நாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்

This entry is part 2 of 24 in the series 9 பெப்ருவரி 2014

ஆரம்ப எழுபதுகளில் திருப்பூரில் நடந்த நெசவாளர் போராட்டத்தை மையப்படுத்தி  ரங்கசாமி.. நாகமணி குடும்பத்தின் வாயிலாக நெசவுத்தொழில் பயணிக்கிறது. லாட்டரிச்சீட்டு.. வேதாத்திரி மகிரிஷி என்று நாவலின் காலக்கட்டங்களை உரைத்துக் கொண்டே கதை நகர்வதால் முன்னுரைக்கு பதிலான பின்னுரையின் தொடர்பின்றி மறுபதிப்பு நாவலாக மனதிற்குள் பதிகிறது.
‘கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்.. கவலை உனக்கிலை ஒத்துக் கொள்..’ என்ற கருத்து எதிர்மறையாகிறது. கற்றுக் கொண்ட கைத்தொழில் கண்ணெதிரே நசிந்துக் கொண்டிருக்க விட்டு செல்லவும் முடியாமல் தொட்டு தொடரவும் வழியின்றி போராட்டமாக மாறுகிறது. போராட்டம்.. போராட்டம்.. நீளும் போராட்டம்.. அரசியல் பாதுகாப்பின்மை.. பணபலமின்னை.. வலுவான ஆள் தொடர்பின்மை.. ஒருமித்த கருத்தின்மை.. ஜாதி ரீதியாக மட்டுமே கையெடுப்பு.. என்பது போன்ற காரணிகள் அமிழ்த்துவதில் பசி.. சாவு.. அழுகுரல்.. இவற்றோடு காவல்துறையினரின் அடக்குமுறையும் சேர்ந்து கொள்ள போராட்டம் கூர்மையை இழக்கிறது. இருப்பதை பிடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் நிலைக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது.. என்ற உண்மை நிலைப்பாடு உருக்குலைந்து போகிறது.
நெசவுத்தொழிலின் பிரத்யேக வார்த்தைகளுக்கான அர்த்தங்களை தெளிவு செய்திருக்கலாம். தறிநாடா.. பாவு.. பாவடி.. பில்வேர்.. ஊடைநூல்.. ஜக்காடு மிஷின்.. என்ற நெசவுப்பயணத்தில் சவுண்டியம்மன் கோவில்.. அதை தொடர்ந்த சிறுசிறு நம்பிக்கைள்.. சம்பிரதாயங்கள்.. சிவனின் காரமடை பெருமாள் மீதான பக்தி.. அதை சுற்றியமைந்த கதைகள் போன்றவை நாவலை உயிர்ப்பாக்கி முன் செலுத்துகிறது.
ஒரு தொழிலின் நசிவென்பது முதலில் உணரப்படுவது அந்த தொழிலாளிகளால் தான். அவர்களின் குரல்கள் அலட்சியப்படுத்தப்பட்டு செய்யும் காலப்பயணம் முழுமையற்று தான் போகும். பொன்னுவை நேர்முகத்தேர்வுக்கு அனுப்பும் தகப்பன் ;நாங்கள்ளாம் ஏழப்பட்ட நெசவாள குடும்பம்ன்னு சொல்லுப்பா..’ என்ற ஒற்றை வார்த்தை ஒரு சமுதாய துயரத்தை உணர்த்துகிறது. ஆசாட மாதங்களில் தறிசாமான் கடையா.. அடகு கடையா என்ற சந்தேகம் வந்து விடும் என்ற பதிவுகள் மனதின் சுமைகள்;. கூரைப்புடவை.. ராஜாஜி கதர்.. ஆனந்தரங்கம் பிள்ளையின் நெசவுத்தொழில்.. இப்படியான தகவல்கள் ஏராளம். எண்ணங்களையும் எதிர்கால பயங்களையும் கனவுகளாக்கி வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.
போராட்டத்தின் தொய்வுகளும் நிமிரல்களும் பத்திகளாக வெளிப்படாமல் கதாபாத்திர உரையாடல்கள் மூலம் தெரிய வருவது ஆறுதல்.  ‘ஸ்டிரைக் யார பாதிக்குது..? முதலாளிங்க அக்கறப்படல.. நாமளே இறங்கி வரணும்னு நெனப்பு அவங்களுக்கு.. கடைகளை கூட அபூர்வமா தான் தெறக்கிறாங்க.. எப்போஎப்போன்னு பாத்து நெஞ்ச சேலைய கொடுத்தமுன்னா காசு வேணும்னா உங்க சங்கத்துல கேளுங்கிறாங்க..’ இயலாமை வார்த்தைகளாகிறது. ‘பாவெல்லாம் நீட்டி எவ்ளோ நாளாச்சு..’ குலத்தொழிலின் ஏக்கம் வார்த்தைகளில் வடிகிறது.
ஏகப்பட்ட விஷயங்களை தொட்டு செல்லும் நாவலாசிரியர் பொன்னுவின் பாத்திரத்தில் தன்னையறியாது வெளிப்படுகிறார். ‘நெசவாளிங்க போராட்டத்துல உண்மையா நெசவு செய்றவங்கள மட்டும் போனா போதும்..’ என்று வரமறுக்கும் நேர்மை.. தகப்பனின் தழுதழுப்புக்கு ‘இரக்கப்படற உலகம் இது இல்லப்பா..’ என்ற சமுதாய புரிதல்.. என்று பொன்னுவின் மனப்போக்கு விரிவடைகிறது. நாராயணமூர்த்தி வேடமிட்ட பொன்னு.. தன்னை ஜாதிக்குள் சொருகிக் கொள்ளும் பொன்னு என்றிருந்தவன் வேலையின்றி சலித்து கிடந்ததில் பாசிபடர்ந்த குட்டைக்கு அழுக்கு துணிகளை வெளுக்க செல்லும் தாயும் சகோதரிகளும்.. சோறின்றி போனதில் மயங்கிய தாய்… காசின்றி போனதில் காத்து கருப்பு நம்பிக்கை.. இதற்கு ஒத்து ஊதும் காசி சித்தப்பா.. இப்படியான பற்பல நிகழ்வுகளில் பொன்னுவின் விழிப்புணர்வு உணர்த்தப்படுகிறது. துப்பாக்கி சூட்டில் வீழ்ந்து போன பரமேஸ்வரன் பொன்னுவின் மனதில் உயிர்த்து போகிறார்.. தோழர் ராஜாமணி நிலைத்து விடுகிறார்.. பொதுவுடமை சித்தாந்தத்தின் வழி செல்லும் மனதை கட்டுப்படுத்த முடியாது இறுதியாக பெற்றவர்களிடம் தன்னை தணித்துக் கொண்டு வாதிடும் பொன்னு.. அப்போதே புதுத்தோழர் உருவாகி விடுகிறான்;.
ஒரு விதமான ‘டிரண்ட் செட்டர்களாக..’ தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் தற்போதைய கதராடை காதலர்களை நோக்கி சொடுக்கி விட்ட சாட்டை இந்நாவல். வெகுஜன பார்வைக்கு உட்பட்டேயாக வேண்டிய நாவல்.
நாவலை முடிக்கும் போது காலங்களின் குரல்கள்; காதுகளில் தறிநாடா சத்தமாய்.. சத்தமாய்.. சத்தமாய்..

Series Navigationமருமகளின் மர்மம் – 15நீங்காத நினைவுகள் 33 – சூடாமணி பற்றிய நினைவலைகள்திண்ணையின் இலக்கியத் தடம்-21தினம் என் பயணங்கள் – 4ஜாக்கி 27. வெற்றி நாயகன்தொடுவானம் 2 – விழியறிந்த முதல் கவிதை அவள்!தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம்ஓவியம் விற்பனைக்கு அல்ல…பேரா.வே.சபாநாயகம் – 80 விழா அழைப்புமந்தமான வானிலைநாசா நிலவைச் சுற்றும் “லாடி” [LADEE] விண்ணுளவி ஆய்வு காலத்தை நீடிக்கிறது.மனோபாவங்கள்புதியமாதவியின் மின்சாரவண்டிகள்சிற்றிதழ்களில் சங்கு(2010-2011): கவிதைகள் ஓர் ஆய்வுபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 45வால்ட் விட்மன் வசனக் கவிதை – 61 ஆதாமின் பிள்ளைகள் – 3மணிக்கொடி எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா
author

கலைச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *