சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ” டைகர் ஏர்வேஸ் ” விமானம் இரவு பத்து மணிக்கு புறப்பட்டது.
மனைவியும் நானும் ஹைதராபாத் செல்கிறோம். எங்களைப்போல் இன்னும் முப்பது ஜோடிகள் உலகின் பல நாடுகளிலிருந்து புறப்பட்டுள்ளனர் – ஹைதராபாத் நோக்கி.
அவர்கள் என்னுடைய மருத்துவக் கல்லூரியின் வகுப்புத் தோழர்களும் தோழியருமே. ஆச்சரியமாக உள்ளதா?
நாங்கள் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் 1965 ஆம் வருடம் முதலாம் வருட எம். பி. பி . எஸ். வகுப்பில் சேர்ந்தவர்கள். மொத்தம் அறுபது பேர்கள். மூப்பத்தைந்து ஆண்களும் இருபத்தைந்து பெண்களும் கொண்டது எங்களின் வகுப்பு.
தற்போது நாற்பத்தெட்டு வருடங்கள் ஓடுவிட்டன! எங்களுக்கும் பெரும்பாலருக்கு பேரப்பிள்ளைகள் உள்ளன. இருப்பினும் எங்களின் நட்பும் தொடர்பும் இம்மியும் குறையாமல் நாங்கள் அதே இளமையுடன் ஒன்றுகூடுவதும், இரண்டு மூன்று நாட்கள் களித்திருப்பதும் பெரும் அச்சரியமே!
இதுவே வேலூரின் பாரம்பரியம். எங்களைப்போல்தான் ஒவ்வொரு வருட மாணவர்களும் மாணவிகளும் ஒன்று கூடுவதுண்டு.
முன்பெல்லாம் இந்த ஒன்றுகூடல் வேலூரில்தான் நடைபெறும். இப்போது வெவ்வேறு ஊர்களில் இது நடைபெறுகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் ஊட்டியில் இரண்டு நாட்கள் கழித்தோம். அப்போது அடுத்த ஒன்றுகூடல் பாலித் தீவில் அல்லது ஹைதராபாத்தில் என்று முடிவு செய்தோம்.
அதற்கு இருவர் போட்டி போட்டனர் அதாவது தங்கள் ஊரில் கூடினால் அனைத்து ஏற்பாடுகளும் செய்துத் தருவதாக அந்த போட்டி. ( ஒளிம்பிக் விளையாட்டுகளை நடத்த உலக நாடுகளுக்குள் நடைபெரும் போட்டி போன்று )
என்னுடன் பயின்ற பிலிப் ஸ்டோக்கோ தற்போது இந்தோனேசியா நாட்டில் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ ஆலோசகராக பணிபுரிகிறான். அவனது தலைமையகம் ஜாகார்த்தாவில் உள்ளது. அதனால் அவன் பாலித் தீவில் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தான்.
ஆந்திர மநிலத்தைச் சேர்ந்த சம்ருதி ஜோசப். அவன் அறுவை சிகிச்சை நிபுணன். விஜேய் மேரி மிஷன் மருத்துவமனையில் பணி புரிகிறான்.ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யத் தயார் என்று வாக்களித்தான்.
அமைப்புக் குழுத் தலைவன் கணேஷ் கோபாலகிருஷ்ணன். இவன் கோயம்புத்தூரில் பிரபலமான மாற்று சிறுநீரக அறுவை சிகிசசை நிபுணன். அவனுடைய மனைவி ஆல்க்கா சின்கா ( எங்கள் வகுப்பு மாணவி ) பொது மருத்துவ நிபுணர் ).
( இவர்களைப் போன்று எங்களுடைய வகுப்பில் பல காதல் ஜோடிகள் உருவாகி திருமணம் செய்துள்ளனர்.)
அவனுக்கு உதவியாக எலும்பு சிகிசசை நிபுணன் டேவிட் ராஜனும், காது மூக்கு தொண்டை நிபுணன் பாலாஜி நாயுடுவும் செயல்பட்டனர். இவர்களும் கோயம்புத்தூரில் சொந்தத்தில் மருத்துவமனைகள் வைத்துள்ளனர்.
செப்டம்பர் மாத இறுதியில் ஒன்றுகூட முடிவு செய்தபின் ஜனவரி மாதமே .மின்னஞ்சல்கள் பறக்கத் தொடங்கின.
யார் யார் நிச்சயமாக பங்கு கொள்வர் என்ற பட்டியல் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் வந்தது. நானும் உடன் எங்கள் இருவரின் வருகையை தெரிவித்து விட்டேன்.
அதோடு ஒரே நாட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கும் நினைவூட்டவேண்டும். நான் கோலாலம்பூரில் வசித்த ஏபெல் ஆறுமுகத்தை அழைத்தேன். அவன் அங்கு சுபாங் ஜெயா மருத்துவ மையத்தில் ( Subang Jaya Medical Centre ) பணிபுரிகிறான். அவன் அறுவை சிகிச்சையிலும் பெண் பாலியல் மருத்துவத்திலும் நிபுணன்.நான் அழைத்தபோது அவன் கலிபோர்னியாவில் இருந்தான். அவன் நிச்சயம் வருவதாகக் கூறினான்.
கிழக்கு மலேசியா சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கில் ரஞ்சித் ஊமன் உள்ளான். அவன் அறுவை சிகிச்சை நிபுணன். புற்று நோய் சிகிச்சையில் பெயர் பெற்றவன்., அங்கு குணப்படுத்த முடியாத இறுதி கட்ட நோயாளிகளுக்கு ஒரு இல்லம் நடத்துகிறான். அவனும் மனைவி மாலியுடன் நிச்சயம் வருவதாக உறுதியளித்தான்.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நள்ளிரவில் தரை இறங்கினோம். குடி நுழைவுத் துறையில் ஏபெலும் அவனுடைய மனைவி கோமதியையும் சந்தித்தோம். அவர்கள் கோலாலம்பூரில் மாஸ் விமானம் ஏறி வந்திருந்தனர். கோமதி கண் சிகிச்சை நிபுணர்.
இரவு தங்கும் விடுதியின் வாகனம் எங்களுக்காக காத்திருந்தது. அது நோவோடெல் ( Novotel Hotel ) ஹோட்டல். நட்சத்திர ஹோட்டல். ஒரு இரவு தங்குவதற்கு 7000 ரூபாய் சற்று அதிகமே!
காலையில் சிற்றுண்டி அருந்துகையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து சுரிந்தர் கால் ( Surinder Kaul ) எங்களைப் பார்த்து மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.
அவன் பொது நல மருத்துவ நிபுணன். லெஸோதொ ( Lesotho ) என்ற ஆப்பிரிக்க நாட்டில் உலகின் மிகப் பெரிய நீர் மாற்றும் திட்டத்தில் ஈடுபட்டிருந்தான். தென் ஆப்பிரிக்காவின் குடிநீர் பெருமளவு இந்த திட்டத்தின் மூலமே கிடைக்கிறது. அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு தாய் சேய் நலத் திட்டத்தை செயல்படுத்துகிறான்.
அதோடு லாவோஸில் உள்ள நாம் துவன் என்னும் பகுதியிலும், இந்தோனேசியா பாப்புவா நியூ கினியிலும் சுகாதார திட்டங்களையும் மேற்கொண்டுள்ளான்.
காலைச் சிற்றுண்டி முடித்தபின் ஊஸ்காரியை ( Uzgare ) வரவேற்பு கூடத்தில் பார்த்தேன். அவன் மும்பாயைச் சேர்ந்தவன். அவன் ஏய்ட்ஸ் வியாதி நிபுணன்.
. இந்திய ஏய்ட்ஸ் கழகத்தை உருவாக்கியவர்களில் ஒருவன். உலக ரீதியில் ஏய்ட்ஸ் பயிற்சியும், பல அராய்ச்சிக் கட்டுரைகள் படைத்தவன்.
அங்கு பிலிப் ஸ்டோக்கோ ஜாகர்த்தாவிலிருந்து வந்திருந்தான். அவனைப் பற்றி முன்பே சொல்லிவிட்டேன்.
பாபி தாமஸ் அவன் மனைவி ஜாய்ஸ் ( எங்கள் வகுப்பு மாணவிதான் ) அமெரிக்காவிலிருந்து வந்திருந்தனர். பாபி எக்ஸ்ரே நிபுணர். ஜாய்ஸ் தோல் நிபுணர்.
அதுபோன்று ஜேக்கப் கோருளாவும் ஷர்லியும் வந்திருந்தனர். இருவரும் மருத்துவ நிபுணர்கள்தான். இவர்களும் ஒரே வகுப்பில் பயின்று கணவன் மனைவி ஆனவர்கள்.
மற்றோரு ஜோடியான சிரில் மத்தாய், ரேச்சல் தாமஸ் ( கணவன் மனைவி ) அமெரிக்காவிலிருந்து வந்திருந்தனர். சிரில் மனோவீயல் நிபுணன். ரேச்சல் நோயியல் நிபுணர்.
தாமஸ் மாமன், (அறுவை சிகிசசை நிபுணன் ) , ராஜா கோவிந் பாட் ( பொது மருத்துவ நிபுணன் ) அமெரிக்காவிலிருந்து வந்திருந்தனர்.
இங்கிலாந்திலிருந்து ரூப் கிஷன், மீரா நரசிம்மன் ( கணவன் மனைவி -வகுப்பு காதல் ஜோடி ),ஜெயரத்னம் அவனுடைய மனைவி ஆகியோர் வந்திருந்தனர்.
ரூப் மயக்க மருத்து
ஜெயரத்தினம் ஜாஃப்னா தமிழன். மயக்க மருத்துவ நிபுணர். அவனுடைய மனைவியும் ஜாஃப்னா தமிழ்ப் பெண்.
நோவோடெல் ஹொட்டலில் இவர்களை சந்தித்தோம். மற்றவர்கள் நேராக நாங்கள் ஒன்றுகூடும் உல்லாச மையம் வந்திருப்பார்கள்.
எங்கள் பெட்டிகளுடன் வரவேற்பு கூடத்தில் காத்திருந்தோம். ஒரு மினி பஸ் வந்தது. அதில் நாங்கள் எறிக்கொண்டோம்.
நாங்கள் செகன்தராபாத் நோக்கி புறப்பட்டோம். அது சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்குதான் ஆலங்கிரிதா உல்லாச மையம் ( Aalankrita Resort ) உள்ளது. அங்குதான் நாங்கள் அடுத்த மூன்று நாட்களைக் கழிப்போம்.
அது நீண்டதோர் பிரயாணம். வாகன நெரிசல், வழக்கமான ஒழுங்கற்ற போக்குவரத்துகள், சுடும் வெய்யில், வீதிகளில் பறக்கும் புழுதியும் தூசும், சுவர்களிலெல்லாம் சினிமா, அரசியல் போஸ்டர்கள்! தமிழகத்து வீதிகளுக்கும் ஆந்திரா வீதிகளுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை – மொழியைத் தவிர.
சில கட்டிடங்கள் நிஜாமின் ஆட்சியையும், ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சி காலத்தையும் நினைவு படுத்தி நின்றன. முகலாயாரின் படையெடுப்பிலிருந்து இன்றுவரை ஹைதராபாத் பல வகைகளில் சரித்திர பெருமைகள் கொண்டது. இங்குள்ள கோல்கொண்டா கோட்டையும் பல போர்முனைகளைக் கண்டது.
வழி நெடுக நிஜாம் ஆட்சி பற்றியும் அவரிடமிருந்து இந்திய அரசு ஹைதராபாத்தைக் கைப்பற்றியதைப் பற்றியும் எங்களுக்குத் தெரிந்தவரை பேசிக்கொண்டிருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. இரண்டு மணி நேரத்தில் செகந்தராபாத் அடைந்து விட்டோம்.
ஆலங்கிரிதா உல்லாச மையத்தை நெருங்கியபோது அந்தப் பகுதி பச்சை பசேலென்று மாறுபட்டு காட்சி அளித்தது.
நுழைவாயில் தென்னாட்டு கலையம்சத்துடன் அழகுபட அமைக்கப்பட்டிருந்தது. தூண்களில் சிற்பங்கள் செத்துக்கப்பட்டிருந்தன. அங்காங்கு மரம், கருங்கல் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. பாதுகாவலர்கள் பரிசோதனை அங்கு நடந்தது.
அதன்பின் உள்ளே சென்றதும் சொர்க்கபுரியில் நுழைந்துவிட்டது போன்ற உணர்வு உண்டானது. அங்குள்ள திடல்கள், பூங்காக்கள், மரங்கள், செடிகள், கொடிகள், மண்டபங்கள், தங்கும் குடில்கள், சாலைகள், அனைத்துமே மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தன.
அங்கும் திரும்பும் இடமெல்லாம் பண்டைய பாணியில் பல சிலைகளும் சிற்பங்களும் அலங்கரித்தன.
எனக்கு அவை செட்டி நாடு சிற்பக்கலையை நினைவூட்டியன.
( பின்பு என் யூகம் சரியானது. அவை அனைத்துமே காரைக்குடியிலிருந்து பழைய மர சாமான்கள் விற்கும் கடைகளிலிருந்து பதினேழு லாரிகளில் கொண்டுவரப்பட்டவையாம். நான் காரைக்குடியில் என் நண்பர் டாக்டர் செல்லப்பாவைச் சந்தித்தபோது இதைக் கூறினார். அவர்தான் அவற்றை வாங்கி அங்கு அனுப்பி வைத்தாராம். )
இந்த உள்ளாச மையத்தைத் உருவாக்கியவர் டாக்டர் சாமுவேல் தீனதயாளன். அவர் காது மூககு தொண்டை நிபுணர். ஹைதராபாத்தில் யசோதா மருத்துவமனையில் பணிபுரிபவர். அவருடைய மனைவி மம்தா கரு தரிக்கும் சிறப்பு மருத்துவர்.
காரைக்குடியில் பிரபல காது மூககு தொண்டை நிபுணர் ( என்னுடைய நெருங்கிய நண்பர் ) டாக்டர் பால் செல்லப்பா. அவருடைய மனைவி டாக்டர் ஆலிஸ் குழந்தை வைத்திய நுபுணர். அவரின் நெருங்கிய உறவினர் தீனதயாளன். அவர் காரைக்குடி வரும்போதெல்லாம் பழைய மர கலைப்பொருட்கள் வாங்கிச் சென்று அங்கு விற்பனை செய்துள்ளார். பின்பு இந்த உல்லாச மையம் அமைத்தபோது அவற்றை இங்கும் பயன்படுத்தி ஒரு கலைக்கூடத்தையே உருவாக்கிவிட்டார்.
தங்கும் அறையும் கலை அம்சசத்துடன்தான் அமைக்கப்பட்டிருந்தது. கதவின் அறுகாலில் சிற்பங்கள் அழகுபட செதுக்கப்பட்டிருந்தன. சுவரில் மரத்தில் செதுக்கப்பட்ட சிற்பப் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.
ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனி குடில்கள் வழங்கப்பட்டன.
மதிய உணவின்போது அங்கு வந்திருந்த வேறு பலரை சந்தித்தோம்.
சம்ருதியும் அவனின் மனைவியும் மகளும் முன்பே அங்கு வந்து தங்கியிருந்தனர்.
சார்லஸ் பிரேம்குமாரும் அவனின் மனைவி பிரமிளாவும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தனர். சார்ல்ஸ் பெண் பாலியல் நிபுணன். பிரமிளா மருத்துவ நிபுணர்.
நோயியல் நிபுணரான லலிதா மும்பையிலிருந்து வந்திருந்தாள். குழந்தை நல நிபுணரான சுஷீலா இருதய சிகிச்சை நிபுணரான தனது கணவர் மெத்தியூவுடன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள்.
இன்னும் பலரின் வருகையை எதிர்நோக்கியவண்ணம் சுவையான காரம் மிகுந்த ஆந்திரா பிரியாணியை உண்டு மகிழ்ந்தோம்.
அன்று மாலை வரை அங்கேயே அமர்ந்து ஒருவரையொருவர் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் நலன் விசாரித்துக்கொண்டோம்.
இரவு உணவை வெளி அரங்கில் ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு பெரிய வெண் திரையும், ஒளி ஒலி வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஜெபத்துடன் இரவு நிகழ்ச்சிகளைத் தொடங்கினோம். முதலில் எங்கள் வகுப்பில் பயின்று அறுவை சிகிச்சையிலும் பிரபலமான பி. கே. ஊமனுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினோம். அவன் செங்கல்பட்டு பிரபல தொழுநோய் மருத்துவமனையில் இயக்குணராக பணியாற்றியவன். தற்போது எங்களுடன் இல்லை. புற்றுநோய்க்கு சென்ற ஆண்டு பலியானான்! எங்கள் வகுப்பில் நடந்துள்ள முதல் அசம்பாவிதம் இது!
மறைந்துவிட்ட நண்பனுக்கு மிகவும் உருக்கமான இரங்கல் உரையை வழங்கி கண்களைக் கலங்க வைத்தான் ஜேக்கப் கோருளா.
அதன் பின்பு சில புதுமையான செயல்களைப் பற்றியும் தகவல்கள் பற்றியும் நால்வர் பேசினர்…
( தொடரும் )
- அதிர வைக்கும் காணொளி
- விறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூது
- அகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.
- அருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்
- ஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1
- மிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidism
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3
- முன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்
- அதிகாரத்தின் துர்வாசனை.
- திண்ணையின் எழுத்துருக்கள்
- வசுந்தரா..
- திண்ணையின் இலக்கியத் தடம் -16
- அனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்
- நீங்காத நினைவுகள் – 28
- விடியலை நோக்கி…….
- என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’
- பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…
- டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்பு
- கவிதை
- பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்
- இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?
- ஒன்றுகூடல்
- புகழ் பெற்ற ஏழைகள் – 40
- தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. !
- கேட்ட மற்ற கேள்விகள்
- மருமகளின் மர்மம் -10
- சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14