ஜாக்கி சான் 24. தொடர் தோல்விகள்

This entry is part 22 of 29 in the series 12 ஜனவரி 2014

எத்தனை படங்கள் நடித்தாலும், எந்த படத்திலும் வெற்றி கிட்டாமல் தொடர் தோல்விகள் ஜாக்கியைப் பெரிதும் வருத்தியது. நம்பிக்கையுடன் வில்லி என்ன செய்யப் போகிறார் என்று காத்திருந்தான்.

அடுத்த நாள் ஆச்சிரியகரமான விசயம் நடந்தது. லோ வெயிடம் வில்லி, ஜாக்கியின் பிரச்சினையை எடுத்துச் சொல்லி புதிய வைத்தது தெரிந்தது.

லோ புதிய படத்திற்கான பெயரை வெளியிட்டார். ஹாப் எ லோப் ஆப் குங்பூ – பாதித் துண்டு குங்பூ என்பதே படத்தின் பெயர். அவருடைய வழக்கமான பழி வாங்குதல் கதைகளிலிருந்து சற்றே மாறுபட்டு, நகைச்சுவை கலந்திருக்க அனுமதி கொடுத்தார். இதையும் முந்தைய படங்களைச் செய்த சென் இயக்க முடிவு செய்யப்பட்டது.

இதைக் கேட்டதும் ஜாக்கிக்கு பெருத்த மகிழ்ச்சி. இரும்புக் கதாநாயகனாக இல்லாமல், ரசிகர்கைளை குஷிப்படுத்தும் சிரிப்பு நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் பேரானந்தம். அத்துடன் படத்தை எடுக்கும் முழுச் சுதந்திரமும் ஜாக்கிக்கும் சென்னுக்கும் தரப்பட்டது இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

முதலில் சண்டையே போடத் தெரியாத ஆசாமியாக அறிமுகம் ஆகும் ஜாக்கியின் கதாபாத்திரம், சண்டை போடத் தெரிந்தது போல் காட்டிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சண்டை போட கற்றுக் கொள்ள வேண்டிய சமயத்தில், குங்பூ கற்றுக் கொள்ள தட்சணையாக மரகதக் கல்லொன்றை காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான். பிறகு நாயகனும் பாதுகாவலர் குழுவும் சேர்ந்து அந்த மரகதக் கல்லைத் திருட வரும் கொள்ளையர் கும்பலை எதிர்க்கின்றனர். அவர்களை வெல்வவும் செய்கின்றனர். இதுவே கதை.

இக்கதைக்காக இருவரும் இராப்பகலாக யோசித்து யோசித்து நகைச்சுவை காட்சிகளுக்கு வடிவம் கொடுத்தனர். படத்தின் ஆரம்பத்திலேயே ஜாக்கி பல சண்டை போஸ்களைக் கொடுத்து ரசிகர்கைள பரபரப்பில் ஆழ்த்தும் சமயத்தில், அந்தச் சண்டை ஒரேயொரு அடி பொம்மையைப் பார்த்து செய்தது என்று உணரும் போது, சிரிப்பை அடக்க முடியாது என்று நம்பி அந்தக் காட்சியை அமைத்தனர். படம் முழுவதுமே இப்படிப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தொண்ணூறு நிமிடப் படம் இருவரது முயற்சியால் சிறப்பாகப் படமாக்கப்பட்டது.

ஆனால் சிறப்பு என்று படம் செய்த குழுவினர் மட்டுமே எண்ணினர். லோ படத்தைப் பார்த்துவிட்டு, படமா இது, இது என் பெயரையே கெடுத்து விடும் என்று கூறி அதை வெளியிட அனுமதிக்கவில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜாக்கி பேரும் புகழும் பெற்ற பின் படம் வெளியிடப்பட்டது. லோவைத் தவிர மற்ற அனைவரும் பெதிர்பார்த்தது போன்று, படம் ரசிகர்களைக் கவர்ந்தது என்பது வேறு விசயம்.

பாதி துண்டு குங்பூ படம் வெளிவரும் முன்பே தோல்வியானதற்குப் பின், லோ என்ன செய்வாரோ என்று எண்ணிக் கொண்டிருந்த ஜாக்கிக்கு, மற்றொரு படத்தில் நடிக்கும் வேலை தரப்பட்டது. மெக்னிபிசியன்ட் பாடிகார்ட் என்ற 3-டி படம்.

ஜாக்கிக்கு அதில் பாடிகார்ட்-பாதுகாவலன் பாத்திரம். ஒரு பெண்ணின் இறக்கும் தருவாயில் இருக்கும் சகோதரனைக் காக்க ஒத்துக் கொண்டு, உயிர் காக்க மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மருத்துவர் சூறைக்காற்று அடிக்கும் மலையைத் தாண்டிச் செல்ல வேண்டும். அவ்விடம் கொள்ளையர்கள் நிறைந்த இடமும் கூட. தன்னுடன் சண்டைப் போட வல்லவர்களைச் சேர்த்துக் கொண்டு பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

வழியில் குழுவினர் கொள்ளையர்களின் தலைவன் என்று சொல்லிக் கொள்பவனைச் சந்திக்கின்றனர். மலையைக் கடக்க விடாமல் தடுக்கின்றனர். அவர்களுடன் சண்டையிட்ட பின்னரே, உயிருக்குப் போராடும் பயணி தான் அந்தக் கொள்ளையர்களின் உண்மையான தலைவன் என்பதைத் தெரிந்து கொள்கிறான் நாயகன். அந்தப் பயணம் அந்தத் போலித் தலைவனை அழிக்கவென்பதும் தெரிய வருகிறது. இறுதியில், பாதுகாவலன் போலியைத் தோற்கடிக்கின்றான்.

ரசிகர்களின் முகத்தில் குத்துக்கள் விழுவது போன்று காட்சிகள் பல அமைக்கப்பட்டன. அடிதடி கலாட்டாக்கள் நிறைந்த படம்.

இந்தப் படம் எடுக்கப்பட்ட போது லோ ஜாக்கியிடம் பேசாமலேயே வேலை வாங்கினார். தன் வழியைப் பின்பற்றி படம் எடுக்காமல் புது விதமாகப் படம் எடுத்தது அவருக்குப் பிடிக்காது போனது இதிலிருந்து ஜாக்கிக்குப் புரிந்தது. லோ எதிர்பார்க்கும் வண்ணம் நடிக்கப் பெருமுயற்சி செய்தான் ஜாக்கி. இருந்தாலும் படம் தோல்வியடைந்தது.

இந்தத் தோல்வி லோவை சற்றே மாற்றியது. அவர் அடுத்தப் படத்தை ஸ்பிரிச்சுவல் குங்பூ – ஆன்மீகக் குங்பூ என்ற பெயரில் நகைச்சுவை குங்பூ சண்டைகள் நிறைந்த படமாக எடுக்க முடிவு செய்தார்.

ஒரு திருடன் இளைய மாணவனொருவனை அடித்துப் போட்டுவிட்டு ஏழு முஷ்டிகள் புத்தகத்தை ஷாவோலின் மட நூலகத்திலிருந்து திருடிச் செல்கிறான். அதைத் தன் மகனிடம் கொடுத்து கற்க வைக்கிறான். மகனோ அந்தக் கொல்லக் கூடிய குங்பூவைக் கற்றுத் தேர்ந்து மற்ற குழுவினரை அச்சுறுத்த ஆரம்பித்து விடுகிறான். அதை எதிர்த்து வெல்லக் கூடிய ஒரே முறை, ஐந்து முஷ்டிகள் முறை மட்டுமே. ஆனால் அது யாருக்கும் தெரியாது. அது பற்றிய புத்தகம் பல வருடங்களுக்கு முன்பே நூலகத்திலிருந்து காணாமல் போயிருந்தது.

ஒரு நாள் இரவு, ஒரு அமானுஷ்ய எரி நட்சத்திரம் மடத்தின் அருகே இருந்த பூமியில் விழுந்து வெடித்துச் சிதறுகிறது. அது நூலகத்தில் வாழ்ந்து வந்த ஐந்து பூதங்களை எழுப்பி விடுகிறது. அவை என்ன என்று தெரியாமலேயே நாயகன் அந்த ஐந்து பூதங்களுடன் சண்டை போட, இறுதியில் தொலைந்து போன புத்தகம் கிடைக்கின்றது. ஐந்து பூதங்களே அந்த நூலை எழுதியவர்களின் ஆவிகள். ஐந்து குருக்களும் சேர்ந்து, சானுக்கு ஐந்து முஷ்டிகள் (பாம்பு, கொக்கு, டிராகன், சிறுத்தை, புலி) வித்தையைக் கற்றுத் தர, அதைக் கொண்டு வில்லனான மகனைத் தோற்கடித்த பின்னர், மடத்தின் உறுப்பினரான திருடனையும் கண்டுபிடிக்கிறான்.

பல சிறப்பான ஒளி அமைப்புகளுடன் இயக்குநரின் சிறந்த படம் என்று கூறப்பட்டாலும், அந்தப் படத்தில் இருந்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்கும் வகையில் அமையாத காரணத்தால் ரசிகர்கள் மத்தியில் அதுவும் பிடிக்காத படத்தின் பட்டியலில் போய்ச் சேர்ந்தது.

இந்தத் தோல்வியும் மற்ற படங்களின் தொடர் தோல்வியும் நிறுவனத்தின் நிதி நிலைமையை மோசமாக்கியது. இது பற்றி காரசாரமான விவாதம் நடந்தது. லோவை ஆதரிப்பவர்களும் வில்லியும் லோவுடன் பேசி அவரை ஆசுவாசப்படுத்த முயன்றனர். ஆனால் லோவிற்கு பெருத்த கோபம். இறுதியில் கோபத்துடன் அறையைத் திறந்து கொண்டு வெளியேச் சென்றார். தன்னுடைய நிலை என்னவாகும் என்று பயந்த வண்ணம் இருந்த ஜாக்கி இந்த விவாதத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்காமல், வெளி வராந்தாவில் உலவிக் கொண்டு இருந்தான். கோபத்துடன் செல்லும் லோவைக் கண்டதும், தன் ததை அதோகதிதான் என்று எண்ணிக் கொண்டு, வில்லி வெளியே வந்த போது, வேகமாக அவர் பக்கம் சென்றான்.

“ஜாக்கி எனக்காக நீ காத்திருப்பாய் என்று தெரியும். வா.. டீ குடிக்கப் போகலாம்” என்று வில்லி ஜாக்கியிடம் வேறெதுவும் பேசாமல் அழைத்துச் சென்றார்.

“என்ன சொன்னார்,” என்று ஜாக்கி ஆரம்பித்தான்.

“நான் நீ நட்சத்திரம் ஆவாய் என்று சொன்னதை நினைவுபடுத்தினார். என்னைக் கண்டபடி திட்டினார்” என்றார்.

அதைக் கேட்ட ஜாக்கி அப்படியே தொப்பென்று உட்கார்ந்தான்.

“உனக்கு இன்னும் கொஞ்ச அவகாசம் வேண்டும் என்று சொன்னேன். ஆனால் வேறொரு இயக்குநர் தேவை என்று மட்டும் சொல்லவில்லை” என்று வில்லி சொன்னதுமே,

“சரி தான்” என்று வேகமாக தலையை ஆட்டினான்.

“ரொம்ப தான் ஆடாதே.. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு இல்லாமல் இதை நான் சொல்ல மாட்டேன்”

“என்ன சொல்றீங்க.. ஒண்ணுமே புரியலயே..”

“வில்லி மாமா எப்போதும் உன்காக ஏதாவமு செய்து கொண்டிருப்பேன் என்று உனக்குத் தெரியாதா?” என்று கூறி புன்னகைத்தார்.

“இந்த வார ஆரம்பத்தில் சிசனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் இம் சி யூன் என்னை அழைத்தார்.இந்த நிறுவனம் கொஞ்ச காலம் நத் போட்டியாளராகத் தான் இருந்தனர். ஈநால் இம் ரொம்ப புத்திசாலி. அவர் மூன்று மாதங்களுக்கு என்னை அவர்களது படங்களில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். அதற்காக அறுபதாயிரம் ஹாங்காங் வெள்ளி தரவும், உனக்குத் தனியாகச் சம்பளம் தாவும் தயாராக இருக்கின்றனர்” என்றார்.

“இதற்கு லோ என்ன சொன்னார்?” என்று ஆவலுடன் கேட்டான் ஜாக்கி.

வில்லி ஜாக்கியின் தோளைத் தட்டிக் கொடுத்து, “அவரை நீ தொந்தரவு செய்யாமல் இருக்க, தானே இம்மிற்கு பணம் தரத் தயாராக இருக்கிறார் லோ. இரும்புப் பிடியிலிருந்து விடுதலை. வெளியே போ.. வில்லியின் பெயரைக் காப்பாற்று..” என்று முடித்தார்.

ஜாக்கி இதயம் விட்டு விட்டுத் துடித்தது. வாழ்க்கையில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்த பின்னும், உருப்பட முடியாமல் இருக்கும் போது, இன்னொரு சந்தர்ப்பம். ஜாக்கியின் உள் மனம் இதுவே, தான் வெகு காலமாகக் காத்திருந்த சந்தர்ப்பமாக, வாய்ப்பாக அமையும் என்று சொல்லியது.

Series Navigationஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2நீங்காத நினைவுகள் – 29
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *