உடைபட்ட மகாபாரதம் – ப.ஜீவகாருண்யனின் “கிருஷ்ணன் என்றொரு மானுடன்” நாவலை முன்வைத்து

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

jeevaKaurnyan

தொன்மங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்துதல் என்பது நவீன  இலக்கியத்தின் ஒரு கூறாகவே தற்போது இருந்து வருகிறது. அவற்றைக் கட்டுடைத்துப் பார்த்து அப்படி உள்ளே புகுந்து பார்ப்பதன் வழியாய் இந்தச் சமூகத்துக்கு ஏதேனும் நல்ல கருத்துகள் கிடைக்குமா என்பதே ஒரு தேடல் முயற்சியாகும். புதுமைப் பித்தனின் ’ சாப விமோசனம் ‘ தொடங்கி இம்முயற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது.

ஆனால் இது நவீன இலக்கியப் படைப்பாளிக்கு பெரும் சவால்தான் என்பதில் ஐயமில்லை. அந்தச் சவாலில் ஜீவகாருண்யன் வெற்றி பெற்றுள்ளார் என்பதைத்தான் அவரின் சமீப வெளியீடான ‘’கிருஷ்ணன் என்றொரு மானுடன்’’ தெளிவாகக் காட்டுகிறது.

பீமனுக்கும் இடும்பி என்ற காட்டுவாசிப் பெண்ணுக்கும் பிறந்தவன்தான் கடோத்கஜன். அவன் பாண்டவர் பக்கம் இருந்து குருச்சேத்திரப் போரில் ஈடுபடுகிறான். பதினெட்டு நாள்கள் நடந்த போரில் ஒரு நாள் இரவிலும் போர் நடைபெறுகிறது. அன்றைய இரவில் கடோத்கஜனை யாராலும் வெற்றிபெற முடியவில்லை. கடைசியில் அர்ச்சுனனுக்காக வைத்திருந்த வேலைக் கர்ணன் ஏவ கடோத்கஜன் மாண்டு போகிறான்.

தருமன் முதற்கொண்டு அனைவரும் துக்கத்தில் தவிக்கையில்    ஜீவகருண்யனின் கிருஷ்ணன் பேசுகிறான்.

”அந்த விசித்திர ஆயுதம் அர்ச்சுனனுக்குப் பதிலாக—தவறுதலாக கடோத்கஜனைப் பலி கொண்டு நமக்கு நன்மை செய்திருக்கிறது. கர்ணனிடமிருந்து அர்ச்சுனனைப் பாதுகாத்துக் கொடுத்திருக்கிறது. உங்கள் வருத்தம் கடோத்கஜனுக்காகவா? கடோத்கஜன் பீமனின் மகன்தான் ஆனாலும் காட்டு மனிதன்தானே? யாகத்தில் விருப்பமில்லாத, பிராமணர்களை வெறுக்கின்ற காட்டரக்கர்களில் ஒருவன் கொல்லப்பட்டதற்காக யாராவது கவலைப்படுவார்களா?’ கர்ணனிடமிருந்து அர்ச்சுனன் தப்பித்தான் என்று’ சந்தோஷம் கொள்ளுங்கள். இது புலம்பலுக்கான நேரமல்ல! இது குதூகலித்துக் கொண்டாடவேண்டிய நேரம்”

இப்பேச்சைகேட்டு பீமன் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அர்ச்சுனன் கிருஷ்ணனைக் கடிந்து பேசுகிறான்.

”பீமனின் மூலம் காட்டுப் பெண்ணுக்குப் பிறந்த கடோத்கஜனும் மனிதன்தானே? பிறகு ஏன் உனக்கு இந்த ஓரப் பார்வை? கரையான்கள் கூட தங்களுக்கு இரையாகும் மரங்களில் பேதம் பார்ப்பதில்லை. ஆனால் மானிட கிருஷ்ணன் நீ கரையான்களிலும் கேவலப்பட்டுவிட்டாய்”

இப்பேச்சில் கவனிக்க வேண்டியது மானிடன் என்ற வார்த்தைதான். நாவல் முழுதுமே கிருஷ்ணனை மனிதனாகக் காட்டுகிறார் ஜீவா. ’மனிதன் என்றால் அவன் மனத்தில் இன்று தீண்டாமையும் ஜாதி வித்தியாசம் பாராட்டலும் தாராளாமாய்க் குடி கொண்டுள்ளன’ என்பதைக் காட்ட இச் சூழலை அவர் அற்புதமாய்ப் பயன் படுத்திக் கொண்டுள்ளார்.

இதை மேலும் வளர்க்க அவர் மேலும் ஒன்றைக் காட்டுகிறார். காட்டுவாசியான கடோத்கஜனுக்கு வீர சொர்க்கமும் மறுக்கப் படுகிறது. அரவான் மற்றும் அபிமன்யு ஆகியோரின் மரணங்களுக்குக் கொடுத்த மரியாதை கடோத்கஜனுக்குக் கொடுக்கப்படவில்லை. அந்த உடல் புதைப்பதற்கும் எரிப்பதற்கும் கூட எந்த மயானமும் இடம் கொடுக்கவில்லை. அதைத் தூக்கக் கூட கழுதை வண்டிகளும் பிணந்தூக்கிகளும் வராததால் அது கழுகுகள் கொத்திப் பிடுங்கக் காத்திருந்தது.

ஜீவகாருண்யணின் பொதுவுடைமைச் சிந்தனையும் மனித நேயமும் பாரதம் என்ற இதிகாசத்தைக் கட்டுடைத்து இக் காலத்திற்கேற்றவாறு பார்க்கிறது. அது இன்றையத் தேவையாகிறது. நாவல் முழுதுமே ஜீவா இதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கண்ணன் பல பெண்களை மணந்து கொள்கிறான். அதைக் குற்றமாகப் பலர் பேசுகின்றனர். ஆனால் கண்ணனைப் பொருத்தவரை அவனின் செயல் அவனுக்கு நியாயமாகப் படுகிறது. தனது வாதத்தை அவன் முன் வைக்கிறான்.

”ஒவ்வொரு பெண்ணையும் மனைவியாகக் கைப்பிடிக்க கிருஷ்ணன் நான் பட்ட சிரமங்களை உணராதவர்கள் பொறாமையினால் ஏதோ பேசுகிறார்கள். பேசுபவர்கள் ஒற்றை மனைவியுடன் கூட ஒற்றுமையாய் வாழும் சூத்திரம் அறியாதவர்கள்”

இதைப் படிக்கும்போது கண்ணதாசன் எழுதிய “ஜெயிக்கும் கட்சியிலே சேரத் தெரியாதவர்கள் போராடுவோர் பக்கம் சேர்ந்து புத்தி இழந்தவர்கள்” என்ற சிவகங்கைச் சீமை வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

மேற்கண்ட கூற்றில் கூட கிருஷ்ணன் பேசும்போது “கிருஷ்ணன் நான்” என்று பேசுகிறான். பெரும்பாலும் தன்மை வழக்கில் ஒருவர் பேசும்போது தன்பெயரைச் சொல்வதில்லை. ஆனால் இந்நாவலில் பல பாத்திரங்கள் தன் பெயரைத் தானே சொல்லித்தான் பேசுகின்றன. பக்கம்185—இல் ’துரியோதனன் நான்’ என்றும் பக்கம் 195-இல் ’யுதிஷ்டிரன் என்’ என்றும் வருவதை உதாராணங்களாகக் கூறலாம். இது கொஞ்சம் இடறலாகத்தான் இருக்கிறது.

ஜீவகாருண்யனின் கடுமையான உழைப்பு நாவல் முழுதும் தெரிகிறது ஏனெனில் தொன்மம் பற்றிய புதினம் எழுதும்போது அக்காலத்திய பெயர்கள், உணவு முறைகள், ஆடைகள் முதலியவற்றை மாறாமல் நாம் சொல்லியாக வேண்டும். அந்த விதத்தில் ஜீவா தன் பணியைச் சரியாகச் செய்திருக்கிறார்.

சத்தியபாமா குளித்துவிட்டுப் போர்க்களத்துக்குப் போகப் போகிறாள். அவள் அணியும் ஆடைகளைப் பற்றி ஆசிரியர் எழுதுகிறார்.

”வாஸ் என்னும் உள்ளாடைக்கு மேலாக நிவி என்னும் ஆடையை இடுப்பில் அணிந்த பாமா வாசனைத் திரவியங்களுக்கு வாய்ப்பற்றுப் போன தனது கனத்த மார்பகங்களை அதிவாஸ் என்னும் ஆடையால் மூடி மறைத்தாள்”

சில உவமைகள் அந்தந்த இடத்திற்குப் பொருத்தமாய் வந்து விழுந்திருக்கின்றன. நண்டின் குஞ்சுகள் தாய் நண்டின் வயிற்றைக் கிழித்துத்தான் வெளியே வரும். அப்படி குஞ்சுகள் வெளியே வந்தவுடன் தாய் நண்டு இறந்து விடும்.தன் மரணத்தை அறிந்த பீஷ்மர் கூறுகிறார்.

”தாய் நண்டின் வயிற்றைக் குஞ்சுகள் கிழிப்பது போல் அர்ச்சுனனின் அம்புகள் இப்போது என்னைக் கிழிக்கின்றன”

அதேபோல பீஷ்மர் தன் இறுதித் தருவாயில், கர்ணனை அழைத்து, “கர்ணா, நதிகளுக்குச் சமுத்திரம் போல, விதைகளுக்கு மண்ணைப் போல நீ நண்பனுக்கு மாறாத ஆதாரமாக விளங்குபவன்” என்கிறார்.

கடலில் கலந்த நதி பிரிக்க முடியாததாகி விடுகிறது. விதையும் மண்ணும் அதேபோல் ஒன்றை ஒன்று சார்ந்து உயிர் வாழ வேண்டியவை. இவ்வாறு பல இடங்களில் உவமைகள் மிகவும் பொருந்தி வருகின்றன.

பெண் பாத்திரங்களை வர்ணிப்பது எளிது. ஆனால் ஆண் பாத்திரமான திருஷ்டத்யும்னனை ஜீவா சிறப்பாக எடுத்துக் காட்டுகிறார்.

”பரந்து விரிந்த மார்புப் பரப்பும், திரண்டுருண்ட தோள்களும், வடித்தெடுத்து வார்த்தது போன்ற வட்ட முகத்தில் முறுக்கி மேலோங்கிய மீசையும், முனைப்பு மிகுந்த கண்களும் துலங்க, கழுத்தில் இழைகள் மிகுந்த பொன் ஆரத்தின் இடையே இரத்தினப் பதக்கம் மினுங்க, அகன்ற நெற்றிப் பரப்புக்கு மேலாக அழகிய முத்துப் பட்டயமும், புஜங்களில் வைடூரியக் காப்புகளும், இறுகப் பிடித்த ஒட்டியாணத்தின் வழியில் பளபளக்கும் மஞ்சள் அந்தரீயமும், மஞ்சளை மேன்மைப்படுத்தும் நிறத்தில் அகன்ற பச்சை உத்தரீயமும் அணிந்து வந்தான்’ என்பதாக அவர் எழுதுகிறார்.

தான் எடுத்துக் கொண்ட நோக்கத்துக்கேற்ப மகாபாரதத்தில் அவர் பலமாற்றங்களையும் செய்துள்ளார். பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் தேவர்களுக்குப் பிறந்தவர்கள் அல்லர். புத்திர பாக்கியத்தை நிறைவேற்றிக் கொள்ள இமயமலைச் சாரலில் குந்தியும் மாத்ரியும் மனிதர்களுடன் கூடித்தான் அவர்களைப் பெற்றார்கள் என்று இந்த நாவல் கூறுகிறது. மேலும் தருமன் தனக்குப் பிறந்தததாக விதுரனே ஒரு கட்டத்தில் சொல்கிறான். இவ்வாறு செல்லும் கதைப் போக்கு மூல மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் தன் கையில் வைத்திருந்த சக்கராயுதத்தையும் அடியோடு மாற்றிப் போடுகிறது.

அதாவது கண்ணன் ப்ரவர்ஷ்ன மலைப் பகுதியில் மறைந்து வாழ நேரிடுகிறது. அப்போது அங்கிருந்த காட்டரசனின் மகள் கண்ணன் மீது காதல் வயப்பட்டு தங்களிடம் இருந்த ஒரு விசித்திர ஆயுதத்தைக் கண்ணனுக்கு கற்றுக் கொடுக்கிறாள். அது குறி வைத்த மிருகத்தைத் தவறாமல் தாக்கி வீழ்த்திப் பின் மீண்டும் எய்தவரிடமே வந்துவிடும் தன்மை கொண்டதாக இருக்கிறது. அதில் நன்கு தேர்ச்சி பெற்ற கண்ணன் அதை வட்ட வடிவமுள்ளதாக மாற்றுகிறான். அதைச் சக்கராயுதம் என்ற பெயரில் தன் கையில் வைத்துக் கொள்கிறான். இது பொருத்தமாகவும் உள்ளது.

கண்ணன் மானிடனாகவே படைக்கப் பட்டிருப்பதால் அவன் மகேஷ்வர ஜுரம் எனும் நோய்க்கு இருமுறை ஆளாகிறான். அது மட்டுமன்று; சாதாரண மனிதர்களுக்குண்டான குணங்கள் எல்லாம் அவனுக்கு இருக்கின்றன. ”திரவுபதியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டு அவளைத் தன் பேரனுக்காக ஜராசந்தன் கவர்ந்து கொண்டு செல்லப் போகிறான்.எனவே நாம் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வேண்டாம்” எனப் பலராமன் கிருஷ்ணனுக்கு ஆலோசனை கூறுகிறான். கிருஷ்ணனும் ஒப்புக் கொள்கிறான். ஆனால் சுயம்வரத்தில்  திரவுபதியின் அழகைப் பார்த்தவுடன், அவள் மீது அவனுக்கு ஆசை வருகிறது.

“அடடா, அண்ணன் கட்டளைக்கு ஆட்பட்டு அரியதோர் பொக்கிஷத்தைத் தவற விட்டு விட்டோமே,     தவறிழைத்து விட்டோமே”

என்று வருந்தி அண்ணன் மீது கோபம் கொப்பளிக்கும் அளவுக்கு அவன் மனநிலை இருக்கிறது. மனிதன் என்று வந்துவிட்டால் எல்லாவித ஆசாபாசங்களும் வந்து தானே தீரும். பெரும்பாலும் ஜீவகாருண்யன் அதீத கற்பனைகளையெல்லாம் மிகச் சாதாரணமானதாக மாற்றுகிறார். பீமன் மரக்கிளையால் பல் துலக்குவான், பகாசூரனுக்கு வண்டி நிறைய எடுத்துச் சென்ற உணவை பீமனே உண்டான். சூரனைப் பனை மரத்தைப் பிடுங்கி அடித்தான் என்பதெல்லாம் இயல்புக்கு மீறியதாய் சூதர்களால் பாடப்பட்ட கற்பனை என்று ஜீவகாருண்யன் காட்டியிருப்பது இந்நூலுக்குக் குறிப்பாக அவர் எடுத்துக் கொண்ட கருவிற்கு மிகவம் பொருத்தமாக இருக்கிறது

கம்சனின் தங்கை தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நேரிடும் என்று மூல பாரதத்தில் அசரீரி சொல்வதை இவர் ஒரு நிமித்தகன் சொல்வதாய் மாற்றியிருக்கிறார். ஆனால் தொன்மம் எல்லாவற்றையும் மாற்ற அனுமதிப்பதில்லை. அதனால்தான் இன்னும் அது தொன்மமாக இருக்கிறது

மாற்றமுடியாதவற்றை எல்லாம் சிலப்பதிகாரத்தில் பிரச்சனைக்குரிய இடங்களில் ஊழைக் கொண்டு இளங்கோ தப்பிப்பதைப்போல ஜீவா யாரோ சொன்ன கதை என்று சுலபமாகத் தாண்டி விடுகிறார்.

எடுத்துக் காட்டாக ஜராசந்தன் இரண்டு குறை உடல்களாகப் பிறந்து ஒன்றாக்கப் பட்டவன் என்பதை மாற்ற முடியவில்லை. அதேபோல பாரதப் போர் தொடங்கும் முன் கிருஷ்ணன் சொன்ன பகவத் கீதையின் கருத்துகளையும் விட்டுவிடமுடியவில்லை. எல்லாவற்றையும் சொல்லி விடவேண்டும் என்று ஆர்வம் காடாமல் அவர் சில நிகழ்ச்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

இரண்டு பக்கங்களிலும் படைகளை நிறுத்தியபின் அர்ச்சுனன் மனம் சஞ்சலப்பட்டபோது ”நான் கடவுளின் அவதாரம்! என்னை புறக்கணிப்பவர் தவறாமல் நரகமடைவர்” என்று கிருஷ்ணனே சொல்வது மையக் கருவைக் கொஞ்சம் இடிக்கத்தான் செய்கிறது. சில இடங்களில் காமக் காட்சிகள் சாண்டில்யன் காட்டுவதை விட அதிகமாகத்தான் இருக்கின்றன. ஆனால் அவை கதையின் போக்கில் அச்சூழலுக்குத் தேவையாய் இருப்பதால் விரசமாக இல்லை.

மகாபாரதம் மிகப்பெரிய கதை. பல பாத்திரங்கள் பல நாடுகள். எல்லாவற்றையும் ஆராய்ந்து இந்நூலைக் கொடுத்துள்ள ஜீவகாருண்யன் பாரட்டுக்குரியவர். தான் மேற்கொண்ட நோக்கம் சிதையாமல் கடும் உழைப்பில் அவர் அளித்துள்ள இந்நூல் மகாபாரதத்தை மறுவாசிப்புக்குள்ளாக்கி பல்வேறு சிந்தனைகளைத் தூண்ட வழி வகுக்கிறது என்ற வகையில் இது ஒரு முக்கியமான வரவு என்றுதான் சொல்ல வேண்டும்.

{ கிருஷ்ணன் என்றொரு மானுடன்—–ப. ஜீவகாருண்யன்; சீதை பதிப்பகம், சென்னை-  600 005;  பேசி: 9790706549,  9790706548 ]

Series Navigationமருமகளின் மர்மம் 9சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’இடையனின் கால்நடை
author

வளவ.துரையன்

Similar Posts

3 Comments

 1. Avatar
  ஷாலி says:

  இந்நாவலுக்கு அணிந்துரை எழுதிய திசைஎட்டும் ஆசிரியர் குறிஞ்சிவேலன் அவர்கள் இதிகாசங்களை கட்டுடைக்கும், பிறமொழியில் வெளிவந்த நாவல்களை வரிசைப்படுத்துகிறார்.அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்.இந்த வகையில் இராம காவியத்தில் சீதை பட்ட துன்பங்களை ‘சீதாயணம்” தொடரில் திரு.ஜெயபாரதன் எழுதி வருவது நாம் அறிந்ததே.ஆசிரியர் குறிஞ்சி வேலன் கூறுவதைக் கேட்போம்.

  “புராணங்களையும் இதிகாசங்களையும் மறு வாசிப்புக்கு உட்படுத்தி பல்வேறு மௌனங்களுக்கு விடை தேடும் முயற்சிகள் இன்று இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நடந்து வருகின்றன.

  அந்த வகையில் நம் பாரதத்தின் இரு பெரும் இதிகாசங்களாகக் கருதப்படும் மகாபாரதமும் இராமாயணமும் மறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு பல சோதனை முயற்சிகள் தொடர்கின்றன. பாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான கிருஷ்ணனின் மகன்களில் ஒருவனான சாம்பன் பற்றிய நாவல் ஒன்று, வங்க மொழியில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு சாகித்ய அகாதமி விருதும் வேறு பல பரிசுகளும் கிடைத்துள்ளன.

  மராத்தியில் ம்ருத்தியுஞ்செய என்னும் பெயரில் மகாபாரத நாவல் வெளிவந்துள்ளது. இது மகாபாரதத்தின் கர்ணனை முன்னிலைப்படுத்தி, அவனுடைய பார்வையில் மகாபாரதக் கதைப் போக்கு செல்கிறது. மிகவும் அற்புதமான பல புதிய கோணங்களைத் திறந்துவிடும் இந்த நாவலும் மராத்திய மொழியில் இலக்கிய உன்னத நிலையை அடைந்துள்ளது.
  அதேபோல் யுகாந்தா என்னும் நாவலும் மராத்திய மொழியில் வெளியாகியுள்ளது

  சூதர்கள் வாய்மொழியாகப் பாடித் திரிந்த மகாபாரதக் கதையை வியாசர் காப்பியமாக விரிவாக்கி அதில் பவனி வரும் பாத்திரங்களான காந்தாரி, குந்தி, திருதராட்டிரன், திரௌபதி, கிருஷ்ண வாசுதேவன் ஆகியோரின் எண்ணங்களாக விரிந்து செல்லும் இந்த நாவலை அய்ராவதி கார்வே நவீன முறையில் அமைத்து மறு சிந்தனைக்கு மக்களை அழைத்துச் செல்கிறார்.

 2. Avatar
  ஷாலி says:

  இதே மராத்தி மொழியில் வி.ஸ.காண்டேகர் எழுதிய `யயாதி என்னும் நாவலும் அற்புதம் நிறைந்தது. யயாதியை ஒரு பெண் பித்தனாக முன்னிருத்தும் மகாபாரதத்தினின்றும் சற்று விலகி ஆழமாகச் சிந்திக்கும் காண்டேகர், பெருங்கவி காளிதாசனுடன் ஒத்துப் போய், அசுரக் குரு சுக்கிராச்சாரியின் மகளான தேவயானியை அக்கினியையும் அந்தணர்களையும், சாட்சியாகக் கொண்டு திருமணம் முடித்தாலும், அந்த தேவயானியோ யயாதிக்கு வழங்க வேண்டிய அன்பை வழங்க மறுத்து உதாசீனப்படுத்தியதால்தான் அவளின் பணிப் பெண்ணான சர்மிஷ்டையை யயாதி நெருங்க, அவளும் அந்த அன்பை மனமுவந்து வழங்குகிறாள் என்பதுபோல் மறுவாசிப்புக்கு நாவலை உட்படுத்தியுள்ளார்.

  ஒரிய மொழியில், பிரதிபாராய் வடிவமைத்த யாக்ஞசேனியும் திரௌபதியின் பார்வையில் மகாபாரத இதிகாசத்தை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறது. கிருஷ்ணனுக்கு திரௌபதி எழுதும் கடித வடிவில் இந்த நாவல் விரிந்து செல்கிறது. சொர்க்கத்துக்குப் பூத உடலுடன் நடந்து சென்றபோது கால் தடுமாறி விழுந்த திரௌபதி, இமயத்தின் பனிப்பாறைகளில் படுத்தவாறு மிகவும் உணர்ச்சிவயப்பட்டு தன் வாழ்க்கையில் நேர்ந்த ஒவ்வொரு கட்டத்தையும் பற்றி இதயக் குருதி பீறிட்டொழுகும்விதத்தில் கிருஷ்ணனுக்கு எழுதும் கடித வடிவ நாவல்தான் இது.

  பெண்மைக்கு எதிரான கடுமையான புதிர்களுக்கு எதிராகப் போராடும் பெண் சிந்தனையின் வெளிப்பாடு மட்டுமல்ல; உலகெங்கும் உள்ள மனித வர்க்கத்திற்காக பேசுகின்ற ஒரு புதுமை மனம்தான் திரௌபதியினுடையதாக இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனால்தானோ என்னவோ இந்த நாவலுக்கு ஞான பீட விருதும் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *