இலக்கிய நிகழ்வு சுஜாதா விருது விழா

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

 

சிறகு இரவிச்சந்திரன்

 

தேர்தல்சுரம்கொஞ்சம்குறைந்ததால், தன்னை  ஆசுவாசப்படுத்திக்கொண்டு,மீண்டும்இலக்கியம்பக்கம்திரும்பிஇருக்கிறார்உயிர்மைபத்திரிக்கையின்ஆசிரியர்மனுஷ்யபுத்திரன். தனதுஆதர்சஎழுத்தாளர்சுஜாதாவின்பிறந்தநாளானமே 3ம்தேதிசென்னையில்ஐந்தாவதுஆண்டாகதொடர்ந்து,ஆறுபிரிவுகளில்விருதுவழங்கும்விழாவினைநடத்தினார்.

சிறுகதை, நாவல், கவிதை, உரைநடை, சிற்றிதழ், இணையம் என சுஜாதா ஆர்வம் கொண்டு பங்காற்றிய அத்துணை பிரிவுகளிலும் ஒவ்வொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகள் சுஜாதாவின் மனைவி திருமதி சுஜாதாவால் வழங்கப்பட்டன.

சென்னை அண்ணா சாலையில் உள்ள குளிரூட்டப்பட்ட புக் பாயிண்ட் சிற்றரங்கு, ஆறுமணிக்கெல்லாம் பாதி நிறைந்து விட்டது. வழக்கம்போல் மனுஷ்யபுத்திரன் மேடைக்கு முன்னால், தன் தோழியர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். வரவேண்டிய பிரபலங்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, நிகழ்வு ஆறரை மணிக்கு ஆரம்பித்தது.

ஒரு அழகான தொகுப்பாளினியிடம் குறிப்புகளைச் சோல்லி, நிகழ்வை ஆரம்பிக்கச் சொல்லி விட்டு, இரண்டு பேர் உதவியுடன் மேடையில் ஏறினார் ம.பு.

வரவேற்புரையில், தங்கள் பதிப்பாக வெளிவரும் புத்தகங்கள், அதிக அளவில் விற்பதில் தனக்கு மகிழ்வேதுமில்லை என்று குறிப்பிட்ட ம.பு., ‘வாங்கப்படும் புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றனவா என்பதற்கான தடயம் எதுவும் இல்லை’ என்று வருத்தப்பட்டார்.

தொ.பரமசிவம் எழுதிய ‘ பரண் ‘ என்கிற உரைநடை நூலுக்கு விருது வழங்கப்பட்டது. அதைப் பற்றிப் பேசிய ஆர்.முத்துக்கிருஷ்ணன் “ தொ.ப.வின் குரல் அவரது புத்தகங்கள் வழியாக கேட்டுக் கொண்டே இருக்கும் “ என்றார். தொ.ப.வின் ஆதங்கத்தை பதிவு செய்த அவர் “ பொதுவாக இந்திய வரலாறு கங்கைக் கரையிலிருந்துதான் எழுதப்பட்டிருக்கிறது.. ஆனால் தமிழர் வரலாறு தாமிரபரணிக் கரையிலிருந்துதான் எழுதப்படவேண்டும் “ என்பது தொ.ப.வின் விருப்பம் என்றார். “ வாசிக்க மறந்த  சமூகம் யோசிக்க மறந்து போகும் “ என்பது தொ.ப.வின் சிந்தனை முத்து.

“ இருக்கும்வரை சேமிக்கறவன் பறவை ஆகிறான் “ என்கிற ரவி உதயன்  நூலுக்கு கவிதை விருது. அதை சிலாகித்த கவிஞர் கலாப்ரியா, ‘சுஜாதாவுக்கே எழுத ஆரம்பித்து 27 வருடங்கள் கழித்த்தான் முதல் விருது கிடைத்தது என்கிற தகவலை பதிவு செய்தார். ரவி உதயனின் “ காணாமல் போகிறவர்களைத் தேடிப் போகிறவர்கள் தொலைந்து போனவர்களின் மனோபாவத்தோடு அலைகிறார்கள் “ என்கிற வரிகள் தன்னை வெகுநாட்கள் சஞ்சலப்படுத்தி யதாக தெரிவித்தார்.

சிற்றிதழ் விருது, திருநாவுக்கரசு நடத்தி வரும் ‘நிழல்’ பத்திரிக்கைக்கு கொடுக்கப்பட்டது. அதைப் பற்றி பேச வந்த தீக்கதிர் குமரேசன், சிற்றிதழ்களே இப்போது சுதந்திரமாக செயல்படுவதாகச் சொன்னார். புத்தகங்களைத் தாண்டி, சாகித்ய அகாதமி திரைப்பட விழா நடத்தியதை, ஒரு அரிய தகவலாக நிழல் இதழ் பதிவு செய்திருப்பதை பாராட்டினார்.

அரவிந்தகுமார் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, கிடைத்த வேலையை உதறி விட்டு, ஏழு வருடங்களாக இணையத்தில் எழுதுவதையே ஒரு தொழிலாக்க் கொண்டிருக்கிறார். அவருக்கு இணையத்துக்கான விருது. அவருடைய இணைய தள முகவரி: அரவிந்த்குமார்.காம்.

திருவல்லிக்கேணியில் வாழ்ந்து மறைந்த ராமானுஜம் என்கிற ஓவியரைப் பற்றிய நாவல் “ வித்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் “. அதை எழுதிய சி.மோகனுக்கு நாவலுக்கான விருது. கலைஞர் தொலைக்காட்சியில் பணிபுரிவதால், தன்னை எல்லோருக்கும் தெரியும் என்கிற இறு ‘மப்’ புடன் இருந்த தொகுப்பாளினியை “ என்னம்மா செய்றே? உன் பேரென்ன? “ என்று சி.மோகன் கலாய்த்தது  நிகழ்வின் ஹைலைட்.

சிறுகதைகளுக்கு பெயர் போன சுஜாதா பேரால் வழங்கப்படும் விருது,  நிகழ்வின் கடைசி துளியாக, ‘மீதமிருக்கும் வாழ்வு’ எனும் ஸ்ரிராம் எழுதிய சிறுகதைக்கு வழங்கப்பட்ட்து கொஞ்சம் நெருடலாக இருந்தது..

சுஜாதாவின் கதை மாந்தர்களால் ஈர்க்கப்பட்ட வாசகர்கள், ஒரு தொடர்கதையில், ஒரு பாத்திரம் இறக்கும் சூழலில், அவருக்கு என்ன ரத்தப்பிரிவு? அதை தாங்கள் கொடுக்கத் தயார்! என்று கடிதங்கள் எழுதிய தகவல் சுவையான செய்தியாக காதுகளில் ஒலித்தது.

0

கொசுறு

உயிர்மை போன்ற வணிகச் சிற்றிதழ்கள் நடத்தும் இலக்கிய விழாக்களுக்குச் செல்லும் அன்பர்கள், ஒரு அரை மணி நேரம் முன்னதாக சென்றால், சூடாக சமோசாவும், ஏலக்காய் டீயும் இலவசமாகக் கிடைக்கும். சில சமயம் உள்ளே போனால்  செவிக்குணவு கிடைக்காது என்பதால், முன்னமே முந்திக் கொள்வது சாலச் சிறந்தது.

0

 

 

Series Navigation
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *