தயரதன் மதலையாய்த் தாரணிவருவேன் என்று தந்த வரத்தின்படி எம்பெருமான் இராமபிரானாக அவதரித்தார். அவர் ”மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ?” என்று சிற்றன்னையிடம் உரைத்து தம்பியுடனும் சீதையுடனும் வனம் புகுந்தார். அங்கு வந்த சூர்ப்பனகை தகாத சொற்கள் பேச அவள் இளைய பெருமாளால் தண்டிக்கப்பட்டாள். அவள் சென்று இலங்கை வேந்தனிடம் முறையிட அவன் சீதா பிராட்டி மீது ஆசை கொண்டான்.
இதைத்
“தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்”
என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுவார். மேலும் அவ்வாறு தன் சித்தத்தைப் பிற பெண்டிரின் மீது செலுத்தியதால்தான் அவன் நீண்ட பத்துத் தலைகளயும், இருபது கைகளையும், இருபது தோள்களையும் பெற்றிருந்தாலும் அழியப் பெற்றான் எனும் பொருளில்,
“பத்து நீள்முடியும் அவற்றிரட்டிப்
பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
”சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான்” [2-2-2]
என்று திருமங்கை ஆழ்வார் சாதிக்கிறார்.
இராவணன் பிராட்டியைச் சிறையெடுக்கத் தன் மாமன் மாரீசனை மாயமான் உருவெடுக்கச் சொன்னான். மறுத்த மாரீசன் பிறகு உடன்பட்டு மாயமானான். அவனே அவனுக்கு மா யமனான்.
அந்த மானானது ஆச்சரியமான மான் என்று சொல்லும்படியாக இருந்தது. அது சீதா பிராட்டி இருந்த பர்ணசாலையின் அருகே வந்தது. அங்கு ஏன் வந்ததாம்? மங்கை மன்னன் பாடுகிறார்.
” இலைமலி பள்ளியெய்தி இது மாயமென்ன இனமாய
மான்பின், எழில்சேர்
அலைமலி வேற்கணாளை அகல்விப்பதற்கு
ஓருருவாய மானையமையா
கொலைமலி யெய்துவித்த கொடியோனிலங்கைப்
பொடியாக, வென்றியமருள்
சிலைமலி செஞ்சரங்கள் செலவுய்த்த நங்கள்
திருமால் நமக்கு ஓரரணே’
அதாவது மிக்க அழகை உடையவளாய்த் துன்புறுத்தும் இயல்புடைய வேல் போன்ற கண்களை உடைய சீதையைப் பிரிப்பதற்காக அம்மான் அங்கு தோன்றியதாம். “அப்படிப்பட்ட மாரீசனைக் கொன்று பிறரை அழிப்பதையே இயல்பாகக் கொண்டிருந்த இராவணனுடைய இலங்கையானது பொடிபடும்படி வெற்றிப் போர்க்களத்தில் வில்லிலே சிறந்த அம்புகளைச் செலுத்திய எம்பெருமான் நமக்கு ஒப்பற்ற பாதுகாவலர் ஆவார்” என்று அருள் செய்கிறார் ஆழ்வார்.
இதையே பேயாழ்வார் நன்கு அனுபவித்துத் தம் மூன்றாம் திருவந்தாதியில் 52 ஆம் பாசுரத்தில்,
”எய்தான் மராமரமும் ஏழும் இராமனாய்
எய்தான்அம் மான்மறியை ஏந்திழைக்காய்—–எய்தவும்
தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய்
முந்நிலம் கைக்கொண்டான் முயன்று”
என்று அருளிச் செய்கிறார். இராமவாதாரத்தின் முக்கியமான மராமரம் எய்தல், மாயமான் வீழச் செய்தல், இராவணனை வீழ்த்தல் போன்றவை இந்த ஒரே பாசுரத்தில் உள்ளன.
மாயமானைச் சீதை வேண்ட அதன் பின் இராம பிரான் செல்ல, மாரீசனின் மாயத்தால் அவன் சொற்கள் கேட்டு இளைய பெருமாளும் அகல இராவணன் தண்டகாரணியம் வந்து சீதா பிராட்டியைக் கவர்ந்தான்.
ஈர நெஞ்சு இலாதவனாய், எங்களுக்குத் தலைவனாய் இருந்த இராவணன்,
“நீங்கள் வனத்திலே தவக் கோலத்திலே இருந்த அக்காலத்திலே, தண்டகாரணியத்தில் நுழைந்து அழகில் சிறந்த பிராட்டியை அபகரித்துப் போனான். இதில் எங்கள் குற்றம் இல்லை. எங்களைக் கொல்ல வேண்டம். பெண்சாபம் காரணமாக அழியும் அரக்கர் பற்றிப் பேச என இருக்கிறது/ தேவருக்கு விருப்பமானவற்றைச் செய்தவரே” என்று அரக்கர் வேண்டுவதாக திருமங்கை ஆழ்வார் பாடுகிறார்.
”தண்ட காரணியம் புகுந்து அன்று
தையலைத் தகவிலி எங்கோமான்
கொண்டுபோந்து கெட்டான்; எமக்கு இங்கோர்
குற்றமில்லை கொல்வேல் குலவேந்தே 1
பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப்
பேசுகின்றதென்? தாசரதீ, உன்
அண்டவாணர் உகப்பதே செய்தாய்
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ! [10-2-3]
பிராட்டியைக் கவர்ந்த பத்துத் தலை வேந்தனுடன் போரிட்டு பறவையரசன் ஜடாயு விண்ணுலகம் புகுந்தது. இதைக் குலசேகரப் பெருமாள் “சடாயுவை வைகுந்தத்தேற்றி’ என்பார்.
இலங்கைக்குக் கொண்டு சென்ற பிராட்டியை இராவணன் அசோகவனத்திலே சிறை வைத்தான். அதனாலேயே அவன் அழிந்தான்.
சீதையைச் சிறை வைத்ததை “இராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து, வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்தே” [10-2-5-] என்றும், “தஞ்சமே சிலபாதர் என்று புன்கொல் பெண்மயிலைச் சிறைவைத்தை புன்மையாளன்” [10-2-8]
என்றும் திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்வார்.
இதையே பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதியில் 59—ஆம் பாசுரத்தில்
“நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள், தன் வில் அங்கை வைத்தான் சரண்”என்று அருளுவார்.
இவ்வாறு இலங்கை வேந்தன் பிராட்டிபால் ஆசை கொண்டது, கவர்ந்து சென்றது, வழியில் ஜடாயு தடுத்துப் போரிட்டது, அசோக வனத்தில் சிறை வைத்தது எல்லாம் அழ்வார்கள் அருளிச் செயலில் காணலாம்.
——–
- அதிர வைக்கும் காணொளி
- விறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூது
- அகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.
- அருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்
- ஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1
- மிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidism
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3
- முன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்
- அதிகாரத்தின் துர்வாசனை.
- திண்ணையின் எழுத்துருக்கள்
- வசுந்தரா..
- திண்ணையின் இலக்கியத் தடம் -16
- அனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்
- நீங்காத நினைவுகள் – 28
- விடியலை நோக்கி…….
- என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’
- பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…
- டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்பு
- கவிதை
- பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்
- இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?
- ஒன்றுகூடல்
- புகழ் பெற்ற ஏழைகள் – 40
- தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. !
- கேட்ட மற்ற கேள்விகள்
- மருமகளின் மர்மம் -10
- சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14