தினம் என் பயணங்கள் – 6

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

ரகசியம் ஏதுமின்றி
மனசைத் திறந்த காட்டும்
மலர்களைப் போலநிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும் !
– வைரமுத்து.

தினம் என் பயணத்தில் நான் மகிழ்ச்சியாய் கலந்து கொண்ட இரு நிகழ்வுகளைப் பற்றி பதிவிட வேண்டும் என்று முன்பு குறித்திருந்தேன். தீடீர்மாற்றம் போல் நிகழ்ந்த ஒரு நிகழ்வு மகிழ்ச்சியைப் புறந்தள்ளியது. இரு இனம் புரியாத வலி மனதை ஆட்கொண்டு விட மன அழுத்தத்தின்பாற் ஈர்க்கப்பட்டேன்.
என் பேஸ்புக் கணக்கை யாரோ களவாடிவிட்டார்கள். அப்படிக் களவாட முடியுமா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் பேஸ்புக் கணக்கு என் வசம் இருக்கவில்லை. என் அனுமதி இன்றி யாரோ நிலை போடுகிறார்கள். இது எனக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது.
நான் சாத்தனூர் அணைக்குச் சென்று வந்த அன்றய தினத்தில், என் தம்பி என்னை அழைத்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றான்.“பயணக் களைப்பு இப்போதுதான் உறங்கி விழித்தேன்,” என்றேன்.“உன் செல் யாரிடம் இருக்கிறது…?”“ஏன்..? என்னிடம் தான்.”“உனக்கு பைத்தியம் ஏதும் பிடித்துவிடவில்லையே…”“ஏன்”“உன் பேஸ்புக் அக்கவுண்ட் போய் பார்”
“”என்னதான் சொல்லேன்,” என்றேன் ஆவலை அடக்க முடியாமல்கிஸ் மீஐ லவ் யு“இப்படியும் ஸ்டேடஸ் போடுவார்களா…?” என்றான்.

“என்னடா சொல்ற” என்று அதிர்ந்து போனேன். நான் பேஸ்புக் போய்ப் பார்த்த போது சொல்லவே வாய் கூசும் சில வாக்கியங்கள் பதிவிடப்பட்டிருந்தன. மனம் பதறி போய் எல்லாவற்றையும் டெலிட் செய்துவிட்டு,

பேஸ்புக் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள், என்னுடைய பேஸ்புக் அக்கவுண்ட் களவாடப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட பதிவிற்காக மனம் வருந்துகிறேன் என்று பதிவிட்டால் உடன் மொபைலில் இருந்து நான் இப்படி தான் எப்போதும் மாற்றி மாற்றிப் பேசுவேன் என்று பதிவு போடுகிறார்கள். நான் மிகவும் பயந்து போய் பேஸ்புக் அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி என்று தெரியாமல் தடுமாறினேன்.
சரி பாஸ்வேர்ட் மாற்றிவிட்டால் உள் நுழைய முடியாது என்று எண்ணினால் மீண்டும் பாஸ்வேர்ட் மாற்றி என் நண்பர்கள் அனைவரையும் அன்பிரண்ட் செய்திருந்தார்கள்.
வேதாகமத்தில் ஒரு வசனம் உண்டு.

ஆதியிலே ஒரு வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது.  அந்த வார்த்தை தேவனாகவும் இருந்தது, என்பதுதான்
வார்த்தைகளுக்கு ஒரு வல்லமை உண்டு,  வார்த்தைகளின் வகைகளுக்கு ஏற்ப அதனால் கடவுளாகவும்  சாத்தானாகவும் செயல்பட முடியும்.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.என்பது திருவள்ளுவரின் கூற்று. ஆனால் அன்று நடந்த நிகழ்ச்சி எழுத்தினால் சுட்ட வடு.
பேஸ்புக்கினால் இரு பாலரும் பாதிப்படைகிறார்கள். இருப்பினும் பெண்கள் முன் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் அதிகக் காயப்பட நேரும்.எனவே பெண்கள் பேஸ்புக்கில் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைத் தெரியும்படி வைத்துக் கொள்ளாதீர்கள். நன்கு அறிந்தவர்களை மட்டுமே நண்பர்கள் வட்டத்தில் அனுமதியுங்கள்.
இது என் அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடம்.

என்னால் யார்மீது கோபத்தை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. அந்த மனநிலையில் நான் எழுதிய கவிதை தான் துணிவின் உயர்வு நிலை.

நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்

 

என் ஒவ்வொரு வலிகளில் இருந்தும்

நான் காயப்பட்டேன்,

இயேசு கிறிஸ்துவைப் போல்

என் உடல் வதைப்பட்டு

குருதி வழியவில்லை அவ்வளவே !

 

என் இதயத்தின் இரத்த நாளங்களை

பிழிந்து செல்லும் வதைகளைப் பற்றி

சிந்திக்க துணிந்தேன் நான் !

வெகுண்டெழலாம் வார்த்தைகளில்

கடுமை தீட்டி குத்திப் பார்க்கலாம்

அணுவின் உட்பொருள் ஒன்றில் !

 

நான் அன்பானவள் தான்

அந்த நிச்சயத்தின் இறுதி

துளியிலும் என் நேர்மை

சிரித்துக் கொண்டிருக்கும்.

கசிந்து உருகும் காயங்கள்

என்னில் மையல் கொண்டாலும்

அவை என்னோடு ஒட்டி பிறக்கவில்லை

 

குட்டியபின் குனிந்து போக

நான் ஒன்றும் ஏழைப் பாமரத்தி அல்ல !

துணிந்து நேர் நிற்கும்

பாரதிப் பைங்கிளி !

கொஞ்சம் சீண்டுங்கள்

யார் இருப்பினும் என் மனம்

வலிமை பெறட்டும்.

முடிந்தவரை காயப் படுத்துங்கள்

என் மனம் இரும்பாகட்டும் !

 

இதயச் சதையை ஊசிக்கொண்டு

குத்தி பாருங்கள்,

உங்கள் வக்கிரம் விடைபெறட்டும் !

 

நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு

உங்கள் செயல்களால்

நான் மெருகேறினேன்;

வசைகளால் வைரம் ஆனேன்

முடங்கிப் போக நான் ஒன்றும்

வயிற்றுக்காக வாழும்

விலங்கினமல்ல !

துணிவின் உச்சம்

காளியின் மறு அவதாரம் !

+++++++++++++++

[தொடரும்]

Series Navigationபூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்ததுமருமகளின் மர்மம் – 17தமிழ்த்தாத்தா உ.வே.சா.: கற்றலும் கற்பித்தலும் -1நீங்காத நினைவுகள் – 35 ஜோதிர்லதா கிரிஜாபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 47ஹாங்காங் தமிழ் மலர்திண்ணையின் இலக்கியத் தடம் – 23குலப்பெருமை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *