தொடுவானம் – 1

author
16
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

imagesCAOTX1JQthoduvaanamமுன்னுரை

டாக்டர் ஜி. ஜான்சன்

வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும், நடக்கும் நிகழ்வுகளையும், எப்போதுமே நல்ல அனுபவமாகவே பார்ப்பவன் நான்.

அவற்றை அவ்வப்போது நாட்குறிப்பில் பதிவு செய்துவந்தேன். இந்தப் பழக்கத்தை பதிநான்கு வயதிலிருந்தே தொடங்கிவிட்டேன். நான் முழுக்க முழுக்க ஆங்கிலப் பள்ளியில் பயின்றவன். தமிழை நான் விரும்பி தமிழ் வகுப்பிலும் நூலகத்திலும் கற்றுக்கொண்டேன்.

அப்போது உயர்நிலைப் பள்ளி மாணவன். டாக்டர் மு. வ. வின் அல்லி நாவலில் அவர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் பற்றி கூறியுள்ளார். நாம் முகத்தை அழகு பார்க்க கண்ணாடி உதவுவதுபோல் அகத்தை அழகு பார்க்க நாட்குறிப்பு உதவும் என்று அப்போது படித்தத்தின் விளைவே அந்த பழக்கத்தைக் கைக்கொண்டேன். அப்போது இளமைப் பருவம். அப்பாவுக்கு மட்டுமே தெரியாமல் அவற்றை ஒளித்து வைக்க நேரிட்டது. அதுபோல் இப்போதும் ஒளித்து வைத்து பெரும் இக்கட்டில் மாட்டிக்கொண்டதால் இப்போதெல்லாம் அவ்வளவு விரிவாக எழுதுவது இல்லை.

என் இள வயது நிகழ்வுகளை நான் இப்போது திரும்பிப் பார்க்க என்னுடைய ஐம்பது வருட பழமை கொண்ட அந்த நாட்குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.

அவற்றைக் கோர்வையாக சுவைபட வாசகர்களுக்குத் தருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

” தென்றலைத் தீண்டிய தில்லை! தீயைத் தாண்டியுள்ளேன்! ”

என்ற கலைஞரின் பராசக்தி வசனம்போல் என்னுடைய இளமைப் பருவத்தில் நான் அடைந்த அனுபவங்கள் அனைத்துமே சோக வரலாறுதான்! அவற்றை இன்றும் பெரும் பொக்கிஷமாகவே கருதுகிறேன்.

ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்புமுனைகள் கொண்டதே என்னுடைய ” தொடுவானம்”.

. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

1. மீண்டும் சந்திப்போம்

 

” ஏர் இந்தியா போயிங் விமானம் மெட்ராஸ் புறப்பட தயாராக உள்ளது. பயணிகள் குடிநுழைவு, சுங்கப் பரிசோதனை முடித்துக்கொண்டு பிரயாணத்துக்கு தயாராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ”

அது 1964 ஆம் வருடத்தின் இறுதி. அன்றைய சிங்கப்பூரின் பாயலேபார் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலில்தான் அவ்வாறு ஒலிபெருக்கி ஒலித்தது.

எங்கள் வட்டாரத்திலேயே நான்தான் முதல் விமானப் பயணம் மேற்கொள்ளப்போகிறேன். அப்போதெல்லாம் விமானத்தில் பயணம் செய்வதை யாரும் எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஊர் செல்பவர்கள் அனைவருமே ” ரஜுலா ” அல்லது ” ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் ” கப்பலில்தான் ஏழு நாட்கள் பிரயாணம் செய்வார்கள். ஆனால் மூன்றரை மணி நேரத்தில் சேரக்கூடிய விமானத்தின் பயணச் சீட்டின் விலையோ பன்மடங்கு அதிகமாக இருந்தது. அந்த பணத்தில் இன்னும் அதிக சாமான்கள் கொண்டு செல்லவே எண்ணுவர். கப்பல் பிரயாணத்தில் எத்தனை பெட்டிகள் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.

நாங்கள் வாழ்ந்த பகுதியில் அதிகமான தமிழர்கள் வாழ்ந்தனர். அவர்களில் பெரும்பாலோர் நகர சபையில் துப்புரவு செய்யும் கூலித் தொழிலாளர்கள்/

வீதிகள் கூட்டுதல், சாக்கடைகள் சுத்தம் செய்தல், கழிவறைகளைக் கழுவுதல், சாலைகளில் தார் போடுதல் போன்ற சாதாரண வேலைகளில்தான் பலர் இருந்தனர்.

ஆங்கிலேயர்களின் காலனித்துவக் காலத்தில் ஹென்டர்சன் மலையில் அடியிலிருந்து உச்சிவரை வீடுகளை வரிசை வரிசையாகக் கட்டித் தந்திருந்தனர். ஒரு வரிசையில் பத்து குடும்பங்கள் இருந்தன. ஒரு அறை கொண்ட வீடுகள்தான். பொதுவான சமையல் அறை ஒரு கோடியில் அமைந்திருக்கும். பொதுவான கழிவறையும் குளியல் அறையும் தனியாக கொஞ்சம் தள்ளி அமைந்திருக்கும்.

குடியிருந்தவர்களில் பெரும்பாலோர் தமிழ் நாட்டிலிருந்து தனியாக வந்தவர்கள். அவர்களின் மனைவி பிள்ளைகள், பெற்றோர் எல்லாம் தமிழ் நாட்டில்தான்.

இங்கே தற்காலிகமாகத் தங்கி சிக்கனமாக வாழ்ந்து ஊருக்கு பணம் அனுப்புவதிலேயே கண்ணுங்கருத்துமாய் இருந்தனர்.

ஒரு சிலரே இங்கே முதல் திருமணமோ அல்லது மறுமணமோ செய்துகொண்டனர். வெகு சிலரே ஊரிலிருந்து மனைவியை வரவழைத்துக் கொண்டனர்.

நான் விமானப் பயணம் மேற்கொள்வதால் என்னைப் பெரிய பணக்காரன் என்று எண்ணிவிட வேண்டாம். அப்போது எனக்கு வயது பதினேழுதான்!

நான் அந்த வட்டாரத்து தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவன். நல்ல மாணவன் சிங்கப்பூரிலேயே சிறந்த பள்ளியான ராபிள்ஸ் உயநிலைப்பள்ளி மாணவன். ஓட்டப் பந்தயங்களில் சிறந்து விளங்கியவன். ஆங்கிலப் பள்ளியில் பயின்றாலும் தமிழ் மீது தணியாத ஆர்வம் கொண்டவன். தேசிய நூலகத்தில் தமிழ் நாவல்கள் இரவல் வாங்கி தமிழ் அறிவை சொந்தமாக வளர்த்துக்கொண்டவன். சிங்கப்பூர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளம் வயது உறுப்பினன். சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் தமிழ் உட்பட அனைத்து பாடங்களிலும் சிறப்புடன் தேர்ச்சியுற்றவன். அந்த இளம் வயதிலேயே தமிழ் முரசு, தமிழ் நேசன் ஞாயிறு மலர்களில் கதைகள் கட்டுரைகள் எழுதும் இளம் எழுத்தாளன். தமிழர் திருநாளில் நாடகம் எழுதி கதாநாயகனாகவும் நடித்தவன்.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட என்னை அப்பகுதி மக்கள் ” வாத்தியார் மகன் ” என்றே அழைத்தனர்.

என் தந்தை தமிழ் ஆசிரியர். பகுத்தறிவு சிந்தை மிக்க சில சமூகத் தலைவர்களின் முயற்சியால் நன்கொடைகள் மூலமாக உருவாக்கப்பட்டது பாரதிதாசன் தமிழ்ப்பள்ளி. மரப்பலகைகளாலும் அத்தாப்புக் கூரையாலும் கட்டப்பட்ட பள்ளி அது.

நகரசபைத் தொழிலாளர்கள் நிறைந்திருந்த அங்கே தமிழ்ப் பள்ளி ஆசிரியரின் மகன் என்ற சிறப்பு எனக்கு தரப்பட்டது.

மாணவர்களில் சிறந்த எடுத்துக்காட்டாகவே நான் விளங்கினேன். அலேக்சாண்டிரா எஸ்ட்டேட் ஆங்கில துவக்கப் பள்ளியில் தொடர்ந்து ஆறாம் வகுப்பு வரையில் நானே முதல் மாணவனாகத் திகழ்ந்தேன். பள்ளிப் பருவத்திலேயே திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு சிந்தை மிக்க நூல்கள் நிறைய படித்தேன். அந்த வயதிலேயே சிறந்த இலட்சியம் கொண்டவனாகச் செயல்பட்டேன். அதற்குக் காரணம் நான் போற்றிய தலைவர் அறிஞர் அண்ணா!

விமானம் ஏறும் நேரம் நெருங்கிவிட்டது. என் மனத்திலோ பெரும் பூகம்பம்! அப்போது நான் ‘ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ‘ பத்திரிகையில் மொழிபெயர்ப்பாளராகப் பணி புரிந்தேன். பாராளுமன்றத்திலும் மொழிபெயர்ப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். சிங்கப்பூர் தொலைக்காட்சியிலும் என்னைத் தேர்வுக்கு வரச் சொல்லி இருந்தனர்.

இந்த வாய்ப்புகள் அனைத்தையும் தூக்கி எறியச் செய்துவிட்டு என்னைத் தமிழகம் அனுப்புகிறார் என் தந்தை! அவர் என்னை நாடு கடத்துகிறார் என்றே சொல்லவேண்டும்!

கப்பலில் என்னை அனுப்பினால் நான் கிள்ளான் துறைமுகத்திலோ பினாங்கிலோ இறங்கி ஓடி விடுவேனாம். அதனால் கப்பல் பிரயாணத்திற்கு எடுத்த பிரயாணச் சீட்டை கடைசி நேரத்த்தில் மாற்றி என்னை ” ஏர் இந்தியா ” விமானத்தில் அனுப்புகிறார் அப்பா.

நான் ஊரிலிருந்து வந்து சரியாகப் பத்து ஆண்டுகள் ஆகின்றன. ஒரு முறை கூட திரும்பவில்லை. அங்கு சிதம்பரத்தில் என் தாத்தா, பாட்டி, அம்மா, இரு தங்கைகள் உள்ளனர். என் ஒரே அண்ணன் சென்னையில் கல்லூரியில் பயில்கின்றார். அண்ணி திருச்சியில் ஆசிரியை. இவர்களயெல்லாம் போய்ப் பார்க்க வேண்டுமாம். இல்லையேல் அவர்களை மறந்து போவேனாம்.

அதோடு நான் ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்பது அவருடைய இலட்சியமாம்! அதற்கு அங்குதான் செல்லவேண்டுமாம்!

நான் சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் நன்றாகத்தான் தெரிச்சி பெற்றிருந்தேன். நான் இங்கேயே எச்.எஸ்.சி. முடித்து மருத்துவம் பயில்வதாகக் கூறினேன். அவர் மறுத்துவிட்டார். இங்கிருந்தால் நான் பத்திரிகைத் தொழிலிலேயே இருந்து விடுவேனாம். மருத்துவம் பயில மாட்டேனாம். ஊரிலுள்ளோரை மறந்து விட்டு இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுவேனாம்!

பதட்டமும், குழப்பமும், வேதனையும் நிறைந்த நிலையில் வேண்டா வெறுப்பாக நான் சம்மதித்தேன்.

என்னை வழியனுப்ப கந்தசாமி மாமா, செல்லப்பெருமாள் மாமா, சிதம்பரம் சித்தப்பா ஆகியோருடன் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் ஜெயப்பிரகாசம், கோவிந்தசாமி, பன்னீர்செல்வம், சார்லஸ் ஆகியோர் வந்திருந்தனர்.

ஒலிபெருக்கியில் கடைசி அழைப்பு ஒலித்தது. நெஞ்சு படபடத்தது! உடல் லேசாக நடுங்கியது! சொல்ல முடியாத துயர் தொண்டையை அடைத்தது!

எல்லாரும் கை குலுக்கி என்னை வழியனுப்பினர்.

” நன்றாகப் படித்து டாக்டராகத் திரும்பி வா.” என்றான் ஜெயப்பிரகாசம் மாலை நேரங்களில் என்னோடு அதிகம் கழித்தவன் . நான் நாடகத்தில் நடித்த கதாநாயகன் பாத்திரத்தில் அவன் தொடர்ந்து நடிக்க சம்மதித்திருந்தான்.

நான் பயணிகள் புறப்படும் நுழைவாயினுள் நுழைந்தபோது ஒலிபெருக்கியில் அது ஒலித்தது. என்னைத் தகவல் பிரிவுக்கு உடன் வரச் சொல்லி அறிவிக்கப்பட்டது. ஏனக்கு வியப்பையும் குழப்பத்தையும் அது உண்டு பண்ணியது. பதறியபடி அங்கு விரைந்தேன்!

எனக்கு தொலைபேசி அழைப்பு காத்திருந்தது!

” ஹலோ ” என்றேன்.

” ஹலோ! நான்தான் பேசுகிறேன். பத்திரமாகச் சென்று வாருங்கள். உயிருள்ளவரை உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களைப் பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன் என்று தெரியலை. கட்டாயம் ஒரு டாக்டராகத் திரும்புங்கள். அங்கு சென்றதும் என்னை மறந்து விடாதீர்கள். ” அந்தக் குரலில் சோகம் இழையோடியது.

அது என் லதாவின் குரல்! பத்து வருடங்கள் என்னோடு ஒன்றாக வளர்ந்து ஆளானவள்.!

” சரி லதா! நன்றி. இப்படி உன்னோடு கடைசியாகப் பேசுவேன் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. கவலைப் படாதே.! உண்மையான நம் காதலை உலகில் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது. எத்தனை ஆண்டுகளானாலும் உனக்காக நானும் காத்திருப்பேன். என் இதயத்தை இங்கு விட்டுச் செல்கிறேன்! கவலை வேண்டாம்! நாம் மீண்டும் சந்திப்போம்! ”

” அத்தான்! ”

” அன்பே! ”

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3சீதாயணம் நாடகப் படக்கதை – 18
author

Similar Posts

16 Comments

 1. Avatar
  Dr.G.Johnson says:

  Thank You Mr. Arun Narayanan! You have the unique pride and privilege to be the first to record your enthusiasm on THODUVAANAM. As expected by you I am sure you will enjoy reading in the coming weeks, months and maybe years too! With compliments from Dr. G.Johnson.

 2. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,

  தொடுவானம் தொடர்வானமாய் வருகிறது. சுய சரிதையைச் சுவையாய் எழுதும் கலைத்திறம் உங்கள் கைத்திறம். அது பாராட்டுக்குரியது. காதல் பிரிவில் முதற்பகுதி முடிவது ஒரு ஆரம்ப தனிச்சுவை.

  தொடரடும் உங்கள் தொடுவானப் பயணம். சுற்றிச் சுற்றி வரமால் அது புவிதாண்டி நிலவுக்கும் செல்லட்டும்.

  சி. ஜெயபாரதன்

 3. Avatar
  ஷாலி says:

  டாக்டர் ஸார்! தொடுவானம் ஆரம்பமே ஜெட் விமான வேகத்தில் செல்கிறது.பொதுவாக திரைப்படத்தில் மணம் புரிய முடியாத காதலியை கடைசியாக விமானத்தில் ஏற்றி காதலை பிரித்து விடுவார்கள். உங்க கதையில் முதல் காட்சியிலேயே காதலியை பிரிந்து நீங்கள் போகிறீர்கள்.கதை முன்னுரையிலேயே சோக வாழ்க்கை என்று சுரம் பிரித்துவிட்டீர்கள்.ஆக இதுவும் கரை சேராத காதல்தானா?

  //என் இதயத்தை இங்கு விட்டுச் செல்கிறேன்! கவலை வேண்டாம்! நாம் மீண்டும் சந்திப்போம்! ” “அத்தான்! அன்பே!”// எங்கேயோ….போய்விட்டீர்கள். நடத்துங்கள்.

  போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
  நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே!
  உறவும் இல்லையே!

  சுதி சேரும் போது விதி மாறியதோ
  அறியாத ஆடு வழி மாறியதோ!
  புடவை! அது புதுசு
  கிழிந்து அழும் மனசு
  தங்கப்பூவே சந்திப்போமா!
  சந்தித்தாலும் சிந்திப்போமா?
  மாயம் தானா?

  நடந்தாலும் கால்கள் நடை மாறியதே!
  மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதே!
  தரைக்கு வந்த பிறகு
  தவிக்கும் இந்த சருகு
  காதல் இங்கே வெட்டிப் பேச்சு
  கண்ணீர் தானே மிச்சம் ஆச்சு
  பாசம் ஏது?
  போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
  நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே…..

 4. Avatar
  Dr.G.Johnson says:

  நண்பர் ஜெயபாரதன் அவர்களே, தொடுவானம் முதல் பகுதியே தங்களைக் கவர்ந்தது கண்டு மகிழ்ச்சி. இனி என்ன கவலை எனக்கு! ஒரு விண்வெளி அறிவியலாளர் வாழ்த்தும் போது அந்த வானமே எனக்கு எல்லையாகும்! சிறகுகள் உள்ளது போன்ற உணர்வு எனக்கு! அந்த இலக்கிய வானில் மிதந்து செல்வோம் வாரீர்!,,,,டாக்டர் ஜி. ஜான்சன்.

 5. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள சகலகலாவல்லவரான அருமை நண்பர் ஷாலி அவர்களே! தொடுவானம் முதல் அதிகாரத்தைப் படித்துவிட்டு அசத்தி விட்டீர்கள்! எப்படிதான் இப்படி கவிதைகளும் பாடல்களும் உங்களுக்கு உடன் வந்து கை கொடுக்கின்றனவோ தெரியவில்லை. உங்களின் கருத்துகள் அனைத்துமே அருமையிலும் அருமை! உங்கள் பாடல்களைப் படித்தபின் எனக்கும் ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது. அது அண்மையில் மறைந்த நாகேஸ்வரராவும் பானுமதியும் நடித்த லைலா மஜ்னு. அதில் பானுமதி பிரிந்து செல்லும்போது பாலைவனத்தில் ஒட்டகத்தின் மீது பயணம் செய்வார். அப்போது மஜ்னு ” போகுதே… உயிர் போகுதே …பறந்து செல்லும் பைங்கிழியே….” என்று படுவார்! இந்த அருமையான பாடலை கண்டசாலா சோகக் குரலில் பாட பானுமதியின் அற்புதமான சோகத்தின் முக பாவனையும் அப்பப்பா மறக்கமுடியுமா அந்த காதல் காவியத்தை! அது சோகத்தின் உச்சம்! நன்றி நண்பரே! மீண்டும் சந்திப்போம்! அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 6. Avatar
  பவள சங்கரி says:

  அன்பின் மரு. திரு. ஜான்சன்,

  அருமையான ஆரம்பம்! தொடர்ந்து வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. வாழ்க்கையின் சுவையான பகுதியுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடும் தூரத்தில் வானம் என்றால் சுவைக்குப் பஞ்சமா என்ன! தொடருங்கள், காத்திருக்கிறோம்.

  அன்புடன்
  பவள சங்கரி

 7. Avatar
  புனைப்பெயரில் says:

  நான் சொன்னது மிகையில்லை. ஏனோ வரவில்லை. இத் தொடர் தமிழ் இலக்கியத்தில் மிகப்பெரிய இடத்தைப் பெறும். கையில் கிடைத்தது கீ போர்டு என்று எழுதிப் பக்கங்களை குப்பையாக்கும் இக்கால கட்டத்தில், குண்டுமணிகளாய் எழுதித் தரும் அய்யா ஜான்சன், பாராட்டுக்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலாய் எழுதுங்களேன்…. 7 நாள் எழுதி ஒரு நாள் தாருங்கள்… நாங்கள் ஏழு நாளும் படிப்போமல்லவா ……?

  1. Avatar
   ஷாலி says:

   அப்புறம் என்ன!..நம்ம பெரியவர் புனைபெயறாரே சொல்லிவிட்டார்கள் கொஞ்சம் கூடுதலாக எழுதவேண்டும் என்று…டாக்டர் ஸார்! வார்த்தை சிக்கனம் பண்ணாமே வாரி வழங்குங்கள்!

   கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
   வேட்ப மொழிவதாஞ் சொல்.

   விளக்கம்:

   தன் சொல்லை விரும்பிக் கேட்டவரைத் தன்வயப்படுத்தி வைக்கும் வகையிலும், தன் பேச்சைக் கேளாது இருந்தவரும் இவர் பேச்சைக் கேட்க வேண்டும் என்று விரும்பும்படியும் பேசப்படுவதே சிறந்த சொல்வன்மையாகும்.
   ———————-

   பால்: அறத்துப்பால்
   இயல்: பாயிரவியல்
   அதிகாரம்: 04. அறன் வலியுறுத்தல்
   குறள் எண்: 38

 8. Avatar
  புனைப்பெயரில் says:

  இன்னொன்று, என் குழுந்தைக்கு நான் படித்துக் காட்டும் மிக மிக அரிதான தமிழ் எழுத்துக்களில் உங்களும் ஒன்று.

 9. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள பவள சங்கரி, தொடுவானம் தொடரட்டும் என்று வாழ்த்தியுள்ள உங்களுக்கு நன்றி…அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 10. Avatar
  Dr.G.Johnson says:

  அன்பு நண்பர் புனைப்பெயரில் அவ்ர்களுக்கு வணக்கம். தொடுவானம் உங்களின் உள்ளத்தைத் தொட்டு விட்டது கண்டு மகிழ்ந்தேன். பாராட்டுக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி..மீண்டும் சந்திப்போம். .அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 11. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பார்ந்த வைத்யர் ஸ்ரீ ஜான்சன்

  நான் தற்சமயம் ராமாயணக் கடலில் ஆழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் மற்ற விஷயங்கள் தூரமே. கடலாழத்தில் நான் செல்லுகையில் தாங்கள் ஆகாசத்திற்குச் செல்ல விழையின் தூரம் எத்தனை. ஆனால் தொடுவானம் என்று சொல்லியுள்ளீர்கள்!!.

  உங்களது எழுத்திலும் எனதன்பார்ந்த விக்ஞானி ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் எழுத்திலும் உள்ள வசீகரம் எதனால் என்று யோசித்துப்பார்ப்பேன். சிறு சிறு வாசகங்கள். சில சமயம் ஓரிரு சொற்கள். அவ்வளவே. ஆனால் அருமையான பொருள் பொதிந்தவை.

  நாம் வாசிக்கும் விஷயங்கள் நம்மை உருவாக்குகின்றன என்பது யதார்த்தமான விஷயம். நம் சொற்கள் செயல்பாடுகள் அவற்றையே ப்ரதிபலிக்கின்றன என்றால் மிகையாகாது.

  சிங்கப்பூர் வீடுகள் பற்றி நீங்கள் பகிர்ந்த விபரங்கள் மேட்டூர் மில்களைச் சார்ந்த வீடுகளை எனக்கு நினைவூட்டுகின்றன.

  உங்கள் கந்தசாமி மாமா வழியனுப்பி நீங்கள்

  காதல் மாதவர் வலமே சூழ்சபை
  நாத னார்தம திடமே வாழ்சிவ
  காம நாயகி தருபா லாபுலிசையில்வாழ்வே

  என்று எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் பாடித் துதித்த புலிசையூர் எனும் சிதம்பர க்ஷேத்ரத்துக்கு தாங்கள் போவது பற்றி எழுதியுள்ளீர்கள்.

  மேற்க்கொண்டு உங்களுடன் பயணிக்கிறோம்.

 12. Avatar
  Dr.G.Johnson says:

  அன்பு நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களே, வணக்கம். எங்கே தங்களைக் காணவில்லையே என்றுதான் நானும் திரை மேல் ( Computer Screen ) விழி வைத்து காத்திருந்தேன். தொடுவானாம் முதல் அதிகாரத்திற்கு தங்களுடைய ஆசீர்வாதமும் வேண்டுமே என்றுதான் ஏங்கினேன்.காரணம் என்னுடைய படைப்புகளை ஆழமாகப் படித்து குறை நிறைகளைக் கூறுவதில் வல்லவராக தாங்கள் திகழ்ந்து வருகிறீர்கள். அது எனக்கு பெரும் உற்சாகம் தருவது உண்மை. இந்த நேரத்தில் வள்ளுவர் சொல்லியுள்ள ஒரு குறள் என்னுடைய செவியில் ஒலிக்கிறது.

  ” இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

  கெடுப்பார் இலானும் கெடும் .” – குறள் 448.

  இது இலக்கியத்துக்கும் பொருந்தும் என்பது என்னுடைய தாழ்மையானக் கருத்து. இலக்கிய விமர்சனம் எழுத்தைப் பண்படுத்த மிகவும் தேவையானது.இந்த வகையில் தாங்கள் சிறந்த படைப்பாளரும் விமர்சகருமாக இருப்பது பாராட்டுதற்குரியது.

  கடலும் வானமும் தொடுவதைப் போன்று காட்சியையும் தொடுவானம் எனலாம். தங்கள் இராமாயணம் ஆழ்கடலில் மூழ்கியபோதும், நான் வானில் மிதந்து சென்ற போதிலும் தொடுவானம் மூலம் நம்மிடையே நெருங்கிய தொடர்பு இருந்துகொண்டே இருப்பதை நான் விரும்புகிறேன். மீண்டும் சந்திப்போம். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *