தொடுவானம் 2 – விழியறிந்த முதல் கவிதை அவள்!

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

விமானம் அசுர வேகத்தில் ஓடு பாதையில் ஓடி வானில் எழுந்தது.

அப்போது விமானத்தினுள் மின் விளக்குகள் அணைந்தன. இரவு நேரமாதலால் வெளியிலும் காரிருள்தான். வெகு தூரத்தில் விண்மீன்கள் அழகாகப் பளிச்சிட்டன.

காதுகள் அடைத்து வலித்தன. பொத்திக்கொண்டேன்.

வானில் பறப்பது எனக்கு முதல் அனுபவம். ஒரு நீண்ட, அகலமான, அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் சொகுசாக அமர்ந்துள்ள உணர்வே உண்டானது. கொஞ்சமும் குலுங்காமல் சீராக ஒரே நிலையில் மேற்கு நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது ஏர் இந்தியா போயிங் ஜெட் விமானம்.

வேறு சூழ்நிலையில் நான் அந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தால் எவ்வளவு இரசித்திருப்பேன்! ஆனால்… அப்போது நான் இருந்த நிலையோ வேறு! எல்லாமே சூன்யமான நிலை!

தமிழகம் நோக்கி பறந்து கொண்டிருந்தாலும், என்னுடைய மனம் சிங்கப்பூரையே நாடியது! அதற்குக் காரணம் ஒரு பெண். அவள்தான் என் லதா!

அவள் எனக்கு இன்று நேற்றா பழக்கம்! ஆறு வயதிலிருந்து ஒன்றாகவே என்னோடு வளர்ந்தவளாயிற்றே! அந்த பதினோரு வருட நினைவுகள் மனத்தில் பசுமரத்து ஆணியாக பதிந்து போயுள்ளதே!

விமானம் அதே நிலையில் துரிதமாக முன்னேறிக்கொண்டிருந்தது. அப்போது ஒலிபெருக்கியில் மெ  ல்லியக் குரலில் விமானியின் குரல் ஒலித்தது

” இனிய இரவு பயணிகளே! நான் கேப்டன் கோபிநாத் பேசுகிறேன். ஏர் இந்தியா விமானத்தில் மெட்ராஸ் பயணம் செய்யும் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன். நாம் இப்போது வங்கக் கடல் மீது மூவாயிரத்து முந்நூறு அடி உயரத்தில், மணிக்கு எண்ணூற்று ஐம்பது .கிலோ மீட்டர் வேகத்தில் பறந்துகொண்டிருக்கிறோம். இப்போது வெளியே வெப்ப நிலை ‘ மைனஸ் ‘ முப்பது டிகிரி செல்சியஸ். விமானத்தினுள் வெப்ப நிலை இருபத்து ஐந்து டிகிரி செல்சியஸ். இந்திய நேரப்படி சரியாக விடியற்காலை ஒன்று முப்பதுக்கு மெட்ராஸ் விமான நிலையத்தில் தரையிறங்குவோம். உங்கள் அனைவருக்கும் பிரயாணம் இனிதாக அமைய என்னுடைய வாழ்த்துகள்.”

நள்ளிரவைத் தாண்டிய நேரமாதலால் பிரயாணிகளில் பலர் உறங்கிவிட்டனர்.

நானோ உறக்கத்தை சிங்கப்பூரிலேயே விட்டுவிட்டு வந்த நிலையில் இருந்தேன்!

சிந்தை முழுதும் லதா! இனி பிரிவு இல்லை என்று நம்பி ஏமாந்தோமே!

நாங்கள் காதலித்தது உண்மைதான். இல்லை என்று சொல்லவில்லை. எங்களின் வயது குறைவுதான். ஒத்துக்கொள்கிறோம். பருவம் எய்தியபோது காதல் பிறந்தது இயல்பு என நம்பினோம். தானாக மனதில் ஊற்றெடுத்த காதல் இது. காமம் அறியாத தூய காதல்!

ஒரே வீட்டில் வளர்ந்தோம். ஓடியாடி விளையாடினோம். ஒன்றாக பள்ளி சென்றோம். ஒன்றாகவே துவக்கப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றோம்.

நாங்கள் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் பழகவில்லை. அவளின் பெற்றோருக்கும் அப்பாவுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது – நாங்கள் இருவரும் ஒன்றாக வளர்ந்தது.

பின் ஏன் அப்பா இவ்வளவு மும்முரமாக மூர்க்கத்தனத்துடன் எங்களைப் பிரித்து மகிழ்ந்தார்?

அவர் என்ன செய்வார். பாவம்! தனியாகவே வாழ்ந்து பழகிவிட்டார். குடும்பத்துடன் வாழ்ந்திருந்தால்தானே உறவுகளின் அருமை தெரியும். தனி மனிதராக வாழ்ந்துவிட்டவருக்கு மகனின் மனநிலை எங்கே தெரியப்போகிறது!

லதாவை அவருக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் ஓடியாடி விளையாடுவதையும், இரவில் ஒன்றாக சேர்ந்து படிப்பதையும் கண்டு களித்தவர். அவள் சிறுமியாக இருந்தபோது மடியில் அமர்த்திக்கொண்டு கொஞ்சியவர். பள்ளி நேரம்போக மற்ற நேரங்களில் அவள் என் அறையில் இருப்பதையும் அறிந்தவர். பின் எதற்காக அவளின்மீது இந்த திடீர் வெறுப்பு?

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

வழக்கம்போல் அன்று மாலை அவர் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பினார். அவருக்கு மத்தியானப் பள்ளி. காலையில் சோறு சமைத்து குழம்பு வைத்து விடுவார்.

நாங்கள் நடு அறையில் அருகருகே உட்கார்ந்துகொண்டு அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தோம். எனக்கு காலைப் பள்ளி. அதனால் இரவில் சோறு ஆக்குவது மட்டும் என்னுடைய பொறுப்பு.

அப்போதெல்லாம் அரிசியில் நிறைய கற்கள் கலந்திருக்கும். சோற்றில் தவறி கல் தென்பட்டால் கையில் கிடைத்ததை எடுத்து என் மீது வீசிவிடுவார். அவ்வளவு கோபம் வரும்.

அதனால் கல் பொறுக்குவதில் அதிக கவனம் செலுத்துவேன். அதில் லதாவும் உதவுவாள். நான் அடி வாங்குவதை அவளால் தாங்க முடியாது. தன் மேல் விழும் அடியாகக் கருதி அழுவாள்!

நாங்கள் இருவரும் கல் பொறுக்கி சோறு வடிப்பது அப்பாவுக்கு நன்றாகத் தெரிந்ததுதான்.

ஆனால் அன்று மட்டும் ஏனோ தெரியவில்லை, எங்களைக் கண்ட அவரின் முகத்தில் ஒருவித மாற்றம் தென்பட்டது. அது எனக்குப் புரியவில்லை.

இரவு பாடங்களை லாந்தர் விளக்கொளியில் முடித்துக்கொண்டு அவள் தன்னுடைய புத்தகப் பையைத் தூக்கிகொண்டு வீடு திரும்பினாள். ஒரே வீட்டின் அடுத்த பகுதியில்தான் அவள் இருந்தாள

அப்பாவும் நானும் சாப்பிட அமர்ந்தோம்.

” தம்பி ” என்றார். அவர் என்னை அப்படிதான் அழைப்பார்.

” உம் ” என்றேன். நான் அவரை அப்பா என்று அழைத்ததில்லை. அந்தச் சொல்லைச் சொல்ல மனதில் கூச்சம்.

சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் என்னைத் தூக்கி வளர்த்ததில்லை. நான் அவரை முதன் முதலாகப் பார்த்ததே ஆறு வயதில். அதுவரை நான் தமிழ் நாட்டில். அவர் சிங்கப்பூரில். அம்மா கருவுற்றிருந்தபோது சிங்கப்பூர் வந்தவர் திரும்பவேயில்லை. நான் பிறந்தபோதும் என்னைப் பார்க்க வரவில்லை.

என்னை ஆறு வயதில் கூட்டி வந்த அம்மா மறு வருடத்தில் திரும்பிவிட்டார். தனியே விடப்பட்ட நான் அவருடன் எப்படியோ பதினோரு வருடங்கள் கழித்து விட்டேன்..

அவரை முதன் முறையாகப் பார்த்தபோது அப்பா என்று கூப்பிடவில்லை. அதன்பின் கடைசிவரை அவரை அப்பா என்றே அழைக்கவில்லை!

அவர் தமிழ் ஆசிரியர்தான். ஆனால் நாங்கள் வசித்ததோ அத்தாப்பு வீடு. சுவர்கள் பலகைகளால் ஆனது. லதாவின் தந்தைதான் வீட்டின் உரிமையாளர். நாங்கள் வாடகைக்கு குடியிருந்தோம்.

ஒரேயொரு நடு அறையில்தான் சமைப்பது, படிப்பது, படுப்பது எல்லாம். கட்டில், மேசை, நாற்காலி, அலமாரி, அடுப்பு – இவைதான் அந்த அறையில் இருந்தன. மின்சார விளக்கோ, விசிறியோ, வானொலியோ கிடையாது.

மரப்பலகை சுவர்களில் துவாரங்களும் விரிசல்களும் இருந்தன. எங்கள் அறையின் முன்பக்கத்தில் லதாவின் வீட்டு அறைகள் இருந்தன. அவள் வீடு திரும்பிய பின்பும் நாங்கள் அந்த விரிசல்களின் வழியாகப் பேசிக்கொள்வோம்! அது தெரிந்தும்கூட அப்பா அதுவரை ஏதும் சொன்னதில்லை.

ஆனால் அன்று சாப்பிடும்போது அவர் கூறியது எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

” தம்பி…” அவர் எதையோ சொல்லத் தயங்குவது நன்றாகவே தெரிந்தது.

நான் மீண்டும் , ” உம் ? ” என்றவாறு அவரை நோக்கினேன்.

” இனிமேல் லதாவிடம் இங்கே வரவேண்டாம் என்று சொல்லிவிடு. ” சோற்றை சார்டின் மீனுடன் பிசைந்தபடி குனிந்த தலை நிமிராமல் கூறினார்.

” ஏன் அவள் வரக்கூடாது? அவள் என்ன செய்தாள்? ” அப்பாவித்தனமாக அவரை நோக்கினேன்.

” அவள் இன்னும் சின்னப் பிள்ளை இல்லை….” பிசைந்த சோற்றை வாயில் வைக்காமலேயே தொடர்ந்தார்.

” ஏன் இல்லை ? என் வயதுதானே அவளுக்கும் ? ”

” இல்லை! அவள் வயதுக்கு வரப் போகிறாள். ”

நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஆத்மாநாம்வலிநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *