வளவ. துரையனின் “சின்னசாமியின்கதை”

author
0 minutes, 0 seconds Read
This entry is part 14 of 29 in the series 12 ஜனவரி 2014

 

மதிப்புரை:கவிமுகில் திருவானைக்காவல்தாமரைச்செல்வன்

பொய் சொல்ல விரும்பாத ஒரு புலவரின் –வளவ.துரையனின் புதிய புதினம் ‘சின்னசாமியின் கதை’. இக்கதையின் நாயகனைத் தேடவேண்டிய அவசியமே இல்லை. மாதவனா? முருகனா? சின்னசாமியா? மதியழகனா? என்னும் கேள்விகளுக்கு இடமே இல்லை. ஆம்! அத்துணை பேரும் இப்புதினத்தில் சம பங்கு வகித்து நம்முள்ளத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொள்கின்றனர்.

இப்புதினத்தில் யதார்த்தம், எளிமை, எதையும் தேடி அலைந்து இதில் இடம் பெறச் செய்யா முழுமைப் பொதிப்பு, தெளிந்த நீரோடை போன்று விளங்கும் தெளிவு  யாவும் போற்றுதற்குரியதாகும். கதைக்களம் பூரணத்துவம் பெற்றுத் திகழ்வது பெரிய வெற்றியாகும்.

கைநாட்டு, கலப்பு, காதல், களவு, ஓட்டம், பதிவு, கருக்கலைப்பு, அடிதடி, தற்கொலை, பஞ்சாயத்து, சாதிக் கலவரம், நீதிமன்றம் எனக் கதைக் கருவைத் தேடாமல் நடைமுறை  யதார்த்தத்தை மட்டுமே படைத்துக் காட்டியுள்ள பண்பாடு பாராட்டுக்குரியதாகும்.

சுயஜாதிப் பற்று என்பதன்றி அது எப்பொழுதாவது வெறியாக மாறிவிடும்போது ஏதேனும் ஏடாகூடமான எண்ணம் எழுந்து இடர்ப்பாடுகளை உருவாக்கும் எனும் கருத்து இதனுள் பொதிந்திருப்பது நிதர்சன தரிசனமாகும். இப் புதினத்தில் ஆங்காங்கே விரவித் தெளிக்க ஆசிரியர் எழுதியுள்ள உவமைகள் இன்னொரு சுரதாவை எழுத்துலகிற்கு இழுத்து வந்திருக்கிறது என்பதென்றன் முடிவாகும்.

பகுத்தறிவு எண்ணங்களும், கருத்துகளும், மாதவனோடும் முருகனோடும் மட்டுமன்றி வளவ. துரையனின் வாழ்க்கையிலும் வேரூன்றியிருப்பது கண்கூடு. அத்தியாயம் 2, 6, 12, களில் தெய்வங்களெனப் போற்றப்படும் ஐயனாரையும் அம்மனையும், சிவனையும், பெருமாளையும் கற்பனா கதாபாத்திரங்களாக உரையாடவிட்டு உண்மைகளைத் தெளிவுபடுத்தி, மிகச் சிறந்த நகைச்சுவை உணர்வுகளை, நையாண்டி, கேலி, கிண்டல் எனும் நிலைக்குத் தள்ளாமல் உலவ விட்டு

“ நாம் நினைத்துப் பரிதாபப்பட்டு போடும் திட்டங்களெல்லாம் ஒரு சிலரால் மடைமாற்றம் செய்யப் படுகிறதே, என்ன செய்வது?

என ஊழல் பேர்வழிகளை எண்ணிச் சிவனார் அங்கலாய்ப்பதும், ஐயனார் குதிரையின் குமுறலும், பெருமாள்

“கருடாழ்வாரை தொலைவிலேயே நிறுத்திவிட்டு வந்ததால் சிவன் கழுத்தில் இருந்த நாகம் கொஞ்சம் நிம்மதியடைந்ததெனக் குறிப்பிடுவதும்,

”பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, கருடா சவுக்கியமா?

எனும் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலைக் காதில் ஒலிக்கச் செய்வது ஆசிரியரின் சாதூர்யத்தைக் காட்டுகிறது.

இடைஇடையே மகாபாரத, இராமாயண, சிலப்பதிகாரக் கருத்துகளும் இடம் பெறுவது இனிப்பாக உள்ளது. ஒரு கடிகாரப் பெண்டுலத்தைப் போல ஊசலாடும் உள்ளம் கொண்ட சின்னசாமி எனும் ஒரு மானிடப் பிறவியை மல்லுக்கு நின்றேனும் மாற்ற முடியும் என நிரூபித்துக் காட்டும் மாதவனும் முருகனும் மறக்க முடியாதவர்கள். மொழிப்பற்று முன்னோக்கிச் செல்லும் வண்ணம் புனைந்திருப்பது ஆசிரியரின் தூய தமிழ்த் தொண்டினையே அறிவுறுத்துவதாகும்.

ஐயனாரான இறைவனைப் பார்த்து அம்மனாகிய இறைவியே,

”எல்லாரையும் காத்து வழி நடத்துறவரு நீர்தான? ஒன்னைக் கும்பிட்டா யாருக்கு நல்லது செய்யறீரு? ஒன் கோயில்லியே இருக்கறவனுக்கு கொழந்தையில்ல; ஒன்னையே பெரிசா நெனச்சு வந்தவனுக்கு இடுப்ப ஒடைச்சுப் போட்டுட்டே? ஊர் ஊரா ஒன் பெருமை பேசினவரோட பொண்ணு, புள்ள ரெண்டு பேரு வாழ்க்கையும் சரியில்ல”

எனச் சாடுவது மூட நம்பிக்கைகளின் முனை முறியச் செய்யும் தைரியமாகும்.

கோயிலில் நடைபெறும் கூத்துகளை சின்னசாமி தாயார் சன்னதியில் அப்பட்டமாக மாதவனுக்கு உரைப்பது மிகையன்று. அன்றாடம் ஆலயங்களில் காணும் அவலக் காட்சிகள்தாம். உண்மை சுடுவதில்லை. தன் பெயருக்கோ சாமியின் பெயருக்கோ அர்ச்சனை செய்வது எப்படி உகந்ததாகும் எனும் தர்க்கம் விளக்கம் நோக்கற்பாலது. மக்களிடம் மறுமலர்ச்சியை உருவாக்கக் கூடியது. இந்த மூன்றம் அத்தியாயத்தில் நடைபெறும் வாதம் பேதங்களுக்கு ஒரு வழிவகை செய்வதாகும். அதில் கருடாழ்வாரும் தப்பவில்லை.

வளவ. துரையன் சின்னசாமியின் பாத்திரத்தின் மொத்த சுபாவத்தையும் ஓரிரு வரிகளிலே சொல்லியிருப்பது ஓர் உன்னதப் படப்பிடிப்பாகும்.

“அவன் காட்டாறு இல்லடா, கட்ட முடியாததுக்கு, தெளிவான வாய்க்கால்டா, என்னா…. அங்கங்கே கொஞ்சம் ஒடைஞ்சு போயிருக்கு, அதைச் சரி செஞ்சுட்டா சரியா போயிடும்டா” என்பதே.

கணவன் வீட்டுக்கு பண்ருட்டியிலிருந்து மாமியோடு திரும்பிவந்த நிர்மலாவும் சின்னசாமியும் ஒருவருக்கொருவர் தம் மீது குற்றங்களுக்கானக் காரணங்களைச் சுமத்திக் கொண்டு விட்டுக் கொடுக்காமல் உரையாடுகின்ற அக்காட்சி இல்லற இணைகள் எல்லாம் தெர்ந்து தெளிய வேண்டிய காட்சியாக—சாட்சியாக வடித்திருப்பது ஆசிரியரின் குடும்ப வாழ்க்கைக் கோட்பாடுகளுக்குக் கோபுரக் கலசமாகத் திகழ்கிறது எனில் மிகையன்று.

சிரார்த்தம் செய்யவந்த சாஸ்திரிகளிடம் சந்தேகம் கேட்டு சங்கடப்படுத்தி சர்ச்சைக்குள்ளாக்குவது  சரியா? தவறா? என்பது பற்றி எனக்கேதும் தெரியவில்லை. ஆனால் அப்பாவின் ஆதங்கமும், அப்பாவின் “ஊருக்காக செய்ய வேண்டிய” அனுசரணையும், அன்னதானத் தீர்வும் புரிந்து கொள்ள முடிகிறது. இருதலைக் கொள்ளி எறும்பாகும் நிலை.

”உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு’ எனும் வள்ளுவத்திற்கேற்ப இப்புதினத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் செயல்படுவது ஓர் உன்னத லட்சியமாகும். அதில் அனைவரும் ஆசிரியர் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

சின்னசாமி அப்பாவியா? ஆசைக்காரனா? அன்புக்கு அடிமையானவனா? நட்பாராய்ந்தவனா? குடும்பஸ்தனா? கோபக்காரனா? எனவெல்லாம் ஆராய்ந்து குழம்ப வேண்டாம் எனச் சொல்லாமல் சொல்லி இருப்பது “சின்னசாமியின் கதையின் சிறப்பாகும்.

ஜாதியக் கோட்பாடுகளுக்குச் சத்தமில்லாமல் சம்மட்டி அடி கொடுப்பது, மாதவனின் மாண்பையும், முருகனின் சுயமரியாதைக் கொள்கைகளையும் உயர்த்துவதாக உள்ளது. நம் தமிழகத்தில் முன்பு ஓர் தலித் பாராளுமன்ற உறுப்பினர் இருந்தார். ஆம்! மதியழகனின் அண்ணனான அன்பழகனைப் போன்று நகரவாசியாகி நரக எண்ணத்தை கைக்கொண்டு நரகலை ஒத்து வாழ்ந்தார். இப்படியும் சில இழிபிறவிகள் சாதித்தது ஒன்றுமில்லை.! சரித்திர உண்மை இது.

கொடி பிடித்து கோஷம் போட்டு, வசூலித்துக் கொள்ளை அடிக்கும் ஓர் அசிங்க அரசியல்வாதியாக அல்லாமல் சொந்த புத்தியுள்ள ஒரு சுமரியாதைக்காரனாக முருகனைச் சித்தரித்து உள்ளதும் மாதவனுக்கு அவன் பெற்றோரைப் பற்றி எழுதிய கடிதத்தில் வடித்துள்ள சொல்லாட்சியும் ஆசிரியரை இனம் காணச் செய்கின்றன. அதுபோல ‘பஞ்சாபி’ எனும் பாத்திரப் படைப்பும் அவர் தேர்தலில் நிற்க விருப்பம் கொண்டு பேசுவதையும் படித்தபோது ‘ஆகாய விமானம்’ அக்ரஹாரத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

வளவனூரின் இயற்கை வளம், வாய்க்கால், வரப்பு ஏரிக்கரை அகலம் குறைந்து விட்டது, திருநீற்றுப் பட்டை போன்ற சேரித்தெருக்கள் எனும் வர்ணனைகளெல்லாம் வளவ துரையனின் கைவண்ண எழுத்தோவியத்தில் வரம் பெற்றவைகளாகும். இப் புதினம் பேச்சு வழக்கில் பதியப் பெற்றுள்ளது பயனளிக்கத் தக்கதாகும். அச்சுப் பிழைகளை அகற்றுவது ஆரோக்கியமானது. ‘சரி’ என்பது ‘நரி’ யாக அச்சாகி உள்ளது. கவனிக்க.

தூய தமிழில் எழுதுவதையும் பேசுவதையும் ஒரு தொண்டாக தவமாக மேற்கொண்டிருக்கும் ஆசிரியரோடு சற்றே மாறுபட்டிருக்கும் யான் ஓர் அதிர்ஷ்டக்கட்டை. ஆம். துரதிருஷ்டசாலியும் கூட. தமிழுக்குப் பிற மொழிக் கலப்புத் தவிர்க்க முடியாதது என்பதே என் தனிப்பட்ட கருத்து. குளம்பி எனக் கூறி குழம்பிட விரும்பாதவன்

அவரின் கதைக் கரு, எளிய நடை, இயல்பான உரையாடல்கள், இப் புதினத்தின் வெற்றிக்கு வித்தாகி உள்ளது என விளம்பின் தவறன்று.

மற்று,

அன்றாட இயல்பு வாழ்க்கையின் விளிம்பைக் கூட விட்டு வைக்காத பாங்கு வியக்க வைக்கிறது. இப்புதினத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் ஊன்றிப் படித்து உணர்தல் வேண்டும். தமிழ்ப் புதின வரலாற்றில் எவரும் தொட்டுக் கூடப் பார்த்திராத கற்பனைவளம் கடவுளர்களின் சந்திப்பின் உரையாடல்கள் வாயிலாக வெளிப்படுவதும், கடவுளர்களின் கருத்துகளையும் தாண்டி கதாசிரியரின் கணிப்புக்குக் கடவுளர்களே காத்திருப்பதும் காலச் சுவடுகளில் கால் பதிக்கும் உன்னப் பதிப்பாகும்.

எழுத்துலக ஜாம்பவான்கள் கு.ப.ரா, ந. பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், கரிசல் காட்டார் கி.ராஜநாராயணன், கோதை நாயகி, வசுமதி ராமசாமி போன்றோரின் வரிசையில் வளவ. துரையனும் இடம் பெற வேண்டும் என்பதே என்றன் பேரவா. அந்நாள் வெகு தொலைவில் இல்லை என்றே எண்ணுகிறேன். விருதுகளும் தேடிவரும் விரைவில்.

”சின்னச்சாமியின் கதை” யின் சாராம்சம் ஒரே வரியில்…………..எட்டயபுரம் சின்னசாமி அய்யரின் மைந்தன், முண்டாசுக் கவிஞன் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாக்குப்படி “ஜாதிகள் இல்லையடி பாப்பா!” என்பதேயாகும்.

————————————-

Series Navigationதிண்ணையின் இலக்கியத் தடம் – 17இலக்கியத்தில் காலனித்துவம்: புதிய காலனித்துவத்தின் கொடூரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *