(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
38.கருப்புக் காந்தி எனப் போற்றப்பட்ட ஏழை………
“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு
படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு”
அடடா…நல்ல பாட்டு…அருமையாப் பாடுறீங்க….என்ன போனவாரம் கேட்ட கேள்விக்குப் பதிலக் கண்டுபிடிச்சிட்டீங்க போல…நீங்க பெரிய ஆளுதாங்க…அவரு யாரு சொல்லுங்க பார்ப்போம்…ஆமா….சரியாச் சொன்னீங்க…அவருதாங்க நம்ம தமிழகத்திற்கும் பாரதத்திற்கும் பெருமை சேர்த்த காமராஜர். நாட்டையே தனது வீடாகக் கருதி வாழ்ந்த தன்னலமற்ற தீயாகசீலர் காமராஜர். அவரப் பத்திச் சொல்றேன் கேளுங்க… அவர நெனச்சாலே நமக்கெல்லாம் பெருமையா இருக்கு…மனசுக்குள்ளாற ஒரு உற்சாகம் வரும்.. அது அனைவரது வாழ்க்கையிலயும் வழிகாட்டும் ஒளிவிளக்காக ஒளிருங்க…
அரசியலில் லஞ்சம், ஊழல் அதிகாரத் துஷ்யப்பிரயோகம் ஆகியவை மலிந்த ஒரு நாட்டில் தூய்மையான, நேர்மையான ஒரு மாமனிதர் இருந்திருக்கிறார் என்பதே ஆச்சரியமான ஒன்றாகும். தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து சிறந்த ஆட்சியை மக்களுக்குக் கொடுத்து மற்ற ஆட்சியாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறார். அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர்; மூத்த தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து அதற்கு முன் உதாரணமாகத் தனது முதலமைச்சர் பதவியையே துறந்தவர்.
‘கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்’ என்று அறிந்து பட்டி தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர்; ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை நாட்டிலேயே முதன்முதலில் அறிமுகம் செய்தவர்; தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்குச் சிறப்புச் சலுகைகள் எதையும் தராதவர்; இத்தகைய பெருமைகளுக்கெல்லாம் உரியவர்தான் பாரத மக்களால் தென்னாட்டுக் காந்தி என்றும் கருப்புக் காந்தி என்றும் அன்போடு அழைக்கப்பெற்ற கர்மவீரர் காமராஜர் ஆவார்.
வறுமையும் நாட்டுப் பற்றும்
ஏழைபங்காளராக விளங்கிய காமராஜர் அப்போதைய இராமநாதபுரம் மாவட்டத்தில் விருதுபட்டி என்ற விருதுநகரில் 1903 – ஆம் ஆண்டு ஜீலை மாதம் 15-ஆம் நாள் குமாரசாமி, சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு குமாரசாமி தம்பதியர் தங்களின் குலதெய்வப் பெயரான காமாட்சி என்ற பெயரை வைத்தனர். ஆனால் அவர்கள் தங்கள் குழந்தையை ராஜா என்றே அழைத்தனர். நாளடைவில் இவ்விரண்டு பெயரும் சேர்ந்து காமராஜாவாகி பின்னர் காமராஜர் என்று மாறி அதுவே நிலைத்துப் போனது.
காமராஜரின் இளம் வயதிலேயே அவரது தந்தை குமாரசாமி இறந்தார். மேலும் காமராஜரின் தாத்தாவும் தனது மகனைத் தொடர்ந்து இயற்கை எய்தினார். இதனால் வறுமை எனும் அரக்கனின் பிடியில் காமராஜரின் குடும்பம் தள்ளாடியது. வறுமையுடன் பள்ளி சென்றாலும் நாட்டு நடப்புகள் காமராஜரின் மனதை படிப்பில் ஈடுபாடு கொள்ளச் செய்யவில்லை. காங்கிரஸ் தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டு கூட்டங்களுக்குச் சென்று வரத் தொடங்கினார். இதனை அறிந்த அவரது மாமா கருப்பையா தனது அக்கா சிவகாமியிடமும் அம்மா பார்வதியிடமும் புகார் கூறினார்.
மேலும், “இவனை இப்படியே விட்டுவிட்டால் கெட்டுப் போய்விடுவான். அதனால் அவனைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டு என்னுடைய ஜவுளிக்கடையில் வேலைபார்க்க அனுப்பி வை” என்று கூறினார். அதனைக் கேட்ட காமராஜரின் தாயார் தன் தம்பியின் கூற்றுப்படியே செய்தார். பள்ளிக்குச் செல்வதை விடுத்து காமராஜர் ஜவுளிக்கடைக்குச் சென்றார். ஏழ்மையின் காரணமாக தனது மாமா கூறிய வேலைகளைச் செய்து வந்தார் காமராஜர்.
ஒருநாள் அம்மன் கோவில் பொட்டலில் நடந்த டாக்டர் வரதராஜூலு அவர்களின் பேச்சைக் கேட்பதற்காகக் தனது மாமா இல்லாத நேரத்தில் கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டில் சாவியை ஆணியில் தொங்கவிட்டுவிட்டு நேராகக் கூட்டம் நடைபெறுமிடத்திற்குச் சென்றுவிட்டார் காமராஜர்.
இது இவரது மாமாவிற்குத் தெரியவரவே அவர் காமராசரைக் கண்டித்தார். அதோடுமட்டுமல்லாமல் அவரைத் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார். திருவனந்தபுரத்திலிருந்த காமராசரின் தாய் மாமாவான காசி காமராரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்த போதிலும் தந்தைப் பெரியாரின் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் கேரளாவில் நடைபெற்ற அனைத்து போராட்டங்களிலும் காமராசர் கலந்து கொண்டார். காமராஜர் மனம் மாறிவிடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அது ஏமாற்றத்தை அளிப்பதாகவே இருந்தது. இதனைக் கண்டு வருந்திய காமராஜரருடைய மாமா காசிஅவரை மீண்டும் விருதுநகருக்கே அனுப்பி வைத்தார்.
மீண்டும் விருதுநகருக்கு வந்த காமராஜரை அவரது மாமா கருப்பையா ஜவுளிக்கடை வியாபாரத்தைக் கவனிக்குமாறு கூறினார். ஆனால் காமராஜர் மறுத்துவிட்டார். காமராஜருடைய மறுப்பு அனைவருக்கும் மனக்கவலையை ஏற்படுத்தியது. பார்வதி பாட்டி நாள்தோறும் காமராஜரிடம், “இந்தப்போராட்டமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். மற்றவர்கள் கூறும்படி நடந்து கொள்” என்று கூறிக்கொண்டே இருந்தார். இதனைப் பொறுக்க முடியாத காமராஜர்,
“பாட்டி நம்ம எண்ணெய்க் கடைக்காரர் வீட்டுச் சடைநாய் வெள்ளை வெளேர் என்று இருக்கிறது என்பதற்காக, அந்நாய் வீட்டுக்குள்ளே நொழைஞ்சா அதைவெரடடாம விட்டு விடுவிங்களா?”
என்று கேட்டார். அதற்கு அவருடைய பாட்டி, “ அது எப்படி வெரட்டாம இருக்க முடியும்?” என்று கூற, அதற்குக் காமராஜர்,
“அதுமாதிரிதான் பாட்டி நம்ம நாட்டுக்குள்ளே நொழைஞ்ச வெள்ளைக் காரனுகளை வெரட்டணும்” என்றார். அவரது பாட்டியோ,
“அது உன்னால ஆகக் கூடிய காரியமா? ராசா!” என்று கேட்டார்.
அதனைக் கேட்ட காமராசர், “நான் மட்டுமில்ல பாட்டி இந்த நாட்டிலுள்ள அத்தனை இளைஞர்களும் சேர்ந்துதான் விரட்டப் போறோம்” என்று பதிலளித்து பாட்டியின் வாயடைத்துவிட்டார். எந்த நேரமும் நாட்டைப் பற்றியும் நாட்டுவிடுதலை பற்றியும் குறித்த சிந்தனையிலேயே காமராசர் மூழ்கி இருந்தார்.
விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடல்
நாடெங்கும் ஒடத்துழையாமை இயக்கம் நடந்தபோது அவ்வியக்கத்தில் காமராசரும் கலந்து கொண்டார். அந்நியத் துணிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நிலையில் காமராசர் அதில் ஈடுபட்டு கதர்சட்டை கதர் வேட்டி அணிந்ததோடு தனது நண்பர்களையும், தனக்குத் தெரிந்த அத்தனை பேரையும் கதராடைகளை அணியுமாறு வற்புறுத்தி அணியச் செய்தார்.
மேலும் அவ்வப்போது தலைமையிடத்திலிருந்து வரும் செய்திகளை விருதுநகர்ப் பகுதியில் தெரிவிக்கக் காமராசர் தமது கழுத்தில் டமாரத்தை மாட்டிக் கொண்டு அதை அடித்தவாறே முக்கிய இடங்களில் மக்களுக்குச் செய்திகளைத் தெரிவித்தார்.
இந்திய சுதந்திரப் போர் நடத்துவதற்காக நிதி வசூல் செய்வதற்கு உண்டியல் ஏந்திக் கடை கடையாகக் காமராசர் சென்று வந்தார் 1919-ஆம் ஆண்டு முதல் உலகப் போர் முடிவுக்கு வந்ததும், ரெளலட்சட்டத்தை எதிர்த்துச் சத்தியாகிகிரகம் செய்ய மக்களுக்குக் காந்தியடிகள் அழைப்புவிடுத்தபோது காமராசர் அவ்வழைப்பினை ஏற்றுப் போராட்டத்தில் ஏடுபட்டார். இந்திய தேசிய காங்கிரஸிலும் உறுப்பினர் ஆனார். உறுப்பினராகக் காமராசர் சேர்ந்ததிலிருந்து முழுநேர அரசியல்வாதியாக மாறினார்.
நாட்டை வீடாகக் கருதிய தீயாகசீலர்
இரவு பகல் பாராது காங்கிரஸ் இயக்கத்தில் காமராசர் ஈடுபட்டார். அதனால் வீட்டிற்கு உரிய நேரத்தில் வராது நேரம் கழித்தே வந்தார். சிலநேரங்களில் சாப்பிடாமலேயே காமராசர் படுத்துவிடுவதும் உண்டு. அதனைக் கண்ட அன்னை சிவகாமி மனதில் வருத்தம் ஏற்பட்டது. அவர் தனது தம்பியிடம் கலந்து காமராசருக்குத் திருமணம் செய்து வைப்பது என்று முடிவு செய்தார். திருமணம் செய்து வைத்தாலாவது காமராசருக்குக் குடும்பப் பொறுப்பு வரும் என்று கருதி பெண்பார்த்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்திற்கான சகல ஏற்பாடுகளையும் செய்தனர்.
இதனை அறிந்த காமராசர், “தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் நாடு விடுதலை அடைந்த பின்னர் திருமணம் முடித்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டார். அனைனை சிவகாமியோ காமராசரைத் திருமணம் முடிக்குமாறு கட்டாயப்படுத்தினார். காமராசரோ, “அம்மா! என்னைத் திருமணம் முடிக்கச் சொல்லித் தாங்கள் கட்டாயப்படுத்தினால் அப்புறம் என்னை நீங்கள் உயிருடன் பார்க்க முடியாது” என்று கூறிவிட்டார். எவ்வளவு பெரிய தியாகம்… தன் சுகத்தைவிட நாட்டு மக்களின் சுகமே பெரிதுன்னு நெனைக்கக்கூடிய உயர்ந்த உள்ளம் கொண்டவராகக் காமராசர் விளங்கினார்; திருமணத்தை வேண்டாம் என்று கூறி நாட்டிற்காக வாழும் தியாக வாழ்க்கையைக் காமராசர் வாழ்ந்தார்.
விடுதலைப் போரில் தீவிரமாக பங்குபெறல்
காமராசர் காங்கிரசில் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி ஆகியவற்றில் உறுப்பினரானதுடன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1923-ஆம் ஆண்டு மதுரை நகரில் உள்ள கள்ளுக்கடைகளின் முன் மறியல் போராட்டம் நடத்திடத் தீர்மானித்து இம்மறியல் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றுச் சென்றார். இந்தியர்கள் தங்களின் பாதுகாப்புக்காகத் தங்களிடம் ஆறு அங்குலக் கத்தியை மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று ஆங்கிலேயர் சட்டம் போட்டபோது, அந்தச் சட்டத்தினை எதிர்த்துக் காமராசர் கையில் வாள் ஏந்தி ஊர்வலம் சென்றார்.
நாகபுரியில் ஆங்கிலேயர்கள் வாழும் பகுதியில் இந்தியர்கள், காங்கிரஸ் கொடியை எடுத்துச் செல்லக்கூடாது என்று எழுதப்படாத சட்டம் ஒன்றைப் போட்டிருந்தனர். அச்சட்டத்தினை எதிர்த்து நடந்த ஊர்வலத்திற்குத் தமிழ்நாட்டிலிருந்து தொண்டர் படையொன்றிற்குக் காமராசர் தலைமையேற்று நடத்திச் சென்றார்.
1928-ஆம் ஆண்டில் ‘சைமன்’ தலைமையில் இங்கிலாந்திலிருந்து கமிஷன் ஒன்று இந்தியாவிற்கு வந்தது. இந்தக் கமிஷனால் இந்தியர்களுக்கு எந்தவிதமான பலனுமில்லை என்று அறிந்து கொண்ட காமராசர் தொண்டர்கள் புடை சூழ கறுப்புக் கொடியைக் கையிலேந்திக் கொண்டு சைமன் கமிஷனே இந்திய நாட்டை விட்டு இங்கிலாந்து நாட்டிற்குத் திரும்பிப் போ என்ற கோஷத்தை எழுப்பியவாறு ஊர்வலம் சென்றார்.
1930-ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம் தொடங்கியபோது அப்போராட்டத்தில் கலந்து கொண்ட காமராசர் கைது செய்யப்பட்டு பெல்லாரி அருகில் உள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த சமயம் காமராசரின் பாட்டி இறந்துவிட்டார். பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள காமராசருக்கு அனுமதி அளிக்கப்பட்டும் கூட அவர் பரோலில் செல்ல மறுத்துவிட்டார். அதன் பின்னர் காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் அப்படையில் 1931-ஆம் ஆண்டு விடுதலையானார்.
1931-ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாடு தோல்வியுற்றதால் ஆங்கில அரசு காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்தது. காமராசரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். ஜாமீன் தொகை கட்டினால் விடுதலை செய்வதாக ஆங்கில அரசு கூறியது ஆனால் அதனைக் கட்டமுடியாது என்று காமராசர் சிறைதண்டனை பெற்றார். ஓராண்டு சிறைதண்டனை பெற்று பின்னர் விடுதலையானார். காமராசரை காங்கிரஸ் தொண்டர்கள் மேளதாளம் முழங்க தடபுடலாக வரவேற்றனர்.
1936-ஆம் ஆண்டு காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தலில் காமராசரின் அரசியல் குருவான சத்தியமூர்த்தி தலைவராகவும் காமராசர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது ஆங்கில அரசுக்கு மக்கள் யாரும் நிதி கொடுக்கக் கூடாது எனக் காந்தியடிகளும் காங்கிரஸ் தலைவர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க விருதுநகர்ப் பகுதியில் காமராசர் ஆங்கில அரசுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு மக்களிடம் பரப்புரை செய்தார். அதனால் காமராசர் கைது செய்யப்பட்டு வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டார். 1940 – ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பைக் காமராசர் 14 ஆண்டுகளுக்கு வகித்தார்.
1942-ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டு போராடினார். தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். காமராசரும் கைது செய்யப்பட்டார். மூன்றாண்டுகள் காமராசர் சிறைதண்டனைப் பெற்றார். அதன் பின்னர் 1945-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட காமராசருக்கு காங்கிரஸ் சார்பில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. காமராசர் எட்டாண்டுகளைச் சிறையிலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காமராசர் அதற்காக வருந்தவில்லை. அன்னையின் அடிமை விலங்கொடிக்கத் தனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பாகவே காமராசர் அதனைக் கருதினார்.
தமிழக முதல்வராதல்
1952-ஆம் ஆண்டு காமராசர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காமராசர் அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும் அவரை முன்மொழிந்த எம் பக்தவச்சலத்தையும் தனது அமைச்சரவையில் காமராசர் சேர்த்துக் கொண்டார். நாட்டின் நலமே பெரிது என்று கருதினார் காமராசர்.
கட்சித்தலைவர் என்ற வகையில் காமராசர் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்ற போதிலும் அவர் சட்டசபை உறுப்பினராகவோ மேல்சபை உறுப்பினராகவோ இல்லை, அதனர் இந்த இரு சபைகளில் ஒரு சபையில் வாயிலாக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் முதலமைச்சராகப் பதவி நீடிக்க இயலும் என்ற நிலை இருந்தது. அதற்காக காமராசர் குடியாத்தம் சட்டசபைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டசபை உறுப்பினரானார். அதன்பின்னர் முறையாக 1954-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் நாள் சென்னை மாகாண முதலமைச்சராகக் காமராசர் பொறுப்பேற்றார்.
காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்றபோதும் வீண் ஆடம்பரங்களுக்கோ, வீணான விளம்பரங்களுக்கோ இடமளிக்கவில்லை. நாட்டின் முன்னேற்றத்திலேயே பெரிதும் அக்கறை காட்டினார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று அக்கிராமத்திலுள்ள குறைகளையும் பிரச்சனைகளையும் நேரில் கண்டறிந்து அவற்றைப் போக்கப் புத்தம் புச் செயல்திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினார்.
கல்விக் கண் திறந்த காமராசர்
ஒருமுறை காமராசர் ஒரு கிராமத்தின் வழியே சுற்றுப் பயணத்தை மேற்கொண்டபோது சிறுவன் ஒருவன் ஆடுகளைத் தரிசுநிலத்தில் மேய்த்துக் கொண்டிருந்தான். அதனைப் பார்த்த காமராசர் தனது டிரைவரிடம் காரை நிறுத்துமாறு கூறிவிட்டு அதிலிருந்து இறங்கி அவனருகே சென்று,
“தம்பி! பள்ளிக்கூடம் போகலையா?” என்று கேட்டார். அதற்கு அச்சிறுவன், “எங்க ஊரிலே பள்ளிக்கூடம் இல்லை. அதனால போகலே” என்று பதிலளித்தான். அதற்குக் காமராசர், “பள்ளிக்கூடமட் இருந்தால் படிப்பியா?” என்று கேட்க, அச்சிறுவனோ, “பள்ளிக்கூடத்துக்குப் போனா மதியானத்துக்கு யாரு சோறு தருவா?” என்று காமராசரைப் பார்த்துக் கேட்டான்.
அதிர்ந்து போன காமராசர், அச்சிறுவனைப் பார்த்து, “சோறுபோட்டாப் படிப்பியா?” என்று கேட்டார். அதனைக் கேட்ட சிறுவன், “ம்….படிப்பேன்” என்றான்.
அச்சிறுவன் கூறியதிலிருந்து படிக்கப் பள்ளியும் மதிய உணவும் போட்டால் கல்வி கற்கச் சிறுவர்கள் வரக்கூடும் என்பதை உணர்ந்து, சென்னை திரும்பியதும் திட்டம் தீட்டினார் அதன்படி 1956-ஆம் ஆண்டு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் வாயிலாக இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார். 1957-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர்த் தொகுதியில் நின்று வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் காமராசர். காமராசரின் சாதனைகள் பலவாறு தொடர்ந்தது
1960-ஆம் ஆண்டிலிருந்து ஒன்றாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதிவகுப்பு வரையில் இலவசக் கல்வியினைக் காமராசர் கொண்டு வந்தார். மேலும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு மனதில் ஏற்படக்கூடாது என்ற காரணத்திற்காக இலவசச் சீருடை வழங்கும் திட்டத்தினையும் காமராசர் கொண்டு வந்தார்.
இத்திட்டங்களால் தமிழகம் கல்வியில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தினைப் பெற்றது, பள்ளிகளே இல்லாத ஊர்கள் இல்லை என்ற நிலையினை இவர் உருவாக்கியதால்தான் இவரைக் கல்விக்கண் திறந்த காமராசர் என மக்கள் போற்றினர்.
தமிழக முன்னேற்றம்
காமராசர் கல்வியில் மட்டுமல்லாது தொழிற்துறையிலும் தமிழகத்தை முன்னேற்றி மகாராஷ்டிரத்திற்கு அடுத்த நிலையில் கொண்டுவந்தார். அதேபோன்று வேளாண் துறையில் பஞ்சாப்பிற்கு அடுத்த இடத்தில் தமிழகத்தைக் கொண்டு வந்தார்.
சாத்தனூர் அணை, வைகை அணை, அமராவதி அணை, ஆரணியாறு, வாலையார், கிருஷ்ணகிரி, லோயர் பவானி, புள்ளம்பாடி, கோமுகி, பேச்சிப்பாறை, ஆழியாறு, பரம்பிக்குளம், நீலகிரி குந்தா எனப் பற்பல அணைகளைக் கட்டித் தமிழகத்தில் காமராசர் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டார்.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், கிண்டி தொழிற்பேட்டை, சிமெண்ட் ஆலைகள், காகித ஆலைகள், அலுமினிய உற்பத்தி ஆலைகள், மாக்னைசட், சுண்ணாம்புக்கல் சரங்கங்கள், இரயில் பெட்டித் தொழிற்சாலைகள், எண்ணூர், தூத்துக்குடி மின்நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்திட்டங்களை உருவாக்கி தமிழகத்தை முன்னோடி மாநிலமாக முன்னேற்றினார்.
வட இந்தியாவிலிருந்து இரவு நேரத்தில் விமானத்தில் பயணம் செய்யும்போது கீழே ஒளி வெள்ளமாகத் தெரிந்தால் அது தமிழகம் என்பதை உணர்த்திடும் வகையில் தமிழகத்தை மின் விளக்குகளால் காமராசர் ஒளிரச் செய்தார்.
கன்னியாகுமரி முதல் சென்னை வரை சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இதனால் தொழில் வளர்ச்சி முன்னேற்றம் கண்டது. நாமக்கல் லாரித் தொழிலுக்கு மட்டுமல்லாது கோழி வளர்ப்பு முட்டைத் தொழிலிலும் நல்ல வளர்ச்சி அடைந்தது.
சாத்தூர், சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் தீப்பெட்டித் தொழில், காலண்டர் தொழில், பட்டாசுத் தொழில் எனப் பல்வகைத் தொழிற்சாலைகளின் வாயிலாகக் குட்டிச் ஜப்பான் என்ற பெயர் ஏற்படுமாறு காமராசர் செய்தார். திருப்பூர் பனியன் தொழில், கோயம்புத்தூர் நூற்பாலைத் தொழில் என உலகப் புகழ்பெற்ற வகைகளில் தொழில் வளத்தை மேம்படச் செய்தார். தனது அமைச்சர்களை நாட்டின் முன்னேற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு முடுக்கிவிட்டார். 1957-58-ஆம் ஆண்டு பட்ஜெட்டினை முதன் முதலில் தமிழில் காமராசர் சமர்ப்பித்தார். எந்தவிதமான சுயநலமுமின்றி தொண்டாற்றினார் காமராசர். காமராசர் பொற்கால ஆட்சி நடத்தினார். அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்தியப் பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்.
கேபிளான்
சிறந்த நல்லாட்சியை வழங்கியதால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வளவும் செய்த அவர் அடுத்து செய்த காரியம் அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணத்தை கற்றுத் தந்தது. காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர் எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டு நலனுக்காக கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி பிரதமர் நேருவிடம் அளித்துப் பரிந்துரை செய்தார். அத்திட்டமே காமராசர் திட்டம் அதாவது கேபிளான் என்று அழைக்கப்பட்டது.
இரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை காங்கிரஸ் பணிக்குழு ஏற்றுக்கொண்டது. அந்தத் திட்டத்திற்கு ‘காமராஜர் திட்டம்’ என்றே பெயரிடப்பட்டது. தனது திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் நாள் காமராசர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜகஜிவன்ராம் மொரார்ஜிதேசாய், எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர். அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பைக் காமராசருக்கு ஜவகர்லால் நேரு கொடுத்தார்.
கிங்மேக்கர் காமராசர்
அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்தார். நேருவின் மறைவினைக் கேட்ட காமராசர் நேருவின் மறைவிற்காகக் கண்கலங்கினார். நேருவிற்குப் பின்னர் யார் பிரதமர் என்ற வினா அனைவரது உள்ளத்திலும் உருவெடுத்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை காமராஜர் தேர்ந்தெடுத்தார்.
இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். அந்த இரண்டு தலமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை ‘கிங்மேக்கர்’ என்று பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும் அழைத்தனர். காமராசர் நெனச்சிருந்தா தாமே பாரதப் பிரதமாராகக் கூட ஆகியிருக்கலாம்…ஆனால் அவரு பதவிய விரும்பல..நாட்டின் முன்னேற்றத்தையே விரும்பினார்.. பாரத நாட்டைப் பலவகையிலும் உயர்த்த எண்ணினார். அதனாலதான் காமராசர் சரியானவங்களாப் பார்த்துப் பிரதமராத் தேர்ந்தெடுத்தார்…
1967-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கெனப் பொதுத்தேர்தல் நடைபெற்றபோது காமராசர் விருதுநகர்த் தொகுதியில் வேட்பாளராக நின்று தோற்றார். அப்போது அவரிடம் பலரும் வந்து, “தலைவரே நீங்களே தோத்துப் போயிட்டீங்களே!” என்று வருந்தினர். ஆனால் காமராசர் துளிகூட வருந்தவில்லை. அவர்களைப் பார்த்து, “இதுதான் ஜனநாயகங்குறேன். இதுக்காக வருத்தப்படக்கூடாதுன்னேன்” என்றார். தோல்வியைக் கூடப் பெருந்தன்மையாகக் காமராசர் ஏற்றுக் கொண்டார்.
ஏழை பங்காளர்
ஒருமுறை காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தனது வீட்டில் நடக்கும் திருமணத்திற்கு வருகை தந்து அதனைத் தலைமைதாங்கி நடத்தித் தரவேண்டும் என்று வற்புறுத்தினார். அத்தொண்டர் ஏழை. நல்லவர். அவரைப் பற்றி நன்கு காமராசருக்குத் தெரியும். இருப்பினும் அத்தொண்டரின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். தனது வீட்டில் நடைபெறும் திருமணத்திற்கு காமராசர் வர மறுத்துவிட்டாரே என்று அந்தத் தொண்டர் பெரிதும் வருந்தினார். இந்நிலையில் திருமணம் நடைபெறும் நாளன்று அத்தொண்டரின் வீட்டிற்குச் சென்று காமராசர் அத்தொண்டரை இன்பத்தில் ஆழ்த்தினார்.
மற்றவர்கள், “ஏன் அத்தொண்டரிடம் முதலில் வர மறுத்தீர்கள்” என்று வினவியதற்கு, “நான் வருவதாகக் கூறியிருந்தால் அவர் கடன் வாங்கிச் செலவு செய்திருப்பார். இதனால் அவருக்கு வீண் செலவும் கடனும் ஏற்படும். அவரைக் கடனாளியாக்கக் கூடாதே என்பதற்காகத்தான் நான் வரமறுத்தேன்” என்றார். பாத்துக்கிட்டீங்களா ஏழைத்தொண்டன் தன்னால் பாதிப்புக்குள்ளாகக் கூடாதேன்னு நெனச்ச ஏழைபங்களானகக் காமராசர் திகழ்ந்தார்.
ஒருமுறை காமராசர் டெல்லிக்குச் சென்று நேருவைச் சந்தித்தார். நேரு அவர்கள் காமராசரை அழைத்துக் கொண்டு ஒரு கண்காட்சியைத் திறந்து வைப்பதற்கு தன் சகாக்களுடன் சென்றார். அக்கண்காட்சியில் எடை பார்க்கும் இயந்திரம் இருந்தது. அதில் வந்திருந்தோர் அனைவரும் நேரு உள்பட நாணயத்தைப் போட்டு தங்களது எடையினைப் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் காமராசர் மட்டும் பேசாமல் இருந்தார்.
எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தபோது நேரு, “காமராசரிடம் எடைமெஷினில் போடுவதற்குக்கூட சட்டைப் பையில் காசிருக்காது. அதனால்தான் அவர் எடைமெஷினில் ஏறி எடை பார்க்கவில்லை” என்று கூறிவிட்டு காமராசருக்காகத் தான் எடைமெஷனில் காசு போட்டுவிட்டுக் காமராசரை எடை பார்க்குமாறு கூறினார். அங்கிருந்த அனைவரும் காமராசரின் எளிமையைக் கண்டு வியந்து தென்னாட்டுக் காந்தி என்று கூறி அவரைப் போற்றினர். காந்திய வழியிலேயே நடந்து காந்தியின் மறு உருவமாகவே காமராசர் வாழ்ந்தார். பார்த்துக்குங்க அரசியலில் எளிமை, நேர்மை, தூய்மை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாகக் காமராசர் திகழ்ந்தார்.
தியாக தீபம் அணைந்தது
தமிழ்நாட்டில் அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் பொற்கால ஆட்சியை தந்த காமராஜர், இந்தியா பலதுறைகளில் முன்னேறவும் தோன்றாத் துணையாகத் திகழ்ந்தார். காமராசர் தனது இறுதி மூச்சு வரை சமூகத்தொண்டு செய்வதிலேயே குறியாக இருந்தார். இந்தியாவிலும் தமிழகத்திலும் காமராசரைப் பெருந்தலைவர் என்றும் கர்மவீரர் என்றும் அன்போடு அழைத்தனர் இவ்வாறு அழைக்கப்பட்ட காமராசர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் தனது 72-ஆவது வயதில் அனைவரையும் கண்ணீர்க்கடலில் ஆழ்த்திவிட்டுக் காலமானார். தியாக தீபமாக ஒளிந்த பாரதத் திருவிளக்கு அணைந்தது. இந்தியா துன்ப இருளில் மூழ்கியது. மக்கள் கண்ணீர்க் கடலில் தத்தளித்தனர்.
கட்சி வேறுபாடின்றி காமராசரின் உடலுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இராஜாஜி மண்டபத்திலிருந்து பெருந்தலைவரின் இறுதி ஊர்வலம் காந்தி சமாதியை அடைந்தது. கர்மவீரரின் பூத உடல் சந்தனக் கட்டைகளின் மீது வைக்கப்பட்டது. இருபத்தோரு குண்டுகள் முழங்க காமராசரின் சகோதரியின் மகன் கனகவேல் காமராசரின் சிதைக்குத் தீமூட்டினார். இதனைக் காணப்பொறாத பிரதமர் இந்திராக் காந்தி கதறிக் கண்ணீர் சிந்தினார்.
அதற்கு அடுத்த ஆண்டு காமராசருக்கு இந்திய அரசு “பாரத ரத்னா” விருது வழங்கிச் சிறப்பித்தது. காமராஜர் சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை. ஆம்! காமராஜர் திருமணமே செய்து கொள்ளவில்லை. மேலும் சிறு வயதிலேயே கல்வியைக் கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்கக் கற்றுக்கொண்டார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டில்தான் வாழ்ந்தார்.
தன் குடும்பம் என்பதற்காக தன் தாய்க்குக்கூட எந்தச் சலுகையும் காமராசர் வழங்கியதில்லை. காமராஜர் இறந்தபோது அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா? சில கதர் வேட்டி, சட்டைகளும், சில புத்தகங்களும்தான். பதவிக்குரிய இறுமாப்பு, ஆடம்பரம் ஆகியவை எப்போதும் காமராஜரிடம் இருந்ததே இல்லை. எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை இன்றுவரை மக்கள் தங்களின் ஒப்பற்ற தலைவராக மனதிற்குள் வைத்துப் போற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். உலகம் உள்ளளவும், உலக வரலாறு உள்ளளவும் பெருந்தலைவரின் புகழ் நிலைத்திருக்கும். அவரது வரலாறு அனைவருக்கும் வழிகாட்டும் அணையா விளக்காக என்றும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.
நம்மைப் போன்றவங்களுக்கு காமராசரின் வாழ்க்கை ஒரு கைவிளக்கு. அவரோட வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி அனைவரும் வாழ்ந்து நாட்டை முன்னேற்றணும்..அதுதான் நாம அவருக்குச் செலுத்தும் நன்றிக்கடன்னு சொல்லலாம்… அந்தத் தானைத் தலைவரின் வாழ்க்கைப் பாதையில் பயணித்து வெற்றியடைவோம்…என்னங்க சரிதானே…
என்னங்க அப்படியே அமைதியா இருக்கறீங்க.. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்லங்கறதையும்; விடாமுயற்சியினாலும், தன்னலமில்லாத் தியாகத்தினாலயும் தான்ங்கறதை இப்பத் தெரிஞ்சிக்கிட்டு இருப்பீங்கன்னு நெனக்கிறேன்.. அப்பறம் என்ன ஒங்களுக்குன்னு ஒரு இலக்கைத் தேர்ந்தெடுத்து அதுல வெற்றிகரமா முன்னேறுங்க…வெற்றிக் கனி ஒங்களுக்குத்தான்…
ஏழ்மையான குடும்பத்துல பிறந்து இன்னக்கித் திருப்பூர்னு சொன்ன உடனே நம்முடைய உள்ளத்துல வந்து நிக்கிற ஒருத்தரு யாருன்னு ஒங்களுக்குத் தெரியுமா….? திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கு மட்டும் புகழ் பெற்றதில்லை….தியாகத்திற்கும் புகழ்பெற்றது… நம்ம தேசியக் கொடிய நெனச்சவுடனே நமக்கு ஒருத்தரப் பத்தி நினைவு கண்டிப்பா வரும் யாருன்னு தெரியுதா….நம்ம தேசியக் கொடிய இரத்தம் சிந்தக் காத்து பாரத்தத் தாயின் மிகச் சிறந்த தியாகப் புதலவனாத் திகழ்ந்து புகழ்பெற்றாரு ஒருத்தரு…யாருன்னு ஒங்களுக்கு நினைவுக்கு வருதா…என்னங்க தலையைச் சொரியிரீங்க…சரி…சரி நல்லா யோசிங்க…. அடுத்தவாரம் பார்ப்போம்…….
(தொடரும்………39)
- மருமகளின் மர்மம் 8
- சைனா அனுப்பிய முதல் சந்திரத் தளவூர்தி நிலவில் தடம் வைத்து உளவு செய்கிறது.
- இயற்கையைக் காப்போம்
- தேவயானியும் தமிழக மீனவனும்…
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 30 (நிறைவுப் பகுதி)
- பாசத்தின் விலை
- அதிகாரி
- மேடம் ரோஸட் ( 1945)
- அன்பு மகளுக்கு..
- தாகூரின் கீதப் பாமாலை – 94 வசந்த காலப் பொன்னொளி .
- கடற்கரைச் சிற்பங்கள்
- திண்ணையின் இலக்கியத் தடம்-14
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 54 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) காத்திருக்கிறாள் எனக்கோர் மாதரசி ..!
- மறந்து போன நடிகை
- சென்னை புத்தகத் திருவிழாவிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி. நாள்: 22-12-2013, ஞாயிறு
- காரணமில்லா அச்சவுணர்வு PHOBIA
- சொந்தங்களும் உறவுகளும்
- ஜாக்கி சான் 21. ஹாங்காங் பயணம் – பழைய நினைவுகள்
- புகழ் பெற்ற ஏழைகள் 38.கருப்புக் காந்தி எனப் போற்றப்பட்ட ஏழை…
- சீதாயணம் நாடகம் -12 படக்கதை -12
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-14 சிசுபால வதம் இரண்டாம் பகுதி
- “ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்” கட்டுரைக்கு எதிர்வினை
- குழந்தைகளும் தட்டான் பூச்சிகளும்
- நீங்காத நினைவுகள் – 26 –