டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்பு

author
0 minutes, 1 second Read
This entry is part 2 of 29 in the series 5 ஜனவரி 2014

க.சுதாகர்

டாக்ஸி டிரைவர் , திரு.ஆனந்த் ராகவ் பல இதழ்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு.. பல கதைகள் என்பதால் வேறு சுவை, வேறு தளங்கள் என்றாலும் அடியோடும் மனித உணர்வுகள், உறவுகளின் இழைகளை அவர் நன்கறிந்திருக்கிறார். கதை என்ற பெயரில் அவர் இழைகளை மேலும் சிக்கலாக்கவில்லை. மாறாக இயற்கையாக அவை பின்னிக்கொள்வதை வெகு இயல்பாக, உறுத்தாத வண்ணம் நம்மை அனுபவிக்க விடுகிறார். இரு சாரைப்பாம்புகள் இணைந்து நெளிவதை தொலைவிலிருந்து வியப்பது போன்ற உணர்வு.

அபத்த உணர்வுகள், அனுமானங்களை வெகு இயல்பாகக் காட்ட வெகுசிலராலேயே முடிந்திருக்கிறது. பாத்திரங்களில் ஆசிரியர் அழுந்தினால், அவை கேலிக்குரியனவாகிவிடும். மேலோட்டமாக விட்டுவிட்டால், சம்பவங்களின் கோர்வையாகவே கதை நகர்ந்துவிடும் அபாயமிருக்கிறது. ’டாக்ஸி டிரைவரில்’ தெரியாத ஊரில் தெரியாத சூழலில் ஒரு சராசரி இந்தியனின் அச்சம், எதையும் சந்தேகிக்கிற பண்பை நகைச்சுவையுடன் நகர்த்துபவர், ’அம்மாவின் நகை’-யில் உணர்வுகளின், உறவுகளின் விபரீதப் பின்னலை ஒரு  அதிர்வுடன் உணர வைக்கிறார்.. லா.ச.ரா இதுபோன்று  உறவுகளின் அடித்தள உணர்வுகளை திடீரெனப் பொங்க விடுவார் (தோடு -சிறுகதை).  எப்போதும் வாசகனின் கவனத்தைக் கதையில் வைத்திருப்பது எழுத்தாளனின் சவால். இதில் வெற்றிகண்டோர் வரிசையில் ஆனந்த் பலபடிகளில் முன்னிற்கிறார்.

சிறுகதைகளில் திடீர்த் திருப்பங்கள் படிப்பவரைக் கவரும் உத்தி. கதை எவ்வளவுக்குச் சுருங்குகிறதோ, அத்தனைக்குத் தீவிரமாக இருக்கும். ஒரு பக்கக் கதைகளின் இறுதியில் இவற்றை எதிர்பார்த்தே வாசகர்கள் படிக்கிறார்கள். இந்த உத்தியை ஆனந்த் ராகவ் திறம்பட , உறுத்தாமல் கதைகளில் ஏற்றியிருக்கிறார்.. நீச்சல் தெரிந்தவன் எப்படி ஆற்றின் இழுப்போடு மிதந்து ரசிக்கின்றானோ, அதே உணர்வு நமக்கும் கதையின் இழுப்பில் , திருப்பத்தில கிடைக்கிறது.

பெண்களின் குரூர யதார்த்தங்களை அகதி, பயம் போக்குவரத்து போன்றவை வெளிப்படையாக்ச் சொன்னாலும், பலவற்றில் அது அடியோடிக்கொண்டுதானிருக்கிறது. போக்குவரத்து கதையில்,  நெரிசலில் சிக்கிய ஒருவன் விளிம்பு நிலை மனிதர்களின் போராட்டத்தைக் கவனிப்பதையும் வாழ்வின் நிதர்சனத்தில் பயணப்படும் அவனது இயலாமையையும் படம்பிடிக்கிறார் வேறு வேறு காட்சிகள் தனித்தனியாக நிற்காமல்,அடியோடும் மனிதம் என்னும் இழையில் இணைந்திருப்பதை அமைதியாக , அலட்டாமல்  காட்டுவது கதைசொல்லிகளின் பெரும் பலம். ஆனந்த்திற்கு இது வெகு இயல்பாக வருகிறது.

அபத்தங்களும், வார்த்தைஜாலங்களுமாக ஒரு பக்கக்கதை எழுதுபவர்களும், ’யதார்த்த எழுத்து’ என்று துக்கம் சொட்ட கனத்தில் அமிழ்த்துபவர்களும் நிறைந்த தமிழ்ச்சிறுகதைச் சூழலில் , ஆரோக்கியமான கதை வாசிப்பை வழங்குகிறார், ஆனந்த். தரமான தமிழ்க் கதைகளை இனிவரும் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கதாசிரியர்களில் ஆனந்த் முக்கியமானவர்.

டாக்ஸி டிரைவர் –   ஆனந்த் ராகவ்

வாதினி வெளியீடு, விலை ரூ.120/-

 

Series Navigationஅதிர வைக்கும் காணொளிவிறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூதுஅகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.அருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்ஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1மிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidismவால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3முன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்அதிகாரத்தின் துர்வாசனை.திண்ணையின் எழுத்துருக்கள்வசுந்தரா..திண்ணையின் இலக்கியத் தடம் -16பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?ஒன்றுகூடல்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 40தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. !கேட்ட மற்ற கேள்விகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *