முனைவர் ந. பாஸ்கரன்
உதவிப் பேராசிரியர்,
பெரியார் கலைக் கல்லூரி,
கடலூர்-1.
தமிழகம் பெருமையுடன் தமிழ்த்தாத்தா உ.வே.சா–வினுடைய 160-ஆம் பிறந்தநாளைப் பெருமையுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் தருணமாகும். ஏட்டுத்தமிழைப் புத்தகவடிவத்திற்குக் கொண்டு வந்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர். சங்கஇலக்கியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள், இலக்கணங்கள் என்று பல நூல்களைப் பதிப்பித்துள்ள உ.வே.சா விற்கு ஊற்றமாக இருந்தது அவரின் கல்வி அறிவும் அயராத உழைப்புமே ஆகும். அவர் தமக்கான கல்வியை வாங்கியதும் வழங்கியதும் தனித்த கலையாகவே உள்ளது. அவர் காலத்து சூழலில் வைத்து இதனை நோக்கும்போது மிகவும் அதிசயத்தக்கதாகவே உள்ளது.
ஆரம்பக்கல்வியில் உ.வே.சா.:
உத்தமதானபுரத்தில் இவரின் தொடக்க்க்கல்வி தொடங்கியுள்ளது. கிராமப்பள்ளி அல்லது திண்ணைப்பள்ளி என்பதில் படித்துள்ளார். காலை 5 மணியிலிருந்து இரவு 7 மணிவரை பாடம் சொல்லிக்கொடுத்துள்ளனர். பள்ளிக்கூட ஆசிரியர் கையில் எப்பொழுதும் பிரம்பு வைத்திருப்பார். ஆசிரியரை வாத்தியார் அல்லது கணக்காயர் என்று அழைத்துள்ளனர். பள்ளிக்கூடத்திற்கு எல்லோரும் நேரத்திற்கு வந்துவிடுவர். அப்படி வராவிட்டால் அவர்களுக்கு அடிவிழும். அந்த அடி பள்ளிக்கூடம் விடும் நேரத்தில் விழும். அதாவது, ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடம் முடியும்நேரம் வீட்டிற்கு செல்லும் மாணவர்களை வாத்தியார் வரிசையாக வகுப்பிற்குள் நிற்கவைத்துவிட்டு அவர் வகுப்புவாசலில் உட்கார்ந்து கொள்வார். நிற்கும் மாணவர்களில் ஒருமுறை இருக்கும். அதாவது, காலையில் வகுப்பு தொடங்கும் நேரத்திற்கு முன்னமேயே வந்தவன் முதலில் நிற்பான், அடுத்துஅடுத்து வந்தவன் அடுத்து நிற்பான். இவர்களில் முதலில் நிற்பவனை அதாவது காலையில் வகுப்புக்கு எல்லோருக்கும் முன்பு முதலில் வந்தவனை கை நீட்டச்சொல்லி பிரம்பால் அவனது கையைத் அழுத்தித்தடவிக் கொடுப்பார் அடிக்க மாட்டார். அடி வாங்குவதிலிருந்து அவன் மட்டும் விடுபடுவதால் அவனை ‘வேத்தான்’ என்பார்கள். அடுத்துஅடுத்து வரிசையில் வரும் மாணவர்களுக்கு அடிக்கும் வேகத்தைக் கூட்டிக்கொண்டே செல்வார். இது அன்றைய தினத்துக்கான தண்டனையாகவும், அடுத்த தினத்துக்கான நினைவூட்டலாகவும் அமைந்துவிடும். அடி வாங்குவதிலிருந்து தப்பிக்க ஒவொருவரும் முன்கூட்டியே வந்துவிடுவராம். மாலையில் வீட்டிற்கு அதுமட்டுமன்றி நினைவுத்திறனை வளர்ப்பதற்காக பறவை, மரம், பூ என்பனவற்றின் பெயர்களில் ஒன்றினைச் சொல்லி அனுப்புவார். அப்பெயரை மறுநாள் வந்தவுடன் சரியாக சொல்லவேண்டும். இடைவேளையில் சாப்பிடப் போகும்போதும் பள்ளிக்கூடப்பாடத்தை மறக்கக்கூடாது என்பதற்காக கையில் அடி கொடுத்து அனுப்புவார். எனவே, கிராமப் பள்ளிக்கூட வாத்தியார்கள் அனைவரும் கையில் பிரம்பு வைத்திருப்பார்கள். வகுப்பில் உள்ள மாணவர்களில் பலமிக்கவனைச் சட்டாம்பிள்ளையாக(லீடர்) போடுவர். உ.வே.சா. மெலிந்ததேகம் கொண்டவராக இருந்த்தால் அவர் சட்டாம்பிள்ளையாக ஆகும் வாய்ப்பே இல்லாதவராக இருந்துள்ளார். எழுதுவதற்கும் படிப்பதற்கும் பனையேடுகள்., எழுதுவதற்கு எழுத்தாணி. பள்ளியில் சேர்ந்தவுடன் முதலில் படிக்கும் ஓலைக்கு ‘சுவடித்தொடக்கல்’ என்பர். பார்த்து எழுதுவதற்காக வாத்தியாரால் எழுதிக்கொடுக்கப்படும் ஓலையை ‘மூலஓலை’ என சுட்டியுள்ளனர். இத்தகைய பின்புலமுள்ள பள்ளியில் உத்தமதானபுரம் நாராயணஐயர் என்பவரிடம் தான் உ.வே.சா தனது தொடக்கக் கல்வியைப் படித்துள்ளார். அதன்பின், சாமிநாதஐயர் என்பவரிடம் எழுத்துப் பயிற்சியை மணலில் எழுதுவதில் இருந்து ஓலைசுவடியில் எழுதுவது வரை கற்றுள்ளார்.
உயர்கல்வியில் உ.வே.சா :
அதன்பின், அரியலூர் சடகோபய்யங்காரிடம் தமிழையும் சங்கீதத்தையும் பயின்றுள்ளார். தமிழின் மீதானப்பற்று இவரின் கற்பித்தலில் இருந்தே உ.வே.சா-விற்கு அரும்பியுள்ளது. உ.வே.சா அவர்களின் குடும்பச்சூழல் பின்னணி அவருக்கு இயல்பாகவே சங்கீத ஞானத்தை ஏற்படுத்தி வைத்திருந்தது. தமிழ்ஞானத்துடன் கூடிய சங்கீதஞானத்தையும் குன்னம் குமாரசாமி கவிராயர், கார்குடியைச் சார்ந்த கஸ்தூரிஐயர் மற்றும் சாமி அய்யங்கார், வெண்மணி அமிர்தகவிராயர் போன்றவர்களாலும் ஏற்படுத்திக்கொண்டார். பின்னர், பாபநாசம் இராகவஐயரிடம் பாடம் பயின்றுள்ளார். இவ்வாசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் பயின்றவர் என்பதால் மிக்க அனுபவத்தையும், திறமையயையும் கற்பித்தலில் பயன்படுத்தியுள்ளார். இதில் உ.வே.சா மனமொன்றி ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக உ.வே.சா தன்னுடைய குருவான மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்விகற்றால் சிறப்பாக இருக்கும் என்ற சிந்தனையை உ.வே.சா விடம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆசிரியர் மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் பேராற்றலையும் அவருக்கு எடுத்துரைத்துள்ளார். அதன் காரணமாக உ.வே.சா-விற்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளையைப் பற்றிய கனவுகளும் கற்பனைகளும் வளரத்தொடங்கியுள்ளது. அதன்பின், அரும்பாவூர் நாட்டாரிடம் பாடம் படித்துள்ளார். அவரும் மகாவித்வானைப் ப்0அற்றி விரிவாக எடுத்துரைத்துள்ளார். அத்தோடு உ.வே.சா-வின் தந்தையிடமும் வலியுறுத்தியுள்ளார். ‘காரிகை’ பாடம் படிப்பதற்காக விருத்தாசலம் ரெட்டியாரிடம் உ.வே.சா இணைந்துள்ளார். காரிகை கற்றதால் இலக்கணத்துடன் கவிதை புனையும் ஆற்றலைப் பெற்றார். வெண்பாவிற்கான இலக்கணத்தை வெண்பாவிலேயே எழுதிக்காட்டும் அளவிற்கு காரிகை கைவரப்பெற்றார். இவரிடம் இருக்கும்போது அதிகமான எண்ணிக்கையில் தமிழ் ஏடுகளைப் படிப்பதற்கான வாய்ப்பு உ.வே.சா-விற்கு கிடைத்துள்ளது. தனிப்பாடல் திரட்டுகளில் இருந்து பலப்பல பாடல்களைப் பயிற்றுவித்திருக்கிறார். அவர் பயிற்றுவிப்பதை நிறைவு செய்யும்போது நீ அடுத்து பயிலுவதற்குரிய சரியான இடம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையே என்பதை வலியுறுத்தி கூறியுள்ளார்.
உ.வே.சா-ஒரு செயலை மேற்கொள்ள கயிறுசார்த்திப்பார்த்தல் என்ற பழக்கத்தை வைத்திருந்துள்ளார். கயிறுசார்த்திப்பார்த்தல் என்பது கண்ணை மூடிக்கொண்டு தான் வணங்கும் கடவுள் தொடர்பான பக்தி நூலின் பக்கங்களுக்கு இடையில் ஒரு நூலினை அழுத்திப்பொருத்தி அப்பக்கத்தில் இருக்கும் ஒரு பாடல் உணர்த்தும் செய்தியின் பொருளைக்கொண்டு செய்ய எண்ணும்செயலை செய்யலாமா?வேண்டாமா? என்று தீர்மானிப்பது ஆகும். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்விகற்க விரும்பும் எண்ணத்தையும் உ.வே.சா- திருவிளையாடற்புராணம் என்ற நூலில் கயிறுசார்த்திப்பார்த்து மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்விகற்க போவது என்று உறுதிசெய்கிறார்.
(கற்றல் தொடரும்)
- வாசிக்கப் பழ(க்)குவோமே
- தொடுவானம் 4. உன்னோடு நான் எப்போதும்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 21
- தூமணி மாடம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 63
- வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் : அமிர்தம் சூரியாவின் கவிதைகள்
- தினம் என் பயணங்கள் – 6
- பிழைப்பு
- ஒரு மகளின் ஏக்கம்
- பூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்தது
- மருமகளின் மர்மம் – 17
- தமிழ்த்தாத்தா உ.வே.சா.: கற்றலும் கற்பித்தலும் -1
- நீங்காத நினைவுகள் – 35 ஜோதிர்லதா கிரிஜா
- புகழ் பெற்ற ஏழைகள் - 47
- ஹாங்காங் தமிழ் மலர்
- திண்ணையின் இலக்கியத் தடம் – 23
- குலப்பெருமை
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-23 கடோத்கஜனின் முடிவு.
- கிழவியும், டெலிபோனும்
- பாலு மகேந்திரா – திரைப்படங்கள் திரையிடல். நாள்: 01-03-2014