தொடுவானம்                                         

This entry is part 1 of 33 in the series 12 மே 2014
                                       
                                                                                                          டாக்டர் ஜி. ஜான்சன்
          15.  காதலும் சோகமும்
          அந்தக் காலத்தில் காதலிப்பது  பெருங் குற்றமாகக் கருதப்பட்டது!
          காதல் செய்தியும் காட்டுத் தீயைவிட வேகமாகப் பரவியது! அதிலும் தமிழர்கள் வாழும் பகுதியில் அதுவே வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி
          பேசும் பரபரப்பான செய்தியாகிவிடும்! இதற்கு நாங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?
          முன்பே வருவோர் போவோரிடமெல்லாம் அப்பா தம்பட்டம் அடித்து பரப்பியிருந்தார். ஆனால் இப்போதோ இவ்வளவு விரைவாக எங்களின் காதல் பிரபலமாகும் என்று நான் கற்பனையில்  கூட எண்ணியதில்லை!
          யாருக்கும் தெரியக்கூடாது என்றுதான் வெகு தொலைவிலுள்ள ” மேக்ரிச்சி ” நீர்த்தேக்கம் சென்றோம். யாருடைய கண்களிலும் படக்கூடாது என்பதற்காகத்தான்  அடர்ந்த காட்டுக்குள் புகுந்தோம்.
          அந்தப் பகுதிக்கு தமிழர்கள் அதிகம் வருவதில்லை என்பதால்தானே அங்கு பாதுகாப்பு தேடிச் சென்றோம்!
          ஆனால் நடந்தது என்ன?
          நீர்த்தேக்கம் சென்றுவந்த மறுநாளே அந்த இரகசியம் வெளியானதுதான் பெரும் வியப்பையும் பயத்தையும் உண்டுபண்ணியது!
          லதா வீட்டின் அருகேதான் இரத்தினசாமி வசிக்கிறார். அவர் எனக்கு மாமன் முறைதான்.வாலிபர். திருமணமாகாதவர். நகரசபையில்தான் வேலை. மலையில் பாரம் தூக்கி உடலை கட்டாக வைத்திருப்பவர்.எப்போதும் வெள்ளை நிறத்தில்தான் உடை அணிவார். பந்தய சைக்கிள்தான் பயன் படுத்துவார்.
          அவர் என்னைத் தேடி வந்தார். வேறு ஏதும் பேசாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.
          ” நீ என்ன லதாவைக் காதலிக்கிறாயா? ”  கோபமாகக் கேட்டார். அவர் கேட்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை.
          ” இல்லை .” என்றேன் . காதலிப்பதை இவரிடம் ஏன் சொல்ல வேண்டும் என்ற தைரியம் எனக்கு.
          ” இல்லை… நீ அவளைக் காதலிக்கிறாய். ஒரு புகைப்படக்காரன் உங்கள் இருவரையும் பார்த்து விட்டான். உங்களைப் படம் பிடித்துள்ளான். “
          எனக்கு தலை சுழன்றது!
          ” யார் அந்தப் புகைப்படக்காரன்? ” என்று கேட்டேன்.
          ” அது பற்றி உனக்கு சொல்ல வேண் டிய அவசியமில்லை. நீ அவளை  மறந்துவிடு! ” உத்தரவு இடுவது போன்றிருந்தது.
          ” என்? ” மீண்டும் கோபமாகவே கேட்டேன்.
          ” அவள் என்னையும் காதலிக்கிறாள். ”  என்றார்!
          எனக்கு உலகமே சுழன்றது. உடலும் தடுமாறியது.
          அவர் சொன்னது அபாண்டமான பொய்! நான் அதற்குமேல் எதையும் கேட்கத் தயாராக இல்லை.
         ” வேண்டுமானால் நிரூபித்துக் காட்டும். நான் அவளை விட்டுவிடுகிறேன்! ” உறுதியாகக் கூறிவிட்டு வீடு நோக்கி விரைந்தேன்.
          கதைகளிலும் திரைப்படங்களிலும்தான் காதலிப்போரிடையே வில்லன்கள் தோன்றுவார்கள். நிஜ வழக்கையிலுமா இப்படி? எங்கள் காதல் கதையிலும் ஒரு வில்லனா? வியப்பைவிட பயமே மேலோங்கியது.
          நீர்த்தேக்கம் சென்றது இவருக்கு எப்படித்  தெரிந்தது? இவர் நிச்சயம் அப்பாவிடம் சொல்லிவிடுவாரே? பிறகு என்ன ஆகுமோ? எங்கள் காதல்  இவ்வளவுதானா? ஐயோ! இதை எப்படித் தாங்குவது? அதோடு லதா இவரையும் காதலிப்பதாகச் சொல்கிறாரே! எங்களைப் பிரித்துவிட்டு லதாவை அடைய முயல்கிறாரா? லதா எப்படி அதற்குச் சம்மதிப்பாள்? நிச்சயம் ஒருபோதும் அவருடைய எண்ணம் நிறைவேறாது! ஆனால் இனிமேல் எங்கள் காதலுக்கு இவர்தான் எதிரியாகப் போகிறார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது!
          மறு நாள் இரவு எட்டு மணி. நான் வீட்டுப் பாடங்கள்  செய்து கொண்டிருந்தேன்
          கையில் ஒரு கம்புடன் அப்பா நுழைந்தார். அவருடைய முகம் சிவந்திருந்தது. அதில் ஆத்திரம் தெரிந்தது.
          நான் நாற்காலியை விட்டு எழுந்திருக்கவில்லை. பாடங்களை எழுதிய வண்ணமே இருந்தேன்.
          என்னை நெருங்கி வந்தவர் உரத்த குரலில் , ” போன ஞாயிற்றுக்கிழமை எங்கே போனாய்? “என்றூ கேட்டார்.
          ” மேக்ரிச்சிக்கு ஓட்டப்  பந்தயம்  விஷயமாகப் போனேன். ” என்றேன்.
          ” நீ லதாவை உன்னுடன் கூட்டிச் சென்றாயா? “என்றார்.
          ” நான் ஏன் லதாவைக் கூட்டிச் செல்ல வேண்டும்? “இது என் பதில்.
          அவர் என்னை அடிக்கத் தொடங்கினார். சுமார்  பத்துக்கு மேற்பட்ட அடிகள் என்னுடைய இடது கையில் விழுந்தன.அந்த இடமும் தடித்துவிட்டது!
          ” நீ லதாவுடன் போனதற்கு ஆதாரம் உள்ளது., ” என்றார். நான் செய்வதறியாது திகைத்தேன்.
          ” உன்னுடைய பள்ளி பிரின்சிப்பாலுக்கு கடிதம் எழுதி ஆசிரியர் அங்கு வந்தாரா என்று கேட்பேன். பள்ளிக்கு நாளை நானே நேரில் வருகிறேன். ” என்றார்.
          என்னுடைய புத்தகங்களைத் தூக்கிப் போட்டு , ” இவைகளின் மேல் சத்தியம் செய்… நீ லதாவைக் கூட்டிச் செல்லவில்லை என்று! ” இப்படி அவர் சொன்னபோது நான் மேலும் தடுமாறிப்போனேன்.
          என்னால் அதை மட்டும் செய்ய முடியவில்லை. புத்தகங்களின் மேல் பொய்யாக ஆணையிட்டால் கல்வியை இழக்க நேரிடும் என்று எண்ணி மறுத்து நின்றேன். புத்தகங்கள் மீது நான் எப்போதுமே அதிக மரியாதை வைத்திருப்பேன். புத்தகத்தை தவறி மிதித்து விட்டால் உடன் தொட்டு வணங்கும் பழக்கம் கொண்டவன்.( இப்போதும் அந்தப் பழக்கம் உள்ளது ).புத்தகங்களை வணங்குபவன் என்பது  அப்பாவுக்குத் தெரியும். அதனால்தான் அப்படிக் கூறியுள்ளார்.
           ” ஏன் சத்தியம் செய்ய முடியவில்லை? நீ லதாவை அழைத்துப் போனாய் தானே? “
          “: ஆமாம்! “
           ” ஏன் ? “
          ” சில விஷயங்கள் பேசுவதற்காக.”
          ” பேசுவதற்கு ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்?”
         ” இங்குதான் நீங்கள் பேச விடமாட்டேன் என்கிறீர்களே! அதனால்தான்! ” எப்படியோ எனக்கு தைரியம் வந்தது.
         மீண்டும் அடி விழுந்தது.
          ” இனிமேல் எந்தப் பெண்ணையாவது பார்ப்பாயா? ” என்று சொன்னபடி அடித்தார்.
          ” இனி நான் வேறு எந்தப் பெண்ணையும் பார்க்கமாட்டேன். ” என்றேன்.
          ” நான் அவள் வீட்டுக்குச் சென்றுவிட்டு வருகிறேன். ” மிரட்டினார்.
          நான் மௌனம் காத்தேன்.
          ” உங்களுக்கு வயது பெரிதாக இருந்தால் நான் ஏன் தடை போடப் போகிறேன்? ” என்று கூறிவிட்டு வெளியேறினார்.
          எனக்கு  லதாவின் மீது கவலை அதிகமானது. அவளுடைய வீட்டிலும் தெரிந்துவிட்டால் அவளை என்ன பாடு படுத்துவார்களோ என கலங்கினேன்.
          அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுடன் இரவைக் கழித்தேன்.
          மறுநாள் காலையிலேயே அவளைச் சந்தித்து நடந்தவற்றைக்  கூறினேன்.
          ” உன் வீட்டில் ஏதாவது கேட்டார்கள் என்றால் நான்தான் உன்னுடன் பேசிக்கொண்டிருக்க அழைத்துச் சென்றேன் என்று சொல்.” என்றேன்.
          அவளும், ” சரி  ” என்றாள்.
          அதன் பின்பு பல நாட்கள் அவளைப் பார்க்க முடியவில்லை.தவியாய்த் தவித்து போனேன்.
          அவளுக்கு என்ன ஆனதோ? உடல் நலமில்லையா? வீட்டில் தெரிந்து வெளிய விடவில்லையா? ஒன்றும்புலப்படாத நிலை எனக்கு. இரவில் ஜெயப்பிரகாசத்துடன வெளியில் உலாவிவிட்டு கவலையுடன் வீடு திரும்புவேன்.அவன்தான் ஆறுதல் கூறுவான்.
          இறுதியாக மாதக் கடைசியில் அவளை ராபிள்ஸ் அருங்காட்சியகத்தில் கண்டேன். அப்பா அவர்கள் வீட்டில் சொல்லவில்லை என்றும், தேர்வு காரணமாக பார்க்க முடியவில்லை என்றாள். அவள் சொன்ன காரணம் ந்ம்பும்படியாக இல்லாவிட்டாலும், வேறு வழியின்றி நம்பினேன். அன்றே நாங்கள் இரண்டாவது முறையாக தனிமையில் சந்திப்பதற்கு நாள் குறித்தோம்.
          நாங்கள் அவ்வாறு துணிச்சலாக சந்திக்க முடிவெடுத்ததற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது.அப்பா தமிழகம் புறப்பட்டுக் கொண்டிருந்தார்! அங்கு என் அண்ணனுக்குத் திருமணம். ஏழு வயதில் தமிழகத்தில் விட்டுவிட்டு வந்த மூத்த மகனை இடையில் ஒரு முறை கூட சென்று பார்க்காமல், அவருக்கு இருபத்து மூன்று வயதில் திருமணம் செய்து வைக்கப் புறப்படுகிறார். இது என்ன பாசம் என்று எனக்குப் புரியவில்லை. அந்த காலக் கட்டத்தில் மலாயா சிங்கப்பூர் வந்த தமிழர்கள் பலருடைய வாழ்க்கை அப்படிதான் இருந்தது. சொந்த பந்தங்களைப் பிரிந்தே பல வருடங்கள் அப்பாவைப் போல் தனியாகத்தான் வாழ்ந்துள்ளனர்.
          நான் சிங்கப்பூருக்கு வந்த போது எனக்கு வயது எட்டு. என் அண்ணனுக்கு வயது பதினைந்துதான். அவரைப்  பார்த்து எட்டு  வருடங்கள் ஆகிவிட்டன. நாங்களும் அண்ணன் தம்பியாகப் பழகியதில்லை. நான் சிதம்பரத்தில் தெம்மூர் கிராமத்தில் வசித்தேன். அவரோ சென்னை தாம்பரத்தில் அத்தையின் வீட்டில் தங்கி கார்லி உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார்.   அப்பாவின் ஒரே தங்கையான அத்தையும் ஆசிரியைதான்.அதன்பின்பு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் சேர்ந்து பி. ஏ. பட்டதாரியானார்.எங்கள் வட்டாரத்திலேயே முதல் பட்டதாரி அவர்தான்!
        அவரை அவ்வாறு ஒரு பட்டதாரியாக ஆக்க வேண்டும் என்பதில் அப்பா தீவிரம் காட்டினார். மாதாமாதம் சம்பளம் எடுத்ததும் முதல் வேலையாக அண்ணனுக்கு பணம் அனுப்பிவிடுவார். ஊர் செல்வோரிடம் அவருக்கு வேண்டிய துணிமணிகள், கைக் கடிகாரம், காலணிகள், காலுரைகள்,  கைக்குட்டைகள், இதரப் பொருட்கள் அனுப்பி  வைப்பார். ஒரு ரேலி சைக்கிள் கூட அனுப்பியுள்ளார்.
          என் அண்ணனின் பெயர் பீட்டர். அவர் பட்டதாரி ஆனதுமே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரியானார்.
          அவருக்கு உடன் திருமணம் செய்து வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. அது  திடீரென்று ஏற்பாடான அவசரத் திருமணம்.
          நெய்வேலியில் அண்ணன் தனியாக வாடகை வீட்டில் குடியிருந்தார். மூன்று வேளை உணவும்  கடையில்தான். இதைத் தெரிந்துகொண்ட ஒரு பிராமண ஊழியர் அவரைத் தன்னுடைய வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு மாத இறுதியில் அதற்கான பணத்தைத் தரலாம் என்று கூறியுள்ளார்.
          அவரின் மனைவியின் பெயர் ராதா.அவள் ஒரு சிவப்பழகி. இளம் வயதுடையவள்.குழந்தைகள் இல்லாதவள்.சாப்பிடச் சென்ற அண்ணனை ராதா அன்புடன் உபசரித்துள்ளாள். நாளடைவில் இருவருக்குள்ளும் ஒருவித ஈர்ப்பு உண்டாகி விட்டதாம்.
          அதனைத் தெரிந்து கொண்ட அவளுடைய கணவன் அவர்களை ஒன்றாக விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டானாம்!
          அதன்பின்பு அண்ணனும் அவளும் கணவன் மனைவியாக வாழத் தொடக்கி விட்டனராம்.
          இந்த விபரீதச் செய்தியைக் கடிதமூலம் தெரிவித்துள்ளார் ஊரிலிருந்த அம்மா.
          ஒழுக்கத்தில் சத்திய சீலரான அப்பா உடனடியாக திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டார்.
          திருச்சியில் பெண் பார்க்கப்பட்டது. பெண்ணின் பெயர் ஹில்டா சுகிர்தவல்லி. தமிழ் ஆசிரியை. அவருடைய தந்தை போலீஸ் உத்தியோகத்தில் இருந்தார்.
          என்னுடைய வருங்கால அண்ணியின் புகைப்படத்தை என்னிடம் காட்டினார்..அழகாக  இருந்தார்கள்.அவரை எனக்கு மிகவும் பிடித்தது..நானும் திருமணத்துக்கு வருவேன் என்றேன். படிப்பு கெடும் என்று சொல்லி மறுத்துவிட்டார்.
          அண்ணியின் படத்தைக் காட்டியதும் என்னை புகைப்பட ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்றார். என் முழு உருவப் படம் எடுக்கப்பட்டது.
          நான் எப்படி இருப்பேன் என்று அண்ணி கேட்டாராம்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigation

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *