேர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வந்தது. பல ஏழை பிராமணக் குடும்பங்கள் அந்த ஊட்டுப்புறை வழங்கிய உணவை உண்டு பசிக் கொடுமையைப் போக்கி வந்தனர். ராஜம் ஐயரின் குடும்பத்தினரின் பசி ஊட்டுப்புறையால் நீங்கியது.
உண்ண உணவும் இருக்க இருப்பிடமும் கிடைக்கப்பெற்ற ராஜம் ஐயர் தன் மகன் சிவாவை திருவனந்தபுரம் நகர உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார். சிவா சில ஆண்டுகள் அங்கு படித்தபின்னர் நேவெ உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து கற்றார். படிப்பில் ஆவர்வத்துடன் திகழ்ந்த சிவா தமிழ், ஆங்கில இலக்கியங்களை விரும்பிக் கற்றார். பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை சிவா பெற்றார். சிறந்த நாவன்மை மிக்கவராக சிவா விளங்கினார்.
அவரது நாவன்மையை அறிந்த அவரது ஆசிரியர்கள் அவரை இலக்கிய மன்றத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். செயலாளர் பொறுப்பை சிவா திறம்படச் செய்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். பள்ளியில் இருந்து தாம் தங்கியிருந்த இருப்பிடம் வந்தவுடன் சிவா தனது தந்தை வழக்கமாகச் செல்லும் சமயச் சொற்பொழிவுகளுக்குக் கூடவே செல்வார். அங்கு பேரியோர்கள் கூறும் நீதிக் கதைகளையும் புராணக் கதைகளையும் மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்பார்.
இளமைத் திருமணம் தொடர்ந்த படிப்பும்
இந்நிலையில் சிவாவிற்கு பதினைந்து வயதானது. அவரது பெற்றோர் அவருக்கு மதுரை குட்டி ஐயரின் ஒரே மகளான ஆறுவயது மீனாட்சியைத் திருமணம் முடித்து வைத்தனர். மீனாட்சியின் தந்தை இறந்துவிட்டதால் அவர் தாயாரின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தார். திருவனந்தபுரத்தில் தனது படிப்பு முடிந்ததும் சிவா தனது நண்பர்களின் தூண்டுதலால் கோயம்புத்தூருக்குச் சென்று புதிய மைக்கேல் கல்லூரியில் சேர்ந்து படித்தார், அங்கு தன்னுடன் படித்த நண்பர்கள் மீசை வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து தானும் மீசையை வைத்துக் கொண்டார்.
அந்தக் காலத்தில் எந்தப் பிராமணரும் முகத்தில் மீசை வைத்துக் கொள்வதில்லை. ஆனால் சிவா மட்டும் மீசையை வைத்துக் கொண்டதைப் பார்த்து மற்ற மாணவர்கள் இவரைப் பாராட்டினர். கோவைக்கு வந்ததிலிருந்து சிவாவிடம் துடுக்குத் தனமும் சேட்டைகளும் அதிகரிக்கத் தொடங்கின. பிடிக்காத மாணவர்களிடம் வீண் வம்பு செய்தார். வம்பு பெரிதானால் கைகலப்பில் சிவா இறங்கிவிடுவார். ஆசிரியர்கள் இவரை அழைத்து விசாரித்தால் இவர் எவ்வித பயமுமின்றிப் பதில் கூறுவார்.
ஒருநாள் இவரது சேட்டைகளைப் பொறுக்க முடியாத ஆங்கில ஆசிரியர் கையை நீட்டச் சொல்லி சிவாவை அடித்தார். மூன்று அடிகளைப் பொறுத்துக் கொண்ட சிவா அதற்குமேல் அடியைப் பொறுக்க முடியாது அப்படியே பிரம்பைப் பிடித்துக் கொண்டார். பயந்து போன ஆசிரியர் தலைமையாசிரியரிடம் ஓடிப்போய்க் கூறிவிட்டார்.
தலைமை ஆசிரியர் சிவாவை அழைத்து, “நீ ஏன் ஆசிரியரை அடிக்க அவரிடமிருந்து பிரம்பைப் பிடிங்கினாய்?” என்று கேட்டார்.
அதற்கு சிவா, “நான் அடிக்க எண்ணி பிரம்பைப் பிடிக்கவில்லை ஐயா. அவர் அடித்ததால் எனக்கு வலித்தது. வலி பொறுக்க முடியாமல் தான் பிரம்பைப் பிடங்கினேன் அதற்கள் ஆசிரியர் உஙகளிடம் ஓடிவந்துவிட்டார்” என்று பதிலளித்தார். தலைமை ஆசிரியர் அவருக்க அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
முரட்டுத்தனமும் பணியாற்றலும்
இங்ஙனம் முரட்டுத் தனத்துடன் விளங்கிய சிவா ஓராண்டு காலப் படிப்பிற்குப் பின்னர் தனது தாய் நாகம்மாளுடன் திண்டுக்கல்லுக்குச் சென்றார், அங்கே தாய் மாமாவின் வீட்டில் தங்கினார். அங்க மாமா வகையில் உறவினரான துறவி ஒருவருடன் சிவாவுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர்தான் சிவாவிற்கு வாழ்க்கை நிலையில்லாதது என்று உணர்த்தினார். இதனால் சிவாவிற்குத் துறவறத்தில் பற்று ஏற்பட்டது. இருப்பினும் அவர் துறவியாகவில்லை.
திண்டுக்கல்லில் சில மாதங்கள் இருந்துவிட்டு மீண்டும் சிவா திருவனந்தபுரத்திற்குச் சென்றார். அங்கு தனது பள்ளித் தோழர்களுடன் சேர்ந்து பயில்வான் சட்டாம் பிள்ளை நவநீத கிருஷ்ணையரிடம் குஸ்தி, சிலம்பாட்டம் போன்றவற்றைக் கற்றுக் கொண்டார். இதைத் தவிர மாப்ளாஸ் என்ற வகுப்பினரிடம் இசைக் கூத்தாடும் முறைகளையும் தெரிந்து கொண்டார்.
அதன் பின்னர் எந்நேரமும் முரடர்களுடன் சேர்ந்து திரிந்த சிவா பல்வேறு அடிதடிகளில் இறங்கினார். ஊர் வம்புகளை விலைக்கு வாங்கினார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். அவரது தந்தையின் செல்வாக்கின் காரணமாக அவரை ஒன்றும் செய்யாது விடுதலை செய்தனர். பொறுப்பின்றி நடந்து வந்த சிவாவைப் பார்த்த அவரது தந்தை அவரை வேலைக்குச் செல்லுமாறு கூறினார். சிவாவின் மனைவியும் வற்புறுத்தவே சிவா சிவகாசி காவல்த்துறையில் குமாஸ்தா வேலைக்குச் சேர்ந்தார்.
வேலைக்குச் சென்ற சிவாவிடம் மேலதிகாரிகள் சிவா நீ அதைச் செய், இதைச் செய். உடனே இதை எழுதிக் கொண்டுவா என்றெல்லாம் கூறினர். சிவாவின் தன்மானத்திற்கு இது ஒத்துவராததால் மறுநாளிலிருந்து வேலைக்குச் செல்வதை விட்டுவிட்டார். இவ்வாறு சுற்றிக் கொண்டிருக்கும்போது ஒருநாள் சதானந்த சுவாமிகளின் சொற்பொழிவினைக் கேட்டார்.
அவரது சொற்பொழிவு சிவாவை மாற்றியது. அவரது முரட்டுக்குணமும் மாறியது. அவன்றிலிருந்து அவர் அந்தத் துறவியுடன் சேர்ந்து கொண்டு பல இடங்களுக்குச் சென்றார். சுவாமிகளின் அன்புக்கும்பாத்திரமானார் சிவா. சிவாவை சதானந்த சுவாமிகள் தம்முடைய சீடர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டார்.
வீட்டை விட்டு வெளியேறல்
அவரோடு இருந்தாலும் சிவா அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வார். அவரது குடும்பத்தினர் சிவா வீட்டை விட்டுச் செல்லமாலிருக்க பல்வேறு அறிவுரைகள் கூறினர். ஒருமுறை சரியாக காய்கறிகள் வாங்கி வராத சிவாவை அவரது தந்தையார், “சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை வாங்கத் தெரியாத நீயெல்லாம் எப்படித்தான் பிழைக்கப் போகிறாயோ? இந்த லட்சணத்தில் எதற்கெடுத்தாலும் கோப்படுகிறாய். இப்படி லெலா வடியிலும் நீ லாயக்கில்லாதவனாக இருக்கிறாய்” என்று வைதார்.
அதனைக் கேட்ட சிவாவிற்கு சுருக்கெனக் கோபம் வந்தது. அவ்வளவுதான்…எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை என்று கோபத்துடன் வீட்டைவிட்டு யாரிடமும் கூறாது வெளியேறிவிட்டார். மகனைக் காணாத ராஜம்ஐயர் கவலையுற்றார். அக்கவலை அவரை நோயில் ஆழ்த்தியது..புத்திர சோகம் யாரைவிட்டது…? நோய் முற்றவே படுத்த படுக்கையானார் ராஜம் ஐயர் அவரது குடும்பத்தார் சிவா எங்கிருந்தாலும் தந்தையைக் காணவருமாறு உற்றார் உறவினர்களிடம் தகவல் கொடுத்தனர்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வைக்கம் என்ற ஊரில் சிவா சிலம்பாட்டம் ஆடி வெற்றிவகை சூடிக் கொண்டிருக்கும்போது அதனைக் கண்ட சிவாவின் உறவினர் ஒருவர் அவரிடம் உண்மையைக் கூறி உடனே அவரது தந்தையைக் காண வருமாறு கூறினார். அதற்கு சிவா..”நான் தந்தையை எப்போது பார்க்க வேண்டும் என்று அந்த ஆதிபராசக்தி என்னிடம் கூறுவாள். அப்போது நான் வருகிறேன். இப்போது நீ போ” என்று கூறி அனுப்பிவிட்டார் சிவா.
தந்தையின் இறப்பும் வாட்டிய வறுமையும்
சிவாவின் தந்தைக்கு இறுதிக்கட்டம் நெருங்கியது. வைத்தியரை அழைத்துவர உறவினர் ஒருவர் சென்றிருந்தார். அப்போது தாடி, மீசையுடன் சிவா வீட்டிற்குள் நுழைந்தார். அவரை வைத்தியர் என்று கருதினர். ஆனால் வந்தவர் நான்தான் சிவா என்று கூறினார். அனைவரும் மகிழ்ந்தனர். சிவாவின் தந்தையார் மகிழ்ந்தார். மகனை ஆசைதீரப் பார்த்த ராஜம் ஐயர் அந்த மகிழ்ச்சியோடு இவ்வுலகைவிட்டுப் பறந்தார். ஆவிபிரிந்த சிவாவின் தந்தைக்கு உரிய ஈமக்கிரியைகளைச் செய்ய சிவாவிடம் பணம் இல்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. எல்லோரும் விரைவில் ஈமக்கிரியைகளைச் செய்யுங்கள் என்று விரைவுபடுத்தினர்.
தந்தைக்கு ஈமக்கிரியைகளைச் செய்யக்கூடப் பணமில்லையே என்று சிவாவும் அவரது குடும்பத்தினரும் வருந்தினர். சிவாவின் தாயார் சிவாவை பார்த்துக் கண்ணீர் விட்டார். அதற்கு சிவா, “அம்மா நிச்சயம் அன்னை பராசக்தி கைவிடமாட்டாள். எப்படியும் வழிபிறக்கும்” என்று கூறினார். ஊரார் அனைவரும் அவரிடம் ஈமக்கிரியைகளை உடனே செய்யுமாறு விரைவுபடுத்தினர். மாலை நேரம் வந்தது. அப்போது சிவா,
“உன்னையே நம்பினேன் உலகில் துணையென
நீயே யன்றி நிலையென நம்பினேன்
தாயே போல் வருவாய் தன்னருள் புரிவாய்”
என்று ஆதி பராசக்தியை நினைத்துக் கண்ணீர் மல்கப் பாடினார்.
அவர் பாடி முடித்ததும் அவர் வீட்டின் முன்பு வில்வண்டி ஒன்று வந்து நின்றது.அதிலிருந்து அவரது மாமாவும் மாமியும் இறங்கி வந்தனர். அவர்கள் சிவாவைப் பார்த்து,
“கவலைப் படாதே சிவா எல்லாம் அன்னையின் செயல் நேற்றிரவு ஒரு அம்மாள் வந்து உமது தந்தையார் காலமான விஷயத்தைச் சொன்னாள். அதனால்தான் நாங்கள் இருவரும் புறப்பட்டு வந்தோம்” என்றார் சிவாவின் மாமா. அதற்கு சிவா, “எல்லாம் நான் வணங்கும் அன்னை பராசக்தியின் செயல். அவள் தான் கிழவியாகப் போய் விஷயததைச் சொல்லியிருக்கிறார். என் அன்னை என்னைக் கைவிடவில்லை” என்று கூறிக் கொண்டு தனது தந்தைக்கு உரிய அனைத்து ஈமக்கிரியைகளையும் செய்து முடித்தார். அதன்பிறகு அவர் ஓராண்டு வரை வீட்டை விட்டு எங்கும் செல்லவில்லை.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடல்
தந்தையின் மறைவிற்குப் பின்னர் சிவாவிற்கு விடுதலைப் போராட்டத்தில் நாட்டம் ஏற்பட்டது, பல்வேறு தலைவர்களின் பேச்சுக்களைக் கேட்டும் வந்தேமாதம் போன்ற பத்திரிக்கைகளைப் படித்தும் நாட்டின் நிலையைப் பற்றித் தெரிந்து கொண்ட சிவா நாட்டின் நிலையை அறிந்து மனங்குமுறினார்.
அரசியல் நிலைமைகளைப் பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ளத் தர்மபரிபாலன சமாஜம் என்னும் ஓர் அமைப்பைத் தோற்றுவித்தார். இச்சபையின் மூலம் பல்வேறு அரசியல் தலைவர்களைப் பேசச் செய்ததோடு தானும் பல கூட்டங்களில் பேசி வந்தார். அவரது பேச்சைக் கேட்க மக்கள் திரண்டனர். மக்களிடம் தனது பேச்சால் சிவா நாட்டுப்பற்றைத் துளிர்விடச் செய்தார்.
இவரது செயல்கள் ஆங்கில ஆட்சியாளருக்கு வெறுப்பினை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் சமஸ்தானம் ஆங்கிலேயருக்கு உதவிவந்ததால் அச்சமஸ்தானம் சிவாவை திருவனந்தபுரம் பகுதியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டது.
அதனால் சிவா கால்நடையாகவே நடந்து திருநெல்வேலியை நோக்கிப் புறப்பட்டார். போகும் இடங்களில் எல்லாம் நாட்டுப்பற்றை விதைத்துக் கொண்டே சென்றார்.
வ.உ.சியின் சந்திப்பு
உணர்ச்சியற்றிருந்த மக்கள் சிவாவின் பேச்சைக் கேட்டு கிளர்ந்தெழுந்தனர். ஆங்கிலேயரின் கபட நாடகங்களை அறிந்து கொண்ட மக்கள் அங்கிலேயருக்கு எதிராகப் போராடத் துணிந்தனர். சிவாவின் பேச்சைக் கேட்க மக்கள் ஊரெங்கும் திரண்டனர். அந்நிலையில் சிவா தூத்துக்குடியில் தென்னாட்டுத் திலகராய் திகழ்ந்த வ.உ.சியைச் சந்தித்தார். இச்சந்திப்பு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இருவரும் இணைந்து பல போராட்டங்களை நடத்தினர். தூத்துக்குடியில் நடக்கவிருந்த கூட்டங்களில் எல்லாம் வ.உ.சி. சிவாவைத் தலைமைதாங்கச் செய்து பேசுமாறு கூறினார். சிவாவும் ஆங்கிலேயரின் அட்டூழியங்களை மக்களிடம் எடுத்துரைத்தார்.
பாரதியின் பாராட்டு
சிவாவைப் பற்றியும் அவரது பேச்சாலைப் பற்றியும் கேள்வியுற்ற பாரதி சிவாவைப் பார்க்க வேண்டும் என்று வ.உ.சியுடன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்திருந்தார். தூத்துக்குடியில் சிவா பேசிக் கொண்டிருந்த கூட்டத்திற்குச் சென்ற பாரதி வீராவேசமாகப் பேசிக் கொண்டிருந்த சிவாவின் பேச்சைக் கேட்டதும் மேடையை நோக்கி ஓடிச் சென்று சிவாவைக் கட்டிப் பிடித்துத் தழுவி இளைஞனே வீர சிவாஜியை உன் உருவில் நான் காண்கிறேன் என்று புகழ்ந்து பாராட்டினார்.
தமிழகத்தில் சிவா, பாரதி, வ.உ.சி, வா.வே.சு ஐயர். வாஞ்சி ஆகியோர் தீவிரவாதிகளாகத் திகழ்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலியில் சிவாவும் வ.உ.சியும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்று இணைந்து செயல்பட்டனர். இதனைக் கண்ட ஆங்கிலேய அரசு அஞ்சியது.
விடுதலைப் போராட்ட வீரர் அரவிந்த கோஷிற்கு எதிராக விபின் சந்திர பாலரை ஆங்கிலேய அரசு சாட்சி கூறுமாறு கட்டளையிட்டபோது அதனை விபின் சந்திரபாலர் மறுத்தார். அதனால் அவரை ஆறுமாதம் ஆங்கில அரசு சிறையில் தள்ளியது. அதனைக் கண்டு கலங்காது விபின் சந்திரபாலர் மகிழ்ச்சியுடன் சிறை சென்றார்.
சிறைசென்று மீண்ட விபின் சந்திரபாலருக்கு சிவாவும் வ.உ.சியும் விழா எடுத்தனர். ஆங்கிலேய அரசு அவர்களை மிரட்டியது. ஆனால் அவர்கள் அந்த மிரட்டலுக்கு அஞ்சாது சிறப்பாக விழாவை நடத்தி முடித்தனர்.
விஞ்ச் துரையின் மிரட்டலும் சிறைப்படலும்
ஆங்கிலேய அரசின் ஆணைக்கு அடிபணிய மறுத்த சிவாவையும் வ.உ.சியையும் திருநெல்வேலிக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு கலெக்டர் விஞ்ச்துரை கட்டளையிட்டார். சிவாவும் வ.உ.சியும் விஞ்ச் துரையைச் சென்று சந்தித்தனர். விஞ்ச்துரை அவர்களிருவரையும் இழிவாக நடத்தினார். நாங்கள் ஆளுவோர் நீங்கள் அடிமைகள். அடிமைகள் பேசுவதற்கு உரிமையில்லை. உங்களை நாய்களைப்போன்று சுட்டுத் தள்ளுவோம் என்றெல்லாம் பலவாறாகக் கூறி அவர்களை மிரட்டினார். இதற்கெல்லாம் சிவாவும் வ.உ.சி.யும் பணியமறுத்தனர். தங்களைத் தூக்கில் போட்டாலும் சிறையிலே தள்ளினாலும் போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என்று இருவரும் ஆவேசமாக முழங்கினர்.
இதனால் ஆத்திரமடைந்த விஞ்ச் துரை இருவரையும் கைது செய்து சிறையிலடைத்து கடுமையான தண்டனை வழங்குமாறு ஆணையிட்டார். இதனை அறிந்த மக்கள் கலவரம் செய்தனர். துப்பாக்கி சூடு நடந்தது. அதில் நான்குபேர் பலியாயினர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இறந்தோரின் பிணங்கள் நடுத்தெருவில் கிடந்தன. இப்போராட்டங்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்தன.
ஆங்கிலேய அரசு சிவாவையும் வ.உ.சியையும் விசாரித்து, வ.உ.சி ஆங்கில அரசுக்கு எதிராகப் பிரச்சாரங்கள் செய்து அரசை அவமதித்த குற்றத்திற்காகவும் சுப்பிரமணிய சிவாவிற்கு ஆதரவளித்த குற்றத்திற்காகவும் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆங்கில அரசினை கவிழ்க்கும் வகையில் பேசிய சிவாவிற்குப் பத்தாண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.
சிவாவை திருச்சி சிறையிலும் வ.உ.சியை கோவைச் சிறையிலும் ஆங்கில அரசு அடைத்து சித்திரவதை செய்தது. திருச்சி சிறையில் சிவா கடுமையான தண்டனைகளுக்கு ஆளானார். கடுமையாக வேலைவாங்கப்பட்டார்.
சிறையில் பட்ட கொடுமைகள்
சிறையில் சிவாவிற்கு ஆட்டு ரோமம் அடிக்கும் வேலை தரப்பட்டது. வில்லால் பஞ்சு அடிப்பதைப் போன்று உரோமத்தையும் அடிக்க வேண்டும். முதலில் உரோமத்தை சுண்ணாம்பில் ஊறப்போட்டுக் காயவைத் அதன்பின்னர் அதனை எடுத்து வில்லால் அடித்து ஒழுங்குபடுத்த வேண்டும். அதன் பின்னரே அந்த உரோமம் நெசவுக்கு ஏற்றதாகும்.
சிவா உரோமம் அடிக்கும் வேலை செய்து வந்ததால் அவருக்கு இருமல் உண்டானது, முதலில் இருமல் சாதாரணமாகத் தான்இருந்தது.ஆனால் தொடர்ந்து அதே வேலையைச் செய்து வந்ததால் இருமல் தொல்லை அதிகரித்தது. சிவா அந்த வேலையிலிருந்து விடுதலை பெற்றுவிடவேண்டும் என்று கருதினார். சிவாவின் நிலையைக் கவனித்த மருத்துவர் அவர் செய்யும் வேலையைப் பற்றிக் கேட்டார். அதனைக் கேட்ட மருத்துவர், “சிவாவிற்கு வேறு வேலையைக் கொடுங்கள். அத்தோடு சத்துள்ள உணவையும் கொடுங்கள். அப்போதுதான் இவரது இருமல் குணமாகும்” என்று சிபாரிசு செய்தார்.
அதன் பின்னர் ஆங்கில அரசு மருத்துவர் கூறியபடி சிவாவிற்கு அனைத்தையும் கொடுத்து எளிதான வேலையையும் கொடுத்தனர். சிவாவை திருச்சி சிறையிலிருந்து சேலம் சிறைக்கு மாற்றினர். தண்டனைக் காலம் நிறைவுற்றதும் சிவா விடுதலையானார். நோயற்ற உடலோடு சிறைசென்ற சிவா பெருநோயோடு சிறையிலிருந்து வந்தார்.
பத்திரிக்கை தொடங்குதல்
1912-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையான சிவா தன்னுடைய மனைவியுடன் சென்னையில் உள்ள மைலாபபூரில் குடியேறினார். பொருளீட்ட என்ன வழி என்று யோசித்த சிவா பத்திரிக்கை நடத்துவதென்று முடிவு செய்தார். பத்திரிக்கையின் வாயிலாக மக்களிடம் விடுதலை உணர்வை ஊட்டலாம் என்றும் நினைத்தார். தாம் தொடங்கிய பத்திரிக்கைக்கு ஞானபானு என்று பெயரிட்டார். நண்பர்களின் உதவியினால் அப்பத்திரிக்கை மாத இதழாக வெளிவந்தது.
அப்பத்திரிக்கையில் பாரதியாரும் எழுதினார். அப்பத்திரிக்கையில் சிவாவின் எழுத்தோவியங்கள் காவியங்களாக மிளிர்ந்தன. சிவாவின் கட்டுரைகளைப் படித்த இளைஞர்கள் நாட்டுப்பற்று மிக்கவர்களாக விளங்கினர். 1913-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இப்பத்திரிக்கைக்கு உள்நாட்டில் மட்டுமல்லாது பினாங்கு, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் சந்தாதார்கள் இருந்தனர்.
பத்திரிக்கையின் அனைத்து வேலைகளையும் சிவாவே செய்தார். அவரது மனைவியும் அவருக்குத் துணையாக பத்திரிக்கை அலுவலக வேலைகளைச் செய்தார். சிவாவிற்கு வீடும் அலுவலகமும் ஒன்றாகவே இருந்துவந்தது. தனது பத்திரிக்கைகளின் வாயிலாக சிறுசிறு குடிசைத் தொழில்களைச் செய்வது பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சிவா சூடத்துடன் வாசனைத் திரவியங்களைச் சேர்த்துப் பல்பொடியைத் தயாரித்து விற்பனை செய்தார். இவ்வாறு தனக்குக் கிடைத்த அனைத்து வருமானத்தையும் பத்திரிக்கை நடத்துவதற்கே சிவா பயன்படுத்தினார் என்பது நோக்கத்தக்கது.
மனமொடித்த மனைவியின் மறைவு
சிவாவின் மனைவி தனது இளம் வயது முதலே வறுமையில் வாடியதோடு பல ஆண்டுகள் நோயிலும் வாடிக் கொண்டிருந்தார். மருந்துகளின் மூலம் வாழ்ந்து கொண்ருந்த அவரால் நோயினை வெல்ல முடியவில்லை. நோய் மீனாட்சியை வெற்றி கொண்டது. சிவாவின் வலக்கரமாகத் திகழ்ந்த மீனாட்சியின் மறைவினை சிவாவால் தங்கிக் கொள்ளமுடியவில்லை. இதனால் சிவா நிலையில்லாத இந்த வாழ்க்கையை எண்ணி வருந்தித் தன்னைத்தானே தேற்றிக் கொண்டார்.
ஞானபானு பத்திரிக்கையுடன் பிரபஞ்ச மித்திரன் என்ற வாரப் பத்திரிக்கையையும் சிவா நடத்தினார். அப்பத்திரிக்கையினை நன்கு நடத்தவேண்டும் என்பதற்காக அதனை வரதாஜூலு நாயுடுவிடம் ஒப்படைத்தார். அதோடு மட்டுமல்லாது இந்திய தேசாந்திரி எனும் வாரப் பத்திரிக்கையினையும் தொடங்கி நடத்தினார். பணவசதியில்லாததால் இந்தப் பத்திரிக்கையை சிவா நிறுத்திவிட்டார்.
சென்னையிலிருந்து சிவா திருவல்லிக் கேணிக்கடற்கரைக்குத் திலகர் கட்டம் என்ற பெயருடன் திலகரின் பிறந்த நாள் விழவை மிகச் சிறப்பாக நடத்திவந்தார். அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களுக்கு நாட்டுப்பற்றை ஊட்டினார். சிவா கல்க்கத்தாவில் நடந்த ஒத்துழையாமை இயக்க மாநாட்டுக்கும் சாத்தூரில் நடந்த அரசியல் மாநாட்டுக்கும் சென்று கலந்து கொண்டார். ஆங்கில அரசின் அடக்குமுறையைத் துச்சமென மதித்தார்.
பாரத ஆசிரமத்திற்கு அடிக்கல் நாட்டல்
பாரத மக்கள் தத்தம் விருப்பப்படி பாரத மாதாவை வணங்குவதற்குப் பாரதமாதா ஆசிரமம் ஒன்றை நிறுவத் திட்டமிட்டார். அதற்காக செட்டிநாட்டில் ஊர்ஊராகச் சென்று பிரச்சாரம் செய்தார். காரைக்குடியில் சிவா தங்கியிருந்தபோது அங்கு வருகைபுரிந்த காந்தியடிகளைச் சிவா வரவேற்றார். அதைக் கண்டு காந்தியடிகள் வியந்து சிவாவைப் பாராட்டினார்.
சிவா காந்தியிடம் தம்முடைய பாரதீய மதக் கொள்கைகளைப் பற்றி விவரித்தார். அதனை அறிந்த காந்தியடிகள் அவரைப் பாராட்டினார். அமராவதி நகரில் பாரதமாத கோவில் கட்டுவதற்குத் திட்டமிட்ட சிவா அக்கோவிலைக் கட்டுவதற்குக் காந்தியடிகளைக் கொண்டே அடிக்கல் நாட்டினார். இதனால் வெகுண்ட ஆங்கில அரசு அவரைக் கைது செய்யத் திட்டமிட்டது. காரைக்குடியில் சிவா பேசும்போது ஆங்கில அரசு அவரைக் கைது செய்து இரண்டரை ஆண்டுகள் தண்டனை வழங்கி சிறையிலடைத்தது.
சிவாவின் உடல் பாதித்தது. உடல் பலம் குன்றியதால் சிறையில் இனி தண்டனையை அனுபவிக்க முடியாது என்ற நிலையில் இனிமேல் தாம் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று எழுதிக் கொடுத்தார். அந்த நிபந்தனையின் பேரில் அவரை ஆங்கிலேயர் விடுதலை செய்தனர்.
தியாகச் சுடரின் மறைவு
சிறையிலிருந்து வெளியில் வந்த சிவா ஊர்ஊராகச் சென்று பாரதமாதா கோயில் கட்ட நிதி திரட்டச் சென்றார். இதனைக் கேள்விப்பட்ட பாப்பாரப்பட்டிலிருந்த சிவாவின் நண்பர் தாங்கள் இங்கு வந்தால் நானே அந்தக் கோயிலைக் கட்ட உதவுகிறேன் என்று கூறி அதன்படி கோவில் பணிகளைத் தொடங்கினார். பாப்பாரப்பட்டி மக்களின் உதவியுடன் அவ்விடத்திற்கு பாதபுரம் என்று சிவா பெயரிட்டார்.
கோயில் பணிக்காகத் தொண்டர்களை அழைத்துக் கொண்டு நிதிதிரட்ட ஊர்ஊராக மீண்டும் சிவா சென்றார். திருவண்ணாமலை சென்று ரமணமகரிஷியைக் கண்டு வழிபட்டார். மதுரை வந்த சிவா அந்நகர மக்களின் சுதேசி ஆரவாரத்தையும் வீரத்தையும் கண்டு ஸ்ரீபாரத விலாஸ் சபையின் ஆதரவுடன் சிவாஜி, லபஜாதேசிங்கு முதலிய நாடகங்களை நடத்தினார். தொடர்ந்து நாடகங்களை நடத்திய சிவாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதோடு தொழுநோயும் ஏற்பட்டு அவரை நலிவடையச் செய்தது.
மதுரையிலிருந்து பாப்பராப்பட்டிக்குப் பயணத்தைத் தொடங்க எண்ணினார் சிவா. அவரது செயலர் சுந்தரபாரதி பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார். மதுரை பாலம் ஸ்டேசனில் ரயில் நின்றிருந்தது. சிவாவிற்கு ஜாமின் கெடு முடிந்ததால் அவரை ஆங்கில அரசு கைது செய்யக் காத்திருந்தது. இதனை அறிந்த சிவாவின் நண்பர்கள் அவரைக் கம்பளியால் சுற்றி ரயிலில் ஏற்றிவிடத் திட்டமிட்டனர்.
பிளாட்பாரத்தில் இருந்த பீட் கான்ஸ்டபிள் யார் இது என்று கேட்டார். அதற்கு சிவாவின் நண்பர்கள் இது நடக்க முடியாத ஆசாமி என்று கூறிச் சமாளித்தனர். டிராலி வண்டியிலிருந்து சிவா மெதுவாக எழுந்து நின்றார். அவரது கால்கள் தள்ளாடின. ரயில் புறப்படும் நிலை வந்தவுடன் சிவாவைக் குண்டுக்கட்டாகத் தூக்கி ரயில் பெட்டியின் கதவருகே தொப்பென்று போட்டுவிட்டு சுந்தரபாரதியும் அவருடன் கூட வந்தவர்களும் வண்டியில் ஏறினர். வண்டி புறப்பட்டது.
வண்டிக்குள் சிவாவிடம் சுந்தர பாரதி மன்னிப்புக் கேட்டார். அதற்கு சிவா, “சுந்தரா இதுவும் அன்னையின் செயல்தான் நம்மால் ஒன்றுமில்லை” என்று கூறினார். மிகுந்த துன்பத்திற்கிடையில் 1925-ஆம ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் நாள் சிவாவை அழைத்துக் கொண்டு பாப்பாராப்பட்டிக்கு அடுத்த பாரத புரத்திற்கு அவரது நண்பர்கள் சென்றனர். ஜுலை 23-ஆம் நாள் விடியற்காலையில சுமார் 6 மணிக்கு தியாகச் சுடராகத் திகழ்ந்த சிவா இறைவனோடு இரண்டறக் கலந்தார். பாரதமாதா பல்லாண்டுகள் கழித்து விடுதலை பெற்றாள். இவ்விடுதலை எல்லாம் இத்தியாகசீலர்களின தியாகத்தால் ஏற்பட்டது. அதனால்தான் பாரதி,
“தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?”
என்று பாடினார்.
வறுமையில வாடினாலும் தன்னோட இலட்சியம் நிறைவேறுவதற்காக துன்பத்தையெல்லாம் பொறுத்துக் கொண்டு நமமுடைய முன்னோர்கள் சுதந்திரத்திற்காகப் போராடினாங்க….இப்படியெல்லாம் அவங்க போராடினதாலதான் இப்ப நாம சுதந்திரமா இருக்கோம்…இந்தச் சுதந்திரத்தை நாம போற்றிப் பாதுகாக்கணும்…. நாட்ட நேசிச்சு நாடு முன்னேறுவதற்கு உதவியா இருக்கணும்…இதுதான் தியாகிகளுக்கு நாம செய்யக் கூடிய கைமாறு… என்ன புரிஞ்சுக்கிட்டிங்களா…?
சிவா மறைந்தாலும் அவரது எண்ணங்களும் அவரது தியாகமும் எந்தநாளும் நம்ம நாட்டைவிட்டும் நம்மளோட இதயத்தைவிட்டும் மறையாது என்றும் அது நமது இதயத்தில் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்… சிவாவின் வாழ்க்கையப் பத்தி தெரிஞ்சுகிட்டீங்கள்ள…அப்பறம் என்ன ஒங்களோட இலக்க நோக்கிப் பயணமாகுங்க.. எண்ணம் உறுதிய இருந்தா வெற்றி உங்களுக்குத்தான்…
படிக்காம மேதையா ஆகலாமா…? முடியாதா…இல்லையே ஆகியிருக்காரே ஒருத்தரு….பல தலைவர்களை உருவாக்கினாரு… கடமையில கண்ணா இருந்தாரு….இந்தியாவிற்கே வழிகாட்டிய இருந்தாரு…கருப்புக் காந்தின்னு அவரை மக்கள் புகழ்ந்தார்கள்…எந்த நிலையிலும் அவர் நேர்மை தவறியதே இல்லை…. தாய்நாட்டை ரெம்ப நேசிச்சாரு…கல்விக்காக பல பணிகளைச் செய்தாரு…அவரு ஒரு ஏழைங்க…அவரோட நேர்மைக்கும் எளிமைக்கும் ஈடுஇணையில்லை…அவரு யாரு தெரியுமா…? அவர் நம்ம தமிழகத்தைச் சேர்ந்தவரு…இறுதிவரை திருமணமே செஞ்சுக்கல…நாட்டையே தன்னோட வீடா நெனச்சு வாழ்ந்தாரு…தானாகவே வந்து பதவி விலகி மற்றவங்களுக்கு வழிகாட்டியா இருந்தாரு…என்ன கண்டுபிடிச்சுட்டீங்களா….யோசிக்கிறீங்களா….யோசிங்க யோசிங்க…அடுத்தவாரம் பார்ப்போம்….(தொடரும்…… 38)
- சீதாயணம் நாடகம் -11 படக்கதை -11 சி. ஜெயபாரதன், கனடா
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 29
- பெண்ணுக்குள் நூறு நினைவா ?
- (அ)சிங்கப்பூர் அல்லது சிருங்காரப்பூர்
- வாக்காளரும் சாம்பாரும்
- முரண்பாடுகளே அழகு
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே [மீள் பதிப்பு] [பாரதி பிறந்த தினம் : டிசம்பர் 11]
- கர்ம வீரர் காமராசர்!
- ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்
- நீங்காத நினைவுகள் – 25
- அத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1
- தாயகம் கடந்த தமிழ் 2014 கோயம்புத்தூர், இந்தியா ஜனவரி 20, 21,22
- மழையெச்ச நாளொன்றில்…
- முதுவேனில் பதிகம்: திருமாவளவனின் கவிதைகள்
- அன்பின் வழியது
- எஸ்ஸார்சி கனவுமெய்ப்படும் – சாதிய கட்டமைப்பும் கட்டுடைப்பும்.
- அண்ணாத்தே ஹாசாரேயும், கேசரி வாலும்
- இலக்கியச்சோலை- வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி
- நிராகரிப்பு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -53 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் வடிப்பு ..!
- பாதை
- புகழ் பெற்ற ஏழைகள் – 37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத் திகழ்ந்த ஏழை
- பணம் காட்டும் நிறம்
- சில்லி விண்ணோக்கி முதன்முறையாக இரட்டை ஏற்பாட்டு விண்மீனைச் சுற்றும் விந்தைக் கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.
- நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர்
- கடத்தலின் விருப்பம்
- திண்ணையின் இலக்கியத் தடம்-13
- மருமகளின் மர்மம் – 7
- ஜாக்கி சான் – 20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு
- பாம்பா? பழுதா?
- ‘விஷ்ணுபுரம் விருது’