ஜோதிர்லதா கிரிஜா
சேதுரத்தினம் பேருந்து பிடித்து முதலில் கடற்கரைக்குப் போனான். நாடாத்திரி விளக்கு வெளிச்சத்தில் ஒரு பையன் முறுக்கு, சுண்டல் ஆகியவற்றை விற்றுக்கொண்டிருந்தான். தன்னைச் சுற்றிலும் கமழ்ந்துகொண்டிருந்த வாசனைகள் மீண்டும் தன்னுள் பசியைத் தோற்றுவித்தாலும் வியப்பதற்கில்லை என்று மனத்துள் சொல்லிக்கொண்டான். அந்த வாசனைகள் ஓட்டலையும், புதிய பணியாள் ராமரத்தினத்தையும் அவனுக்கு நினைவூட்டின.
ராமரத்தினம்!
அவனைப் பற்றி நினைத்த போது, பெண்களினுடையவை போன்ற அவனின் கரிய, பெரிய விழிகளே அவன் கற்பனையில் தோன்றின. ஊர்மிளாவைப் பெண்பார்க்கப் போனபோது அவளுடைய அழகிய பெரிய விழிகளைக் கண்டு மயங்கித் தான் சரி சொன்னதும் அந்தக் கணத்தில் அவனுக்கு ஞாபகம் வந்தது. மனித உடலின் உறுப்புகளில் கண் எனும் உறுப்புக்குத் தான் அடிமையோ எனும் எண்ணமும் தோன்ற, அவன் தன்னுள் நகைத்துக்கொண்டான்.
“என்ன, சேது! பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிட்டு, ஹாய்யாக் காத்து வாங்குறதுக்கு பீச்சுக்கு வந்துட்டியாக்கும்!” எனும் இரைந்த குரல் பின் புறத்திலிருந்து வந்து அவனது கவனத்தைக் கலைத்தது. அவன் கழுத்தைத் திருப்பிப் பின்னால் பார்த்தான்.
நண்பன் ரங்கன்தான் காற்றில் படபடத்த வேட்டியைக் கையால் பற்றியபடி வந்துகொண்டிருந்தான்.
“வா, ரங்கா. உக்காரு.. நானாவது பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிட்டு இங்க வந்திருக்கேன். நீயோ அவங்களை வீட்டில விட்டுட்டு இங்க வந்துட்டே. நீ பெரிய தைரியசாலிதான்!”
ரங்கன் சிரித்துக்கொண்டே அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டான்.
“ஊர்லேர்ந்து நியூஸ் எதுவும் வரல்லையா இன்னும்?”
“இன்னும் வரல்லே, ரங்கா.”
“பொண்ணு வேணுமா, இல்லேன்னா பையனா?”
“எதுவா யிருந்தா என்னப்பா? ஊனமில்லாத குழந்தையாப் பொறந்தாலே போதும். என் ஒய்ஃப் ஆரோக்கியத்தோட இருக்கணும். எனக்கு வேண்டியதெல்லாம் அதுதான். பொண்ணு மட்டம், ஆம்பிளை ஒசத்திங்கிற அபிப்பிராய மெல்லாம் எனக்குக் கிடையாதுப்பா!.. அதுசரி. நீ மட்டும் தனியா வந்திருக்கே?”
அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல்,“ஆமாமா. பிரசவத்துக்கு அப்புறம் பொண்டாட்டி நார்மலாயிடணும். அதுதான் ரொம்ப முக்கியம்,” என்று கூறி ரங்கன் கண் சிமிட்ட, சேத்ரத்தினத்துள் இலேசாய் அருவருப்புப் பரவியது.
இருப்பினும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், சேதுரத்தினம், “அது சரி, நம்ம ஹெட் க்ளெர்க் எப்ப ஜாய்ன் பண்றாரு?” என்றான் பேச்சை மாற்றும் எண்ணத்துடன்.
“நாளைக்கு ஜாய்ன் பண்ணணும்…. ஏம்ப்பா பீச்சுக்கு வந்துட்டு ஹெட் க்ளெர்க், ஆஃபீஸ்னு பேசிட்டிருக்கே? இங்கேயும் ஆஃபீஸ் நெனப்புத்தானா? வேற ஏதாச்சும் பேசு…”
“அது சரி. ரொம்பப் பேரு ஆஃபீஸ்ல கூட ஆஃபீஸைப் பத்தின நெனப்பு இல்லாம இருக்காங்க! அப்படி இருக்கிறப்ப, பீச்சுக்கு வந்துட்டு ஆஃபீஸைப் பத்திப் பேசுறது அசட்டுத்தனந்தான். ஒத்துக்கறேம்ப்பா!”
கழப்பாளித்தனத்துக்குப் பேர் போன ரங்கன் சேதுரத்தினத்தின் இடக்குப் பேச்சைப் புரிந்துகொண்டதாகவோ, அதனால் பாதிக்கப்பட்டதாகவோ காட்டிக்கொள்ளவில்லை.
“எதுவாயிருந்தா என்னப்பான்னு லேசாச் சொல்லிட்டே. சும்மா ஒப்புக்குத்தான் சொல்றேன்னு தோண்றது எனக்கு. பொதுவா நமக்கெல்லாம் பொண்ணு வேணும்கிற ஆசை இருக்கும். அவங்களுக்குப் பையன் வேணும்கிற ஆசை இருக்குமாமே! அதுக்குக் கூட செக்ஸ் அடிப்படையிலான விருப்பம்தான் காரணம்னு சொல்றாங்களே. நான் ஒரு கட்டுரையில படிச்சேன்.”
‘இவன் ஆஃபீஸ் சம்பந்தப்பட்ட வால்யூம்ஸ், ரூல்ஸ் தவிர மத்த எல்லாத்தையும் படிச்சுடுவான் பொல இருக்கு!’
“இருக்கலாம், இல்லாமயும் இருக்கலாம். இவனுகளுக் கெல்லாம் வேற வேலை கிடையாது. இன்னைக்கு ஒண்ணு கண்டு பிடிப்பானுக. நாளைக்கே அதுக்கு மாறான இன்னொண்ணைப் புதுசாக் கண்டுபிடிச்சுட்டு, அதுக்கு முந்தின கண்டுபிடிப்புத் தப்புன்னுவானுக. எல்லாத்தையும் தெரிஞ்சுண்டு நாம என்ன செய்யப்போறோம்? விடு. அது இருக்கட்டும், அவங்களை வீட்டில் விட்டுட்டு நீ மட்டும் வந்திருக்கியேன்னு கேட்டேனே?”
“….என்னத்தைச் சொல்ல! எனக்கும் அவளுக்கும் எல்லாத்துலேயும் வித்தியாசமான போக்குப்பா. எனக்கும் அவளுக்கும் அவ்வளவா ஒத்துப் போறதில்லே. எந்த ஒண்ணுக்கும் வாக்குவாதம், சண்டை. வீட்டில போட்ற சண்டை பத்தாதுன்னு பீச்ல் வேற வந்து உக்காந்துட்டு ரெண்டு பேரும் சண்டை போடணுமா! அதான்! நான் பீச்சுக்கு வர்றதே அவளுக்குத் தெரியாது. பெரும்பாலும் ஆஃபீஸ்ல வேலை அதிகம்னுதான் புளுகிடுவேன்.”
”ரங்கா! ஒண்ணு சொல்றேன், தயவு செஞ்சு கேட்டுக்கோ. ரெண்டு பேருக்கும் பரஸ்பரம் அன்பு இருக்கணும்கிறதுதான் முக்கியம். அது இருந்தா, வாக்குவாதம், அபிப்பிராய பேதம், ருசி பேதம் இதெல்லாம் பெரிசாவே தெரியாதுப்பா. உன் வழியிலதான் அவங்களும் யோசிக்கணும், நீ சொல்ற எல்லாத்தோடவும் அவங்க ஒத்துப்போகணும்னெல்லாம் நீ ஏன் நினைக்கிறே?”
“அவ வழியிலதான் நான் யோசிக்கணும், அவ சொல்ற எல்லாத்தோடவும் நான் ஒத்துப்போகணும்னெல்லாம் அவ பிடிவாதம் பிடிக்கிறதுனாலதாம்ப்பா!”
”ரெண்டு பேரும் காலமெல்லாம் இப்படிப் பிடிவாதம் பிடிச்சுண்டு இருந்தா விமோசனமே கிடையாதுப்பா. யாராவது ஒருத்தர் கொஞ்சம் விட்டுக்குடுத்துத்தான் போகணும்!”
“பிரச்சனையே அது யாருங்கிறதுதான், சேது!”
“ஒண்ணு சொல்லட்டுமா? முதல்ல யாரு விட்டுக்குடுக்கிறாங்களோ, அவங்களுக்குத்தான் முழுப் பெருமையும். அப்படி நீ விட்டுக் குடுக்கறேன்னு வெச்சுக்க, உன்னோட பெருந்தன்மை அவங்களை யோசிக்க வைக்கும், வெக்கப்படவும் வெச்சுடும். அதுக்கு அப்பால பாரு. அவங்களும் தானாவே விட்டுக் குடுக்கத் தொடங்கிடுவாங்க. எந்த உறவாகட்டும், அது சிக்கல் இல்லாம தொடரணும்னா, அதுக்கு அடிப்படையே இந்த விட்டுக்குடுக்கிற குணம்தான்!”
ரங்கா சிரித்தான். “உனக்கு என் ஒய்ஃபைத் தெரியாதுப்பா, சேது. அதான் எனக்கு இப்படி உபதேசம் பண்றே. அர்ரகன்ஸ்னா அர்ரகன்ஸ், அப்படி ஒரு அர்ரகன்ஸ்!”
“நீ ‘ர்’ஐ இந்த அளவுக்கு அழுத்தி உச்சரிக்கிறதுலேர்ந்தே தெரியுதுப்பா, அவங்களுக்கு நிறையவே அர்ரகன்ஸ்னு. இருந்தாலும், ரெண்டு மூணு சான்ஸ் குடுத்துப் பாரேன். காலப்போக்கில சேர்த்து வெச்சு மொத்தமாப் பலன் கிடைக்கும்.”
சில நொடிகள் மவுனத்தில் கடந்த பிறகு, “என்னால அவளைப் புரிஞ்சுக்கவே முடியலைப்பா. தாலிகட்டின புருஷன்கிற மரியாதை அவ கிட்ட கொஞ்சங்கூட இல்லே. எங்கம்மா எவ்வளவு பயபக்தியோட எங்கப்பா கிட்ட நடந்துப்பாங்க, தெரியுமா?…” என்ற ரங்கன் பெரிதாக நெட்டுயிர்த்தான்.
“அது இருக்கட்டும். உங்கப்பா நியாயமானவர்தானா? உங்க அம்மாவை அவர் எப்படி நடத்தினார்? சொல்லலாம்னா சொல்லு.”
ரங்கன் சற்றே திகைத்த பின்னர், “எங்கப்பாவை அவ்வளவு நியாயமானவர்னு சொல்ல முடியாது. ரொமபக் கோபக்காரர். எடுத்ததுக் கெல்லாம் அம் மாவைத் திட்டுவார். அப்பாவுக்கு முன்னால எங்கம்மா உக்காந்தே நான் பார்த்தது கிடையாது. அவ்வளவு மரியாதை. பயந்த சுபாவம். ஆனா, நான் எங்கப்பா மாதிரி முரட்டு ஆள் இல்லே. எங்கப்பா எங்கம்மாவைக் கொடுமைப்படுத்தினதுண்டு. ஆனா, நான் அப்படிப்பட்ட ஆள் இல்லையே! என்கிட்ட அவளுக்குப் பயம் வேண்டாம். துளியாவது மரியாதை இருக்கணுமில்லே? சொல்லு, சேது.”
சேதுரத்தினத்துக்குச் சிரிப்பு வந்தது. “நான் சொலறதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்ப நான் கேக்குற கேள்விக்கு நீ பதில் சொல்லு.”
“கேளு.”
”இப்ப நீ என்ன சொல்றே? உங்கம்மா உங்கப்பா கிட்ட பயந்து நடுங்கின மாதிரி உன் பொண்டாட்டி உங்கிட்ட பயப்பட்றதில்லேன்றே. அதானே?”
“நிச்சயமா.”
“அது எந்தக் காலம், இது எந்தக் காலம்? அதைப் பத்தி யோசிக்க வேண்டாமா? என்னப்பா இது? சுத்தப் புரியாதவனா இருக்கியே! தவிர, உன் ஒய்ஃப் எந்தச் சூழ்நிலையில வளர்ந்தவங்களோ! ஒரு ஆளோட நடத்தையை உருவாக்குறதே அவனோட சூழ்நிலைதானேப்பா? உன் ஒய்ஃபோட அம்மாவும் அப்பாவும் வேற மாதிரியானவங்களா இருந்திருக்கலாம். அவங்கப்பா ஒரு தொடைநடுங்கின்னே வச்சுக்க, அவரு மாதிரி நீ இல்லியேன்னு ஒரு நெனைப்பு அவங்களுக்கு வருமில்லே – உங்கம்மா மாதிரி அவங்க இல்லையேன்ற நினைப்பு உனக்கு வர்ற மாதிரி? .. எது எப்படி இருந்தாலும், பொறுமை வேணும்ப்பா. அது ஒரு நாள் நம்மளைக் காப்பாத்தும்.”
“அப்ப நீ என்னைப் பொறுமையா இருன்றே?”
“ரொம்பவும் பொறுமாயா இல்லாட்டாலும், கொஞ்சமாவது விட்டுக்குடுத்துப் போயேன்னு சொல்றேன். அவ்வளவுதான்.”
“கல்யாணம் ஆன புதுசுல ரொம்பவே விட்டுக்குடுத்துட்டதாலதான், இப்ப அவ என் தலைக்கு மேலயே ஏறி உக்காந்துடடா!”
“கல்யாணமான புதுசுல விட்டுக்குடுக்கிறதுன்றது உனக்கு மட்டும் பிரத்தியேகமான விஷயமில்லே, ரங்கா! எல்லாருமே அப்படித்தான்! அப்படிப் பார்த்தா, புது மனைவியும் ஆரம்பத்துல விட்டுக்குடுக்கிறாதானே?”
“என்னோட ஒய்ஃப் அந்த ரகம் இல்லே,சேது.”
”அப்ப உனக்கு என்ன சொல்றதுன்னே எனக்குத் தெரியல்லே.”
“ஒரு உதாரணம் சொல்றேன், கேளு. எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லேனு லெட்டர் வருதுன்னு வெச்சுக்க, நான் மருந்து வாங்க அவங்களுக்குப் பணம் அனுப்பக் கூடாது! ஆனா அவங்க வீட்டு ஆளுங்களுக்கு ஏதாவது சிக்கல்னா நான் அவங்களுக்குப் பணம் அனுப்பணும்! எப்படிப்பட்ட பொண்ணு பாரு அது. ஆம்பளைங்கதான் அப்படி நியாயமில்லாம நடந்துப்பாங்க – நான் கேள்விப்பட்ட வரையில. என்னமோ பெரிசா எனக்கு உபதேசம் பண்றே!”
சேதுரத்தினத்துக்கு வாய் அடைத்துப் போனது.
“என்ன பதிலையே காணோம்?”
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல்லே, ரங்கா!”
“இப்ப புரிஞ்சுக்கிட்டியா, என்னோட நெலைமையை? இப்படிப்பட்ட மனைவியோட குடும்பம் நடத்துறது சுலபந்தானா? நீயே சொல்லு. மனைவி ஏறுமாறா அமைஞ்சா கணவன் பாடு அம்பேல்தான்.”
“கணவன் ஏறுமாறா அமைஞ்சா மட்டும் பரவாயில்லையா! பல குடும்பங்கள்லே கணவன் தான் சரியா இருக்கிறதில்லே. அதுவும் தொல்லைதானே?”
“பொதுவாப் பேசுறதை விட்டுட்டு, அவளை வழிக்குக் கொண்டுவர்றதுக்கு உருப்படியா ஏதாவது யோசனை சொல்லுப்பா.”
“விட்டுக்குடுக்கிறதுங்கிறதை நீயே முதல்ல தொடங்கு. கொஞ்ச நாள் பல்லைக் கடிச்சுண்டு விடாம தொடர்ந்து பொறுமை காட்டிப் பாரு…காலப் போக்குல வழிக்கு வந்துடுவாங்க.”
“அடப் போடா! அவங்க ஒரு நாளும் வழிக்கு வரமாட்டாங்க. இன்னமும் சட்டமா என் தோள் மேல ஏறிக் குந்திக்குவாங்க.”
தன் மனைவியை அதுகாறும் ‘அவ, இவ’ என்று சொல்லிக்கொண்டிருந்தவன் ஒரு திடீர் மரியாதையுடன் “அவங்க” என்று அவன் குறிப்பிட்ட மாற்றம் தனது மரியாதையான குறிப்பிடலால் அவனையும் தொற்றிக்கொண்ட ஒன்று என்று புரிந்துகொண்டு சேதுரத்தினம் தனக்குள் புன்சிரிப்புக் கொண்டான்.
“நீ என்னைக்குப்பா ஜாய்ன் பண்றே?”
“நானும் நாளைக்குத்தான் ஜாய்ன் பண்றேன், சேது.”
“முக்கியமான ஒண்ணைக் கேக்க மறந்துட்டேனே! வீட்டைக் கட்டி முடிச்சாச்சா?”
“கிட்டத்தட்ட முடிச்சாச்சு. இன்னும் பூச்சு வேலை பாக்கி இருக்கு. எலெக்ட்ரிகல் கனெக்ஷன் குடுக்கணும். அவ்வளவுதான். ஒயரிங்கெல்லாம் முடிச்சாச்சு. காம்பவுண்ட் சுவர் இப்போதைக்கு இல்லை. இதுக்கே எவ்வளவு லஞ்சம் குடுக்க வேண்டி யிருந்தது, தெரியுமா? தவிர்க்கவே முடியல்லே. தவிர்த்தா ஃபைல் நகரமாட்டேங்குது! …ம்…”
“அப்ப, மறுபடியும் கொஞ்ச நாள் கழிச்சு லீவ் எடுப்பியா?”
“இல்லே. என் மனைவியே கவனிச்சுப்பாங்க. இப்ப கூட அவளே நிறைய கவனிச்சுண்டா. நான் ஒப்புக்குச் சப்பாணிதான். சும்மாச் சொல்லக்கூடாது. ரொம்பவே கெட்டிக்காரி. கண்ட்ராக்டர்லேர்ந்து தொடங்கி, மேஸ்திரி, கொத்தனாருங்க, சித்தாளுங்க எல்லாரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கினா. இல்லாட்டி இன்னும் ஒரு மூணு மாசம் போல இழுத்தடிச்சுருப்பாங்க. …”
“அப்ப உன் வேலையைச் சுளுவாக்கிட்டாங்கல்லே?”
“உண்மைதான். ஆனா அவங்களோட தினமும் சண்டைக்கோழி கணக்காக் கூச்சல் போட்டு என் மானத்தை வாங்கிட்டாங்களேப்பா! ..ராணி மங்கம்மான்னு பேரில்ல வெச்சுட்டாங்க! நான் பின்னால நிக்கிறது தெரியாம அவங்களுக்குள்ள பேசிண்டப்ப காதுல விழுந்திச்சு.”
“அதுக்கு என்ன செய்யிறது? ஒண்ணைப் பார்த்தா ஒண்ணு இல்லே. தவிர இந்தக் காலத்துல அவங்க மாதிரி இருந்தாத் தான் நஷ்டம் ரொம்ப அதிகமா ஏற்படாது….”
“நீ சொல்றாப்போல நான் அவங்களோட நல்லது பத்தியும் யோசிச்சிருக்கணும்தான். பணம் பத்தாதப்ப தன்னோட நகைங்களைக் கழட்டிக் குடுத்தாங்க..”
“குடுத்தாங்கல்ல! அப்புறமென்ன?”
“நீ வேற. வீட்டை அவ பேர்ல இல்ல எழுதணும்னுட்டா!”
“இருக்கட்டுமே. அவங்க உன்னோட மனைவிதானே? செஞ்சுடேன்….”
மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின் ரங்கன் விடைபெற்றான்.
…சில நிமிடங்கள் கழித்து, “சார்!” எனும் அழைப்பு அவனைத் திரும்பச் செய்தது.
வந்தவன் ராமரத்தினம்தான்.
“அடேடே! வாங்க, வாங்க. உக்காருங்க…அஞ்சே நிமிஷத்துல நான் கிளம்பலாம்னு இருந்தேன்.”
ராமரத்தினம் அவனெதிரில் மரியாதையாக உட்கார்ந்துகொண்டான். “சார் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும். ஒரு ரெண்டு நிமிஷம் எனக்காக ஒதுக்க முடியுமா, சார்?”
– தொடரும்
- வாழ்க்கை ஒரு வானவில் அத்தியாயம் 3
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…7
- பயணச்சுவை! 6 . முடிவுக்கு வராத விவாதங்கள் !
- மராமரங்கள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 75 வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !
- முக்கோணக் கிளிகள் படக்கதை – 4
- கையறு சாட்சிகள்
- தொடுவானம் 16. இயற்கையின் பேராற்றல் காதல்.
- தனியே
- 2025 ஆண்டிலிருந்து ரஷ்யா விண்வெளிப் பயணம் தொடங்கி, வெண்ணிலவில் மனிதர் குடியேறத் திட்டமிட்டுள்ளது
- ‘கா•ப்கா’வின் பிராஹா -1
- தினம் என் பயணங்கள் -17 ஓரினச் சேர்க்கை பற்றி.
- பசுமைப் பூங்கா – சுப்ரபாரதிமணியனின் சிறுவர் கதைகள்
- வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்
- அந்த நாளும் ஒரு நாளே.
- நீங்காத நினைவுகள் 46
- சீன காதல் கதைகள் 4. வெண்ணிற நாக கன்னி
- திண்ணையின் இலக்கியத் தடம் -35
- ஹிட்லர் பாட்டியும் ஒரு சிண்டரெல்லா தேவதையும்
- மோடி என்ன செய்ய வேண்டும் …?
- விளைவு
- சீதாயணம் படக்கதை நூல் வெளியீடு