ஜாக்கி 27. வெற்றி நாயகன்

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

 

 

டிரன்கன் மாஸ்டர் – குடிகார குரு படம் நம் சாகச நாயகனை வெற்றி நாயகனாக வலம் வரச் செய்தது.  அதை எல்லா வகையிலும் ஜாக்கி உணர்ந்தார்.

 

மக்கள் ஜாக்கியைக் கண்டதும் கையெழுத்து வாங்க ஓடினர்.  தெருவில் சிறுவர்கள் குடிகார குருவைப் போன்று நடித்துக் காட்டினர்.  செய்தித்தாள்கள் அவரைப் பற்றிய பல விசயங்களையும் எழுதின.  பல தரப்பட்ட சந்திப்புகளுக்கு அழைப்புகள் வந்தன.

 

கிசுகிசுகளை எழுத வேண்டி, ஜாக்கியைத் தொடர, பத்திரிக்கையாளர்கள் அனுப்பப்பட்டனர்.  என். ஜி கஞ்சத்தனம் பார்க்காமல், லோ தந்த 3000 ஹாங்காங் வெள்ளிக்கு பதிலாக 50000 ஹாங்காங் வெள்ளிகளைக் ஒரு படத்திற்குக் கொடுத்தார். அன்று வரை அத்தனைப் பணத்தை ஜாக்கி கண்ணாலும் கண்டதில்லை. எண்ணியும் பார்த்ததில்லை.

புகழ், பேர், அதிர்ஷ்டம் சில மனிதர்களை பெரிதும் மாற்றிவிடும். போதை தலைக்கேறி விடும். ஜாக்கியும் சாதாரண குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பினால் முன்னுக்கு வந்தவரென்பதால், அந்தப் பெயரையும் புகழையும் முழுமையாக ருசிக்க எண்ணினார். பெரிய மனிதராக ஆகிய விட்டதனால் கர்வம் கொள்ளாத போதிலும், தான் பல ஆண்டுகளாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்த விசயங்களைச் செய்து பார்க்க விருப்பம் கொண்டார். பல பொருள்களை  வாங்க விரும்பினார்.

 

தெருவில் நூடுல்ஸ் வாங்கி உண்டு மகிழ்ந்த சிறுவன். தரையில் உறங்கிய சிறுவன்.  இப்போது பணம் வந்ததும் பலவற்றை வாங்க ஆரம்பித்தார்.  பொறாமை பட்ட நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஆடம்பரப் பொருள்கள், தங்கச் சங்கிலி, நல்ல ஆடைகள் அனைத்தையும் வாங்க விரும்பினார்.  எந்தக் காரை வாங்கினால் தன் அந்தஸ்துக்கு ஏற்றதாக இருக்கும் என்று தேட ஆரம்பித்தார்.

 

கையில் பணங்காசு அதிகம் இல்லாத போது, தன் பெற்றோருக்கு கடனாகப் பெற்ற பணத்தில் பரிசுகளை வாங்கிய அதே நகைக் கடைக்குச் சென்று தனக்காக பரிசுகளை வாங்கினார்.  ஏழு கைகடிகாரங்கள்.  எல்லாம் உயரிய தரம் வாய்ந்த ரோலெக்ஸ்.  வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக கட்ட.

 

மிகவும் ஆடம்பரமாக அலங்கரிக்கப் பட்டிருந்த துணிக்கடைக்குள் சென்று, அத்தனைத் துணிகளையும் காட்டச் செய்து, எதை வாங்குவது என்று புரியாமல், தெரியாமல், எதை எதையோ வேண்டும் என்று சொல்லி, கடைக்காரர்களைக் குழப்பி, தன் சீமான்தனத்தைக் வெளிக்காட்டினார்.

 

எங்கே சென்றாலும் பலர் அவரைத் தொடர்ந்து வர ஆரம்பித்தனர்.  ஸ்டண்ட் கலைஞர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று சில சமயங்களில் இருபது பேர் வரை கூட இருப்பதுண்டு. அவர்கள் பாதுகாவலர்கள் அல்ல.  நண்பர்களும் அல்ல.  அவர்கள் அனைவரும் ஜாக்கியிடம் பணம் இருந்ததால், அவர்களுக்காகச் செலவு செய்கிறார் என்பதால் அவருடன் சுற்றி வந்தனர்.

 

பொது இடங்களில் மிகவும் பந்தா காட்ட ஆரம்பித்ததாக ஜாக்கியே ஒத்துக் கொள்வார்.  ஒன்றுமில்லாதவன் தன் திறமை ஒன்றின் முலமாகவே சாதித்துக் காட்டியபின், தான் விரும்பியதைச் செய்வது தவறல்லவே.

 

ஹாங்காங்கில் மிகச் சிறந்த ஹோட்டல்களில் ஒன்று பெனின்சுலா ஹோட்டல்.  அது உலகக் புகழ் பெற்றது.  பெரும் தலைவர்களும், சிறந்த தொழிலதிபர்களும், பெரிய பெரிய சாதனையாளர்களும் வந்து தங்கும் இடம்.  அதனால் அங்கு வருவோர் நல்ல உடையணிந்து நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோட்பாடுடைய ஹோட்டல்.  அங்கு ஜாக்கி சென்று தன்னுடைய டாம்பீகத்தைக் காட்டியதாக நகைச்சுவையுடன் நினைவு கூர்வார்.

 

ஒரு நாள் மதியம், தன்னுடைய தொண்டர் படையுடன் ஜாக்கி அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தார்.  சாதாரண அரைக்கால் சிராயுடன். அவர் நுழைந்ததுமே பெரும் சலசலப்பு.  உடனே  வேகமாக அந்த இடத்திற்கு ஓடி வந்தார் மேலாளர்..  இரண்டு படங்களேயானாலும், பெயர் பெற்றிருந்த திரைப்பட நட்சத்திரம் ஜாக்கி சான் தான் வந்திருப்பது என்று உடனே புரிந்து கொண்டார்.

 

புருவத்தைச் சுருக்கிக் கொண்டே மேலாளர் ஜாக்கியிடம் வந்து, “திரு சான் அவர்களே.. நீங்கள் இங்கே வந்திருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.  ஆனால் இப்படி அரைக்கால் சிராயுடன் உங்களை இங்கே நாங்கள் அனுமதிக்க முடியாது” என்று பவ்யமாகச் சொன்னார்.

 

“ஏன் முடியாது.. ஏன் ஏன்..” என்று ஜாக்கி கேட்டார். தொண்டர் படை ஜாக்கியைச் சூழ்ந்து கொண்டு கையை ஆட்டி தலையை அசைத்து, அதேக் கேள்வியை அமைதியாக வழிமொழிந்தனர்.

“இங்கே உடைக்கான நியதியை வைத்திருக்கிறோம்..” என்று வியர்க்க விறுவிறுக்க பயந்து கொண்டே சொன்னார்.

 

“நீங்கள் முழு கால் சிராய் ..” என்று அவர் கூறும் போதே, மிகவும் நேர்த்தியான கோட், டை, போ அணிந்திருந்த மேலாளரை மேலிருந்து கீழே பார்த்தார்.  ஜாக்கி இதே மூன்று மாதங்களுக்கு முன்பு வந்திருந்தால், நிச்சயம் வெளியே இழுத்துச் செல்லப்பட்டு தள்ளப்பட்டிருப்பார்.  இப்போது மிகவும் பணிவுடன் அன்புடன் கூறுவதை ரசித்துக் கொண்டே, அவர்களை எப்படி கையாளலாம் என்று யோசித்தார்.  கள்ளக்கடத்தல்  கூட்டத்தின் தலைவனாக இருந்த போதும், மிகவும் நேர்த்தியாக உடையணிந்து கொண்டு வந்தால் எந்த விதமான சங்கடமுமின்றி வளைய வர முடியும்.  ஆனால் தன்னைப் போன்ற நல்லவர்கள் அரைக்கால் சிராயுடன் வந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது சரியானதா என்ற கேள்வியும் உடன் தோன்றியது.

 

ஒரு முடிவுடன் “சரி.. நான் முழுக்கால் சிராய் அணியத் தயார். எனக்கு முழுகால் சிராய் கொடுங்கள்.  இப்போதே போட்டுக் கொள்கிறேன்” என்று ஜாக்கி சொன்னதும் மேலாளருக்கு அதிர்ச்சி.

 

“இது போல் இது வரை நடந்ததில்லை..” என்று கூறி விட்டு, எங்கோ தேடிப் பிடித்து அவருடைய அளவிற்கு ஏற்ப கருப்புச் சிராய் ஒன்றைக் கொண்டு வரச் செய்தார் மேலாளர். அந்த இடத்திலேயே, பெனின்சுலா ஹோட்டலின் வரவேற்பறையிலேயே அந்தச் சிராயை அணிந்து கொண்டு, அப்படியே உண்ணும் பகுதிக்குச் சென்றார். ஒரே ஒரு கோப்பை காப்பியைக் குடித்து விட்டு, தன் தொண்டர்களிடம் கிளம்பலாம் என்று சொல்லி விட்டு, அவ்விடத்தை விட்டு அகன்றார்.  தொண்டர்கள் முகத்தில் ஏமாற்றம்.

 

மறுநாளும் அங்கேயே சென்றனர்.

 

“திரு சான்.. மன்னியுங்கள்..” என்று மேலாளர் மீண்டும் பதட்டத்துடன் ஓடி வந்தார்.

 

“என்னாச்சு.. நான் முழு சிராயுடன் தானே வந்திருக்கிறேன்.. ஏன் என்னை நிறுத்துகிறீர்கள்?” என்று கேட்டார் ஜாக்கி.

“ஆனால்.. ஆனால்.. நீங்கள் டி சர்ட் அணிந்திருக்கிறீர்கள்.  இங்கே எங்கள் கோட்பாடு..” என்று தயங்கித் தயங்கி ஆரம்பித்த போதே, தோளை உலுக்கிக் கொண்டு, நீங்கள் முழு சிராய் என்றீர்கள்.. ஆனால் எந்த மாதரி மேல் சட்டை அணிய வேண்டும் என்று சொல்லவில்லையே.. வாருங்கள் போகலாம்” என்று சொல்லிக் கொண்டே, மேலாளரை சற்றும் சட்டை செய்யாமல், அனைவரையும் உணவு உண்ணும் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

 

மறுபடியும் காப்பியை மட்டும் குடித்து விட்டு, கிளம்பினார்.

 

அப்படிச் செய்வது பெரிய மனிதருக்கு அழகல்ல. குழந்தைத்தனமான செய்கை என்று தெரிந்த போதும், இத்தகைய வஞ்சம் தீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த சந்தர்பத்தைத் தவற விட விரும்பவில்லை.  எப்படியிருந்தாலும் சற்றே புகழ் பெற்றதும் விதிகளை கோட்பாடுகளை மீறி தண்டனை பெறாமல் தப்பிக்கலாம். தண்டனையே பெற்றாலும் பணத்தைக் கொண்டு அதிலிருந்தும் தப்பி விடலாம்  என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

 

இதை பலர் அவர் கர்வத்துடன் செய்தார் என்று சொன்ன போதும் தன்னுடைய ஒரு சிறு ஆசையை நிறைவேற்றவே இதைச் செய்ததாக நினைவு கூர்வார் ஜாக்கி.

 

தான் மற்றொரு நல்ல காரியத்தை கர்வத்துடன் செய்ததாக அவர் எப்போதும் சொல்வது ஓ சாங்கின் கடனை அடைத்தது பற்றியது.  என். ஜி தந்த பணத்தில் 20000 ஹாங்காங் வெள்ளிகளை எடுத்து, அழகிய மரப்பெட்டியில் வைத்து, அதற்கு மேலாக விலையுயர்ந்த முத்து கையணியை வாங்கி, அதையும் அதிலிட்டு, வண்ணக்காகிதத்தால் தானே அழகாகச் சுற்றினார்.  அடுத்த நாள் அது ஓ சாங் வீட்டில் தரப்பட்டது.  நன்றியும், “இனி போன வாழ்க்கை திரும்பாது. எப்போதும் போல நண்பர்களாக இருக்கலாம்” என்றும் ஒரு குறிப்பை எழுதி அனுப்பினார்.

 

புது வீடு ஒன்றை வாங்கி, அங்கே குடி பெயர்ந்தார்.  நல்ல பொருள்களால் அதை அலங்கரித்தார். முன்பு தன் பழைய வீட்டில் இருந்த பொருள்களெல்லாம் எங்கே போயின என்று தெரியவில்லை என்று தன் வாழ்க்கையைப் பற்றி நினைவு கூரும் போது கூறுவார்.  தன் தந்தை அனுப்பிய அறிவுரைகள் நிறைந்த நாடாக்கள் பாதுகாக்கப்படாதது குறித்து இன்றும் வருந்துவார்.

 

வெற்றி நாயகனாக மாறிய ஜாக்கி, அதற்குப் பின் பல படங்களில் நடித்து, இயக்கி மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தது யாவரும் அறிந்ததே.  அவரது பால்ய வாழ்க்கை அனுபவம் இன்றும் அவரை எளிய வாழ்க்கையையே பின்பற்ற ஆதாரமாக இருக்கிறது.  அந்த மாமனிதரின் வாழ்க்கை அனைவருக்கும் கடினமான வாழ்க்கை சாதிக்க உதவும் என்பதை எடுத்துக் காட்டும்.

 

அவர் சென்று சீண்ட பெனின்சுலா விடுதியின் அருகிலேயே திரையுலகப் பிரமுகர்களை நினைவு கூறும் வகையில் “அவென்யூ ஆப் ஸ்டார்ஸ்” என்ற பகுதியை ஹாங்காங் அரசு ஏற்படுத்தி நடிக நடிகைகளின் கை மற்றும் பாதச் சுவடுகளை ஏற்படுத்தியுள்ளனர். அதில் ஜாக்கி சானின் கைகள் பதிக்கப்பட்டிருப்பதை சுற்றுலா பயணிகள் தவறாமல் கண்டு செல்கின்றனர்.

 

அவரது திரை வாழ்வில் மேலும் பல சுவாரசியங்கள் நடந்தன, நடந்த வண்ணம் உள்ளன.  அவற்றை அடுத்த புத்தகத்தில் எழுத்தும் வாய்ப்பை இறைவன் அருள்வார் என்று எண்ணி வாசகர்களாகிய உங்களுக்கு நன்றி கூறி முடிக்கிறேன்.

—-

Series Navigationஆத்மாநாம்வலிநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *