கவிஞர் வைரமுத்து அவர்கள் எங்கள் மாவட்டக்காரர் என்பதில் எல்லாருக்கும் இருப்பது போல் எனக்கும் பெருமை உண்டு. அவர் மதுரைப் பக்கத்துக் கொச்சைத் தழிழில் படைத்த கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலகப் போர் ஆகியவை அவரைச் சிறந்த நாவலாசிரியராகவும் இனங்காட்டின என்பதில் கடுகளவும் ஐயமில்லை. அவர் ஊரான வடுகபட்டி எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள ஊராகும்.
போற்றுதலுக்குரிய இந்நாவல்களை வைரமுத்து படைப்பதற்குப் பல நாள்களுக்கு முன்னால் கவிஞர் அமரர் வாலி அவர்களைப் பற்றிய கட்டுரை ஒன்று பிரபல வார இதழ் ஒன்றில் வெளிவந்தது. பெண்ணுரிமைவாதிகளுள் ஒருவர் அவரை ஏக வசனத்தில் விளித்ததுமல்லாமல், “டா” போட்டும் ஒலிபெருக்கியில் விளித்துத் திட்டியது பற்றிய தகவலை உள்ளடக்கிய கட்டுரை அது. பெண்கள் “வயது”க்கு வரும் அந்தரங்கத்தைப் பற்றி வினவி அவமதிக்கும் ஒரு திரைப்படப் பாடலை எழுதியதற்காகவே அந்தச் சாடல்.
அப்பெண்மணியின் ஆவேசப் பேச்சை அவ்விதழ் வைரமுத்துவின் கருத்துடன் வெளியிட்டிருந்தது. வைரமுத்து விமர்சகர்களைக் குறைகூறியதுடன் கவிஞர் வாலிக்கு ஆதரவான கருத்தையும் தெரிவித்திருந்தார்.
அதற்கு எதிரொலியாக நான் எழுதியது கீழே வருகிறது. அவ்விதழ் அதன் பெரும்பகுதியை ஒதுக்கிவிட்டு வாலியை நான் தாக்கிய பகுதியை மட்டுமே வெளியிட்டது. அவர்கள் அந்த அளவுக்கேனும் அதை வெளியிட்டதே பெரிய விஷயம்தான். எனவே அதை மிகவும் சுருக்கியது பற்றி எனக்கொன்றும் மனத்தாங்கல் இல்லை. எனினும் நான் எழுதியது முழுவதும் கீழே வருகிறது. அடைப்புக் குறிகளுள் சாய்ந்த எழுத்துகளில் இருக்கும் பகுதிகள் மட்டும் வெளியாகவில்லை.
(மதுரை மாவட்ட வடுகபட்டி வைரமுத்து
மதுரமாய் எழுதுகின்ற பாக்களுக்கு
மட்டுமே நாம் வாங்குவோம் வக்காலத்து;
இதுகாறும் வேறெவர்க்கும்
கிட்டிடா விருதுள் பெற்ற நீ எமது பொதுச் சொத்து;
ஆனாலும் –
குதிரை யொன்று இடறி விழலாகாதென்பது எம் கருத்து!
தாய்க்குலம், தாய்க்குலமென்று போற்றிகொண்டே
பேய்க்குலங்கள் சில திரையுலகில் வளருகின்றன;
வாய்க்குவரும் வரம்பு கடந்த வார்த்தைகளை மசிதனில்
தோய்த்தெழுதிப் புண்படுத்தி ஏதேதோ உளறுகின்றன!
நீங்கள் நினைப்பது போல், பலர்க்கும் உங்கள் மீது பொறாமை இருப்பது உண்மைதான். இங்கே விமரிசனக் கலை வளரவில்லை என்பதும் உண்மைதான். விஷயங்களை விடுத்து விஷமங்களைச் சிலர் கக்குகிறார்கள் என்பதும் உண்மைதான் ஆனால் எல்லா விமரிசகர்களும் விஷம் கக்குகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் எழுப்புகின்ற விஷயமுள்ள கேள்விகளுக்குக்கூட உரிய பதில்களைச் சொல்லாமல் இவ்வாறு திசைதிருப்பி நழுவுதலும் தகாது..)
அவ்விதழில் வெளிவந்த பகுதி பின் வருமாறு:
கவிஞர் வாலியின் ஒரு திரைப்படப் பாடலை மேடையில் மேற்கோள் காட்டி, “என்னடா எழுதுகிறாய், தரங்கெட்டவனே! நீயெல்லாம் தங்கையோடு பிறக்கவில்லையா? தாயோடு இருக்கவில்லையா?” என்று ஏகவசனத்தில் வாலியை ஏசிய பெண்மணி யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால், வாலியின் “எப்படி? எப்படி……” பாடலால் தான் அவர் அந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். ஒரு பெண்மணியை அந்த அளவுக்குக் கோபப்படச் செய்ததும், தம் வசமிழக்கச் செய்ததும் அந்தப் பாடலின் மிக மோசமான தரங்கெட்ட தனமே என்பதை வைரமுத்து ஒப்புக்கொள்ள வேண்டும். ‘இப்படி யெல்லாம் எழுத நான் மறுத்தால், அந்த வாய்ப்பைப் பிடித்துக்கொண்டு முன்னேற இன்னொருவர் காத்துக் கொண்டிருக்கிறார்; எனவே அதை நானே எழுதிவிட்டுப் போகிறேனே! என்ன தப்பு?’ என்றும் ‘நான் ஒருவன் எழுத மறுத்தால், திரைப்படப் பாடல் ஆபாசம் ஒழிந்துவிடப் போகிறதா என்ன?’ என்றும் திரைப்படக் கவிஞர்களோ அல்லது பிறிதொரு துறையைச் சேர்ந்தவர்களோ தங்களுக்குத் தாங்களே செய்துகொள்ளும் சமாதானம் சமுதாயப் பொறுப்பின்மையையே காட்டும்.
“எப்படி” எப்படி….” பாடலைப் பாடிக்கொண்டு தன் மனைவியையோ அல்லது மகளையோ ஒரு பொறுக்கி பின் தொடர்ந்தால் தமக்கு எப்படி எப்படி யெல்லாம் ஆத்திரம் வரும் என்று கண நேரமேனும் கற்பனை செய்திருந்தாலும், வாலி அந்தப் பாடலை எழுதியிருந்திருக்க மாட்டார். உங்களுடைய நண்பர் வாலியைப்பற்றிக் குறிப்பிட்டதன் வாயிலாக அவருக்கும் சேர்த்து நீங்கள் வக்காலத்து வாங்கியதால் இப்படி எழுத நேர்ந்தது.
(பாத்திரத்தின் குரலைப் பிடித்துக் கொடுப்பதுதான் கவிஞனின் கடமை’ எனும் உங்களது கூற்று ஆத்திரத்தையே விளைவிக்கிறது. தரக்குறைவான பாடல்களை எழுதக் கட்டாயப் படுத்தும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குக் கவிஞர்கள் காசுக்காக அடிமைபட்டுக் கிடக்கும் நிலை இது. கவிஞர் கா.மு. ஷெரீஃப் இப்படியெல்லாம் எழுத மறுத்துத் திரைப்படத்துறையை விட்டே நீங்கி விலகிவிட்ட மாண்பை நினைவுகூராதிருக்க முடியவில்லை. ‘பெண்களைப் புண்படுத்தும், இழிவுபடுத்தும், தாக்குறைவாகக் கிண்டல் செய்யும் வசனங்களை சொல்ல மாட்டேன்’ என்று, திரைப்படத் துறைக்கு வருவதற்கும் முன்னரே, மறுத்துக்கொண்டிருந்த நாடக நடிகர் அமரர் ‘டணால்’ தங்கவேலு பற்றியும் நினைவு கூராதிருக்க இயலவில்லை. )
தாய்மையின் சின்னங்களான் பெண்களின் உடல் உறுப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் கிண்டல் செய்பவர்கள் பெருகும் வண்ணம் பாடல்கள் எழுதுகிறவர்கள தாய்மையைப் போற்றுவதாய்ச் சொல்லுவதும், தாயைப் போற்றிப் பாடுவதும் பச்சைப் பொய்கள். அதற்கான விளக்கத்துக்குப் பாத்திரப் படைப்பின் மீது பழி போடுவது கேவலம்!
(என் பாடலால் / எழுத்தால் சிலர் திருந்தி யிருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் கவிஞரோ அல்லது எழுத்தாளரோ, அதே போன்று அவற்றால் மனிதர்கள் கெட்டுப்போகவும் கூடும் என்பதை ஏனோ வசதியாய்ப் புறக்கணிக்கிறார்கள்.
சிலருக்குத் தொழில் பேச்சு… சிலருக்குத் தொழில் கவிதை எழுதுவது… என்பது உண்மைதான். ஆனால் தொழில் நாணயம் என்று ஒன்று உளதே! கலப்படம் செய்து மனித உடம்புகளை நோயுறச் செய்யும் வியாபாரிகள் குற்றவாளிகளெனில், உள்ளங்களைக் கெடுப்பதன் வாயிலாகப் பெண்களுக்குப் பாதுகாப்பாற்ற ஒரு சமுதாயச் சூழலை ஏற்படுத்துகிற எழுத்தாளர்கள் மட்டும் விதிவிலக்குகளா என்ன! இதென்ன அயோக்கியத்தனம்! கேட்டால், ‘அது எங்கள் வயிற்றுப் பிழைப்பு!’ என்ரு கூசாமல் சிலர் சொல்லுகிறார்கள். திரைப்படத் துறையில் பெரும்பணம் சம்பாதித்து ஐந்தாறு பங்களாக்கள், சில கார்கள், இலட்சக்கணக்கில் வங்கியில் சேமிப்பு என்று வைத்துள்ளவர்களும் கூட, இதையே சொல்லுகிறார்கள். இரண்டு மூன்று தலைமுறையினர் தாக்குப் பிடிக்கிற அளவுக்குச் சேர்த்துவைத்துள்ள இவர்கள் வயிற்றுப் பிழைப்பைப் பற்றிப் பேசுவதும், ‘‘நாங்கள் பிழைக்க வேண்டாமா?’ என்று கேட்பதும் விந்தையிலும் விந்தை கேவலத்திலும் கேவலம!
‘பணத்துக்காக எதையும் எழுதுவார்கள் என்று கவிஞர்களை எடை போட்டுவிடக் கூடாது’ என்கிறீர்கள். “எதையும்” என்று நீங்கள் எதைச் சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை. “எப்படி, எப்படி” போன்ற கண்ணியமற்ற பாடல்களைவிடவும் மோசமானவற்றைக் குறிப்பிடுகிறீர்களா? (!
சில நாள்களுக்கு முன் வெளியான நீங்காத நினைவுகள் 15 இல் கீழ்க்கண்டபடி குறிப்பிட்டிருந்தேன்:
ஒருவர் மரித்த பின், அவரைப் பற்றிய நல்லவற்றைப் பற்றி மட்டுமே நினைவுகூர்தல் வேண்டும் என்று சொல்லுவோருண்டு. பலரும் அதை ஒரு பண்பான மரபாகவே கடைப்பிடித்தும் வருகிறார்கள். இந்தப் பண்பாடு சார்ந்த மரபு சாமனியர்களுக்கு மட்டுமே பொருந்து மென்பது நமது துணிபு. சமுதாயத்தைக் கெடுக்கிற வண்ணமோ, மனிதர்க்குத் தீங்கு செய்து அவர்களைப் பண்பற்ற வழியில் செலுத்துகிற வண்ணமோ தம் செயல்களை அமைத்துக்கொள்ளும் மனிதர்களை – அதிலும், அவர்கள் லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கும் துறையில் இருப்பவர்கள் எனில் – இந்தப் பண்பாட்டின் அடிப்படையில் மட்டும் விமர்சிப்பது நியாயமாக இருக்க முடியாது. எனினும் இப்போதைக்கு நண்பர் வாலி அவர்களை விட்டுவைக்க உத்தேசம். அவர் காலமாகி மிகச் சில் நாள்களே ஆகின்றன என்பது அதற்கான காரணமன்று. நேற்று மரணித்தவர் என்றாலும் நியாயம் நியாயமே. அதில் தள்ளுபடி எதுவும் இருத்தலாகாது. ஆனால் பெரிய கட்டுரையாக எழுதுகிற அளவுக்கு அதில் விஷயம் இருக்காது என்பதால் மட்டுமின்றி, அந்தத் தலைப்பின் தொடர்பாக வேறு பலரைப் பற்றியும் எழுதும்போது அவருக்கும் எனக்கும் ஒரு வார இதழில் நடந்த “சன்டை” பற்றிக் குறிப்பிடலாமே என்று தோன்றுவது ஒரு கூடுதல் காரணமாகும்.
அப்போது சொன்னதை இப்போது எழுதிவிட்டேன்.
………
- சூரியனை நெருங்கிச் சுற்றும் முதற்கோள் புதன் மெதுவாய்ச் சுருங்கிக் கொண்டு வருகிறது
- “மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை -2
- தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 3
- சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 67 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பயணத்தின் அடுத்த கட்டம்
- தினம் என் பயணங்கள் -9
- தொடுவானம் – 8. கடல் கடந்த தமிழன்
- நீங்காத நினைவுகள் 39
- கொங்கு மணம் கமழும் கவிஞர் சிற்பியின் படைப்புகள்
- ”பங்கயக் கண்ணான்”
- புகழ் பெற்ற ஏழைகள் -50
- திண்ணையின் இலக்கியத் தடம் – 27
- வெளி
- நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2014
- சிங்கையிலிருந்து திருச்சி செல்லச் செலவில்லை
- கால் பக்க கப்சா, ஒரு பக்க உடான்ஸ்
- சமுத்திரக்கனியின் ‘ நிமிர்ந்து நில் ‘
- என் நிலை
- உறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழா
- சீதாயணம் நாடகப் படக்கதை – 2 5
- மொட்டைத் தெங்கு
- வாழ்க நீ எம்மான்.(1 )