சீன காதல் கதைகள் 2. இடையனும் நெசவுக்கன்னியும்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

சீனாவின் நட்சத்திர உலகில் பல விதமான நட்சத்திரங்கள் உண்டு. அந்த உலகிற்கு ஒரு பேரரசனும் இருந்தான். அவன் மாணிக்கப் பேரரசன் என்று அழைக்கப்பட்டான்.
அவனுக்கு ஏழு பெண் குழந்தைகள். அவர்களை பேரரசிப் பாட்டி கவனித்து வந்தார். அவர்களில் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு மகள், நெய்வதில் திறமை படைத்தவளாக இருந்தாள். அவள் தான் திருவோண நட்சத்திரமான ஜி நு சிங்.

சொர்க்கத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு பணியில் திறமை படைத்தவர்களாக இருந்தனர். ஒரு நட்சத்திரம் இதமான காற்றை வீசி மணம் பரப்புவாள். மற்றொருத்தி மழை மேகங்களை வித விதமாக அணிவகுக்கச் செய்வாள். அதில் ஜி நு சிங் நாளின் பல வேளைகளுக்கு ஏற்ப மேகத்தை நெசவு செய்து உலகிற்கு வண்ண வண்ணக் கோலங்களைக் காட்டும் திறம் கொண்டவள். அவளது அபரமிதமான இந்த நெய்யும் திறன் காரணமாக இப்பெண் ‘நெசவுக்கன்னி’ என்று பெயர் பெற்றாள்.

மிகவும் அமைதியும் பண்பும் கொண்ட காரணத்தால் அவளை யாவரும் நேசித்தனர். பேரரசனுக்கும் அவரது தாயார் பேரரசிக்கும் அவள் மேல் மிகுந்த பாசமும் பரிவும் எப்போதும் இருந்தது.

நெசவுக்கன்னியின் கை திறத்தின் மீது காதல் கொண்டான் ஒரு ஆண் நட்சத்திரம். அவன் தான் உத்திராட நட்சத்திரமாக விளங்கிய சியன் நுயு சிங். அவளது வண்ணக் கோலங்களில் மதி மயங்கி அவன் அவளை ஒரு நாள் சந்திக்கச் சென்றான்.
முதல் சந்திப்பிலேயே ஒருவர் மற்றவருக்கு பிடித்தமானவர்கள் ஆனார்கள். அடிக்கடி சந்திக்கவும் ஆரம்பித்தனர்.

ஒரு நாள் அரச குடும்பத்தினர் அனைவரும் இரவில் கூடியிருந்த வேளையில், பேரரசன் ஜி நு சிங்கைக் காணாமல் மற்ற பெண்களிடம் விசாரித்தான். அவன் தன் காதலனை சந்திக்கச் சென்றிருக்கிறாள் என்று சொல்லும் தைரியம் இல்லாமல் அனைவரும் அமைதி காத்தனர். உடனே அவளைத் தேடி கண்டு பிடித்து அழைத்து வருமாறு தன் காவலர்களிடம் கூறினார்.

தேடிச் சென்ற காவலர்கள், அவளை அழைத்து வந்தனர்.

பேரரசர் “எங்கே சென்றிருந்தாய்? இன்று நாம் சந்திப்பது தெரியாதா?” என்று கேட்டார்.

அதற்கு ஜி நு சிங், “தந்தையே தாமதத்திற்கு மன்னிக்கவும்..” என்று பணிவுடன் நின்றாள்.

“தாமதத்திற்குக் காரணத்தை நான் அறியலாமா?” என்று கேட்டார் பேரரசர்.

பொய் சொல்லி அறியாத ஜி நு சிங், “தந்தையே.. நான் ஒருவரைச் சந்தித்து விட்டு வருகிறேன்..” என்றாள்.

“அவர் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கோபத்துடன் கேட்டார் அருகிருந்த அவளது பாட்டி.

“அவர் சியன் நுயு சிங்” என்றாள்.

“எதற்காக சந்திக்கச் சென்றாய்?” என்ற பாட்டியின் அடுத்த கேள்வி இன்னும் சற்றே கோபத்துடன் வந்தது.

“நாங்கள் இருவரும்..” என்று அவள் சற்றே இழுத்ததும், பாட்டிக்கும் பேரரசனுக்கும் எல்லாம் புரிந்து விட்டது.

பேரரசன் மிகுந்த ஆத்திரத்துடன், “இது நம் சொர்க்கலோகச் சட்டத்திற்குப் புறம்பானது என்று உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.

பதிலேதும் பேசாமல் அமைதியுடன் நின்றாள் ஜி நு சிங்.

சகோதரிகள் பயந்து போய் தங்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

பேரரசர், “அமைதி.. ஜி நு சிங் உனக்கு நம் சட்ட திட்டங்கள் தெரியுமில்லையா?” என்றார் மீண்டும்.

அதற்கு ‘தெரியும்’ என்கிற விதத்தில் தலையை மட்டும் ஆட்டி விட்டு, பதிலேதும் கூறாமல் பதுமையாக நின்றாள். தான் செய்தது சட்டப்படி தவறு என்ற போதும், காதலன் மேல் கொண்ட காதல் வாழ்க்கை முறைப்படி சரியெனப் பட்டது அவளுக்கு. ஆனால் அதை வெளியில் கூற முடியாமல் தவித்தாள்.
அவள் அமைதியாக நிற்பது பேரரசருக்கு கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது.
“ஜி நு சிங்.. என்ன பேச மாட்டாயா?” என்று கத்தினார்.

ஜி நு சிங் அமைதியாகவே நின்றாள்.

“இவள் பேச மாட்டாள்.. இவள் சந்திக்கும் அந்த சியன் நுயு சிங்கை அழைத்து வாருங்கள்” என்று ஆணையிட்டார்.

ஒரு நொடியில் சியன் நுயு சிங் மன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான்.

“ஜி நு சிங்கும் நீயும் சந்தித்துக் கொண்டதாகத் தெரிய வருகிறது. உண்மையா?” என்று அவனிடம் கேட்டார் பேரரசர்.

“மாண்புமிகு பேரரசரே.. நாங்கள் இன்று சந்தித்துக் கொண்டது உண்மையே..” என்றான் சியன் நுயு சிங்.

“இப்படி நட்சத்திரங்கள் சந்தித்துக் கொள்வது நம் சொர்க்கலோகத்தின் விதிப்படி தவறு என்பது உனக்குத் தெரியாதா?” என்று கர்ஜித்தார் பேரரரசர்.

“மாண்புமிகு பேரரசரே.. தெரியும். நெசவுக்கன்னியின் வேலை திறத்தில் மையல் கொண்டதே அதற்குக் காரணம்” என்று கூறி நிறுத்தினான் சியன் நுயு சிங்.

“இதற்கு என்ன தண்டனை தெரியுமா?” என்றார் அதை கவனித்ததாகக் காட்டிக் கொள்ளாமல்.

சியன் நுயு சிங்கும் ஜி நு சிங் போன்று பதுமையானான்.

அரச வம்சத்தின் தங்க எருது அப்போது அங்கிருந்தது. அது பேரரசரிடம், “மாண்புமிகு அரச குடும்பத்தினரே.. நான் சற்றே இடையில் பேசுவதற்கு மன்னிக்கவும். கன்னியின் திறமை மேல் மையல் கொண்டதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை..” என்று தான் ஆரம்பித்தது.

அதை இடை வெட்டி, “இதில் இடையில் பேச யாருக்கும் அனுமதி கிடையாது. பேசியவர் பூவுலகில் சென்று வாழ வேண்டும் என்று ஆணையிடுகின்றேன்..” என்று உடன் தங்க எருதிற்குத் தண்டனை விதித்தார். தங்க எருது மேலும் எதுவும் பேசும் முன்பே, தண்டனையை அனுபவிக்க உடன் பூவுலகிற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
அனைவருக்கும் பேரதிர்ச்சி.

குடும்பத்தினர் பேரரசரின் கோபத்திற்கு பயந்து நாவொட்டாமல் நடப்பதைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

இனி நெசவுக்கன்னிக்கும் சியன் நுயு சிங்கிற்கும் கூட அதே தண்டனை தான் கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்த்து நின்றார்கள்.

பேரரசர், “சியன் நுயு சிங்.. நீ செய்த தவறுக்கு நீயும் பூவுலகிற்குச் சென்று ஏழையாகப் பிறந்து துயரப்பட வேண்டும் என்று ஆணையிடுகின்றேன்..” என்றார்.
மறுகணம் சியன் நுயு சிங் பூவுலகிற்கு கொண்டு செல்லப்பட்டான். ஒரு ஏழை பெற்றோருக்கு மகனாகப் பிறந்தான்.

சகோதரி ஜி நு சிங்கிற்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ என்று பயந்து நின்றிருந்த வேளையில், பேரரசர், “ஜி நு சிங் உன்னுடைய தவறுக்கு நீ ஓய்வின்றி நெசவு செய்து கொண்டே இருக்க வேண்டும். மற்ற என்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள அனுமதி கிடையாது..” என்று ஆணையிட்டார்.

அப்பாடா!

சகோதரி தங்களுடன் தான் இருப்பாள் என்ற ஆறுதலுடன் அனைவரும் பெருமூச்சு விட்டனர்.

பாட்டி மற்ற சகோதரிகளைக் கண்டு, “இந்த தண்டனை உங்களுக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்கட்டும். எல்லோரும் பார்த்து நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்.
அனைவரும் தலையாட்டி விட்டு, மேலும் அங்கிருப்பது ஆபத்து என்றெண்ணி இவ்விடத்தை விட்டு அகன்றனர்.

பதுமையென நின்ற ஜி நு சிங், வேறு என்ன செய்வது என்று தோன்றாமல், எதுவும் பேசாமல், அங்கிருந்து மெல்ல நகன்றாள்.

பாட்டியும் பேரரசரும் தங்கள் அன்பான பெண்ணிற்கு இப்படி தண்டனை கொடுக்க வேண்டியதாயிற்றே என்ற மன வருத்ததுடன் வேறெதும் பேசாமல் அங்கிருந்து அகன்றனர்.

அன்று முதல் காதலனைப் பிரிந்த நெசவுக்கன்னி தொடர்ந்து நெசவு செய்ய ஆரம்பித்தாள். மன வருத்தத்துடன் மிகுந்த கவனத்துடன் நெசவு செய்யும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். தன்னை மிகவும் வருத்திக் கொண்டாள்.

இதைக் கண்டு மற்ற சகோதரிகள் அவளுடைய நிலைக்காக மிகவும் பரிதாபப்பட்டனர்.

பூவுலகிற்கு அனுப்பப் பட்ட உத்திராட நட்சத்திரமான சியன் நுயு சிங் ஒரு இடையர் குலத்தில் பிறந்தான்.

சிறு வயதிலேயே தன் பெற்றோரை இழந்தான்.

தன் மூத்த சகோதரனுடன் வாழ்ந்து வந்தான். சகோதரனுக்கு மணமானதும், மனைவியாக வந்த அண்ணிக்கு இளையவனைப் பிடிக்காமல் போனது. அவன் மீது மிகுந்த வெறுப்பினைக் காட்டி கடினமாக வேலை வாங்கினாள். நாள்தோறும் அவன் காலை முதல் மாலை வரை வேலை செய்ய வேண்டியிருந்தது. விடியும் முன்னே எழுந்து, நீர் இறைத்து, சமையல் செய்து, வீட்டை சுத்தம் செய்து பிறகு, சகோதரனிடம் இருந்த நீர் எருதுகளை வயலுக்கு மேய்க்க அழைத்துச் சென்று திரும்ப வேண்டும். மீண்டும் மாலை வீட்டு வேலைகளைச் செய்தாக வேண்டும். அவனுக்கு வேண்டிய அளவு உணவு கிடைக்கவில்லை. இது தவிர அண்ணி அவனுக்கு பல செய்ய இயலாத காரியங்களையும் செய்யச் செல்ல கொடுமைப்படுத்தினாள்.

ஒரு நாள் அண்ணி, அவனை அழைத்து, “இன்று, நீ வெளியே சென்று திரும்பும் போது, கட்டாயமாக பத்து நீர் எருதுளுடன் திரும்ப வேண்டும். புரிகிறதா?” என்றாள்.

சகோதரனிடம் ஒன்பது எருதுகளே இருந்தன. அதனால், தன்னை வீட்டை விட்டு அனுப்பவே இதை அண்ணி சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான்.

அவன் காடு மலைகளெல்லாம் அலைந்து திரிந்தான். தனக்கு தெரிந்த ஒரு உறைவிடத்திற்குத் தான் திரும்ப வேண்டும் என்றால் ஒரு எருதினைக் கண்டு பிடித்தேயாக வேண்டிய நிலையில், மனம் சோர்ந்து போன சியன் நுயு சிங், பசி மயக்கத்தாலும், வீட்டு நினைப்பாலும் மயங்கி விழுந்தான்.

அவன் விழித்துப் பார்த்த போது, தனக்கு உதவ யாருமே இல்லையே என்ற வருத்ததில் கண்ணீர் விட்டு அழுதான். அப்போது அங்கே அவனருகே ஒரு நீளமான அலைபாயும் வெள்ளை தாடி கொண்ட ஒரு வயதானவர் வருவதைக் கண்டான். அருகே வந்த அவர், அவனிடம் அன்புடன், “இளைஞனே.. ஏன் கவலையுடன் இருக்கிறாய்?” என்று கேட்டார்.

“என் சகோதரன் என்னிடம் ஒன்பது நீர் எருதுகளைத் தந்து, பத்து நீர் எருதுகளுடன் தான் வீடு திரும்ப வேண்டும் என்று சொல்லி விட்டார்” என்றான்.
முதியவர் மெல்லிய புன்னகை பூத்து, “கவலைப்படாதே இளைஞனே.. ஏழாம் மலையின் ஏழாவது காட்டிலே ஒரு வயதான நீர் எருமை நோய்வாய்பட்டு விழுந்து கிடக்கிறது. அதற்கு நீ உணவளித்து கவனித்துக் கொண்டால், அது உன்னுடன் வரும்” என்றார்.

உடனே சியன் நுயு சிங் தன்னுடைய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அந்த வயதான நீர் எருதினைத் தேடிப் புறப்பட்டான். அவன் அடர்ந்த காடுகளையும் மலைகளையும் கடந்து சென்று எருதினை இறுதியில் கண்டு பிடித்தான். எருமை அடிப்பட்டு மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தது. அவன் எருதுக்கு மிகவும் பசுமையான புல்லைத் தேடிப்பிடித்து உண்ணக் கொடுத்தான். மூன்று நாட்கள் அதைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டான். நடக்கும் அளவிற்குத் தெம்பு பெற்றதும், எருமையை ஓட்டிக் கொண்டு வீடு திரும்பினான்.

சியன் நுயு சிங் வீடு திரும்ப மாட்டான் என்று எண்ணியிருந்த அண்ணிக்கு, அவனது வருகை கோபத்தைத் தான் வரவழைத்தது. முன்பை விடவும் அதிக வேலை வாங்கினாள். ஆனாலும் இப்போது சியன் நுயு சிங் அதையெல்லாம் மகிழ்ச்சியுடன் செய்தான். அதற்குக் காரணம் புதிதாக வந்த நீர் எருது. அதனுடன் இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதை அறியாத அண்ணி அவனது மகிழ்ச்சியைக் கண்டு மேலும் பொறாமை கொண்டு, இறுதியில் ஒரு நாள் அவனை வீட்டை விட்டே துரத்தி விட்டாள்.

வீட்டை விட்டு ஒரு உடைந்த வண்டியுடனும் தான் கொண்டு வந்த எருதுடனும் கிளம்பிய அவன் சிறிது காலம் திக்குத் தெரியாமல் அலைந்தான். கிடைத்த வேலைகளைச் செய்து அன்றாடங் காய்ச்சியாக வாழ்ந்தான். கிடைத்த சொற்ப பணத்தில் சிறிது சேமித்து, இரண்டு வருடங்களில் ஒரு சிறிய குடிசையைக் கட்டி வாழத் தொடங்கினான்.

ஒரு நாள் சகோதரிகள் அனைவரும் ஒன்றாகக் கூடிப் பேசி, நெசவுக்கன்னியின் சளைக்காத உழைப்பிலிருந்து அவளை சற்றே விடுவிக்க எண்ணினர்.

மூத்த சகோதரி, “ஜி நு சிங் மிகவும் உழைத்து உழைத்து எப்படி இருக்கிறாள் பாருங்கள். அவளைக் காப்பாற்ற நாம் ஏதாவது செய்தாக வேண்டும்” என்று மற்ற சகோதரிகளிடம் கூறினாள்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றிய யோசனைகளைச் சொன்னார்கள்.

அதில் அனைவருக்கும், ஒருத்திச் சொன்ன ‘பூலோகம் சென்று சுற்றி வருவது’ சரியான யோசனையாகப் பட்டது. உடனே நெசவுக்கன்னியை உடன் அழைத்துச் செல்ல முடியுமா என்ற ஐயமும் ஏற்பட்டது.

அப்போது இளையவள், “முதலில் நாம் அனைவரும் செல்ல அனுமதி பெறுவோம். பிறகு நெசவுக்கன்னியை நம்முடன் அழைத்துச் செல்ல அனுமதி கேட்கலாம்” என்ற யோசனையைச் சொன்னாள்.

அனைவருக்கும் அது சரியெனப் பட்டதால், உடனே பேரரசரிடமும் பாட்டியிடமும் அனுமதி பெறச் சென்றனர்.

தங்களுடைய பாட்டியிடமும் தந்தையிடமும் ஒன்றாக, “சிறிது நேரம் பூலோகத்திற்குச் சென்று திரும்ப விரும்புகிறோம். செல்லலாமா?” என்று அனுமதி வேண்டினர். சற்றே யோசித்த பின் இருவருமே அனுமதி தந்தனர். முதல் படி வெற்றி பெற்றதை சகோதரிகள் கண்களாலேயே கொண்டாடி விட்டு, அடுத்த படிக்கு முயற்சி செய்ய தயாரானார்கள்.

இப்போது, “தந்தையே.. எங்களுக்கு இன்னொரு அனுமதியும் வேண்டும்.. கேட்கலாமா?” என்று தயங்கித் தயங்கி ஆரம்பித்தாள் மூத்தவள்.

“என்ன அது? இன்னும் என்ன வேண்டும்..” என்றார் பரிவுடன்.

“இல்லை.. எங்கள் சகோதரி நெசவுக்கன்னியை மட்டும் இங்கேயே விட்டுவிட்டு நாங்கள் மட்டும் செல்ல எங்களுக்கு மனமில்லை. அதனால் அவளையும் எங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதி தர வேண்டும்..” என்று எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொல்லி முடித்தாள்.

“அவள் தண்டனை பெற்றவள். அவளுக்கு அனுமதி கிடையாது..” என்றார் பேரரசர் சற்றே கோபத்துடன்.

“பாட்டி.. நீங்களாவது சொல்லுங்கள். நாங்கள் எல்லோரும் செல்லும் போது, அவள் மட்டும் வராமல் இருந்தால், நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது. அதனால் தான் கேட்கிறோம்” என்றாள் மற்றொருத்தி சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

சகோதரிகள் ஒன்று கூடி திட்டம் போட்டு விட்டார்கள். இனி இவர்களது விருப்பங்களை நிறைவேற்றாமல் இருக்க முடியாது என்று மனதில் தோன்றினாலும், “தந்தை அனுப்பச் சம்மதித்தால் எனக்கும் சம்மதமே..” என்று மட்டும் கூறி வைத்தார் பாட்டி.

முதலில் அனுமதி தர மறுத்த இருவரும், கடைசியில் சகோதரிகளின் வேண்டுதலைத் தட்ட முடியாமல் மசிந்தனர்.

பேரரசர், “நெசவுக்கன்னியையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் பூலோகத்திற்கு போவது சரி.. மெய்மறந்து நின்று விடக் கூடாது. விரைவில் திரும்ப வேண்டும்..” என்று எச்சரிக்கை செய்தார்.

“நாங்கள் இப்படிப் போய், அப்படியே திரும்பி விடுவோம்” என்று போனதும் திரும்புவது போல் சைகையில் செய்துக் காட்டினாள். அனைவரும் அதை ஆமோதித்து தலையாட்டி நின்றனர்

“சரி.. சரி.. சென்று வாருங்கள்..” என்று விடை கொடுத்தார் பாட்டி.

ஏழு சகோதரிகளும் பூவுலகிற்கு பறந்து வந்தனர். வேலையில்லாத காரணத்தால், ஜி நு சிங் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். பல இடங்களைச் சுற்றி வந்தனர்.
அப்போது ஓரிடத்தில் பச்சை பசேலென்று விளங்கிய புல்வெளிக்கு மத்தியில் மலர்கள் மலர்ந்த செடி கொடிகளுக்கு நடுவே அழகிய குளம் ஒன்று இருப்பதைக் கண்டனர். அக்குளம் அழகையும் பொலிவையும் கொடுக்கக் கூடிய நீர் கொண்டது என்பதை சகோதரிகள் அறிந்திருந்தனர். மேலும் குளத்தின் நீர் அவர்களை வா வா என்று வரவேற்பது போன்று அவர்களுக்கு தோன்றியதால், அதில் இறங்கிக் குளிக்க முடிவு செய்தனர்.

இடையனாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த சியன் நுயு சிங்குக்குத் தன்னுடன் இருக்கும் எருது ஒரு அதிசய எருது என்பது தெரியாது. ஒரு நாள் அவ்விஷயம் அவனுக்குத் தெரிய வந்தது.

திடீரென்று ஒரு நாள் அந்த எருது அவனிடம் பேசியது.

அதிர்ந்து போன அவன் எருது கூறியதைக் கவனமாகக் கேட்டான். “நீ பை லியன் குளத்திற்குச் செல். தேவதைகள் குளித்துக் கொண்டு இருப்பார்கள். அங்கு அந்த தேவதைகளின் மேலாடைகள் கரையில் இருக்கும் பாறைகளுக்கு மேல் இருக்கும். அதில் நீ சிவப்பு நிற உடையை மட்டும் யாரும் அறியாமல் எடுத்துக் கொண்டு, பக்கத்தில் ஒளிந்து கொள். ஆடையைத் தேடி வரும் தேவதையிடம், உன்னை மணந்துக் கொள்ள வேண்டும் என்று சொல்” என்றது எருது.

எருது தான் அவனுக்கு இந்த இரண்டு வருடங்களில் உற்ற துணையாக இருந்தது. அதனால் எருதின் அறிவுரைகளைக் கேட்ட இடையனுக்கு ஒரு புறம் ஆச்சரியமாக இருந்த போதும் சிலிர்ப்பும் ஏற்பட்டது.

எருது கூறியது போல் உடனே குளக்கரைக்குச் சென்றான். தேவதைகள் அனைவரும் களிப்புடன் நீந்திக் கொண்டு இருந்தனர். யாரும் பார்க்காத வேளையில், கரையில் இருந்த ஆடைகளில் சிவப்பு ஆடையை மட்டும் எடுத்துக் கொண்டு, அருகே இருந்த புதருக்குப் பின் சென்று ஒளிந்து நின்றான்.

ஏழு சகோதரிகளும் சிறிது நேரம் நீந்தி மகிழ்ந்து கொண்டிருக்கும் போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே சகோதரிகள் தந்தை தங்களை திரும்பி வரும்படி அழைக்கவே இந்த மழையை அனுப்பியதை உணர்ந்து கொண்டு வேகமாக ஆடைகளை அணிந்து கொண்டு கிளம்ப ஆரம்பித்தனர்.

தேவதைகள் அரக்கப் பரக்க கிளம்பினர். அதில் ஒரு தேவதை மட்டும் தன் ஆடை அங்கு இல்லாதது கண்டு அதிர்ந்தாள். சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தாள்.

சகோதரிகள் தங்கள் தந்தையின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஒருவர் மற்றவரைப் பற்றி எண்ணியும் பார்க்காமல் பறந்தனர்.

தனித்து விடப்பட்ட தேவதை செய்வதறியாமல் தவித்து நின்றாள். அவள் தான் தண்டனை பெற்று வாழும் நெசவுக்கன்னி. மற்ற தேவதைகள் கண்களிலிருந்து மறைந்த பின்னர், இடையன் புதரிலிருந்து வெளியே வந்தான்.

கண் முன்னே ஒரு ஆடவன் தன் ஆடையுடன் வருவதைக் கண்டு மேலும் அதிர்ந்தாள் நெசவுக்கன்னி.

அருகே வந்த இடையன், எருது சொன்னதைப் போன்று, “உன் ஆடைகள் இதோ. நீ என்னை மணம் செய்து கொள்வாயா?” என்று வேண்டி நின்றான்.

அன்று வரையிலும் தன்னுடைய காதலனை எண்ணி வாழும் நெசவுக்கன்னிக்கு, தன் முன் நிற்பவன் தண்டனை பெற்று மண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் காதலன் என்பதை உடனே உணர்ந்தாள். வெட்கத்துடன், ஆனால் மகிழ்ச்சியுடன் அவனை மணக்கச் சம்மதித்தாள். விரைவில் இருவரும் மணந்து கொண்டனர்.

பூவுலகில் அவர்களது வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருந்தது. அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். குடும்பத்துடன் வாழ்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டாள் நெசவுக்கன்னி. தன்னுடைய காதலனுடன் வாழும் நாட்களை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள். ஆனால் அவர்களது மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

இடையன் நிலத்தை உழுது கொண்டிருந்த போது, தன் தோழனாக பாவித்திருந்த எருது திடீரென்று கீழே விழுந்தததைக் கண்டு அதனருகே ஓடிச் சென்றான்.

இறக்கும் தருவாயில் இருந்த எருது “இடையனே.. இத்தனை நாள் என்னை பார்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. நான் இறந்த பின்பு என் தோலை எடுத்து அங்கியாக தைத்து பத்திரமாக வைத்துக் கொள். அது உனக்கு சமயத்தில் உதவும்” என்று கூறியது.

எருதின் நிலையைக் கண்டு வருந்தும் நேரத்தில், எருது இதைச் சொன்னதும் அவனுக்கு மேலும் வருத்தம் ஏற்பட்டது. எருது அக்கணமே இறந்தது. இறந்த செய்தியை தன் மனைவியிடம் சொல்ல ஓடோடி வந்தான். செய்தியைச் சொல்லிவிட்டு, எருது சொன்னதையும் இடையன் மனைவியிடம் கூறினான்.

இதைக் கேட்டதும், அது வரை எருதினைப் பற்றிய விவரம் அறிந்திராத நெசவுக்கன்னிக்கு, எருது பேசியதைச் சொன்னதும், ஜி நு சிங், “அப்படியானால் அது சாதாரண எருது இல்லை. அது நமக்காக தண்டனை பெற்ற நட்சத்திர உலகின் தங்க எருது” என்று சொன்னாள்.

“நாம் எருதின் தோலினை அகற்றி அங்கி தைப்பதில் என்ன பயன் கிடைக்கப் போகிறது..” என்று வெறுப்புடன் கேட்டான்.

“தங்க எருதின் தோலுக்கு சக்தி இருக்கிறது. அந்தத் தோல் அங்கியைப் போட்டுக் கொண்டால் நம்மால் வானில் பறவையைப் போன்று பறக்க முடியும்..” என்று விவரத்தைச் சொன்னாள் ஜி நு சிங்.

“அப்படியென்றால் தோலை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளலாம். சமயத்தில் எருது சொன்னதைப் போல் பயன் பட்டாலும் பயன் படும்” என்று கூறி எருதைப் புதைக்க ஏற்பாடுகளைச் செய்யக் கிளம்பினான்.

மிகுந்த கவலையுடன் எருது கூறியதைப் போன்றே தோலை உரித்து பத்திரப்படுத்தி விட்டு, அனைத்து மரியாதைகளும் செய்து அதைப் புதைத்தனர்.

இதற்கு மத்தியில், சில நாட்களில், பூவுலகிற்குச் சென்று வந்த சகோதரிகளில் நெசவுக்கன்னி திரும்பவில்லை என்பது பேரரசிக்கும் பேரரசனுக்கும் தெரிய வந்தது. (சீனாவில் சொர்க்க நாள் ஒன்று பூவுலகின் ஒரு வருடம் என்று நம்பப்படுகிறது). பேரரசி பாட்டி உடனே தன் காவலர்களையும் படை வீரர்களையும் அழைத்து, “அந்த நெசவுக்கன்னியை உடனே பூவுலகிலிருந்து இழுத்து வாருங்கள். செய்த தவறுக்கு என் பேத்திக்குத் தகுந்த தண்டனை தர வேண்டும். உடனே செல்லுங்கள்” என்று ஆணையிட்டார்.

சொர்க்கத்திலிருந்து புறப்பட்ட காவலர்களும் படைவீரர்களும் நேரே நெசவுக்கன்னி இருந்த இடத்திற்கு பறந்து வந்தனர். நொடியில் அவளை பிடித்து, இழுத்துக் கொண்டு பறந்தனர். நெசவுக்கன்னியினால் எதுவும் செய்ய முடியவில்லை. கணவனையும் அன்பான குழந்தைகளையும் பிரிந்து செல்கின்றோமே என்ற வருத்தம் அதிகமானது. அவளும் காவலர்களுடன் பறந்தாள்.

இடையன் “நெசவுக்கன்னியே.. என்னை விட்டுப் போகாதே..” என்று அரற்றினான்.

சில நொடிகளில் கன்னி திரும்பிப் பார்த்த போது, இரண்டு கூடைகளில் இரு குழந்தைகளை இட்டு, எருதின் தோலை போர்த்திக் கொண்டு பறந்து வந்த தன் கணவனைக் கண்டாள். தன்னை எப்படியும் கணவன் காப்பாற்றி விடுவான் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. மகிழ்ச்சியுடன் அவர்கள் அருகே வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

இருவருக்கும் மத்தியில் இடைவெளி குறைந்து கொண்டே வந்தது. விரைவிலேயே குழந்தைகளின் முகத்தைத் தெளிவாகப் பார்க்கவும், குழந்தைகளின் குரல்களைக் கேட்கவும் முடிந்தது. கணவன் தன்னை எப்படியும் காப்பாற்றி விடுவான் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் பக்கமாகவே பார்த்த வண்ணம் இருந்தாள் கன்னி.

ஆனால் நடந்தது என்ன?

கடுங்கோபத்துடன் இருந்த பேரரசி நடப்பதைக் கண்டு மேலும் கோபம் கொண்டு, தன் தலையில் இருந்த கொண்டை ஊசியை எடுத்து அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு கோடு போட்டார். அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு பெரும் பால்வெளி உருவானது. இரு பாலாரும் ஒன்று சேர முடியாத அளவிற்கு பெரும் தடையை ஏற்படுத்தினார்.

தம்பதியினரும் குழந்தைகளும் செய்வதறியாது அதிர்ந்து நின்றனர். உணர்ச்சி வயப்பட்டு அழுது அரற்றினர்.

தேவதைகளும் கடவுளர்களும் பிரிவுத்துயரம் கொண்ட அவர்களது அழுகுரலைக் கேட்டு மனம் வருந்தினர். விரைவில் பேரரசியும் மனம் இரங்கினார்.
அவர் முழு குடும்பத்தையும் வானத்திலேயே இருக்க அனுமதித்தார். வருடத்திற்கு ஒரு முறை ஏழாம் மாதம் ஏழாம் நாள் மட்டும் அவர்கள் சந்தித்துக் கொள்ள அனுமதியும் அளித்தார்.

வருடத்தின் அந்த நாளில், வானத்தில், உலகத்தில் உள்ள அத்தனை வண்ணாத்திக்குருவிகளும் ஒன்று சேர்ந்து, அந்தப் பால்வெளியை இணைக்கும் முகமாக பாலம் அமைத்து, குடும்பத்தைச் சந்திக்க உதவுகின்றன என்று நம்பிக்கை சீனாவில் இன்றும் நிலவி வருகிறது.

இந்த நாளை சீனர்கள் சீ சி விழாவாகக் கொண்டாடுகின்றனர். இதுவே சீனர்களின் காதலர் தினமாகச் சிலர் குறிப்பிடுகின்றனர்.

Series Navigation
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *