பேரா. க. பஞ்சாங்கம். புதுச்சேரி. 90030 37904
வேறெந்த இலக்கிய வகைகளை விடவும் கவிதை அதிகமாக, அதை எழுதுகின்றவரின் சுயம் சார்ந்தது. அந்த எழுதுகின்றவரின் சுயம் வேறெதையும் விடக் கூடுதலாக தான் பிறந்து வளர்ந்த மண் சார்ந்தது. ஏனெனில் மண் உற்பத்தி செய்த உச்சக்கட்ட உயிர் என்றால் மனிதனைத்தான் சொல்ல வேண்டும். மனிதர்களுக்குள்தான் மண்ணிலிருந்து விளையும் அத்தனையும் ஒன்றுவிடாமல் ஒன்றாய் கூடிக் கிடக்கின்றன. ஓயாமல் வினைபுரிந்த வண்ணம் இருக்கின்றன. இதன் விளைவாக மனிதர்களும் படைப்பூக்கம் பெற்று, மண்ணையும் மண் சார்ந்த அனைத்தையும் மீண்டும் மறுஉற்பத்தி செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே, மனிதரது ஒவ்வொரு சிந்தனையும் செயலிலும், மொழி, நடை, உடை, உணவு மற்றும் பாவனையிலும் அந்த மண்ணின் வாசம் என்பது வெளிப்பட்ட வண்ணமாகவே இருக்கிறது. அதுவும் அந்த மண்ணின் வாசத்தை வாயால் வளர்த்து வளர்பூமியெங்கும் எடுத்துச் செல்லும் மொழியால் ஆன கவிதையாக்கத்தில் மண்ணின் மணம் என்பது கவிதையின் உயிர் உறுப்பாகவே கலந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவேதான், கவிஞர் சிற்பி கவிதைப் படைப்புகளிலும், அவர் பிறந்து வளர்ந்த கொங்கு மண்ணின் மணம் கரைந்து கலந்து கிடக்கின்றது. கண்களை மூடிக்கொண்டாலும் மணத்தை வைத்தே எப்படி இது முல்லைப்பூ, அது மல்லிகைப்பூ என்று சொல்லிவிட சாத்தியமாகிறதோ, அப்படிச் சிற்பி கவிதைகளையும் இவை கொங்கு மண்ணின் கவிதை என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். அவர் இரண்டாயிரமாண்டு தமிழிலக்கியத்தை மட்டுமல்ல உலக இலக்கியம் பலவற்றையும் வாசித்திருக்கலாம்; பேராசிரியராக நாற்பது ஆண்டுகளாக நகரங்கள் நோக்கி நகர்ந்திருக்கலாம். “முருகனுக்குக் காவடிப்போல ஃபைல் தூக்க”ப் போயிருக்கலாம்; ஆனாலும் அவைகள் எவையாலும் கவிஞர் சிற்பியை அவர் பிறந்து வளர்ந்த கொங்கு மண்ணிற்கு வெளியே கடத்திக் கொண்டு போய்விட முடியவில்லை. எனவேதான்
‘என் களம் – என் மண்
என் பாத்திரங்கள் – என் மனிதர்கள்
என்றும்,
காங்கீரிட் நாகரீகத்தின் கவியல்ல நான்
காடுகளின் ஆறுகளின் மலைகளின் கவி
இயற்கையின் உடுக்கை’ (ப. 1104)
என்றும் அவரால் கூறமுடிகிறது. பிறந்த மண்னைக் குறித்து மொழியென்னும் குறியீட்டு உலகம் உருவாக்கி வைத்திருக்கிருக்கும் புனைவுகள் கவிஞரின் நரம்புகளில் குருதி அணுக்களில் அடைப்பு ஏதுமில்லாமல் ஓடிய வண்ணம் இருக்கின்றன.
v நிலம், பொழுது முதற்பொருள் என்று சுட்டும் தொல்காப்பியர், அவைகளிலிருந்து உருவாகும் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் எனக் கருப்பொருள்களைப் பட்டியலிடுகிறார். இதுபோலவே இந்த முதற்பொருளிலிருந்து உருவாகும் மனிதர்களையும், கருப்பொருள்களாகத்தான் பார்க்கிறார் என்பதை ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய மனிதர்களுக்கு நிலம் சார்ந்து தனித்தனிப் பெயர் சூட்டும்போது அறிந்துகொள்ள முடிகிறது. இதன்மூலம் ஒரு நிலத்தின் முகவரி, அந்நிலத்து வாழ் மனிதர்கள்தான் என மனிதமையப் பார்வையை உருவாக்குகிறார் தொல்காப்பியர். கவிஞர் சிற்பியும் மனிதர்களின் பெயர்களைத் தனது படைப்பில் பதிவு செய்துகொண்டே போகும்போது கொங்கு மண்ணின் மணம் மல்லிகைப்பூ வாசம் போலக் கப்பென்று மூக்கைத் துளைக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது என்கிறோம்? ஆனால், உண்மையில் பெயரிடுவதில்தான் மனிதர்களின் எல்லா அரசியலும் இருக்கிறது. சந்திரசேகரன், கோபாலகிருஷ்ணன், இராமச்சந்திரன், சுப்பிரமணியம் என்கிற பெயரிடலிலும், குப்பன் சின்னான், பிச்சை, மண்ணாங்கட்டி, பாவாடை என்கிற பெயரிடலிலும் நம் சாதிச்சமூகத்தின் அரசியல் வரலாறு காணக்கிடைக்கவில்லையா? இன்னின்ன சாதியார் இன்னின்ன பெயர்களைத்தான் வைக்கவேண்டும் என்று மனு ஸ்மிருதி பேசுவது இந்த இடத்தில் நினைவுக் கூரத்தக்கது. எனவே, தன் படைப்பில் பெயரிடுதல் மூலமாகக் கொங்கு மண்ணின் வாசத்தைப் பிடித்து வைத்துவிடுகிறார் சிற்பி. நடுகாட்டுப் பெரியசாமி, சுங்காரங்காட்டுக் குப்புசாமி, வடக்குவளவு பழச்சாமி, வண்டிக்காட்டு கிராப் ராமையன், தெற்கு வளவு கருப்பாயி, நல்லூருக் கவுண்டச்சி, மேகாட்டு மயில்சாமிக் கவுண்டர், கிழக்குவளவு பண்ணாடி, கோட்டூர் பேச்சிமுத்து, மோதிரக்காரக் கவுண்டர், வில்லைவீட்டு நல்லமுத்து, மாறுகண் திருமூர்த்தி, சப்பைவாய் பழனியப்பன், குருவிக்காரக் கிட்டான், பொரிக்கார நாட்ராயன், ரெட்டைக்காலி அக்கா, பித்தி பொன்னாத்தாள், வள்ளியாத்தா, அருக்காணி, சின்னான், வீரன், மாரி, சடைச்சி, உறுமன்னன், தேவாத்தா, திருமாத்தா, பூனையன், வேட்டை, சாமியார் பாப்பான் – இப்படி மனிதர்களுக்கான பெயர்களைப் படைப்பில் வாசிக்கும்போது கொங்கு மணத்தோடு கூடவே உடைமை, சாதி ஆகிய அடிப்படையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும் அறிந்துகொள்ள நேர்கிறது.
v இதுபோலவே, அம்மா, அப்பா, அப்பாரு (பாட்டையா), அக்கா முதலிய உறவு மனிதர்கள் வழியாகவும், தோழன், தேவகிக்குட்டி, அங்கம்மா, அம்மணி, பெரிசு, மாசாணம், ஊமையன் முதலிய ஊர் மனிதர்கள் மூலமும் கொங்கு மண்ணின் வாழ்வியலுக்கு நிரந்தர வாழ்வு கொடுத்துவிடுகிறார். அம்மா எப்படி? கவிஞர் எழுதுகிறார்:-
‘தாமிரமுகம்
கொங்குக்கொண்டை
வெற்றிலைக் கறைபடிந்த
‘எந்து பல்’
‘சிவப்பு மேனி’யை மறைப்பவை எவை தெரியுமா?
பின்கொசுவக்
கைத்தறிச் சேலையும்
‘அங்கெங்கெனாதபடி’
குத்திவைத்த பச்சையும் (ப. 962 – 963)
கவிஞர் கொங்குநாட்டு அம்மாக்களின் வடிவத்தைக் காட்சிக்குக் கொண்டு வந்துவிடுகிறார். சரி ‘மனசு’ எப்படி?
‘நேசிப்புக்கு எடுத்த ஜென்மம்
கறி தின்னும் அப்பாவுக்குக்
கைகூகாமல் சமைத்தளிக்கும்
கடும் சைவக்காரி (963)
இதைவிட,
ஊரையே தூக்கும்
அப்பாவின் கோபத்தை
ஒற்றைப் பார்வையால்
செதுக்கி ஊமையாக்குவாள் (963)
என்றும்,
எழுபது வயதிலும்
மூத்தவரைக் கண்டால்
தலைகுனிந்து நிலம்கீறும்
அம்மா ஓர் அதிசயம்
என்றும் எழுதும்போது கொங்குநாட்டுப் பெண்மையைத் தரிசித்துவிடுகிறோம். இதேபோல் கொங்குநாட்டில் மகனுக்குத் திருமண நிகழ்வு நடக்கும்போது மங்கலநாளுக்கு முந்தின இரவில் சர்க்கரையும் பழமும் பிசைந்து தாயும் மகனும் ஒரே தட்டில் சாப்பிடும் வைபோகத்தை நினைவுகூர்ந்து ‘அம்மா’ என் பிஞ்சு வயது பிரபஞ்சமே! என்று கவிஞர் பாடும்போது கொங்கு மண்ணின் பண்பாட்டுக் கூறு ஒன்று பதிவாகி விடுகிறது.
v காதில் ரோமக்காடு வளர்த்த கொங்கு மனிதர்கள் (990) நடுவில் அப்பா எப்டி? அகலமான நெற்றியில் சந்தனப் பொட்டை, நத்தியாவட்டக் காம்பால் வருடி வருடி வட்டமாக்கியபடி அரைமணிநேரம் பெல்ஜியம் கண்ணாடி முன் நிற்பாராம் அப்பா; (979). மகன் சேட்டை தாங்கமுடியாத போது ஆவேசம் கொண்டு குஞ்சம் வைத்த சவாரிச் சாட்டையால் வீசுவாராம் அப்பா (1114). அப்பாமார்கள் இப்படி என்றால், பாட்டையாமார்கள் அப்படியே தலைகீழாக இருக்கிறார்கள். பேத்தி ‘அம்மணி’யின் களவு நடவடிக்கை வெளிச்சத்திற்கு வருகிறது. ஊரே அடங்கிப் போன இரவுவேளையில் கமுக்கமாய் விசாரிக்கிறார் செல்லப் பேத்தியை. அம்மணி கூந்தல் குலைய குலைய முகத்தை ஓங்கி ஓங்கி தூணில் முட்டிக்கொள்கிறார். இந்த ‘நாயை என்ன வேணுமுண்ணாலும் பண்ணுங்க அப்புச்சி…..’. ‘அவுங்களெ’ ஒண்ணும் செஞ்சு போடாதீங்க’ நரைமுடி அடர்ந்த காலில் கையைப் பூட்டிக் கெஞ்சுகிறாள். அப்புச்சிக்கு அவள் முதுகில்ஏறி விளையாட யானையாக மண்டியிட்டது நினைவு மின்னல்களாய் வந்து வெட்டுகின்றன. தாய் தகப்பன் இல்லாது வளர்ந்த தன் செல்லப்பேத்தி குறித்து முடிவு எடுக்கிறார் இப்படி:-
‘எந்திரிபுள்ளே
வெடியறதுக்குள்ளே
அவனோட ஓடிப் போயிரு…..
எந்தக் கோயில்லியாவது
தாலி கட்டிட்டுப்
பத்துநாள் போயி
எஞ்சாளைக்கே வந்துரு
நான் இருக்கறண்டா
உனக்கு ஆலாத்தி எடுக்க’
பேத்தி திகைத்துப் போனது போலவே நாமும் திகைத்துப் போய்விடுகிறோம். கொங்கு மண்ணின் மனிதநேயம் நம்மைச் சில்லிடச் செய்கிறது.
v தெற்குவளவுப் பாட்டையா படுத்த படுக்கையாகிவிட்டார். இப்போது; ஆனால் எப்படி இருந்தார்? கவிஞர் காட்சிப்படுத்துகிறார்; மகனுக்கும் பேரனுக்கும்கூடக் கடத்திவிட முடியாத அப்படியொரு தகதகவெனத் தங்க நிறம். நெருப்பு க் கொழுந்துபோல் வளைந்து மேல்நோக்கும் பழுவேட்டரையர் மீசை, வடிந்துஇறங்கும் செவிகளில் கல் வைக்காத தங்கத் தளுக்குகள், கொஞ்சம் நரைத்த பெரியகுடுமி, முடிமுளைத்த கூன்முதுகு, வெள்ளிப்பூண் கைத்தடி, சரித்தரப் பாத்திரங்களே உயிர்பெற்று வருவதுபோல வரிவரியாய்ச் சுற்றியிருக்கும் தலைப்பாகை லாவகம், அங்கராக்கு (சட்டை) போடாத அகல மார்பில் காடுவெட்டி நிலம் திருத்திய உழைப்பின் எழுத்து – இப்படி கொங்குப் பண்பாட்டின் வடிவாய் திகழ்ந்த அந்தப் பாட்டையா, “போராண்டீ! எம்பேரை இங்கிலீஷிலே சொல்லு பார்க்கலாம்” என்று கேட்கும்போது கொங்கு மண்டலத்தின் ஆன்மாவின் ஆழத்திற்குள்ளும் பாய்ந்து குடியிருக்கும் காலனித்துவ மொழியின் மேலாதிக்கத்தைக் காட்டிவிடுகிறார்.
v கொங்குமண்ணின் மயானத்தில் நடுகாட்டுச் சின்னப்பன் சமாதிமேலேயே ஆரோகணித்திருக்கும் ஒரு ‘பெரிசு’. அது எப்படிப்பட்டது? அது “பேச ஆரம்பித்தால் வெயில் நிலவாகும்; தாம்பூலப் பெட்டி திறந்தால் தத்துவம், வெற்றிலை மடித்தால் வேதாந்தம்; பாக்கை எடுத்தால் பரம்பரைச் சரித்திரம்; சுண்ணாம்பு தடவும்போது சொல்லில் ஒரு சுகம்; புகையிலை போட்டதும் பேச்சில் ஒரு போதை. இது போலவே ‘மாப்பிள்ளைக் கவுண்டர்’ என்ற கவிதையில் பெரிசுகள், தங்கள் வாலிபக் காலச் சேட்டைகளைச் சிறுசுகளிடம் கதையாக ‘அளந்து’ இருவருமே சிரித்து மகிழும் ஒரு பண்பாட்டு வடிவத்தைக் கடலைக் கொடியைத் தின்றுவிட்டு “தண்ணி”யாகக் கழியும் மாடு பூட்டிய வண்டியில் பயணம் செய்யும்போது மாமா மேல் “சீத்துணு” சாணி பாஞ்சக் கதையைச் சிரிக்கச்சிரிக்கச் சொல்வதன்மூலம் பதிவு செய்துவிடுகிறார். இப்படிப்பட்ட பெரிசுகள் இன்றைக்கு எங்கே போனார்கள்? “அழிகிற கிராமத்துப் பண்பாடு பிழிகிறது மனத்தை (944)” எனக் கவலைப்படுகிறார் கவிஞர்.
v தன் அக்கா, ஊர் அக்கா, பக்கத்துவீட்டு அக்கா என்று அக்காவைக் குறித்தே மூன்று கவிதைகள் காணக்கிடைக்கின்றன. இந்தக் கவிதைகளில் கொங்குமண்டலத்தின் நிலவரைவியலும் இனவரைவியலும் மிக மேன்மையான அழகியல் நுட்பத்தோடு பதிவாகி உள்ளன. கொங்கு மண்டலத்திலுள்ள ஓர் ஊரைக் குறித்துக் கூறுகிறார்: –
அந்தக் கிராமம்
கல்யாண வீடுமாதிரி
வாழைத்தோப்புகள்
நான்குபுறமும்
தலையசைத்து வரவேற்கும்
இந்தப் பதிவில் கொங்குமண்டலத்து ஊர்களின் நிலவியல் காட்சியாவதோடு, நான்கு புறமும் தலையசைத்து வரவேற்கும் வாழைமரம் என்ற கவிஞரின் நுட்பமான அவதானிப்பு அழிகியல் வெளிப்பாட்டின் அருமையையும் புலப்படுத்திவிடுகிறது. அந்த ஊர்தான் அக்கா வாழ்ந்து முடிந்த மண். பழுப்பேறிய முகம், உழைப்பேறிய கை, சிரிக்கும் சின்னக் கண்கள் கொண்ட அக்கா தம்பியை என்ன செய்வாள்? விளையாடி விளையாடிச் செம்மண் படிந்த தம்பி தலையை மடியில் சாய்ப்பாள்; ஈர்க்கோதியால் பேன் எடுத்துச் சடக்குச் சடக்கென்று குத்துவாள்; ‘இந்தப் பாழுஞ்சனியனுக தம்பி ரத்தத்தை எப்படிக் குடிச்சிருக்குது பாரு’ என்று வசைபாடுவாளாம்’.
‘ஊர்லா எவளாச்சும் ஒம்மேலே கண்ணுவச்சா முதுகு பழுத்துரும் சீவக்கட்டை பிஞ்சுபோகும் ஆமா’ என்று வெகுளி அக்கா விண்ணாரம் பேசுவாளாம். ஒரு அக்கா – தம்பி என்ற குருதி உறவுப் பண்பாட்டின் பதிவு கனகச்சிதமாக வந்து விழுந்திருக்கிறது; அப்படிப்பட்ட அக்கா, இறுதிப் படுக்கையில் கிடக்கும்போது தம்பியைப் பார்த்து ‘மசானத்திலே என்னைய தனியா விட்டுட்டு வந்தா ராத்திரி எப்படீடா அங்கிருப்பேன்’ என்று வெகுளியாகக் கேட்கும்போது தம்பி பதில் சொல்லுகிறான். ‘பெரியப்பன், அப்புச்சி, பச்சீமக்கா… எல்லாம் அங்கே தொணயா இருப்பாங்க, சொல்லி வச்சிருவம்ல, அக்கா, ஒண்ணும் பயப்படாதே (1020). ஆறுதல் திரண்டு நீராய் வழிய, அக்கா கண் மூடுகிறாள். கொங்நாட்டின் நுட்பமான பண்பாட்டு வரைவியல் ஒன்று இப்படி அழகாகப் பதிவாகியுள்ளது.
இதுபோலவே, ‘அங்கம்மா’ எனும் ‘ஓர் ஊர் அக்கா’ (1011). ‘வெள்ளையும் சிவப்புமாய்க் கொள்ளை நாள் வாடாத நித்ய கல்யாணி அவள்’ என்றும், ‘அத்து, அவசரமென்றால், ஊர்ப்பெண்களுக்கு அக்காதான் எல்லாம்’ என்றும் அறிமுகமாகும் அக்கா, ‘களையெடுக்கப் போகும் அன்றாடங்காய்ச்சிதான்’. இத்தகைய இந்த அக்காவை ஆண்களும் அக்கா என்றுதான் அழைப்பர்; ஆனால் நெஞ்சுக்குள் தொக்கி நிற்கும் உறவு வேறாய் இருக்கும்’ என்கிறார் கவிஞர்; அதுமட்டுமா, ஒரு சங்கீதப் பண்ணையாரின் சாயங்கால நிரந்தரமென்று அரசபுரசலாய்க் கேட்டதுண்டு என்றும் பதிவு செய்கிறார். கால்விரலில் மிஞ்சி உண்டு; கழுத்தில் மஞ்சள் கயிறு உண்டு; ஆனால் கணவன்கூட இல்லை; எங்கோ கிழக்குச் சீமையில் மறதி அடிவானத்தில் புதைந்து போய்விட்டான்; இப்படி ஊர் காப்பாற்றி வரும் பாலியல் ஒழுங்கிலிருந்து அவள் விலகினாலும், “அவள் ஊருக்கெல்லாம் அக்கா”வாக எப்படி ஆகிறாள்? ஒரு சமூகப் பண்பாட்டு வரைவியலின் மிக நுட்பமான பதிவு இது; ஒழுங்கு, கட்டுப்பாடு, பண்பாடு என மனிதர்கள் செய்துகொண்ட அத்தனையையும் விட, வாழ்வின் இடிபாடுகளுக்குள் சிக்க நேர்ந்த ஒரு மனுஷியின் மனித உணர்விற்கு மதிப்புக் கொடுத்துக் கண்டும் காணாமல் கொண்டு செலுத்துகிற உன்னத மனிதநேயப் பண்பாடு ஒன்று இயங்கிக் கொண்டிருப்பதைக் கவிஞர் அவதானித்து, அதைக் கவிதையாக்கித் தந்திருப்பது கவிஞர்க்குள் வினைபுரியும் மிகப்பெரிய ஆன்மீகப் பலத்தைப் புலப்படுத்துகிறது.
v மனிதர்களின் சமூகம் என்பது கட்டுக்குள் அடங்காத ஒரு காட்டுவிலங்கு போன்றது; அதனுடைய பரிணாம வளர்ச்சியின் தேவை எனக் கருதி ஒருத்திக்கு ஒருவன் என்று ஆண் – பெண் பாலியல் உறவில் ஓர் ஒழுங்கை உருவாக்க முயன்றால் அதன் பக்க விளைவாகப் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்கிறது; அப்படித் தோன்றிய பிரச்சனைகள்தான் பாலியல் வன்முறை, பெண்களைக் கடத்துதல், பெண்கள் இனத்தில் பரத்தை, விதவை, கற்புக்கரசி, விலைமகள் என்கிற பிளவுகள் ஏற்பட வாய்ப்பாயின. இளம்விதவைகளின் பிரச்சனையை கொங்குமண்டலத்தில் ஆற்றோரக் கிராமம் எப்படி எதிர்கொண்டது? முன்பு சொன்னது போலவே மிக உன்னதமான மனிதநேயப் பண்பாடு இந்த மண்ணிற்குள் வினைபுரிந்து கொண்டிருப்பதை ‘அத்திமரம்’ என்ற கவிதை மூலமாகவும் பதிவு செய்து விடுகிறார் கவிஞர்:-
இளம்விதவை சின்னிக்கும
நாணல் காட்டுக்கும்
ஏதோஏதோ இருப்பதாய்க்
காதுகள் குறுகுறுத்துக் கொண்டதுண்டு
ஆனால்………. அத்திமரம்
ரகசியக் காப்புப் பிரமாணம்
எடுத்திருந்தது. (953)
என்கிறது கவிதை. இளம்விதவையின் பெயர் ‘சின்னி’ என்று சுட்டப்படுவதால் சாதியச் சமூகத்தின் அடிநிலை மக்கள் நடுவில் செயல்படும் மனிதநேயப் பண்பாகக் கவிஞர் எடுத்துரைக்கிறார் எனக் கருதலாம். இதுவும் மிக முக்கியமான நுட்பமான பண்பாட்டு இனவரைவியல் பதிவு ஆகும். ‘இது எங்கள் கிராமம்’ என்ற கவிதையாலும் விதவை குறித்துப் பதிவு செய்கிறார்:-
ஒரு வனதேவதை போல
ஆற்றங்கரை நாணல் புதரிலிருந்து
மீசை அரும்பாத இளம்வட்டம்
ஒருவனுடன்
வெள்ளைச் சேலையை ஒதுக்கியபடி
வெளியேவரும்
சின்னத் தாஜ்மகால்
கிராமத்து விதவை. (673)
இவ்வாறு உன்னத மனிதநேயங்களையும் பதிவு செய்யும் கவிஞர், ஆண் – பெண் உறவில் மனிதர்களிடம் வினைபுரியும் கேடுகெட்ட பொறாமை உணர்வுகளையும் கொடூர மனத்தின் லீலைகளையும் தனது சித்தரிப்புக்களுக்குள் கொண்டுவரத் தவறவில்லை. ‘ஊமையன்’ என்றொரு கவிதை. கொங்கு மண்ணின் உடல் உற்பத்தி எப்படி? கவிஞர் சொல்லுகிறார்:-
அசோகர் காலத்து இரும்புத் தூணையும்
ஐந்நூறு வருடத்துத் தேக்கு மரத்தையும்
காணாத கண்களுக்கு ஓர் ஆறுதல்
இவன்.
இப்படிப்பட்ட ஊமையன் நின்றால் கூரைகள் குனியும்; படுத்தால் திண்ணைகள் குறுகும்; நடந்தால் வீதிகள் குழியும். முக்காமல் முனகாமல் முழு அரிசிமூட்டையை மூன்றுகல் தூரம் சுமப்பான் (அப்பொழுதெல்லாம் ஒரு மூட்டை என்பது 100 கிலோ என்பதை நினைவில் கொள்ளவேண்டும்). ஊருக்கே உதவியாய் இருப்பான். ஆழச்சேற்றில் பாரவண்டி மாட்டிக்கொண்டாலும் ஊமையனைத்தான் கூப்பிடவேண்டும்; கல்யாண வீட்டில் வெண்கல உருளியை ‘அலாக்’காகத் தூக்க வேண்டுமா? ஊமையன்தான் வரவேண்டும். ‘பலீஞ்சடுகுடு’ விளையாட்டு நடந்தால் வெற்றியும் வெள்ளிரூபாயும் ஊமையனுக்கே போய்ச் சேரும். அத்தகைய ஊமையன் கால், கை விளங்காமல் கிடக்கிறான். என்ன நடந்தது? “கன்னியப்பன் வச்சிருக்கிற “கல்லாங்காட்டு முண்டைப்பிராணி கிட்ணவேணிகிட்ட ஒரு நா ராத்திரி வாலாட்டீட்டானாமா…. அவ்வளவுதான். மலையாளத்து மந்திரவாதிகிட்ட மருந்து வாங்கி வெச்சுட்டானாமா…!” எப்படி? காமம் எழுப்பும் பொறாமை, மனிதஜீவிதத்தில் பலி கேட்டிருக்கிற உயிர்கள் ஒன்றா இரண்டா?
இதுபோலவே ‘அங்கீகரிக்கப்படாத காதல்’ என்ற கவிதையில் சவலைப்பசு மாதிரியான வள்ளியாத்தா தன் சாதிப் பையனோடுதான் ஓடிப் போய்க் கல்யாணம் முடித்து ஊர் திரும்புகிறாள்; ஊரே ஒன்று கூடி “ஊர்விலக்கி” வைத்துவிடுகிறது; வேலை இல்லை; கூலி இல்லை ஒன்பது ஆண்டுகள் ஓடுகின்றன; அவன் பரதேசிக் கோலத்தில்; அவள் பாயும் படுக்கையுமாய்; குழந்தைகள் மரப்பாச்சிப் பொம்மைகளாய், கவிஞர் கேட்கிறார். “ இன்றுவரை அந்தக் காதலை ஆசிர்வதிக்காத மனிதர்களின் அந்தரங்கங்களை யார் சுத்தம் செய்வது?” இந்தக் கவிதை சுத்தம் செய்யும் என்று சொல்லத் தோன்றுகிறது. கூட்டுச் சமூகத்தின் ஒரு அதிகாரக் கோரமுகம் இங்கே பதிவாகியுள்ளது.
தேவகிக்குட்டி என்றொரு கவிதை!. “கறுப்புக்குக் குத்தகை எடுத்திருந்த” ஒரு கிராமத்து நிகழ்வை எடுத்துரைக்கிறது. அந்த ஊரில் வாழும் மலையாளத்துப் பனையேறி அச்சுதன், ஊருக்குப் போய் கல்யாணம் முடிச்சுப் பெண்ணைக் கூப்பிட்டு வந்து ஓலைக்குடிசைக்குள் வாழ்வைத் தொடங்குகிறான். வில்லைவீட்டு மணியக்காரர் நல்லமுத்துவும் நாராயண வைத்தியரும் பாலியல் வன்முறை செய்து ‘தேவகிக் குட்டியின்’ மனத்தைச் சீரழிக்கின்றனர். தான் மலைபோல நம்பிய மலையாள வைத்தியரின் துரோகத்தைக் கண்ணால் கண்டுத் தாங்க முடியாமல் பனங்காட்டின் இருட்டுக்குள் ஓடித் தற்கொலை செய்து கொள்ளுகிறான்; அவள் ஊரைக் காலி செய்கிறாள் குழந்தைகளைத் தழுவியபடி.
‘மேற்கே புறப்பட்டாள்
மேனாட்டு ஓலையக்காள்’ (1159)
என்று பதிவு செய்கிறார். இவ்வாறு புலம்பெயர் வாழ்வைப் பாதுகாப்பற்ற சூழலில் நிகழ்த்தியிருக்கிறது இந்த மனித சமூகம். மணியக்காரர் போன்ற வலுத்தவர்களின் ஒழுங்குமீறலை, அந்தக் கிராமியக் கூட்டுச் சமூகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கமுடிகிறது.
இதே மாதிரியான ஒரு பாலியல் வன்முறை நிகழ்வைச் “சிகரங்கள் பொடியாகும்” என்ற கவிதையிலும் பதிவு செய்துள்ளார். ஆனால் இந்தக் கவிதையில் ஒரு சாதிச் சமூகத்தில் நிலவும் பாலியல் சுரண்டலைக் கவிஞர்களுக்கே உரிய சத்திய ஆவேசத்தோடு புலப்படுத்தியுள்ளார் இந்தக் கவிதையை இன்று படிக்கும்போது, கொங்கு மண்டலத்திலேயே ஒரு சாதிக்கே பல்வேறு சாதியச் சங்கங்கள் தீவிரமாக இயங்கும் இன்றைய காலகட்டத்தில் இப்படியொரு கவிதையை எழுதி வெளியிட்டிருக்க முடியுமா? என்று எனக்குள் எழுந்து வந்த எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை. மேல்சாதிக்காரர்களின் ஆணவம் மிக்க பாலியல் சுரண்டல் காரணமாகத் தாழ்த்தப்பட்ட ஏழை எளிய சாதியினர் ஒன்று திரளுவர்; ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடுவர்; தேவைப்பட்டால் ஆயுதமும் ஏந்துவர் என்று இன்றைய தலித் இயக்கம் தோன்றுவதற்கு முன்பே 1976 –இல் இக்கவிதை மூலம் எச்சரித்துள்ளார் கவிஞர். இன்றைய தலித் இலக்கியத்திற்கான முதல் கவிதை என்று இதைச் சொல்லலாம். பாரதியின் வாரிசு அல்லவா?
சென்னிமலையாரின்
சிவந்த புலி விழிபட்டுக்
கறுப்புமான் ஒன்று கதறிவீறிட்டது
சேரிப் பெண்களின்
மானத்துக்கு அவர் எப்போதுமே ஒரு மயானபூமி
அந்த மயானபூமி
அருக்காணியையும் விழுங்கியது (378)
என்று பண்ணையாரின் பாலியல் வன்முறையைப் பதிவு செய்கிறார். பதிலுக்குப் பாதிக்கப்பட்ட மக்கள், பண்ணையாரின் மகளையே நேருக்கு நேராகப் போய் பெண் கேட்கிறார்கள்; பிணமாவோமென்று தெரிந்தே பிணமாகிறார்கள்; ஆனால் இதோடு முடிவதில்லை; ஒவ்வொரு பிணமும் பல்வேறு விதைகளாக மாறும். ஒடுக்கப்பட்ட மக்கள் எத்தனை நாளைக்குத்தான் ஒடுங்கிக் கிடப்பார்கள்; கவிஞர் எழுதுகிறார்:-
தூரத்தில்
பூனாச்சிமலையின் அடிவாரத்தில்
சுருளியாற்றங்கரையில்
உச்சிச்சூரியனை உள்வாங்கி விழுங்கும்
கானகத்தின் இதயத்தில் புதைய
ஒரு சிறுகும்பல் சின்னான் தலைமையில்
ஓடிக் கொண்டிருந்தது
அந்தக்காடு
தேக்குகள் தோள் உயர்த்தும்
வாகைகள் வாள் நிமிர்த்தும்
காடு!
அங்கு நிழல்கள்கூட நிஜங்கள் ஆகும்
புயல்கள் உருவாகும் (381 – 382)
பாரதிபோல ‘அடங்க மறு’ எதிர்த்து நில் என வர இருந்த ஒரு தலித் எழுச்சிக்கு முன் அறிவிப்பாகக் கவிஞரின் இந்தக் கவிதை அமைந்து விட்டதாக இன்றைக்கு எனக்குப்படுகிறது.
பூவே பூ………. புளியம்பூ (ப. 655) என்ற கவிதையிலும் ஒடுக்கப்பட்ட பாலியலின் பக்க விளைவான பாலியல் வன்முறை நிகழ்வைப் புனைவாக்கியுள்ளார். எங்கள் ஊர் ஆற்றாங்கரையோரம்…..
ஆற்றின் நடுவிலுள்ள
சந்தனங்கள் மேலமர்ந்து
தண்ணீரில் காலசைத்துப்
பாடுகிறாள்……. பாடுகிறாள்
பித்தி பொன்னாத்தாள் (655)
அவள் யார்? விறகுவெட்டிப் பிழைக்கும் சின்னப்பனின் தாயில்லாச் செல்ல மகள். பூப்போன்ற மகளுக்கு ‘முத்து முத்து மல்லிகைப்பூ, முகையவிழும் பிச்சிப்பூ, வாசமுள்ள செண்பகப்பூ, வாடாத செவந்திப்பூ என்று பூ வாங்கிக் கொடுத்தே ‘இவள் உதட்டின் பூவோரம் எப்போதும் பூப்பொங்கல்’ பொங்கச் செய்கிறான். வாராத வரன் வந்து மகள் கரையேறும் வேளையில், சாராயக் குடிகாரர்கள் கையில் சிக்கிச் சீரழிகிறாள். “சின்னப்பன் விறகு வெட்டும் கோடாலி, இத்தனை ஆவேசமாய் மனித உடல்களையும் வெட்டுமா?” – பிறகென்ன? அவன் கோவைச் சிறையில்; இவள் பித்தியாகி,
பூவேபூ…. …. புளியம்பூ
பொன்னாத்தா கொண்டைக்குத்
தாழம்பூ’ (655)
என்று ஆற்றங்கரையில் பாடித் திரிகிறாள். குடியால் குடிகெட்டுக் கிடக்கும் கிராமங்கள் இங்கே காட்சியாகின்றன. இதேபோல் கோடைப் பருவத்தில் நாடக அரங்கேற்றத்திற்கு மதுரை அல்லது கரூர் அல்லது திண்டுக்கல்லில் இருந்து வரும் கதாநாயகியைப் பின்தொடரும் கிராமத்து ‘மைனர்களை’ச் சித்தரிக்கிறது ‘அரங்கேற்றம்’ என்ற கவிதை,
‘சிட்டாஞ் சிட்டாங் குருவி
சிணுக்குத்தான் – இந்தச்
செவலப்புள்ளகிட்ட ஒரு
கணக்குத்தான்”
என்று பாடிக்கொண்டு சில்லறைக் காசுகளை அந்த நாடகக் கதாநாயகி மேல் வீசும் ‘மைனர்களை’க் காட்டுவதன் மூலம் நாடகக் கலைஞர்கள் குறித்துக் கிராமத்து ஆண்களிடம் படிந்துள்ள ஆதிக்க மனப்பான்மையைச் சுட்டிக்காட்டி விடுகிறார். ஊருக்கு ஊர் இருக்கும் இத்தகைய மைனர்களை ‘ஊர்க்கட்டுப்பாடு’ கண்டு கொள்வதில்லை என்ற நுட்பமான விமர்சனம் கவிதைக்குள் இருக்கிறது. தமிழ்ச்சமூகம், கொங்கு சமூகம் உட்படப் பெண்ணினத்தை அதற்குரிய உரிமை உணர்வோடு வைத்துப் பேணவில்லை; ஆண்நலச் சமூகத்திற்கு ஏற்பவே அவள் வடிவமைக்கப்டப்டிருக்கிறாள் என்பதைக் கவிஞர் மேற்கண்ட பல்வேறு கவிதைகள் மூலமாகப் புனைந்து காட்டிவிடுகிறார்.
v ஒரு மண்ணின் மணம் என்பது அந்த மண் சார்ந்த சடங்குகளில் அடர்த்தியாகப் படிந்து கிடக்கிறது. மனித வாழ்வு பிறந்தது முதல் இறக்கின்ற வரை பல்வேறு சடங்குகளால்தான் ‘வடிவம்’ பெறுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை. கொங்கு மண்ணில் நடக்கும் முக்கியமான ஒரு சடங்கு நிகழ்வைக் கவிதையாக்கி உள்ளார். ‘நழுவும் பருவம்’ என்பது அந்தக் கவிதைத் தலைப்பு. கல்யாணம் ஆவதற்குக் காத்திருக்கும் கன்னிப்பெண்கள் மார்கழி மாதத்தில் பிடித்து வைத்த பிள்ளையாரைக் கூட்டமாகப் பாடி வழியனுப்புகின்றனர். பூக்கூடைகளில் பிள்ளையாரைச் சுமந்துகொண்டு இரவில் தாரை தப்பட்டை முழங்க. தீவர்த்திக்ள வழிகாட்ட,
ஓலையக்கா கொண்டையிலே
ஒரு சாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாடை
தலைநிறை முக்காடு – ஓலே……
பொருமி அடியிலே
பொறிக்கோழி மேடையிலே
பொருமி சலசலங்கப்
போறாளாம் ஓலையக்கா (1014 – 1015)
என்று ஓலையக்கா பாட்டொலிக்க, ஆற்றை நோக்கி வந்து ஓடும் வெள்ளத்தில் பிள்ளையாரை வழியனுப்புகின்றனர். தீவர்த்தி வெளிச்சத்தில் பளபளத்துக் கொண்டு ஓடுகிறது நதி; பிள்ளையாரை மட்டுமா அடித்துக் கொண்டு போகிறது? பிள்ளைப் பருவத்தையும் கூட அல்லவா? மேலும், பழைய பாவை நோன்பின் எச்சமோ? கன்னிமை, விடிவு காணத் தவிக்கும் சடங்கோ? குளிர்ப்பருவம் குடிமாறிப் போகிறாளா? என்றெல்லாம் மண் சார்ந்த ஒரு சடங்கை அர்த்தப்படுத்திப் பார்க்க முயலுகிறார் கவிஞர்.
மேலும், யார் இந்த ஓலையக்கா? ‘ என்றொரு வினாவையும் எழுப்பி,
மேனாட்டு ஓலையக்கா
மேற்கே குடிபோறா
என்று கன்னிப்பெண்கள் பாடுவதாகவும் காட்டுகிறார். இது 1998 – இல் வந்த ஒரு கிராமத்து நதியில். ‘பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு’ என்று – 2000-இல் வந்த கவிதைத் தொகுப்பில் புலம்பெயர்ந்து கணவன்கூட கொங்குமண்ணில் வாழவந்த தேவகிக்குட்டி, பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டு கணவனை இழந்து சீரழிந்து சின்னஞ்சிறுசுகளோடு பிறந்த புலத்திற்கே கிளம்பி விடுகிறாள்; அப்பொழுதும்
மேற்கே புறப்பட்டாள்
மேனாட்டு ஓலையக்கா
என்ற அதே பாட்டு வரியைப் பயன்படுத்துகிறார்; ஒருவேளை ‘ஆண்களின் பாலியல் வன்கொடுமைக்கு எங்களை ஆளாக்கிவிடாதீரும்’ என்று கன்னிப்பெண்கள் பிள்ளையாரை வழிபடத் தொடங்கியதுதான் இந்தச் சடங்கின் மூலமென்று கவிஞர் கருதுகிறாரோ? இன்றைய நாட்டுநடப்புகளுக்கு இதுதான் பொருத்தமாக இருக்கிறது. தொன்மங்களுக்குள், சடங்குகளுக்குள் எப்பொழுதும் பன்முகப்பட்ட அர்த்த அடுக்குகள் ஆழமாகப் படிந்து கிடக்கும் என்பதைக் கண்டுணர்ந்து செயல்பட்டுள்ளார்.
v ‘கொடும்பாவி சாகாளோ?’ – என்ற கவிதையில் மண்ணோடு மண்ணாக வாழும் மண்ணின் மக்கள் மழை பெய்யாக் காலத்தில் மழைக்கும்மி கொட்டும் சடங்கை உயிரோடு பிடித்துத் தருகிறார்.
மானத்தை நம்பியல்லோ
ஐயோ வருண தேவா
மக்களையும் பெத்துவிட்டோம்
ஐயோ வருண தேவா
மானம் செழிக்கவில்லை
ஐயோ வருண தேவா
மக்கள் வயிறு வாடுதையா
ஐயோ வருண தேவா (1008)
‘கும்மி கொட்டுவதோடு கண்ணீரும் சேர்ந்து கொட்டுகிறது. ஆனால் மழை மட்டும் கொட்டவில்லை. சாமை, தினை, சோளம், கம்பு எனப் படி அளந்து அனைத்தையும் அரைத்தெடுத்தார்கள்; மழைக்கஞ்சி, காய்ச்சி மக்களெல்லாம் குடித்தார்கள். இந்தச் சடங்கிற்கும் மேகம் இறங்கவில்லை. இரக்கப்படவும் இல்லை. கந்தல் துணிகொண்டு கொடும்பாவி செய்து, கரியால் முகம் எழுதி ராட்சசியாய் அடையாளம் செய்து, தெருவெல்லாம் ஒப்பாரி வைத்து இழுத்து வந்தார்கள். காளிகோயில் முன்னே எரித்தார்கள். இதனாலும் பயனில்லை. (நெருப்பு உயர்ந்தது;) மேகம் கருக்க மறுத்தது; பெரியவர்கள் “சாமிக் குத்தம்” என்று கருதினார்கள். மூன்றுநாள் விடாமல் விநாயகர் மேல் குடங்குடமாய்த் தண்ணீர் ஊற்ற முடிவெடுத்து ஊற்றினார்கள். ஊற்றும்நீர் ஊர் ஆற்றுக்குள் ஓடிச் சேரும் வரை ஊற்றினார்கள். இறுதியாக கந்தாண்டிப் பண்டாரம் கவலையுடன் பூசை செய்து, சூடம் எடுத்துத் தீபம் காட்டுகையில்,….’ சல மூலை காலிறங்கித் தடதடத்து மழைபொழியத் தொடங்கியது. இவ்வாறு மக்கள் நம்பிக்கை சார்ந்து மக்கள் பண்பாட்டை மண்ணின் மணத்தோடும் மொழியோடும் சடங்கோடும் படைத்துக் காட்டும் கவிஞர்,
தற்செயலா?
பிள்ளையார் தனிச்செயலா
மக்களது நம்பிக்கை
மழைப்பூவாய்ப் பூத்ததுவா?
யாருக்குத் தெரியும் அந்த
இயற்கை செய்யும்
திருக்கூத்து – (1010)
என்றெல்லாம் தானொரு பகுத்தறிவு யுகத்தின் பிரதிநிதி என்ற ‘கோதாவில்’ அதை விளக்குவதற்கு முயன்று, இறுதியில் “யாரறிவார்?” என்று தோல்வியடைவதையும் சுகமாக ஏற்கிறார். தன் மண்ணின் மக்கள் முன் மண்டியிடுவதில் கவிஞர்க்குத்தான் எவ்வளவு ஆனந்தம்.
நிலமென்று பொதுவாகச் சொன்னாலும் மனிதர்களைப் போலவே நிலத்திற்கும் பல்வேறு முகங்கள் இருக்கின்றன.பல்வேறு பாவங்கள் இருக்கின்றன. கொங்கு நிலத்திற்கே உரிய இந்த முகத்தை மிக நுட்பமாகக் கண்டுகொண்டவராகக் கவிஞர் புலப்படுகிறார். எனவே இவர் கவிதைகளில் கொங்கு மண்டலத்தின் நிலவரைவியல் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. நடுக்காட்டு பெரியசாமி 77- வயதை எட்டிய பெரிசு. மெல்லத் தடியூன்றி ‘குள்ளவெட்டான்’ பாறைக்கு வந்து சேர்ந்து விட்டால் அவரது நினைவலைகளிலும் பார்வையிலும் வெவ்வேறு பாறைக்கற்கள் வரிசையாக வருகின்றன. அப்பாவுக்குத் தெரியாமல் சீட்டி விளையாடிய ‘சந்தனக்கல்’, ஆனைக்கல் ஓரம் ஒரு செம்மறி ஆட்டின் காலை மலைப்பாம்பு கவ்வி இழுக்க, ஆட்டலறல் கேட்டு இவர் ஓடிச் சென்று பாறாங்கல்லொன்றை மலைப்பாம்பு மேல் தூக்கிப் போட்டுக் காப்பாற்றினார். அதனால் அந்த இடத்திற்குச் செம்பிலிக்கல் என்று பெயர் வந்ததாம்; அந்தக்கல்லோடு குண்டுக்கல், பெரியாண்டிக்கல் என்று காட்சிப்படுத்துவதன் மூலம் ஆறுசார்ந்த நிலவரைவியலைக் கவிதை படம்பிடிக்கிறது. இதுபோலவே ஊரைச் சுற்றியுள்ள நிலங்களை மீன்கரைக்காடு, சமத்தூரான் காடு, ஒட்டன்காடு, தெக்காலக்காடு, கணக்கச்சிக்காடு, குறவன்காடு, பாறைக்காடு, நாவிதன் காடு, என்று காட்டுவதோடு இந்த எல்லாக் காட்டையும் ஆளும் பண்ணைகளையும் இறுதியில், ஆண்டுவிடும் சுடுகாட்டையும் காட்டிச் செல்லுகிறார் கவிஞர் (1004).
இந்த ஆறும் பாறைகளும் மழையில்லா வறண்ட காலத்தில் பாலைநிலமாகப் போகும் காட்சியையும் கவிஞர் காட்டத் தவறவில்லை. ‘வறுமையில் நகைகளை விற்றுத் தொலைத்தவளின் கழுத்தில் மிஞ்சிய தாலிக்கயிறு போல ஆறு வற்றிக் கிடந்ததாம்; கொடுத்துக் கொடுத்து ஏழ்மைப்பட்டவன் போலப் படுத்துக்கிடந்ததாம் ஆறு; எலும்புக் கூடுகள் போல் பாறைக்கற்கள் துருத்தி தநின்றன; கோரைப்புற்கள் பச்சை மறந்து சருகுக் குவியலாய் ஆயின. கோடைச் சூரியன் கொப்பரை கொப்பரையாய் நெருப்பைக் கொட்டினான். மக்கள், குடிநீருக்குத் தவித்தனர்; மணலில் கிணறு பறித்தனர்; ஆனால், அந்த நதியோ உயிரை மணலுக்குள் தேடி உள்ளே உள்ளே இறங்கியது; கொங்கு மண்டலத்தின் கோடைக்காலக் காட்சி இது.
சரி! தண்ணீர் வரும் காலத்தில் இதே ஆற்றில் என்னென்ன மீன்களெல்லாம் துள்ளி விளையாடித் திரியும் தெரியுமா? கால் வைத்தால் கொலுசுச்சரமாய் மொய்த்து அரித்துப் பிடுங்கும் ‘அயிரைமீன்’, பளிச்சிட்டுப் பாயும் ‘சிப்பிலி’, கட்டிச்சந்தனம் போன்ற ‘உளுவை’, அடியாழத்தில் நழுவித் திரியும் வண்ணக் களஞ்சியமான ‘செவ்வாளி’, மீசைக்கெளுத்தி, வால்சிவந்த ‘கெண்டை, அகலமான சிலேப்பி, பன்றி முகத்துக் ‘கூகா’ சுண்டுவிரல் காகா, ஆற்றின் கம்பீரமென வலம் வரும் ஆரா , கார்மேனி செங்கண் வரால், மூக்கு நீண்ட கொக்குமீன், கீறும் தகரவாளை, பால்வெண்மைச் சிலவாளை, அல்வாத் துண்டென்றும், தாதுஅபிவிருத்தித் தங்கமென்றும் பேர்பெற்ற பாம்புபோல் பதுங்கிக் கிடக்கும் விலாங்குமீன், எனத் தன் “தண்ணீர்ச் சிநேகிதங்களைப் (1399) பட்டியல் இடுவதன் மூலம் கொங்கு மண்டலத்து மீன்களின் வாடையை வாசகரின் இருதயத்திற்குள் செலுத்தி விடுகிறார்.
‘இது எங்கள் கிராமம்’ என்ற கவிதை மூலமாகக் கொங்கு மண்டலத்தையே காட்சிப்படுத்தி விடுகிறார். ஊரைச் சுற்றி வளைந்து வளைந்து வலம் வரும் நீலக் குதூகலமாக ஒரு நதி; கிழக்கே தொடுவானம் வரை பச்சைக் சதுரங்கப் பலகை போன்று வயல்கள்; அடம்பிடிக்கும் இடுப்புக் குழந்தையாய் நெளியும் கரையோரம் நாணல் கோணல்கள்; நடுவே ‘இறுமாப்பு’ போல ஒரு அத்திமரம்.
ஆடிமழை, கத்தியாய் முகம் கிழிக்குமாம். ஐப்பசி சாரல் அதற்கு ஒத்தடன் கொடுக்குமாம்; அசையாத எருமைகளாய்க் கரும்பாறை படுத்திருக்கிறது. ஊர்த்தெரு எப்படி இருக்கிறது? ஒரு வாசல் மறுவாசல் பார்க்காத வீடுகள், நவக்கிரகங்கள் போலவாம். ஆற்றுத்துறையில் நீராடிக் கரையேறும் ஈரஉலாக் கண்டபடி விழித்திருப்பாராம் விநாயகப் பெருமான். ‘தெற்கு வளவு’ ஓரத்தில் சீட்டாட்ச் சித்தர்கள்.
மண்குதிரை காவல் செய்யும் மதுரைவீரன் கோயில் உண்டு. அங்கு என்ன நடந்து கொண்டிருக்கும் தெரியுமா? சப்பைக்கால், மாறுகண், சளிமூக்கு, மேலும் சோகை பிடித்த அரிசனக் குழந்தைகள் துருப்பிடித்த வேல்களைச் சுற்றி விளையாடித் திரிவார்களாம். மின்சாரக்கம்பங்கள் உண்டு. பகலில் குருவிகள் சரம் கோக்கும்; ஆனால் இரவில் விளக்கு எரியாது. போதையில் மாட்டுச் சாணத்தில் விழ்ந்து விடும் கவுண்டர்; சிறுவர்களின் சிரிப்பு அபிஷேகம், ஆற்றில் விலாங்கு மீன் பிடிக்கும் மனிதர்களோடு , கூடவே உயிரோடு பூத்து நிற்கும் கோரைக்கால் நாரைகள். அரிவாளாய்க் கூனிக் களையெடுக்கும் பெண்கள்; பனையடி விசிறி நிழல்களில்அணிவகுத்திருக்கும் அவர்களின் தூக்குச்சட்டிகள்; மச்சானுக்குச் சாப்பாடு கொண்டு போகும் சின்ன நடைக்காரிகள்; அவர்களைக் கள்ளிகளில் பதுங்கி நின்று வேவு பார்க்கும் ஓணான்கள்; வண்ணான் துறைக்கு அழுக்குப் பொதியோடு உப்புக் கடலையை மென்றபடி வரும் சலவைக்காரர்கள், ராட்டைச் சுற்றும் பஞ்சுத்தலை குருட்டுத்தாய்; யந்திரமாய் நெய்தறியும் நெசவாளர்கள், சவுண்டம்மன் கோயிலில் “அம்மாதீசிக்கோ” என்று நாக்கில் அலகு போடும் மனிதர்கள்; ஆறாம் நம்பர் டவுண்பஸ் புழுதியில்குளிக்கும் மாரியாத்தா கோயிலில் குட்டிப்பாம்புச் சடைத்தலைச் சாமியார் கஞ்சாக் கிறுகிறுப்பில், தன் இளமைக்காலத் திருமாத்தாள் நினைப்பில் பத்தி – தியானத்தில் மூழ்குவார். இதுபோலவே கொங்கு மண்ணின் தெருக்களில் சிறுவர்கள் ஆடிக்களித்த பன்முகப்பட்ட விளையாட்டுக்களையும், அவற்றில் பாடப்பட்ட பாடல்களையும் பதிவு செய்கிறார். ‘புள்ளார் பந்து’ விளையாட்டு “காரி, சூரி மாட்டைக் கண்டா, கடைக் கண்ணாலே பாயுவேன்” எனப் பாடிக் கொண்டு ஆடும் நரிவிளையாட்டு, இரண்டு பெண்கள் பெருக்கல் குறிபோலக் கையைப்பற்றி இழுத்துச் சாய்ந்துகொண்டு பாவாடைப் பூ விரிய சுழன்று பாடிக் கொண்டே ஆடுகின்ற ‘பிஸ்ஸாம் பறந்து’ விளையாட்டு என்று நினைவோடை உத்தி மூலம் புனைந்து காட்டுகிறார். இப்படியிருந்த கொங்கு நாட்டுக் கிராமம், இன்றைக்கு என்ன ஆயிற்று? உழைப்பாளி மக்கள் எல்லாம் தோட்டக் காடுகளுக்கு உருகிக் கருகப் போய் விட்டார்கள். [இன்றைய மக்கள் எடுப்புக் கணக்கின் புள்ளிவிவரப்படித் தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்து ஐநூறு கிராமங்களில் ஒரு ஆள் கூட இல்லாமல் உயிரற்ற பூமியாய் உறைந்து கிடக்கின்றனவாம்]. எனவே இன்றைய அந்தக் கொங்கு மண் சிற்றூரில் என்ன நடக்கிறது? அந்த ஊர் வருடத்திற்கு ஒருமுறை விழிக்கிறது மாரியம்மன் திருவிழா என்ற பெயரில்! அதுவும் எப்படி விழிக்கிறது?. நகர நாகரீகம் சார்ந்த எல்லா அசிங்கங்களோடும் விழிக்கிறது. பழைய ‘பம்பை குமுகுமுக்கிறது; தப்பட்டை தடதடக்கிறது. ஆனால் ஆபாச சைகையுடன் கேளிக்கை என்ற பெயரில் கரகத்தாட்டம்! கூடவே சாராயக் கும்பல்கள் பரிமளிக்கிறது; கறிக்குழம்பு கமகமக்கிறது – இவ்வாறு தன் இளமைப்பருவக் காலத்துக் கொங்குப்பூமியை மட்டுமல்ல, இன்றைக்கு அந்தப்பூமி எத்தகைய மாற்றங்களுக்கு உள்ளாகி என்னவாக ஆகி நிற்கிறது என்பதையும் கவிஞர் காட்டிவிடுகிறார். இந்தச் சமூக மாற்றத்தை அம்மாவை முன்னிறுத்தியும் ஓரிடத்தில் புலப்படுத்துகிறார்: “அம்மா நவீனமாகி விட்டாள்” (1357) என்பது அந்தக்கவிதை. படுத்துக்கிடக்கும் மருத்துவமனைக்குத் தன்னைப் பார்க்க வரும் பேரப்பிள்ளைகளுக்கு, “கோக்” வாங்கிக் கொடுக்கச் சொல்லுகிறாள் அம்மா.
சின்னஞ்சிறுசு கேக்குதுபாரு…
கொக்குக் காலெ வாங்கிக் குடுதாயி
என்பது அந்தத் தாயின் பேச்சுமொழி. கவிஞர் நினைத்துப் பார்க்கிறார்; இதே அம்மா காட்டில் கள்ளிப்பழம் பறித்து, வாகாக முள் அகற்றி வாய் சிவக்கத் தந்தாளே தனக்கு ஒரு காலத்தில்!
‘அம்மா நவீனமாகிவிட்டாள்
நான் இன்னும் கிராமத்தில்’
என்கிறார் கவிஞர். இவ்வாறு பெரும் வணிகக் குழுமங்கள் கட்டமைக்கும் ‘கோக்’ கலாச்சாரம் தாய்ப்பூமியில் ஆக்ரமிப்பதைப் பதிவு செய்கிறார். இதுபோலவே, கிராமம் தோறும் நியாயவிலைக் கடைகள் முன்பு சலுகை விலைக்கும் இலவசத்துக்குமாக வரிசையில் காத்துக்கிடக்கும் உழைப்பாளர் கூட்டத்தைப் பார்த்து, இந்த மண்ணில் தோன்றியுள்ள சீறத் தெரியாத புதிய பாம்புகள் எனப் புனைந்து காட்டுகிறார் கவிஞர்.
மண்ணெண்ணெய் –
சர்க்கரை –
கோதுமை மாவுப் பாம்புகள்
க்யூவாய்ச் சுருண்டு
காத்துக் காத்துக்
காற்றைக் குடிக்கும்
ஸ்டாக் இல்லை என்ற
அறிவிப்புப் பலகையை
வைத்ததும்
முணுமுணுப்போடு
ஆயிரங்காலால்
ஒட்டிய வயிறுடன்
ஊர்ந்து மறையும்
படமெடுத்தாடவும்
பாயவும் சீறவும்
ஜீவனில்லாதவை
ஐயோ பாவம் –
எங்கள் ஊர்ப் பாம்புகள் -.
இவ்வாறு இன்றைய கொங்குப் பூமியையும் வேதனையோடும் வினயத்தோடும் காட்சிப்படுத்துகிறார்.
v வரலாற்றுக் காலத்தில் கொங்குப்பூமி எப்படி இருந்தது என்பதையும் தனது கவிதையாக்கத்திற்குள் கொண்டு வந்துள்ளார். ‘ஆதிரை’ என்ற கவிதை நாடகம் மூலம் கி.பி. 250 வாக்கில் கொங்குநாட்டில் நடந்த இரட்டர் ஆட்சியின் கடைசி அரசனான திருவிக்கிரம தேவன் சமண சமயத்தை விட்டுச் சைவசமயம் தழுவுகிறான்; அத்தகைய ஒரு சூழலில் – மத அரசியல் பின்னணியில் – நாடகத்தை நிகழ்த்திக் காட்டி, இறுதியாகக் கொங்குநாட்டில்,
அப்பன் சமணம் அம்மா பவுத்தம்
மகனோ சைவன் மகள் வைணவமாம்
தகுந்த மாமனோ சமயம் இலாதான்
எனினும் அனைவரும் இதயம் ஒன்றினீர்
மனித வாழ்வின் மாண்புகள் பேணினர்’ (801)
என்று சமயப்பொறை, சமயப்பொதுமை என்ற ஒரு கருத்தாக்கம் உருப்பெற்றதைப் புனைந்து காட்டுகிறார் கவிஞர்; அந்த நாடகத்தின் அன்றைய கொங்குநாட்டின் வளத்தை வர்ணித்து மனமகிழ்ச்சி கொள்கிறார் கவிஞர். “மலையும் காடும் மயிலாடு சோலையும் குலாவும் இனிய கொங்கினில் பிறந்தேன்” என்று தொடங்கி 24 வரிகளாக நீள்கிறது அந்த வர்ணனை (ப. 729 – 730).
மேலும், கொங்குநாட்டின் வரலாற்றுச் சிறப்பை இன்னும் பழமையான சங்ககாலத்திற்கே கொண்டு செல்லுகிறார் கவிஞர். தொல்பொருள் ஆய்வாளர் பூங்குன்றன் கவிஞரின் ஊர் ஆற்றில் கிடைத்த சங்ககாலக் காசின் புகைப்படத்தைக் காட்டுகிறார்; கவிஞரின் கண்கள் மெல்லக் கசிகின்றன. தன் பூமியின் பழம் பெருமை இத்தகையதா? வியக்கிறார்; திகம்பர சமணர்களின் கற்படுக்கை இங்கே உண்டு. தீர்த்தங்கரர் சிலையும் உண்டு; அறம் பழுத்த இத்துறவிகளின் திருவடி தீண்டிய தீர்த்தமாக ஒரு நதியும் உண்டு என மகிழ்கிறார்; அதே நேரத்தில் நதியில் மிதந்து வந்த மாங்கனியை எடுத்தற்காகப் பெண்ணைக் கொன்ற நன்னன் ஆண்ட ஆனைமலை வழியாக அல்லவா அழுது கொண்டே வருகிறது இந்த நதி எனப் பதிவு செய்து வருத்தப்படவும் செய்கிறார் (985).
இவ்வாறு கொங்குப்பூமியின் மணத்தை அதற்குரிய பலத்தோடும் பலவீனங்களோடும் சிற்பி படைத்தளித்துள்ளார் என்று இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்; ஆனால், எவ்வளவு சொன்னாலும் கொங்கு மண்ணின் மொழியை அவர் எவ்வாறு கைப்பற்றியுள்ளார் என்பதைச் சொல்லாமல் அது நிறைவுறாது; ஏனென்றால் ஒரு மண்ணின் மணத்தை வெளி உலகத்திற்கும் எடுத்து செல்வது அந்த மண்ணில் உற்பத்தியான மொழிதான். எனவேதான் கவிஞர் சிற்பியும் கொங்கு மண்ணின் மகத்தான மொழியை அதன் நுட்பத்தோடும் அடர்த்தியோடும் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளதைப் பார்க்கிறோம்.
சீவக்கட்டை பிஞ்சுபோகும் (1019), விண்ணாரம் பேசுவாள் (1019), கூரையின் வெட்டுக்கை (1012), சலமூலை (1010), செம்பிலி (செம்மறி 1002), கவுண்டச்சி போயிட்டுதல்லங்கோ (1004), இழுத்துக்கிட்டே இருந்துதுங்களே (1004), கிராமம் முச்சூடும் (997), கொத்தீட்டப் போகுட்டுமாடி (994), மேய்ச்சல் குறை (புல்வெளி 992), ஏங்கண்ணு தெரியலியாட்ட இருக்குதுங்க (987), புள்ளார்பந்து (987), வழுக்குவால் (955), வாக்கணம் கெட்ட கழுதைக்கு ஒணத்தி பாரு (984), சேற்றாங்கொட்டை (976), மேற்குக்கரை தொக்கடவில் (977), கொமுரிகள் (குமரி 977), அடங்கொண்ணியா! மம்மானியாகுப் போகுதுரா (978), அப்பாரு (பாட்டனார் 948), அப்புச்சி, பச்சீமக்கா (1019), அங்கராக்குப் (சட்டை) போடாத மார்பு (948), பழ்நீம்மா (948), கிடுகலங்கிய பார்வை (1113), அங்கேயே நில்ரா காமாட்டி (1113), ஊசிப்புல் (1369), கூச்சம் (தூண் – 1166), நங்கை (அண்ணன் மனைவி – 1166), இட்டேரிக் கள்ளிகள் (615), சுருக்கு (சூடு) வைக்கறேங்கிறான் (1167), வேய்க்கானம் இல்லாமப் பண்ணீட்டியே தாயி…. (1167), பார்த்தவர்கள் அக்கியானப்பட்டது (1168), எஞ்சாளைக்கே வந்துரு (1169) என்றெல்லாம் அவர் கையாளும் கொங்குநாட்டு மொழி அந்த மண்ணின் வாசத்தை நமது மூச்சுக் குழாய்களில் நிரப்புகிறது.
இவ்வாறு கவிஞர் சிற்பியின் கவிதைப் படைப்புகள் பல்வேறு உத்திமுறைகளின் மூலமாகவும் எடுத்துரைப்பு வழியாகவும் தனது இளமைப்பருவக் காலத்துக் கொங்கு மண்ணின் மணத்தை மட்டும் அல்லாமல், வரலாற்றுக் காலங்களில் அம்மண்ணின் மணம் எவ்வாறு விளங்கியது என்றும் சித்தரிப்தோடு இன்று – நிகழ்காலத்தில் அந்தப் பூமியில் எத்தகைய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதையும் கவிஞர்களுக்கே உரிய தீர்க்கமான விமர்சன நுட்பத்தோடும் கருணை கசியும் இதயத்துடிப்போடும் படைத்து வழங்கியுள்ளாரென அறியமுடிகிறது.
பயன்பட்ட நூல்கள்
கவிஞர் சிற்பி. சிற்பி கவிதைகள் – தொகுதி 1, 2, (2011)., என்சிபிஎச்: சென்னை.
- சூரியனை நெருங்கிச் சுற்றும் முதற்கோள் புதன் மெதுவாய்ச் சுருங்கிக் கொண்டு வருகிறது
- “மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை -2
- தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 3
- சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 67 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பயணத்தின் அடுத்த கட்டம்
- தினம் என் பயணங்கள் -9
- தொடுவானம் – 8. கடல் கடந்த தமிழன்
- நீங்காத நினைவுகள் 39
- கொங்கு மணம் கமழும் கவிஞர் சிற்பியின் படைப்புகள்
- ”பங்கயக் கண்ணான்”
- புகழ் பெற்ற ஏழைகள் -50
- திண்ணையின் இலக்கியத் தடம் – 27
- வெளி
- நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2014
- சிங்கையிலிருந்து திருச்சி செல்லச் செலவில்லை
- கால் பக்க கப்சா, ஒரு பக்க உடான்ஸ்
- சமுத்திரக்கனியின் ‘ நிமிர்ந்து நில் ‘
- என் நிலை
- உறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழா
- சீதாயணம் நாடகப் படக்கதை – 2 5
- மொட்டைத் தெங்கு
- வாழ்க நீ எம்மான்.(1 )