மருமகளின் மர்மம் – 17

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

தன் தாய் சகுந்தலாவின் குரலில் அத்தகைய கண்டிப்பை அதற்கு முன்னர் எக்காலத்திலும் அறிந்திராத ஷைலஜா திகைப்புடன் அவளை ஏறிட்டாள்.

‘என்ன பொய்ம்மா சொல்லச் சொல்றே?’

‘நீ கல்யாணம் பண்ணிக்கிட்டுக் குடியும் குடித்தனமுமா நிம்மதியா வாழணும்னா, உன் அம்மா ஒரு காபரே ஆட்டக்காரிங்கிறதை நீ மறைச்சுத்தான் ஆகணும். ஆனா, நான் யாருன்றது இந்த மெட்ராஸ் பெரிய மனுஷங்கள்ள முக்கால்வாசிப் பேருக்குத் தெரியும். அதனால அதை உன்னால வெற்றிகரமா மறைக்க முடியாது.’

‘அப்ப எப்படி.. .. ..’

‘அதுக்கு ஒரு சுலபமான வழி இருக்கு, ஷைலஜா. உன்னோட அம்மா உயிரோட இல்லைன்னு நீ சொல்லணும்!’

ஷைலஜா அதிர்ந்து போய் எழுந்து நின்றாள்: ‘என்னம்மா, இது! இப்படி ஒரு பொய்யைச் சொல்ல என்னால முடியாதும்மா. ரொம்ப அழகாயிருக்கே, நீ சொல்றது! குத்துக்கல் மாதிரி நீ இருக்கிறப்ப, நீ செத்துப் போயிட்டேன்னு எப்படிம்மா என்னால பொய் சொல்ல முடியும்? அந்த நெனப்பையே என்னால தாங்க முடியாதும்மா. அப்படியாவது எனக்கு ஒண்ணும் நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டாம்! நான் ஒண்ணும் அதுக்கு அலையல்லே!’

கண் கலங்கி நின்ற ஷைலஜாவின் தோள்களைப் பற்றிய சகுந்தலா அவளை உட்கார வைத்தாள்: ‘இத பாரு, ஷைலஜா! வாழ்ககையில ஜெயிக்கணும்னா சில அவசியமான பொய்களைச் சொல்லித்தான் ஆகணும். அந்த பொய் மத்தவங்களுக்குத் தீங்கு செய்யக் கூடாது. அது ஒண்ணைத்தான் நாம கவனிக்கணும். திருவள்ளுவரே என்ன சொல்லியிருக்காருன்னு உனக்குத்தான் தெரியுமில்ல?’

‘போதும்மா. உன் ஆதரவுக்குத் திருவள்ளுவரை எதுக்கு இழுக்குறே? நீ என்ன காரணம் சொன்னாலும், என்னால அப்படி ஒரு மோசமான – இதயமே இல்லாத – பொய்யை என்னோட சுயநலத்துக்காகச் சொல்ல முடியாதும்மா. என்னை விட்டுடு.’

‘இதிலே உன்னோட சுயநலம் எதுவுமே இல்லே, ஷைலஜா. என்னோட சுயநலம்தான் அதிலே இருக்கு. நான் சந்தோஷமா யிருக்கணும்னா நீ சந்தோஷமா இருந்தாகணும். உன் அம்மாவோட சந்தோஷத்துக்காக நீ கொஞ்சம் இறங்கி வரக்கூடாதாம்மா?’

‘அப்படி ஒரு பயங்கரப் பொய்யைச் சொல்லிட்டு நான் சந்தோஷமா யிருப்பேன்னு எப்படிம்மா நினைக்கிறே? உன் மகளை நீ புரிஞ்சுக்கல்லேம்மா.’

‘நீ மட்டும் என்னைப் புரிஞ்சுக்கிட்டா பேசறே? நீ வாழ வேண்டிய சின்னப் பொண்ணு, ஷைலஜா. வறட்டு லட்சியங்களுக்காக வாழ்க்கையைப் பாழாக்கிக்கக் கூடாதும்மா. நான் இப்படின்னு தெரிஞ்சா உனக்குக் கல்யாணமே ஆகாது, ஷைலஜா. அப்பால நீ தனி மரமா நின்னுடுவே. என் காலத்துக்குப் பெறகு உனக்கு யாருமே இருக்க மாட்டாங்கம்மா. தயவு பண்ணி நான் சொல்றதைக் கேளு.’

‘இந்த உலகத்தில எத்தினியோ அநாதைங்க இல்லியா? அவங்கள்ள ஒருத்தியா இருந்துட்டுப் போறேம்மா. எனக்கு நீ கொடுத்த படிப்பு இருக்கு. மேரி ஆண்ட்டி கல்யாணமா பண்ணிக்கிட்டாங்க? கல்விக்கே தன்னை அர்ப்பணம் பண்ணிட்டு சந்தோஷமாத்தானே இருக்காங்க?’

‘அப்படின்னு நீயும் நானும் நினைச்சா அது தப்பும்மா.’

‘நீதான் அவங்க மனசுக்குள்ள பூந்து பாத்தியாக்கும்!’

‘இப்படி விதண்டாவாதமாவே பேசிட்டிருக்காதே, ஷைலஜா. சரி. நான் மேரி கிட்டவே இதைப் பத்திப் பேசறேன். நீ அவங்களுக்குத்தான் மசிவே.’

‘நான் யாருக்கும் மசியமட்டேன். நான் என்ன துகையலா, இல்லாட்டி தொக்கா?’

சகுந்தலா அவளை முறைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்தாள்.

.. .. ஞாயிறன்று மேரி வந்தாள். நெடிய வாக்குவாதங்களுக்குப் பின்னர், ஷைலஜா தனக்கு ஒரு வேலை கிடைத்ததற்குப் பிறகு சகுந்தலாவிட மிருந்து பிரிந்து சென்று பெண்கள் விடுதி ஒன்றில் இருக்கச் சம்மதித்தாள்.

‘அந்த அர்ஜுனும் லம்பாவும் ஓய்ஞ்சு போனவங்க மாதிரி இப்ப தெரிஞ்சாலும், ரெண்டும் சரியான நாய்ங்க. பணத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணக் கூடியவங்க. அவங்க பார்வையிலே நீ மறுபடியும் பட்றதுக்கு முந்தி உனக்குக் கவுரவமான இடத்தில ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுடணும் கிறதுதான் என்னோட கவலையே!’

தன் அம்மா உயிருடன் இல்லை என்பதாய் ஷைலஜாவைப் பொய்சொல்ல வைக்கத் தன்னால் முடியும் என்று சகுந்தலாவுக்கு உறுதி யளித்த மேரி தன் கல்லூரியிலேயே ஒரு செய்முறை ஆசிரியர் (Demonstrator) வேலை காலியாக இருப்பதாகவும், வேறு உயர்ந்த வேலை கிடைக்கிற வரையில் ஷைலஜா தன்னுடனேயே இருந்து கொள்ளலாமென்றும் கூறி அவளை உடனழைத்துப் போனாள். பிரிவாற்றாமை சகிக்க முடியாததாக இருந்தாலும், மேரி அவளை அழைத்துக்கொண்டு போய் விட்டதில் சகுந்தலா நிம்மதியாகவும் உணர்ந்தாள்.

நாள்கள் நகர்ந்தன. மேரி நாள்தோறும் ஷைலஜாவோடு பேசிச் சகுந்தலா சொல்லச் சொன்ன பொய்யை ஏற்க அவளை எப்படியோ ஒருவாறு இணங்க வைத்துவிட்டாள். இரண்டே மாதங்களில், தனியார்த் தொழிலகம் ஒன்றின் நிர்வாக அலுவலகத்தில் ஷைலஜாவுக்கு வேலை கிடைத்தது. மேரி அவளை அதன் பின்னரும் தன்னுடனேயே தங்க வைத்துக்கொண்டாள். தன் காரிலேயே அவளை அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விடுவதும், மாலையில் அவளை அழைத்து வருவதும் அவளுடைய அன்றாடப் பணிகள் ஆயின.

சில மாதங்கள் கழித்து மேரி சகுந்தலாவுக்குத் தொலைபேசியில் தெரிவித்த செய்தி அவள் காதுகளுள் இன்னிசையாய்ப் புகுந்து அவளைப் பரவசத்தில் அமிழ்த்தியது. ஷைலஜாவுக்கு அவளது அலுவலகத்திலேயே ஒரு காதலன் கிடைத்துவிட்டானாம்! மேரியின் கண்டிப்பான அறிவுரையையும், சகுந்தலாவின் அழுகை நிறைந்த வேண்டுகோளையும் மனத்தில் கொண்டு அவள் தான் ஓர் அநாதை என்று தன் காதலனிடம் சொல்லிவிட்டாளாம்! மேரி சொன்னதைக் கேட்டதும், சகுந்தலாதான் எப்படி ஓர் இன்ப அழுகை அழுதாள்! மகிழ்ச்சியில் இப்படியும் அழுவார்களா என்று மேரி எவ்வளவு வியந்து போனாள்!

‘மேரி! நீயே ஷைலஜாவுக்கு அம்மா இடத்திலே இருந்துக்கிட்டு எல்லாமே செய்யறே. மாப்பிள்ளைப் பையனைப் பாத்தியா?’

‘உன் மகள் ராணின்னா, அவன் ராஜா! இப்படி ஒரு அசத்தலான ஜோடியை நான் பார்த்ததே இல்லே, சகுந்தலா. நல்லா விசாரிச்சுட்டேன். எல்லாருமே அவனையும் அவனோட குடும்பத்தையும் பத்தி உயர்வாத்தான் சொல்றாங்க. அதுக்கு அப்பால கர்த்தர் விட்ட வழி!’

‘அவங்க ரெண்டு பேரையும் ஜோடியாப் பார்க்கிற சந்தர்ப்பம் எனக்கு ஒரு தடவையாச்சும் கிடைக்குமா, மேரி?’

‘கட்டாயம் அதுக்கு நான் ஏற்பாடு பண்ணுவேன், சகுந்தலா! .. .. நீ ஒண்ணு பண்ணலாமே?’

‘என்ன, மேரி?’

‘நீ என்னோட விருந்தாளி மாதிரி – ஒரு ஸ்கூல் டீச்சர் மாதிரி – அவ கல்யாணத்துக்கே ஏன் வரக்கூடாது?’

‘நல்ல யோசனை!.. .. ஆனா யாராச்சும் என்னை அடையாளம் கண்டுக்கிட்டாங்கன்னா?’

‘உன்னை யாரோ அடையாளம் கண்டுக்கிறதால ஷைலஜாவுக்கு என்ன கெடுதி வந்துடப் போகுது, சகுந்தலா? அவ உன்னோட மகள்ங்கிறது யாருக்குத் தெரியப் போகுது? பத்து வயசிலேர்ந்து நீதான் அவளை யார் கண்ணுலேயும் காட்டவே இல்லியே?’

மேரி ஆசை காட்டி, நம்பிக்கையும் ஊட்டியதன் பேரில் சகுந்தலா அவளது யோசனையை ஏற்றுக்கொண்டாள்.

.. .. .. எல்லா விருந்தினர்களுடனும் – மேரியின் அருகில் – சகுந்தலா திருமணக் கூடத்தில் உட்கார்ந்துகொண்டாள். முகத்தில் பாதியை மறைத்த கறுப்புக் கண்ணாடியும், மிகப் பெரிய குங்குமப்பொட்டும் தழைத்து வாரிய தலைமுடியும், சேலைத் தலைப்பின் முக்காடும் அவளுடைய அடையாளங்களைப் பெரிதும் மறைத்தன. அடிக்கடி நாசூக்காய்க் கண்ணாடியை உயர்த்தி முன்றானை விளிம்பால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்த சகுந்தலாவைப் பார்த்து ஷைலஜாவும் உணர்ச்சிவசப்பட்டாள்.

திருமணம் முடிந்து, நெருங்கிய முதிய உறவினர்களிடம் மணமக்கள் ஆசி பெறும் படலம் தொடங்கியது. சற்றுப் பொறுத்து, முன் வரிசையில் உட்¡கர்ந்திருந்த சகுந்தலாவைக் கணவனுக்குக் காட்டி, ‘அவங்க என்னோட டீச்சர். வாங்க. அவங்க கிட்டவும் ஆசீர்வாதம் வாங்கிக்கலாம்,’ என்று ஷைலஜா கூறியது சகுந்தலாவுக்கும் அவளருகே அமர்ந்திருந்த மேரிக்கும் தெளிவாய்க் கேட்டது. சகுந்தலா எழுந்து நின்றாள். மேரியும் உடன் எழுந்தாள்.

ஷைலஜா சகுந்தலாவை ஆழமாக ஒரு பார்வை பார்த்த பின் இருவர் கால்களிலும் கணவனுடன் விழுந்து வணங்கி எந்தாள். அவள் விழிகள் நீரில் மூழ்கி யிருந்தன. திடீரென்று உணர்ச்சிவசப்பட்ட சகுந்தலா, பரிசுப் பொட்டலத்தைக் கொடுத்ததோடு நில்லாது, தன் கழுத்துச் சங்கிலியைக் கழற்ற முற்பட்டாள். அப்போது அவளது சேலை முக்காடு அறவே நழுவ, சங்கிலியின் உரசலால் கறுப்புக் கண்ணாடியும் நெற்றிக்கு உயர்ந்தது. சகுந்தலா மிக அவசரமய்த் தன் முக்காட்டையும் கண்ணாடியையும் சரியாகத் திரும்ப அணிந்துகொண்டபின், சங்கிலியை ஷைலஜாவுக்கு அணிவித்துத் தாவி அவளை அணைத்து உச்சியில் முத்தமிட்டாள். ‘என்னைக்கும் நீ உன் புருஷனோட சந்தோஷமா, சவுக்கியமா இருக்கணும்மா!’ என்று குரல் நடுங்க, கண்கள் கசிய வாழ்த்தினாள்.

இந்த நிகழ்ச்சியை அதன் பிறகு சகுந்தலா அடிக்கடி அசை போட்டாள். ஒவ்வொரு முறையும் அவள் விழிகளில் நீர் மல்கும். தான் பெற்ற மகளின் திருமண விழாவில் ஒரு சாதாரண விருந்தாளியைப் போல் தலை காட்டும் கொடுமை வேறு எந்தத் தாய்க்கேனும் வாய்த்திருக்குமா என்று வாய்விட்டுப் புலம்பிக் கருணாரனின் படத்துக்கு எதிரே நின்று அழுவாள். இன்றும் அவள் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.

ஆனால், அப்படிப் போனதன் பிறகான விளைவுகளைப் பற்றி நினைத்துப் பார்த்த போதோ, தான் அங்கே போயிருந்திருக்கவே கூடாது என்கிற கழிவிரக்கம் அவளுக்கு வந்தது. மகளை மணக் கோலத்தில் காணவேண்டுமென்னும் ஒரு தாயின் இயல்பான ஆசையை அவள் அடக்கி யிருந்தால், அர்ஜுனின் கட்டாயப் பணப் பறிப்புக்கு அவள் ஆளாகி யிருந்திருக்க மாட்டாள்தான்.

‘பணம் கிடக்கு, பணம்! ஷைலஜாவுடைய வாழ்க்கையே பாழாகக்கூடிய ஆபத்தில்ல இப்ப அவன் உருவத்தில வந்திருக்கு? இந்த ராஸ்கலை எப்படிச் சமாளிக்கப் போறேன்? எல்லா விஷயமும் ஷைலஜாவுடைய புகுந்த வீட்டுக்காரங்களுக்குத் தெரியும்னு நான் சொன்னது பொய்னு ஊகிப்பானா, இல்லாட்டி நம்புவானா? கடவுளே! நான் அப்படிச் சொன்னது முட்டாள்தனமோ?.. .. ஆனாலும், நான் சொன்னது உண்மையாத்தான் இருக்கணும்கிறதுக்கான சாத்தியம்தான் அதிகம். அப்படிச் சொல்லி இருந்தாத்தான் எந்தத் தாயும் அவ்வளவு துணிச்சலாப் பளிச்னு பேசுவான்ற நடைமுறை கூடவா அந்தப் பாம்புக்குத் தெரியாது? ‘இனிமே நான் உனக்குப் பயப்படத் தேவை இல்லே’ன்னுதானே அதுக்கு அர்த்தம்? முன் கூட்டி யோசிச்சு வெச்சுக்காத ஒரு பொய்யைக் கொஞ்சங்கூடத் தயக்கமே இல்லாம அப்படிச் சடக்னு நான் சொன்னதும் நல்லதுக்குத்தான்!’

சகுந்தலா திருமண வீட்டிலிருந்து திரும்பியதன் பின், ஒரு வாரம் கழித்து அர்ஜுன் அவளைச் சந்தித்தான். கதவைத் திறக்காமல், வழக்கம் போல், ‘யாரு?’ என்று அவள் எழுப்பிய கேள்விக்கு, ‘நாந்தான் அர்ஜுன் வந்திருக்கேன், பேபி. கதவைத் திறம்மா!’ என்று பதில் வந்தது.

சகுந்தலா அதிர்ந்து போனாள்.

‘இத பாரு! இந்த பேபி கீபின்னு கூப்பிட்ற வேலை யெல்லாம் வெச்சுக்காதே. உன்னைப் பாக்க நான் தயாரா யில்லே. போயிடு.’

கதவுக்கு அப்பால் அர்ஜுன் ஒரு மாதிரியாகச் சிரித்தான்.

‘நீ அதுக்குத் தாயாரா யில்லேன்னா, அப்பால, உன் மக ஷைலஜா அவ புருஷனுக்குத் தெரியாம என்னைப் பார்க்கத் தயாராகும்படி நேரும்! ரெண்டுல எது வசதி? பழகிட்ட தோஷத்துக்காக உனக்கு சாய்ஸ் தர்றேன்!’

அடுத்த நொடியில் சகுந்தலா கதவைத் திறக்க, அவன் இப்போது போல்தான் அப்போதும் அவளைத் தள்ளாத குறையாகத் தாண்டி உள்ளே வந்து உட்கார்ந்துகொண்டான்.

‘எல்லாத்தையும் ரொம்ப புத்திசாலித்தனமாப் பண்ணிட்டு, மக கல்யாணத்தைக் கண்ணால பார்க்கணும்கிற ஆசையில, அங்க போய் உக்காந்துட்டே. அதனாலதான் நான் இப்ப இங்கே உக்காந்துக்கிட்டிருக்குறேன். ஆசை யாரை விட்டுது? விதிதான் யாரை விட்டுது? உன்னோட ஆசையால நீயாத் தேடிக்கிட்ட விதிதான் இப்ப என்னோட ரூபத்தில இங்க வந்து உக்காந்துக்கிட்டிருக்கு!’

சகுந்தலாவின் மனத்தில் அச்சம், ஆத்திரம், கவலை, கழிவிரக்கம் என்று பல்வேறு உணர்ச்சிகள் அவற்றின் உச்ச நிலையில் கொதிக்கலாயின. மகளின் வருங்காலம் என்னவாகுமோ என்கிற அச்சம் தான் பிற உணர்ச்சிகளைவிட மேலோங்கி நின்றது.

‘அர்ஜுன்! அப்பாவிப் பொண்ணுகளோட வயித்தெரிச்சலை இப்படி ஏன் கொட்டிக்கிறே?’

‘யார் அப்பாவி? நீயா? நல்ல வேடிக்கை. அந்த வார்த்தைலேர்ந்து முத ரெண்டு எழுத்துகளை எடுத்துடு.’

‘சரிப்பா. நான் பாவின்றது உன்னோட எண்ணம்னா, அப்படியே இருக்கட்டும். ஆனா, என் மக என்ன பாவம் பண்ணினா?’

‘உனக்கு மகளாப் பொறந்திருக்குறாளே! அந்தப் பாவம்தான்!’
‘அர்ஜுன்! நீ எதுக்காக இப்ப இங்க வந்தே? உனக்கு என்ன வேணும்?’

‘அப்படிக் கேளு! முதல் தவணையா ஒரு பத்தாயிரம் எடு!’ என்ற அர்ஜுன் கால் மேல் கால் போட்டுக்கொண்டான்.

‘எதுக்காக?’

‘உன்னைப் பத்தின உண்மையை உன் மகளோட புகுந்த வீட்டுக்காரங்க கிட்ட சொல்லாம இருக்கிறதுக்காகத்தான். நீ ஒரே தடவையில லட்ச ரூபா குடுக்கணும்னு நான் சொல்லல்லே.’

‘ப்ளேக்மெய்லுக்கு என்ன தண்டனைன்னு தெரியுமில்ல?’

‘நல்லாவே தெரியும். ஆனா, அதுக்குப் பணியல்லேன்னா, நீ குடுக்க வேண்டிய விலை உன் அருமை மகளோட சந்தோஷம்கிறது உனக்கும் தெரியுமில்லே?’

சகுந்தலாவால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. அவளது தொண்டைக் குமிழ் ஆத்திரத்தில் ஏறி இறங்கிற்று. விழிகள் விரிந்து சிவந்தன. மூக்கு விடைத்துக்கொண்டு அதன் ழுனையும் சிவந்தது. விரல்கள் அதிர்ந்தன. பின்னர், சுதாரித்துக்கொண்டு சொன்னாள்: ‘இத பாரு, அர்ஜுன்! உன்னைக் கை யெடுத்துக் கும்பிட்றேன். இப்ப நீ கேக்குறதைத் தந்துட்றேன். ஆனா லட்சம் கிட்சம்னெல்லாம் பேரம் பேசாதே. எங்கிட்ட கிடையாது.’

‘ஒவ்வொரு போலீஸ் ஆ•பீசரும் பிஸினெஸ்மேனும் நோட்டு நோட்டா எவ்வளவு குடுத்திருப்பாங்க உனக்கு! எனக்குத் தெரியாதுன்னா நினைச்சே? சிலர் நகைகள் கூடத் தந்திருக்காங்க, இல்லே?’

‘தந்திருக்காங்கதான். ஆனா, இப்ப எங்கிட்ட ஒண்ணு கூட இல்லே. எல்லாத்தையும் தர்மம் பண்ணிட்டேன். என்னோட வாழ்க்கைச் செலவுக்குத் தேவையான வட்டி வர்ற அளவுத் தொகையை மட்டும் யூனிட் ட்ரஸ்ட்ல போட்டு வெச்சிருக்கேன்..’

‘நகைங்க எல்லாத்தயுமேவா குடுத்துட்டே?’

‘ஆமா. இப்ப சத்தியா, என் காதுல இருக்கிற சாதாரணக் கம்மலும், கையில போட்டிருக்கிற ரெண்டே வளையலும்தான். என் கழுத்தில ஒரு சின்னச் சங்கிலி கூடக் கிடையாது.’

‘நம்பறேன்.. அதான் உன் கால்ல விழுந்த மக கழுத்தில உன்னோட சங்கிலியைக் கழட்டிப் போட்டியே!’

‘. . . . . .!’

அவள் அதிர்ந்து போய் வியப்புடன் அவனைப் பார்த்தாள். அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.

-தொடரும்

Series Navigationவாசிக்கப் பழ(க்)குவோமேதொடுவானம் 4. உன்னோடு நான் எப்போதும்சீதாயணம் நாடகப் படக்கதை – ​2​1​​​தூமணி மாடம்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 63வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் : அமிர்தம் சூரியாவின் கவிதைகள்தினம் என் பயணங்கள் – 6பிழைப்புஒரு மகளின் ஏக்கம்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *