மருமகளின் மர்மம் – 16

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

ஷைலஜாவின் ஆயாவாக இருந்த நீலவேணி சாதுவானவள். அமைதியானவள். அதிகம் பேசாதவளும்கூட. அவள் கண்களில் தன்பால் அன்பும் இரக்கமும் சுரப்பதையும் ஷைலஜாவை அவள் ஒரு வளர்ப்புத்  தாய்க்குரிய பாசத்துடன் நேசிப்பதையும் சகுந்தலா அறிந்திருந்தாள். ஆனால், நீலவேணி தன் வாயைத் திறந்து விநாயக்ராமைப் பற்றி அவதூறாக எதுவுமே பேசி அவள் கேட்டது கிடையாது. எனினும் அவளுக்கு அவனைப் பிடிக்காது என்பது மட்டும் சகுந்தலாவுக்குத் தெரியும். அவள் புரிந்துகொண்டிருந்த வரையில் நீலவேணி நம்பத் தகுந்தவள் என்பதால், சகுந்தலா தனக்கோ அல்லது ஷைலஜாவுக்கோ ஏதோ ஆபத்து நிகழ விருந்தது என்று ஊகித்தாள்.

‘என்ன வேணி சொல்லப் போறே?’ என்று திகிலுடன் சகுந்தலா அவளை வினவினாள்.

‘அம்மா! அந்தப் பாவிங்க யாரும் உங்க ரூமுக்குள்ள ரகசியமா எங்கேயாச்சும் ஒளிஞ்சுக்கிட்டிருக்க மாட்டாங்கதானே? எதுக்கும் நல்லாப் பாத்துடுவோம்.’ – நீலவேணி தன் வாயை அவள் காதுக்குள் வைத்துக் குசுகுசுப்பாய் இப்படிச் சொன்னதும் விஷயம் மிகவும் விபரீதமானது என்பதைச் சகுந்தலா புரிந்துகொண்டாள். அவளது இதயம் இரைந்து துடிக்கலாயிற்று. இருவரும் சேர்ந்து அந்தப் பெரிய அறையின் மூலை முடுக்குகள், இணைப்புக் கழிவறை, பரண் ஆகியவற்றை உடனே ஆராய்ந்தார்கள். எவரும் இருக்கவில்லை.

‘சொல்லு, வேணி. யாரைப் பாவிங்கன்றே?’
‘யாருன்னு குறிப்பிட்டுச் சொல்ல? இங்க இருக்கிறதுங்க எல்லாமே பாவிங்கதானே?’

‘சரி. விஷயத்தைச் சீக்கிரம் சொல்லு, வேணி. எனக்குப் படபடங்குது.’

‘நம்ம கொழந்தை ஷைலஜாவைக் கடத்தப் போறாங்களாம்மா.’

‘யாரு, வேணி?’

‘அதாம்மா, அந்த மேக்-அப் மேன் அர்ஜுன் இருக்கானில்ல, அந்தக் கடன்காரப் பாவி! அர்ஜுனும் அந்த லம்பாவும் கொழந்தையை மகாபலிபுரத்துல மத்தப் பொண்ணுங்களோட பாத்திருக்குறான். இஸ்கூல் பஸ்ல தானே போகுதுங்க, பிள்ளைங்க? அதுலதான் இஸ்கூல் பேரு எழுதி இருக்குமே? அதை வெச்சுக் கண்டுபிடிச்சுட்டான் கடங்காரப்பாவி. இன்னைக்கு அந்த லம்பாவும் அர்ஜுனுமாச் சேந்துக்கிட்டு அந்த இஸ்கூலுக்குப் போய், உங்களுக்கு ரொம்ப உடம்பு சரி இல்லைன்னு சொல்லி ஷைலஜாவைக் கூட்டிட்டுப் போய் ஒளிச்சு வைக்கப் போறாங்களாம்.’

‘அய்யய்யோ!’

‘ஆமாம்மா. ஷைலஜா இருக்கிற இடம் யாருக்கும் தெரியக் கூடாதுன்னுதானே நீங்க அவ படிக்கிற இஸ்கூலை ரகசியமா வெச்சிருந்தீங்க?’

‘ஆமா, வேணி. ஆனா, அவங்க பேச்சை அந்த ஸ்கூல் ஹெட்மிஸ்ட்ரெஸ் நம்ப மாட்டாங்க. ஏன்னா, அவங்க கிட்ட எல்லா விஷயமும் சொல்லி யிருக்கேன்.’

‘நம்ப வைப்பாங்களாம்மா. பேசிக்கிட்டாங்க. அந்த எட்மாஸ்டரம்மா இவங்களை நம்பாட்டி, ‘சகுந்தலாம்மாவுக்குப் பேசவும் முடியல்ல, எழுதவும் முடியல்ல. பக்கவாதம் வந்திருக்கு. அதான் எங்க்ளை விநாயக்ராமுக்குத் தெரியாம அனுப்பினாங்க. அவங்க சொல்லாம, எங்களுக்கு எப்படி இந்த இஸ்கூல் விலாசமெல்லாம் தெரியும்’னு  கேட்டு அவங்களை நம்ப வைப்பாங்களாம். நீங்க உடனே •போன் போட்டுப் பேசுங்கம்மா. அவனும் லம்பாவும் இந்நேரம் கிளம்பிப் போயிருப்பாங்களோ என்னமோ. எனக்கு இப்பதான் தெரிய வந்திச்சு. ஜல்தியா ஏதாச்சும் செய்யுங்கம்மா.’
‘நல்ல வேளை. எனக்கு இது ஓய்வு நேரம். இப்பவே வெளியிலே போய்  •போன் பண்றேன்.’ –  சகுந்தலா உடனே விரைந்தாள்.

..  ..  ..’ஹல்லோ! மேரி! நான் சகுந்தலா பேசறேன். யார் வந்து என்ன சொல்லிக் கூப்பிட்டாலும் ஷைலஜாவை அனுப்பாதே.’

‘ஒரு நிமிஷம்!’ என்று பதற்றமான குரலில் பதில் சொல்லிவிட்டு மேரி தொலைபேசிக்குத் திரும்புவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தத் தாமதம் சகுந்தலாவின் வயிற்றில் உப்பும் புளியும் ஒருசேரக் கரைத்தது.

‘சகுந்தலா! உன் •போன் கால் ஒரு நிமிஷம் தாமதமா வந்திருந்தாலும் அந்தத் தடியனுங்க ஷைலஜாவைக் கூட்டிட்டுப் போயிருப்பானுக.  பக்கவாதம் வந்து திடீர்னு படுத்த படுக்கை ஆயிட்டியாம். உன்னோட வாய் கோணிடிச்சாம். கை, காலும் விளங்கலியாம். அதான் லெட்டர் குடுக்கல்லேன்னான். பேசவும் உன்னால முடியாதாம். குரல் போயிடிச்சாம். நான் சந்தேகமா அவனைப் பாத்தேன். ‘என்னை நீங்க நம்பலைன்னு தோணுது. நீங்க வேணா அந்த ஷைலஜாப் பொண்ணையே கூப்பிட்டு என்னைக் காட்டிக் கேளுங்க’ அப்படின்னான் ஒருத்தன். ‘அந்த ஓட்டல்ல சகுந்தலா அம்மாவுக்கு ஆதரவா யிருந்துட்டிருக்கிற ஆளுங்க நாங்க மட்டுந்தான்’ அப்படின்னும் சொன்னானுக. ‘எப்படியானாலும் நானும் உங்க கூட வர்றேன். ஷைலஜாவைத் தனியால்லாம் அனுப்ப முடியாது’ அப்படின்னேன். ‘வாங்க. தாராளமா வாங்க’ ன்னானுக. ‘சரி. நீங்க இங்கே ரிசப்ஷன்லயே இருங்க. நான் ரெடியாறேன்’ அப்படின்னு சொல்லிட்டு அவனுகளை உக்கார வெச்சுப் பத்து நிமிஷம் ஆச்சு. நான் இன்னும் ஒரே நிமிஷத்துல அவனுகளோட ஷைலஜாவையும் கூட்டிக்கிட்டுக் கிளம்புறதா யிருந்தேன். நல்ல வேளை. அதுக்குள்ளே உன்னோட •போன் கால் வந்திருச்சு. பிழைச்சோம்.’

‘இப்ப அவங்க போயிட்டாங்கதானே?’

‘ஆமா.’

‘அம்மாடி. சரி. இப்ப எல்லாத்தையும் விவரமாச் சொல்லு, மேரி.’

‘அவன் அவ்வளவு உருக்கமாப் பேசினானா, ஷைலஜாவைக் கூட்டிக்கிட்டு ரிசப்ஷனுக்குப் போனேன். பார்த்து சில வருஷங்கள் ஆயிடிச்சு, இல்லியா? அதனால, முதல்ல முழிச்சா. அப்புறம் அடையாளம் கண்டுண்டுட்டா.  ‘என்னம்மா ஷைலஜா! உன்னோட லம்பா அங்க்கிளை மறந்துட்டியா’ன்னு அவங்கள்ள ஒருத்தன் கேட்டதும் கண்டுக்கிட்டா. இருந்தாலும் அவனுகளோட தனியா ஷைலஜாவை எப்படி அனுப்புறது? அதான் நானும் வர்றேன்னேன்.’

‘நல்ல காலம். நீ போயிருந்தா, பாதி வழியிலே உன்னைக் கொலை கூடப் பண்ணிப் போட்டிருப்பாங்க. . . அப்புறம்?’

‘அப்புறம் என்ன? அவ்வளவுதான். அதுக்குள்ளே உன்னோட கால் வந்திச்சு. முதல்ல ஷைலஜாவைப் பாத்து விஷயத்தைச் சொல்லிட்டு ரிசப்ஷனுக்குப் போனேன். ‘இத பாருங்கப்பா. இப்ப சகுந்தலாவே என்னோட டெலி•போன்ல பேசினாங்க. நீங்க சொன்னதெல்லாம் பொய்னு தெரிஞ்சிடிச்சு. போலீஸ்க்கு •போன் போயிருக்கு. ஆனா சகுந்தலாம்மா உங்களைத் தப்பிப் போகச் சொல்றாங்க. போறதானா, போலீஸ் வர்றதுக்கு முந்தி நடையைக் கட்டுங்க.. இன்னொரு வாட்டி இங்க வந்தீங்க, நடக்கிறதே வேற’ அப்படின்னு ஒரு போடு போட்டேனா? விழுந்தடிச்சுக்கிட்டு ஓடிட்டானுக..’

‘நல்ல வேலை செஞ்சே, மேரி. அவனைத் தப்ப விட்டது எனக்கு நல்லதுதான். ஏன்? உனக்கும் நல்லதுதான். இல்லாட்டி உன்னை வேற பழி வாங்குவானுக. பாம்புங்க!..  ..  ..அப்புறம், மேரி, ஷைலஜாவை வேற ஸ்கூலுக்கு மாத்திட்றது நல்லதுன்னு தோணுது.’

‘வேற ஸ்கூலுக்கு மட்டுமில்லே, சகுந்தலா. வேற ஊருக்கே அனுப்பிட்றதுதான் சரின்னு தோணுது. நீ இப்ப ஷைலஜாவைப் பாத்தா அப்படியே அசந்து போயிடுவே! அடியம்மா! என்ன ஒரு நிறம்! என்ன ஒரு வாளிப்பு! செதுக்கிவெச்ச சிலைம்பாங்களே, அப்படி இருக்கா. இப்ப ட்ரெஸ்ஸிங் ரூம்ல இருக்கா. அவளே வந்து உன்னோட பேசுவா.  படிப்பு முடிஞ்சதும், அவ ஒரு வேலையில அமர்ந்து அப்படியே கல்யாணமும் ஆயிட்டா, நீ அப்பாடான்னு நிம்மதியா இருக்கலாம். அவளை நீ பாத்து எத்தினி நாளாச்சு! நீ எப்படித்தான் அவளைப் பாக்காம இருக்கியோ!’

‘வேற என்ன வழி இருக்கு, மேரி? என் உணர்ச்சிகளைப் பெரிசா நினைச்சு நான் அவளைச் சந்திச்சா அது அவளுக்கே இல்லே ஆபத்தா முடியும்? இப்ப பாரு. வராம ஒதுங்கி யிருக்கிறப்பவே எப்படி வலை வீசறாங்க!’

‘உண்மைதான்..  .. ..ஹ¥ம்!..  ..  .. பங்களூர்ல அன்னம்மா ஜார்ஜ்னு என் •ப்ரண்ட் ஒருத்தி காலேஜ் ப்ரின்சிபலா யிருக்கா. நான் சொன்னா தட்ட மாட்டா. ஷைலஜாவை அங்க கூட்டிட்டுப் போய்ச் சேர்த்து விட்டுட்றேன். அங்கேயும் ஹாஸ்டல்லாம் இருக்கு. என்ன சொல்றே?’

‘நான் கொடுத்த பணமெல்லாம் எப்பவோ கரைஞ்சிருக்குமே, மேரி? நான் இப்பவே கிளம்பி அங்க வர்றேன். பணமும் எடுத்துக்கிட்டு வர்றேன். ஷைலஜாவையும் பார்த்தாப்ல இருக்கும்.’

..  ..  .. சகுந்தலா உடனே அந்தப் பள்ளியை அடைந்தாள். ஷைலாஜாவைப் பார்த்து அப்படியே பிரமித்துப் போனாள். அத்தனை நாள் பிரிவுக்கும் ஈடுகட்டுகிறாப்போல் அவளை முத்த மழையில் குளிப்பாட்டிக் கண்ணீர் உகுத்தாள்.
‘நான் உடனே கிளம்பணும், ஷைலஜா. இப்பல்லாம் என்னை •பாலோ பன்றதில்லைன்னாலும், நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை. இப்ப உன்னோட ஸ்கூல் அவங்களுக்குத் தெரிஞ்சுட்டதால வந்தேன். இப்போதைக்கு இது என் கடைசி விசிட். பங்களூர்க்கெல்லாம் வர மாட்டேன். அந்த லம்பாவும் அர்ஜுனும் விநாயக்ராமுக்கே தெரியாமதான் வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன். அவங்க ரெண்டு பேரும் தனியாத் தொழில் நடத்த..  ..  .. வேணாம். வாய் கூசுது. நீ கவனமா யிருந்துக்க..  ..  .. மேரி! தேங்க்ஸ் எ லாட். நீதான் இனி ஷைலஜாவுக்கு அம்மா. இப்பவும் கடவுள் என் பக்கம் இருந்திருக்காரு. அதான், தோதா, ஆன்யுவல் எக்ஸாம் முடிஞ்சதும் மகாபலிபுரத்துக்கு பிக்னிக் போயிருக்கீங்க. இவளை இன்னைக்கே நீ பங்களூர்ல கொண்டுபோய் உன் •ப்ரண்ட் கிட்ட ஒப்படைச்சுடு, மேரி  ..  .. ‘  –  வந்த சுருக்கில் சகுந்தலா திரும்பிப் போனாள்.

ஆயா நீலவேணி விநாயக்ராமுக்குத் தெரியாமலேயே லம்பாவும் அர்ஜுனும் தனியாய்க் கூட்டுச் சேர்ந்து செய்த வேலை அது என்று சகுந்தலாவிடம் சொல்லி யிருப்பினும், அவள் விநாயக்ராமிடம் அது பற்றிக் கேட்டாள். அவன் தனக்கு எதுவுமே தெரியாது என்று சத்தியமே செய்ததுடன், உடனேயே லம்பாவை வரவழைத்து விசாரித்தான்.

‘என்ன, லம்பா! திரை மறைவில எனக்குத் தெரியாம. என்னென்னமோ பண்றியாமே? என்ன சமாசாரம்?’

‘சார்! ஷைலஜாவை நேத்து சாயங்காலம் கண்டுபிடிச்சேன். அர்ஜுனும் நானும் அவளைக் கடத்திக் கொண்டுட்டு வந்து உங்களை ஆச்சரியப் படுத்தணும்னு ப்ளான் பண்ணி யிருந்தோம். .. மத்தப்படி.  ..’

‘சரி. இனிமே எங்கிட்ட சொல்லாம இது மாதிரி யெல்லாம் அடாவடி வேலை பண்ணாதீங்க. அர்ஜுனையும் வரச் சொல்லு.’

வந்தான். அவனுக்கும் விநாயக்ராம் எச்சரிக்கை கொடுத்தான். அவன் போன பிறகு, ‘விநாயக்ராம்! உனக்கும் சொல்றேன், கேட்டுக்க. ஷைலஜாவைக் கண்டுபிடிக்கிற எண்ணம் உனக்கும் இருக்குன்றது எனக்கு நல்லாவே தெரியும். அது ஒரு நாளும் நடக்கவே நடக்காது. அவளை நான் நேத்தே பம்பாய்க்கு ப்ளேன்ல ஏத்தி ஒரு •ப்ரண்டோட அனுப்பி வெச்சுட்டேன். கொடுப்பினை இருந்தா நாங்க சந்திப்போம். இல்லாட்டி, எங்கேயாவது, உன் கண்ணுல படாத பத்திரமான எடத்திலே அவளாவது பாதுகாப்பா யிருக்கட்டும்னு விட்டுடுவேன். அவளை நான் அடிக்கடி சந்திக்கணும்கிறதை விட, அவ உன் கையிலே சிக்கி என்னை மாதிரி சீரழியாம இருக்கணும்கிறதுதான் ஒரு தாயார்க்காரியான எனக்கு ரொம்ப முக்கியம்.’

விநாயக்ராம் சட்டென்று பாய்ந்து அவளது கைப்பையைப் பறித்து உள்ளே துழாவினான்.

சகுந்தலா இடிஇடியென்று சிரித்தாள்: ‘பம்பாய் அட்ரெஸ் இருக்கான்னு துழாவிப் பாக்குறியா? நானென்ன முட்டாளா? அது என் மூளையில மட்டுமே பதிவாகி யிருக்கு. எந்தக் காகிதத்திலேயும் கிடையாது. டயரியிலேயும் இல்லே. உன்னோட பழகிப் பழகி உன்னோட நரித்தனம் பிடிபட்டுப் போயிட்டதால எனக்கும் கொஞ்சம் முன் ஜாக்கிரதை யெல்லாம் வந்திடிச்சு, விநாயக்ராம்!’

‘சரி, சரி. இந்த உலகத்துலே உன் பொண்ணு ஒண்ணுதான்  பெரிய அழகியா என்ன!’

‘சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும்!’

சற்றுப் பொறுத்து, ‘இன்னொரு விஷயம், விநாயக்ராம். நான் விலகிக்கலாம்னு பாக்கறேன். காண்ட்ராக்ட் என்னைக்கோ முடிஞ்சு போயிடிச்சு. அதனால இனிமே நீ என்னைக் கட்டாயப் படுத்தித் தங்க வைக்க முடியாது.’

‘நிறைய் பணம் சேர்த்துட்டே போல!’

‘உண்மைதான். வர்றவங்க, போறவங்க ஆயிரக் கணக்கில இல்லே எனக்குப் பணம் குடுத்திட்டு இருந்தாங்க! எல்லாம் பாங்க்ல இருக்கு. ஆனா, அதெல்லாம் பாவப் பணம். நான் பசி, பட்டினி இல்லாம வாழுறதுக்குத் தேவையானதை மட்டும் வெச்சுக்கிட்டு, மீதியைத் தருமம் பண்ணிடலாம்னு இருக்கேன்.’

‘பாவப் பணத்தைத் தருமம் பண்ணிப் புண்ணியம் சம்பாதிக்க முடியாதுங்கிறது உன்னோட பொன்மொழியாச்சே!’

‘இப்பவும் அதே கொள்கைதான். ஆனா, நான் எந்தப் பாவமும் பண்ணலியே, விநாயக்ராம்? நான் பண்ணினதெல்லாம் பாவம்னா, அதைப் பண்ண வேண்டிய கட்டயத்துக்கு என்னை உள்ளாக்கின உன் பாவத்தைப்பத்தி என்ன சொல்ல! என் கவுரவமான வயித்துப் பிழைப்பை நீதானே கெடுத்தே? அதனால, நான் உயிர் வாழுறதுக்குத் தேவையானதை மட்டும் அதிலேருந்து எடுத்துக்கிறது எப்படிப் பாவமாகும்? நான் ஒண்ணும் புண்ணியம் சம்பாதிக்கணும்கிற நினைப்பில அந்தப் பணத்தை யெல்லாம் தரும கரியங்களுக்குச் செலவழிக்கப் போறதில்லே. உன் சதியால வந்த பணம் என்னோட நிரந்தரமாத் தங்கி என் ஆத்மாவைக் கறைப் படுத்த வேண்டாமேன்னுதான்!’

‘சரி, சரி.. நீ போய்க்க. ஆனா, உன் இடத்தில இன்னொருத்தி வந்த பெறகு போ.’

‘இப்படியே எத்தினி நாள் கடத்துவே? சரி. உனக்கு மூணு மாசம் டைம் தர்றேன். அதுக்குள்ள ஒருத்தியைத் தேடிப் பிடி.’

இந்த இடைவெளியின் போதுதான், அங்கு ஒப்பனையாளனாக இருந்த அர்ஜுன் தானே ஓர் ஓட்டலைத் தனியாகத் தொடங்க இருப்பதாகவும், அவள் வந்தால் இரு மடங்குப் பணம், பல மடங்கு வசதி எல்லாம் தருவதாகவும் ஆசை காட்டி அவளைக் கூப்பிட்டான். ஆனால் அவள் அவனது அழைப்பை மறுதலித்துவிட்டாள். சீரான உடலும், முதிராத முகமும் கொண்டு, ஒப்பனைக்குப் பின் இருபது வயதை விழுங்கிவிடும் இளமைத் தோற்றம் கொண்ட தன்னை அடித்துச் செல்ல அவன் அவாவியது அவளுக்குப் புரியவே செய்தது..
மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு பெண் அவளது இடத்தில் அமர்ந்ததும் அவள் அங்கிருந்து நிலையாக விடை பெற்றாள். போவதற்கு முன், அங்கிருந்த ஊழியர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்கினாள். நெருக்கமாகப் பழகிய ஓட்டல் நண்பர்களுக்குத் தனது புதிய முகவரியைத் தரும் நிர்ப்பந்தம் அவளுக்கு இருந்தது. ஆனால், அவர்களது அன்புத் தொல்லை விளைவிக்கக்கூடிய தொடர்பால் தனது பழைய வாழ்க்கை நினைவுபடுத்தப் படுவதில் அவளுக்கு விருப்பம் அறவே இல்லை. எனவே புது இடத்துக்குப் போய் இரண்டே வாரங்களில் அவள் அவசரமாக வேறிடத்துக்குக் குடி பெயர்ந்தாள்.

கொஞ்ச நாள் வெளியே எங்கேயும் செல்லாதிருந்தாள். ‘பெரிய மனிதர்கள்’ தன்னை அடையாளம் தெரிந்து கொள்ளுவதை அவள் சகித்துக்கொள்ளத் தாயாராக இல்லை. அயினும் கறுப்புக் கண்ணாடியுடனும் தலை முக்காடு அணிந்து அதனால் முகத்தின் பெரும் பகுதியை மறைத்தவாறும் அவள் அவ்வப்போது ஆட்டோவில் சென்று மேரியைச் சந்தித்து வந்தாள். ஆட்டோ ஒருதரம் பெற்றோலுக்காகக் காத்திருந்த நேரத்தில் அவள் அர்ஜுனை இடற நேர்ந்தது. ஆனால் அவனைப் பேச அனுமதிக்காமல், மவுனம் காத்து, அவள் விரைந்தாள். எனினும் தனது பைக்கில் அவன் தன்னைப் பின்தொடருவான் என்று தோன்றியதால், அவள் நேரே தன் இருப்பிடம் செல்லாமல், மேரியின் பள்ளிக்குப் போய் வெகு நேரம் இருந்த பின், பின் புற வழியாக வேறோர் ஆட்டோ பிடித்துத் திரும்பினாள். இப்படி எத்தனை நாள் லம்பா, அர்ஜுன் போன்றவர்களுக்குக் கடுக்காய் கொடுக்க முடியும் என்கிற அவநம்பிக்கையும் மனச் சோர்வும் அவளிடம் ஏற்பட்டவாறுதான் இருந்தன.

பங்களூரில் படித்துக்கொண்டிருந்த ஷைலஜாவிடமிருந்து வாரா வாரம் வந்துகொண்டிருந்த கடிதங்கள்தான் அவளது ஒரே ஆறுதல்.

..  .. ஷைலஜா படிப்பை முடித்துப் பட்டத்துடன் சென்னைக்கு வந்து சேர்ந்தாள். அதன் பிறகுதான் சகுந்தலா மிக விரிவாக அவளிடம் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை யெல்லாம் கூறினாள். ‘நீயாவது நல்லா இருக்கணும்னுதாம்மா உன்னை விட்டுப் பிரிஞ்சிருந்தேன். மத்தப்படி என் மனசு கல்லுனு நினைச்சுடாதேம்மா!’ என்று அவள் அழுத போது, ‘எனக்குப் புரியாதாம்மா? மேரி மிஸ் எனக்குக் கிட்டத்தட்ட அம்மா மாதிரி இருந்து உன்னைப் பிரிஞ்சிருந்த குறையைத் தீர்த்து வெச்சாங்கம்மா. அதனால என்னைப் பிரிஞ்ச ஏக்கம் உனக்குத்தான் அதிகமா யிருந்திருக்கும்,’ என்று கூறி ஷைலஜா அவளைத் தேற்றினாள்.

‘ஷைலஜா! நீ முதல்ல ஒரு வேலை தேடிக்கணும். சீக்கிரம் உனக்குக் கல்யாணமும் பண்ணிடலாம்னு! ஆனா நீ என்னோட மகள்ங்கிறது யாருக்கும் தெரியக் கூடாது. ஒரு காபரே ஆட்டக்காரியோட மகள்ங்கிற ஏளனப் பார்வை உன் மேல விழறதை என்னால தாங்க முடியாது. அதனால நாம ரெண்டு பேரும் யோசிச்சு ஒரு பொய்யைச் சொல்லணும். இப்போதைக்கு நாம கொஞ்ச நாளுக்குச் சேர்ந்து இருக்கலாம். ஆனா அதுக்குப் பெறகு பிரிஞ்சு வாழுறதுதான் உனக்கு நல்லது. நீ ஒரு ஹாஸ்டலுக்குப் போயிடணும்.’

‘அது முடியாதும்மா. என்னை, ‘உன்னோட அம்மா யாராயிருந்தாலும் பரவாயில்லை’ன்னு சொல்லி எவன் ஏத்துக்கத் தயாரா யிருக்கானோ, அவனைத்தான் நான் கலியாணம் பண்ணிப்பேன்.’

‘நான் சொன்னதுக்கு மேலேயே புரிஞ்சுக்கிட்டுப் பதில் சொல்றே.’

‘உன்னோட மகளாச்சேம்மா?’
‘இருந்தாலும், நீ நான் சொல்ற பொய்யைச் சொல்லித்தான் ஆகணும்!’ என்றாள் சகுந்தலா, மிகுந்த கண்டிப்புடன்.

– தொடரும்

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *