நாடெனும்போது…

0 minutes, 4 seconds Read
This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

நந்தியாவட்டை,  மந்தமாருதம்

வந்தியத்தேவன்,  சொந்தக்காரன்

சந்தியா விந்தியா முந்தியா பிந்தியா

 

_ எந்த வார்த்தையை வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்

 

”இந்தியா என் தாய்த்திருநாடு; வந்தனத்திற்குரியது”

என்று

நாக்குமேல் பல்லுபோட்டுச் சொல்லிவிட்டாலோ

வில்லங்கம்தான்.

 

தடையற்ற தாக்குதலுக்காளாக நேரிடும்.

எச்சரிக்கையா யிருக்க வேண்டும்.

2.

”எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

யிருந்ததும் இந்நாடே, அவர் முந்தையர் ஆயிரம் _”

 

“_ மேலே பாடாதே. என்னவொரு தன்னலம்

உன் பெற்றோர் மட்டும் நலமாயிருந்தால்

எல்லாம் வளமாகிவிடும். அப்படித்தானே?”

 

_தவறாமல் வந்துவிழும் தப்படி யிப்படி.

 

இந்தியா சகதி என்றார்.

வெறெங்கு சென்றாலும் நாம் இரண்டாந்தரக் குடிகள்  அல்லது

அகதிகள் தானே என்றேன்.

என்ன தகுதி உனக்கு மனிதநேயம் பேச என

மிகுதியாய் வசைபாடிச் சென்றுவிட்டார் வந்தவர்.

 

”நம்பத்தகுதியற்றதாய் தன்னை மீண்டுமொருமுறை நிரூபித்துக்கொண்டுவிட்டது இந்தியா”

என்று வெம்பி வெடித்ததொரு மின்னஞ்சல்.

 

முப்பதாவது முறையா?

முந்நூற்றியைம்பதாவதா?

 

”தப்பாது எப்போதும் ஏமாற்றியே வரும் நாட்டை

எப்போதும் எதிர்ப்பார்ப்பதும் ஏன்?” எனக் கேட்டாலோ

மாட்டிக்கொள்வீர்கள் முடியா வசைப்பாட்டில்.

 

 

”ஆயிரம் காதங்களுக்கப்பால் இறந்தவர்களுக்காக அழுகிறாயே நியாயமா?”

என்று வாரந்தோறும்

ஒளியூடகத்தில் முழங்கிக்கொண்டிருக்கிறார் ஒருவர்

அபிமானமும் வருமானமும் கொண்டு.

எல்லைப்புறத்தில்

மூன்றாம்பேருக்குத் தெரியாமல்

மடிந்துகொண்டிருப்போரில்

தென்கோடி குக்கிராம தனபாலும் உண்டு.

 

 

போராளிகள் புரட்சியாளர்களின் நாட்டுப்பற்று போற்றத்தக்கது.

நீயும் நானும் கொண்டிருந்தால் அது நகைப்பிற்குரியது.

 

”_ எனவே, தேர்தலைப் புறக்கணியுங்கள்”

என்று திரும்பத் திரும்ப அறிவுறுத்திவருகின்றன

சில குறுஞ்செய்திகள்.

மாற்றென்ன என்று கேட்டால்

தூற்றலுக்காளாக வேண்டும்.

 

”மீள்நிர்மாணம் குறித்து மலைப்பெதற்கு

முதலில் கலைத்துப்போட்டுவிட வேண்டும்”.

 

’இந்தியா என்றால் எந்தை உந்தையல்ல;

விந்தியமலையுமல்ல _

மத்தியில் குந்தியிருக்கும் அரசு’ என்பார்

வந்துபோகும் நாளிலெல்லாம் உதிர்த்துக்கொண்டிருக்கும்

வெறுப்பு மந்திரத்தில்

அந்தப் பிரிகோடு அழியும் நிலையை

என்னென்பாரோ…..?

Series Navigation
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *