சிறுநீர் கிருமித் தொற்று 

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014
                                                                                                                டாக்டர் ஜி. ஜான்சன்
         சிறுநீரில் கிருமித் தொற்று பல வழிகளில் உண்டாகலாம். அது உண்டானால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் வலியும் ஏற்படும். இதை சிலர் நீர் கடுப்பு என்றும் கூறுவர். இரு பாலருக்கும் இந்தப் பிரச்னை எழலாம். ஆனால் ஆண்களைவிட பெண்கள் வெகு இலகுவில் பாதிக்கப்படுகின்றனர்.
 இவ்வாறு ஒரு முறை உண்டானால் அதை மருந்துகளால் குணப்படுத்தலாம். ஆனால்  இப்பிரச்னை திரும்பத் திரும்ப  உண்டானால்  இதை முறையான பரிசோதனைகளின் வழியாக காரணம் கண்டு பிடிக்கப்படவேண்டும். பின்பு அதற்கேற்ப முறையான சிகிச்சைப் பெறவேண்டும்.திரும்பத் திரும்ப இவ்வாறு கிருமித் தோற்று உண்டானால் அதனால் வேறு பல பிரச்னைகள் எழலாம் அவற்றில் முக்கியமானது சிறுநீரக செயலிழப்பு. உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணும் ” கிரேம் நெகட்டிவ் செப்ட்டிசீமியா ” ( Gram – Negative Septicaemia ) என்பதுகூட இத்தகைய நீண்ட கால சிறுநீர் கிருமித் தோற்றால்தான் உண்டாகிறது.

                                                                                               கிருமிகள் தொற்றும் விதம்
            பெருங்குடலிலிருந்து கிருமிகள் தொற்று உண்டாவதுதான் பரவலானது.இது இரத்த ஓட்டம் மூலமாகவும், லிம்ப் ஓட்டம் மூலமாகவும் குடலிலிருந்து சிறுநீரகப் பைக்குள் கிருமிகள் புகலாம். ஆனால் நேரடியாக மலம் வெளியேறும் ஆசனப் பகுதியிலிருந்து சிறுநீர் வெளியேறும் பகுதிக்கு பரவும் விதமே மிகவும் எளிமையும் அதிகமுமானது.பெண்களின் சிறுநீர் வெளியேறும் குழாய் ( Urethra ) மிகவும் குட்டையானது. அதனால் கிருமிகள் மிக எளிதில் வெளிப் பகுதியிலிருந்து சிறுநீரகப் பைக்குள் நுழைந்து விடலாம்.அதோடு முன்பே சிறுநீர் வெளியேறும் பகுதியில் கிருமிகள் உள்ளது இயல்பானதே. உடல் உறவின்போதும் அக் கிருமிகள் உள்ளே தள்ளப்படுகின்றன. அதனால் சிறுநீரகப் பைக்குள் இவ்வாறு பல வழிகளில் கிருமிகள் எளிதில் புகுந்து அங்கு பெருகி சிறுநீரக கிருமித் தொற்றை உண்டாக்குகின்றன.
            சிறுநீர்ப்பைக்குள் ( Bladder ) கிருமிகள் தொற்று உண்டானதும் சிறுநீரகக் குழாய்கள் ( Front view cross section of kidneys, ureters, and bladder. Left ureter is closed off with urine backing up into kidney.) வழியாக மேல்நோக்கி பரவி சிறுநீரகத்தையும் ( Kidney ) பாதித்து உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணலாம்.
           சிறுநீரக உறுப்புகளில் வேறு குறைபாடுகள் இல்லையெனில் கிருமித் தொற்றால் சிறுநீரகம் பாதிப்புக்கு உள்ளாவது குறைவு. அனால் நீரிழிவு நோய், அல்லது சிறுநீரகக் கற்கள் இருந்தால் சிறுநீரகம் எளிதில் பாதுப்புக்கு .உள்ளாகலாம்.
                                                                                                         அறிகுறிகள்
           * பகலிலும் இரவிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் .
           * வலியுடன் சிறுநீர் வெளியேறுதல்.
           * அடி வயிறு வலி,.
          * சிறுநீரில் இரத்தம்.
           * சிறுநீரில் .துர்நாற்றம்.
          இவை அனைத்துமே சிர்நீர்ப்பை கிருமித் தொற்றில் காணப்படும். ஆனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டால் காய்ச்சல், இடுப்பு வலி , பொதுவான உடல் நலக் குறைவு போன்றவை உண்டாகும்.
                                                                                                        பரிசோதனைகள்
           * சிறுநீர்ப் பரிசோதனை மிகவும் முக்கியமானது.இதை மிக எளிதில் செய்துகொள்ளலாம். கிளினிக்குகளில் ” டிப் ஸ்டிக் ” என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. உடனடியாக சிறுநீரில் உள்ள இனிப்பு, ப்ரோடீன், நைற்றைட், இரத்தம் , சீழ், போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.சிறுநீரை பரிசோதனைக்கு எடுக்கும்போது சிறிதுநேரம் அதைக் கழித்துவிட்டு நடுவில் எடுக்க வேண்டும்.சிறுநீரில் பரிசோதனை காகிதத்தை தொட்டதுமே நிறம் மாறி முடிவைத் தந்துவிடும்.
          * நுண்ணுயிர் வளர்ப்பும் அதன் உணர்ச்சித் திறன் பரிசோதனையும் ( culture and sensitivity )- மருந்துகள் உட்கொண்டும் அறிகுறிகள் குறையவில்லையெனில் இந்த பரிசோதனை செய்தாக வேண்டும். இதன் முடிவு உடன் தெரியாது. எப்படியும் ஒரு வாரமாவது காத்திருக்க வேண்டும். சிறுநீரை ஒரு பரிசோதனைத் தட்டில் இட்டு அதில் வளரும் கிருமிகள் என்ன என்பது கண்டுபிடிக்கப்படும். அதன்பின்பு அந்தக் கிருமிகளுக்கு எந்த எண்ட்டிபையாட்டிக் மருந்து தந்தால் அதைக் கொல்ல முடியும் என்ற கிருமியின் உணர்ச்சித் திறன் கண்டறியப்படும்.அது தெரிந்தபின் அந்த மருந்து தரப்படும். இந்த முறைதான் உண்மையில் சரியான மருத்துவ முறை. ஆனால் காலதாமதம் காரணமாக இது செய்யாமல் உடன் மருந்து தந்து நிவாரணம் காணும் முறைதான் பரவலாக வழக்கில் உள்ளது.
           * சிறுநீர்நாள ஊடுகதிர் படம் ( Urography ) – முறையான மருந்துகள் தந்தும்கூட குணமானபின்பு மீண்டும் இப் பிரச்னை எழுந்தால் இந்த பரிசோதனை செய்து கொள்ளலாம். இதில் ரத்தக்குழாய் வழியாக ஒரு சாயப்பொருள் புகுத்தப்பட்டு அது சிறுநீரகம் வழியாக வெளியேறுவது எக்ஸ்ரே மூலம் படம் எடுக்கப்படும்..இதில் சிறுநீரகப் பாதையில் உள்ள குறைபாடுகளைக் கண்டறியலாம்.
          * எக்ஸ்ரே படம் – வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே படம் பிடித்துப் பார்த்தால் கற்கள் உள்ளது தெரியவரும்.
           * கதழ் ஒலி அல்லது அல்ட்ராசவுண்ட் பரிசோதனை ( Ultrasound ) – இதன் மூலமும் சிறுநீரகக் கற்கள், சிறுநீரகக் குழாய்களில் அடைப்புகள், தழும்புகள் போன்றவற்றை கண்டுபிடிக்கலாம்.
           * சிறுநீர்ப்பை உட்புற ஆய்வு ( Cystoscopy ) – இந்த பரிசோதனையில் சிறுநீர்ப்பைக்குள் நுண்ணிய குழாய் விடப்பட்டு நேரடியாகப் பார்க்கப்படும். இதில் அங்கு புற்று நோய், காச நோய், அழற்சி போன்றவை உள்ளதா என்பதைக் கண்டறியலாம்.
          மேற்கூறியுள்ள இதர பரிசோதனைகள் அனைத்துமே மருத்துவமனகளில்தான் செய்துகொள்ள முடியும். அதிலும் தொடர்ந்து சிறுநீர்ப் பிரச்னை இருந்தால்தான் இவை தேவைப்படும். முதல் முறை இதுபோன்று ஏற்பட்டால் கிளினிக்குகளில் செய்யும் சாதாரண சிறுநீர்ப் பரிசோதனையே போதுமானது.
                                                                                                                      சிகிச்சை
           சாதாரண சிறுநீர்க் கிருமித் தொற்றுக்கு 5 நாட்கள் சிகிச்சை போதுமானது.சிகிச்சை முறை வருமாறு:
          * Amoxycillin 250 மில்லிகிராம் மூன்று வேளை
          * Nitrofurantoin 50 மில்லிகிராம் மூன்று வேளை
           * Trimethopriம் 200 மில்லிகிராம் இரண்டு வேளை
           * வீரியமிக்க கிருமிகளுக்கு Co – Amoxclav அல்லது Ciprofloxacin தரப்படும்.
          சுமார் 2 லிட்டர் நீர் தினமும் பருக வேண்டும். 2 மணிக்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். உடல் உறவுக்குப் பின்பும் சிறுநீர் கழிக்க வேண்டும்.
            பரிசோதனைகளில் வேறு பிரச்னைகள் தெரிந்தால் அதற்கேற்ப சிகிச்சை மாற்றித் தரப்படும்.
( முடிந்தது )
Series Navigation
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *