முதுவேனில் பதிகம்: திருமாவளவனின் கவிதைகள்

This entry is part 13 of 32 in the series 15 டிசம்பர் 2013

ஈழத் தமிழ் கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும் அந்த சமூகம் தான் வதைபடவே சபிக்கப் பட்டது போன்று தொடரும் வாழ்வை, அன்றாடம் அனுபவிக்கும் அவல வாழ்வைப் பற்றியே பேசுகின்றன. நான் முதலில் பார்த்த சிவரமணியின் கவிதையிலிருந்து தொடங்கி. அந்த வாழ்வின் வதையை எல்லோருமே பகிர்ந்து கொண்டாலும், அந்தத் தொடக்கம் சிவரமணியின்

அழகு கண்டு
அதிலே மொய்க்கும் வண்டின்,
மோக ஆதவனின் ஒளி கண்டு மலரும்
ஆம்பலின் நிலை கண்டு
கவிதை வரைவதற்கு
நான்
நீ நினைக்கும்
கவிஞன் அல்ல.

வரிகள் போல, மற்ற பலரின் கவிதைகள் அனுபவ சத்தியமும் கொண்டதல்ல. கவிதையாவதும் இல்லை. மாதிரிக்கு இதோ ஒன்று.

தென்கடல் ஓரம்,
திகழும் நிலாக்கொழுந்தே
துரத்தே எம் தீவு இன்று
துயராடும் தனித் திடல்.

இரண்டும் கவிதைத் தோற்றம் தருபவை தான் இன்னும் பலரது தம் துயரத்தின் தகவல்களைத் தருவனவாக, ஒரு அறிக்கை போல சொல்லிச் சென்றன.

துயரம் நிறைந்த வாழ்வு தான். எழுதிப் பதிய வைக்கும் விருப்பத்திற்கும் குறைவில்லை. பார்க்கப் போனால் ஈழம் போன்று எனக்குத் தெரிந்து அது ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதன் தொடக்கம் படிப்படியாக அதிகரிக்கும் அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் இன அடையாளங்களின் ஒழிப்புக்கும் இரையாகிக்கொண்டிருப்பது போல இன்னொரு சமூகம், இஸ்ரேய்ல் பாலஸ்தீனத்தைத் தவிர வேறு சமூகம் இப்போது இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.கிட்டத் தட்ட இரண்டு தலைமுறைகளுக்கு மேலாயிற்று விடாப்பிடியாக வேறு வழியின்றி ஈழத்தில் வாழ்வோர் எப்படியோ வாழும் சூழலோடு சமாதானம் கொண்டு வாழ கற்று வருகின்றனர். புலம் பெயர்ந்தோரில் முந்திய தலைமுறையினரின் சோகமும் இழப்பும் இன்றைய தலைமுறைக்கும் தொடரும் என்று நினைப்பதில் நியாயமில்லை. புலம் பெயர்ந்த இடம் தான் அவர்கள் அறிந்த உலகம்.

புலம் பெயர்வின் தொடக்கம் கடுமையானதும் பெரும் அளவில் தெரியத் தொடங்கியதும் 1983 லிருந்து. திருமாவளவன் தன் வாழ்விடத்தை விட்டு நீங்கியது 1990 களில். புலம் பெயர்வின் இழப்பும் எதிர்கொண்ட வாழ்வின் கஷ்டங்களும் அவரது முதல் இரண்டு கவிதைத் தொகுப்புகளில் வெளிப்பட்டுள்ளன. எதிர்கொண்ட வாழ்வின் அவலங்கள் பலரின் எழுத்துக்களில், பெரும்பாலும் கவிதைகளில் பதிவாகின தான். அது இயல்பானது தான். அதுதான் அவர்களது வாழ்வும் அனுபவமுமாக இருந்தது. தமிழ் நாட்டு முற்போக்குக் கவிஞரின் பாட்டாளி மக்கள் துயரம் போன்று அதில் பொய்மை இல்லை. ஆனாலும் கவிதை வெளிப்பாட்டில் பல தரங்களும் இருக்கக் கூடும் தானே. வெற்று வசனங்களானதும், அலங்கார சொற்குவியலானவையும் எங்கும் கிடைக்கக் காண்பது தான்.

1955-ல் பிறந்த திருமாவளவனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது 2000-ல். பின்னர் மூன்று வருடங்கள் கழித்து இரண்டாவது தொகுப்பு. பனிவயல் உழவு, அஃதே இரவு, அஃதே பகல். அந்த ஆரம்ப காலக் கவிதைகளிலிருந்து ஒன்று. வசனமே போன்று தோன்றும் வரிகள்:

எழுப்பாதீர்கள்
இவன் சற்று நேரம் உறங்கட்டும்.

தினமும் மூன்றிடத்தில் வேலை
உலகே போர்வைக்குள் முடங்குகிற
பின்னிரவில் தெருவெல்லாம் அலைந்து செய்தித்தாள்களை
வினியோகித்தல்

கிடைத்ததை வயிற்றுக்குள் வீசிவிட்டு
இரவு இயந்திரங்களோடு
முழுநேர மாய்ச்சல்

ஓய்வுக்கு மணி அடித்த சிறு துளிப்பொழுதுள்
வீழ்ந்த இடத்தில் உறங்கிவிட்டான்

வீட்டில் உறங்க நேரம் இல்லை
இருந்தென்ன

எழுப்பாதீர்கள்
இவன் சற்று நேரம் உறங்கட்டும்.
போர் துடைத்தெறிந்த
எங்களில் பலருக்கு
இது தானே வாழ்வும் இருப்பும்

இது புலம் பெயர்ந்த நாட்டில் தொடங்கிய வாழ்வு இது முழுக் கவிதையும் அல்ல. சில பத்திகளே மாதிரிக்கு. இது வசனமல்ல, இவ்வரிகள் கொள்ளும் வேகமும் வெற்று வசனத்துக்கில்லாத வேகம். அதை படிக்கும் போதே நாம் உணர்வோம். அதை உணராதவர்களிடம் வாதிட்டு நிறுவவோ, மறுக்கவோ முடியாது.

கோழிகளின் கூவல்
கோவில் மணிகளின்
தொழுகை அழைப்பு
இரண்டுமற்ற அம்மணக்காற்றில்
நுழைந்தது காலை.

இரண்டுமற்ற அம்மணக் காற்று என்னும் போதே பிறந்த நாட்டின் இழப்பும் புகுந்த நாட்டின் வெறுமையும் குறிப்புணர்த்தப் பட்டுவிட்டது. அதென்ன அம்மணக் காற்று என்று புதிய சொல்லாக்கத்தைக் கண்டு கொஞ்சம் நெருடலாகத் தோன்றினாலும் அது தாங்கி வரும் பொருள் கண்டு நாம் திகைப்பதில்லை. ஏற்றுக்கொள்கிறோம்

பிறந்த ஊரின் நினைப்புகள் மாய்வதில்லை.

கொத்தியாலடி சுடலை மாடச் சுவரில்
கிள்ளிப் பிடிக்க இடமில்லாதளவுக்கு
கரித்துண்டால் குறித்து வைத்த
தோற்ற – மறைவுக்குறிப்புகள்
ஆனாலும்
ஆனி பன்னிரண்டு 1990-க்குப் பின்
எவர் குறிப்பும் இல்லை.

வாழ்ந்த இடமும் ஊரும் மனிதரற்றுப் போயிற்று.

வாழ்வின் அழிவும் புலம் பெயர்ந்த வாழ்வின் அவலங்களும் சக்தி வாய்ந்த ஆவணப் பதிவாக மட்டுமல்ல, கவிதையாகவும் வெளிப்பாடு பெற்றுள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது சுவற்றில் கரிக்கோடு கிழிக்கக் கூட மனிதச் சுவடற்றுப் ஊரே அழிந்து போயிற்று. ஓர் இடத்தின் வாழும் சூழலைப் பொறுத்து சுவற்றின் கரிக்கோடு கூட வாழ்வின் அடையாளமாக, உருவகமாக ஆகிவிடுகிறது.

புகலிட வாழ்வு தொடங்கியாயிற்று. முரண் என்னும் கவிதை சொல்கிறது அவ்வாழ்வை

தாமரை இலை மேல் அலையும்
துளி நீர்

வேலியின் முள்ளில் சிரிக்கும்
காகிதப் பூ

தினம் தினம் அழுதபடி
தூங்கு மூஞ்சி மரம்

கைவிளக்குத் திரியில் அந்தரிக்கும்
சுடர்

பகலில் ஒளி செத்த
நிலவு

இப்படித்தான் கழிகிறது
என் புகலிட வாழ்வு

நிற்க
ஷெல் அடியில் தலை இழந்த
மொட்டைப் பனையின் வட்டுப் பொந்தில்
சோடிக்கிளிகள்
காமமும் களியுமாய்

மொட்டைப் பனை அழிவின் அடையாளமானாலும் அதன் பொந்தில் குடிபுகுந்த கிளிகள் வாழ்வின் மறுமலர்ச்சியைச் சொல்லி விடுகிறது.

வானம் பார்த்த பூமி என்ற இன்னொரு கவிதை,

மழை வருமென்பதில்
யாருக்கும் நம்பிக்கையில்லை

என்று தொடங்கும் கவிதையின் கடைசி வரிகள் இதோ:

வானம்
தினமும் தீக்கங்குகளைக் கொட்டுகிறது
விழி கொள்ளாத் துயரம்
தும்பிகள் போலத்
தாறுமாறாய்த் தறிகெட்டலைகிறோம்

இது புகலிடத்தில் இருந்த போதும் பிறந்த மண்ணில் செய்தி செவிக்கு எட்ட

துர்மரணச் செய்தி இல்லாத காலையொன்றில்
விழித்தெழுந்து நெடுநாளாயிற்று

சமாதானத்துக்கானதே
யுத்தங்கள்
வாழ்தலின் நிகழ் தகவுகளே சாவுகள்
சொல்லிக்கொள்கிறார்கள்
வலியோர்………….

என்று தொடங்கும் உயிர்த்தீ என்னும் ஒரு நீண்ட கவிதையின் முடிவு என்னவோ

ஓடிக் கழிகிறது காலம் …….. என்று தான்.

இது இருள்- யாழி என்னும் 2008- வருடம் வெளிவந்த தொகுப்பில் உள்ளது. அது ஒரு காலகட்டத்தின், ஈழப் போர் ஒரு உச்சகட்டத்தை விரைந்து அடையும் வருடங்களைச் சேர்ந்தது. அது இன அழிப்பில் முடியுமா, அல்லது மீண்டும் சுய உரிமைப் போராட்டம் துளிர்விடுமா என்பது தெரியாத ஒரு கட்டம்.

திருமாவளவனின் நான்காவது தொகுப்பு முதுவேனில் புலம் பெயர்ந்த அடுத்த தலைமுறையினரின் மாறி வரும் மனநிலையை, வாழ்வின் எதிர் நோக்கைச் சொல்லும் கவிதைகள் கொண்டது. முதுவேனில், வேனில் காலம் அதன் கொடுமையின் உச்சத்தைத் தொட்டு அடுத்து வரவிருக்கும், மழைக்காலத்தை எதிர்நோக்கும் இடைவெளியைக் குறிப்பது. இக்கால கட்டக் கவிதைகளும் வாழ்ந்து கழிந்த கொடுமையின் எல்லையைத் தொட்டுவிட்டபின் வரவிருப்பது என்னவாகத் தான் இருக்க முடியும்.

ஆயினும் மனம் அவ்வப்போது சலித்துக்கொண்டே தான் இருக்கிறது. தபசு என்ற கவிதை

அன்றிலிருந்து

பசி மறந்தேன்
தூக்கம் மறுத்தேன்
திசையின்றி அலைதல் விரும்பிற்று மனம்
சூனியத்தில் விழிகளின் தேடல்………. என்று தொடங்கும் கவிதை

எனக்கு வெளிச்சம் வேண்டுமாயின்
என்னை
நான்
எரித்துக்கொள்ளத்தானே ஆகவேண்டும்?

என்று தான் முடிகிறது. இது எழுதப்பட்டது 2009-ல்.

இத்தொகுப்பு ஒரு காப்புச் செய்யுளுடன் தொடங்குகிறது,.அது தெய்வமென வணங்கப்படும் முறுக்கேறிய வேர்கொண்ட மரத்திற்கு.

முன்னோர் தொடங்கி
என் ஊர் இருக்கும் வரையிலும்
மரமெனக்கருதார்
தெய்வம் என்றே கையெடுத்துத் தொழுத மருதன்
மாமுனிவன்
உன் வேர்முகம் மனதிருத்தி

தொகுத்த கவிதைகளுக்குக் காப்பு.

பன்றிக் கூட்டமென பெருக்கெடுக்கும் கனவுகள்
வெறுவெளிவானில் ஓட்டிச் செல்லும்
கவிஞன் நான்………

இருந்தும்
துவண்டுவிடவில்லை
என்றோ ஒரு நாள்
என்
பறவைகளால் நிறையும் வானம்.

கொள்ளும் நம்பிக்கை தான். இதுவும் மரமுனியை வணங்கும் மனிதர்கள்

காற்று
ஊதியூதி உலுப்ப
உதிர்ந்த மரத்தில் எஞ்சியது
ஒற்றை இலை

என்று தொடங்கும் ”உயிர்ச்சுடர்” என்னும் கவிதை

எங்கே
எஞ்சியிருந்த ஒற்றை இலை?

தின்றுவிட்டது காற்று
கல்லறை மீதில் அணைந்த மெழுகுவர்த்தியென
விறைத்திருக்கிறது
மரம்.

இதுவும் அந்த 2009 வருடத்திய அழிவு இன்னமும் நினைவுகளிலிருந்து மீறி எழமுடியாததையே சொல்கிறது. அவ்வளவு சீக்கிரம் அவை மறைவதில்லை.

2010-ல் எழுதப்பட்ட முள்வேலி என்னும் கவிதையிலிருந்து இடையிடையே சில வரிகள்: மிகவும் சக்தி வாய்ந்த கவிதை.

எது முடிந்தது?
மாறி மாறி பெய்த மழையால் கூட
கழுவப்படாமல் கறைபட்டுக்கிடக்கிறது
தேசம்
மூச்சில் இன்னும் கந்தக நெடி

பல்லாயிரக்கணக்கானவரின் மரண ஒலங்களால்
மெழுகப்பட்ட சுவர்களின் மீது
பல்லிளித்தபடி காட்சி தருகிறான்
அரசன்
அவனது பார்வை விலக்கி
சிறுநீர் கழிப்பதற்குக் கூட
என்னால் ஒதுங்க முடிவதில்லை…….

இப்படி பல பத்திகள் கடந்தால்….

இருந்தாலும்
எல்லாம் முடிந்துவிட்டதென்கிறார்கள்
முடிந்ததைப் பேசுவதற்கும் அஞ்சுகிறார்கள்.

முடிவாய்
நான் தவழ்ந்த மண்ணில்
ஊர் நுழைய முனைகிறேன்

முள்வேலி

இன்னும் சிறைப்பட்டே கிடக்கிறது
என் சிற்றூர்.

இவை ஊர் திரும்பிய அனுபவங்கள்.

ஆனாலும் இப்போது வாழ்வது விதியாய் எழுதியிருப்பது புலம் பெயர்ந்த கனடா நாட்டில். அழிவின் நினைவுகளூடே, ஒரு புதிய தலைமுறை தோன்றி அது வாழ்த்தொடங்கியுள்ளது. அது தன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில்லை. அதன் வாழ்நிலம் வேறாயிற்று. நிலம் என்னும் கவிதை. இது 2011-ல் எழுதப்பட்டது.

பறவைகள் எல்லாம் போய்விட்டன
இலைகளை உதிர்த்துவிட்ட மரங்களில்
பூத்திருக்கிறது
பறவைகளற்ற வெறுங்கூடு
வெயில் முறுகித் திரைந்த காலத்தில்
கொட்டுகிறது அடைமழை…………

கவிதையின் கடைசி வரிகள்

கதவை மூடி கணப்பியை முடுக்கி
வெளியை வேடிக்கை பார்க்கிறேன்
முற்றத்துத் தோட்டத்தில்
டுலிப்ஸ் முகிழ்களை புதைக்கிறாள்
என் மகள்

இது அவளது நிலம்

திருமாவளவனின் கவித்வ உலகம் அவர் வாழ்க்கை அனுபவமும், மக்கள் வாழ்க்கையின் மாறிவரும் சூழலும், வரலாற்றோடு அவை பின்னிப் பிணைந்திருப்பதும் இவையெல்லாமே சூழந்துள்ள இயற்கையின் பிரதிபலிப்பாகவே,மரம், இலைகள், துளிர்த்தல், காற்று, மழை, பூக்கள் என எல்லாமே அவரது சுற்றம் போல, அவற்றின் வாழ்வை அவர் பகிர்ந்து கொள்வதும், அவற்றின் பிரதிபலிப்பில் தம் வாழ்வை, நம்பிக்கைகளை, அவலங்களைக்காண்பதுமான ஒரு பிரபஞ்சத்தை உள்ளடக்கியது அவர் உலகம். அதன் உருவகமாக வெளிக்கிளம்பும் அவர் கவிதை உலகம்.

முள்ளி வாய்க்காலுக்கும் யாழ்ப்பாண நூலகம் எரிப்பதற்கும் இடைப்பட்ட காலம் ஒரு பட்டமரம் துளிர்க்கும் நம்பிக்கையை எங்கோ உணர்வுகளின் ஆழத்தில் பொதிந்து கொண்டிருப்பதான எதிர்பார்ப்பு அவருக்கு உணர்த்திக் கொண்டிருப்பது இயற்கையின் சுழற்சி தான்.

2005- ல் அவர் மரம் என்று ஒரு கவிதை எழுதியுள்ளார். அதை நான் முழுதுமாகத் தரவேண்டும்.

பிணமாகக் கிடந்தது
மரம்
பனி உருகக் கிடைத்த சிறு துளி வெப்பத்தில்
துளிர்க்க விரைகிறது இன்று

இனியென்ன
பிஞ்சு பனிப்படுகையின் மேல் விறைத்து
விரல்களென முகையரும்பும்
மொட்டவிழும்
சிலிர்த்துப் பூக்கும்
கர்ப்பிணிப் பெண்ணென பூரிக்கும்
குலை தள்ளக் காய் தொங்கும்
இலை விரிக்கும்
பழுக்கும்
சருகாய் உதிரும்
மீளப் பிணமாகும்

நாளைய உதிர்தல் தெரிந்தும்
இக்கணத்தில்
மகிழ்ந்து துளிர்க்க விரைகிறது
மரம்.

ஈழத்தில் தன்னூர் திரும்பி வாழும் சாத்தியமற்றுப் போய் கனடாவே தான் இனி வாழும் மண் என்ற நிலையில் மரம் துளிர்ப்பதும், அது ஒரு சுழற்சியின் ஒரு கட்டம் விரைந்து அழியும் கட்டம், எனினும் துளிர்ப்பதுதான் இயல்பு எனத் தெரிகிறது. அந்த கணநேர மகிழ்வும் மகிழ்ச்சி தான்

இருப்பினும் தான் பிறந்த மண்ணின் யதார்த்த வாழ்வு சுட்டெரிக்கிறது.
ஊழி என்னும் கவிதையில்

செவிடு படும்படி யுத்த பேரிகை
இருளைக் கிழித்து அதிர எழுந்தான்,
போர் அரசன்
,,,,,,,,,,
காலடித்தடங்கள் ஒவ்வொன்றுள்ளும்
முடுண்டு போகின்றன
பெரு நகரங்கள்

அசுரன் மேய்ந்தவை போக
எஞ்சிய வேர்க்கட்டைகளிலிருந்து
மீள மீளத் துடிக்கின்றன
மனிதத் தளிர்கள்

என்று எழுதும் கவிஞன் போருக்கு முரசு கொட்டுபவனல்லன். அரசுக்கு முன் கைகட்டி நிற்பவனுமல்லன். எந்தக் கட்சியையும் சார்ந்தவனல்லன். மனிதனின் அவல வாழ்வை, சோகத்தை, அதில் பங்கு கொள்பவன். தன்னை, தன் அவலத்தை, தன் எதிர்பார்ப்புகளை பதிவு செய்பவன்.

பேரழிவு
ஊழி
உன் கூத்தின் முடிவில் என்னதானாயிற்று?
யாரை யார் வதம் செய்தார்
துட்டனைப் புனிதனா?
புனிதனைத் துட்டனா?
துட்டனைத் துட்டனா?
வென்றதனால் துட்டன் புனிதனா?
வீழ்ந்ததனால் புனிதன் துட்டனா?

எதுவாயிருந்தால் என்ன?
நீ சுடலைப் பொடி பூசியாட சாம்பர் மேடாயிற்று
ஒரு தேசம்.

உழிக்கூத்து தான் அவர் பிறந்த மண் கண்டது.

திருமாவளவனின் வாழ்க்கையையும் அவரது கவிதைகள் அத்தனையையும் ஒரு சிமிழில் அடக்கிச் சொல்வதென்றால், அவரது மரம் என்னும் கவிதையைச் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. அதில் சொல்லப்படுவது தான் பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு கவிதைகளில் விரிவும் பெறுகிறது. இத்தோடு “எறும்புகள் சிறு குறிப்பு” கவிதையையும் மிகச் சிறந்த கவிதைகளில் ஒன்று என வேண்டும்.
அதன் தொடக்கம் “எறும்புகளின் வாழ்வு எளிதல்ல” கவிதையின் இறுதி வரிகள்: புகலிட வாழ்வும் எளிதல்ல எறும்புகளுக்கும்” இப்படி ஒரு கவிதை வெளிப்பாட்டை சமீப காலத்தில் எங்கும் கண்டிருக்கிறோமா?

ஈழத்துக் கவிஞர்களாகட்டும் புலம் பெயர்ந்தோராகட்டும், எல்லோரிடமிருந்தும் வித்தியாசப்பட்ட பார்வையும் கவித்வமும் கவிமொழியும் பெற்றவர் திருமாவளவன்.

எல்லாம் சொல்லி முடித்தபிறகு, மூன்றாவது தொகுப்பிலிருந்து ஆங்காங்கே வெகு அபூர்வமாக சில படிமங்கள், உருவகப் பிரயோகங்கள் எனக்கு நெருடலாகப் பட்டன. இவை மிக மிகக் குறைவானவேயானாலும் மொழியைக் கையாள்வதில் மிகக் கவனமானவர் என்று நான் கருதும் காரணத்தால் அதைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. இந்த நெருடல் என் உணர்வுகளோடேயே வரம்பிட்டது. இன்னொருவருக்கு இது சிருஷ்டிபரமாகத் தோன்றலாம்.

ஞாபகக் கோடரி என்று சொல்கிறார் எனக்கு நெருடலாகத் தான் இருக்கிறது. ஞாபகங்கள் இப்போது துயர் தரும் பழம் நினைவுகளை வெட்டுகின்றன என்றால், கோடரி என்று சொல்லாது அது வெட்டும் காரியத்தை மாத்திரம் சொன்னால் ஞாபகங்கள் வெட்டும் காரியத்தைச் செய்யும் ஒரு ஆயுதமாக உருவகித்ததாக ஆகாதா, சொல்லாமலேயே? இது போலத்தான் “இருட்பெண்”, சூரியப் பிணம், சூரியப் பேடை, நெருப்புக் குஞ்சுகள், பிஞ்சு சூரியன், சூரியக் குருவி” இப்படி. தமிழ் மொழி மிக வளமானது. அதுவும் ஒரு கவிஞனுக்கு முன் எண்ணற்ற சாத்தியங்கள் முன் வைக்கும். இவை சில தான். ஆனாலும் டி. கே. சி. சொல்வாரே, “அப்பளத்தில் கல்” என்று. அம்மாதிரித்தான். அப்பளத்தில் ஒரு சிறு கல்லே ஆனாலும் அது எனக்கு நெருடத்தான் செய்கிறது. குணத்தோடு குற்றமும் நாடச் சொல்கிறது தமிழ் வேதம். குற்றமும் என்று நாடவில்லை. மிகை நாடி மிக்க கொளச் சொல்கிறார் தாடிக்காரர். அப்படித்தான் எழுதி வந்தேன். ஆனாலும் குற்றாலத்து மீசைக் காரரின் ”அப்பளத்தில் கல்” உவமை நினைவுக்கு வந்தது.

புதுக்கவிதையின் ஆரம்ப காலத்தில் படிமமும் உருவகமும் பெரிதாக புதுமை மயக்கம் தந்த காலத்தில் இவை வானம்பாடிகளிடமும், கவிக்கோக்கள், கவிவேந்தர்களிடம் நிறைய விளைச்சல் கண்டது. அவர்களது உந்துதலே பொய்யானதான், இந்த பொய்யான அலங்காரங்கள் அவர்களுக்குத் தேவை தான். இப்போது அவை அதிகம் பேசப்படாது மறக்கப்பட்டு விட்டன.

ஆனால், எனக்கு மிகவும் பிடித்த கவிஞரும் என்னோடு ஒத்த பார்வை கொண்டவரும், திருமாவளவனைப் பற்றிய என் பார்வைகளைப் பகிர்ந்து கொண்டவருமான ராஜமார்த்தாண்டன் இருள் யாழிக்கு எழுதிய முன்னுரையில் அத்தொகுப்பில் ஆங்காங்கே காணும் ஒரு சில “அப்பளக் கற்களைக்” குறிப்பிடவில்லை. ஒரு வேளை அவருக்கு இது நெருடலாகப் படவில்லையோ என்னவோ. அல்லது இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றும் அவர் நினைத்திருக்கலாம். தான் சொல்லவந்த பொருளிலும் சொல்லும் முறையிலும் மிகுந்த நுண்ணுணர்வு கொண்ட திருமாவளவன் இதுபற்றி யோசிக்கலாம் என்ற நினைப்பில் இதைக் குறிப்பிடுகிறேன். இது என் பார்வை. இதை எல்லோரும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதும் இல்லை.

_____________________________________________________________________________________

இருள் யாழி: கவிதைகள்: திருமாவளவன் காலச் சுவடு பதிப்பகம், நாகர்கோயில், விலை ரூ 60
முதுவேனில் பதிகம்: கவிதைகள்: திருமாவளவன்,மகிழ், 754, கனகராசா ரோடு, திருநகர் வடக்கு, கிளிநொச்சி, ஸ்ரீலங்கா,விலை ரூ 200
வெங்கட் சாமிநாதன்/2810.2013

Series Navigationமழையெச்ச நாளொன்றில்…அன்பின் வழியது
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    புனைப்பெயரில் says:

    யாருங்கய்யா இது , நம்ம ஊர் மீசை முறுக்கி, ராஜ்பாக்‌ஷேயிடம் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்கன்னா என்றவரா, இந்த திருமாவளவனார்…?

  2. Avatar
    Venkat Swaminathan says:

    அன்பரே, இந்தத்திருமாவளவன் ஒரு கவிஞர். ஈழத்தவர்.இருபது வருடங்களுக்கு முன் புலம் பெயர்ந்து,எங்கெங்கோ ஐரோப்பாவில் சுற்றிக் கடைசியில் டோரண்டோவில் வாழ்க்கிறவர்.புலிகள் கை ஓங்கி இருந்த காலத்திலேயே அவர் எதிர்த்துக் குரல் எழுப்பியவர். ஒரு நல்ல கவிஞர். இந்த விவரங்கள் அவர் பற்றிய மேலே காணும் கட்டுரையிலேயே தெளிவு. இருப்பினும் நம்மூர் திருமாவளவனை நகைப்புக்குரியவர் என்பது உங்கள் கருத்து என்று உங்கள் கேள்வியின் நோக்கம்.இவருக்கு கிறித்துவ மிஷனரிகளின் உதவி பல விதங்களிலும் கிடைக்கிறது என்றே நான் நம்புகிறேன். அதற்காகவே ஒரு வேளை கட்சி நடத்துகிறாரோ என்னவோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *