வாஸந்தியின் நாவல், “விட்டு விடுதலையாகி” ஒரு நாவல் என்பதற்கும் மேல், நம் வாழ்க்கை மாற்றங்களையும் அவ்வப்போது மாறும் நம் பார்வைகளையும், மதிப்பீடுகளையும், ஸ்தாபன தோற்ற காலத்து தர்மங்கள் நம்மின் குணம் சார்ந்து, மாறுவதையும் பற்றியெல்லாம் சிந்திக்கத் தூண்டும் களமுமாகிறது
தேவதாசி என்றும் தேவரடியாள் என்றும் அழகான பெயர் சூட்டி நடனத்தின், சங்கீதத்தின் பக்தியின் உறைவிடமாக உருவாக்கப்பட்ட ஒரு ஸ்தாபனம் தேவடியாளாகச் சீரழிந்தற்கு, அல்ல, சீரழிக்கப் பட்டதற்கு நம் குணமும் பார்வையுமே தான் காரணமாகியுள்ளன என்பதை நாம் ஒரு போதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. சீரழிவைப் பார்த்து பொறுக்காத சீர்திருத்த மனம் கொண்டவர்கள் தேவதாசி முறையை ஒழிக்கச் சட்டம் கொண்டு வந்த காலத்திலும் கூட தான் ஸ்தாபனம் நிறைய உன்னத கலைஞர்களை பிறப்பித்து பாதுகாத்து வந்திருந்தது. நம் சங்கீதமே அவர்களிடமும் வாழ்ந்திருந்து வந்திருக்கிறது. தீக்ஷிதரும் சியாமா சாஸ்திரிகளும் சங்கீதம் பெற்றதும், பகிர்ந்து கொண்டதும், கொடுத்ததும் தேவதாசிகள் பாதுகாத்து வந்த அந்த சூழலில் தான். அவர்களுடன் சங்கீதம் கற்றதும், தீக்ஷிதரிடமிருந்து சிக்ஷை பெற்றதும் தேவதாசிகளும் தான். படித்திருக்கிறேன். உலகம் முழுதும் தன் நாட்டியத்தை எடுத்துச் சென்ற உதய் சங்கர் ஏதும் முறையாக நாட்டியம் பயின்றவர் அல்லர். அவருக்குக் கிடைத்தது ஆனந்த குமாரஸ்வாமி எழுதிய Mirror of Gestures புத்தகம். ஆனந்த குமாரஸ்வாமிக்கு அந்த புத்தகம் எழுத அபிநயங்கள் பற்றிச் சொன்னது மைலாப்பூர் கௌரி அம்மாள் என்ற தேவதாசி. அக்கால சங்கீத வித்வான்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குழுமியது தனம்மாளின் வீட்டில் அவரது வீணை வாசிப்பைக் கேட்க. தாகூருக்குத் தெரிந்திருக்கிறது பாலாசரஸ்வதியை. சாந்தினிகேதனில் பாலா டாகுமெண்டரி எடுத்த சத்யஜித் ரே அதிலேயே சொல்கிறார் தாம் பாலாவின் நடனத்தைப் பார்த்து வியந்தது சாந்தினிகேதனில் என்று. பாலாவின் நினைவில் தில்லி கமானி அரங்கத்தில் நடந்த விழாவில் நான் பார்த்தது, To Dear Bala, with love, Marget Fonteign என்ற வாசகங்கள் பெரிதாக்கப்பட்டிருந்த ஒரு பெரிய போர்ட். பாலாவின் பருத்த சரீரம் அந்த மேடையின் நடுவுக்கு நடந்துவந்து, நின்று பக்க வாத்தியக்காரர்களை, பதம் பாடும் நட்டுவனாரைப் பார்த்து அவர் பாட ஆரம்பித்ததும் அந்த சபைக்கு புரியாத பாஷையில், புரியாத அபிநயங்களில், புரியாத புராணக் கதையின் தாமறியாத தெய்வத்தை நோக்கி “கிருஷ்ணா நீ பேகன பாரோ” ஆடினால், அந்த சபையிலிருந்த மார்த்த கிரஹாம், I want to see Bala dance again, I want to know more of this art” என்று சொன்னால், அந்த பாலா என்ற பெயர் கொண்ட நடன சரஸ்வதி நாம் இழிந்து சொல்லும் சதிர் ஆடும் தாசி குடும்பத்தில் பிறந்த ஒரு கலைதேவதை. மதுரையின் ஒரு குறுகிய சந்து தான் ஹனுமந்த ராயன் சந்து, அது தான் எம்.எஸ் சுப்புலக்ஷ்மி என்னும் சிறுமி பாண்டி ஆடிய தெரு அது தான் அம்மா, ஷண்முக வடிவு வீடு இருந்த இடம். அது தான் எல்லா பாடகர்களும் சங்கீத உபாசனை செய்யும் பீடம். சிறுமி சுப்புலக்ஷ்மியைப் பாடச் சொல்லிக் கேட்கும் வீடு. திருவிழா நாட்களில் நாலு வீதிகளிலும் சுற்றி வரும் நாதஸ்வர வித்வான்கள் அந்த வீட்டின் முன் நின்று வாசிப்பது அவர்கள் ஷண்முக வடிவுக்குச் செய்யும் மரியாதை.
கலைகளைக் காத்து போஷித்த, அனேக உன்னதங்களை பிறப்பித்து காப்பாற்றிய ஸ்தாபனம் ஒரு பக்கத்தில் உன்னதமும் மறுபக்கம் சீரழிவும் கண்டது தான். இதன் சரித்திரம் தஞ்சை மராட்டிய மன்னன் ஒருவன் தன் மகளுடன் ஸ்த்ரீ தானமாக தஞ்சை கோயில் நர்த்தகிகளை அனுப்பி வைத்ததிலிருந்தோ அல்லது அதற்கும் முன்னர் சோழர்காலத்தில் ஆயிரம் நர்த்தகிகளை தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்துக்கு அளித்து அவர்களை சம்ரக்ஷிக்க கொடையும் கொடுத்த வரலாற்றிலிருந்தோ தொடங்குவதில்லை. அதற்கும் முன் சங்க காலத்திலிருந்து இதன் ஆரம்பங்களைப் பார்க்க வேண்டும். பாணர்கள், விரலியரிலிருந்து தொடங்கி சில தலைமுறை முன் வரை பெற்ற பரிணாமம் இது அதன் சீரும் சீரழிவும். (மேலும் விஸ்தாரமாக அறிய விரும்புகிறவர்கள் Saskia C. Kersenboom-ன் NITYA SUMANGALI Devadasi Tradition in South India-வைப் பார்க்கலாம்). இன்று தியாகராஜ உத்சவத்திற்கு சங்கீத வித்வான்கள் குழுமி பஞ்சரத்தின கீர்த்தனை மாலை பாடி அபிஷேகமும் பூஜையும் பெறும் தியாகராஜரின் மூர்த்தி நாகரத்தினம் என்ற ஒரு தேவதாசி செய்த கைங்கர்யம். புதர் மண்டிக்கிடந்த இடம் அது நாகரத்தினம்மாள் வரும் முன். பாலாவைப் பார்த்து வியந்த மார்கெட் ஃபாண்டெய்ன் போலவோ மார்த்தா கிரஹாம் போலவோ இங்கு யாரும் இருந்ததில்லை. பாலே கற்கச் சென்ற ருக்மிணி தேவி அருண்டேலை அன்று சதிர் என்று நாம் இழிவு படுத்திச் சொல்லி வந்த “உங்க ஊர் நடனத்தைக் கற்றுக்கொள்ளுங்கள் முதலில்” என்று திருப்பி அனுப்பியது அன்னா பாவ்லோவா. சென்னை சபாவில் முதலில் ஈ கிருஷ்ணய்யர் ஆடியது சர்ச்சையானது இரண்டு காரணங்களுக்காக, ஒன்று ஆண் ஆடிய சர்ச்சை. இரண்டு போயும் போயும் தேவடியாள் ஆடும் சதிர், உயர் குலத்தவர் ஆடலாமா?
நமக்கு முந்திய சில தலைமுறைகளிலிருந்து தெரிய வரும் செய்திகளிலிருந்து தான் இந்த உன்னதமும் பாதாளமுமான பிளவு தெரிய வருகிறது. சங்க காலத்தில் இருந்திருக்குமோ என்னவோ, சோழர் காலத்தில் கட்டாயம் இருந்திருக்கும். ஒரு பழமொழி நித்ய சுமங்கிலி புத்தகத்தில் சொல்லப் படுகிறது. கோயில் சோற்றுக்குக் குமட்டின தேவடியாள் கட்டிச்சோற்றுக்கு கரணம் போடுகிறாள். சிறு வயதிலேயே பொட்டுக் கட்டப் பட்டு கோயில் வழிபாட்டு நடைமுறையில் அத்தனையிலும் பங்கு பெற்றும் வளமான கௌரவமுமான வாழ்க்கை கொடுக்கப்பட்டால் அதுவும் இழிந்த குலப் பிறப்புக்கு என்றால், பொறாமை எங்கும் கனல் எரியத் தொடங்கும். இருந்தாலும் இந்த பழமொழி ஏதும் ரொம்ப பழமையானதாக இருக்க வாய்ப்பில்லை. அபிஷேகத்துக்கு குடத்தில் நீர் எடுத்துச் செல்பவள் அந்தக் கோயிலில் கொடை பெறும் நித்திய சுமங்கலி தான். விளக்கேற்றுபவளும் அவளே. தெய்வத்தின் முன் நித்திய ஆராதனையாக நடனம் ஆடுபவளும் அவளே. அத்தகைய கௌரவம் பெற்றவள் கோயில் சோற்றுக்கு குமட்டும் தேவடியாளாக இருக்கமுடியாது. அவளை இழிந்து பேசுபவர்களுக்கு இல்லாத கலைகளில் தேர்ச்சியை பெற்றவள் அவள். இழந்த கைசிகி நாட்டியத்தை புனர்ஜீவிக்க செ. ராமானுஜம் அண்டியது அக்கோயிலில் ஒரு காலத்தில் தேவதாசியாக இருந்த, கைசிகி நாடகம் ஆடிய தொண்டுகிழ அம்மையாரைத் தான். அவர்கள் தான் இக்கலைகளுக்கு ஒரு காப்பகமாக இருந்திருக்கிறார்கள்.
ஆனால் மாதவிகளும் இருந்திருக்கிறார்கள். கோவலன்கள் நிறையப் பணத்தோடும், சமுக அந்தஸ்தோடும் இருக்கும் போது வேறென்ன நிகழும்?
அதே தமிழ் இலக்கிய வ்ரலாறு அகப்பாடல்களையும் கொண்டது. அதன் பரிணாமம் தானே பக்தி இலக்கியமும். தேவதாசி, தன் கோவில் தெய்வத்தின் முன் நின்று பக்தி பரவசத்தோடு பாடி ஆட, பாடல்களையும் தன்னை அடிமை கொண்டவனுக்காக உருகும் போது அதில் என்ன ரசம் பெருகும்? “கண்ணனைக் காண்பதெப்போ”, என்றோ, “இன்னமும் வாராத காரணம் கேட்டு வாடி, சகியே” என்றல்லாமல் வேறென்ன பாடுவாள்?, ஆடுவாள்?. மாதவி மாத்திரம் அல்ல, இன்னொரு பிரவாகமும் உண்டு. காரைகாலம்மையார். அவர் சிவன் ஆடிய ஊர்த்துவ தாண்டவத்தை ஊழிக்கூத்தைப் பாடுவார்.
ஆக, நம் நினைவில் இருக்கும் சமீப காலத்தில் தேவதாசி மரபில் நாகரத்தினம்மாளும், பால சரஸ்வதியும் தோன்றினால், அது காதல் ரசம் கொண்ட வழிபாடானானால், பக்தி ரசத்திற்கும் இன்னொரு பிரவாஹம் ருக்மிணி தேவி அருண்டேல் தோன்றுவார். பக்தி தான் திருமங்கை ஆழ்வாரையும் தருகிறது. காரைக்காலம்மையாரையும் தருகிறது. பாலசரஸ்வதி ஒரு முகம் என்றால் ருக்மிணி தேவி அருண்டேல் இன்னொரு முகம்.
ஒரு நூற்றாண்டுக்கு முன் சமூகசீர்திருத்த வாதியும் பெண்களின் முன்னேற்றத்திற்கு தன்னை ஈடுபடுத்திக்கொண்டவரும் ஆன டாக்டர் முத்து லக்ஷ்மி ரெட்டிக்கு தேவதாசிகள் சமூகத்தில் படும் அவல நிலை மட்டுமே தெரிந்தது. அல்லது தேவருக்கு அடியாள் என்று பெயர் சொல்லி, கலை என்று சொல்லிப் பெறும் இந்த வாழ்க்கை வேண்டாம் என்று தோன்றியிருக்கிறது. அவர் தாய் பெற்ற அனுபவம் வருத்தியிருக்கிறது. தன்னுடைய மற்ற சீர்திருத்தங்களோடு, கல்வி, மருத்துவம், சுகாதார வாழ்வு போன்றதோடு, தாசிமுறையும் ஒழிக்கப்படவேண்டும் என்பதில் அவர் தீவிரம் கொண்டார். தேவதாசிகளை ஒழித்து விட்டால் அவர்களால் வாழும் கலையும், ஒரு சீரிய மரபும் அழிந்து போகும் என்று எதிர்க் குரல் எழுப்பினர் சத்திய மூர்த்தி போன்றோர். சத்திய மூர்த்திக்கு இசையிலும் நாடகங்களிலும் பெரும் ஆர்வம்.தேவதாசிகளோ, கோவிலின் ஆதரவும் கொடையும் தான் தம் வாழ்க்கைக்கு ஆதாரம் தேவதாசிச் சட்டம் அதை தம்மிடமிருந்து பறித்து விடும் என்ற பயம். அது உண்மையும் கூட. தேவதாசிகளில் எத்தனை பேர் பாலசரஸ்வதிகளும் நாகரத்தினம்மாள்களும் இருக்கக் கூடும். டாக்டர் முத்து லக்ஷ்மி ரெட்டிக்கு தேவதாசிகள்
ஆயினும் ருக்மிணி அருண்டேலும் ஈ. க்ருஷ்ண அய்யரும், டாக்டர். வி. ராகவனும் காட்டிய இன்னொரு உலகமும் இருந்தது தான். ருக்மிணி தேவி பரதம் கற்றதே பந்த நல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் மைலாப்பூர் கௌரி அம்மாளிடமும் தானே.
ஏனோ அவரவர் இன்னொரு உலகம் இன்னொரு பார்வை திறப்பதை உணரவில்லை. தம் முரண்களுடனேயே வாழ்ந்தனர். இவ்வளவும் நடந்தது நாடு முழுதும், தமிழ் நாட்டில் மாத்திரம் இல்லை, தேசீய உணர்வு மேலிட்டு மக்களிடையே ஒரு புத்துணர்வும் விடுதலை உணர்வின் கொந்தளிப்பும் தோன்ற ஆரம்பித்து விட்ட காலத்தில் கலை, தேவதாசி மரபு, பக்தி, தேசீய உணர்வுகள், பெண் விடுதலை ஏதோ தமக்குள் முரண் பட்டவை போல வெளிப்பட்டன. பாரதியின் தேச விடுதலை, பெண்விடுதலைப் பாட்டுக்கள் கேட்கத் தொடங்கிய காலம். அது கடந்த நூற்றாண்டின் இருபதுக்கள், முப்பதுக்கள்.
(2)
இந்த பார்வைகள் எல்லாம் சரி இவ்வளவு கால இடைவெளிக்குப் பிறகு இவை பற்றியெல்லாம் சிந்திக்கும் போது. நம் சிந்தனையோட்டமும், கருத்துக்களும் எவ்வளவு வர்ண வேறுபாடுகளோடு மனதில் சலனித்தாலும், அவற்றின் வாழும் காலத்தின் சிக்கல்களை வாழ்ந்து அனுபவித்தல் கஷ்டமானது தான். ஒரு மூலையில் தெய்வீகமும் கலையும் கலந்த கருத்துருவாக்கத்தின் புனிதம், அதற்கு எதிரில் மனித மனத்தின் சகல ஆபாச சுதந்திரங்களும் கொண்டு ஆடும் நிதர்சன உலகின் சீரழிவுகள். இடைப்பட்ட நிலைகள் அனந்தம் இருக்கக் கூடும். நாவல் எழுதத் தொடங்கி அதில் உலவ விடும் மனிதர்களின் குணபேதங்கள், நிர்பந்தங்கள், ஆசைகள், பலவீனங்கள் எல்லாமே என்னென்னவோ நியாயங்கள் கற்பித்து உலாவத் தொடங்கும்.
- வாஸந்தியின் நாவல் களம் கொண்டுள்ளது பாரதியின் கடைசிக்காலத்தின், கடந்த நூற்றாண்டின் ஆரம்ப பத்துக்களில் தேச விடுதலைப் போராட்ட துவக்க காலத்தில். காந்தியின் சென்னை வருகையும், பாரதியின் பாட்டுகள் தேச விடுதலைப் போராட்டத்தின் சங்க நாதமாக ஒலிக்கத் தொடங்கிய காலத்தில். விடுதலை என்ற சொல் பல அர்த்தங்களில் பல தளங்களில் ஒலிக்கத் தொடங்கிய காலத்தில் இவையெல்லாம் பொது மக்களையும் தெருக்களையும் தாண்டி, தேவதாசிகளின் கண்கள் காணா வேலியிடப்பட்ட குடும்பங்களுக்குள்ளும் ஒலிக்கத் தொடங்கிவிட்ட காலம் அது.
நாவலின் ஆரம்ப பக்கங்களில் கோவில் சார்ந்த வாழ்க்கையில் இன்னமும் பொழுது விடிந்திராத முன் காலைப் பொழுதுக் காட்சி ஒன்றைப் பார்க்கிறோம். மிக அழகாக உணர்வுடன் எழுதப்பட்ட பக்கங்கள் அவை. மனித சிந்தனையில் தெய்வீகமும் கலையும் எந்த மனித ஆசாபாசங்களின் கறை படாத ஒரு லட்சிய ரூபம் தரித்த நிதர்சனம். வெறும் கற்பனையல்ல, நிதர்சனத்தின் சாத்தியங்கள் கொண்ட காட்சி தான் என்பதை அக்காலம் மறையத்தொடங்கிய கட்டத்தில் வாழ்ந்தோரின் அனுபவங்கள் சொல்லும்.
ஆரம்ப பக்கங்கள் என்று சொன்னேன். அது கலைக்கும் தெய்வத்துக்கும் அர்ப்பணிப்பாக தேவதாசி வாழ்வை கற்பித்து வாழத்தொடங்கிய கஸ்தூரி மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் நாட்களில் ஒன்று அது. அவள் மரணச் செய்தி எப்போதும் வரக் கூடும் என்ற நிலையில் கோவிலைத் திறந்து உஷாக் கால பூஜையை முடித்துக்கொள்ள விரையும் சுப்பிரமணிய குருக்கள் அந்த முன் இருட்டில் கிணற்றில் குளித்து 90 வயதின் மெலிந்து வற்றிய உடலோடு கோவில் கதவைத் திறக்கத் தள்ளாடும் காட்சி அது. ஒரு மாதிரியான கனவும் மயக்கமும் கலந்த நிலையில் மிதப்பதான உணர்வு.
கோயில் கதவைத் திறக்க உதவும் காவலாளி ஷண்முகம் “எதுக்கு இந்த கருக்கல்லேன்னு கேட்டேனே ஐயா? என்று திரும்பக் கேட்கிறான், ஏதோ மயக்க நிலையில் பதில் பேசாத குருக்களைப் பார்த்து.. குருக்கள் பதில் சொல்கிறார்” ”கஸ்தூரி மரணச் செய்தி வரும் மும் பூஜையை முடித்துக்கொள்ளணும்” என்று. “அந்தப் பளக்கமெல்லாம் இப்ப இல்லேன்னு நினைச்சேன்” என்கிறான், கொஞ்சம் கழித்து மெல்ல. “சட்டப்படி இல்லே தான். ஆனா கோயில் விதி முறைன்னு ஒண்ணு இருக்கே?”
“அவங்க இறந்துட்டாக்க சாமி தீட்டு காக்கணுங்கறீங்களா?”
“ஆமா, பெண்டாட்டி செத்தா தீட்டு காக்கற மாதிரி”
இந்த சம்பாஷணை சொல்லும், அவர்கள் வாழும் உலக நியதிகளை, மாறிவரும் மதிப்பீடுகளை.
அப்பா குருக்களாக இருந்த போது தன் வயதில் இருந்த கஸ்தூரி சிறுமி. தேவதாசியாகக் காத்திருப்பவள். அதற்கான நடன பயிற்சிகள் கற்று வருபவள். கலை ஆர்வத்தில் அந்த வயதில் வேறு எதுவும் தெரியாத சிறுமி. அம்மா, பாட்டி, தங்கை திலகா, அற்புதமான தேனொழுகும் குரலைப் பெற்றவள். தம்பி மிருதங்கம். வேறென்ன வேண்டும்?. என்று கஸ்தூரி தேவதாசியாக பொட்டுக் கட்டும் நாள் வரப்போகிறது என்று காத்திருப்பவர்கள் பாட்டி கனகமும், அம்மா செங்கமலமும். அவர்களோடு “அப்பா” ராஜாவும் தான். ஒரு ஜமீனின் ராஜா. சுப்புணி குருக்களுக்கு பழைய நினைவுகள் அலையாடுகின்றன. மிக அழகாக அந்த மயக்க நிலையில் வந்து தோன்றி மறையும் பழம் நினைவுகள். எழுதப்பட்டுள்ளது இந்தத் தொடக்கம் மட்டுமல்ல. கஸ்தூரியின் ஒவ்வொரு கட்ட நிகழ்வும், அந்த லக்ஷிய உன்னதம் படிப்படியாக கறைபடுவதும் அவளது அதற்கெதிரான போராட்டங்களும். கஸ்தூரி பெரிய மனுஷியானதும் பொட்டுக்கட்டப்படுகிறது.
கஸ்தூரி தனக்கு என்ன நேர்ந்துவிட்டது என்று தெரியாது அழுகிறாள்: பாட்டி கனகு, பூரிப்புடன், “பெரிய மனுஷி ஆனதுக்கு அழுவாங்களா கொண்டாடப்பட வேண்டிய விஷயம் தாயீ, வா, இங்கே குந்து வெந்நீர் விளாவி ஊத்தறேன்” என்கிறாள். தாய் செங்கமலமோ,”இனிதான் உன் வாழ்க்கையே ஆரம்பிக்கப் போகுது. உன் அழகு கூடும்.. மோகமாகினேன் என்று அபிநயம் பிடிச்சா புதுசு புதுசா அர்த்தம் தோணும்” என்று என்னவோ பேசிக்கொண்டே போகிறாள்.
அவள் அந்தக் கோயிலின் அதிகார பூர்வ தேவதாசியாகிய தினமே பின்னிரவில் “ராஜா வீட்டிலிருந்து வில்வண்டி வந்து வாசலில் நிற்கிறது. மிகுந்த பூரிப்போடு அனுப்பிவைக்கிறார்கள் பாட்டியும் அம்மாவும். “சாமின்னா எனக்கு தாலி கட்டினார்?” என்று கேட்கும் கஸ்தூரிக்கு, சாமி பேரைச் சொல்லி குருக்கள் தான் தாலி கட்டியது போல, இது ஒரு ஏற்பாடுதான். ராஜா தான் கோவில் அறங்காவலர். மான்யம் கொடுக்கும் அதிகாரம் அவரிடம்” என்று அவளை சமாதானப் படுத்துகிறார்கள். இனி அடிக்கடி ராஜாவிடமிருந்து அழைப்பு வரும் என்கிறார்கள். கஸ்தூரிக்கு அது பெரிதாகப் படவில்லை.
“மோகமாகினேன்” என்று திலகம் பாட அவள் ஆடும்போது அவளுக்கு வேறு எதுவும் கண்களில் படுவதில்லை. யார் எப்படி பார்க்கிறார்கள் என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது. கண்முன் இருக்கும் தெய்வம் தான் அவள் மனதில் நிறைந்திருக்கிறது. கஸ்தூரி அன்றைய நிறப்பிரிகையின் ஒரு கோடி, அல்லது அந்தக் கோடியிலிருந்து கொஞ்சம் நகர்ந்துவிட்ட கட்டம்.
ஆனால் அவளோடு நடனம் கற்கத் தொடங்கிய லக்ஷ்மி, வாத்தியாரின் பிரம்படி மாத்திரமல்ல. மனமும் இதயமும் வெறுத்துப்போன ஒரு கோடி. அம்மா மிராசுக்கு கட்டுப்பட்டவள். அம்மாவோடு தன் குடும்பமே மிராசுவின் கல்யாணச் சாப்பாடு எப்போவரும் என்று வீட்டுக் கொல்லையில் நின்று காத்திருக்க வேண்டும். அவள் குடும்பம் மாத்திரமல்ல. நாயனம் வாசித்த சுந்தரமூர்த்தியும் அவர் சிஷ்ய கோடிகளும் தான். தமக்கு விதிக்கப்பட்டதாக அவர்கள் அதை ஏற்கின்றனர். கஸ்தூரியின் அப்பாவுக்கும் சரி, லக்ஷ்மியின் அப்பாவுக்கும் சரி, பொதுவில் தம் உறவுகளை ஏற்க மனம் இருப்பதில்லை. இரவு நேரங்களோடு அவை முடிபவை.
இருப்பினும் லக்ஷ்மிக்கு இந்த சிறையிலிருந்து விடுபட வேண்டும். தன் ”அப்பா” விடம் தான் படிக்க உதவ வேண்டும் என்று கேட்கிறாள். அது மாத்திரம் அதிசயமில்லை. அந்த “அப்பா” அவளது ஒவ்வொரு வேண்டுகோளையும் ”குழந்தை ஆசைப்படுகிறாள்,” என்று ஒப்புக்கொள்வதும் அதிசயம் தான். அன்றைய ”ஏற்பாடு”களில் இதற்கெல்லாம் இடமிருந்ததில்லை. முதலில் லக்ஷ்மிக்கு தான் படிக்கவேண்டும், படித்து வக்கீலாக வேண்டும், தன்னைப் பிரம்பால் அடித்த வாத்தியாரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரு சிறுமியின் ஆசை, தன் ”அப்பா” வின் பெண் குழந்தைப் பேற்றில் சரியான மருத்துவ உதவியின்றி இறந்ததிலிருந்து டாக்டராக வேண்டும் என்று மாறுகிறது. ஒரு கட்டம் வரை லக்ஷ்மியின் எண்ணங்களும் வாழ்க்கை அம்சங்களும் முப்பதுகளின் முத்து லக்ஷ்மி ரெட்டியை நினைவு படுத்தும். லக்ஷ்மியும் தேவதாசித் தடுப்புச் சட்டம் கொணர்கிறாள் கவுன்ஸிலர் ஆகி, பல பெரிய பிரமுகர்களின் எதிர்ப்பையும் எதிர்கொண்டு. கஸ்தூரி ஒரு கட்டத்தில் தன் சிறுவயது தோழியைக் கேட்கிறாள், ‘உனக்கு ஏன் இத்தனை கோபம் வருகிறது?” என்று. லக்ஷ்மியின் பதில் “உனக்கு ஏன் கோபம் வரமாட்டேன் என்கிறது” என்று எனக்குக் கேட்கத் தோன்றுகிறது, என்று. ஒவ்வொரு கால கட்டத்திலும் அன்றைய சமூக நியதிகளை, மீறிய சிந்தனைகள், எண்ணங்கள் சிலருக்கு தோன்றி விடுகிறது. சில நியதிகளின் லட்சிய கற்பனைகளைக் காக்கிறார்கள். கஸ்தூரி போன்று. சிலர் அதன் சீரழிவை இயல்பாகக் கொள்ளாது மீறுகின்றனர் லட்சுமி போல. சிலர் அந்த நியதிகளுக்குள்ளேயே இரக்க மனமும் வாத்ஸல்யமும் கூடக் கொள்கிறார்கள். லக்ஷ்மியின் “அப்பா”.போல. அபூர்வம்தான்.
ஆனால் இந்த “ஏற்பாடு” அதிகம் தன்னை, தன் நாட்டிய வாழ்வை அதிகம் பாதிக்காது என்று நினைத்த கஸ்தூரிக்கு ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நேருகிறது. “பொட்டுக் கட்டிய இரவு, கஸ்தூரியுடன் பெற்றது, “செங்கமலம் தன்னை ஏமாற்றவில்லை. கஸ்தூரி கன்னியாகத் தான் இருந்திருக்கிறாள்” என்று பூரித்த ராஜாவுக்கு, கலெக்டரை திருப்திப் படுத்த நினைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன கச்சேரியில் வெள்ளைக்கார கலெக்டரின் அநாகரீக நடத்தையால் கஸ்தூரி அவன் பிடியிலிருந்து திமிறி ஓடிவிடுகிறாள். பாட்டி கனகுக்கு ”அட கூறு கெட்டவளே” என்று திட்டத் தான் தோன்றுகிறது. “அது அவ்வளவா நல்ல இடமில்லை” என்று சுந்தரமூர்த்தி சொன்னதையும் மீறி, “பெரிய இடத்து சம்பந்தங்கள் வேண்டும் என்று ஆசைப்பட்டது வீணாயிற்றே என்ற கோபம் அந்தக் குடும்பத்துக்கு.. கஸ்தூரிக்கு அப்பாவிடம் கோபம். “நான் உங்களுக்குத் தானே. அவன என்னைத் தொடலாமா? அவனுக்கு என்ன தெரியும் நாட்டியமும் சங்கீதமும்?” “அப்பாவுக்கோ இனி அந்த வெள்ளைகாரனை எப்படி சமாதானப்படுத்துவது, கலெக்டராச்சே” என்ற சிக்கல். சாமிக்கு பொட்டு கட்டியதாகச் சொல்லி, இந்த கேவலத்துக்கு தன்னைத் தள்ளியதில், அம்மா, பாட்டி, “அப்பா” எல்லோரும் உடந்தை என்று அறிந்ததும் கஸ்தூரிக்கு மனம் உடைந்து போகிறது. இனி நன்றாக விசாரித்து நல்ல இடங்களுக்குத் தான் போகவேண்டும் என்று தீர்மானித்துக்கொள்கிறாள்.
அடுத்து பட்டணத்திலிருந்து ஒரு பார்ட்டி வருகிறது. கோபாலய்யர் என்பவர் சென்னையில் ஒரு நடனத்துக்கு அழைக்க வருகிறார். லக்ஷ்மிக்கு சென்னையில் மேற்படிப்பு படிக்க லக்ஷ்மியின் “அப்பா” மிராசு ஏற்பாடு செய்த குடும்பம் தான் கோபாலய்யர். நல்ல மனிதர். நிறைய செல்வாக்கு உள்ளவர். கஸ்தூரியின் நடனம் பற்றிக் கேட்டு, இப்போது தற்செயலாக அவள் ஆடிக்கொண்டிருக்கும் போதே பார்த்து அழைப்பவர். நல்ல இடம் தான், இனி நிறைய இந்த மாதிரி வாய்ப்புக்கள் வரும். எல்லோருக்கும் சந்தோஷம் முன் பணம் வாங்கிக்கொள்கிறார்கள்.
கோபாலய்யர் வீட்டில் லக்ஷ்மி எவ்வித சிரமமுமின்றி இருந்து படித்து வருகிறாள். மாடியில் எதிர்வீட்டில் ஒரு குடும்பம். மொட்டை மாடியில் பார்த்துக் கிடைத்த அனுபவம் தான். கொளுத்தும் வெயிலில் ஒரு நடு வயது மாமி. ஒரு சிறுமி, விதவையாகிவிட்ட மொட்டையடித்து முக்காடு போட்டுக்கொண்டுள்ள சிறுமி, மாமியாரிடம் கொடுமைப்படுவது கண் முன்னால் தெரிகிறது. தினம் அடி உதை, திட்டு. “ என் மகன் போய்விட்டால் என்ன? நான் பாத்துக்கறேன். அவள் இனி எங்கே போவாள்?” என்று கருணை உள்ளத்தோடு அழைத்து வரப்பட்டவள். ஒரு நாள் அந்த கோபாலய்யரே யோகு என்ற அந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள, யோகத்துக்கு அன்று சித்திர வதை தான். லக்ஷ்மி அந்த விதவைக் சிறுமியைக் காப்பாற்றி படிக்க வைத்து ஒரு வாழ்வு அளிக்கத் தீர்மானம். கொள்கிறாள். ஒரு நாள் கடற்கரைச் சாலையில் நடந்து செல்லும் போது, சமுத்திரத்தில் மூழ்குவதிலிருந்து மீனவர்கள் காப்பாற்றிக்கொணர்ந்து கடற்கரையில் மூர்ச்சித்துக்கிடப்பது யோகா என்று தெரிகிறது. அவளை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று காப்பாற்றி, தனது தோழியின் மூலம் கொடைக்கானலில் கன்னிமாடத்தில் சேர்த்து அவள் படிப்புக்கு ஏற்பாடு செய்கிறாள்.
லக்ஷ்மியுடன் மருத்துவ மனையில் பழகும் ரங்க நாதன், லக்ஷ்மியை மணம் செய்துகொள்ள விரும்புகிறான். லக்ஷ்மி தான் எந்த குடும்பத்திலிருந்து வருபவள், தன் அப்பா யார் என அறியாதவள் என்று சொல்ல அவனுக்கு அது பற்றிக் கவலை இல்லை என்று சொல்ல திருமணம் செய்துகொள்கிறார்கள். சத்யாக்கிரஹத்தில் சேர வேதாரண்யம் போவது பற்றியும் பேசுகிறான்.
கோபாலய்யரோடு சென்னை நடனக் கச்சேரிக்கு போகும் சந்தர்ப்பத்தில், கோபாலய்யரின் மகன் கல்யாணராமனுக்கு திலகாவின் மீது கண். திலகாவுக்கும் கல்யாணராமனைப் பிடித்து விடுகிறது. இரண்டு குடும்பங்களுக்கும் தெரியாமல் இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொள்கிறார்கள். “நான் பாடலைன்னா செத்துவிடுவேன்” என்று ஒரு காலத்தில் சொல்லிக்கொண்டிருந்த திலகாவுக்கு, “இனி பாட்டும் கிடையாது, வீட்டுக்க்குள்ளே அடங்கி நடக்கணும்,” என்ற கல்யாண்ராமனின் நிபந்தனைகள் “கௌரவ வாழ்வு ஒன்று” கிடைக்கும்போது பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் நாடகள் செல்லச் செல்ல கல்யாண்ராமன் கொடூர மனம் கொண்டவன் அவனுக்கு வேண்டியது அவள் உடல் மாத்திரமே, வீட்டுக்குள்ளே கூட பாட்டு முணுமுணுப்பாகக் கூட கேட்கப்படக் கூடாது” என்று கொடுமை. அவன் இஷ்டத்துக்கு பணியாவிட்டால் பெல்டால் அடிக்கும் மிருகம் அவன். இக் கொடுமை நீடிக்க, திலகம் ஒரு நாள் தற்கொலை செய்துகொள்கிறாள். பெரியவர்கள் வீட்டு சமாசாரம். மூடி மறைக்கப் படுகிறது.
ஒரு முறை கலெக்டரைத் திருப்திப் படுத்துவதில் தோல்வியடைந்த “ராஜா” தன்னை வந்து சந்திக்கும்படி கஸ்தூரிக்குச் சொல்லி அனுப்பி கலெக்டர் இருக்குமிடத்துக்கு கஸ்தூரி போய்ச் சேர திட்டமிடுகிறார். கலெக்டரிடம் அகப்பட்டுக்கொள்ள ராஜா செய்த சதி என்று தெரிந்த கஸ்தூரி கலெக்டரின் பலாத்காரத்தையும் மீறி அங்கிருந்து தப்பிக்கிறாள். தப்பித்து ஓடுகிறவளுக்கு அபயம் தருவது அவ்வப்போது தெருவில் வரும் போராட்ட ஊர்வலங்கள் தான். அதில் சுந்தர மூர்த்தியின் பரிவாரம் கட்டாயம் கலந்து கொண்டிருக்கும். அதில் தன்னை மறைத்து தப்பித்து வந்தவளுக்கு சிங்காரம் என்னும் அபூர்வ சிற்பங்கள் செய்யும் ஆசாரியுடன் பழக்கம் ஏற்படுகிறது. அது பற்றித் தெரிந்த கஸ்தூரியின் குடும்பத்துக்கு ஒரு கீழ் ஜாதிக்காரனோடா சம்பந்தம் என்று கோபம் எழுகிறது.
”உனக்கு அறிவு இருக்கா?. அவன் ஆசாரிடீ” என்று திட்டிய பாட்டியிடம், “அவன் கலைஞன் பாட்டி” என்று கஸ்தூரி சமாதானம் சொல்கிறாள். “மண்ணாங்கட்டி, நீ கோவில்லே ஆடறவ. அது யாருக்கு கிடைக்காத அந்தஸ்து. அதுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கு. கீழ் ஜாதிக்காரனோட உறவு வச்சுக்கப்படாது. வெளிலே தெரிஞ்சா, பதவி போகும். ஜாதிப்ரஷ்டம் செஞ்சிடுவாங்க” என்று பொரிந்து தள்ளுகிறாள் பாட்டி. கடைசியில், தீர்மானமாக, பாட்டி சொல்கிறாள்: “இதெலாம் உணர்ச்சி வசப்பட்டு விளையாடற விஷயமில்லே. தெரிஞ்சிக்க. நீ கோவில் தேவ தாசி. மனசை அடக்கத் தெரியாதவ இந்த பதவி வகிக்க முடியாது. இதெல்லாம் நல்லதுக்கில்லே. சொல்லிப்புட்டேன். தெய்வக் குத்தம்டீ அது.”
இந்த நெருங்கி வரும் உறவு பற்றி கலெகடருக்கும் ராஜாவுக்கும் தெரிந்து போகிறது. கஸ்தூரிக்கும் சிங்காரத்துக்கும் ஏதும் சம்பந்தமில்லை என்று சத்தியம் செய்யச் சொல்கிறார் அவர். ”ராஜாவுடன் படுப்பது ஒரு ஏற்பாடு. ஆனால் சிங்காரத்துடனான உறவு தன் பெண்மைக்கே அர்த்தம் கொடுப்பது” என்று கஸ்தூரி நினைக்கிறாள். அவள் சத்தியம் செய்து கொடுக்க மறுக்கிறாள். இதன் விளைவு கஸ்தூரிக்கு கோயிலில் பதவியும் போகிறது. மான்யமும் போகிறது. ஆனால் ராஜாவுடன் எப்போதும் போல இருந்து கொள்ள்லாம் என்று ராஜா தாராளம் காட்டுகிறார். இது தெரிந்த கஸ்தூரி குடும்பமே இடிந்து போகிறது.
கனகு பாட்டிக்கு அதுவே உயிரைப் பறிக்கும் யமனாகிறது.
இந்த போராட்ட ஊர்வலக் கலவரங்களில் சில முறை சுந்தரமூர்த்திக்கும் சிங்காரம் அடங்கிய அவர் கூட்டாளிகளுக்கு தடியடி பலமாகவே விழுகிறது. கடைசியாக ஒரு முறை நடந்த அடி தடியில், துப்பாக்கிச் சூட்டில் சிங்காரம் உயிர் போகிறது. கஸ்தூரிக்கு கடைசியில் கிடைப்பது அவள் சிங்காரத்திடம் கேட்ட அவன் வார்த்துக் கொடுத்த அம்மன் சிலை தான். மற்றதெல்லாவற்றையும் கஸ்தூரி இழந்து நிற்கிறாள். இது எந்த போராட்டத்திலும் நிகழக்கூடிய ஒன்றா. இல்லை அதைச் சாக்கிட்டு சிங்காரத்தையும் அவன் கூட்டத்தையும் ஒழித்துக்கட்ட பின்னின்ற கலெக்டரும் ராஜாவும் செய்த சதியா,தெரியாது. எப்படியும் இருக்கக் கூடும். எந்த சதியும் இந்த ஊடாட்டத்தின் தோற்றம் கொள்ளும் தானே.
இந்தக் கதை இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு நீள்கிறது. ஆனால் தேவதாசி மரபு, கலைகளுக்கு ஆதரவு, மனித மனத்தின் ஊசலாட்டங்கள், சமூக மாற்றங்கள். லட்சியத்துக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளிகள் எல்லாம் ஒரு மதிப்புகளின் நிலை நாட்டலும் சரிவுமாக, கால மாற்றத்தின் விளைவுகள் என இர்ண்டு தலைமுறை வரை தான் நீடிக்கும். பின் வரும் தலைமுறைகளில் இவை எல்லாமே குணமாற்றம் கொண்டு போராட்ட முரண்களும் வேறு தளங்களுக்கு மாறி விடும். அப்படித்தான் இக்கதையின் பின் வரும் தலைமுறைகளிலும் மாற்றம் பெற்று விடுகிறது. நாம் இங்கு கஸ்தூரி, லக்ஷ்மி என்ற இரு வேறு மதிப்புகளின் வாழ்க்கைப் பார்வைகளின் முரண் பின்னர் இல்லாது போகிறது. நாம் அறிந்த பின் தலை முறைகளில், அறிந்த தலைமுறைகளில் அந்த போராட்டமும் முரணும் சரிந்த வாழ்க்கை மதிப்புகள், பார்வைகளினிடையே நிகழ்பவை.
பின் குறிப்பாக சில வார்த்தைகள் சொல்லலாமோ என்று தோன்றுகிறது.
முத்து லட்சுமி ரெட்டியின் தேவதாசிச் சட்டம் கொண்ரப்பட்டு அதனால் எழுந்த புயல் வீசி ஓய்ந்து ஒரு தலைமுறை கழிந்த பிறகு, தில்லியில் நடந்த Youth Festival – ல் இது நடந்தது 1954-ல், யாரோ ஒரு பெண், பிரியம் வதா மொஹந்தி என்று பெயர் சொல்லிக்கொண்டு, ஒரிஸ்ஸாவிலிருந்து வந்தவள் ஒரு நடனம் ஆட அது ஒரிஸ்ஸாவின் பாரம்பரிய நடனம் என்று ஹங்கரியிலிருந்து வந்த டாக்டர் சார்ல்ஸ் ஃபாப்ரி என்னும் கலை விமர்சகர் அவர் தில்லி பத்திரிகைகளில் எழுதி வந்தவர் சொன்ன பிறகு திடீரென ஒரு விழிப்பு உணர்ச்சி எழுந்தது. அதன் பிறகு தான் இந்திராணி ரஹ்மான், சோனால் மான்சிங், கும் கும் மொஹந்தி சம்யுக்தா பாணிக்ரஹி போன்ற பெரிய ஒடிஸ்ஸி நடன மணிகளும், எண்ணற்ற ஒடிஸ்ஸி நடன ஆசிரியர்களும் இந்தியா முழுதும் தெரியவந்தார்கள். நம் ஊர் தேவதாசிகள் போல ஒடியா கோவில்களில் மஹரி என்னும் தேவதாசிகள் நடனமாடும் பாரம்பரியம் உண்டு. அவர்கள் சிவன் கோயில்களில் ஆடுவார்கள். வைஷ்ணவ கோயில்களில் பெண்கள் நடன மாட அனுமதிப்பதில்லை. சிறு பையன்கள் நடனம் பயிற்றுவிக்கப்பட்டு ஆடும் பாரம்பரியம் உண்டு. அவர்கள் கோடிபுவா எனப்படுவார்கள். இந்த கோடிபுவாக்கள் தான் பின்னர் பெண்களுக்கு நடனம் பயிற்றுவிக்கும் உலகப் புகழ் பெற்ற நடன ஆசிரியர்களானார்கள். பங்கஞ் சரண் தாஸ், கேலு சரண் மஹாபாத்ரா தேப ப்ரதா தாஸ் போன்ற எண்ணற்ற பெருந்தலைகள் நடன உலகில் உலவத் தொடங்கினார்கள். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் கருத்து மாறு மிகக் கொண்டவர்களும் உண்டு, எனினும், இவர்கள் அனைவரும் தம் சிஷ்யைகளுடன் தில்லியில் 1985-ல் ஒரு பெரும் ஒரிஸ்ஸி நடன விழாவை நடத்திக் கொண்டாடினர். இது மாதிரி நம் பரத நடன மணிகள், ஆசிரியர்கள் ஒன்று கூடுவார்களா என்று நான் அப்போது யோசித்தேன். இந்த விழா முழுதையும் கமானி அரங்கத்தில் பார்த்த என்னிடம் அந்த விழா மலர் என்னிடம் உண்டு.
அதுவும் போகட்டும். ஒடிஸ்ஸி நடனத்தில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மஹரி விருதுகள் வழங்கப் படுகின்றன. இது கிட்டத் தட்ட தேவதாசி என்ற சொல் கலை உச்சத்தைத் தொட்டவர்களுக்கு அளிக்கப்படும் விருதாவதற்கு ஒப்பாகும். தேவடியாள் என்பது ஒரு அர்த்தமற்ற வசைச் சொல்லாகியுள்ளது நம்மிடையே. ஒடிஸ்ஸியில் உன்னத தேர்ச்சி அடைந்தவர்களுக்கு சம்யுக்தா பாணிக்ரஹி விருதுகள் வழங்குவதும் சம்யுக்தா பாணிக்ரஹி என்னும் நடன கலைஞர் மறைவிற்குப் பின் தொடங்கப்படுள்ளது.
வெங்கட் சாமிநாதன்/10.4.2014
____________
விட்டு விடுதலையாகி: (நாவல்) வாஸந்தி: கவிதா வெளியீடு: மாசிலாமணி தெரு; பாண்டி பஜார், தி,நகர் சென்னை 17
பக்: 408: விலை ரூ 200
- மனிதர்களின் உருவாக்கம்
- ஆரண்யகாண்டம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 74 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 என்னைக் கவர்ந்த புதியவன் நீயா ?
- ”மென்மையானகுரலோடு உக்கிரமானசமர்” -நா. விச்வநாதன்
- மாணவர்களுக்கு மொழிப் பயிற்சியும் துறைசார்ந்த அறிவும்
- கடற்புயல் நாட்கள்
- 2014 ஏப்ரலில் பூதச் செர்ன் அணு உடைப்பு யந்திர விஞ்ஞானிகள் புதிய அணுக்கருத் துகள் ஒன்று கண்டுபிடிப்பு
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 3
- காணாமல் போன கவிதைகள் (கவிதை தொகுப்பு) நெப்போலியன். விமர்சனம் – இமையம்.
- எங்கெங்கும்
- தினம் என் பயணங்கள் -16 என் கனவுகள்
- தாரிணி பதிப்பகம் மற்றும் ஹார்ட் பீட் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி
- பிரசாதம்
- நீங்காத நினைவுகள் 45
- துளிவெள்ளக்குமிழ்கள்
- பயணச்சுவை ! வில்லவன் கோதை 5 . மின்வாரியத்தின் முத்துக்கள் !
- அத்தியாயம்…6 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும்
- வேட்பு மனுவில் தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்.
- தொடுவானம்
- வாஸந்தியின் நாவல் “விட்டு விடுதலையாகி”
- தாஜ்மஹால் டு பிருந்தாவன்
- நிலம்நீர்விளைச்சல்
- இலக்கிய நிகழ்வு சுஜாதா விருது விழா
- திரைவிமர்சனம் போங்கடிநீங்களும்உங்ககாதலும்
- தீபாவளிக்கான டிவி புரோகிராம்
- நரை வெளி
- கண்ணகியும் , காங்கேயம் கல்லும்: இரா. முருகவேளின் “ மிளிர்கல் “ நாவல்
- சீன காதல் கதைகள் 2. இடையனும் நெசவுக்கன்னியும்
- திரைப்படங்களில் அனிமேஷன் தொழிற்நுட்பம்:ஒரு பார்வை
- ‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை
- யாருமற்ற சொல் – கவிஞர் யாழன் ஆதி
- திண்ணையின் இலக்கியத் தடம்-34
- வாழ்க்கை ஒரு வானவில் அத்யாயம் 2