நரை வெளி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 33 in the series 12 மே 2014

இன்பா
(சிங்கப்பூர்)

வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணி, வெயில் நான் போக மாட்டேனென்று முறைத்துக்கொண்டு அடம்பிடித்து நிற்க, சையது ஆல்வி ரோடு நெடுகிலும் மக்கள் குறுக்கும் நெடுக்குமாக அலைந்துகொண்டிருந்தனர். சாலையில் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது. 24 மணி நேரம் முஸ்தபா சென்டர் அந்த மிக பிரமாண்ட ஷாப்பிங் மால் திறந்திருந்தாலும் நான் எப்போது போனாலும் கூட்டமாகத் தான் இருக்கிறது என்று ஒருசிலர் முனகிக்கொண்டே போக, பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நான் எரிச்சலாய், கூட்டம் இல்லாத நேரத்தில நீங்க வர வேண்டியதுதானே என மனதுக்குள் முனங்கியபடியே கடைக்குள் சென்றேன்.

என்ன பொருள் இல்லை இங்கே. ஏன் போக வேண்டும் அடுத்த கடைக்கு என்று முனங்கிய படியே ஒவ்வொரு மாடியாக ஏறிக்கொண்டே வந்தேன். ஓரிரண்டு பொருட்கள் தான் தேவை வாங்கிவிட்டு உடனே சென்று விடலாம் என்று வந்தாலும் அத்தனை மாடியிலும் ஏறியிறங்காமல் திரும்பிப்போக மனசு வரவில்லை. வீட்டு்க்குப்போகும் போதுப் பார்த்தால் கை நிறைய பைகளோடு தான் செல்லவேண்டியிருக்கிறது.

பிள்ளைகளுக்கு புதுத்துணி வாங்கலாம் என்று நினைத்து கீழ்மாடியில் இறங்கிப் பார்த்துக்கொண்டே வர, எதுக்குத்தான் இப்படி கொண்டு வந்து பொருட்களைக் குவித்து வைக்கிறார்களோ … சே என்றாகிவிடுகிறது எந்தத் துணியாவது எடுத்துப்பார்க்க வசதியாக இருக்கிறதா? எட்டு மாதக்கர்ப்பிணி வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு ஒரு லிட்டர் தண்ணீர் குடித்ததுபோல் ஒவ்வொரு ஹேங்கரிலும் துணிகள் முட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கிறது. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பினால் கையிடித்து சில, கைப்பை இடித்து சில என பொருட்கள் கீழே விழுந்துக்கொண்டே இருக்க நானும் பொறுக்கி வைத்துக்கொண்டே செல்கிறேன்.

ஒருவழியாகத் தேடிப்பிடித்து துணிகளை வாங்கிக்கொண்டு இரண்டாவது மாடியில் மளிகைப் பொருட்களை வாங்க ஏறினேன். அந்த மாடி முழுக்க பரந்து விரிந்து கிடக்கும் மளிகை சாமான்களைத் தேடிப்பிடித்து எடுத்துக்கொண்டு அதோடு சேர்த்து காய்கறிகளையும் வாங்கித் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வெளியில் வந்து டாக்ஸி பிடித்துச் சென்று வீட்டுக்குப்போய் விடலாம் என்றெண்ணி நடந்துச் சென்றேன்.

சிவப்பு விளக்கோடு வரும் டாக்ஸிகளைப் பார்த்து சிறிது எரிச்சல் வர, பச்சை விளக்குகளோடு வரும் ஒரு சில வண்டிகள் ‘’ஆன் கால்’’ என்று வர பொறுமையிழந்து கையை நீட்டி நீட்டி டாக்ஸியை நிறுத்திக்கொண்டே நின்றேன், அந்தப்பக்கம் ஜூரங் ஈஸ்ட் என்ற பெயர் பலகையோடு வரும் வண்டியை நிறுத்தி, புக்கிட்பாத்தோக் போகுமா ? எனக் கேட்க, சைகையாலேயே கையைக்காட்டி ஏறு என்று சொல்லியவுடன் பைகளைத் தூக்கி பின் சீட்டில் வைக்கப்போக ,

ப்ளீஸ் புட் இட் இன் த டிக்கி என்று ஓட்டுநர் சொல்ல, இவ்வளவு நேரம் காத்திருந்த எரிச்சலில் பின்னால் கொண்டுபோய் எல்லாவற்றையும் போட்டுவிட்டு கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு முன் சீட்டில் உட்கார்ந்து பெல்டைப் போட்டபடியே புக்கிட்பாத்தாக் புளோக் 124 என்று சொன்னேன்.

அவர் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது.. நான் 118ல் தான் இருக்கிறேன் என்றார். கிட்டத்தட்ட நெய்பர் என்று சொன்னவுடன் ஐ சீ …. கொஞ்சம் சிரிப்பு வந்தது.

பைகளைப் பின்னால் வைக்கச் சொன்னதற்கு மன்னிக்கவும் நிறைய பேர் அசைவப் பொருட்களை சீட்டில் வைத்துவிடுகின்றனர் அதிலிருந்து தண்ணீர் பட்டு பின் சீட் நாற்றமெடுக்கிறது… அடுத்து வரும் கஸ்டமர்க்கு இடைஞ்சலாக இருக்கும் அதனால் தான் சொன்னேன் கோபித்துக் கொள்ளாதே என தன்மையாக அவர் சொன்னதைப் பார்த்து, நீ்ங்கள் சொல்வது சரி, சிலர் அந்த மாதிரியும் செய்கிறார்கள் டோன்ட் வொரி எனக்கு எந்த வருத்தமுமில்லை என்று சொல்லி எனக்கிருந்த கோபத்தை மறைத்துக் கொண்டேன்.

அவரோடு சகஜ நிலைக்கு பேச்சை மாற்ற எண்ணி, எத்தனை வருடமாக வண்டி ஓட்டுகிறீர்கள் அங்கிள், என்று கேட்க,

நான் 30 வருடமாக வண்டி ஓட்டுகிறேன். 65 வயதாகிறது, நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். காலையில் எழுந்தால் கடன் கட்டவேண்டுமென்ற கவலையில்லை படுக்கும் போது பசியின்றி படுக்கிறேன். நிம்மதியான உறக்கத்திற்கு வறுமையில்லை. ஒரு பையன் திருமணமாகி வீடு வாங்கி தனியாக வசிக்கிறான். மனைவியோடு அமைதியான வாழ்க்கை வாழ்கிறேன், என்று நாலே வரிகளில் தன் வாழ்க்கையை ரெத்தினச் சுருக்கமாய் சொல்லி விட

கடனோடு காலையில் எழுவதைவிட, பட்டினியோடு இரவில் படுப்பது மேல் என்று பெரியார் சொன்னதாக பேஸ்புக்கில் படித்தது ஏனோ நினைவுக்கு வந்தது.

இருந்தாலும் அவர் பேச்சு எதார்த்தமாய் இருக்கவே தைரியமாக பேச்சுக் கொடுத்தேன். அவர் மலாய் இனத்தைச் சேர்ந்தவர். பார்க்க மெலிந்த உருவம், மற்றவரிடம் பக்குவமாக பேசத்தெரிந்தவராக இருக்கவேண்டும். பேச்சில் உற்சாகம், மலர்ந்த முகம், செம்பட்டை மை அடித்த தலை முடியோடு நல்ல தெளிவான ஆங்கிலம் பேசுகிறார்.

நான் மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறேன் என்று சொல்வதற்கே ஒரு பெரிய மனசு வேண்டும். கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கு. இன்றைக்கு வெகுநேரம் வண்டி ஓட்டறிங்க உங்கள் மனைவி காத்துக்கொண்டிருப்பார்களே…

ஆமாம்மா. நான் போற வரைக்கும் கண் விழிச்சிட்டிருப்பா. சிலநேரம் எனக்கு சாப்பாடு செய்து வச்சிருப்பா… இப்பல்லாம் வெளியில சாப்பிட்டுக்கறேன்னு சொல்லிடறேன்.

ஏன், நீங்க சீக்கிரமே வேலைய முடிச்சிட்டு வீட்டுக்குப்போயிடலாமே… வயசான காலத்தில ஏன் இவ்வளவு நேரம் வண்டி ஓட்டறிங்க? என்றேன்.

இப்பல்லாம் மாலை நேரங்களில் டாக்ஸி கிடைக்கிறதில்லை நிறைய கம்ப்ளைன்ட் பண்றாங்க, நான் ரோடுல போன ஒரு நாலஞ்சி பேருக்கு டாக்ஸி கிடைக்கும் உதவியா இருக்கும். வீட்டுல போயும் சும்மாதான இருக்க போறேன். ஏதோ என்னால் முடிந்தது, தெம்பு இருக்கிற வரை ஓட்டறேன்.

நீங்க எடுக்கலன்னா அடுத்த டாக்ஸி வந்து எடுத்துக்காதா என்ன.. நான் ஏதோ புத்திசாலித்தனமாய் கேட்பதாய் நினைக்க

அடுத்த டாக்ஸி அடுத்த நாலு பேரை எடுக்கலாம் தானே என்று சொல்ல எனக்கோ சுருக்கென்றது. நல்ல எண்ணம் தான்.

என்னா ஒன்னு, என் மனைவி உடம்புக்கு முடியாம இருக்கா. என் மேல அளவுக்கதிகமான பிரியம் அவளுக்கு. நாங்க இரண்டுபேரும் 40 ஆண்டுகளாக குடும்பம் நடத்தறோம் எந்த வித மனச் சங்கடமும் வந்தில்லை. என் பையன் பிறந்தபின் வேலைக்கு போகக்கூடாதுன்னு சொல்லிட்டேன். தாய் இருந்து பிள்ளையை பார்த்துக்கொள்வது போல் வேறு யாரும் பார்த்துக்கொள்ள முடியாது.. அதனால வேண்டான்னு சொல்லிட்டேன்.

உனக்கு எத்தனைப் பிள்ளைகள் ? பேச்சு என் பக்கம் திரும்பியது.

இரண்டு குழந்தைகள் என்க, வேலைக்கு போறியா ? என்றார்.

ஆமாம் வேலைக்குச் செல்வதால் வீட்டு வேலைக்கு உதவி செய்ய பணிப்பெண் இருக்கிறார் என்றேன்.

ஏன் ‘’பார்ட் டைம்’’ வேலை செய்துவிட்டு பிள்ளைகளை நீங்களே பார்த்துக்கொள்ளலாமே? என்க

எங்க அங்கிள் … என்னோட வேலைக்கெல்லாம் பார்ட் டைம் கிடைக்காது.

எல்லாத்துக்கும் நாம தான் காரணம்… கிடைக்காது என்று சொல்லி அந்த வாய்ப்பைத் தேடாமலே தட்டிக்கழிக்கிற… மைன்ட் அங்கேயே பிளாக் ஆகிடுது. ஏன் வீட்டிலிருந்து செய்யக்கூடிய வேலையா தேடிக்கலாம் இல்லைனா சொந்தமா என்ன செய்யலான்னும் வழிமுறைய யோசிக்கனும். வொர்க் முக்கியம் குழந்தை அதைவிட முக்கியம், என் மருமக ‘’ஐ.டி லைன்’’ தான், குழந்தையைப் பார்த்துக்கொண்டே வீட்லர்ந்து தான் வேலை செய்யிது ‘’வொர்க் லைப் பேலன்ஸ்’’ செய்யனும்னு நினைச்சா எதையும் செய்யலாமென்று சொல்ல, ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் எல்லா வேலைக்கும் ஒத்து வராது அங்கிள் என்று சும்மா சொல்லி வைத்தேன்.

அதுக்கில்லை.. குழந்தைங்களுக்கு இப்பல்லாம் எதுவும் சொல்லித்தரதில்லை, நேரமில்லைன்னு சொல்லி தட்டிக்கழிக்கிறோம். பணிப்பெண்ணோடு இருக்கும் குழந்தையைவிட தாயோடு இருக்கும் குழந்தை பாதுகாப்பாக உணரும்.. ஒரு குழந்தைய பெத்துக்கறாங்க அதுக்கு விட்டுக்கொடுக்க தெரியல அட்ஜஸ்ட்மெண்ட்ன்னா என்னான்னு கேட்குதுங்க. பகிர்தல் இல்லை மற்றவர்க்கு கொடுக்கும் மனப்பான்மை இருக்க மாட்டேங்குது இந்தப் பிள்ளைகள் தான் பின்னாளில் பெத்தவங்கள முதியோர் இல்லத்தில விட்டு்ட்டு பார்க்கப் போற நேரம் கூட வேஸ்ட்ன்னு நினைக்கிறாங்க.

என்னோட அம்மா ஒரு பத்து பிளாக் தள்ளிதான் இருக்காங்க அப்பா இல்லை. வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை என்னவானாலும் நான் வண்டி ஓட்டுவதில்லை காலையிலயே என் பையன் குடும்பத்தோட என் வீட்டுக்கு வந்திடுவான். என்னோட மனைவி ஆசை ஆசையாய் மதிய உணவு சமைத்து பரிமாறுவாள். பின் மாலை எல்லோரும் கிளம்பி என் அம்மா வீட்டுக்குப்போவோம். இரவு உணவு அம்மா வீட்டில் சாப்பிட்டுவிட்டு பையனைக் கொண்டுபோய் அவன் வீட்டில் விட்டு நாங்கள் திரும்புவோம். அந்த ஒரு நாள் மட்டும் எங்களுக்கு மகிழ்ச்சி, கொண்டாட்டம் அடுத்த வாரம் எப்போது வருமென்று காத்திருக்கும் சுகமே தனி தான் என்றார்…

எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது நீ்ங்கள் சொல்வதைக்கேட்டால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கெல்லாம் கொடுத்துவைக்கவில்லை என்றேன்.

ஆனால் எனக்கு ஒரேயொரு பயம் மட்டும் இருந்துகொண்டே இருக்கிறது என்றார்.

அது என்ன அங்கிள்?

உலகத்தில் பிறந்த எல்லாருக்கும் மரணம் வரும் என்பது உண்மை, ஆனால் எப்படி வரும் என்பதில் தான் எனக்குக் கவலை.. என்ன மாதிரி கஷ்டம் என்ன நோய் எப்ப வரும்னு தெரியல. ப்ராசஸ் ஆப் டையிங் தான் எனக்கிருக்கும் ஒரே கவலை. நான் முன்னாடி இறந்துட்டா என் மனைவி, நான் இல்லாம எப்படியிருப்பாள்னு நினைச்சாலே நடுங்குது. அவ போய்ட்டா நான் இல்லை. அதை எப்படி எதிர்கொள்ளப்போறேன்னு புரியல. ஆண்டவன் அருள் புரிவான்னு நம்பிக்கையில தான் இருக்கிறேன் என்றார்.

கவலைப்படாதிங்க அங்கிள் உங்களுக்கு எதுவும் ஆகாது எல்லாமே சரியா நடக்கும். “காட் ஈஸ் தேர். பி ஹப்பி.. ஸ்மைல் ஆல்வேஸ் அங்கிள்” என்று சொல்லி முடிக்கவும் பிளாக் வந்துவிட்டது.

எந்தப்பக்கம் உள்ள லிப்ட் போகனும், அங்கயே டிராப் பண்றேன் என்று கேட்க, பரவாயில்லை இங்கேயே இறக்கிவிடுங்கள் அங்கிள் , உங்கள் மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் மனைவியை பார்த்துக்கொள்ளுங்கள் அங்கிள் என்று சொல்லிக்கொண்டே காசு கொடுத்துவிட்டு இறங்கி வண்டி எண்ணை மனப்பாடம் செய்தபடியே எல்லா பைகளையும் தூக்கிக் கொண்டு பை பை அங்கிள் டேக் கேர் என்று விடைபெற்றுக் கொண்டு,

இரவு 11 மணியை நெருங்கிவிட்டது என்று புலம்பிக்கொண்டே லிப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். லிப்ட் உள்ளே நுழையப்போகுமுன்

பின்னாலேயே வந்தவர், “ஹாய் கேர்ள் ஒன்னு சொன்னா தப்பா நினைக்காத.. உன் பிள்ளைகளுக்கு பெத்தவங்கள எப்படி பார்த்துக்கனும்னு சொல்லிக்கொடு, உங்க அம்மா அப்பாவ பார்த்துக்க… சீ யூ வென் ஐ சீ யூ அகெய்ன் “என்று சொல்லிவிட்டு கையாட்டிவிட்டுச் சென்றார். நான் பதில் சொல்வதற்குள் லிப்ட் மூடிக்கொள்ள ஆச்சர்யமாக பார்த்து கையைமட்டும் ஆட்டிவிட்டுச் சென்றேன்.

அன்று இரவு முழுவதும் அவரின் நினைவாக இருக்க என்ன ஒரு வித்தியாசமான மனிதரை இன்று நான் சந்தித்தேன். முன் பின் தெரியாத ஒரு பயணியிடம் மனந்திறந்து பேசிய அவரை மிகப்பெருமையாக வீட்டிலிருந்தவர்களிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனேன்.

அடுத்த நாள் காலை வெளியில் செல்லும் போது மனசு தானாகவே கார் பார்க்கில் நின்று கொண்டிருந்த டாக்ஸிகளில் நேற்றிரவு வந்த டாக்ஸி நம்பரைத் தேடியது. எங்காவது எதேச்சையாய் பார்த்தால் தான் உண்டு, போன் நம்பராவது வாங்கியிருக்கலாம். சரி போகட்டும் நம்ம ஏரியா தானே பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானப்படுத்தியபடியே சென்று விட்டேன்.

மாலை வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கையில், அந்த டாக்ஸி நம்பர் கண்ணில் பட்டுவிட மகிழ்ச்சியாக உள்ளே டிரைவர் இருக்கிறாரா ஒரு ஹாய் சொல்லிவிட்டுப் போகலாம் எனத் தேடினேன்.. ஆளைக் காணவில்லை, ஆனால் வண்டி மட்டும் அலங்காரம் செய்யபட்டிருந்தது. ஏதோ திருமண ஊர்வலத்திற்கு தயாராக இருக்கிறதோ என்றெண்ணி கண்கள் அலைபாய அவரைத்தேடிக் கொண்டே நடந்தேன்.

பக்கத்து பிளாக்கிலிருந்து ஒரு பாட்டியை கைத்தாங்களாக கூட்டிக்கொண்டு வந்து ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். கூட்டம் கூட்டமாக நின்று மக்கள் கூடிப் பேசிக்கொண்டிருக்க என்னவென்று அறியும் ஆவலில் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த இந்திய பெண்மணியிடம் நின்று விசாரிக்க ஆரம்பித்தேன்.

அந்தம்மாக்கு என்னாச்சு, என்றேன். மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க அதான் ஆம்புலன்ஸ் வந்திருக்கு என்று சுருக்கமாக சொல்ல. எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்களே என்னாச்சு என்றேன். அவருடைய கணவர் இறந்துவிட்டார் பாடி எடுக்கப்போறாங்க என்றவுடன் மனசுக்குள் சுருக்கென தைக்க அங்கேயே நின்றுவிட்டேன்…

பாடியை நான்கு பேர் தூக்கிக்கொண்டு வந்து அந்த டாக்ஸியில் வைக்க ஒரு நிமிடம் ஆடிப்போனேன். அவரு அந்த டாக்ஸி டிரைவரா என்றேன். ஆமாம் நேத்து வரை நல்லாதான் இருந்தாரு காலையில தூங்கி எழுந்திருக்கவேயில்லையாம் தூக்கத்திலேயே இறந்துட்டாராம். ஹார்ட் அட்டாக் போல. நல்ல சாவு. அவருக்கு அந்த டாக்ஸினா உயிர். நான் செத்தா என் டாக்ஸிலதான் கொண்டு போகனும்னு பையன்கிட்ட அடிக்கடி சொல்வாராம். அதான் அந்த டாக்ஸிலேயே எடுத்துட்டுப் போறாங்க என்று எந்த உணர்ச்சியுமில்லாமல் ஒரு செய்தியாகச் சொல்ல அதிர்ச்சியில் உறைந்தேன்.

இரவு 11 மணிக்கு அந்த டாக்ஸியில என்னை இறக்கிவிட்டுட்டு சந்தோசமாகத்தானே போனாரு… அவருக்கா இப்படி… மனசு முழுக்க சோகம் அப்பிக்கொள்ள என்ன வாழ்க்கையடா இது என்று கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ஒரு முறை தான் பார்த்தேன், அதுவும் 30 நிமிடங்களில் என்னைக் கவர்ந்தவருக்கு அடுத்த நாளே இப்படி ஒரு நிலைமையா அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அவர் கடைசியாக மனசு விட்டு பேசியது என்னிடம் தான் என்று நினைக்கிறேன், அதற்குபின் வேறு யாரிடமும் அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை. மனசு முழுக்க மகிழ்ச்சியோடு சென்றாரே அவருக்கா இப்படியாக வேண்டும். பாவம் அவர் மனைவி எப்படித் தாங்கிக்கொள்வார்.. எப்படிச் சாகப்போகிறோம் என்று பயந்துகொண்டிருந்தாரே அப்படிப் பார்க்கப்போனால் நல்ல சாவுதான்.

இந்த நரைவெளியில் தான் எத்தனை சாம்பல் நிற மனக் கஷ்டங்கள். எப்படி வாழ்ந்தால் நிம்மதி கிடைக்கும் என்ற இலக்கணம் தெரிந்து வாழ்ந்தவர். எனக்கென்னவே நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இரையென இவர் மாயவில்லை என்றே தோன்றியது.
டாக்ஸி அந்த தெருமுனையைத் தாண்டி நான் ‘’பை பை’’ சொன்ன அதேயிடத்தில் திரும்பிக்கொண்டிருக்க அவருடைய கடைசிப் பயணத்திற்கும் நான் ‘’பை பை’’ சொல்வது போல் தோன்ற, அந்த மரணத்தை மட்டும் மனசு ஏற்றுக்கொள்ள மறுத்தது.

– இன்பா
(சிங்கப்பூர்)

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *