Posted in

ஆரண்யகாண்டம்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

ருத்ரா இ.பரமசிவன்

இடுப்பில் டவல் கட்டிக்கொண்டு
டூத் பேஸ்ட் கேட்கும் கணவன்.
வாசலில்
பள்ளிக்கு அழைத்து செல்லும்
வாகனம் வந்த போதும்
வாய்க்குள் இட்லியை திணிக்கத்
தெரியாமல் விழிக்கும் பையன்.
எட்டாவது போகிறான் என்று பெயர்
இன்னும் அவனுக்கு வகுப்பு வாய்க்கால்கள்
எல்லாம் எட்டி வரவில்லை.
அடுப்பில்
சுரு சுரு வென்று
குண்டுவில் நாகம் சீறுவது போல்
ஆவிப்பீய்ச்சல்கள்.
எத்தனையாவது விசில் இது
மறந்து போய் விட்டது.

ஹோம் ஒர்க் எழுதிய நோட்டு எங்கே
என்று
முயல்குட்டி போல்
மிளகு கண்கள்
உருட்டி விசும்பும் குட்டிப்பெண்..
பேபி கிளாஸ் தான் என்றாலும்
செமினாரில் தீசிஸ்
படிக்கப்போகும் பர பரப்பு
அந்த குட்டிக் கூகிளுக்கு..

இந்து பேப்பரை
நான் என்னமோ
என் இடுப்பில் கட்டியிருக்கிறேன்
என்று
என்னிடம்
மாமனாரின் விசாரிப்பு.

மாமியார்
கம்பும் கையுமாக‌
காயப்போட்டிருக்கும்
துணியை எடுத்துக்கொண்டு
குளிக்கப்போகவேண்டுமாம்.
மடி.
மனிதன் தொடக்கூடாத‌
கம்பு மட்டுமே
தொடக்கூடிய மடி.
வேளுக்குடியார் சொன்ன சுலோகத்தை
எச்சில் படுத்திக்கொண்டு
அவர் குளியலறை கிளம்பிக்கொண்டிருக்கிறார்.

இதையெல்லாம் முடித்து
கணவரும் நானும் தான்
ஓட வேண்டும்
அலுவலகக்காடுகளுக்கு.
அதற்குள்
இந்த அடுப்படி ஆரண்யகாண்டம்
“முற்றோதல்”
முடிவுக்கு வரவில்லையே!

வாழக்கை எனும்
பொய் மானின்
அந்த தங்கப்புள்ளிகள்
எந்த அகராதியிலும்
அகப்படவில்லையே!

Series Navigation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *