பவள சங்கரி
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
நண்பன் ஆராவமுதன் தன் இனிய குரலில் பதிவு செய்து அனுப்பிய பட்டினத்தடிகளின் பாடலை மெய்மறந்து, உடன் முணுமுணுத்துக்கொண்டே ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் சபேசன்.
“ஏண்ணா.. ஏண்ணா, நான் கத்தறது காதில் விழலையா.. அதுசரி இவ்ளோ சத்தமா பாட்டை வச்சிண்டிருந்தா எப்படி அடுத்தவா பேசறது காதுல விழும்” லேப்டாப்பில் கனெக்ட் செய்து வைத்திருந்த ஸ்பீக்கரின் ஒலி அளவைக் குறைத்த மறுகணம், கனவுலகிலிருந்து மீண்டவராக சட்டென்று கண்களைத் திறந்து பார்த்தவர்,
“ஏண்டி கோமளா, ஏன் சவுண்டை குறைச்சே.. மனுசன் காலங்கார்த்தாலே நிம்மதியா ஒரு பாட்டு கூடவா கேட்கப்படாது? ஏன் இப்படி படுத்தறே…”
“நானா, படுத்தறேன்.. ஏண்ணா இப்படி சொன்னா புரிஞ்சிக்கவே மாட்டேங்கறேள். காலங்கார்த்தால, எல்லாம் அவசரமா அவா அவா வேலையா கிளம்பிண்டிருக்கச்சே இப்படி தெருவையே தூக்கறா மாதிரி சத்தமா பாட்டை வச்சிண்டிருந்தா எல்லாருக்கும் டிஸ்டர்பன்சா இருக்காதா? எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்றேளே? அப்பறம் அவா அதைச்சொன்னா, இவா இதைச் சொன்னான்னு புலம்பித்தீர்த்தா நான் என்னதான் பண்ண முடியும். நீங்களே சொல்லுங்கோ”
”அடக்கடவுளே இந்த ஆத்துல ஆனந்தமா, ஆத்மார்த்தமா ஒரு பாட்டு கேக்கக்கூட வழியில்லையா. இதை எங்கபோயி சொல்றது நானு. ஒரு காலத்துல ஆபீசு கிளம்பறச்சயும், ஆபீசு முடிஞ்சு வீட்டுக்கு வரச்சயும், எல்லாம் என்னைப் பார்த்து கப்சிப்னு சைலண்டா இருந்தவாள்ளாம் இன்னைக்கு என்னைப் பார்த்து ஏளனம் பண்றதுகள். எல்லாம் சிங்கம் படுத்தா எலி கூட மேல ஏறி விளையாடுற கதைதான்.. அதுக்கு நீ வேற உடந்தையாக்கும், நன்னா இருங்கோ”
“ஏண்ணா இப்படி அலுத்துக்கறேள். வீட்டுல பிரச்சனை வேண்டாம், கொஞ்சம் அடக்கி வாசிங்கோன்னு சொன்னா தப்பா. உடனடியா உங்க ஈகோவைத் தூக்கி ஒடப்பில போட்டுட்டு ஒரு ஹியரிங் மெஷினை வாங்கி மாட்டுங்கோ காதில.. அப்பதான் உங்களுக்குப் புரியும், நீங்க எவ்ளோ சத்தமா வச்சு பாட்டு கேக்கறேள்ன்னு. இன்னும் சித்த நாழி. எல்லாம் கிளம்பி ஓடப்போறா. அப்பறமா உங்க ராஜ்ஜியம் தான..”
“ஆமாண்டி, என்னோட ராஜ்ஜ்ஜ்ஜ்ஜீயம்.. யானை கட்டி போரடிக்கற ராஜ்ஜியம். காலங்கார்த்தால ஒரு பேப்பர் படிக்கலாம்னா, அதுக்கும் பையர் படிக்கணும்னு, அவர் ஆபீசு போனப்பறம் படின்னு சொல்ற.. ஒரு பாட்டுகூட கேக்கக் கூடாதுன்னா நான் என்ன அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துடணுமா, சொல்லு”
“சரிண்ணா, சத்தம் போடாதேள். இருங்கோ வறேன்.. கதவையானும் சாத்திண்டு பாட்டு கேளுங்கோ.. “
“இதோ வந்துட்டேம்மா..” என்று மருமகளின் குரலுக்கு மரியாதையுடன் ஓடிச்சென்ற மனைவியைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது சபேசனுக்கு. எப்படித்தான் இவளுக்கு மட்டும் அந்த காலத்துல இருந்து இப்படி ஒரே மாதிரியா கூப்பிட்ட குரலுக்கு ஓடி, ஓடி குழைஞ்சுண்டு நிக்க முடியறது.. ஆள் மாறினாலும், பாரபட்சமில்லாம அதே மாதிரி கொஞ்சம் கூட மாத்தமில்லாம, அதே பவ்யத்துடன் .. ஆகா, கோமளாவிற்குக் கோவில் கட்டித்தான் கொண்டாடவேண்டும்.
ஆபிசில் தன் பார்வை அசைவிற்கு காரியங்கள் எப்படி துரிதமாக நடக்கும் என்பதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. எவ்வளவுதான் உயர் பதவியில் இருந்தாலும் ஓய்வு பெற்றவுடன் அத்தனைக்கும் மாறாக சூழ்நிலைகள் புரட்டிப் போட்டுவிடுகிறது வாழ்க்கையையே. மின்சார வாரியத்தில் உயர் அதிகாரியாக C.E. போஸ்டில் இருந்துவிட்டு ஒரு நாள் வயதாகிவிட்டது என்று சொல்லி பதவியை பறித்துக்கொண்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தால், மனதில் உள்ள தெம்பும் சேர்ந்தல்லவா பறிபோய்விடுகிறது. நல்ல வேளையாக கல்லூரிகளிலிருந்து கௌரவ பேராசிரியராக வகுப்பு எடுக்கச்சொல்லி அழைப்பு வந்தபோது மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதால் அடுத்த சுற்று வாழ்க்கை ஒரு பத்தாண்டு காலம் பழுதில்லாமல் ஓடிவிட்டது. அதற்குப் பிறகு மெல்ல மெல்ல இயலாமை எட்டிப்பார்க்க, பின் வாழ்க்கையின் அடுத்த சுற்று சற்று கோரமான முகத்தைக் காட்டுவதாகவே இருந்தது.
வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும், அதை இரசித்து அனுபவிக்க ஏதோ ஒரு போதை தேவைப்படத்தான் செய்கிறது. அது பதவி கொடுக்கும் அதிகார போதையோ, அல்லது அழகும், இளமையும் கொடுக்கும் ஆணவ போதையோ. அல்லது தனக்குப் பிடித்த படைப்புகளில், கலை வடிவங்களில், காட்சிகளில், மழலைகளின் மயக்கு மொழிகளில், உற்றவர்களின் பாசவலைகளின் அழுத்தம் கொடுக்கும் போதை என்று இப்படி எத்தனையோ வகை. அந்த வகையில் இன்றைய பொழுது கழிவதே இப்படி ஆழ்ந்த தத்துவங்களின் போதையில் சிக்கி தன்னை மறப்பதில்தான் என்ற நிலையில் இருக்கும் சபேசன் இந்த 80 வயதை நெருங்கப்போகும் நேரத்தில் அது மட்டுமே மன அமைதியைக் கொடுக்க முடிகிறது.
சென்னையில் இருதயப் பகுதியில் இவ்வளவு பெரிய வீடு தேவையா? அதை இடித்து அடுக்கு மாடி குடியிருப்பாகக் கட்டினால் எவ்வளவு வருமானம் என்று பிரமோட்டர்ஸ் பண்ணின தொல்லையில் வீட்டில் இருந்த நண்டு, சிண்டெல்லாம் கூட புரிஞ்சிண்டு, அபார்ட்மெண்ட் கட்டலாம்னு ரகளை பண்ணினாலும், சபேசனுக்கு அதில் துளியும் நாட்டமில்லை. எங்கே புதிய வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தையும் சேர்த்து அடித்துக்கொண்டு போய்விடுமோ என்ற அச்சத்துடன், அப்பா கஷ்டப்பட்டு கட்டிய வீட்டைத் தானும் தன் பங்கிற்கு, அருகில் விலைக்கு வந்த ஒரு வீட்டை வாங்கி இதோடு சேர்த்து, லோன் போட்டு கிட்டதட்ட ஒரு பங்களாவாக மாற்றி அதற்கான கடனை கட்டி முடிப்பதற்குள் தாவு தீர்ந்து போனதெல்லாம் இன்றைக்கு இப்படி ஒரு நிலையை சந்திப்பதற்காகத்தான் என்று தெரிந்திருந்தால் ஒரு வேளை இவ்வளவு சிரமம் இல்லாமல் வருகிற வருமானத்தை நன்றாக தாராளமாகச் செலவு செய்து இன்னும் வாழ்க்கையை நன்றாக அனுபவித்திருக்கலாமே என்ற ஞானோதயம் பிறந்தது வீண் தான். எல்லாம் கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்.. இதில் வேறு வீட்டிற்குள் படியெல்லாம் இருந்தால் வயதான காலத்தில் நடப்பதற்கோ, யாருக்காவது தேவையென்றால் வீல் சேரில் போவதற்கோ வசதியாக இருக்காதே என்ற தொலை நோக்குப் பார்வையில் வீடு முழுவதும் சம தளமாகப் போட்டு கட்ட வேண்டும் என்று அந்த இன்ஜீனீயருடன் எத்தனை வாக்குவாதம் செய்து, செலவை அதிகப்படுத்தி செப்பனிட்டு முடித்ததெல்லாம் இப்படி ஒரே அறையில் அடைந்து கிடக்க வேண்டிய கொடுமைக்காகவா என்று நினைத்த பொழுது சபேசனின் உள்ளம் நொறுங்கித்தான் போனது.
அடுத்த வாரம் சித்ரா பௌர்ணமி வருவதை நினைத்து, ஒரு உற்சாகம் மனதில் . ஒவ்வொரு சித்ரா பௌர்ணமிக்கும் திருச்சி அருகே, குளித்தலை என்ற கிராமத்தில் உள்ள அவர்களுடைய குல தெய்வம் கோவிலுக்குச் சென்று சிறப்பான வழிபாடு செய்வது பல ஆண்டு கால வழக்கமாக இருக்கிறது. அத்தியாவசியமான வசதிகளுடன், கொஞ்சம் சமையல் சாமான்களுடன் ஒரு பழைய வீடு அங்கு இருப்பது, மூன்று, நான்கு நாட்கள் பழைய நினைவுகளில் மூழ்கி நிம்மதியாகத் தங்கி இருக்க முடிகிறது. அதற்காக வருடம் முழுவதும் காத்துக் கொண்டிருப்பதுகூட சுகமாகத்தான் இருந்தது. பட்டணத்துவாசிகள் போல் அல்லாமல் சக மனிதர்களுக்கு உதவி செய்யத் தயங்காத நல்ல உள்ளங்கள் அங்கு ஏராளம், அதனாலேயோ என்னமோ மனசு இறக்கை கட்டி பறக்கத்தான் செய்கிறது!
“டேய், சிட்டு.. ஏண்டா உள்ளே வந்தே.. நான் தான் உன்னை வெளியிலேயே இருக்கச் சொன்னேனே.. வர வர சொன்ன பேச்சே கேட்க மாடேங்கற நீ. எப்பப் பார்த்தாலும் ஊளையிடறது. வாயிலிருந்து தண்ணியா ஊத்தறது கூடத் தெரியாம இருக்கே.. பின்னால தோட்டத்துல போய் படுன்னு சொன்னேன்ல. இப்ப என்னத்துக்கு உள்ளே வந்தே நீ. சாப்பாடு நோக்கு காலையிலேயே போட்டு வச்சேனே. சாப்பிட்டயா இல்லையா..?”
“பார்த்தா, இந்தாப்பா உன்னோட மொபைல் அடிச்சிண்டே இருக்கு. கவனிக்கலையா நீ? “ அம்மா போனை தூக்கிக்கொண்டு வந்ததை உட்கார்ந்த வாக்கிலேயே கையை நீட்டி வாங்கினான், பார்த்தசாரதி.
“ஹலோ, அட கணேசனா, என்னப்பா மொபைல்ல கூப்பிடறே.. ஓ அப்படியா, போன் சரியாத்தானே இருக்கு. லேண்ட்லைன் கிடைக்கலியா. ஓ தெரியலயே. சரி நான் செக் பண்றேன். ஓ அப்படியாப்பா . ரொம்ப சந்தோசம். இன்னும் 35 நாள் இருக்கோல்லியோ.. வெரி குட்.. வெரி குட். நீ வரதுக்குள்ள ஜாதகம் ஏதாவது குதிர்றதா பார்ப்போம். பொண்ணும் பாத்துட்டுப் போயிடலாம்.. ம்ம் அப்படியா… சரி.. சரி.. முயற்சி நாம பண்றோம். அப்பறம் நடக்கறதெல்லாம் அவன் கையில.. எல்லாம் நன்னா நடக்கும்னு நம்புவோம். சரிப்பா டேக் கேர்.. அம்மா ஸ்கூலுக்கு கிளம்பிட்டா.. ஆமா. ம்ம் சொல்றேன். நன்னா இருக்கா. தாத்தா, பாட்டி சிட்டு எல்லாரும் நன்னாயிருக்கா.. ஓகே. பை.”
சிட்டு என்ற பெயரைச் சொன்னவுடன் ஒரு வித்தியாசமான செல்லச் சத்தம் கொடுத்துக்கொண்டு வாலை வேகமாக ஆட்டியபடி வந்து வெளியே நின்று கொண்டிருந்தது பார்த்தாவின் செல்ல நாய்.
“இதுதானா சங்கதி, கணேசனோட போனுக்காகத்தான் இப்படி வீட்டுக்குள்ளயே சுத்திச் சுத்தி வந்தயா நீ.. கணேசனோட போன் வரலைன்னுதான் டென்சனா உனக்கு. சரி சரி, அவன் நன்னா இருக்கானாம். நீ போய் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ. அடுத்த மாசம் வரானாம். நன்னா உடம்பை பாத்துக்கோ. அவனைப் பாத்துட்டே நீ போகலாம்.. போய் ஒழுங்கா சாப்பாட்டைச் சாப்பிட்டு உடம்பை தெம்பா வச்சுக்கோ.. போடா போ..”
சிட்டு தலையைத் தொங்க போட்டபடி ஏதோ ஒரு சோகமான மெல்லிய சத்தத்தை எழுப்பிக்கொண்டு, காலை லேசாக நொண்டியபடி இழுத்தவாறு மெதுவாக தன்னுடைய கொல்லைப்புற இருப்பிடம் நோக்கிச் சென்றது. கணேசன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் பள்ளி விட்டு வரும் போது தெருவில் ஒரு குப்பைத் தொட்டிக்கு அருகில் கத்திக்கொண்டு தன் தாயைக் காணாமல் சுற்றிச் சுற்றி வந்து கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து, சட்டென்று வீட்டிற்குத் தூக்கி வந்துவிட்டான். அப்பாவிடம் செம திட்டு வாங்கினான். திரும்ப கொண்டுபோய் எடுத்த இடத்திலேயே விட்டுவரச் சொன்ன அப்பாவிடம் தலையைக் குனிந்து கெஞ்சிக் கொண்டிருந்தான். அப்பா அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், அது வீட்டையே அசிங்கப்படுத்திவிடும் என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்த மகனிடம், பேரனுக்கு ஆதரவாகச் சொல்லி அந்த நாய்க்குட்டியை பின் புறம் ஒரு சின்ன தடுப்பு ஏற்படுத்தி அதற்குள் வைத்துக் கொள்ளட்டுமே, பார்த்தா என்றார் ‘சீக்கிரமாக அதை நல்ல முறையில் சுத்த, பத்தமா இருக்க கத்துக்கொடுத்துடுப்பா கணேசா, ஒரு நாய் வீட்டில இருந்தா நல்லதுதானே , நன்னா வீட்டை காவல் காத்துண்டு கடக்குமே.. ‘ என்று பேசி அப்பாவை ஒத்துக்கொள்ள வைத்த தாத்தாவிற்கு கட்டிப்பிடித்து ஒரு முத்தம் அன்பாகக் கொடுத்துச் சென்றான் பேரன்.
நாளைடைவில் சிட்டு மிக ஒழுக்கமாக மாறிவிட்டது. வீட்டு காவலில் மிகவும் சூட்டிப்பாக நின்றது. புதிய ஆட்களை அந்த ஏரியா பக்கமே விடாமல் துரத்தியடிப்பான் சிட்டு என்று அப்பா பெருமையாகப் பேசுவது கணேசிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு முறை தோட்டத்திலிருந்து தவறுதலாக வீட்டிற்குள் வரத்தெரிந்த ஒரு கருநாகப் பாம்பை பயங்கரமாக சண்டையிட்டு விரட்டியடித்துக்கொண்டிருந்த சத்தம் கேட்டு அனைவரும் வரவும், பாம்பை அடித்துப்போட்டு கொளுத்தினார்கள். அதிலிருந்து சிட்டு அப்பாவிற்கு மிகவும் பெட்டாகிவிட்டான். கணேசன் பள்ளிப் படிப்பு முடிந்து பிலானியில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கச் சென்ற போது சிட்டு ஒரு கலாட்டா செய்தது. கணேசன் போன் செய்யும் பொழுதெல்லாம் வந்து நின்றுகொண்டு போனை பரிதாபமாக பார்த்துக்கொண்டிருக்கும். மெல்ல, மெல்ல சூழ்நிலைகளை அனுசரித்துப் போகும் பழக்கமும் எளிதாகக் கற்றுக்கொண்டது. அதனாலேயே வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்துப்போய்விட்டது சிட்டுவை. படித்து முடித்து கணேசன் அமெரிக்காவில் வேலை கிடைத்து சென்ற பின்பு முதல் முறையாக ஓராண்டு கழித்து வீட்டிற்கு வந்த பொழுது இரண்டு நாட்கள் முன்பிருந்தே நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. மனிதர்களைக் காட்டிலும் ஒருபடி மேலாக அன்பு செலுத்துவதில் சிட்டு அடிக்கடி வீட்டிற்கு வரும் நண்பர்களைக்கூட கவர்ந்து வைத்திருந்தது. ஆனாலும் சந்தேகப்படும்படியாக ஒருவரையும் வீட்டின் அருகிலேயே அண்ட விடாது. வெளியூர் சென்றாலும் வீட்டின் காவலுக்கு திடமான ஒரு ஆளை விட்டுச் செல்வதுபோல அப்படி ஒரு நம்பிக்கை.
இவை எல்லாம் கடந்த காலமாகி இன்று சிட்டுவிற்கு வயதாகிவிட்டதால் இருக்கும் இடம் தெரியாமல் புழக்கடைப்பக்கம் கிடக்கும் அவல நிலை.
அன்று சித்ரா பௌர்ணமிக்குக் கிளம்புவதற்காக அப்பா பத்து நாட்களாகத் தயாராகிக் கொண்டிருப்பது பார்த்தசாரதிக்குத் தெரிந்து,
“அம்மா, என்னாச்சு, அப்பா ஏன் இப்படி டென்சன் ஆகறா.. இன்னும் நாள் இருக்கே. அமைதியா இருக்க மாட்டாரா..?’
வழக்கம் போல கோமளா எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டார். பார்த்தாவிற்கும் தெரியும், அதற்கு மேல் அம்மாவிடம் என்ன பேசினாலும் பதில் வராது என்பது.
சித்ரா பௌர்ணமிக்கு மூன்று நாட்கள் இருக்கும்போது சபேசன் ஆர்வமாகக் கிளம்பிக் கொண்டிருந்தார். கோமளா இருவரும் பேருந்தில் செல்லலாம் என்று சொன்ன ஐடியா அவருக்குப் பிடிக்காமல் முணகிக்கொண்டிருந்தார். வீட்டில் மெல்ல பிரச்சனை புகைய ஆரம்பித்திருந்த நேரம். கோமளா எவ்வளவோ சமாளித்தும் சில நேரங்களில் அது எல்லை மீறிவிடுவதும் உண்டு. ஆனால் இந்த முறை அது இந்த அளவிற்கு செல்லும் என்று ஒருவரும் நினைத்தும் பார்க்கவில்லை.
சிட்டு அன்று ஏனோ வீட்டிற்குள் வரவே விருப்பம் கொண்டது. இரண்டு முறை விரட்டி விட்டும் ஏதோ போல முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு வந்து நின்றது. பார்த்தசாரதி வழக்கம் போல மனதில்பட்டதை பளிச்சென்று பேச ஆரம்பித்துவிட்டான். தன் பேச்சு மற்றவர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்ற சொரணை கொஞ்சமும் இல்லாமல் சிட்டுவைப் பார்த்து அவன் பேசிய பேச்சு சபேசன் மற்றும் கோமளாவின் மனதில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டது.
“டேய், சிட்டு எத்தனைவாட்டி சொல்றதுடா நோக்கு. சாப்பாடு போட்டா தின்னுட்டு ஒரு பக்கம் முடங்கிக் கடக்க வேண்டியதுதான, வயச்சாகுதே தவிர நோக்கு இன்னும் ஆசை அடங்கலயே.. நாம வாழ்ந்து முடிச்சவா.. வாழறவாளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிக்கணும்னு நோக்கு புரியவே மாட்டேங்கறதே. ஏன் இப்படி அழிச்சாட்டியம் பண்ணிண்டிருக்கே நீ. “
இப்படி ஏதேதோ வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தவனைப் பார்த்து பதிலேதும் சொல்லாமல் கிளம்பிய இருவரும் திரும்ப மீண்டும் அந்த வீட்டிற்கு வரவேயில்லை.
கணேசன் ஓராண்டிற்குப் பிறகு எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று ஆவலாக வந்தவனுக்கு முதல் அடி தாத்தா, பாட்டியின் அறை வெறிச்சோடிக் கிடந்தது. அடுத்து சிட்டுவின் பரிதாபமான நிலை. வட்டிலில் சாப்பாடு காய்ந்து கிடக்க இளைத்துப்போய், சுருண்டு கிடந்ததைக் காண மனம் பொறுக்கவில்லை அவனுக்கு.
”அப்பா, தாத்தா பாட்டியை ஏன் கிராமத்திற்கு அனுப்பினேள். அவர்களால் இந்த வயதில் தனியாக சமாளிக்க முடியுமா?” என்றான்.
“இல்லப்பா.. வயசானா, அமைதியா பிரச்சனை இல்லாம வாழணும்னுதான் தோணும். அதான் அவாளை நான் தடுக்க விரும்பல.. அவாளுக்கு எங்க விருப்பமோ அங்க இருக்கட்டுமே. நாம வேணா மாசம் ஒருவாட்டி போய் பார்த்துட்டு வந்தா போறது..” என்றான் சகஜமாக.
”அப்படியாப்பா.. அதுவும் சரிதான். நாம போய் வீட்டை நன்னா கொஞ்சம் மாடர்னா அவாளுக்கு வசதியா இருக்கறா மாதிரி மாத்திடலாம். எப்படியிருந்தாலும், இன்னும் கொஞ்ச நாளில் உங்களுக்கும் இப்படி ஒரு அமைதி தேவையா இருக்குமே. அதனால இப்பவே ஒரே செலவா செய்துடலாம்ப்பா..” என்றான் வெகு யதார்த்தமாக.
இப்படி ஒரு பதிலைச் சற்றும் நினைத்துக்கூடப் பார்க்காத பார்த்த சாரதிக்கு முதல் முறையாக மண்டையில் சம்மட்டியாக அடி விழுந்தது!
- மருமகளின் மர்மம் 8
- சைனா அனுப்பிய முதல் சந்திரத் தளவூர்தி நிலவில் தடம் வைத்து உளவு செய்கிறது.
- இயற்கையைக் காப்போம்
- தேவயானியும் தமிழக மீனவனும்…
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 30 (நிறைவுப் பகுதி)
- பாசத்தின் விலை
- அதிகாரி
- மேடம் ரோஸட் ( 1945)
- அன்பு மகளுக்கு..
- தாகூரின் கீதப் பாமாலை – 94 வசந்த காலப் பொன்னொளி .
- கடற்கரைச் சிற்பங்கள்
- திண்ணையின் இலக்கியத் தடம்-14
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 54 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) காத்திருக்கிறாள் எனக்கோர் மாதரசி ..!
- மறந்து போன நடிகை
- சென்னை புத்தகத் திருவிழாவிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி. நாள்: 22-12-2013, ஞாயிறு
- காரணமில்லா அச்சவுணர்வு PHOBIA
- சொந்தங்களும் உறவுகளும்
- ஜாக்கி சான் 21. ஹாங்காங் பயணம் – பழைய நினைவுகள்
- புகழ் பெற்ற ஏழைகள் 38.கருப்புக் காந்தி எனப் போற்றப்பட்ட ஏழை…
- சீதாயணம் நாடகம் -12 படக்கதை -12
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-14 சிசுபால வதம் இரண்டாம் பகுதி
- “ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்” கட்டுரைக்கு எதிர்வினை
- குழந்தைகளும் தட்டான் பூச்சிகளும்
- நீங்காத நினைவுகள் – 26 –